அஃகம் சுருக்கேல் – நாஞ்சில் நாடன் கட்டுரைத் தொகுப்பு – ஒரு மெச்சல்

10277152_812562692118200_7552917912974920755_n
தொகுப்பாசிரியர் : ஜி. ஆர். பிரகாஷ்
நூல் கிடைக்குமிடம் : மாலதி பதிப்பகம், கோவை.
தொடர்புக்கு : 9 9946  95242, 94881 85920
மின்னஞ்சல் :  malathipathipagam@gmail.com
விலை : ரூ. 150/-
வ.ஸ்ரீநிவாசன்
ஆள்வது என்றால் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. துன்புறுத்துவது அல்ல, பரிபாலனம் செய்வது. மேன்மையுறக் கலந்துறவாடுவது.போற்றுவது.
ஒருமுறை நாஞ்சில் நாடன் அவர்களிடம், “‘நமஹ’ என்கிற சம்ஸ்க்ருத சொல்லின் பொருள் எனக்குத் தெரியாது; ஆனால் அதற்குப் பதிலாக தமிழ் வழிபாட்டுத் துதிகளில் ‘போற்றி’ என்று இருப்பது தெரியும். தமிழன் காலங்காலமாகப் போற்றி போற்றி என்று யாரையாவது முகஸ்துதி செய்து கொண்டே இருப்பவன் போலும்” என்று சொன்னேன். உடனே அவர் ‘போற்றி’ என்பது புகழ்வது மட்டுமல்ல; அதற்கு இன்னும் பல ஆழமான பொருள்கள் உண்டு என்று விளக்கினார். போற்றுவது என்பது அக்கறையோடு பேணுவதும் கூட. மதிப்பு தருவது மட்டுமின்றி அன்பு செலுத்துவதும் கூட என்றெல்லாம் பேசினோம். அந்த விதத்தில் ஆள்வது என்பது இவையனைத்துமானது.Captured
ஆள்பவன் என்பவன் இப்படி இருந்தால் ‘ஆபயன் குன்றாது; அறு தொழிலோர் நூல் மறவார்’ குடியாள்பவன் இப்படி என்றால் எழுத்தாள்பவன் எப்படி இருக்க வேண்டும்? மொழியின் மீது, சொல்லும் பொருளின் மீது முழுக்கட்டுப்பாடும், மோகமும், போற்றுதலும், நுண்ணறிவும், புலனுணர்வும், மொழியின் பரப்பையும், வீச்சையும் துல்லியமாய் கணிக்கும் திறனும் உடையவனாக இருக்க வேண்டும். மொழியை ஆள வேண்டும். போற்றிப் பேண வேண்டும். அவன்தான் எழுத்தாளன். இது எம்மொழிக்கும் பொருந்தும். பாக்கிப் பேர் ‘எழுத்துபயோகிகள்’ மட்டும்தான். தமிழில் அரிதாகக் கிடைக்கிற எழுத்தாளர்களில் நாஞ்சில் நாடனும் ஒருவர்.
இத்தகைய எழுத்தாளர்களிலும் வாழ்நாள் சுருக்கத்தாலும், வாழ்வின் நெருக்கத்தாலும், மனப் பாங்கினாலும் தேர்ந்தோ, எதேச்சையாகவோ எழுத்தின் பல்வேறு துறைகளிலும் கவனத்தைச் செலுத்தாதவர் அல்லது செலுத்துபவர் என்று இரு பெரும் பிரிவுகள் உண்டு. புதுமைப் பித்தனும், மௌனியும் நாவல் எழுதியதில்லை. ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி முதலியவர்கள் போல் நாஞ்சில் நாடனும் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை போன்ற பல பிரிவுகளிலும் தடம்பதித்தவர். தடம் பதித்தவர் என்றால் ஏனோ தானோ என்று அல்ல. முழு வீச்சுடனும் ஆழமாக. இவை தவிர திரைக்கதை, மேடைப் பேச்சு, உரையாடல், நேர்காணல் என்னும் பல துறைகளிலும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியப் பணி புரிந்து வருபவர்.
இப்போது எழுத்துகளை புனைவு, அ-புனைவு என்று பிரிக்கும் வழக்கம் வந்துள்ளது. முன்பெல்லாம் கதை, கவிதை மற்றும் கட்டுரை என்று சொல்வதுதான் வழக்கம். இந்த புனைவு மற்றும் அபுனைவு ஆங்கில Fiction, non-fiction ஆகிய இரண்டின் தமிழ்ப்படுத்துதல். புனைவு. இதில் எத்தனை அபுனைவு? இந்த அபுனைவில் எவ்வளவு புனைவு? உலக இலக்கியத்தில் இது போன்ற கறாரான, மூச்சு முட்டும் கட்டுப்பாடுகள் எப்போதோ தளர்ந்து விட்டன. ‘Fiction, nonfiction – the two are bleeding into each other all the time.’ என்கிறார் ஜெஃப் டையர். இதை தமிழில் செய்தவர்களில் நாஞ்சில் நாடன் முக்கியமானவர். இவரது கதைகளில் கட்டுரைத் தன்மை திடீரென்று கதையாகும் மாயம் நிகழும். உதாரணத்திற்கு இரண்டு: ‘வனம்’ என்கிற சிறுகதை, மற்றும் சில ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில் வெளியான ‘பெருந்தவம்’ என்கிற கதை. அதே போல் இவரது கட்டுரைகளில் சிறுகதைகளின் சுவை இருக்கும்.
கதை, கட்டுரை மட்டுமல்ல. கவிதையும் அப்படித்தான். நம் மரக்காலால் அளக்க முடியாத மகாநதி. கவிதை என்பது கவிதைகளில் மட்டுமே எழுதப்படுவது மட்டுமன்று. அது கவி உளத்திலிருந்து பிறப்பது. அப்படிப் பார்த்தால் இப்போது கவிதைகள் பலவற்றில் கவிதை இல்லை என்று சொல்லி விடலாம். எழுத்தின் இசை கவிதை. ஒரு கதையில், ஒரு கட்டுரையில் ஒரு கவிதை வரி மனதை ஆண்டு விடும். ‘மோகமுள்’ என்கிற தலைப்பே கவிதை. ‘கற்பு கற்பென்று கதைக்கிறீர்களே, இதுதான் ஐயா பொன்னகரம்’ என்கிற வரிகள் கவிதை. ‘கம்பனுக்குள் வந்த கதையில்’ நாஞ்சில் நாடன் தன் கம்ப ராமாயண ஆசிரியர் திரு ரா.பத்மநாபன் பற்றிக் குறிப்பிடுகையில் “ரா.ப. வுக்கு எந்த விதத்திலேயும்  உபகாரம் செய்திருக்கலாகும் என அவர் இறந்து ஒரு வனவாச காலம் கடந்தபின்பு, இந்த நூலை (கம்பனின் அம்பறாத் தூணி) காணிக்கையாக்கி நான் அவருக்குக் கடன் செய்கிறேன். நீர்க்கடன் அல்ல நூற்கடன்” என்கையில் சொல்லாலும், பொருளாலும் நோக்கத்தாலும் கவிதை நிகழ்ந்துவிடுகிறது.
எனவே கட்டுரை அல்லது அபுனைவு என்பது நல்லதோர் எழுத்தாளனின் ஆளுமையில் வறண்ட தரிசு நிலம் அல்ல. அவன் கலை புணர்ந்து பெறும் குழந்தைகளுக்கு நாம் வைக்கும் பெயர்களால் அவற்றின் குணம் கட்டுப்படப் போவதில்லை.
கட்டுரை உட்பட எழுத்தின் அடிப்படை, வாழ்க்கையின் அடிப்படையுமான, அதே சமயம் சொல்லிச் சொல்லித் தேய்வழக்காகி விட்ட ‘உண்மை, அன்பு, அழகு’தான். அதை எம்மொழியில் சொன்னால் என்ன? ‘Truth Beauty, Love’ என்றாலும், ‘சத்யம், சிவம் சுந்தரம்’ என்றாலும் ஒன்றுதான். மேன்மையான எழுத்து இவற்றின் மேல் மலர்வது.
‘உண்மை’ பற்றிச் சொல்கையில், நாஞ்சில் நாடன் அவர்களின் கதைகளிலேயே கூட ஒரு தகவல் இருந்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிறார் வெங்கட் சாமிநாதன். அப்போது கட்டுரைகள் பற்றி என்ன சொல்வது. கட்டுரைகள் என்பவை எழுத்தாளனின் தொடர்ந்த உரையாடல். அவன் சொல்லும் விஷயங்கள் தவிர அவனைப் பற்றியும், நம்மைப் பற்றியும் அவ்வெழுத்துகள் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம். அதில் தில்லு முல்லுகள் செய்வது, திரிப்பது என்பவை பஞ்சமா பாதகங்களை விட கொடியவை. நாஞ்சிலின் கட்டுரையில் உள்ள தகவல்கள் பலமுறை பல கோணங்களில் சரிபார்க்கப்பட்ட பின்பே அச்சுக்கு வருபவை. அவரது மனச் சாய்வுகள், பிடித்த பிடிக்காத தன்மைகள் என்று வாசகர் சிலவற்றைக் கருதலாம். ஆனால் தகவல் பிழைகள் இரா.
‘அன்பு’ என்பது துன்பம் துடைத்தல். அதை மகத்தான எழுத்துகள் செய்து கொண்டே இருக்கின்றன. அதனால்தான் அநியாயத்துக்கு எதிரான, எனவே ஏழைகளுக்கும், பலஹீனமானவர்களுக்கும், வஞ்சிக்கப் பட்டவர்களுக்கும் ஆன, அதே சமயம் அதன் மூலம் ஆதாயம் தேடாத குரலாக நாஞ்சில் நாடன் எழுத்துகள் ஒலிக்கின்றன. இந்தத் துன்பங்களுக்குக் காரணமான வாழ்க்கைச் சீரழிவுகளைப் பற்றி மீண்டும், மீண்டும் பேசுகின்றன.
‘அழகு’ என்பது துல்லியம், சரியான அளவு, தன்மை. சொல்ல வந்த விஷயத்தைப் பிசிறின்றிச் சொல்வது. இதற்கு அகத்தெளிவும், விஷய அறிவும் அவசியம். ‘The difference between the right word and the almost right word is the difference between lightning and a lightning bug.’ என்கிறார் மார்க் ட்வெய்ன். இந்த விஷயத்தில் வார்த்தைப் பற்றாக் குறை என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் எழுதுபவர் நாஞ்சில் நாடன். பழந்தமிழ்ச் சொற்கள், சமீப காலம் வரை இருந்து பிற மொழி மோகத்தால் வழக்கற்ற தமிழ்ச் சொற்கள் என்று கொட்டிக் கிடக்கும் நமது கருவூலத்தின் சாவி இவர் வசம் இருக்கிறது. இவரது நடை பழந்தமிழ் போல் இருக்கிறது. நவீன உலகுக்கு இது சாத்தியப்படுமா என்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி : ‘நீங்கள் நவீனம் என்பதை ஆங்கிலம் என்று நினைக்கிறீகளா, அல்லது ஒரு மொழியின் உயிர்த் தன்மை என்று நினைக்கிறீர்களா?’
மேலும் கூடியவரை தமிழ்ச் சொற்களையே தனிப் பேச்சிலும் பயன்படுத்தும் இவர் தேவை இருக்கையில் பொருளின் தன்மை கருதி பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தத் தயங்குவதில்லை. ஒரு கலைஞனால் எந்த ஒரு மொழியையும் எப்படி துவேஷிக்க முடியும்?
உலக நாடுகளுக்கும், இந்தியாவின் பலபகுதிகளுக்கும் சென்று வந்தவரும், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளவருமான இந்த நாகர்கோவில் தமிழர், அடிப்படையில் ஒரு விவசாயியாகவே தன்னைப் பாவிக்கிறார். இவரது உறவு முதலில் மண்ணோடு, பயிர்களோடு, தாவரங்களோடு, விலங்குகளோடு, பறவைகளோடு. இந்த உறவுகளின் வலிமையின் காரணமாகவே இவருக்கு மனித உறவுகள் சீராகவும், சிக்கலற்றும், அன்போடும் இருக்க வேண்டும் என்கிற அக்கறையும், அதுகுறித்த தற்காலச் சூழல் மற்றும் தாக்கங்களால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அழிவு பற்றிய அச்சமும் ஒருங்கே உள்ளன. அதனல்தான் “இந்தியா பூராவும் செல்போன்களின் விதவிதமான வல்லிசைகளால் நிரம்பி பிரபஞ்சத்தில் வழியும் காலம் வெகு தூரத்தில் இல்லை” எனக் கவலுறுகிறார். “செண்பகப் பறவைக்குத் தெரியுமா அதன் பெயர் செண்பகம்” என்று என்று வினவுகிறார். “இவ்வுலகு மனிதர்க்கு மட்டுமே சொந்தமானது அல்ல” என்பதை நமக்கு நினைவு படுத்துகிறார்.
எழுத்தாளன் நேர்மையாக இருக்க வேண்டும். சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல். எல்லாம் சரி என்பதல்ல இக்கோல். எது சரி என்பதுதான். நாஞ்சில் நாடன் சில இடங்களில் ஒரு விஷயத்தின் இரண்டு பக்கங்களையும் சொல்லிச் சென்று விடுவார். உதாரணம் : “பர்வம்’…………………………………
கட்டுரையை தொடர்ந்து படிக்க:
– See more at: http://solvanam.com/?p=37556#sthash.xMwQWzNX.dpuf

nanjil

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s