நற்றமிழ்ச்சுளைகள்

Screen Shot 2014-10-08 at 12.09.25 pm
வளவ. துரையன்
நாஞ்சில் நாடனின் “சிற்றிலக்கியங்கள்” கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து –
நவீன எழுத்தாளர்களில் சங்க இலக்கியம் போன்ற மரபிலக்கியப் பயிற்சி உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.sittrilakiyangal அவர்களிலும் சிற்றிலக்கியங்கள் பற்றியப் புரிதல் உள்ளவர்கள் மிக மிகக்குறைவு என்று உறுதியாகக் கூறலாம். அவர்களில் நாஞ்சில் நாடன் குறிப்பிடத் தக்கவர்ஆவார். தமது படைப்புகளில் ஆங்காங்கே சங்க இலக்கியவரிகளை எடுத்தாள்வது அவருக்கு மிக இயல்பாக வருகிறது.
யாருமே அதிகம் படித்தறியாத, அவரே சொல்வதுபோல் பள்ளிகளில், கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்களாக, தமிழ் விரிவுரையாளர்களாக, இருப்பவர்கள் தொட்டுக்கூடப் பார்த்திராதப் பல சிற்றிலக்கிய நூல்களை அவர் தேடிப் படித்து அவற்றை இன்றைய இளம்படிப்பாளிகளும் நவீன வாசகர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலால் இந்தத் தொகுப்பைத் தந்துள்ளார்.
12 வகைச் சிற்றிலக்கியங்களை அவர் இந்நூலில் அறிமுகப்படுத்தி உள்ளார். பொத்தாம் பொதுவாகப் போகிற போக்கில் வாசிக்கும் நூலன்று இது. அதேநேரத்தில் படித்து உணரக் கடினமானதன்று. நூலின் இடையே வரும் நாஞ்சிலின் வழக்கமான எள்ளல் பாணி வாசகனுக்குச் சுவை ஊட்டுகிறது. மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றை அப்படியே முழுதாய்க் கடித்துத் தின்னலாம். பலா மற்றும் ஆரஞ்சு முதலானவற்றைச் சுளை சுளையாகத் தின்றுதான் அனுபவிக்க வேண்டும். இந்நூல் இரண்டாம் வகையினது. எனவே ஒவ்வொரு வகையாகவே பார்க்கலாம். இங்கே ஒரு வார்த்தை. இக்கட்டுரை இந்த நூல் பற்றிய மதிப்புரை அன்று. ஓர் அறிமுகம். ஆமாம்; அவர் சிற்றிலக்கியங்களை அறிமுகம் செய்திருப்பது போல் நான் இந்நூலை அறிமுகம் செய்கிறேன்.
*
முதலில் கோவை. கோவை என்றாலே கோயம்புத்தூர்தான் நினைவுக்கு வரும். ஆனால் கோவை என்றும் திருச்சி என்றும் பெயரைச் சுருக்கி அழைப்பதே ஒரு வன்முறை என்கிறார் நாஞ்சில். ‘இயற்கைப் புணர்ச்சி’ முதல் ‘ஊதியம் எடுத்துரைத்து ஊடல் தீர்த்தல்’ ஈறாக நானூறு துறையைச் சார்ந்த பாடல்களைக் கோர்த்து எழுதப்படும் நூல் கோவையாகும். “பொதுவாகக் கோவை நூல்கள் அகத்திணை சார்ந்தே இருக்கும். ஆனால் திருக்கோவையார் மட்டும் பேரின்பம் சார்ந்ததாக உள்ளது” என்று கூறும் நாஞ்சில் அதற்கு இந்நூல் தில்லைக் கூத்தன் மீது பாடப்பட்டதுதான் காரணமாகும் என்கிறார்.
398 செய்யுள்களே கிடைத்துள்ள ஆசிரியர் பெயரே தெரியாத ‘கப்பல் கோவை’ எனும் நூலிலிருந்து ஒரு புதிய சொல்லாட்சியை நாஞ்சில் நாடன் எடுத்துக் காட்டுகிறார். அவர் சொல்லாராய்ச்சியில் பெரிதும் நாட்டம் உடையவர். அந்நூலில் ஒரு பாடலில் “பாட்டும் பனுவலும் பன்னிய மானதன்” என்ற அடியில் வரும் ‘மானதன்’ எனும் சொல் மனிதன் என்பதைக்குறிக்கும் எனக் கூறி “மனிதன், மானுடன், மானவன், மாந்தன் வரிசையில் ஒரு மாற்றுச் சொல் மானதன்” என்று எழுதுகிறார்.
அம்பிகாபதிக் கோவையில் 362 –ஆம் பாடலில் வரும் ‘முலை முற்றிய மென்முகிழ் மானுக்கு’ எனும் வரிக்கு உரையாசிரியர் இருவிதமாகப் பொருள் கூறும் நயம் சிறப்பாக உள்ளது. ”முற்றிய கொங்கைகளை உடைய மெல்லிய முகிழ்க்கும் நகைப்பினை உடைய பெண் மானாகிய தலைவி” என்பது ஒரு பொருளாகும். முலை எனும் சொல்லை முல்லை எனும் சொல்லின் தொகுத்தல் விகாரமாகக் கொள்ள வேண்டும். பின் முகிழ் எனும் சொல்லை முலை எனும் சொல்லோடு சேர்த்து மு[ல்]லை முகிழ் முற்றிய மென்னகை மானுக்கு என்று கொள்ள வேண்டும். இப்போது பொருள் கொண்டால் முல்லை முகையை ஒத்த மெல்லிய பற்களை உடைய மான் போன்ற தலைவி என்று வரும்.
நாஞ்சில் நாடனின் எள்ளல்களை ஒவ்வோர் இயலிலும் கண்டு கொண்டே போவது சுவையாக இருக்கும். “கட்டளைக் கலித்துறை என்ன என்பதை இலக்கணம் கற்ற புலவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்; இலக்கணம் கற்ற புலவர் என்பது கல்லூரித் தமிழ் விரிவுரையாளர் என்று அல்ல“ என்பது அவற்றில் ஒன்று.
திருக்குளந்தைச் சசிவர்ணன் ஒருதுறைக் கோவை எனும் நூலில் ஏகப்பட்ட பாடல்கள் இடைக்கு முலைகள் செய்யும் இடைஞ்சல்களைத்தான் பாடுகிறதாம். எந்த அளவுக்கு என்றால் எழுத அவருக்கே அலுப்பாக இருக்கிறதாம். இது மற்றொன்று.
அடுத்து வருவது மும்மணிக் கோவை. நேரிசை ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை, எனும் பாவினங்கள் முறையாக மூன்றாக அடுக்கிவர முப்பது செய்யுட்களால் அந்தாதித் தொடையில் அமைந்தால் அது மும்மணிக் கோவையாகும்.
திருவாரூர் மும்மணிக் கோவை என்பது பதினோராம் திருமுறையின் ஏழாவது நூலாகும். இதை எழுதியவர் சேரமான் பெருமாள் நாயனார். இவருக்குக் ‘கழறிற்றறிவார்” என்று வேறொரு பெயரும் உண்டு என்று குறிப்பிடும் நாஞ்சில் ” நான்கு ‘ற’கரங்கள் சேர்ந்து வரும் இன்னொரு சொல் என் சேமிப்பில் இல்லை. கண்டவர் சொல்லலாம்” என்கிறார். இதில் ஒரு பாடலில் சிவபெருமானைப் பற்றிச் சொல்லும்போது
“கடிமலர்க் கொன்றையும் திங்களும்
செங்கண் அரவும் அங்கே
முடிமலர் ஆக்கிய முக்கண நக்கன்”
என்று வருகிறது. இதில் வரும் நக்கன் என்பது நமக்குப் புதிய சொல்லாக அறிமுகமாகிறது என்கிறார். நூலாசிரியர். இந்த அடிகளின் பொருள் ”மணமிக்க கொன்றை மலையும், நிலவும், செங்கண் பாம்பும் அங்கே திருமுடியும் மலர்கள் ஆக்கிய முக்கணன் ஆடைகள் அற்றவன்” என்பதாகும். இதிலிருந்து நக்கன் என்பது ஆடையற்றவன் [நிர்வாணன்] என்பதைக் குறிப்பது நமக்குத் தெரிய வருகிறது.
மும்மணிக் கோவை நூல்களில் அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்த மறைமலை அடிகளாரின் “திருவொற்றியூர் மும்மணிக் கோவை”யைக் காட்டி அந்நூல் 1900, மற்றும் 1942, 1965 களில் பதிப்புகள் கண்டது அதற்குப் பிறகு வந்ததாகத் தெரியவில்லை என்கிறார். மேலும் அதன் முன்னுரையிலிருந்து சிலவரிகளை அடிகளாரின் மொழி நடையழகைத் தெரிவிக்க அப்படியே நாஞ்சில் நாடன் காட்டியிருக்கிறார். அதன் மூலம் அடிகளார் தம் 21-ஆம் அகவைக்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு உட்படப் பல நூல்களை மனப்பாடம் செய்துள்ளார் என்பதை அறிந்து வியப்பு கொள்கிறோம். அதைக் காட்டி நாஞ்சில் நாடன் தன் ஆற்றாமையை எழுதுகிறார் :
Screen Shot 2014-10-08 at 8.06.56 am
இளம்பெருமாள் அடிகள் இயற்றிய “திருமும்மணிக்கோவை” நூலில் ஒரு பாடல் இதோ:
”இது நீர் ஒழியின் இடை தந்து
உமை இமையத்து அரசி
புதுநீர் மணத்தும் புலி அதளே
உடை பொங்கு கங்கை
முதநீர் கொழித்த இளமணல்
முன்றில் மென்றோட்ட திங்கள்
செது நீர் ததும்பத் திவளம் செய்
செஞ்சடைத் தீவண்ணரே”
இப்பாடலுக்கு வித்துவான் எம். நாராயணப் பிள்ளை உரை எழுதி வர்த்தமான் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதோ உரை :
’உமாதேவி உம்மை மணந்த காலத்தும், இடையில் இந்தப் புலித்தோல் ஆடையையா அணிந்திருந்தீர்? பொங்கு கங்கை முதுநீர் கொழித்த இளமணல் முன்றிலில் மென்றோட்ட திங்கள் நீர் ததும்பத் திவளம் செய் செஞ்சடையையும் வண்ணத்தையும் உடையவரே! இந்த ஆடை வேண்டாம். நீக்கிவிடுங்கள்”
இப்பாடலில் ” மென்றோட்ட திங்கள் செது நீர் ததும்பத் திவளம் செய்” என்பதற்குத் தான் பொருள் புரியவில்லை. ஆனால் உரையாசிரியரோ பொருளுரையில் அந்த அடிகளை அப்படியே கூறிவிடுகிறார். இது வருத்தமும் வேதனையும் தருகிறது. நாஞ்சில் எப்பொழுதும் மனத்தில் எண்ணுவதை அச்சமில்லாமல் அப்படியே கூறிவிடுபவர். அதனால் இப்படி எழுதுகிறார்.
”பெரும்பொருள் செலவு செய்து, அருட் செல்வரிடம் நன்கொடை வாங்கி சிறப்பு வெளியீடாகக் கொண்டுவரப்படும் பதிப்பு இப்படிப் பொருள்தருகிறது. இந்தக் கர்மத்தை ஆம் எங்கு கொண்டு போய்த் தொலைக்க, செஞ்சடைத் தீவண்ணரே?”
*
அடுத்து வருவது உலா. எறிவனோ, தலைவனோ உலவரும் சிறப்பைப் பாடுவதே உலா இலக்கியம். நம் தமிழில் 81 உலா இலக்கிய நூல்கள் கிடைத்துள்ளன. பெண்களை ஏழு பருவத்தினராகப் பிரித்து தலைவன் உலா வரும்போது அப்பருவத்தினர் ஒவ்வொருவரும் அடையும் உள்ள உடல் கிளர்ச்சிகளே பாடப்படுகின்றன. ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலா சிறப்பான ஒன்று. இது மூன்று சோழ மன்னர்களின்மீது தனித்தனியே பாடப் பெற்றதாகும்.
“ஒட்டக்கூத்தர் பற்றிப் பல சுவாரசியமான கதைகள் வெளிவந்துள்ளன” என்று கூறும் நாஞ்சில் “கம்பரும் புகழேந்தியும் ஒட்டக் கூத்தர் காலம் என்பதற்குச் சான்றுகள் இல்லை’ என்கிறார். விக்கிரமசோழன் உலாவை 10 இடங்களிலும், குலோத்துங்கன் சோழன் உலாவை 2 இடங்களிலும், இராசராச சோழன் உலாவை 3 இடங்களிலும் உ.வே.சா தேடிச் சென்று பதிப்பித்தாரென்பது ஒரு புதிய செய்தியாகும்.
குலோத்துங்க சோழன் உலாவருகிறான். ஒட்டக்கூத்தர் பாடுகிறார்.
’இரவிக்கு நிற்பன ஏழும் ஒழியப்
புரவிக் குலம் முழுதும் போத’
அதாவது சூரியனின் தேரில் பூட்டப்படும் ஏழு குதிரைகள் தவிர்த்து உலகில் உள்ள அனைத்துக் குதிரைகளும் அவனுடன் பவனி வந்தனவாம். இதை மிகையான கற்பனை என்றாலும் அற்புதமான கற்பனை என்று நூலாசிரியர் பாராட்டுகிறார். எனக்கு கம்ப ராமாயணக் காட்சி நினைவுக்கு வந்தது. இந்திரசித்து அனுமனைப் பிரம்மாத்திரத்தால் கட்டி இலங்கை வீதியில் இழுத்துச் செல்கிறான். அப்போது அரக்கியர் தங்கள் இல்லத்திலிருந்த எல்லா கயிறுகளையும் கொண்டுவந்து அனுமனைக் கட்டுகின்றனர். அப்போது அந்த அரக்கியரின் கழுத்தில் இருக்கும் மங்கலக் கயிறு தவிர மற்ற எல்லாக் கயிறுகளும் கொண்டு வந்து கட்டியதாகக் கம்பன் கற்பனை செய்வான்.
இதேபோல இன்னுமொரு ஒப்பீட்டை நாஞ்சிலே காட்டுகிறார். கடம்பர் கோயில் உலாவில் பெதும்பைப் பருவப் பெண்ணைப்
”பேதை அரும்பிப் பெதும்பை அந்தப் போதாகி
மாது மலர்ந்த வனப்பினாள்”
என்று பாடல் அடிகள் காட்டுகின்றன. இதைக்,
”காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந்நோய்”
எனும் குறட்பாவிற்கு ஒப்பிட்டுக் காட்டுகிறார் நாஞ்சில்.
மேலும் திருச்செந்தூர் உலவில் இதே பெதும்பைப் பருவப் பெண்ணைப் பாடும் புலவர்,
‘—மெய்ப்புலமால்
வாரமிலா மாவலி முன் வந்தது ஒரு வாமன
அவதாரம் எனத் தோற்றும் தனத்தினாள்’
என்று பாடுகிறார். இந்த அடிகளுக்கு மாவலிச் சக்கரவர்த்தியின் முன்னால் திருமால் வாமன அவதாரம் போல் வந்து நின்றது போல் தோன்றும் தனத்தினாள் என்று பொருள் கூறும் நாஞ்சில் நாடன் புராணக் கதாபாத்திரம் ஒன்றை முலைக்கு உவமை சொல்வதை நாம் முதல் முறையாகப் பார்க்கிறோம் என்று பதிவு செய்கிறார்.
ஏழு பருவத்துப் பெண்கள் பற்றிய அங்க வருணனைகள் எல்லாம் குறிப்பிட்ட நாஞ்சில் நாடன் “கவிநயம் உண்டென்றாலும் தமிழ் வளம் உண்டென்றாலும் இது பெண்கள் பால் காட்டப்பட்ட அநீதி அன்றி வேறல்ல” என்று பதிவு செய்கிறார்.
இதேபோல “எல்லா உலாக்களிலும், ஏதும் விதி விலக்கில்லாமல், பத்து வயதுக்கும் குறைவான பெண்குழந்தையாகப் பார்த்தால் முலைதான் நினைவுக்கு வரும் என்றால் ஈதென்ன வரும்” என்றும், “முலையே முழுமுற்றும் போந்திலையே” என்றான் ஒரு புலவன். அது நமக்குப் புரிகிறது. நன்கு வளர்ந்து முழு வடிவம் அடையவில்லை எனும் பொருளில் பத்து வயதுக்கும் கீழே என்றால், ஆறு வயது மூன்று வயதுச் சிறுமியைப் பார்த்தும் பேசும் பேச்சா இது? தன் வீட்டுச் சிறுமியைப் பார்த்துச் சொல்வானா புலவன் ‘மார்பு ஒளித்த தனத்தினாள்’ என்று கோபவயப்படுகிறார்.
ஆச்சரியமாக இருக்கிறது. நாஞ்சிலே கூறுகிறார். சிற்றிலக்கியங்கள் எல்லாமே மகிழ்வூட்டவும் கிளுகிளுப்பூட்டவும்தான் எழுதப்பட்டன என்று. அப்படி எழுதும்போது அந்தந்தப் பருவப் பெண்களின் வருணனை பாடினால்தானே அந்தப் பகுதி முழுமை பெறும். அகஇலக்கியங்களில் இப்படி கேட்டல் சரியா என்பதை அவர்தாம் முடிவு செய்ய வேண்டும்.
*
அடுத்து தூது. பட்டினப்பாலை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய சங்க இலக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்டி தூது என்பது அற்புதமான தமிழ்ச்சொல் என்று அவர் கூறுகிறார். “தூது நூல்களில் , தூது விடுக்கப்படும் பொருளுக்கு ஏற்பச் செய்திகளும் பொருளமைப்பு மாறுபட்டு நிற்கின்றன” என்று உ.வே.சா கூறுவதைக்காட்டும் நூலாசிரியர் பன்னிருபாட்டியலில் தூது இலக்கியத்துக்கு இலக்கணம் வரையறுக்கப் படவிலை என்று எழுதுகிறார். ஆனால் தூது நூல்கள் பெரும்பாலும் கலிவெண்பாவில்தான் ஆக்கப்பட்டிருக்கின்றன என நான் நினைக்கிறேன். மேலும் எவ்வெவற்றை தூது விடலாம் என்றும் காட்டப்பட்டிருக்கின்றது.
தமிழ்விடு தூது நூலில் ’நாளிகேரம்’ எனும் சொல் வருகிறது. இது மலையாளத்தில் தேங்காயைக் குறிக்கும் சொல்லாகும். தூது நூல்கள் பெண்களின் அங்கங்களின் வருணனையைக் கூறுவனவாக இருப்பினும் அவற்றின் மூலம் பல அரிய செய்திகள் தெரிய வருகின்றன என்று நாகசாமியின் ஆய்வின் மூலம் தெரிய வருகிறது. அவற்றில் சில:
விறலி விடுதூதில் வீரவாழிப்பட்டு என்றொரு பட்டு கூறப்படுகிறது. புடவைக்கடையை சவளிக்கடை என்று அக்காலத்திலேயே அழைத்துள்ளனர். ரவிக்கை எனும் சொல் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்திருக்கிறது. பெண்கள் முலைக்கச்சு அணியும் வழக்கம் அன்று இருந்துள்ளது. அது ‘கிண்ண முலைக்கச்சு’ என வழங்கப்பட்டது. பெண்கள் பூப்பெய்திய நாள் ‘திரண்ட நாள்’ எனக் கொண்டாடப்பட்டது. அக்காலத்திலேயே மாடனுக்குப் பலியிடல் மற்றும் வில்லுப்பாட்டு, கணியன் கூத்து நடத்தல் போன்றவை நடைபெற்றுள்ளன. விறலி விடு தூது நாட்டியம் மற்றும் இசை பற்றி விரிவாகப் பேசுகிறது.
அஷ்டாவதானம் என்பது ஒரே நேரத்தில் எட்டு செயல்கள் செய்வதாகும் அவரை அஷ்டவதானி என்பர். அந்த எட்டுச் செயல்களும் எவை எவை என்றும் நாஞ்சில் பட்டியல் தருகிறார்.
இங்கு நான் ஒரு பதிவைச் செய்தாக வேண்டும். மறைந்துவிட்ட ”திருக்குறள் தசாவதானி சாலிச்சந்தை இராமையா” என்பவரை நான் நன்கு அறிவேன். அவர் என் நண்பரும் கூட. கிட்டத்தட்ட தமிழ் நாட்டில் எல்லாப்பள்ளிகளுக்கும் சென்று திருக்குறளில் தசாவதானம் செய்து காட்டியவர் அவர். விழுப்புரம் பக்கம் வந்தால் என்னை அழைப்பார். நான் பணியாற்றிய பள்ளியில் அவரை அழைத்து நிகழ்ச்சி நடத்தி உள்ளேன். அவர் கண் பார்வையற்றவர். பார்வை போனபின் திருக்குறள் கற்று தசாவதானம் பயின்றவர். அவர் சாப்பிடும் முன்னம் இலையில் என்னென்ன எங்கு பரிமாறப்பட்டுள்ளன் என்று கையைப் பிடித்துக் கூறிவிட்டால் பார்வை உள்ளவர் போலவே சாப்பிடுவார். அதுபோல ஒருவரை ஒருமுறைச் சந்தித்துப் பேசினால் அடுத்தமுறை பார்க்கும் போது அவரை குரலை வைத்தே அடையாளம் தெரிந்துகொள்ளும் ஆற்றல் உள்ளவர். அவருக்குப் பின் அவர் மகன் சுப்புரத்தினம் தசாவதான நிகழ்ச்சியை நடத்திவருகிறார். நான் இவரையும் அழைத்து நடத்தி உள்ளேன்.
*
அடுத்து பள்ளு இலக்கியம். பள்ளு இலக்கியம் என்றாலே அனைவர்க்கும் முக்கூடற்பள்ளுதான் நினைவுக்கு வரும். அதிலுள்ள ”ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி” என்று தொடங்கும் பாடல் பாடப் புத்தகங்களில் இடம் பெற்ற பாடலாகும். சிற்றிலக்கியங்களில் பள்ளும் குறவஞ்சியுமே வாசிக்க மிகவும் இலகுவானவை என்று நாஞ்சில் கூறுவது உண்மையே. இதுவரை 35 பள்ளு இலக்கியங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவற்றில் எத்தனை பதிப்பிக்கப்ப்பட்டன என்று தெரியவில்லை என்று அவர் எழுதும் போது நம் இலக்கிய ஆய்வாளர்கள் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
’முக்கூடற் பள்ளு’ நூலில் உழவுக்கருவிகளின் வகைகள், மீன்கள் பற்றிய பட்டியல், நெல்விதைகளின் வகைகள், மாட்டின் சுழிகள் ஆகியவை காட்டப்பட்டுள்ளன. இந்த நூல் இல்லாவிடில் இவைபற்றித் தெரியாமலே போயிருக்கும். மூத்த பள்ளி வைணவமாயும் இளைய பள்ளி சைவமாயும் இருப்பதால் அவர்களுக்கு இடையே நடக்கும் பூசல்களில் இருமதக் கடவுளர்களும் ஏசப்படுவது நயமாக இருக்கிறது.
பள்ளு என்பது எப்படி பள்ளர்களைக் குறிக்கிறதோ அதேபோல குறவஞ்சி என்பது குறவர்களைக் குறிப்பதாகும். ஒரு குறத்தி குறி கூறுவது போல இது அமைந்துள்ளது. சிற்றிலக்கியங்களிலேயே குற்றாலக் குறவஞ்சி மட்டும்தான் இன்றளவும் வாசிக்கப்பட்டும் நடிக்கப்பட்டுக்கொண்டும் இருக்கிறது என்கிறார் நாஞ்சில்.
இதிலும் பெண்களின் அங்கங்கள் குறித்த வருணனைகள் அதிகம் தான். அக்காலத்தில் காட்சி ஊடகங்கள் எதுவுமே கண்டுபிடிக்கப்படாததால் செவி வழியாகவே சிற்றின்பம் பருகினார் போலும் என்று நாஞ்சில் கிண்டலடிக்கிறார். இக்கட்டுரையின் ஊடே அறுநூற்றுப் படிகள் உள்ள திருமலை எனும் குன்றின் மீது ஏறி முருகனை வணங்கியதையும் அதன் பின் மூக்கடைப்பு ஏற்பட்டு கடைசியில் 95 சதமானம் அடைப்பு என்பது கண்டுபிடிக்கப் பட்டு ஆஞ்சியோ பிளாஸ்டிக் & stent செய்து கொண்டதையும் கூறுகிறார் நாஞ்சில். படி ஏறும் போதே சுருண்டு விழுந்து இறந்து போயிருக்கவும் வாய்ப்பு அதிகம் என்று மருத்துவர் கூறியதை எழுதும் நாஞ்சில் நாடன் ”விதி, 11 ஆண்டுகள் தாண்டி, நமக்கு இதை எழுத வேண்டியது இருந்திருக்கிறது’ என்று அதையும் எள்ளலாகக் கூறும் போது ’காலா என் அருகே வாடா’ என்று அச்சமின்றிப் பாரதி பாடியது நினைவுக்கு வருகிறது.
*
குறவஞ்சி வேறு, குறம் என்பது வேறு. குறத்தில் குறத்திப்பாட்டு மட்டுமே இருக்கும். குறவஞ்சியில் வேறு பலகூறுகளும் உண்டு. குறத்தி தான் வாழும் மலைவளம் கூறிப் பின் தனது குறி கூறும் நேர்த்தியையும் அதன் பலன்களையும் கூறுவது மரபு. குறம் வகை நூல்களில் நாஞ்சில் மதுரை மீனாட்சியம்மை குறம் பற்றி மட்டுமே பேசுகிறார். அதுமட்டும்தான் அவர் தேடலில் கிடைத்திருக்கும் என நினக்கத் தோன்றுகிறது. குமரகுருபரர் பற்றி விரிவாகப் பேசும் நாஞ்சில் நாடன்.
”முன்னூற்றைம்பது ஆண்டுகளுக்குமுன்பு, காசி வரை சென்று தமிழின் சிறப்பை இந்தியில் எடுத்துரைத்த குமரகுருபரரின் தமிழை இன்று சொல்வாரில்லை,கேட்பாரில்லை, வாசிப்பரில்லை.” என்று ஆதங்கப்படுகிறார். யானையைக் குறிப்பிட குமரகுருபரர் ’கைக்கயம்’ எனும் சொல்லைக் கையாள்வது, உடையைக் குறிக்கும் ‘உடுப்பு’ எனும் சொல் தற்போது நாஞ்சில் நாட்டில்தான் வழங்கி வருகிறது என்பன எல்லாம் புதிய செய்திகள். பிள்ளைத்தமிழ் நூல்கள் மொத்தம் 156 எனப் பட்டியல் ஒன்று தரப்பட்டிருக்கிறது. அதில் ஆண்பால் பிள்ளைத்தமிழ் 84, பெண்பால் பிள்ளைத்தமிழ் 72 எனப் பகுக்கப்பட்டுள்ளன. மீனாட்சிசுந்தரம் பிள்ளைதாம் அதிகமாக 11 பிள்ளைத்தமிழ் நூல்கள் பாடி உள்ளார். அதுபோல “முருகன் மீதுதான் அதிகமாக 27 நூல்கள் பாடப்பட்டுள்ளன. 17- ஆம் நூற்றாண்டில் பாடப்பட்ட குமரகுருபரரின் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் ‘சலாம்’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சூரசம்ஹாரத்தை சூரன் பாடு என்பர்.” இவை புதிய செய்திகள். மருதாசலப் பிள்ளைத்தமிழில் முத்தின் நிறங்கள் கூறப்பட்டுள்ளன.
*
அடுத்து அந்தாதி. அந்தாதி பற்றிய ஆய்வில் நாஞ்சில் நாடன் மொத்தம் 227 அந்தாதி நூல்கள் உள்ளதாகக் குறிப்பிடுகிறார். மேலும் அவற்றில் 14 நூல்கள் இன்னும் அச்சேறவில்ல என்றும், அவற்றில் மூன்று இசுலாமிய அந்தாதிகள் என்றும், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை 12 அந்தாதிகள் எழுதி உள்ளார் என்றும், அந்தாதி பாடியவர்களில் மூன்று பேர் பெண்பாற் புலவர்கள் என்றும் அவர் காட்டுகிறார்.
பதினோராம் திருமுறையில் சில அந்தாதிகள் உள்ளன. ஆனால் அவற்றை யாரும் சிற்றிலக்கியங்கள் என்று கொள்வதில்லை என்று கூறும் நாஞ்சில் அவற்றையும் சிற்றிலக்கிய வகையில் சேர்த்துக் கொள்கிறார். அவர் அபிராமி அந்தாதியை மிகவும் வியந்தோதுகிறார். ”அது வாசிக்க வாசிக்கத் திகட்டாத தமிழ்” என்றும், ”பக்தி என்ற நினைப்பில் புறக்கணித்து விடாமல் தமிழுக்காகத் திரும்பத் திரும்ப வாசிக்கப்பட வேண்டிய நூல் இது” என்றும் கூறுகிறார்.
இக்காலத்தில் பெண்மொழி, என்றும் பெண்கவிதை என்றும் தீவிரமாகச் செயல்படும் இளம் படைப்பாளிகள் வாசிக்க வேண்டிய பெண்கவிஞர்கள் என்று சுமார் 32 பேர்கொண்ட ஒரு பட்டியல் தருகிறார். தொடர்ந்து அவர் “இது ஒரு பரிந்துரையே அன்றி, இதற்கு உட்பொருள் ஏதும் இல்லை” என்றும் பாதுகாப்பாகக் கூறிவிடுகிறார். ஏனெனில் பட்டியல் என்றாலே அதனுள் அரசியல் இருக்கிறாதா என்று பார்க்கும் இலக்கிய உலகமாக இன்று மாறிவிட்ட சூழலை இங்குக் குறிப்பிட வேண்டும்.
அந்தாதி பற்றிய ஆய்வில் ஒரு கட்டத்தில் நாஞ்சில் நாடன் அன்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். திருமழிசை ஆழ்வார் பாடிய ஒரு பாடலில் சமயப் பொறை இல்லாததைக்காட்டி,
”எச்சமயத்துக்கும், இறை மார்க்கத்துக்கும் அன்புதான் அடிப்படை என்பர்கள் மெய்ஞ்ஞானிகள். பிற சமயத்தவரை இகழ்வதில் சைவரும், வைணவரும் யாருக்கும் சளைத்தவரில்லை. அஞ்ஞானிகள் என்று அவிசுவாசிகளை அழைக்கும் கிறிஸ்துவத்துக்கும், காஃபிர்கள் என்று மாற்றாரை அழைக்கும் இஸ்லாத்துக்கும் எவ்வகையிலும் குறந்தவர்கள் இல்லை சைவக் குரவர்களும் வைணவ ஆழ்வார்களும் என்பதனையும் நம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்”
என்று நாஞ்சில் நாடன் மிகத் துணிவாகக் கூறுகிறார். எப்போதுமே தன் மனத்தில் சரியென்று பட்டதைத் துணிந்து கூறும் இயல்புடையவர் அவர். இந்நூலில் திருமழிசை ஆழ்வாரின் ‘என்னை ஆளி’ எனும் சொல்லை எடுத்துக் கூறி ‘இதற்கு ‘என்னை ஆள்பவனே’ என்று பொருள் எழுதும்போது அவருக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.
பத்தாண்டுகளுக்குமுன் மதுரை பில்லர்ஸ் ஹோமில் காலச்சுவடு ஏற்பாடு செய்த ஐயனாரின் நூல் வெளியிட்டு நிகழ்வில் பேசும் போது நாஞ்சில் படைப்பாளி எனும் சொல்லைப் பயன்படுத்துகிறார். அவருக்குப் பின் பேசிய பேராசிரியர் சாலமன் பாப்பையா அவரது வழக்கமான பாணியில் “அது என்ன படைப்பாளி, அது பெண்பாலா” என்று நக்கலாகக் கேட்கிறார். அங்கேயே பதில் சொல்ல விரும்பிய நாஞ்சிலை கவிஞர் அபி ஆற்றுப்படுத்துகிறர். இப்போது நாஞ்சில் கேட்கிறார். “வயசாளி, தொழிலாளி, உழவாளி, உழவாரப் படையாளி யாவும் பெண்பாற் பெயர்களா?” மேலும் அவர் “கல்லூரிகளில் தமிழ் பயிலும் மாணவரை நினைத்தால் மிகுந்த வருத்தமாக இருக்கிறது’ என்றும் எழுதுகிறார்.
மேலும் திருவாய்மொழியிலும், பெரிய திருமொழியிலும் இல்லாது தேவாரத்தில் உள்ள பண்கள் என்று 7 பண்களின் பெயர்களையும்,, தேவாரத்தில் இல்லாது திருவாய்மொழியிலும், பெரிய திருமொழியிலும் உள்ள பண்கள் என்று 11 பண்களின் பெயர்களையும் பதிவு செய்கிறார்.
*
கலம்பகம் எனும் சிற்றிலக்கியப்பிரிவில் நாஞ்சில் நாடன் 4 கலம்பக நூல்களை மட்டுமே காட்டுகிறார். மொத்தம் 16 கலம்பக நூல்களின் பெயர் தெரிந்தாலும் தேடுவோர் இலாதாதல் கிடக்க வில்லை. ஆனால் இக்கலம்பகப் பிரிவில் நமக்குப் புதிய செய்திகள் பல கிடைக்கின்றன.
கலம்பகம் 18 உறுப்புகள் கொண்டது. சில நூல்களில் ஒன்று, இரண்டு குறைந்து இருக்கலாம். அந்தாதி வகையில் 100 பாடல்கள் கொண்டது. உ.வே.சா கலம்பகத்தைக் கதம்பம் என்று குறிப்பிடுகிறார்.
நம்பியாண்டார் நம்பி திருஞானசம்பந்தர் மீது “ஆளுடைய பிள்ளையார் கலம்பகம் என்று பாடிஉள்ளார். 57 பாடல்களே கொண்ட இந்நூலில் மொத்தம் 25 வகையான பாவினங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நந்திவர்ம பல்லவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு நந்திக்கலம்பகம் பாடப்பட்டுள்ளது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. நூறுபாடல்கள் அரசர் பற்றிப் பாடும்போது அமைய வேண்டும் ஆனால் இந்நூலில் 98 பாடல்களே உள்ளன. அரசன் மேல் பாடப்பட்டதற்குச் சான்றாக இது மட்டுமே கிடைத்துள்ளது. இதுவே முதல் கலம்பக நூலாகும். “பெண் இலா ஊரில் பிறந்தாரைபோல” என்றும் “இரும்பு உழுத புண்ணிற்கு இடு மருந்தோ” என்ரும்க் அழகான உவமைகள் கொண்ட நூல் இது.
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் பாடி உள்ள திருவரங்கக் கலம்பகம் 101 செய்யுள்கள் கொண்டது. இந்நூலில் பக்திப் பெருக்கையும் அழகுத் தமிழையும் கூடவே சமயப் பொறை இல்லாததையும் காண முடிகிறது.
முன் அட்டையிலோ, பின் அட்டையிலோ ஆசிரியர் பெயர் இல்லாத மதுரைக்கலம்பகம் நாஞ்சிலுக்குக் கிடைத்துள்ளது. “என்னுரைப் பகுதியில், இரண்டாம் வரியில், உரையாசிரியர், போனால் போகட்டும் என்று, ‘இந்நூல் குமரகுருபரரால் அருளிச் செய்யப்பட்டது’ என்கிறார்” என்று நாஞ்சில் நாடன் குறைப்படுவது நியாயமே. இது 102 பாடல்கள் கொண்டது.
கலம்பக நூல்கள் அதிகமாக இல்லை. அதற்குக் காரணமாக நூலாசிரியர், “பாடல் இலக்கணங்களைக் கவனிக்கும் போது, உண்மையிலேயே, கலம்பகம் சற்றுக் கடினமான சோலிதான் போலத் தோன்றுகிறது. இல்லையெனில், இத்தனை உலாக்கள், தூதுகள், அந்தாதிகள் மிகுந்து இருக்கும்போது, கலம்பகம் மிகக் குறைவாக எழுதப்பட்டிருக்கும் போலும்” என்பது பொருத்தமே.
*
பரணி வகையில், கலிங்கத்துப்பரணி, தக்கயாகப்பரணி, இரணியவதைப்பரணி எனும் நூல்களை இவர் காட்டுகிறார். பரணிப் பகுதியில் என்னைக் கவர்ந்தவை இரண்டு. ஒன்று நாஞ்சிலின் கிண்டல். அதாவது பரணிக்கு இலக்கணம் கூறும்போது ஆயிரம் யானைகளை உடைய எதிரிப்படையை வென்ற மன்னவரின் மேல் பாடப்படவேண்டும் என்பது விதி. இதைக் கூறிய நாஞ்சில்நாடன் எழுதுவதைப் பாருங்கள்.
”திராவிட இயக்கத்தார் பஞ்சாயத்துத் தேர்தலில் வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றாலேயே பரணி பாடும் தகுதி வந்துவிட்டதாக எண்ணிக் கொள்கிறார். விழா எடுத்துப் பரணி பாடுகிறார்கள்.
இரண்டாவது நாஞ்சில் எழுப்பும் சரியான ஆட்சேபணை. இந்தக் கேள்வி சிந்தனையைத் தூண்டும் வகையானதுதான். நாஞ்சில் எழுதுகிறார்,

“எனது அடிப்படைக் கேள்வி எதற்காக கி.மு அல்லது கி.பி என்று குறிப்பிட வேண்டும்? கிறிஸ்து பிறப்பதற்கும் பத்தாயிரம் ஆண்டுத் தொன்மையும் வரலாறும் உடைய நாம் எதற்காக நமது காலத்தைச் சுட்ட Point of Reference ஆகக் கிறிஸ்துவைக் கொள்ள வேண்டும்? இது என் மதம் பார்வை அல்லது அபிப்ராய பேதம் என்று எவரும் கருதல் வேண்டா! கிறித்து பிறப்பதற்கு முன்பான தொல்பாரம்பரியம் உள்ள நாம் எதற்கு நம் காலத்தை வரையறுக்க கிறிஸ்துவைச் சாட்சிக்கு அழைக்க வேண்டும்?”

இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும் என நினைக்கிறேன். காலத்தை வரையறுக்க உலகம் முழுதும் ஏற்றுக் கொண்ட முறையைத்தானே நாமும் ஏற்க வேண்டும். தமிழ் மொழிக்கு தனி என்றால் ஆய்வாளரிடையே குழப்பம் ஏற்படாதா?
*
நூறு பாடல்களைக் கொண்ட நூல் சதகம் என்றழைக்கப்பட்டது. ஆனால் சதம் என்பதுதானே நூறைக் குறிக்கும்; அது எப்படி சதகம் ஆயிற்று என்ற ஐயத்தை எழுப்பி அதற்கு முனைவர் ந. ஆனந்தி கூறுவதாக நாஞ்சில் ஒரு தகவல் தருகிறார்.
அதாவது சதம் என்ற சொல்லின் இடையில் –க- எனும் எழுத்து வருகிறது. அதனால் இது சதகம் ஆகிறது. இவ்வாறு –க- எனும் எழுத்து கூடி வருதலை வடமொழியில் ‘க’ ப் பிரத்யம் என்பர். எடுத்துக்காட்டு பாலன் என்பது பாலகன் ஆவது.
”பர்த்ருஹரி வடமொழியில் எழுதிய ‘சுபாஷிதம்’ எனும் நூல் மதுமிதாவின் மொழிபெயர்ப்பில் வந்துள்ளது. அது நீதி சதகம். சிருங்கார சதகம், வைராக்கிய சதகம் என மூன்று சதகங்களாக முன்னூறு பாடல்கள் கொண்டது” என்று கண்டறிந்துள்ள நாஞ்சில் நாடன் மூன்று சதகங்களையும் விரிவாக எழுதுகிறார். மற்றும் திருச்சதகம், தண்டலையார் சதகம் அறப்பளீசுர சதகம், கொங்கு மணடல சதகம், சோழமண்டல சதகம், குமரேச சதகம், என்று பல சதகங்களையும் காட்டும் நூலாசிரியர் அவற்றிலுள்ள நயங்களையும் எடுத்துக் கூறி உள்ளார். அவற்றை விரிவஞ்சி விடுக்கிறேன்.
அடுத்து மாலை எனும் பகுதி. மாலை எனும் பெயரில் முடியும் நூல்கள் மொத்தம் 28 ஆகும்.
தொடர்ச்சியை படிக்க : நன்றி  http://solvanam.com/?p=35844

 

 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், சிற்றிலக்கியங்கள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged . Bookmark the permalink.

2 Responses to நற்றமிழ்ச்சுளைகள்

  1. magudeswaran k சொல்கிறார்:

    ethai eluthinalum ekathalama eluthi pilaikkum nanjilukku…ippa kitachathu sirrilakkiyam….sakikkamudiyalai…

  2. கீதா மதிவாணன் சொல்கிறார்:

    சிற்றிலக்கியங்களின் வகைகளையும் அவற்றின் சிறப்புகளையும் அறிந்து வியக்கிறேன். தமிழார்வமுள்ள பலருக்கும் பயன்படும் வகையில் சிற்றிலக்கியங்களைத் தொகுத்தளித்த நாஞ்சில் நாடன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். வாசிக்கத் தூண்டும் நூலறிமுக விமர்சனத்துக்கு வளவ.துரையன் அவர்களுக்கு மிக்க நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s