“பயனற்றச் சொற்களைப் பேச, எழுத வேண்டாமே!”

av_wrapper.inddவிகடன் மேடை – வாசகர் கேள்விகள், நாஞ்சில் நாடன் பதில்கள்

ஜெகந்நாதன், திருவொற்றியூர்….”தமிழ்ப் படைப்புலகின் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்ற உங்கள் பட்டியல் பத்திக்கிச்சு, பத்திக்கிச்சு, பத்திக்கிச்சே வேய்..?”
”அஃதோர் பட்டியல் அல்ல; வகை மாதிரிக்காகச் சில பெயர்களைச் சொல்கிறேன் என்று அந்தப் பதிலிலேயே குறிப்பிட்டிருந்தேன். அதாவது ஒரு SAMPLE SURVEY.
மூத்த எழுத்தாளர்கள் சிலரைக் கேட்டிருந்தால், எவர் பெயரையும் குறிப்பிடாமல் அந்தக் கேள்வியை எளிதாகத் தாண்டிப்போயிருப்பார்கள். வேறு சிலர் அரை மனதுடன் சில பெயர்களைச் சொல்வர். மற்றும் சிலர், தமக்குள்ளாகவே தரம்பிரித்துச் சில பெயர்களைச் சொல்லிக்கொள்வார்கள், மொய் எழுதுவதைப் போல மாறி மாறி. நான் சற்றுத் தாராளமாக இருக்க விரும்பினேன். குறிப்பிட்ட பெயர்கள் மூலம் பாண்டிய மன்னன் போல் ‘ஆபத்துதவிகள்’ என்ற தற்கொலைப் படை உருவாக்குவது என் நோக்கம் அல்ல. மேலும் லட்சக்கணக்கான வாசகர்களைக்கொண்ட ‘விகடன்’ மூலம் நல்ல படைப்பு முயற்சியில் ஈடுபடும் சிலர், வெளி உலகுக்குத் தெரிய வருவார்களே என்ற என் ஆசையும் காரணம்.
நினைவில் இருந்து எழுதியதால், நிச்சயமாக விடுதல்கள் இருக்கும். அதனுள் நுண் அரசியல் தேடுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.
எவர் என்ன பரிந்துரைத்தாலும், காலம் ஈவு- இரக்கம் இல்லாத தரக் கட்டுப்பாட்டாளன். எவரும் தனது படைப்பாற்றல், உழைப்பு, அறச்சார்பு, நேர்மை ஆகியவற்றாலேயே நிலைபெறல் சாத்தியம். சாரம் கட்டியோ, முட்டுக்கொடுத்தோ நிலைநாட்ட முடியாது. ‘விகடன்’ எனக்கு அளித்த வாய்ப்பை நேர்மையுடன் பயன்படுத்திக்கொண்டேன். எனக்கு அதில் கர்வம் உண்டு.
196-வது திருக்குறள் சொல்கிறது:
‘பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி எனல்’ – என்று.
பயனற்றச் சொற்களைப் பேச, எழுத எனக்கு உத்தேசம் இல்லை!”
மஞ்சுளா நாகேந்திரன், திருப்பத்தூர்…..”ரஷ்ய இலக்கியத்தில் உங்களைக் கவர்ந்த நாவல் எது, ஏன்?”
”மாஸ்கோவில் புரொக்ரசிவ் பப்ளிஷர்ஸ் வெளியிட்ட ருஷ்ய இலக்கிய வரிசை, இளம் பருவத்திலேயே எமக்கு வாசிக்கக் கிடைத்தது. ஆங்கிலத் திலும் தமிழிலும், நல்ல தாளில், சிறந்த பைண் டிங்கில், மலிவு விலை யில். சுந்தர ராமசாமி யின் சொற்களை நினைவுகூர்ந்தால், ரஷ்ய இலக்கியம் என்பது ஆயிரங்கால் மண்டபம் போன்றது. எந்தத் தூண் சிறந்தது. எந்தத் தூண் வலுவானது என்று ஆராய்ந்து நிற்காமல், பார்த்து வியக்கவே காலம் போதாது. பெரும்பாலும் அனைவரும், சற்று முன்னே பின்னே, சமகாலத்து ஆளுமைகள்; மேதைகள். கம்பன், ‘தோள் கண்டார், தோளே கண்டார்’ என்றதைப் போல, ரஷ்ய இலக்கியத் தூண் கண்டார், தூணே கண்டார் எனலாம்.
ஆன்டன் செக்காவ், பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி, லியோ டால்ஸ்டாய், மாக்ஸிம் கார்க்கி, இவான் துர்கேனிவ், மிக்கெய்ல் சோலோகோவ், புஷ்கின், மாயகோவஸ்கி, கோகல், அலெக்ஸி டால்ஸ்டாய்… என்று தொடங்கி சால்சானிட் சின் வரை எத்தகு வியப்பான ஆளுமைகள்! யாரைச் சொல்ல, யாரை விட? ‘அசடன்’, ‘காமசோவ் சகோதரர்கள்’, ‘குற்றமும் தண்டனையும்’, ‘தாய்’, ‘தந்தையரும் தனயர்களும்’, ‘போரும் அமைதியும்’, ‘அன்னா கரினீனா’, ‘புத்துயிர்ப்பு’, ‘டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது’ என்கிற நாவல்களில் எவற்றை முதன்மைப்படுத்த?
இது மாம்பழப் பருவ காலம். அல்போன்சா, தசேரி, லங்கடா, பல்சாடு, ருமானி, பங்கனபள்ளி, குதாதத், இமாம் பசந்த், செந்தூரம், நீலம், பஞ்சவர்ணம், மல்கோவா, செங்கை வருக்கை… முதலானவற்றில் என்னைக் கவர்ந்தது எது என்றால் என்ன சொல்வேன்? பல மரம் கண்ட தச்சன், ஒரு மரமும் வெட்டான்!”
ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன், கோவை……”சமகாலப் பிரச்னைகளைப் பேசவும் எழுதவும் நம் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு என்ன அப்படி ஒரு தயக்கம்; அல்லது பயம்? இதே கூட்டம்தான், பிரச்னைகளைப் பேசும் உலக இலக்கியங்களையும் கொண்டாடுகிறது. ஏன் இந்த முரண்?”
”தந்திரமாக நீங்கள் பெயர்களைத் தவிர்த்துவிட்டுக் கேட்கிறீர்கள். எலுமிச்சைப் பழம் புளிக்கும் என்பது, எனக்கும் உங்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் தெரியும். இதைச் சொல்ல ஏழு நாட்கள் வேண்டியது இல்லை. அல்லது வலைதளங்களின் உறுதிப்பாடுகள் தேவையும் இல்லை. ஆனால், பிரச்னைகளை வெளிப்படையாகப் பேசினால் சம்பந்தப்பட்டவர்களுக்குப் படாத இடத்தில் பட்டுவிடுமோ எனும் பயம் இருக்கலாம்! இன்றில்லாவிட்டால், நாளை அவர்கள் முன்னால் போய் நிற்க வேண்டி இருக்குமே எனும் கவலை இருக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள், தாமிரபரணி நதிக்கரையில் ஒரு தோட்ட வீடு தர எண்ணியிருந்து, பிரச்னைகளைப் பேசி, அவர்கள் மனம் மாறிவிட்டால் என்ன செய்வது என்ற தயக்கம் இருக்கலாம். ஈழப் பிரச்னை ஒன்று போதும் சில எழுத்தாளர்களின் கள்ள மௌனத்தை மதிப்பீடு செய்ய! உலக இலக்கியங்களை, உலகப் பிரச்னைகளைப் பேசினால் வம்பும் இல்லை… வழக்கும் இல்லை. அறிவார் அறிவார்; அறியார் அறியார்!
பாலமுருகன் நாகராஜன், சென்னை……”தங்களின் மிகச் சிறந்த நாவலான ‘தலைகீழ் விகிதங்கள்’, ‘சொல்ல மறந்த கதை’ என்கிற பெயரில் சினிமாவான சுவாரஸ்யத்தைச் சொல்லுங்களேன்?”
” ‘தலைகீழ் விகிதங்கள்’ என் முதல் நாவல்; மிகச் சிறந்த நாவல் அல்ல. எனது மிகச் சிறந்த நாவலை இனிதான் எழுத வேண்டும். எழுதுவேனா என்பதை இறை தீர்மானம் செய்யும். தங்கர்பச்சான் எனது நண்பர். விரும்பிக் கேட்டு உரிமத்தொகை தந்து, வாங்கிப் போய்ப் படமாக்கினார். படப்பிடிப்பின்போது, வேடிக்கை பார்க்க நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம், கடலூர் பேருந்து நிலையத்தின் எதிரே இருந்த உணவகம், தியாகவல்லி எனும் கிராமம் எனக் கூடவே இருந்தேன். இயக்குநரும் நடிகருமான, சமீபத்தில் காலமான தோழர் மணிவண்ணனுடன் பழகும் வாய்ப்பை எனது நினைவுப்பேழையில் பாதுகாக்கிறேன். சேரன், புஷ்பவனம் குப்புசாமி, வ.கௌதமன் ஆகியோர் நட்பு மறக்கவியலாதது.
ஒரு நாவல் சினிமா ஆகும்போது, நாவலைக் கையில் எடுத்துக்கொண்டு போய், காட்சிக்குக் காட்சி, வசனத்துக்கு வசனம் ஒப்பிட்டுப் படம் பார்க்கக் கூடாது என்பதைத் தெரிந்துகொண்டேன். நாவல் என்பது வேறு, சினிமா என்பது முற்றிலும் வேறு. எனது தீவிர வாசகர்கள் பலர் படம் பார்த்துவிட்டு என்னிடம் ஆயாசப்பட்டது உண்டு. நாவல் எனது ஊடகம், சினிமா… தங்கர் ஊடகம். அவரவர் மெள்ள முடிவதை விழுங்குகிறார்கள், அவ்வளவுதான்!’
சண்முகசுந்தரம், ஆலக்குடி….,.”நரேந்திர மோடியை ஆதரிக்கும் இலக்கியவாதிகளின் பெயர் பட்டியலில் உங்கள் பெயரும் இருந்ததே… உங்கள் நிலைப்பாடு என்ன?”
”நரேந்திர மோடியை ஆதரித்தேன் என்று எதை வைத்துச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் அப்படி எங்கும் பேசியதாக, எழுதியதாக யாரேனும் சான்று காட்டட்டும். பட்டியல் போடுகிறவர்கள் என்னைக் கேட்டுக்கொண்டு செய்வது இல்லை. எந்த முகநூல் கணக்கும் எனக்கு இல்லை. எனது வலைதளம் நெறியாளும் சகோதரர் எஸ்.ஐ.சுல்தான் ஆதாரமற்ற எதையும் பதிவுசெய்வதும் இல்லை. நரேந்திர மோடியை ஆதரித்த காரணத்தால், ஜோ டி குருஸ் என்கிற தமிழின் சிறந்த படைப்பாளியைக் கழுவேற்ற சிலர் தயாரானபோது, வெளிப்படையாக அவரை ஆதரித்து நான் பேசினேன். எழுத்தாளனின் கருத்துச் சுதந்திரத்தை மறுக்காதீர்கள், அவன் குரல்வளையை நெரிக்காதீர்கள் என்பதே என் நிலைப்பாடு. அது ஓர் எழுத்தாளனை மற்றோர் எழுத்தாளன் பாதுகாப்பது சார்ந்தது. அவர் மோடியை ஆதரிக்கிறார் என்பதால், நானும் ஆதரிக்கிறேன் என்பது கொண்டு கூட்டிப் பொருள் கொள்வது… சிரிப்புத்தான் வருகுதையா!
சின்னத்துரை, சென்னை……”முன்பெல்லாம் சினிமாவில் அகிலனின் கதை படமாகும், கலைஞரின் கதை படமாகும். ஆனால், இப்போது யாரோ ஒருவரின் கதைக்கும் எழுத்தாளர்கள் வசனம் மட்டும் எழுதப்போவது ஏன்? தவிர, அவர்களின் கதையைச் சரி செய்கிறோம் என்று சொல்லிவிட்டு அந்தக் கதைக்கு சீன் பிடிக்கும் வேலையைச் செய்கிறார்களே?”
”தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை எத்தனை தமிழ் சினிமாக்கள் வந்திருக்கும்? அவற்றுள் நீங்கள் சொல்லும் அண்ணாதுரை, கருணாநிதி, அகிலன், ஜெயகாந்தன், பொன்னீலன்… முதலான பலரின் எத்தனை கதைகள் பயன்படுத்தப்பட்டன? பொருட்படுத்தத் தேவை இல்லாத பங்களிப்பு! ஆனாலும் அத்தனை சினிமாக்களுக்கும் வசனம் எழுதப்பட்டுத்தானே வந்திருக்கிறது? சோலைமலை, ஆரூர்தாஸ் எனச் சில பெயர்கள் நமக்கு நினைவுக்கு வரவில்லையா? பிறகு, நெறியாளுகை செய்தவரே எழுதிக்கொண்டார்கள். பிறகு, அதற்கென ஓர் இலாகா ஏற்படுத்தினார்கள். ஒரு தொழில் என்ற அளவில் யார் கதைக்கு யார் வசனம் எழுதினால் என்ன? இதில் எழுத்தாளன் எழுதினால் நமக்கு எங்கே இடிக்கிறது? ‘தலைகீழ் விகிதங்கள்’, ‘சொல்ல மறந்த கதை’ ஆனபோது வசனம் நான் எழுதவில்லை. நான் வசனம் எழுதிய ‘பரதேசி’யின் கதாநாயகன், என் ‘இடலாக்குடி ராசா’. கதை, டேனியல் எழுதிய Red Tea.
மற்றவர் செய்யும் தொழிலை எழுத்தாளர்களும் செய்கிறார்கள். மற்றவர் செய்தால் சரி. எழுத்தாளர் செய்தால் தப்பா?
பின்னே ஒரு காரியம், இந்த சீன் பிடிப்பது! ஒரு நெறியாளுகைக்காரருடன் நட்புரீதியாகப் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் திரைப்படங்கள் எதிலும் நான் பணியாற்றவில்லை. சுவாரஸ்யமான சில தகவல்கள் சொன்னால், பின்னால் திரும்பிப் பார்ப்பார், உதவி இயக்குநர் குறித்துக்கொள்வார். அவற்றைத் திரைப்படங்களில் பார்த்த பிறகுதான் எனக்கு இந்த ‘மீன்’ பிடிக்கும் சமாசாரம் தெரிந்தது. இசைஞானி இளையராஜா இசையமைக்க சுகா இயக்கிய ‘படித்துறை’ படத்துக்கு நானும் ஒரு பாட்டு எழுதினேன். புறப்படும்போது இளையராஜாவிடம் கேட்டேன், ‘சென்னைக்கு வீடு பார்த்துக் குடி வந்திரட்டா?’ என்று. ஒரு சீன் பிடிச்சுக் கொடுத்தால் என்ன தருவார்கள்? சென்னையில் வீடு பார்க்கச் சொல்லலாம்!”
     சிவக்குமார், சென்னை…..”இடதுசாரி மற்றும் திராவிட இலக்கியங்கள் பற்றிய வண்ணநிலவனின் மோசமான விமர்சனம் பற்றி உங்கள் கருத்து என்ன?”
”எந்த மோசமான விமர்சனத்துக்கும் நான் எதிரானவன். விமர்சனம் நியாயமானதாக இருக்க வேண்டும். விமர்சனத்தின் பின்னால் செயல்படும் அறம் வழுவக் கூடாது. சொந்த விருப்பு வெறுப்புக்களை விமர்சனமாக முன்வைத்தால், அது வசையாகிவிடும். வண்ணநிலவன், என் வயதொத்த, எனக்கு முன்பே எழுத வந்த, தமிழில் சிறந்த சில சிறுகதைகளைத் தந்த நல்ல படைப்பாளி. ஆனால், விமர்சகர் அல்ல. இடதுசாரி, திராவிட இலக்கியங்களைப் பற்றி எனக்கும் ஒரு பார்வை உண்டு. அதைத் தனியாகப் பேச வேண்டும்!”
சென்ற வார கேள்விகளும் அதற்க்கான முழு பதில்களும்.:
– தீதும் நன்றும் பேசலாம்…

”விமர்சகர், எழுத்தாளர் உறவு குறித்துச் சொல்லுங்களேன்?”
” ‘கும்பமுனி’ கதாபாத்திரம் உண்மையில் யார்?”
”ஓர் எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன? இருக்கக் கூடாத பண்புகள் எவை?”
– அடுத்த வாரம்…

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s