கைம்மண் அளவு…6. – பேரூந்து அனுபவங்கள்

kaimman 7 1.1 copy(‘பல்சான்றீரே பல்சான்றீரே’ எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலில் இரு வரிகள்:
‘நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்’‘
நல்ல செயல்களைச் செய்ய இயலாது போனாலும், நல்லது அல்லாத செயல்களைச் செய்யாது ஒழுகுங்கள்)
நாஞ்சில் நாடன்
பேருந்து நிறுத்தங்களில் காத்திருப்பது எமக்கு சீலம். அரை நூற்றாண்டாக – அதாவது 18,250 நாட்களில் – தினமும் போகவும் வரவும் என ஒரு மணிக்கூறு காத்திருப்பில் கழிகிறது என்றால், இதுவரைக்குமான காத்திருப்பில் 760 நாட்கள் கழிந்திருக்கும். எல்லாம் சராசரிக் கணக்குதான். நாமும் சராசரி மாந்தர்தானே! ஈராண்டுக்கும் மேலாக வாழ்நாளில் பேருந்துக் காத்திருப்பில் பாழாய்க் கழிந்ததே என ஏங்கலாம். 
யோசித்துப் பார்த்தால், எனக்கு அது இழப்பில்லை. ஒவ்வொரு பேருந்து நிறுத்தமும் எனக்குப் பல்கலைக்கழக வகுப்பறைதான். பாரத தேசம் முழுவதும் – சில மாநிலங்கள் தவிர – பல பேருந்து நிறுத்தங்களில், நிலையங்களில் காத்திருந்திருக்கிறேன். சில பேருந்து நிறுத்த அனுபவங்கள் சிறுகதைகளாகவும் ஆகியுள்ளன.
தாழ்தள சொகுசுப் பேருந்து ஒன்றின் பின் கதவில், கைப்பிடிக் கம்பிக்கு இணைக்கோணத்தில் ஒட்டப்பட்டிருந்த வாசகம் ‘படியில் பயணம் செய்’ என்றிருப்பதை வாசித்துத் திடுக்கிட்டேன். உற்றுப் பார்த்ததில் புரிந்தது ‘படியில் பயணம் செய்யாதீர்’ எனும் வாசகத்தின் ‘யாதீர்’ எனும் பகுதியைத் துல்லியமாகத் துண்டித்துக் கிழித்திருந்தார்கள். யார் செய்திருக்கக் கூடும்? நான் பார்ப்பதைக் கவனித்த நடத்துனர் சிரித்தார் என்னைப் பார்த்து! உண்மையில் அவர் சிரித்தது என்னைப் பார்த்து அல்ல என்பதை உணர முடிந்தது.
இதை எழுதும் இன்றைய தினம், நட்ட நடு மதியம், பசியுடன், வைசியாள் வீதி பேருந்து நிறுத்தத்தில் நின்று கிடந்தேன். ஒரு கையில் கோவை விஜயா பதிப்பகப் பை. அதனுள் சில பருவ இதழ்கள். பழைய புத்தகக் கடையில் வாங்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பான ‘திருவாசகம்’. 1964ம் ஆண்டின் நீ.கந்தசாமிப் பிள்ளை பதிப்பு. கனமான புத்தகம். ‘மா வடு வகிர் அன்ன கண்ணி பங்கா’ எனும் உவமைக்கே நான் கொடுத்த பைசா வசூல்.
‘மா வடுவை வகிர்ந்தது போன்ற கண்களை உடைய உமையை உடலில் பாதியாகக் கொண்டவனே’ என்பது பொருள். அதாவது உமையொரு பாகன், மாதொரு பாகன், மங்கை பாகன்…kaimman 7 2ஓவியம்: மருது
மா வடுவைப் பிளந்தது போன்ற கண்கள் என்பது சிறப்பு.இன்னொரு கையில் தேங்காய், வெங்காயம், வாழைப்பழம், மலிந்து கிடந்த இரு கூறு தக்காளி… நான் காத்திருந்த நிறுத்தத்தில், உக்கடம் நிலையத்திலிருந்து வந்தவர்கள், பெரிய கடை வீதியிலிருந்து வந்தவர்கள், ஒப்பணக்காரத் தெருவிலிருந்து வந்தவர்கள், பள்ளி – கல்லூரி மாணவர் ஏராளம். வழக்கமாக இந்த நேரத்தில் எழுபருவப் பெண்டிரின் கூட்டம் அதிகமாக இருக்கும். வேனில் காலம் தொடங்கி விட்டது. பரபரப்பான வீதியின் தூசி, புகை, இரைச்சல்…
நிழலுக்காக உப்புக் கடையோரம் ஒதுங்கினேன். பேருந்து வரும் திசையைக் கவனிக்கும்போது, கண்ணில்பட்ட மாதர் கூட்டத்தில் ஒரு இளம்பெண் நின்றிருந்தாள். சாரி உடுத்தி இருந்தாள். பொட்டிருந்தது, பூவிருந்தது, வகிட்டுச் செந்தூரம் இருந்தது, மஞ்சள் சரடு இருந்தது. காலில் மெட்டியும் இருந்தது.
இடது தோள்பக்கம் மார்க்கச்சையின் கறுப்பு நிறப் பட்டி தாராளமாக வெளியே தெரிந்தது. சில நிமிடங்களில் அவள் பக்கத்தில் பர்தா அணிந்த கல்லூரி மாணவி ஒருத்தி வந்து நின்றாள். அனிச்சையாகப் பக்கலில் திரும்பிப் பார்த்தாள். மிகுந்த சுதந்திரத்துடன், அந்த இளம்பெண்ணின் தோளில் கை வைத்து, இரு விரல்களால் கறுப்புப் பட்டையை உள்ளே திணித்தாள். சாரி அணிந்திருந்த பெண் சரிந்து பார்த்துச் சிரித்தாள்.
யாரோ இளக்காரமாய்ச் சிரிப்பது கேட்கிறது. ‘உம்ம வயசென்ன வே? மரியாதை என்ன வே? கதம்பைத் தைலம் இறக்கப்பட்ட காலம் வந்தாச்சு? பொம்பளைகளுக்கு பிராவைப் பாத்துக்கிட்டு நிக்கேரா?’ என்று. பார்த்து நின்ற பருவம் பாய்ந்தோடிப் போய், இப்போது காட்சிப்படுகிற காலம்.நான் வியந்து நின்றது, அந்தக் கல்லூரி மாணவியின் தன்னூக்கம் மிகுந்த செயல்பாடு. சொல்ல வருவது, இதுதான் இந்திய மரபு, பண்பாடு. இதை இனமோ, மதமோ, மொழியோ, பிரதேசமோ திரிக்க இயலாது.
அவ்விரு பெண்களுக்கும் இடையே முன்பின் அறிமுகம் இல்லை, உறவில்லை, நட்பில்லை, ஒத்த இனமில்லை, மதமில்லை. எவர் வந்து இடைபுகுந்து அழித்துவிட இயலும் இந்த சகோதர உணர்வை?‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு’எனும் திருவள்ளுவரின் நட்பு இலக்கணமும் தாண்டிய மனிதநேய நிலை இது! எந்த மதவாத சக்தியும் இந்த நேயத்தைப் பிளக்க முடியாது என்று எனக்குத் தோன்றியது.
சில ஆண்டுகள் முன்பு, எனது அலுவலகம் கோவை ராம் நகரில் காளிங்கராயன் வீதியில் இயங்கி வந்தது. ஒரு சனிக்கிழமை, வேலை முடிந்து வீட்டுக்குப் போக, பார்க் கேட் நிறுத்தத்தில் நின்றிருந்தேன்.
டிசம்பர் மாதம், தணுத்த காற்று வீசியது. சாயும் சூரியனின் கனகக் கதிர்கள் இறங்கி இருந்தன. சிங்காநல்லூர் தாண்டிப் போகும் எனது பேருந்தின் வருகை பார்த்திருந்தேன். அந்த வழியாகவே சூலூர், சோமனூர், சுல்தான்பேட்டை, செஞ்சேரிமலை, கரடி வாவி, சின்னக்குயிலி, பல்லடம், திருப்பூர் வண்டிகள் போகும்.
நிறுத்தத்தில் நாலைந்து பேர் மட்டுமே! என்னருகே எழுபது வயது மதிக்கத் தகுந்த பெரியவர் ஒருவர் நின்றிருந்தார். கொங்கு மண்டல பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டி, வெள்ளை அரைக்கைச் சட்டை, வெள்ளைத் தோள் துண்டு. அடுத்தும் ஒரு சொற்றொடர் எழுதலாம். பெருமாள் முருகன் அனுபவம் எமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை.
திருப்பூர் பேருந்து ஒன்று வந்து நிற்பது போல நின்றது. பெரியவர் சற்று தள்ளாட்டத்துடன் ஏறப் போனார். பேருந்துக்குப் பொறுமை இல்லை; வேகமெடுத்துப் போனது. அடுத்து வந்த திருப்பூர் வண்டியும் அவ்விதமே! கவலையாக இருந்தது எனக்கு, ஏற முயன்று படியில் தடுக்கி அடிபட்டு விழுந்து விடுவாரோ என! எப்போ வண்டி பிடித்து, எப்போ போய்ச் சேருவார் இவர்?
சட்டைப் பையில் இருந்து கை நிறைய 500 ரூபாய் தாள்களை எடுத்துக் காட்டினார். ‘‘ஒரு கட்டிங் அடிச்சிட்டு வாறீங்களா தம்பி? காசு தரேன்… என்னை பஸ்சிலே ஏத்தி விட்டுருங்க… திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட்ல எறங்கி, தோட்டத்துப் பேரு சொன்னா எந்த ஆட்டோக்காரனும் கொண்டு விட்டிருவான்…’’
மேலும் இரண்டு பேருந்துகள் பாய்ந்து போயின. நான் கை காட்டி, பேருந்து நின்றாலும் அவரால் ஏற இயலவில்லை. அல்லது நடத்துனருக்கு நிற்கப் பொறுதி இல்லை. இந்தக் குழப்பங்களில் நான் காத்து நின்ற ஒண்டிப்புதூர் வண்டி கடந்து போயிற்று. இனி, சற்று நேரம் பொறுத்தால் ஏதாகிலும் ஒன்று வரும். கண்மணி குணசேகரனின் மொழியைப் பயன்படுத்தினால்,
‘இட்டுக்கினும் போ முடியாது; விட்டுக்கினும் போ முடியாது…’
அடர் மழை போல் இருள் இறங்கிக் கொண்டிருந்தது. பெரியவர் உடலிலும் பதற்றம் ஏறிக்கொண்டிருந்தது. நடத்துனர் தரப்பிலும் நியாயங்கள் இருக்கும். இவரை ஏற்றிக்கொண்டு போனால், இறங்க வேண்டிய நிறுத்தம் தாண்டியும் உறங்கலாம், வாந்தி எடுக்கலாம், பக்கத்து இருக்கைக்காரனிடம் அலம்பல் – சலம்பல் செய்யலாம்!
‘‘எதுக்குங்க இப்பிடிக் குடிக்கணும்?’’ என்றேன்.
‘‘அளவாத்தான் குடிப்பேனுங்க… ஊத்தி வுட்டுட்டானுங்க…’’
‘‘தெரிஞ்சு எதுக்குங்க அப்பிடிச் செய்யணும்?’’
‘‘தெரிஞ்சவனுகதான் கவுத்து வுட்றுவானுங்க தம்பி!’’
விபரமாகத்தான் பேசினார். ஊருக்கு எல்லாம் பலன் சொல்லும் பல்லி, தான் போய் விழும் கழுநீர்ப் பானையில். இவர்களால்தானே மரியாதைக்குரிய ரோல் மாடல் குடிகாரர்களுக்கும் சமூகத்தில் அவப்பெயர் என்று தோன்றியது.எனக்கென அடுத்து வரும் வண்டியை விட்டுவிடக்கூடாது என்ற சங்கல்பத்தில் நின்றேன்.
வேறு எனக்கு மார்க்கமும் இல்லை. நாமென்ன உலகத்தை உய்விக்கும் திரு அவதாரமா? எத்தனை பேர் இல்லை நாட்டில் – திராவிட இனக்காவலர், இந்திய இனக்காவலர், மனிதகுலக் காவலர் என? முதலில் ஒரு ஆசுக்காகக் கையைப் பிடித்திருந்த பெரியவர், பிறகு கரடிப் பிடியாகப் பிடித்திருந்தார். சஞ்சலமாக இருந்தது. திருப்பூர் வண்டி ஒன்று முக்குத் திரும்பியது. மண்டைக்குள் மெல்லிய மின்னதிர்வு.
கை காட்ட… பேருந்து நின்றது.‘‘வாங்கய்யா… ஏறுங்க…’’ என்றேன்.‘‘நீங்களும் திருப்பூர் வறீங்களா தம்பி?’’ என்றார்.
‘‘அந்தப் பஞ்சாயத்தைப் பிறகு பார்க்கலாம்… நீங்க ஏறுங்க முதலில்’’ என்றேன்.‘‘பெரியவரைச் சற்று ஏந்தலாகக் கைபிடித்து ஏற்றிப் பேருந்தினுள் நடத்திப் போனேன். மூன்று பேர் அமரும் இருக்கையில் சன்னலோரத்தில் ஒருவரே இருந்தார். பெரியவரை நடுவில் அமர்த்தி நானும் உட்கார்ந்தேன். அவரது உடல்மொழியில் வெகுவான தன்னம்பிக்கை தெரிந்தது. தோரணையாக சட்டைப் பையில் கைவிட்டு ஐந்நூறு ரூபாய் தாளெடுத்து நீட்டி, ‘‘இரண்டு திருப்பூர்’’ என்றார். நான் மறுக்கவில்லை. ஒரு சிங்காநல்லூர் கேட்டால் நடத்துனர் முறைப்பார் என்பது முன்னனுபவம். சிறிய முணுமுணுப்புடன் இரண்டு பயணச் சீட்டுகளும் மீதிப் பணமும் கொடுத்தார். பெரியவர் அதைப் பத்திரப்படுத்திக்கொண்டார்.
பேருந்து ராமநாதபுரம் சிக்னல் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. பெரியவர் நிலைத்த போதையில் உறங்க யத்தனித்து சன்னலோர இருக்கைத் தோழர் தோளில் சரிந்தார். இப்போது என் பங்குக்கான முறைப்பு வாங்கிக்கொண்டேன்.சிங்காநல்லூர் கரும்புக்கடை நிறுத்தத்தில் ஆளேற்றிக்கொள்ள பேருந்து நின்றது.
பனம்பழம் போல் தோளில் சுமந்து வந்த பெரியவர் தலையைச் சற்று நகர்த்தி விட்டு இறங்கி நடந்தேன். எங்கள் அப்பா அடிக்கடி சொல்லும் வாசகம் ஒன்றுண்டு. ‘செட்டியார் கப்பலுக்குச் செந்தூரான் துணை’ என்று. இனி திருப்பூர் சென்றடைந்த பின் சன்னலோரப் பயணியோ, நடத்துனரோஎழுப்பி விடுவார்கள். எழுப்பி விட்டிருக்க வேண்டும்; சட்டைப் பை பணமும் பத்திரமாக இருந்திருக்க வேண்டும்.
அண்மையில், வீட்டிலிருந்து இறங்கி நடந்து, பேருந்து நிறுத்தம் அடைந்து, வந்த வண்டியில் ஏறினேன், காந்திபுரத்துக்கு. வழக்கத்திற்கு எதிராக, உட்கார இடம் இல்லை. ‘‘திருவாதிரைக் கூட்டம், பேரூரில் இறங்கி விடுவார்கள்’’ என்றார் சக பயணி. சற்று உள்ளே நகர்ந்து, கூரையோடு பிணைத்திருந்த கம்பியைப் பற்றினேன். கையில் பிசுபிசுவென ஏதோ ஒட்டியது. கிரீசாக இருக்கும் என்று எண்ணி, கையை எடுத்துப் பார்த்தேன். கிரீஸ் இல்லை. சற்று மூக்குக்கு அருகில் கொண்டு போனேன்…
ஆகா! நவ இந்தியா வின் யுவ மாந்தர் எவரோ சுவைத்து அலுத்த சூயிங்கம்.
நம்மூரில் பழவண்டிக்காரனோ, கீரைக்காரியோ சூயிங்கம் மெல்லுவதில்லை. எவரோ கல்லூரி மாணவர் அல்லது பணிக்குப் போகும் இளைஞர். எத்தனை அறிவுக்கூர்மை இருக்க வேண்டும், அங்கே கொண்டு போய் ஒட்டி வைக்க? இத்தனை அறிவாக இருக்கும் இளைஞர்களைக் கொண்ட தேசத்தை எவர் புறங்காண இயலும்?
புறநானூற்றுப் புலவர் ஒருவர், ‘நரி வெரூஉத் தலையர்’ எனும் பெயரில் உண்டு. ‘நரி பார்த்தால் அச்சப்படும் தலையர்’ என்று பொருள். சங்க இலக்கியங்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகையினுள் அவர் பெயரில் காணக் கிடைக்கும் பாடல்கள் குறுந்தொகையில் இரண்டு, புறநானூற்றில் இரண்டு என நான்கு மட்டுமே! அவற்றுள் ‘பல்சான்றீரே பல்சான்றீரே’ எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலில் இரு வரிகள்:‘நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்அல்லது செய்தல் ஓம்புமின்’‘நல்ல செயல்களைச் செய்ய இயலாது போனாலும், நல்லது அல்லாத செயல்களைச் செய்யாது ஒழுகுங்கள்’ என்று பொருள் கொள்ளலாம்.
(கற்போம்…)
முந்தைய பகுதிகளுக்கு:- https://nanjilnadan.com/category/கைம்மண்-அளவு/

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

3 Responses to கைம்மண் அளவு…6. – பேரூந்து அனுபவங்கள்

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அவற்றுள் ‘பல்சான்றீரே பல்சான்றீரே’ எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலில் இரு வரிகள்:‘நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்அல்லது செய்தல் ஓம்புமின்’‘நல்ல செயல்களைச் செய்ய இயலாது போனாலும், நல்லது அல்லாத செயல்களைச் செய்யாது ஒழுகுங்கள்’ என்று பொருள் கொள்ளலாம். = அருமை சார். எனது பக்கத்தில் பகிர்கிறேன். பொது வாழ்வில், பொது இடங்களில் மரியாதை, ஒழுங்கு குறைந்து வருகின்றன. வேதனையான உண்மை. நன்றி சார் திரு நாஞ்சில் நாடன்.

  2. rathnavelnatarajan சொல்கிறார்:

    Reblogged this on rathnavelnatarajan and commented:
    அவற்றுள் ‘பல்சான்றீரே பல்சான்றீரே’ எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலில் இரு வரிகள்:‘நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்அல்லது செய்தல் ஓம்புமின்’‘நல்ல செயல்களைச் செய்ய இயலாது போனாலும், நல்லது அல்லாத செயல்களைச் செய்யாது ஒழுகுங்கள்’ என்று பொருள் கொள்ளலாம். = அருமை சார். எனது பக்கத்தில் பகிர்கிறேன். பொது வாழ்வில், பொது இடங்களில் மரியாதை, ஒழுங்கு குறைந்து வருகின்றன. வேதனையான உண்மை. நன்றி சார் திரு நாஞ்சில் நாடன்.

  3. marubadiyumpookkum சொல்கிறார்:

    good sharing.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s