கைம்மண் அளவு(9). அரிச்சந்திர கட்டம்

kaimman 9 1

அரிச்சந்திரன், சந்திரமதி, லோகிதாசன் தொடர்புடைய மயான காண்டத்து கட்டத்தை இந்தி யில் ‘ஹரீஷ்சந்திர காட்’ என்கிறார்கள். ‘ஹரீஷ்சந்த்ர’ எனும் பெயர்ச்சொல் தமிழில் தொல்காப்பியர் அனுமதித்த தற்பவம் எனும் இலக்கணப்படி ‘அரிச்சந்திரன்’ ஆயிற்று. கட்டம் என்றால் கோடு என்றும் காட்சி என்றும் சாதாரணமாகப் பொருள் கொள்கிறோம்.
ஆனால், காட் எனும் வடமொழிச் சொல் தமிழாகிக் கட்டம் என்று வருவதாக உரைக்கிறார் பேராசிரியர் அருளி, அவரது ‘அயற்சொல் அகராதி’ எனும் நூலில். கட்டம் என்றால் இங்கு துறை அல்லது துறைமுகம் என்று பொருள். ‘ஆற்றில் கிடந்தும் துறையறிய மாட்டேனை’ என்கிறார் ஆழ்வார்.
வாரணாசி எனப்படும் காசியில், கங்கைக்கரையில் எண்ணற்ற காட்… அதாவது, கட்டங்கள் உள்ளன. அவை நீராடும் துறைகள், படகுப் போக்குவரத்து நடக்கும் துறைகள். முன்பு சொன்னது போல், சென்ற ஆண்டின் கிறிஸ்து பிறப்பை ஒட்டி நான்கு நாட்கள் காசியில் இருந்தேன். தினமும் காலையும் மாலையும் கங்கைக் கரைக்குச் சென்றேன். ‘மா கங்கா’வுக்கு ‘ஆர்த்தி’ நடக்கும் இடம், தசாஸ்வமேத காட். தற்போது, பாபு ராஜேந்திர பிரசாத் காட். நாம் அம்மா, அம்மே, அம்மை என்றெல்லாம் சொல்வதை வட நாட்டவர் மா, மாதா, மம்மா, மாயி, மையா என்கின்றனர். கங்கை அம்மனை கங்கா மா, கங்கா மாயி, கங்கா மையா என்று அழைக்கிறார்கள்.
ஆடைக்கும் கோடைக்கும் வாடைக்கும் நடக்கிறது தினமும் மாலையில் கங்கா ஆர்த்தி. குளிர்காலங்களில் சற்று முன்னதாக. இறை நம்பிக்கை உளதோ இலதோ, கங்கா மையாவுக்கு நடக்கும் ஆர்த்தியைக் காண்பது, தேர்ந்த கலை நிகழ்ச்சியைக் காண்பதை ஒத்தது. ஒளியும் ஒலியும் தூப தீபங்களும் நடன அசைவுகளும் முத்திரைகளும் கொண்ட கலை நிகழ்ச்சி. நதியைத் தாயாக வணங்குவதும் முட்டாள்தனம் என்று மேதைகள் எவரும் கூறக்கூடும். எனில், நானோர் அடிமுட்டாளாக இருக்கவே விரும்புவேன்.
குளிர்காலம் என்பதால், கங்கா ஆர்த்தியைக் காணச் சென்றபோது, நேரத்தே தொடங்கி விட்டார்கள். கூட்ட நெரிசல் இருந்ததால் குளிர் தெரியவில்லை. சற்று முன்பாக சுடச்சுட தின்ற கச்சோரி உடம்பைக் கரம் செய்தது. அன்று காலைதான் கௌடவ்லியா சதுக்கத்தின் சமீபத்தில் இருந்த நாட்டுக்கோட்டை செட்டியார்கள் சத்திரத்துப் பொறுப்பாளர் பனையப்ப அண்ணன் உதவியால் கங்கை நீரை என் கரங்களால் காசி விசுவநாதருக்கு அபிஷேகம் செய்து கைகளால் சிவலிங்கத்தைத் தொட்டு வணங்கினேன்.
kaimman 9 2
எனது அப்பன், பாட்டனுக்கு வாய்த்திராத பேறு அது. இதற்கு மேலும் சில வரிகள் எழுத ஆசைதான். ஆனால், என்னைக் கொண்டு போய் ஆர்.எஸ்.எஸ் கூடாரத்தில் தள்ளி, வெளிக்கதவைப் பூட்டி சாவியையும் தொலைத்து விடுவார்கள் முற்போக்கு முகாம் தோழர்கள்.எட்டு டிகிரி குளிரிலும் ஒருவித பரவசத்தில் இருந்தபோது அண்ணா சௌந்தர் வல்லத்தரசு அவர்களுடன் பேசினேன்.
‘‘ராத்திரி பன்னிரண்டு மணிக்கு, ‘அரிச்சந்திரா காட்’டுக்குப் போயி கங்கையைப் பார்த்துக்கிட்டு கொஞ்ச நேரம் சும்மா உக்காருங்க!’’ என்றார்.‘‘அண்ணா, எட்டு டிகிரி பனி. சப்த சுரங்களும் பேசுது பல்லு. காசியிலே வெப்ப பானம் எதுவும் பாவிப்பதில்லைங்கிற முடிவிலே இருக்கேன்!’’‘‘ஒண்ணும் ஆகாதுங்க… காதை மறைச்சு மப்ளர் கெட்டுங்க. ஸ்வெட்டர் வச்சிருப்பீங்கதான? பெறகென்ன?’’
மப்ளருக்கும் ஒற்றை ஸ்வெட்டருக்கும் அடங்கும் சாதிக்குளிரல்ல. சொந்த ரத்தம் சுண்டிக் கொண்டிருப்பதும் அறிவேன். எனினும் சொன்ன சொல் தட்ட முடியாதவர்களில் ஒருவர் சௌந்தர் அண்ணா. தங்கியிருந்த விடுதியில் இருந்து அரிச்சந்திரா காட் நடந்து போகும் தூரம்தான். அறை நண்பரான கொங்கணி மொழி எழுத்தாளர், சாகித்ய அகாதமி விருது பெற்ற கோவாக்காரர், பேராசிரியர் பாரிக்கர் சொன்னார்கள், ‘‘இரவு உணவுக்குப் பிறகு போவோம்’’ என்று. இரவு பதினோரு மணிக்கு மேல் மிதி ரிக்ஷா வண்டி கிடைத்தது. மேட்டில் இறங்கி நடந்து கங்கைக்கரை அடைந்தோம்.
எட்டு, பத்துப் பேர் எரிந்து கொண்டிருந்தனர். சற்று உயரமாக இருந்த மேடையில் நாலைந்து பேர் அமர்ந்து புகைத்துக் கொண்டிருந்தனர். கஞ்சா புகையாக இருக்கலாம். எரியும் சடலங்களின் சிதையைச் சீர்பார்த்துக் கொண்டிருந்தனர் ஓரிருவர். ஒரு சிதையின் இரு கால்களும் எரி நெருப்புக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்தன.
பின்னர் கங்கையின் மச்சங்களுக்கு விருந்தாகும் போலும். பாரிக்கரும் நானும் போய் அமர்ந்துகொண்டோம். எரியும் சிதைக் கணப்புக்களால் குளிர் உணரப்படவில்லை. ஒருவர்   சிணீனீஜீ திவீக்ஷீமீக்கு   முன்னால் அமர்ந்திருப்பதைப் போலத் தெரிந்தார். கீழ்த்தட்டில் தீக்கங்கும் மேல்தட்டில் சாய் கெட்டிலுமாக கட்டன் சாயா விற்று வந்தார் ஒருவர்.
ஊரில் சுடுகாட்டில் பிணமொன்று எரிந்தால் சுற்று வட்டாரம் நாற்றம் உணரும். எட்டு, பத்து பிணம் எரிந்தால் எவ்வளவு நாற்றம் வரவேண்டும்? நாற்றத்தை நாசி அறியவில்லை. காசி பற்றிய நம்பிக்கைகளில் ஒன்று அது. நம்மூர் பரோட்டாக்கடை அடுப்புத் தீ போல, எந்நேரமும் பத்துப் பன்னிரண்டு எரியும் போலும்!
அடுத்தடுத்த நாட்களில் வாடகைக் கார்களின் டாப்பில், வண்ண ஜிகினாத் துணிகளில் பொதியப்பட்ட பிணங்கள் கட்டப்பட்டு, அரிச்சந்திரா காட்டுக்கு விரைவதைக் கண்ணுற்றேன். சடங்குகளைச் செய்யவும், எரிக்கவும், சாம்பலைக் கங்கையில் தள்ளவும் காசு கொடுத்துவிட்டு, கையோடு தலை முண்டிதம் செய்து கொண்டு, அழுக்கான கங்கையில் ஒரு முங்கு போட்டுவிட்டு ஊருக்குப் புறப்பட்டுப் போய் விடுவார்களாக இருக்கும். பிணம் எரிப்பவர்கள் எரிந்தும் எரியாமலும் கங்கையில் இழுத்துத் தள்ளி விடுவார்களாக இருக்கும்.
மிக அசுத்தமாகக் கிடந்தது கங்கை அந்தக் கட்டத்தில். பாரிக்கர் சொன்னார், ‘‘கியா ஜிந்தகி ஹை சாப்!’’ என்று. எனக்குள்ளும் பற்றிப் படர்ந்தது அந்த விரக்தி. மனித வாழ்க்கை என்பது இவ்வளவுதானா இறுதியில்? எதற்கு வாரிக் கோரிக் குவிக்கிறார்கள் ஆயிரமாயிரம் கோடிகள்? ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!’ என்றார் பட்டினத்துப் பிள்ளை.
சைவத் திருமுறைகள் பன்னிரண்டில், பத்தாம் திருமுறையான திருமந்திரத்தில், 1,500 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னார் திருமூலர். 318வது திருமந்திரம் சொல்கிறது: ‘ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு, பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு, சூரை அங்காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தாரே!
’ஊரெல்லாம் கூடி, ‘ஏ! என்னப் பெத்த ராசா, என்னை விட்டுட்டுப் போயிட்டியே’ என்று சத்தம் போட்டு அழுவார்கள். அகர வரிசை, ககர வரிசை என்று பார்த்துத் தேர்ந்து, சுத்த தமிழ்ப் பெயராக, தாம் நம்பிய சாமியின் பெயராக, தலைவர்களின் பெயராக, சினிமா நடிகர் நடிகையின் பெயராக வைத்ததை எல்லாம் மறந்து ‘பிணம்’ என்று பெயர் வைப்பார்கள்.
சுடுகாட்டில் கொண்டு போய் எரிப்பார்கள். பின்பு நீரினில் ஒரு முங்கு போட்டு, அந்த நினைப்பை ஒழித்து விடுவார்கள்! கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை எங்கே? மாவீரன் செண்பகராமன் எங்கே? தசாவதானி செய்குத்தம்பிப் பாவலர் எங்கே? மகாமகோபாத்யாய உ.வே.சாமிநாதய்யர் எங்கே? கால்டுவெல்லும் போப்பும் எங்கே? மஸ்தான் சாகிபு எங்கே?
எத்தனையோ இழவுகளுக்குப் போயிருக்கிறேன். பல ஊர் சுடுகாடுகளைப் பார்த்திருக்கிறேன். சுடுகாட்டு வழியில் இரவென்றும் பகலென்றும் பாராமல் அலைந் திருக்கிறேன். ஆனால் நள்ளிரவில், கடுங்குளிரில் கங்கையின் சாந்நித்தியத்தில், எரிந்து கொண்டிருக்கும் சடலங்களை, வந்துகொண்டு இருக்கும் பிணங்களை, கங்கைக்குள் சென்றுகொண்டே இருக்கும் எச்சங்களைக் கண்டு கொண்டிருந்தபோது மனதில் அச்சமோ, பீதியோ இல்லை. என்றாலும் ஒரு வெறுமை வந்து கவ்விக்கொண்டது.
‘நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை படைத்து இவ்வுலகு’ என்கிறார் வள்ளுவப் பேராசான். நேற்றிருந்தான், இன்றில்லாமல் போனான் எனும் பெருமை உடைத்தது இவ்வுலகம். கிடைக்கும் ஒவ்வொரு நாளும் போனஸ் எனக் கருதும் வயதுதான், முதுமைதான் என்றாலும் ஆசை அறுத்தது யார்? ‘ஆசை அறுமின், ஆசை அறுமின், ஈசனோடாயினும் ஆசை அறுமின்’ என்பது தமிழ்ப்பா. ‘அகிலமெலாம் கட்டி ஆளினும் கடல் மீதும் ஆணை செலவே நினைவர்’ என்பார் தாயுமானவர்.
யாரால் எதை விட முடிகிறது? காசிக்குப் போனால் தாம் விரும்பும் எதையாவது விட்டுவிட்டு வரச் சொன்னார்கள் நம் மூத்தோர். துறவுக்கான பால பாடமாக! நாம் கொத்தவரங்காயையும் கோவைக்காயையும் விட்டோம்! என்ன சௌகரியம் பாருங்கள்! சிலர் குளித்து முடித்தபின் கோவணத்தை விட்டேன் என்பார்கள். அண்ணாச்சி நெல்லைக் கண்ணன் அடிக்கடி சொல்லும் பட்டினத்தார் பாடல் ஒன்றுண்டு.
சும்மா சாலையில் நடந்து போகும் ஒருத்தனைப் பார்த்து, தீ, புழு, மண், பருந்து, நரி, நாய் யாவும், ‘இதோ எமக்கான உணவு போகிறது’ என்று சொல்லுமாம். நடமாடும் உணவகம்.
‘எரி எனக்கென்னும், புழுவோ எனக்கென்னும், இந்த மண்ணும் சரி எனக்கென்னும், பருந்தோ எனக்கென்னும் தான் புசிக்க, நரி எனக்கென்னும், புன் நாய் எனக்கென்னும், இந்நாறுடலைப் பிரியமுடன் வளர்த்தேன், இதனால் என்ன பேறு எனக்கே!’ என்பது பாடல்.
நம் முன்னோர் பேசுவார்கள் முன்பு, பிரசவ வைராக்கியம், மயான வைராக்கியம் என்று. பிரசவ வலியில் துடிக்கும் கர்ப்பிணி நினைப்பாளாம், வலி பொறுக்க மாட்டாமல், ‘என்ன ஆனாலும் சரி! இனி இந்த ஆம்பிளையைக் கிட்டயே சேத்திரப்பிடாது’ என்று, வைராக்கியமாக. மூன்று மாதங்கள் தாங்காது அந்த வைராக்கியம்.
அது போல சுடுகாட்டுக்குச் சென்று உறவினரை அல்லது நண்பரை எரியூட்டி, நீரினில் மூழ்கும்போது நினைத்துக்கொள்வார்களாம், ‘‘சவம், என்ன வாழ்க்கை? எல்லாரும் போய்ச் சேர வேண்டியதுதான் ஒரு நாளைக்கு… இன்னா பாரு! என்னா ஆட்டம் ஆடினான்! காலம்பற பாத்தா ஒரு பிடி சாம்பலு மிஞ்சும்! இதுக்குத்தானா இப்பிடிக் கெடந்து பேயாப் பறக்கோம்? சொத்து சுகம் மாடு கண்ணுண்ணு… எல்லாம் போட்டுக்கிட்டு ஒரு நாளு பொறப்பிட வேண்டியதுதானே!’’ என்று.
ஆங்கிலக் கவிஞர் ஒருவர், எழுதினார். ‘Sweet Thames run softly Till I end my song’ என்று. அது போல் கங்கை சலசலத்து, அவசரமற்று ஓடிக்கொண்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே புறப்பட்ட பெரும்பாம்பு ஒன்று ஊர்வதைப் போல. தலை போய்ச் சேர்ந்த இடம் யாது? வால் வந்து சேரப் போகும் காலம் எது?
பிணங்கள் எரிவதன் கணப்பையும் தாண்டி, குளிர் உட்புகுந்து எலும்பு தேடியது. தீச்சுவாலை எரிந்தும் அடங்கியும் ஆடியும் அசைந்தும் கங்கா மையாவுக்கு நடுச்சாம ஆர்த்தி காட்டியது. புற இருளும் நிச்சலனமும் இறுக்கமாகப் போர்த்திக்கொண்டன மனத்தை. பாரிக்கரைப் பார்த்தேன். ‘‘ஜாயங் கே சாப்’’ என்றார்.
விரக்தியல்ல, வெறுப்பல்ல, ஒரு வகைத் துறவு வந்து பூண் ஆயிற்று மனதில். இன்றோ, நாளையோ, எந்தச் சந்தில் காத்திருக்குமோ, எந்த வடிவத்தில் எதிர்கொள்ளுமோ? H1N1, Ebola, டெங்கு, விரைந்து வரும் வாகனம், குண்டுவெடிப்பு, மாரடைப்பு… எத்தனை இல்லை?திரும்புகையில் எனக்கு பனாரசில் இருந்து மாலை ஆறே முக்காலுக்கு டெல்லிக்கு விமானம். முன்னிரவு ஏழே முக்காலுக்கே டெல்லி சேர்ந்து விட்டேன். கோவைக்கு தொடர் விமானம் காலை ஆறரைக்குத்தான். மறுநாள் மாலை கோவையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் கவிஞர் ஞானக்கூத்தனுக்குப் பரிசளிப்பு விழா. விழாவில் நானும் கலந்துகொள்ள வேண்டும்.
இரவு முழுக்க விமான நிலையத்தில் காத்துக் கிடப்பானேன் என்று பட்டாளத்துக்கார நண்பர் ரவிச்சந்திரன் அருகிருந்த தனது தாவளத்துக்கு அழைத்துப் போனார் உறங்க. உணவுக்கும் உபசரிப்புக்கும் ஒரு குறைவும் இல்லை. தமிழ் நன்கு பேசிய கொங்கண் மராத்தி பட்டாளத்துக்காரரும் உடன் இருந்தார் உரையாட. விமான தளத்தில் இருந்து பாரக்சுக்குப் போகும்போதும் அதிகாலை அங்கிருந்து திரும்பி வரும்போதும் குளிர் 4*C.
நண்பர் வீட்டில் உறங்க உல்லன் போர்வைகள் இருந்தன. ஆனால், கணப்பு இல்லை. குளிர் அடங்குவேனா என்று எதிர்க்கேள்வி போட்டது. அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து புறப்பட யத்தனிக்கையில் குளிரில் விறைத்துச் செத்து விடுவேனோ என்ற அச்சம் ஏற்பட்டது. அரிச்சந்திரா காட்டில் ஏற்படாத மரண பயம் வெருட்டியது. நரைத்துச் சாகும் வயதுதான் என்றாலும் உடனடியாகச் சாகப் பிரியமில்லை.
அண்ணா பாரதி மணி, ‘புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’ எனும் சமீபத்திய நூலில் விவரித்திருக்கும் நிகம்போத் காட் எனும் யமுனைக்கரை சுடுகாடு நினைவில் வந்தது. மனித வாழ்க்கை என்பது இவ்வளவுதானா இறுதியில்? எதற்கு வாரிக் கோரிக் குவிக்கிறார்கள் ஆயிரமாயிரம் கோடிகள்? ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே!’ என்றார் பட்டினத்துப் பிள்ளை.
(கற்போம்…)
கைம்மண் அளவு: பிற கட்டுரைகளை படிக்க: கைம்மண் அளவு

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s