கைம்மண் அளவு.. 5

kaimman 5 1(பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பது எந்த குறிப்பிட்ட சாரார்க்கும் தாத்தன், பாட்டன், அம்மாச்சன், அப்பன் சொத்தா? மற்றவர்க்கும் உரிமையானதில்லையா? உலகம் முழுக்க ஒரே மொழியா, ஒரே தத்துவமா, ஒரே கொள்கையா, ஒரே மதமா, ஒரே இசையா, ஒரே பண்பாடா, ஒரே உணவா? அவரவர் கருத்தைச் சொல்ல அவரவர்க்கு உரிமை இல்லையா? என் மொழி, என் தத்துவம், என் கொள்கை, என் மதம், என் இசை, என் மரபு, என் உணவு தாண்டிய மற்றெல்லாம் எனக்குப் பகை என்றால் அதை என்னென்பது?)…..( நாஞ்சில் நாடன்)
 ஆங்கில இலக்கியப் பரப்பில் தவிர்க்க இயலாத ஆளுமை, ஜேம்ஸ் ஜாய்ஸ் என்று பரவலாக அறியப்பட்ட ஜேம்ஸ் அகஸ்டின் அலோஷியஸ் ஜாய்ஸ். நமது புதுமைப்பித்தன் இவரை, ‘ஆங்கில இலக்கியத்தின் கடைசிக் கொழுந்து’ என்றார்.
kaimman 5 2ஓவியம்: மருது
அப்படி எவரையும் அறுதியிட்டுச் சொல்லவியலாது. அது, ‘பாரதிக்குப் பின் தமிழன்னை கருத்தடை செய்து கொண்டாள்’ என்று சொல்வதற்கு ஒப்பானதாம்.1882ல் பிறந்து 1941ல் மறைந்த ஜேம்ஸ் ஜாய்ஸ் முதலில் எழுதி வெளியிட்டது ‘சேம்பர் மியூசிக்’ எனும் கவிதைத் தொகுப்பு.
அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 22 பதிப்பாளர்களால் நிராகரிக்கப்பட்டு, 1912ல் ‘டப்ளினர்ஸ்’ எனும் தலைப்பில் அச்சானது. டப்ளினர்ஸ் என்றால் டப்ளின் நகரைச் சார்ந்தவர்கள் என்று பொருள். டப்ளின் நகரம் அயர்லாந்தில் இருப்பது. அயர்லாந்தோ யு.கே.யினுள் அடக்கம். டப்ளினர்ஸ் அச்சானாலும், அந்தச் சிறுகதைத் தொகுப்பு அவதூறானது, மரியாதை குறைந்தது, மதிப்புக் கேடானது (Libellous, Indecent and Blasphemous)  என்று கருதிய அதன் பதிப்பாளர், அச்சிடப்பட்ட ஆயிரம் பிரதிகளையும் அழித்தார்.
டப்ளின் நகரைச் சார்ந்த செல்வந்தர் ஒருவர், ஆயிரம் படிகளையும் தாமே விலைக்கு வாங்கி, நகரத்துச் சந்தியில் போட்டுக் கொளுத்தினார் என்றும் பாடபேதம் உண்டு. நற்பேற்றின் காரணமாய் ஒரேயொரு படி மட்டும் தப்பிப் பிழைத்தது. பிறகு 1914ல் ‘டப்ளினர்ஸ்’ மீண்டும் பதிப்பித்து வெளியிடப்பட்டது.
ஜேம்ஸ் ஜாய்ஸ் 1916ல், ‘A Portrait of the Artist as a Young Man’   என்ற நாவலையும், 1918ல் ‘Exiles’ எனும் நாடக த்தையும் வெளியிட்டார். 1922ல் ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘யுலிசெஸ்’ எனும் மகத்தான நாவல் வெளியாயிற்று. அத்துடன் ஜாய்ஸின் நெருக்கடி தீரவில்லை. 1922 அக்டோபரில் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ‘யுலிசெஸ்’ நாவலின் 500 படிகள் நியூயார்க் தபால் இலாகாவினால் பறிமுதல் செய்யப்பட்டது. 1923 ஜனவரியில் அனுப்பப்பட்ட 500 படிகள், ஃபாக்ஸ்டோன் சுங்க இலாகாவினால் பறிமுதல் செய்யப்பட்டது.
‘யுலிசெஸ்’ நாவலுக்கு எதிரான வழக்கை விசாரித்த அமெரிக்கத் தலைமை நீதிமன்ற நீதிபதி ஜான் எம்.ஊல்சே, 1933ல் வழக்கைத் தள்ளுபடி செய்தார். அந்த நீதிபதி யின் தீர்ப்பு, ‘யுலிசெஸ்’ நாவல் பற்றிய அற்புதமானதோர் இலக்கியத் திறனாய்வு. அந்தத் தீர்ப்பையே முன்னுரையாகக் கொண்ட பதிப்பின் பிரதியொன்றினை, பம்பாயில் நான் வாழ்ந்த காலத்தில், நடைபாதை புத்தகக் கடையில் பத்து ரூபாய்க்கு வாங்கினேன். 1984ல் நவி மும்பையில் நெரூலில் இருந்த என் வீட்டுக்கு வந்த கோணங்கி, அந்தப் புத்தகத்தைக் கேட்டு வாங்கிப் போனார்.
பம்பாயில் நான் காலூன்றக் காரணமாக இருந்த அந்தேரி எஸ்.நடராஜ ஐயர், 1985ம் ஆண்டு கனடா சென்றபோது பெங்குயின் பதிப்பு ஒன்றை வாங்கி எனக்குப் பரிசளித்தார். அது இன்றும் என் சேமிப்பில் உண்டு. ‘டப்ளினர்ஸ்’ என்னிடம் இருப்பது 1968ம் ஆண்டின் ஜோனதன் கேப் பதிப்பு.ஜேம்ஸ் ஜாய்ஸின் படைப்புகள்,
வழி மறித்த பெரும் பாறைகளையும் சட்ட நெருக்கடிகளையும் கசப்பான முரண் களையும் தப்பான புரிதல்களையும் கடந்து நீடு வாழ்கின்றன. டி.எச்.லாரன்ஸின் ‘Sons and Lovers’   நாவலும் ஆபாசம் எனும் பெயரில் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது. இவை போல் எத்தனையோ சொல்லலாம்.
எதற்கு இத்தனை எழுதினேன் எனில், ஆபாசம் என்றும் மத விரோதம் என்றும் கருதப்பட்ட படைப்புகள் பலவும் காலம் தாண்டி பாராட்டப்படுகின்றன. சொல்லாமலேயே ஒன்று விளங்கும்… காலம் தாண்டி வாழ்வதற்குப் படைப்பும் மகத்தானதாக இருக்க வேண்டும். அதை வாசகர்களே தீர்மானிக்கிறார்கள்; அரசியல் செல்வாக்கும் முகவர்களும் அல்ல.
அந்தக் காலத்தில் ஒரு புத்தகம் எழுதி அதை அரங்கேற்றுவது என்பது சாதாரண காரியம் அல்ல. சொந்தக் காசு போட்டு புத்தகம் அச்சடித்து, சினிமா நடிகரைக் கொண்டு வெளியிட்டு விட முடியாது. ‘விநோத ரச மஞ்சரி’ எனும் நூலொன்று, அட்டாவதானம் வீராசாமி செட்டியார் எழுதியது.
அதில், ‘கம்பர் ராமாயணம் பாடி அரங்கேற்றியது’ என்று எண்பது பக்கக் கட்டுரையொன்று உண்டு. ஆறு காண்டங்களில், 118 படலங்களில், 10 ஆயிரத்து 368 பாடல்களில் கம்பர் எழுதிய ராமாவதாரம் அரங்கேற அவர் பட்ட பாடு, தாளம் படாது; தறியும் படாது. என்றாலும் அரங்கேறியது, காலம் கடந்து வாழ்கிறது; வாழும்.
காலந்தோறும் கலைஞன் எதிர்கொள்ளும் சவால் இது!இந்தியாவின் ஒப்பற்ற, உலகப் புகழ்பெற்ற ஓவியர் எம்.எஃப்.ஹுசைன் தீட்டிய பாரத மாதா சித்திரத்துக்காகவும், கடவுளர் சித்திரங்களுக்காகவும் வெகுவாக இந்தியாவில் தூற்றப்பட்டு வெளிநாட்டில் தஞ்சமடைந்தார்.
அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கினை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த தீர்ப்பில், ‘இந்தியத் திருநாட்டின் மாட்சிமை பெற்ற குடிமகன்’ என்று ஹுசைனைப் பாராட்டியது. ‘Midnight Children’  எழுதிய சல்மான் ருஷ்டி பின்னர் ‘Satanic Verses’   எழுதியபோது அடைந்த வசையும் இங்கு நினைவு கூரத்தக்கது. மிக அண்மையில் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய கவிதை ஒன்றுக்காக அவருக்கு ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகளையும் நாமறிவோம்.
இவற்றிற்கெல்லாம் மதம், இனம் என்று ஓரம் சாய்ந்து எடுக்கப்பட்ட முடிவுகள் காரணம். படைப்பின் குரலை ஒடுக்க நடந்த முயற்சிகள். அது ஒரு வகை எதிர்ப்பு.ஆனால் ஒரு சார்புடைய எழுத்தாளர்களே, மறுசார்புடைய எழுத்துக்களை முடக்க நினைத்த காரியங்களும் நடந்தன நம்மிடையே. வேறொரு சந்தர்ப்பத்தில் இந்தப் போக்கை, ‘தன் படை வெட்டிச் சாதல்’ என்று எழுதினேன். முன்பொரு காலத்தில் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ என்றொரு சிறுகதை எழுதினார், தமிழின் உன்னதப் படைப்பாளிகளில் ஒருவரான சுந்தர ராமசாமி.
அந்தக் கதைக்கு எதிராகத் தமிழ்ப் படைப்பாளிகளில் ஒரு சாரார் கொதித்து எழுந்து வீசிய அவதூறுகள் அனந்தம்.இந்திப் படம் ஒன்றில் அமிதாப்பச்சன் சொந்தக்குரலில் பாடிய பாடல் ஒன்றுண்டு. ‘மேரே ஆங்கண் மே தேரா கியா காம் ஹை’ என்று. பாடல் வரியின் பொருள், ‘எனது முற்றத்தில் உனக்கென்ன வேலை’ என்பது. அவர்கள் கேட்ட கேள்வியும் அதுதான்.
எனது சொந்த அனுபவம் ஒன்றுண்டு. சக எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரன் கொணர்ந்த ‘ஆல்’ எனும் சிற்றிதழில் ஆகஸ்ட் 1992ல் ‘ஊதுபத்தி’ என்றொரு சிறுகதை எழுதினேன். கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்ட ‘பேய்க்கொட்டு’ என்ற என் சிறுகதைத் தொகுப்பில் அக்கதை இடம் பெற்றது. அந்தத் தொகுப்பை, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பாடமாக்கியது. ‘ஊதுபத்தி’ கதையைக் காரணம் காட்டி, அந்தத் தொகுப்பைப் பாடமாக்கக் கூடாது என்று ஆளுநர், முதலமைச்சர், கல்வியமைச்சர், கல்வித்துறை செயலாளர்,பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்று கடிதங்கள் போயின. ஒரு சார்புடைய எழுத்தாளர்கள் கண்டனக் கூட்டம் நடத்தினர். சிற்றிதழ் ஒன்று, ‘தனது வெள்ளாள சாதி வெறியை நாஞ்சில் நாடன் மீண்டும் நிறுவுகிறார்’ என்று கட்டுரை வெளியிட்டது. அந்தக் காலத்தில், தொண்டர் குழாம் சூழ வலம் வந்து தமிழகமெங்கும் இலக்கியச் சொற்பொழிவாற்றிய பின் நவீனத்துவ விமர்சகர் அதையே வழி மொழிந்தார், வெகு உற்சாகமாக; கதையை வாசிக்காமலேயே!
ஒரு எழுத்தாளனின் கருத்துரிமை பேணப்பட்ட விதம் இது. புதுமைப்பித்தன் எனும் முன்னோடி சிறுகதை எழுத்தாளனின் கதையொன்றைப் பாடமாக வைக்கக்கூடாது என்று சமகால எழுத்தாளர்களே சமீபத்தில் வழக்குத் தொடுத்தார்கள்.தமிழ் இதழில் எழுதப்பட்ட கட்டுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அது அச்சிட்ட தாள்களில் நரகலைத் துடைத்து அந்த இதழுக்கே அனுப்பிய மாற்று அணி எழுத்தாளர்கள் இருந்தார்கள். ஐயம் இருந்தால், அந்த இதழுக்கு ஆசிரியராக இருந்த வாஸந்தியைக் கேட்டுப் பார்க்கலாம்.
சென்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போது, திறமையான இளம் படைப்பாளி ஜோ.டி.குரூஸ் பாரதீய ஜனதா கட்சியை ஆதரித்தார். ‘ஆழி சூழ் உலகு’ எனும் அற்புதமான நாவலைப் படைத்து அளித்தவர். அவரது ‘கொற்கை’ நாவலுக்கு மத்திய அரசின் மதிப்புறு சாகித்ய அகாதமி விருதும் வழங்கப் பெற்றது. அவர் தொல்குடிப் பரதவர். பாரம்பரிய கத்தோலிக்கக் கிறிஸ்தவர். தனது மக்கள் அறுநூறுக்கும் மேற்பட்டவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டதைக் காலங்காலமாக கவனித்து வருபவர்.
கையாலாகாத அரசுகளின் கள்ள மௌனங்களைக் கண்டு வருந்தி நின்றவர். கன்னியாகுமரி மாவட்டத் தொகுதிகளின் சீரமைப்பின்போது மீனவர்களுக்கு எதிரான அநீதியை அறிந்தவர். அவரது அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம்.
ஆனால், அது ‘கர்த்தராலேயே மன்னிக்கக்கூடாத பெரும்பாவம்’ என்றனர் சக படைப்பாளிகள். அவருக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாதமி விருதினைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றார்கள். அவருக்கு எதிராக அறிக்கை தயாரித்து, கையெழுத்து கேட்டார்கள். கையெழுத்துப் போடாதவர் எல்லாம் ‘இந்துத்துவா’ என்றனர். எனக்கு அதில் கசப்பான அனுபவம் உண்டு.
நம் மொழிக்குள் அரசியல் கட்சிகளின் உறுப்பினராக உள்ள எழுத்தாளர்கள் உண்டு; ஆதரிக்கும் படைப்பாளிகள் உண்டு. அது அந்தப் படைப்பாளியின் கருத்துரிமை; செயல்பாட்டு உரிமை. அவர் நிலைப்பாட்டிற்கு அவருக்கான காரணங்கள் இருக்கும்.
அதற்காக எவரும் கூடி நின்று, அந்த எழுத்தாளருக்கு எதிராக அறிக்கை வெளியிடவில்லை; அவதூறு பேசவில்லை. பிறகேன் ஒரு சில எழுத்தாளர்களுக்கு எதிராக மட்டும் சக எழுத்தாளர்களின் தனித்தேர்வு செய்த எதிர்ப்பு? கருத்துச் சுதந்திரம், செயல்பாட்டுச் சுதந்திரம், வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் சமமானதோ, பொதுவானதோ இல்லையா?
ஈழத்து இனப் படுகொலைக்கு கண் மூடி, வாய் பொத்தி நின்ற அரசியல் கட்சிகளை ஆதரிக்கும் எழுத்தாளர்கள் இல்லையா நம்மிடம்? தமது கட்சித் தலைமைகளை அவர்களால் வெளிப்படையாக விமர்சிக்க முடிந்ததா? அது அவர்களுடைய கருத்துச் சுதந்திரம்.பெருமாள் முருகனுக்கு ‘மாதொரு பாகன்’ பற்றிய எதிர்ப்பு வந்தபோது, ஏழு பருவ இதழ்கள், செய்தி இதழ்களில் அவருக்கு ஆதரவான கருத்தைப் பதிவு செய்தேன். ஒரு எழுத்தாளனாக அது என் தார்மீகக் கடமை.
என்னிடம் ஆதரவு கேட்டவர்கள் எல்லோரிடமும் நான் திருப்பிக் கேட்டேன்… ‘கருத்துரிமை என்பது ஒரு சாராருக்கு மட்டும்தானா’ என்று. இந்தக் கருணையை ஏன் சென்ற ஆண்டு ஜோ.டி.குரூஸின் தலைக்கு விலை வைத்தபோது காட்டவில்லை? உடனே கோத்ரா என்பார்கள்! கோத்ராவுக்கு ஜோ.டி.குரூஸ் பொறுப்பேற்க வேண்டும் என்றால், ஈழத்து இனப் படுகொலைக்கு வாளாவிருந்த அரசியல் கட்சிகளின் அரவணைப்பில் நிற்கும் எழுத்தாளர்கள் பொறுப்பேற்பார்களா?
பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பது எந்த குறிப்பிட்ட சாரார்க்கும் தாத்தன், பாட்டன், அம்மாச்சன், அப்பன் சொத்தா? மற்றவர்க்கும் உரிமையானதில்லையா? உலகம் முழுக்க ஒரே மொழியா, ஒரே தத்துவமா, ஒரே கொள்கையா, ஒரே மதமா, ஒரே இசையா, ஒரே பண்பாடா, ஒரே உணவா? அவரவர் கருத்தைச் சொல்ல அவரவர்க்கு உரிமை இல்லையா? என் மொழி, என் தத்துவம், என் கொள்கை, என் மதம், என் இசை, என் மரபு, என் உணவு தாண்டிய மற்றெல்லாம் எனக்குப் பகை என்றால் அதை என்னென்பது?
தனது வாழ்நாள் முழுவதும் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ஆஸ்தான வித்வானாக இருந்தார் உலகப் புகழ்வாய்ந்த ஷெனாய் வாத்திய மேதை உஸ்தாத் பிஸ்மில்லா கான். திருவரங்கம் ஆலயத்தின் ஆஸ்தான வித்வானாக இருந்தார் புகழ்பெற்ற நாதசுர இசைமேதை ஷேக் சின்ன மௌலானா.
வாழ்நாள் எல்லாம் ராமனைப் பாடினார் தியாகைய்யர். ஹாஜி அலியைப் பாடினார் பாகிஸ்தானி சூஃபி இசை மேதை உஸ்தாத் ஃபத்தே அலி கான். அவர்கள் எல்லாம் எனக்கு இஸ்லாமியர்களோ, இந்துக்களோ அல்ல… இசை மரபின் கடவுளர்கள்.
ஈதொன்றும் எழுத்தாளன் கருத்தை எதிர்க்கிறவர்களுக்கு அர்த்தமாகாது. தன் குஞ்சு மட்டுமே பொன் குஞ்சு என்று தற்சாய்வுக் கருத்துச் சுதந்திரம் கோருகிறவர்களுக்கும் பொருளாகாது.
மார்ஃபஸ் என்ற பெயரில், இறகுகள் கொண்ட கிரேக்கக் கடவுள் உண்டு. அவர் கனவுகளின் கடவுள். அவரை நான் பிரார்த்திக்கிறேன் – எமது படைப்பாளிகளுக்குப் பாரபட்சம் இல்லாத கருத்துச் சுதந்திரமும், படைப்புரிமையும், நேர்மையான பொறுப்பும் அருளும் ஐயா!மார்ஃபஸ் என்ற பெயர் சிலருக்கு வேறு ஏதோ ஒன்றை நினைவுபடுத்தலாம், யாமதற்குப் பொறுப்பில்லை பராபரமே!
(கற்கலாம்…)
முந்தைய பகுதிகள்:-  nanjilnadan.com/category/கைம்மண்-அளவு/
https://nanjilnadan.com/2011/11/03/ஊதுபத்தி/

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s