கற்பது என்பது பாடப் புத்தகம் வாசிப்பது மட்டும் அல்ல.
கேட்டுத் தெரிந்து கொள்வதும்,
பாடப் புத்தகங்களுக்கு வெளியே வாசிப்பதும் கல்விதான்.
எனவேதான் ‘கல்வி கேள்வி’ என்று கேள்வியைக் கல்விக்கு அடுத்து வைத்தனர்.
‘கற்றலின் கேட்டல் நன்று’ என்பார்கள்.
கம்பனை நான் எழுத்தெண்ணி கற்க்கவில்லை. பாடம் கேட்டேன்.
‘தனக்கு கற்க்க வாய்ப்பற்றுப் போயிருந்தாலும், கற்றவரைச் சேர்ந்து ஒழுகினால் நல்லறிவு தினமும் கிடைக்கப் பெறுவார்கள்’ என்கிறது நாலடியார்.
பாடப் புத்தகங்களுக்கு வெளியே சொந்த அனுபவங்கள் மூலமாகவும்,
அனுபவம் உடையோர் பகிர்ந்து கொள்வதாலும் நாம் பெறுவதும் கல்விதான்.…. நாஞ்சில் நாடன்.
வாசிக்க வாசிக்க நாம் ஒன்றுமே படிக்கவில்லையே என்று உணருகிறோம். ‘கல்வி கரையில, கற்பவர் நாள் சில’ என்பது நாலடியார். கல்வி என்பது கரையற்றது; ஆனால் கற்பவர் நாளோ, சில என கணக்கிடப்பட்டது.
‘கைப்பொருள் கொடுத்தும் கற்க, கற்றபின் கண்ணும் ஆகும்’ என்கிறது சீவக சிந்தாமணி. ‘கைப்பொருள் கொடுத்தும் கற்க வேண்டும், கற்றபின் அதுவே கண்ணும் ஆகிவிடும்’ என்பது பொருள். இன்று கைப்பொருள் என்ன? குடும்பச் சொத்து, ஊதியத்தில் கடன், வங்கிக்கடன் வாங்கிக் கற்க வேண்டியதிருக்கிறது.
அன்று விலையில்லாமல் இருந்த கல்வி விலை மதிப்பில்லாமல் இருந்தது; இன்று கல்வித் தந்தைகள் பெருகிப் போன நிலையில், அவர்கள் கல்வி கற்பவனின் உள்ளாடையையும் உருவிக் கொண்டு விடுகிறார்கள். ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே’ என்பது புறநானூறு.
‘உற்றாரை யான் வேண்டேன், ஊர் வேண்டேன், பேர் வேண்டேன், கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்’ எனும் மாணிக்கவாசகர் பாடலில், ‘கற்பனவும் இனி அமையும்’ என்பதற்கு, ‘இதுவரை கற்றது போதாது, இனிமேல்தான் கற்பது அமையும்’ என்று இந்த சந்தர்ப்பத்தில் பொருள் கொள்ளலாம்.
கற்பது என்பது பாடப் புத்தகம் வாசிப்பது மட்டும் அல்ல. கேட்டுத் தெரிந்து கொள்வதும், பாடப் புத்தகங்களுக்கு வெளியே வாசிப்பதும் கல்விதான். எனவேதான் ‘கல்வி கேள்வி’ என்று கேள்வியைக் கல்விக்கு அடுத்து வைத்தனர். ‘கற்றலின் கேட்டல் நன்று’ என்பார்கள். கம்பனை நான் எழுத்தெண்ணிக் கற்கவில்லை, பாடம் கேட்டேன்.
‘தனக்குக் கற்க வாய்ப்பற்றுப் போயிருந்தாலும், கற்றவரைச் சேர்ந்து ஒழுகினால் நல்லறிவு தினமும் கிடைக்கப் பெறுவார்கள்’ என்கிறது நாலடியார். பாடப் புத்தகங்களுக்கு வெளியே, சொந்த அனுபவங்கள் மூலமாகவும், அனுபவம் உடையோர் பகிர்ந்து கொள்வதாலும் நாம் பெறுவதும் கல்விதான்.
மஞ்சணாத்தி என்றொரு மரம் சின்னஞ்சிறு வயதில் எனக்கு அறிமுகம் ஆனது. அந்த மரம் பற்றிப் பாடப் புத்தகங்களின் மூலம் எதுவும் அறிந்ததில்லை. ஒருவேளை தாவரவியல் பட்டப் படிப்பினர் அறிந்திருக்கலாம்.
பேரகராதி பார்த்தால் மஞ்சணாத்தி, மஞ்சணாற்றி, மஞ்சணாறி எனும் தாவரங்கள் தென்படுகின்றன. செடி வகை என்றும், கொடி வகை என்றும் பொருள் தருகிறார்கள். நானறிந்த மஞ்சணாத்தி இரண்டாள், மூன்றாள் உயரம் வளரும் சிறுமரம். கிளையை ஒடித்தால் மஞ்சளை முறித்தது போலிருக்கும்.
மஞ்சணுணா என்றும் ஒரு சொல்லுண்டு பேரகராதியில். மஞ்சள் + நுணா = மஞ்சணுணா. அதுவும் மஞ்சணாத்திதான். மஞ்சணாத்திக்கு வாசமான வெள்ளைப் பூக்கள், முல்லையின் அளவில் பூப்பது. பறித்துச் சூடுவது இல்லை. காய்த்துப் பழுக்கும். கரிய நிறக்கனிகள். மைனாக்கள் விரும்பி உண்ணும். மஞ்சணாத்தி பழுத்தால் மஞ்சள் மூக்கு மைனாக்களின் கொண்டாட்ட சிலம்பல் கேட்கலாம்.
தமிழ் இலக்கியங்கள் பேசும் நுணா எனும் மரமும் மஞ்சணாத்தியும் ஒன்று என எனது அறுபதாவது வயதில்தான் அறிந்துகொண்டேன், மஞ்சணுணா எனும் சொல் தந்த தூண்டுதலால்! நுணா எனும் சொல்லுக்குப் பேரகராதி ‘மஞ்சணாத்தி மரம்’ எனப் பொருள் தருகிறது. மஞ்சணாத்தி பற்றி சங்க இலக்கியத்தில் பேச்சில்லை.
ஆனால் சிறுபாணாற்றுப்படையும், ஐங்குறுநூறும், நுணவம் என்று நுணா மரம் பேசுகிறது. ஈராயிரம் ஆண்டுகளாக, ஏன் அதற்கும் பல்லாயிரம் ஆண்டுகள் முன்பாக, நம்முடன் வாழ்ந்து வரும் மரம். இன்றும் அதன் கொப்புகளை ஒடித்து, இலைகளைக் காம்புடன் ஆய்ந்து, பல நிற மாலைகளில் பச்சை நிறத்துக்குப் பயன்படுத்துகிறார்கள்.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஜெயமோகன், மரபின் மைந்தன் முத்தையா, ‘கல்கி’ சந்திரமௌலி, உயர்நீதிமன்ற வழக்குரைஞர் – இலக்கியச் சொற்பொழிவாளர் தா.இராமலிங்கம், இளம் படைப்பாளி கனக தூரிகா ஆகியோருடன், மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன் அழைப்பின் பேரில் மலேசியா சென்றிருந்தோம். அவருடைய பாராளுமன்றத் தொகுதியில், சீனர்கள் அதிகம் வாழும் பகுதியில் அமைச்சருடன் கலந்துரையாடும் கூட்டம் நடந்தது. நான் காலாறச் சற்று நடந்தபோது, நம்மூர் நுணா போன்ற மரம் ஒன்று பார்த்தேன்.
அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன். மஞ்சணாத்தியின் இன்னொரு வகை. இன்னொரு வகை என்று நான் கூறுவது எலுமிச்சை, நாரத்தை குடும்பம் போல. பூக்களும் காயும் நுணாவை ஒத்திருந்தன. பெயர் கேட்டபோது சீனர் ஒருவர் சொன்னார்
‘நோனி’ என்று. நுணா-நோனி எனும் இரு தொல்மொழிச் சொற்களின் அமைப்பை மொழியியலாளர் ஆராயலாம். சென்னையில் அமுதன் எனும் எழுத்தாளர் ‘வெண் நோனி கஷாயம்’ ஒன்று விற்பனை செய்கிறார்… இளமையும், உடல்நலமும், மேனி அழகும் பெற உதவும் என்று!
இந்த போதத்தில் சொல்கிறேன், கற்றது கைம்மண்ணளவு என்று. ஔவை கற்றதே கைம்மண்ணளவு எனில், அற்பமான யாம் எதைக் கிள்ளி உம்மிடத்து விளம்ப என்பது எம் கவலை!காய்கறிகள் பற்றிய அறிவு, பள்ளியில் பயிலும் பாலர்க்கு Name any five vegetables எனும் கேள்வி யில் முடிந்து போகிறது. அதுவும் அவர்கள் கற்கும் காய்கறிகள் காலிஃப்ளவர், கேரட், கேபேஜ், பொட்டேட்டோ, பீன்ஸ், பீட்ரூட் என்பவையே!
பல்லாயிரம் ஆண்டுகளாய் நம் மூதாதையர் உண்ட பாகல், வழுதுணை, வெள்ளரி, பீர்க்கன், மாங்காய், பலாக்காய் அல்ல. Birds என்றும் Animals என்றும் Trees என்றும் பாடப் புத்தகங்கள் தரும் கல்வி சொற்பமானது. பூவரசு, புங்கன், கொன்றை, வாகை, நொச்சி, தாழை, தெங்கு, பனை, கமுகு என அவர்கள் அறிய மாட்டார்கள். வளர்ந்து பெரியவர் ஆன பின்னரும் அறிய மாட்டார்கள்.
எங்கோ முணுமுணுப்பது கேட்கிறது என் செவிகட்கு! தெரிந்து என்ன ஆகப் போகிறது?
பல கோடிகளில் சம்பளம் வாங்கும், நமக்கு கேளிக்கை காட்டும் எல்லா நடிகர்களையும் தெரிந்து வைத்துக் கொண்டு ஆகப் போவதென்ன? கூலிக்காக ஆடை குறைத்தும் உறுப்புகளின் கண்காட்சி நடத்தியும் திரியும் நடிகைகள் பயோடேட்டா தெரிந்து ஆகப் போவதென்ன?ஒரு முறை தூதஞ்சல் அனுப்பப் போயிருந்தேன்.
எனது தபால்களை, தூதஞ்சல்களை நானே சேர்ப்பது வழக்கம். எனக்கு முன்னால் இளைஞர் ஒருவர் நின்றிருந்தார். மிக அருகில் புகழ்பெற்ற தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றிருந்தது. அதில் பயிலும் மாணவனாக இருத்தல் வேண்டும். தூதஞ்சல் பதியும் பெண்ணிடம் சொன்னார் – ‘‘ஸ்பீடு போஸ்ட் அனுப்பணும்’’ என்று!அந்தப் பெண் சொன்னாள், ‘‘இங்க கூரியர்தான் அனுப்பலாம்’’அந்த இளைஞர் சொன்னார், ‘‘ஸ்பீடு போஸ்ட்தான் அனுப்பச் சொல்லி இருக்காங்க!’’
அவருக்குப் புரியவில்லை, ஸ்பீடு போஸ்ட் அனுப்ப அஞ்சல் நிலையம் போக வேண்டும் என. இதன் மூலம் நான் எதையும் நிறுவ முனையவில்லை.1972ல் வேலை தேடி பம்பாய் போனவன், தொழிற்சாலை ஒன்றில் வேலைக்கு அமர்ந்தேன். தொழிற்சாலை மேலாளர் அறையில் தொலைபேசி மணி அடித்தது.
அவர் பணிக்கூடத்தில் நின்றிருந்தார். ஓடிப்போய் எடுத்தேன். மேலாளரைக் கேட்டார்கள். ‘‘இருங்க, கூப்பிடுகிறேன்’’ என்று சொல்லி, போன் ரிசீவரை அதன் தொட்டிலில் கிடத்தி விட்டு அவரைக் கூப்பிடப் போனேன். கணிதத்தில் பட்ட மேற்படிப்புப் படித்த எனக்குத் தெரிந்திருக்கவில்லை, பேசி முடித்த பின்தான் ரிசீவரைத் தொட்டிலில் கிடத்த வேண்டும் என. அன்றெனக்குத் தோன்றியது, ‘கற்றது கைம்மண் அளவு’ என்று.
நாற்பதாண்டுக் காலம் எழுதி வருபவன் நான். முப்பது நூல்களுக்கும் மேலாக எழுதி இருக்கிறேன். அரிச்சுவடி வகுப்பிலிருந்து ஔவையின் ‘ஆத்திச்சூடி’ பயின்றவன். ஆத்திச்சூடி பற்றி, ‘அஃகம் சுருக்கேல்’ என்று நீண்ட கட்டுரையும் ‘உயிர் எழுத்து’வில் எழுதியவன். ஆத்திச்சூடி பற்றி அண்மையில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எனது நண்பர் – பேராசிரியர் – ‘லயம்’ சிற்றிதழ் நடத்திய முனைவர் கால சுப்ரமணியம் சொன்னார், ‘‘நாஞ்சில், இனிமேல் ‘ஆத்திசூடி’ என்று எழுதுங்கள்’’ என.
எனக்கு அப்போதுதான் விளங்கியது. இது நாள்வரை நான் ‘ஆத்திச்சூடி’ என்றே எழுதி வந்திருக்கிறேன் என. என்ன வேறுபாடு என்று கேட்பீர்கள்! வித்தியாசம் இருக்கிறது. கைம்மண் அளவே கற்றது என்பதனால் நாளும் கற்றுக்கொண்டே இருக்கிறோம்.பம்பாயில் பணிபுரிந்த எனது இளம்பருவத்து ஆண்டுகளில், வளைகுடா நாடுகளுக்கு கூலி வேலைக்குப் போகும் பீகாரி, உ.பி பையாக்கள் பற்றி அமங்கலமான ஜோக் ஒன்று சொல்வார்கள்.
வேலைக்குப் போனவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தங்குமிடத்தில் இருந்த குளிப்பறை-கழிப்பறை பார்த்து ஒருவன் கூவினானாம்,‘‘அரே பாய்! யஹாங் தோ நல்லி ஹை அவுர் கூவா பி ஹை’’ என்று.பொருளாவது, ‘சகோதரா, இங்கே தண்ணீருக்குக் குழாயும் இருக்கிறது, மொண்டு ஊற்றக் கிணறும் இருக்கிறது’ என்று. கிணறு என்று அவன் குறிப்பிட்டது, வெஸ்டர்ன் குளோசட்.அன்றே எனக்கு சிரிப்பு வரவில்லை.
(கற்கலாம்…)
அருமை அய்யா! நிறைய எழுதும் வண்ணம் , உங்களுக்கு ஆண்டவன் உடல்நலம் அருள வேண்டிக்கொள்கிறேன்…ஏதோ என்னால் முடிந்தது…
யாரேனும் தயை கூர்ந்து ஆத்திசூடி, ஆத்திச்சூடி – வேறுபாட்டை விளக்குங்கள்,