கைம்மண் அளவு.. 3

Screen Shot 2015-03-04 at 9.11.29 pm Screen Shot 2015-03-04 at 9.11.44 pmநாஞ்சில் நாடன்
காசிக்கு கருத்தரங்குக்குப் போன கதை சொன்னேன். அங்கு நான் கற்றுக்கொண்டதைச் சொல்ல வேண்டாமா? 2014 டிசம்பர் 24ம் நாள் மாலை வாரணாசி வானூர்தித் தளத்தில் இறங்கும்போது மாலை 6 மணி. அப்போது அறிவித்தார்கள் – ‘‘வாரணாசிக்கு வருக! நீங்கள் நற்பேறு செய்தவர்கள்! காலநிலை வெகு வசீகரமாக இருக்கிறது. தற்போதைய தட்பம் 80நீ மட்டுமே!’’
23 குசி   குளிரிலேயே ஸ்வெட்டர் அணிந்து நடப்போரைக் கண்டிருக்கிறேன். 36குசி   வெப்பத்தில் கோட் அணிந்து செல்வோரையும். அது தனிநபர் உரிமை, நாம் குறுக்கிட இயலாது. எதிர்காலத்தில், அடிப்படைவாதிகள், இந்தியரின் பாரம்பரிய உடை வேட்டியும் சட்டையும் தோள்துண்டும்தான், அவற்றையே அணிதல் வேண்டும் என்று போராட்டம் நடத்தும்போது அதனை எதிர்கொள்ளலாம்.
டில்லியில் நவம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களின் குளிர் எனக்கு அறிமுகம் உண்டு. டிசம்பர் குளிர் அனுபவம் இல்லை. டில்லியில் இருந்து மேலும் கிழக்கு நோக்கி, 570 கி.மீ வாரணாசி.
கோயம்புத்தூரில் இருந்து முற்பகல் 11.30க்குப் புறப்பட்ட விமானம், இடை நில்லாப் பேருந்து. டில்லி சேர்ந்தபோது மதியம் 2.30 மணி.
14குசி   குளிர் சற்று விதிர்ப்படையச் செய்தது. சக்தி குழுமங்களின் டில்லி பொதுமேலாளரும் டில்லி தமிழ்ச்சங்க முன்னாள் செயலாளருமான சக்தி பெருமாள் என்னுடன் பயணம் செய்தார். வாரணாசிக்குச் செல்லும் விமானம் இன்னொரு கட்டிடத்தில். என்னையவர் வழி நடத்தி, விமான தளத்து அடுத்த பகுதியில் விட்டுச் சென்றார்.
விமான தளத்தில் குளிர் தெரியவில்லை. பைக்குள் இருந்த ஸ்வெட்டரையும் நான் எடுக்கவில்லை. ஒருவேளை வெப்பமூட்டி இருப்பார்கள் போலும். இப்போதெல்லாம் விமானப் பயணங்களில் தண்ணீர் மட்டும் விலையில்லாமல் தருகிறார்கள். எதிர்வரும் நாட்களில் அதற்கும் முப்பது ரூபாய் வாங்கலாம். டாய்லெட் பயன்படுத்த இருபது ரூபாய் வசூலிக்க, வாசலில் ஒருவர் நிற்கலாம்.மதிய உணவு நேரம் என்றாலும் டில்லியில் இரண்டு மணி நேரம் பயணங்களுக்கு இடையே இருந்தது.
அங்கே பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். பத்மநாப சாமிக்குப் பால் பாயசம், நமக்கு மனப் பாயசம். கால் நூற்றாண்டாக சர்க்கரை நோயாளி என்பதால், பயணங்களின் போது சில முன்னெச்சரிக்கைகள் உண்டு. அதுபற்றி அச்சமில்லை. விமானத்தில் உணவுப்பண்டங்களின் விலை எனக்கு ஒவ்வாமல் இருந்தது. அதற்கு மாற்றுச்சொல், மயானக்கொள்ளை. விமானதளத்தில் விலை கேட்டபோது அது சர்வத்திர கொள்ளையாக இருந்தது.
அதற்கு மாற்றுச்சொல் வழிப்பறி. ஒரு பஞ்சாபி சமோசா அறுபது பணம். ஒன்று கேட்டால் இரண்டுதான் தருவோம் என்றார்கள். இணையைப் பிரிந்தால் சமோசா உயிர் நீக்கும் போலும். காப்பி நூற்று இருபது பணம். மத்திய அரசின் சேவை வரிகள் தனி. ‘அவன் தம்பி அங்கதன்’ என்றொரு சொலவம் நினைவு வந்தது. இவற்றுக்கெல்லாம் வவுச்சர் போட்டால் சாகித்ய அகாதமி ஒப்புக்கொள்வார்களோ என்னவோ!
வாரணாசியில் மஞ்சு மூட்டம் வானின்று இழிந்து தங்கி இருந்தது. எங்களுக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த மூன்று நட்சத்திர விடுதி, விமான தளத்தில் இருந்து 33 கி.மீ. வெளியே வாடகைக் கார் ஓட்டுநர்கள் மொய்த்து நின்றனர்.
எப்போதும் ஆட்டோ, வாடகைக் கார் என ரயில் நிலையம் அல்லது பேருந்து நிலையங்களில் பிடிக்கும் போது, முகம் பார்த்துக்கொள்வது வழக்கம். அடுத்தது காட்டும் ஆடி போல் அகம் கடுத்தது காட்டும் முகம். நூற்றுக்கு எண்பது அனுமானங்கள் பொய்த்ததில்லை.
நல்ல உயரமாக, இளைஞனாக, முக வசீகரத்துடன், எளிமையாக, மிகச் சாதாரணமான ஆடைகளுடன் இருந்தவனிடம் ஓட்டலின் பெயர் சொன்னேன்.‘‘ஆயியே பாய் சாப்… பைட்டியே!’’ என்றான். எனது 18 ஆண்டு கால பம்பாய் வாழ்க்கையும் வடமாநில தொழிற்பயணங்களும் போதுமான இந்தி மொழி அறிவைத் தந்திருந்தன. ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்’ என்று என்னாலும் சொல்ல இயலும்.
‘‘கியா லேய்ங்கே பையா?’’ என்றேன்.
‘‘ஆட் சௌ ருப்யா தே தீஜியே சாப்’’ என்றான்.
‘‘ஏக் கீ பாத்… சாடே சாத் சௌ’’ என்றேன் உத்தேசமாக.
‘‘பைட்டியே!’’ என்றான்.
எண்ணூறு கேட்டு எழுநூற்றைம்பதுக்குப் படிந்தது பேரம். நம்மூர் பெரும்பாலான அனுபவங்கள் எனக்கு வேறு விதமாகவே இருக்கின்றன. எரிச்சல் பணத்தில் மட்டுமல்ல. அலட்சியம், எடுத்தெறிந்து பேசும் ஆணவம், கொலஸ்ட்ரால்… கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து நான் புதிதாய்க் குடிபெயர்ந்திருக்கும் கோவைப்புதூர் இடத்துக்கு 8 கிலோமீட்டர்.
‘மக்கள் ஆட்டோ’ சேவையைப் பயன்படுத்தினால் நூற்றைந்து பணம், அதிகாலை ஐந்தரை மணிக்கு. மிக அண்மையில், காலை 6 மணிக்கு உக்கடத்தில் இறங்கினேன். நான்கு ஆட்டோ ஓட்டுனர்களிடம் விசாரித்தேன். 400 பணம் கேட்டார்கள். பிறகென்ன, பேருந்து பிடித்து வீட்டிற்கு வந்தேன்.
அவன் பெயர் அனுஜ் மிஸ்ரா. பம்பாய் இந்தியில் பேசிக்கொண்டே வந்தேன். வாரணாசி இந்தியில் அவன் பதில் சொல்லிக்கொண்டே பொறுப்பாக வண்டிஓட்டினான். அவன் சொன்ன தகவல்கள் சுருக்கமாக – இருபது வயதாகிறது.
ஐந்தாண்டுகளாகக் கார் ஓட்டுகிறான். உரிமம் எடுத்து இரண்டு ஆண்டுகளே ஆகின்றன. பெற்றோர் காசியில் இருந்து 85 கி.மீ தூரத்தில் சிறு கிராமத்து விவசாயிகள். அண்ணன் ஆட்டோ ஓட்டுகிறான். தாமசம் தாய்மாமன் வீட்டில்.
இன்முகத்துடன் இணக்கமாகப் பேசிக்கொண்டு வந்தான். வடநாட்டில் லஸ்ஸி நன்றாக இருக்கும். எனக்கும் இரண்டு சமோசாக்கள் அச்சு முறிந்து விட்டிருந்தன.
‘‘ஒரு லஸ்ஸி குடிப்போம், அனுஜ். நல்ல கடையாகப் பார்த்து நிறுத்து’’ என்றேன். அந்தக் குளிருக்கு அந்த நேரத்துக்கான பானம் வேறு. ஆனால், என் தேர்வு லஸ்ஸி. சூழல் அழுக்காகவே இருந்தது. வடநாட்டில் சுத்தம் பார்த்தால், பட்டினி பரம ஔடதம்.
‘‘சாப், கார்லே இருங்க… நான் போய் வாங்கி வருகிறேன்’’ என்றான் வண்டியை நிறுத்தி. எமக்கது சீலம் அல்ல. இறங்கிப் போனேன், குளிரை சட்டை செய்யாமல், ஸ்வெட்டர் கிடந்த தைரியத்தில். புத்தம் புது வாயகன்ற கிண்ணம் போன்ற மண் சட்டி நிறைய, மலாய் தளும்பியபடி, சுமார் 360 மி.லி அளவில் தணுப்பான, இனிப்பான, வாசமான லஸ்ஸி. சர்க்கரை வியாதிக்காரன் அல்லவா என்பீர்கள். பயணங்களில் அதை நான் பெரிதாகப் பொருட்படுத்துவது இல்லை. மேலும், நோயைச் செல்லம் கொஞ்சும் வழக்கமும் இல்லை.
பாலாவின் ‘நான் கடவுள்’ படப்பிடிப்பின் போது, ஜெயமோகனும், சுகாவும் ஒரு மாதத்திற்கும் மேல் காசியில் இருந்தனர். ஒரு நாள் மாலை காசி மாநகரின் இடுக்குத் தெருவில் நடந்தவாறு சுகா கூப்பிட்டார்.
‘‘சமோசா, பஜ்ஜியா, லால்பேடா, லஸ்ஸி எல்லாம் நல்லாருக்கும். சாப்பிடுங்கோ!’’ என்றேன்.‘‘முழுக்கையையும் பாத்திரத்துக்கு உள்ளே விட்டுக் கிண்டுகானுகோ சித்தப்பா’’ என்றார் சுகா.‘‘நம்மூர்லே இட்லி மாவு மாத்திரம் எப்பிடிக் கிண்டுகானுவோ? புரோட்டாவுக்கு எப்பிடி மாவு பெசையரானுவோ? சும்மா வாங்கித் திண்ணுங்கோ’’ என்றேன்.
வாயைத் துடைத்து, சட்டியை வீசிப்போட்டு உடைத்தபடி வந்த அனுஜிடம் சொன்னேன், ‘‘மஜா ஆயா பையா’’ என்று. பயணத்தைத் தொடர்ந்தபோது கேட்டேன். ‘‘ஏன் டாக்சி ஓட்ட வந்திட்டே பையா? படிப்பு வரலியா?’’‘‘பனாரஸ் இந்து யூனிவர்சிட்டியிலே பி.ஏ எகனாமிக்ஸ் இரண்டாமாண்டு படிக்கிறேன், சாப்’’ என்றான்.ஆச்சரியமாக இருந்தது எனக்கு. ‘‘அப்ப, டாக்சி எப்பிடி?’’‘‘இப்போ விடுமுறைதானே!’’ என்றான்.மகிழ்ச்சியாகவும், பெருமிதமாகவும் இருந்தது.
அனுஜ் மேல் ஒரு மரியாதை ஏறியது. காசியில் நானிருந்த நான்கு நாட்களிலும், குளிர்காலம் என்பதால் அரை நாள்தான் நிகழ்ச்சிகள். எழுத்தாளர் சந்திப்பு நேரம் போக, எனது பிற பயணங்களுக்கு அனுஜ் உதவியாக இருந்தான். திரும்புகாலில், பல்கலைக்கழக வளாகத்தில் இருந்தே விமானதளத்துக்கு கொண்டு விடச் சொன்னேன். மறக்காமல் மறுபடியும் லஸ்ஸி. வீட்டுக்கு வாங்கிக் கொண்டு வர அவன் தேர்வு செய்த கடையில் லால்பேடா, சிக்கி என வாங்க உதவி செய்தான்.
கேட்கக் கூடாது என்ற முடிவில் இருந்தவன் கேட்டேன், ‘‘தினமும் என்ன வருமானம் கிடைக்கும்?’’
தயங்காமல் சொன்னான், ‘‘நூறு ரூபாய் கிடைக்கும்’’ என்று. ‘‘சாரநாத் தொடங்கி 170 கி.மீ தொலைவில் இருக்கும் அலகாபாத் வரைக்கும் ஓட்டுகிறேன்’’ என்றான்.நம்மூர் சிக்னலில் பச்சை விழும் முன்பே காதுகள் செவிடுபட ஒலிப்பான் அடிப்பவர்கள் காசியின் தெருக்களில் வண்டிஓட்டிப் பழக வேண்டும். பசு மாடுகள் யாவுமே காமதேனுக்கள், காளை மாடுகள் எல்லாமே நஞ்சுண்ட கண்டனின் இடப வாகனங்கள். ஒன்றுமே செய்வதற்கில்லை. அவற்றை முட்டிக் கொண்டு நடமாடும் துறவிகளும், யாத்ரீகர்களும், உள்ளூர்வாசிகளும்.
ஊடு பயிராக சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ ரிக்ஷா, பல்லின இருசக்கர வாகனங்கள், கார், அடர்நிறங்களின் ஜிகினாத் துணிகளால் பொதியப்பட்ட செத்த பிணங்களை டாப்பில் கட்டி அரிச்சந்திரா காட் விரையும் டாக்ஸிகள். காரில் சைக்கிள் ரிக்ஷா உரசிக் காயப்படுத்தினால் எவரும் கதவைத் திறந்து வந்து கத்தவில்லை.
இருசக்கர வாகனங்களின் இருபக்க ஆடிகளும் நம்மூரில் வெளிப்பக்கமாக நீண்டிருக்கும். காசியில் உட்பக்கமாகத் திருப்பி விட்டிருந்தார்கள். காசியில் கருடன் பறக்காது, பல்லி பேசாது, பூ மணக்காது, எரியும் பிணம் நாறாது என்பது போல் போக்குவரத்து இரைச்சலில் காதும் கேட்காது. இந்த நெரிசலிலும் அனுஜ் திறமையாகக் காரோட்டினான்.
விமான தளத்தில் காத்திருந்தபோது அனுஜ் பற்றி சிந்தித்தவாறிருந்தேன். அவன் விடுமுறை நாட்களில் வாடகைக் கார் ஓட்டுகிறான். நான் செங்கல் சுமக்க, புன்னைக்காய் அடித்துப் பொறுக்க, வாசறுமிண்டான் பயிரின் அடிக்கட்டைத் தாள்களைப் பொறுக்கிச் சுமக்க, சூடடிக்கப் போனேன்.விதி என்பது வலியது.
ஆனால் ஆள்வினை உடையவன் விதியையும் வெற்றிகொண்டுவிடுவான். கண்ணதாசனின் கவிதை வரி ஒன்றும் ஓடியது மனதில்.‘விதி எனும் ஒன்றை நீ வெல்வதும் உண்டு காண் – வெல்வதுன்விதி என வேதன் விதித்தலால்’என்று. எனினும் திருக்குறள் மேற்சென்றும் உரைக்கிறது.
‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர்’ என்று. சோர்வும் மடியும் இன்றி முயற்சி செய்பவர், விதியைக் கூட பின்னுக்குத் தள்ளி முன்னடப்பார்கள்.
விபத்தும் நோயும் வெடிகுண்டும் போரும் மனிதரைத் தோற்கடித்து விடுகின்றன பல சமயங்களில். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியிலும் பன்னாட்டுச் சதியிலும் அவை தவிர்க்க முடியாதவை என்று ஆகிவிட்டன.
‘நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்பெருமையுடைத்து இவ்வுலகு’என்ற குறள் பிறிதோர் பொருளிலும் மெய்ப்படுகிறது. எனினும் முயற்சி உடையவரை வாழ்க்கை தோற்கடித்து விடாது.பிப்ரவரி 12ம் நாள், கோவையின் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி யின் மூன்று நாட்கள் ‘யுகம்’ சந்திப்பின் துவக்க விழாவில், நானும் கார்ட்டூனிஸ்ட் மதனும் மேடையில் இருந்தபோது, கேள்வி நேரத்தின் போது என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் ஒரு மாணவர், ‘‘எங்களுக்காக ஒரு சொற்றொடர் சொல்லுங்கள்’’ என்று. நான் சொன்னேன், ‘‘உங்களை, உங்களைத் தவிர, வேறெவராலும் தோற்கடிக்க இயலாது’’ என்று.
(கற்கலாம்…)
ஓவியம்: மருது
கைம்மண் அளவு 4ம் பகுதியை வாசிக்க: 
கைம்மண் அளவு 1ம் பகுதி: https://nanjilnadan.com/2015/02/23/கைம்மண்அளவு1/
கைம்மண் அளவு 2ம் பகுதி: https://nanjilnadan.com/2015/03/04/கைம்மண்அளவு2/

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு and tagged , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s