”ஓர் எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன? இருக்கக் கூடாத பண்புகள் எவை?”

av_wrapper.indd

விகடன் மேடை – நாஞ்சில் நாடன் பதில்கள்

வாசகர் கேள்விகள்

அ.குணசேகரன், புவனகிரி….‘ஓர் எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன? இருக்கக் கூடாத பண்புகள் எவை?”
”உண்மையான எழுத்தாளன் என்று கேட்பதால், நானும் உண்மையாகப் பேச வேண்டும்.
இருக்க வேண்டியவை… அற உணர்வு, கூர்த்த நோக்கு, அனுபவச் செழுமை, வலி உணரும் மனது, தேர்ந்த வாசிப்பு, மொழிப்புலமை, உழைப்பு, நேர்மை, முயற்சி, தன்னம்பிக்கை, தன் எழுத்தைத் தானே எழுதுதல், அறிந்தவற்றை மட்டுமே எழுதுதல்!
இருக்கக் கூடாதவை… நான்கு கதை எழுதிவிட்டு, தான் ஆன்டன் செக்காவ் தரத்துப் படைப்பாளி என்ற ஆணவம், குறுக்கு வழிகளில் தன்னை நிறுவ முயற்சித்தல், விமர்சனம் செய்பவனைக் குலப்பகையாகக் கருதுதல், தான் வாசிக்காதது எதுவும் இல்லை, தனக்குத் தெரியாததும் எதுவும் இல்லை எனும் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்தல், சாதனையாளர்களைப் பொருட்படுத்தாது இருத்தல், பரபரப்பில் புகழ்பெற எண்ணுதல்!”
ரா.ராகவி, புதுவயல்....”விமர்சகர்-எழுத்தாளர் உறவு குறித்துச் சொல்லுங்களேன்?”
”விமர்சகன் என்பவன் அறிவுத் தளத்திலும், எழுத்தாளன் என்பவன் உணர்வுத் தளத்திலும் செயல்படுகிறவர்கள். எழுத்தாளன் பொருட்படுத் தும் அறிவும், நேர்மையும், நடுநிலைமையும் விமர் சகனுக்கு இல்லையென்றால், அவன் பொருட்படுத் தும் தகுதியற்றவன். விமர்சகன் காய்தல், உவத்தல் இல்லாதவனாக இருக்க வேண்டும். தன் கட்சிக்காரனுக்கு, சாதிக்காரனுக்கு ஒரு நீதி, மற்றவனுக்கு ஒரு நீதி என்பது விமர்சனம் அல்ல. புதுமைப்பித்தன் சொன்னார், தனது விமர்சகரை நோக்கி… ‘உங்கள் அளவுகோல்களை என் எழுத்துக்களின் பக்கம் வைத்துச் சரிபார்த்துக் கொள்கிறீர்கள்’ என்று.
படைப்புக் கர்வம்கொண்டவன் எழுத்தாளன்; அறிவை ஆயுதமாகப் பயன்படுத்துபவன் விமர்சகன். குழந்தையின் பால் மணம், மழலை, சிரிப்பு, மென்மையில் லயிப்பது எழுத்தாளன் மனம்; அதன் வளர்ச்சி, ஆரோக்கியம் என்பன விமர்சன மனம்!”
ஜெ.அமலதாஸ், சூரியூர்.….”’ஓர் எழுத்தாளனுக்கு எழுதுவதுதான் வேலை. அதைத் தாண்டி அவன் வேறு எதையும் செய்யவேண்டியது இல்லை’ என்பதுபோல் சில படைப்பாளிகள் பேசுகிறார்கள். ஆனால், ஒரு குடும்பத் தலைவன் அல்லது தலைவி, தனக்கான வேலையைப் பார்த்துக்கொண்டும் குடும்பத்துக்காகவும் உழைக்கிறார்களே? இவர்களைக் காட்டிலும் எழுதுவதால் மட்டுமே எழுத் தாளர் எப்படி உயர்ந்தவர் ஆக முடியும்?
”எழுதுவதால் மட்டுமே எழுத்தாளர் உயர்ந்தவர் ஆகிவிட மாட்டார். அவர் சமூகத்தில் ஒரு சகஜீவி, அவ்வளவே. உயர்ந்த எழுத்தை எழுதினால், அவர் உயர்ந்தவர். எழுத்தாளனுக்கு எழுதுவது வேலை அல்ல; வேலை என்பதை நீங்கள் பிழைப்பு எனும் அர்த்தத்தில் பயன்படுத்தக் கூடாது. எழுதுவது என்பது அவனது சமூகச் செயல்பாடு. களப் பணியாற்ற அவன் வர வேண்டும் என்று எதிர்பார்த்தால், அது நிர்பந்தம் இல்லை. எழுதுவதே அவனது பங்களிப்பு என்று அவன் இருக்கக்கூடும்.
நீங்கள் சொல்லும் குடும்பத் தலைவன் உவமை பொருத்தம் இல்லை. குடும்பத் தலைவனோ, தலைவியோ வேலைக்குப் போகிறார்கள்; வீட்டு வேலையும் செய்கிறார்கள். எழுத்தாளனுக்கு எழுத்து மட்டுமே வேலை அல்ல. அவனும் வேலைக்குப் போகிறான். ஆசிரியப் பணி, அரசு ஊழியம், வங்கிப் பணி… என சாதாரண மாந்தரைப் போல! எழுதிப் பிழைக்க முடியுமா இந்த நாட்டில்? அப்படி முயன்றவர்களின் சோக வரலாறு சொல்லவா? அரசாங்கம் புத்தகங்களை வாங்குவது இல்லை. வாங்கினாலும் கட்சி, சாதி, கமிஷன்… பார்த்து வாங்குகிறார்கள். பாதிக்கு மேல் பதிப்பகங்கள் எழுத்தாளனுக்கு ராயல்ட்டி தருவது இல்லை. இளம் படைப்பாளிகளில் பலர், சொந்தப் பணம் செலவு செய்து புத்தகம் வெளியிடுகிறார்கள்!
எழுத்தாளனுக்கு எழுதுவதுதான் வேலை என்ற சொல் எம்மைக் காயப்படுத்துகிறது நண்பரே. கொசுவுக்குக் கடிப்பதுதான் வேலை என்று சொல்வதுபோல் இருக்கிறது!”
சமரன் காமராஜ், கிதிரிப்பேட்டை.‘ ‘பரதேசி’யின் வசனகர்த்தாவாக, இயக்குநர் பாலாவுடன் பணிபுரிந்த மறக்கவியலாத அனுபவம்  சொல்லுங்களேன்?”
”படப்பிடிப்பின்போது என் காலில் முள் குத்தியது, இயக்குநர் ஓடி வந்து பிடுங்கினார் என்று நடிகைகள் பாணியில் சொல்ல, என்னிடம் எதுவும் இல்லை. அற உணர்வுள்ள, குழந்தை மனமுள்ள மனிதர் பாலா என அறிந்துகொள்ள படப்பிடிப்பு நாட்கள் உதவின.
சுமார் 30 நாட்கள் படப்பிடிப்பில் உடன் இருந்தேன். ஒரு வசனகர்த்தாவாக அன்றி, படைப்பு இலக்கியவாதியாகவே நடத்தப்பட்டேன், சர்வசுதந்திரத்துடன். சாலூரில் இருந்து படப்பிடிப்பு முடிந்து, சிவகங்கை திரும்பும்போது, திடீரென, ‘பனங்கிழங்கு திங்கிறீங்களா?’ என்பார். அடுத்த கிராமத்தில் வண்டி நிற்கும்.
கதாநாயகன், தேயிலைத் தோட்டத்தில் பறித்து நடப்பட்ட பின், படத்தின் முதல் நாயகி, கைக் குழந்தையுடன், ஏரிக்கரையில் மாலை மயங்கும் போது பிரிவுத் துன்பத்தில் நிற்கும் பாடல் காட்சி. காட்சியில் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று பங்கேற்றது. காட்சி முடிந்ததும் சம்பளம் வாங்கிக்கொண்டு, தாயும் குழந்தையும் வீட்டுக்குத் திரும்ப நடந்தார்கள். சற்றுத் தூரம் போயிருப்பார்கள்… டென்ட்டில் உட்கார்ந்திருந்த பாலா கத்தினார், ‘ஏம்மா, இங்க வாம்மா…’ என்று. தாய், குழந்தையை இடுப்பில் வைத்து திரும்பி நடந்து வந்தாள். பாலா, தன் பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டார். சில ஆயிரம் ரூபாய்த் தாள்கள் வந்தன. ‘வெச்சுக்கம்மா… பிள்ளையைப் பாத்துக்கம்மா’ என்று சொல்லி, அடுத்த வேலைக்குப் போய்விட்டார்.
நான் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து விடைபெற்று வந்த மாலை, குடும்பத்தைப் பிரிந்துவரும் கனம் மனதில் இருந்தது. இன்னொரு சினிமாவுக்கு நான் எழுதுவேனோ… மாட்டேனோ, எனக்கு ‘பரதேசி’ அனுபவம் மிகப் பயனுள்ளது; மறக்க இயலாதது!”
சுப்பு வேதையா சித்திரவேலு, கருப்பம்புலம்..”கொஞ்சம் சுய புராணம் பாடுங்களேன்?”
 ‘நாம் என்ன பாளையப்பட்டு வம்சமா… மகா வித்வான் பரம்பரையா? சோத்துக்குச் செத்த குடும்பம். கால் பணத்துக்கு உழவுக் கூலியாக வாலிபத்தில் வேலைக்குப் போன அப்பா, ஐந்தாம் வகுப்பு தோற்றவர். 56 வயதில் அவர் இறந்தபோது, இரண்டு கோட்டை விதைப்பாடு பாட்டம் பயிர் செய்த, ஓர் ஏர்மாடு சம்சாரி. கடின உழைப்பில் இதுதான் சாத்தியப்பட்டது. அதிரடி முன்னேற்றத் துக்கு அரசியல்காரன் வீட்டில் பிறக்கணும் அல்லது அதிரடியான தொழிலோ வணிகமோ செய்யணும்.
தேனிருந்து மழை பொழியும் தென் நாஞ்சில் நாட்டின் சின்னஞ்சிறு கிராமம் எனது. சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டு ஆயிற்று… மருத்துவ, பொறியியல் கல்லூரிகள் எங்கள் மாவட்டத்துக்கு வர. ரயில்கூட அப்போதுதான் பார்த்தோம். பத்தும் தண்ணீருமான கஞ்சியை, சிரட்டை அகப்பையால் கணக்கு எண்ணிப் பகிர்ந்து அளித்தாள் ஏழு பிள்ளைகளுக்கும் என் தாய். சாப்பாட்டுப் பந்தியில் இருந்து கை தூக்கி வெளியேற்றப்பட்டவன் நான். அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் கடன் உதவித் திட்டத்தில் எம்.எஸ்சி வரை படித்தேன். கடைசிக் காசுக் கடனையும் திருப்பிச் செலுத்தினேன். விவசாயக் கூலி, கட்டடத் தொழில் கூலி எனத் தொடங்கி, பம்பாய் சென்று, தினம் ஏழு ரூபாய் கூலிக்கு வேலைக்குச் சேர்ந்தேன். எட்டு ஆண்டுகள் முன்பு ஓய்வு பெற்றபோது, எனது மாதச் சம்பளம் 12 ஆயிரம். இன்றும் என் ஓய்வூதியம் 2,000-த்துக்கும் கீழே.
நல்லூழ், என் பிள்ளைகள் இருவரும் சலுகைக் கட்டணமோ, சாதி முன்பதிவோ இன்றி, நன்கு கற்றனர். சந்தை முடியும் தறுவாயில், கூறு வைத்த கத்திரிக்காயும், உடைந்த பூசணிக்காயும் வாங்கிக்கொண்டு போட்டாலும் சுவையாகச் சமைத்துப்போட்டார் என் மனைவி. இன்று வரை எனக்கு இந்தியாவில் எங்கும் சொந்தமாக வீடு இல்லை. இது சட்டமன்ற, நாடாளுமன்ற வேட்பாளர்களின் சொத்துக் கணக்குப் போன்ற மோசடிக் கூற்று அல்ல. மெக்கானிக்கல் இன்ஜினீயர் ஆன என் மகன், அமெரிக்காவில் இருந்து அனுப்பும் பணத்தில் இப்போதுதான் வீடு ஒன்று கட்டி வருகிறேன். மூத்தவள் மகள், எம்.டி (அனெஸ்தீசியா), மருமகன் எம்.எஸ்(ஆர்த்தோ). ஆகவே மாணவர்களே, காது கொடுத்துக் கேளுங்கள், கல்விக்கு மாற்று இல்லவே இல்லை.
தீப்பேறு, என் எழுத்தை ஆதிக்கச் சாதி எழுத்து என்கிறார்கள். எனக்கு அம்மணங்குண்டியாக ஓடலாம் என்று இருக்கும்!”
சமரன் காமராஜ், கிதிரிப்பேட்டை….‘ ‘கும்பமுனி’ கதாபாத்திரம் உண்மையில் யார்?”
 ” ‘கும்பமுனி கும்பிடும் தம்பிரானே…’ என்பது திருப்புகழ். எனவே, அவர் சிவபக்தர் என்று தெரிகிறது. ‘நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’ என்பது கம்பன் உலகளந்த திருமாலை, தமிழ் அளந்த கும்பமுனிக்கு உவமை சொல்கிறார். கும்பமுனி, ‘நாகம் அது நாகம் உற, நாகம் என நின்றவன்’. நாகம் – மலை; நாகம் – பாதாள உலகம்; நாகம் – யானை. அந்தக் கடல் குடித்த குடமுனியின் வக்கரித்த, பின்நவீனத்துவ இலக்கிய வடிவமாக கும்பமுனியைக் கருதலாம். முதுமை அடைந்த, எழுதிக் களைத்த, தோற்றுப்போன, அநீதி கண்டு புழுங்குகிற, மலட்டுக்கோபம் கொண்ட யாராகவும் இருக்கலாம் கும்பமுனி. இதுவரை என் 18 கதைகளின் நாயகன் அவர். ராமனும், இலக்குவனும், குகனும், அனுமனும், வாலியும், கும்பனும் ராவணனும்… கம்பனே என்பார்கள் அறிஞர்கள். அந்த அளவுகோலைக் கைக்கொண்டால் கும்பமுனியும் நாஞ்சில் நாடனே!”
பா.ரவிச்சந்திரன், திருச்சி…. ” ‘ஹாரிபாட்டர்’ ஜே.கே.ரௌலிங், சேத்தன் பகத், ரவீந்தர் சிங்… போன்றோர் சிறுவர்களையும் இளைஞர்களையும் உலகம் முழுக்க வாசிக்க வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் இளைஞர்களிடம் வாசிப்புப் பழக்கமே இல்லை என்பதுபோல் எழுத்தாளர்கள் குற்றம் சுமத்துகிறீர்கள்? இணையம், டேப்லட், கிண்டில், படக்கதை ஆல்பம்… என்று எழுத்தை சகல விதங்களிலும் கொண்டுசேர்க்காதது யார் குற்றம்?”
”எம் குற்றம்தான்! திறமையான எழுத்தாளர்கள் சிறுவருக்கான எழுத்தில் அக்கறை செலுத்தவில்லை என்பது உண்மைதான். நீங்கள் சொன்ன பட்டியலில், (‘பட்டியல்’ எனும் சொல்லே இரண்டு வாரமாக எனக்கு திகில் ஏற்படுத்துகிறது!) ரஸ்கின் பாண்ட், சத்யஜித் ரே போன்றோரைச் சேர்த்துக்கொள்ளலாம். சில ஆண்டுகள் முன்பு, சிறுவர் நூலுக்கான பரிசுத் தேர்வுக்கு, நடுவராக இருந்தேன். எல்லா புத்தகங்களிலும் புதையல் தேடுகிற சமாசாரம். சிறுவர் அவற்றை வாசிக்காமல் இருப்பதே நல்லது எனத் தோன்றியது.
போதுமான அளவில் தரமான சிறுவர் இலக்கியம் தமிழில் இல்லாமற்போனது கவலைக்குரியது. ஆனால், பெற்றோரும் ஆசிரியர்களும் பாடப்புத்தகங்களுக்கு வெளியே வாசிக்க, சிறுவரை ஊக்குவிக்காமல் இருப்பது இன்னும் கவலைக்குரியது!’
முருகானந்தம், ஆவூர்…..”எந்த விஷயத்தையும் கிண்டல், பகடி மூலம் கடந்து செல்வதுதான் தமிழர்களிடம் உள்ள கெட்ட குணமா?”
”தமிழர்களிடம் உள்ள பல கெட்ட குணங்களில் அதுவும் ஒன்று. மிகத் தீவிரமான சிந்தனையும் செயல்பாடும் கோரிய விஷயங்களைக்கூட, கிண்டல் மூலம் எளிமைப்படுத்தினார்கள். சமூகத்தில் பலமான ஆதிக்கம் செலுத்தும் சினிமாவுக்கு இதில் கணிசமான பங்கு உண்டு. அறச் சீற்றத்தை வார்த்து எடுப்பதற்குப் பதிலாக, அதை மலிவான கிண்டல் மூலம் வியாபாரம் ஆக்கினார்கள். சிரிக்க வேண்டியவற்றுக்கு மாத்திரமே சிரித்து, கடந்துபோக வேண்டும். யாவற்றையும் கிண்டலும் பகடியுமாக மாற்றுவது போர்க்குணத்தைச் சாகடிக்கும். தமிழன், போர்க்குணம் இழந்த காரணங்களில் ஒன்றே நீங்கள் குறிப்பிடுவது. இதை, திட்டமிட்டே செய்கிறார்களா என்றுகூடத் தோன்றுவது உண்டு!”
சென்றவார கேள்விகளும் முழு பதில்களும்:-
பயனற்றச் சொற்களைப் பேச, எழுத வேண்டாமே!”
”எதன் அடிப்படையில் ஒரு புத்தகத்தைப் படிக்கத் தேர்வு செய்ய வேண்டும்?”
விகடன் மேடை – வாசகர் கேள்விகள்… நாஞ்சில் நாடன் பதில்கள்- அனைத்தும்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், விகடன் கதைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

6 Responses to ”ஓர் எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன? இருக்கக் கூடாத பண்புகள் எவை?”

  1. சே. செந்தமிழ் சொல்கிறார்:

    (‘சுய புராணம்’- விகடனில்..)

    தங்கள் பிள்ளைகள் நன்கு கற்றது நல்லூழ்தான். மகிழ்ச்சி!
    ஆனால், ‘நன்கு கற்பத’ற்கும், சலுகைக் கட்டணத்துக்கும், சாதி முன்பதிவு(வார்த்தை விளையாட்டு!?)க்கும் என்னய்யா சம்பந்தம்?
    அம்மணங்குண்டியாக ஓடுவதற்கு உங்களுக்கு தகுதியுள்ளது.

    • பகவதிப் பெருமாள் சொல்கிறார்:

      ஐயா செந்தமிழரே, தங்கள் எழுத்துக்களை வாசிப்பதென் உழ்வினையின் பயனாய்த் தென்படுகிறது. ஆனால், எனக்கு ஊழ்வினையில் நம்பிக்கையில்லை. நீவீர் என்ன சொல்ல நினைக்கிறீர் எனப் புரிவது மிகக் கடினம் போலும். உமக்காவது புரிந்திருந்தால் சரிதான்.

  2. yarlpavanan சொல்கிறார்:

    ஓர் எழுத்தாளர் தெரிந்துகொள்ளவேண்டிய வழிகாட்டல்.
    சிறந்த பகிர்வு

    இப்பதிவை எனது தளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
    நீங்கள் எழுத்தாளரா? அப்ப இதைப் படியுங்க…
    http://wp.me/pTOfc-aC

  3. ஸ்ரீவிஜி சொல்கிறார்:

    நல்ல பதில்கள். ரசித்தேன் சார்.

  4. Venkatramanan சொல்கிறார்:

    //சமரன் காமராஜ், கிதிரிப்பேட்டை….‘‘ ‘கும்பமுனி’ கதாபாத்திரம் உண்மையில் யார்?”//
    http://www.jeyamohan.in/?p=391

    நாஞ்சில்நாடனின் சிறந்த கதாபாத்திரம் ‘கும்பமுனி’தான்; சுந்தர ராமசாமிக்கு ஜே.ஜே. போல. நாஞ்சில்நாடனின் எழுத்து வாழ்வின் பிற்பகுதியில் உருவாகி வந்த இந்தக் கதாபாத்திரத்தை தீவிரமாகப் பகுப்பாய்வு செய்ய வேண்டியுள்ளது. முதலில் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு. நாஞ்சில்நாடன் படைப்புகளில் மைய இடம் பெற்ற, கோபம் கொண்ட, அந்நியமான, அலைந்து திரிகிற இளைஞன் என்ற கதாபாத்திரம் கிட்டத்தட்ட மறைந்த பிறகு கும்பமுனி பிறந்தார் என்பது. தலைகீழ் விகிதங்கள் (சிவதாணு) மாமிசப் படைப்பு (கந்தையா) என்பதனை வெயில் காயும் (சுடலையாண்டி) மிதவை (சண்முகம்) சதுரங்கக் குதிரை (நாராயணன்) எட்டுத் திக்கும் மதயானை (பூலிங்கம்) போன்ற நாவல்கள் அனைத்துமே பிறந்த ஊரால் துப்பி எறியப்பட்டு சென்ற இடத்தில் ஒவ்வாமல் உணர்ந்து, வந்து சென்றபடியே இருக்கும் மனிதர்களின் அனுபவங்களும் எண்ணங்களும் தொகுக்கப்பட்ட வடிவில் உள்ளன. இந்த வேகம் அடங்கி இந்தக் கதாபாத்திரங்கள் மறைந்தபின் கும்பமுனி வந்து சூரல் நாற்காலியில் அமர்ந்தார்.

    கும்பமுனி நாஞ்சில்நாடனின் விருப்பப் பிம்பம். அநேகமாக அதை மறைந்த இலக்கியவாதியான நகுலனின் சாயலில் படைத்திருக்கிறார். ‘சற்றே சாய்ந்த சூரல் நாற்காலி’ நகுலனின் ‘மழை மரம் காற்று’ என்ற நீள்கவிதையில் இருந்தும் (அவரது வாழ்க்கையில் இருந்தும்) எடுக்கப்பட்டது. நகுலனுக்குரிய ‘நாண் அறுந்த நிலை’ கும்பமுனியிலும் உண்டு. ‘திரொளபதி அவள். வந்து போகும் அர்ச்சுனன் நான்’ என முன்வைக்கப்பட்ட (கொல்லிப்பாவை; நகுலன்) ஒரு சுசீலா, கும்பமுனிக்குக் கிடையாது என்பது குறிப்பிடத்தக்க வேறுபாடு. நகுலன் முற்றிலும் கைவிடப்பட்டவராக உணர்பவர், ‘எனக்கு யாருமில்லை நான்கூட!’ என்று. கும்பமுனிக்கு எப்போதும் சமையற்காரர் துணை உண்டு.

  5. Naga Rajan சொல்கிறார்:

    நன்றி. அருமையான பதில்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s