கைம்மண் அளவு..7 வயதுண்டு வாழ்த்த!!

kaiman 7 1நாஞ்சில் நாடன்
காலியாகக் கிடக்கும் அனைத்துச் சுற்றுச்சுவர்களிலும் பன்னிற எழுத்துக்களில் வரைந்து வைக்கிறார்கள்; ‘வாழ்த்த வயதில்லை, எனவே வணங்குகிறோம்!’ பெரியய்யா, பெரியாயி, தாத்தன் என்று முதற்சொல்லை எழுதிக்கொள்கிறார்கள். அதைக்கூட அறியாமை என்று அறிந்துகொள்ள முடிகிறது. 
kaiman 7 2ஓவியம்: மருது
அவர்களில் பதின்பருவ வாரிசுகளைக் கூட ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’ என்கிறார்களே! இதையெல்லாம் தன்னடக்கமாக எடுத்துக்கொண்டு தாண்டியும் போய் விடலாம்தான். ஆனால் இவர்களுக்குத் தமிழ் மரபு தெரியவில்லையே என்று நமக்கு மூலக்கடுப்பு வருகிறது. வாழ்த்த வயதில்லாமல் வணங்கப் பெறும் தலைவர்களோ, சுவரொட்டி வண்ணங்களில் சிரிப்புக்களை செலவின்றி சிந்தி, தம்மைத் தமிழ் வளர்ப்பவராயும் பாவித்துக்கொள்கிறார்கள்.
நமக்கு எழும் கேள்வி, வாழ்த்த வயதில்லை எனும்போது, எதனால் ‘தமிழ் வாழ்க’ என்றும், ‘தலைவர் வாழ்க’ என்றும் விலா வலிக்க, விண் முட்டக் குரல் எழுப்புகிறார்கள்? தமிழை விடவும் தாம் வயதில் மூத்தவர் என்பதாலா?‘வாழ்க’ என்று சொல்வது வாழ்த்துவதுதான். ‘வாழ்க’ எனும் சொல், மரியாதையுடன் ஏவும் சொல். வியங்கோள் வினைமுற்று என்கிறது தமிழ் இலக்கணம். அதுவும் அர்த்தமாகவில்லை என்றால் எட்டாம் வகுப்புத் தமிழ் வகுப்பில் போய் அமரலாம்.
1882ல் பிறந்த மகாகவி சுப்ரமணிய பாரதி, மகாத்மா காந்திக்கு வயதில் மூத்தவரில்லை. பிறகு எங்ஙனம் ‘வாழ்க நீ எம்மான்’ என்று மகாத்மா காந்தி பஞ்சகம் பாடினார்,‘வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை, தவறிக் கெட்டுப்பாழ்பட்டு நின்றதாம் ஓர் பாரத தேசம் தன்னைவாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க! வாழ்க!’  என்று?
ஒன்று தெரிகிறது, பாரத தேசம் ஏதோ இன்று புதியதாகப் பாழ்பட்டுப் போய் விடவில்லை. அன்றே பாழ்பட்டுத்தான் நின்றிருக்கிறது!எட்டாம் நூற்றாண்டு மாணிக்கவாசகன், சிவபெருமானைவிட வயதில் மூத்தவரா? பிறகு ஏன் சகோதரர்களே,‘நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!’ என்றெல்லாம் வாழ்த்க்ஷ்கிறார்.
எனவே அனைத்துக் கட்சித் தொண்டர்களே! உங்கள் தலைவர்களின் பிறந்த நாள், திருமண நாள் விழாக்களில் மனப்பூர்வமாக அவர்களை ‘வாழ்க’ என்றே வாழ்த்துங்கள். ஒன்றும் குறைந்து போகாது. அவர்கள் சீரும் சிறப்பும் பெற்றுத் தம்குடி பல்கிப் பெருகி பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்ந்தால்தானே, தொண்டர்கள் தம்குடி பல்கிப் பெருகி வாழ முடியும்?
தொண்டர்கள் வாழ்ந்தால்தானே, ‘தொல்குடித்’ தமிழினம் வாழ இயலும்! வேண்டுமானால் சர்வ அங்கமும் நிலத்தில் தோய வணங்கவும் செய்யுங்கள்!
எட்டு அங்கமும் நிலத்தில் கவிழ்ந்து கிடக்கும் உங்கள் முதுகின் மேல் உங்கள் தலைவர்களைக் கால் பதித்து நடந்து போகச் செய்யுங்கள். உங்கள் முதுகில் வியர்வை பொங்கி உப்புப் படிந்திருந்தால், அவர் செருப்புப் போட்டே நடக்கலாம். மண் சோறு உண்ணுங்கள்! தலை மயிர் மழித்துக்கொள்ளுங்கள்!
‘வாழ்க’ கோஷத்துடன் தீக்குளித்துச் சாகவும் செய்யலாம். பெண்டு பிள்ளைகளைக் கட்சி காப்பாற்றும்! பாண்டிய மன்னனின் ஆபத்துதவிகள் போல, தன் தலை வெட்டித் தாம்பாளத்தில் வைத்து நீட்டுங்கள்! ஆனால் ‘வாழ்த்த வயதில்லை’ என்று மட்டும் சுவரொட்டி அடிக்காதீர்கள்!
‘வாழ்க’ எனும் சொல்லோ, ‘வணக்கம்’ எனும் சொல்லோ, கால் குப்பி மது, கோழி பிரியாணி, ஐந்நூறு பணம் என்பதற்கான கூப்பாட்டுச் சொல் அல்ல. குற்ற உணர்ச்சியுட னும், தாழ்வு மனப்பான்மையுடனும் கூலிக்கு வினையாற்றுவதல்ல. ஆழ்ந்த அன்புடன், உள்ளம் கசிந்து, நன்றி ததும்பி வழிந்து, மனப்பூர்வமாக வாழ்த்தினால் அதற்கு நற்பயன்கள் உண்டு.
பழங்காலத்தில் எப்படி பிறந்த நாள், பண்டிகை நாள் வாழ்த்துச் சொல்லிக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. சிற்றரசர்கள், பாளையப்பட்டுக்காரர்கள், ஜமீன்தார்கள் பிறந்த நாள் மங்கலம் கொண்டாடி இருக்கலாம். அவர்களை முதன்மைக் குடிமக்கள் அரும்பொருட்கள் அளித்து களி கண்டிருக்கலாம்.
என்ன விதமான பரிசுப் பொருட்கள் கொண்டு போய்க் கொடுத்திருப்பார்கள்? எத்தனை வயதோ அத்தனை பொற்காசுகள்? வைரத்தால் ஆன ஆரம்? சந்தனத்தாலான ஆறடி உயர யானை? பெரும் யானைத் தந்தங்கள் கால்களாய் அமைந்த சப்ர மஞ்சக் கட்டில்கள்? நாம் எதைக் கண்டோம்? சேரன் செங்குட்டுவனைக் காண கப்பம் சுமந்து வந்த மன்னர்கள் கொணர்ந்த பட்டியல் தருகிறார் இளங்கோவடிகள், வெளிப்படையாக.
யானையின் வெண் தந்தங்கள், அகிற் கட்டைக் குவியல், கவரிமான் மயிரினால் ஆன சாமரம், தேன்குடங்கள், சந்தனக்கட்டை, சிந்தூரக் கட்டி, நீலக்கற்கள், கஸ்தூரி, ஏலக்கொடி, மிளகுக்கொடி, கூவைக் கிழங்குகள், அவலைக் கிழங்குகள், தேங்காய்கள், மாம்பழங்கள், பச்சிலை மாலை, பலாப்பழங்கள், பூண்டு, கரும்பு, பூங்கொடிகள், வாழைக்குலைகள், சிங்கம், புலி, யானை, குரங்கு – இவற்றின் குட்டிகள், வருடை மான், காட்டு மான், கஸ்தூரிக் குட்டிகள், கீரிகள், ஆண் மயில்கள், புனுகு, புனுகுப் பூனைக் குட்டிகள், காட்டுக் கோழி, கிளிகள்… இன்று இவற்றைக் கொண்டு மன்னர்களைக் காணப் போனால், வாசல் கதவைக் கூடத் திறக்க மாட்டார்கள். பிறகெங்கே வாழ்த்துச் சொல்வது!
போன தலைமுறை சாதாரண மக்களுக்கு தமது சொந்தப் பிறந்த நாளே தெரியாது. பிறகெப்படி மற்றவருக்குத் தெரியும்? அஞ்சல்துறை அறிமுகம் ஆன காலத்துக்குப் பிறகுதானே, வாழ்த்து அட்டைகளே அச்சாகி இருக்க வேண்டும்? பொங்கல் வாழ்த்து, தீபாவளி வாழ்த்து, கிறிஸ்துமஸ் வாழ்த்து, திருமண வாழ்த்து என… என் பள்ளி நாட்களில், கல்லூரி நாட்களில் வாழ்த்து அட்டைகள் வாங்கத் திரியும், வந்ததைக் காட்டி மகிழும் தோழர்கள் உண்டு. கையில் காசில்லாதவன் எங்கே கடைத் தெருவுக்குப் போவது?
இன்று பெரும்பாலும் வாழ்த்து அட்டைகள் நின்றுவிட்டன. தபால் ஊழியருக்கும் சுமை குறைவு. மரங்களும் தப்பித்தன. எல்லாம் குறுஞ்செய்தி மயம். எதிர்காலத்தில் ஈதருக்கு அடுத்தபடியாகக் ககன வெளி எல்லாம் குறுஞ்செய்திகள் செறிந்திருக்கும். அதிலும் வியாபாரம் ஆகும் எனத் தெரிந்த நிறுவனங்கள் பண்டிகை நாட்களில் செய்திக்கு கட்டணம் உயர்த்தினர். நம்ம ஆட்கள் எவ்வளவு அறிவாளிகள்! பண்டிகைக்கு இரு தினங்கள் முன்பே வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார்கள். எதற்கு வாழ்த்துக்கு பணம் பாழ்ச்செலவு?
இப்படிப் போகிறது விலைமதிப்பில்லா வாழ்த்தின் வரிசை!நொந்து சபிப்பது பலிக்குமானால், வாழ்த்துவதில் நன்மை விளையாதா? கொடுங்கோன்மை அதிகாரத்து திருக்குறள் பேசுகிறது: ‘அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை’இது அரசர்க்குக் கூறியது என்று ஒதுங்கிப் போக வேண்டாம். ‘ஒருவன் அல்லற்பட்டு, ஆற்றமாட்டாமல் அழுத கண்ணீர், அவன் அல்லற் படுவதற்குக் காரணமாக இருந்தவரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்’.
என்ன அலுப்பு நமக்கு என்றால், மேடை தோறும் திருவள்ளுவர் பேர் பாடும் இனம் கூடத் திருக்குறளை நம்புவதில்லை என்பதுதான். ஆற்றாது அழுத கண்ணீர் சகல சம்பத்துக்களையும் தேய்த்து இல்லாமல் ஆக்கும் வலுவான ஆயுதம் என்றால், அது பலிக்கும் என்றால், வாழ்த்துவது பொருளற்றுப் போகுமா? எனவே, வாழ்க, வாழ்த்து எனும் சொற்களை வெறும் சடங்கு – சம்பிரதாயமாகக் கொள்ளாமல், அந்தச் சொற்கள் மந்திரம் என்றும், அதற்கென ஆற்றல் உண்டு என்றும் எண்ணி, உலகம் வாழ்த்தும்படியாக நடந்துகொள்ள வேண்டும். பிறர் வயிறு எரிந்து தூற்றும்படியாக நடந்து கொள்ளக்கூடாது என்பதை மனம் கொளல் வேண்டும்.
தி.ஜானகிராமன் தமிழின் சாலச்சிறந்த படைப்பாளுமை. 1921ல் பிறந்து 1983ல் காலமானார். நாவல்களும், சிறுகதைகளும் தமிழுக்கு அவரது ஒப்பற்ற கொடை. ‘பரதேசி வந்தான்’ என்பது அவரது சிறந்த சிறுகதைகளில் ஒன்று. வாசித்துப் பாருங்கள், அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரின் அர்த்தம் புரியும்.
எங்களூரில் ஒரு விதவைக் கிழவி. மக்கள் இல்லை. வாசம் கூரை வீட்டில். சன்னஞ்சன்னமாக முருங்கைக்காய் விற்று, முட்டை விற்று, நெற்றுத் தேங்காய் விற்று, தென்னை ஈர்க்கு வாரியல் விற்று சேர்த்த பணம் ஆயிரம். தனது கடைசிக் காலச் செலவுகளுக்காக. அப்போது ஆயிரம் ரூபாய் பெரும் பணம். பவுன் – அதாவது எட்டு கிராம் தங்கம் அறுபது ரூபாய்க்கு விற்ற காலம். திருட்டுக்கு அஞ்சி, பாதுகாப்பாக இருக்கும் என்று கருதி, ஊர்ப் பண்ணையாரிடம் கொடுத்து வைத்திருந்தாள்.
ஏழெட்டு ஆண்டுகள் சென்று, ஏதோவொரு அவசரத்தின்போது, பணம் திருப்பிக் கேட்டாள்.‘‘பணமா? ஏது? உங்கிட்ட நான் கடன் வாங்கினேனா? கௌவிக்குப் பித்துப் பிடிச்சுப் போச்சா?’’ என்று அதட்டி ஓட்டி விட்டார்.கிழவி நடுத்தெருவில் நின்று மண்வாரிப் போட்டுத் தூற்றிச் சாபமிட்ட காட்சிக்கு நான் சாட்சியாக நின்றபோது எனக்குப் பதினோரு வயது. அதன்பின் பண்ணையார் குடும்பத்தில் நடந்தது, தி.ஜானகிராமனின் ‘பரதேசி வந்தான்’ கதையை நினைவுபடுத்தும். தற்செயல் என்பார்கள் இறை மறுப்பாளர்கள். இருக்கலாம். என்றாலும் ஊர் பேசியது, ‘அறுதலிக் கௌவிக்க வயத்தெரிச்சல் சும்மா விடுமா?’ என்று. படித்தவன் வஞ்சனையும் சூதும் செய்தால் ‘ஐயோ என்று போவான்’ என்றார் பாரதி.
மணற் கொள்ளை, மயானக் கொள்ளை, மலைக் கொள்ளை, மருத்துவக் கொள்ளை, மக்கள் வரிப்பணக் கொள்ளை, மின்சாரக் கொள்ளை, தாதுக் கொள்ளை, தண்ணீர்க் கொள்ளை, பால் கொள்ளை, பகற் கொள்ளை, வாங்கினால் கொள்ளை, விற்றால் கொள்ளை, ஆயுதக் கொள்ளை, பாலக் கொள்ளை, படித்துறைக் கொள்ளை, பேருந்துக் கொள்ளை, கல்விக் கொள்ளை, கல்குவாரிக் கொள்ளை, கண்டும் கொள்ளை, காணாமலும் கொள்ளை… தனி அகராதி தொகுக்கலாம் போலிருக்கிறது!
சட்டம் கேட்கிறதா சான்றோரே! மக்கள் மறந்து விடுகிறார்களே மன்பதையே! ஏழை மக்கள், வாக்காளன், குடிமகன் என்ன செய்துவிட இயலும் இவர்களை? கடவுளும் கைவிட்டு விட்டாரா இந்த தேசத்தை? பலரும் சொல்கிறார்கள், கடவுள் மீது நம்பிக்கை வைப்பதன்றி உமக்குப் போம் வழி என்ன? ஆனால் கடவுள் என்பவர் யாருடைய கடவுள்?
கேரளத்து நாராயண குரு கேட்டது போல, ‘அவர் நம்பூதிரிகளின் சிவனா அல்லது ஈழவர்களின் சிவனா?’ தங்கத்தேர் இழுப்பவர், மணி மண்டபங்கள் பணி செய்து கொடுப்பவர், தங்க அங்கியும் வைரமணி முடியும் அணிவிப்பவரின் கடவுளா? அல்லது நான்கு மணி நேரம் வரிசையில் நிற்பவரின் கடவுளா? அன்னதானம் வாங்கிப் பசியாறுபவரின் கடவுளா?
‘அரசியல் பிழைத்தவர்க்கு அறமே கூற்றுவன் ஆவான்’ என்கிறாரே இளங்கோவடிகள்? ‘கெடுப்பார் இல்லாமலேயே கெட்டுப் போவார்கள்’ என்கிறாரே கம்பன்? ‘அழக் கொண்ட எல்லாம் அழப் போம்’ என்கிறாரே வள்ளுவர்!இறைவன் கூடக் கேட்க மாட்டான் என்று அச்சமற்றுப் போய்விட்டால் எப்படி உய்யும் உலகு ஐயா? நல்லவர், பெரியவர், நீதிமான்கள், சான்றோரும், பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் பீஷ்மாச்சார்யன் சொல்வது போல, ‘தீங்கு தடுக்கும் திறன் இலேன்’ என்று ஓய்ந்து போனால் எங்ஙனம் ஐயா ஆளும் அருள்?
ஏதோ சாபம் கொடுக்கிறேன் என்று எண்ணக்கூடாது நீங்கள். வேறு என்ன செய்யலாம் இந்தப் பாவிகளை? திருவள்ளுவரே சாபம் கொடுக்கிறார், ‘பரந்து கெடுக உலகு இயற்றியான்’ என்று. கடவுளாலேயே அழிக்க முடியாதவர்களா சமூக விரோதிகள்? திரு.வி.க. பாடினார்: ‘பாவி பிறந்தனன், பாவி வளர்ந்தனன், பாவ வினை மேவிய வாழ்வினன், மீக்கூர்ந்து பாவம் விளைந்தது’ என்று.எனில் யாரை நம்புவோம் யாம்?
எவர் முகம் பார்த்து நிற்போம்? எவரிடம் சென்று முறையிடுவோம்? கடவுள்களே தோற்றுப் போவார்களேயானால் யாரைச் சரணடைவோம் தேச முத்துமாரி? எப்போது வந்து பிறப்பார்கள் தீவினை வேரறுக்க இந்த மண்ணில் இறைவர் அத்தனை பேரும்? அல்லது ஏற்கனவே பிறந்து சாக்காலமும் ஆகிவிட்டதா? எப்போ வருவாரோ மறுபடியும்? வருவாரோ மாட்டாரோ? வாராதிருப்பாரோ?
காத்திருங்கள் ஐயா, அவர் வரவு பார்த்து! நம் சார்பாகச் சிறு மணல் எடுத்துப் போடவும் தயாரில்லை நாம். எனவே காத்திருப்பு அன்றி வேறு வழியென்ன, காலம் முழுக்க? தீமையைக் கருவறுக்க, ஊழலைப் பொசுக்க, துரோகத்தை விடம் ஊட்டி மாய்க்க, எரிந்து கொண்டிருக்கும் கும்பித் தீ குளிர்விக்க, அவன் வரவு காத்திருப்பதை விடுத்து, உமக்கு மாற்று வழியென்ன காண்?
(கற்போம்…)
கைம்மண் அளவு: மற்றைய கட்டுரைகளை படிக்க: கைம்மண் அளவு

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கட்டுரைகள். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s