”எதன் அடிப்படையில் ஒரு புத்தகத்தைப் படிக்கத் தேர்வு செய்ய வேண்டும்?”

large_ (2)விகடன் மேடை -வாசகர் கேள்விகள்.. நாஞ்சில் நாடன் பதில்கள்
 லெனின்.கார்த்திகேயன், துபாய்.: – ”எதன் அடிப்படையில் ஒரு புத்தகத்தைப் படிக்கத் தேர்வு செய்ய வேண்டும்?”
”எந்த முன்முடிவும் இருக்கக் கூடாது. பிறர் சொல்லி ஓர் எழுத்தாளன் மீது நமக்கு ஏற்படும் விருப்பு வெறுப்புகள் குறுக்கிடக் கூடாது. ஒரு துறையை விரும்பி வாசிக்கிறவர், அதைத் தொடர்ந்து மேலே போகலாம். தேர்ந்த வாசகனுக்கு, எடுத்த புத்தகத்தின் 10 பக்கங்கள்
வாசித்தாலே தனக்கு உகந்ததா… இல்லையா என்பது தெரிந்துவிடும். ஏற்கெனவே வாசித்திருக்கும் நண்பர்களின் கருத்தையும் ஏற்றுக்கொள்ள லாம். ஓர் எழுத்தாளனின் சமூக, அரசியல், கலைக் கொள்கைகள் நமக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால், அவர் படைப்பை வாசிக்காமலே மறுப்பது என்பது நியாயம் இல்லை. ஜோ டி குருஸ், அரசியலில் நரேந்திர மோடியை ஆதரிப்பவர் என்பதால், அவரது ‘ஆழி சூழ் உலகு’ அல்லது ‘கொற்கை’ நாவல்கள் மலிந்த படைப்பாகிவிடாது. ‘பரதேசி’ படத்துக்கு நான் வசனம் எழுதிய காரணத்தால், எனக்கு வந்த விமர்சனங்களில் மிகக் கடுமையானது நண்பர் இரா.முருகவேள் எழுதியது. அவர் ‘Red Tea’ நாவலை ‘எரியும் பனிக்காடு’ என்று மொழி பெயர்த்தவர். எனக்கு அவர் மீது வருத்தம் உண்டு. அதற்காக அவர் சமீபத்தில் எழுதிய, ‘மிளிர் கல்’ நாவலை வாசிக்காமல் இருக்க மாட்டேன். என் வருத்தம், என் வாசிப்பில் குறுக்கிடக் கூடாது. குறுக்கிட்டால், நான் நல்ல வாசகன் இல்லை!”
இளம்பரிதி, பொள்ளாச்சி.:- ”முன்பு மாதிரி இலக்கியக் கூட்டங்களில் சண்டை சச்சரவு இல்லையே… ஏன்?”
”இலக்கியக் கூட்டம் என்பது, ஊழல், லஞ்சம், கொள்ளைப் பணத்தைப் பங்கு போட்டுக்கொள்ளும் இடமா என்ன… சண்டை சச்சரவு ஏற்படுவதற்கு? கருத்து மோதல்கள் தவிர்க்க இயலாதவை. காரசாரமாகவே நடக்கும். பின்பு, ஒரே டீக் கடைக்கோ, மதுச்சாலைக்கோ போவார்கள்.
40 ஆண்டுகள் முன்பு, பம்பாய் மலையாள சமாஜத்தில் ஒரு கருத்தரங்கில் எடசேரி கோவிந்தன் நாயரைப் பற்றி புருஷோத்தம நெடுங்காடி பேசிக்கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் நம் ஊர் கண்ணதாசனைப் போல புகழ்பெற்றவர் மலையாள சினிமாப் பாடலாசிரியர் வயலார் ராமவர்மா. அவர் முழு போதையில் குறுக்கிட்டுப் பேச, பெரிய சலசலப்பு. அவையோரில் பெரும் பகுதியினர் மலையாள இலக்கியப் பெரும்புள்ளிகள். ‘செரி! தானொரு பீடி எடு’ என்பதுடன் காரியம் முடிந்துவிட்டது. இலக்கியவாதிகளுக்கு இடையேயான இந்தக் கருத்து மோதல்கள், மலையாளத்தில் சொன்னால், ‘சௌந்தர்யப் பிணக்கம்’; தமிழில் சொன்னால், ‘செல்லச் சிணுங்கல்’!”
 முருகேசன், கடத்தூர்.:- ”தமிழைத் தவறு இல்லாமல் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தமிழர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு; உங்களுக்கு?”
‘தவறு இல்லாமல் தமிழ் பேசுகிறவர் எத்தனை பேர் கிடைப்பார்கள் நமக்கு? ஆங்கிலத்தைப் பிழையறப் பேசுபவர்களை ஆங்கிலேயர்கள் என ஏற்றுக்கொள்வோமா? ஆங்கிலேயரே வியக்கும் அளவுக்கு ஆங்கிலம் பேசிய ‘Silver Tongue’ சீனிவாச சாஸ்திரியை ஆங்கிலேயர் என ஏற்றுக்கொள்வார்களா? ‘எதுகை அகராதி’ தொகுத்த ஊத்தங்கரை அப்பாய் செட்டியார் வீட்டில் பேசிய மொழி தமிழ் அல்ல. ஆனால், அவர் தமிழர் இல்லையா?
அண்ணா சௌந்தர் வல்லத்தரசு என்னிடம் சொன்ன தகவல் ஒன்றைச் சொல்லவா..? ரமண மகரிஷியைப் பார்க்கப்போன மகாமகோபாத்யாய உ.வே.சாமிநாத ஐயர் சொன்னாராம்… ‘தனக்கு ஈஸ்வர பக்திக்கும் மேலே தமிழ் பக்தி’ என்று. ரமணர் பதில் சொன்னாராம்… ‘தமிழ் பக்தியே ஈஸ்வர பக்திதான்’ என்று. தமிழ்த் தேசியம் பேசும் பல தலைவர்களும், முடியுமானால் ஒன்றுகூடி, தமிழர் என்பவர் யார் என வரையறை செய்வது நல்லது. என்னைப் பொறுத்தவரை, தமிழ் உணர்வு உடையவர் அனைவரும் தமிழர்களே!”
பாலா, சென்னை.:- ”உங்கள் கட்டுரைகளில் பெரும்பாலும் தமிழ் மண்ணின் அரசியலும் (குறிப்பாக திராவிட அரசியலும்), சினிமாவும், சமூகமும் மட்டுமே மிகக் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. தமிழகம் தாண்டிய மண்ணில் எல்லாம் (குறிப்பாக நீங்கள் வாழ்ந்த மகாராஷ்டிரத்தில்) பாலும் தேனுமா ஓடுகிறது?”
”இங்கும்தான் பாலும் தேனும் ஓடுகின்றன; ஆனால், சினிமா பேனர்களின் மீது! சேர்த்துச் சொல்லலாம் பீரும் ஓடுகிறது என்று. இந்தியாவில் எந்த மாகாணத்திலும் பாலும் தேனும் ஓடவில்லை. ஆனால், ரூபாய்க்கு எத்தனை காசு ஊழல் என்றொரு கேள்வி வருகிறது! சினிமா பற்றி பேசினால், மராத்தி மொழியின் ‘சாம்னா’, ‘அக்ரீத்’, ‘சவாஸ்’… என்ற திரைப்படங்கள் போதும் என் மதிப்பீட்டுக்கு. சமூகச் செயல்பாடுகளுக்கு பாபா சாஹேப் அம்பேத்கரும், பாபா அம்டேயும், மகாத்மா புலேயும் போதும். ஒப்பிட்டுப் பார்த்தால், நமது செயல்பாடுகள் ரத்தக்கொதிப்பை ஏற்படுத்துகின்றன. ஹெலிகாப்டரில் பறந்து செல்லும் முதலமைச்சரை, தரையில் நின்றுகொண்டு குனிந்து வணங்கும் அமைச்சர்களை நான் மராட்டியத்தில் கண்டது இல்லை.
30 ஆண்டுகளுக்கு முன்பு, மராட்டிய மாநிலத்தில் விற்பனைப் பணியில் என் பயணம். அக்கோலாவில் தங்கி இருந்தேன். அது பம்பாய் – நாக்பூர் வழித்தடத்தில் இருக்கிறது. 40 கிலோ மீட்டர் தூரத்தில், ஒரு கூட்டுறவு நூற்பாலை நிர்வாக இயக்குநரைப் பார்ப்பது என் திட்டம். அவர் அந்த ஊர் சட்டமன்ற உறுப்பினர். மதியச் சாப்பாட்டுக்கு மேல் சந்திப்பு. பேசிக்கொண்டே இருந்தோம். சாய் கொடுத்தார். வாங்கும் நூற்பாலை இயந்திரங்கள் குறித்து விவாதித்தோம். திடீர் என்று மணி பார்த்தார். மாலை ஆறே முக்கால். ‘அக்கோலாவுக்கு உனக்குக் கடைசி பஸ் 7 மணிக்கு… கௌம்பு’ என்று சொல்லி, அவரது ஜீப்பில் என்னை, பேருந்து நிலையத்துக்கு அவரே ஓட்டிவந்து விட்டார். அவர் மராத்தி; நான் மதராஸி. அவர் எனக்குச் சொந்தக்காரரோ, சம்மந்தியோ அல்ல. அவரும் ரூபாய்க்கு 10 பைசா வாங்குகிறவர்தான். ஆனால், இந்த மனிதத்தன்மையை உங்கள் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பார்க்க முடியுமா?
மேலும்… நான் மராத்தியன் அல்ல; மராத்தி மொழியில் எழுதுகிறவனும் அல்லன். தமிழன்; தமிழ் எழுத்தாளன். என் வழக்கு உம்மோடுதானே இருக்கவியலும்?”
கேசவ மூர்த்தி, கும்பகோணம்.:- ”பொதுவாக… தமிழர் உணவு வகைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் உள்ளவர் நீங்கள். ஆனால், சாதிரீதியாக, மதரீதியாக உள்ளுறைந்திருக்கும் உணவின் அரசியல் குறித்து உங்கள் பார்வை என்ன?”
”பசித்தவனுக்கு கடவுள் உணவாக வருகிறார் என்பது என் நம்பிக்கை. கடவுளுக்கேகூட சாதி, மதம் எனும் அரசியல், செல்வாக்குப் பெற்றிருக்கும் காலத்தில், உணவிலும் அரசியல் இருக்கும்தானே! மனிதர்களிலோ, அவர்கள் உண்ணும் உணவிலோ மேல், கீழ் பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. உணவில் சிறந்தது எனும் பேச்சுக்கூட கால, தேச வர்த்தமானங்களுக்குக் கட்டுப்பட்டதுதான். ஆடு, கோழி சிறந்தது என்பதும் மாடு, பன்றி தாழ்ந்தது என்பதும் நியாயமான கூற்று அல்ல. அமெரிக்காவில், கனடாவில் இரண்டு சந்தர்ப்பங்களில் மூன்று மாதங்கள் பயணம் செய்தபோது, பல்வகை உணவுகளின் மேன்மையைப் புரிந்துகொண்டேன். விலை கூடிய உணவைச் சிறந்தது என்று சொல்ல முடியாததைப் போலவே, சைவமே சிறந்தது என்றும் பேச இயலாது. கோழி உயிர் என்றால், முட்டையும் உயிர்தான். பால் என்பதோ, பசுவின் மாற்றப்பட்ட ரத்தம்தான். பசு சுரப்பதன் நோக்கம், மாந்தர் கறந்து மாந்தவா? ஒரு நெல்மணிகூட உயிர்தானே என்பவன் நான். உணவு அரசியலைப் பொருட்படுத்தாமல் பசித்து, ருசித்து உணவைப் புசியுங்கள். உணவை வீணாக்குவது பெரும் பாவம்!”
எஸ்.பஞ்சலிங்கம், திருப்பூர்.:- ”காலம் கடந்து வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருது உண்மையில் எழுத்தாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா?”
” ‘மகிழ்ச்சி அளிக்காது’ எனச் சொன்னால் அது உண்மை அல்ல. ஆனால், அந்த மகிழ்ச்சியை, சாகித்ய அகாடமி, ஒரு படைப்பாளியின் படைப்பூக்கம் மிகுந்த பருவத்தில் தர வேண்டும். எந்த விருதும், ஓய்வூதியமோ அல்லது விபத்து நிவாரணமோ அல்ல. நம் மொழியில், விருது தேர்வில் அரசியல் பரிந்துரைகளும் வேண்டுதல் – வேண்டாமை பார்ப்பதும் அதிகம். தமிழின் தலைசிறந்த படைப்பாளிகள் எவரெவருக்கு பத்ம விருதுகள் தரப்பட்டன இதுவரை? சாகித்ய அகாடமி விருது என்பது, இந்தியக் குடிமகனின் வரிப்பணத்தில் இருந்து தரப்படுவது. எந்தத் தனி மனிதனின், அமைப்பின் தோட்டம்-துரவு விற்று, வீடு-வாசல் விற்று, கழுத்துப் பொன்னாபரணங்கள் விற்றும் வழங்கப்படுவது அல்ல. எனவே, தரமான படைப்புகளை மொழிக்குத் தருபவர்களை உரிய தருணத்தில் சிறப்பிப்பதே பொறுப்பான செயல்பாடு. இதனை ‘தர்மகர்த்தா’க்கள் மனதில்கொள்ள வேண்டும்!”
வசந்தாகாந்த், கருப்பம்புலம்.:- ”எல்லோரும் அரசியல் சாயமோ, அரசியல் சார்ந்தோ, ஒரு கட்டத்துக்கு மேல் போய்விடுகிறார்களே… ஏன்?”
”நீங்கள் சினிமாக்காரர்களைப் பற்றி கேட்கவில்லையே? ஏனெனில், எழுத்தாளர்களில் பெரும்பான்மையானவர்களை இந்தப் பகுப்பில் அடக்க இயலாது. ஒரு சமூக – அரசியல் எழுத்தாளன், கருத்து சொல்வான். அது அரசியல் கட்சி சார்போ, சாயமோ அல்ல. எழுத்து என்பது தொழிலோ, பிழைப்போ அல்ல. காபி கடையில் பில் எழுதுவது, ‘எழுதுவதை’விட வருமானமுள்ள தொழில். பாரதி பாடும், ‘கவிதை எமக்குத் தொழில்’ என்பது வேறு விரிவான பொருளில் புரிந்துகொள்ள வேண்டும்.
பிழைப்புத் தேடுகிறவர்கள், பேரம் படிந்தால் அல்லது நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால், சார்பு நிலை எடுக்கிறார்கள் அல்லது சாயம் பூசிக்கொள்கிறார்கள். ‘சீச்சி! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு!’ என்ற சுதந்திரம் நாடுகிறவர்களே, இந்த மொழியை, பண்பாட்டை, சிந்தனையை அடுத்த நூற்றாண்டுக்குக் கடத்துகிறார்கள். பிழைப்பாளிகளை விட்டுவிட்டு படைப்பாளிகளைக் கொண்டாடுங்கள்!”
சூரியதாஸ், சிலட்டூர்.:- ”மகத்தான இலக்கியம் என்பதன் அடையாளம் என்ன?”
 ”மனிதத்தின் மேன்மையைக் கலாபூர்வமாகப் பேசும் எதுவும் மகத்தான இலக்கியம்தான். ‘மற்றுள குழுவை எல்லாம் மானுடம் வென்றதம்மா! ’ என்று கம்பன் பேசுவது மகத்தான இலக்கியம். ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்’ என்று பேசும் சிலப்பதிகாரம், மகத்தான இலக்கியம். ‘மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம், உண்டி கொடுத்தோர்… உயிர் கொடுத்தோரே’ என்று பேசும் மணிமேகலை, மகத்தான இலக்கியம். ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என வள்ளலார் கொள்கை பேசும் எதுவும், மகத்தான இலக்கியம்.
‘நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈகில்
படமாடக் கோயில் பரமற்கு அங்கு ஆமே!’
என்ற திருமூலர் கருத்தை உயர்த்துவது, மகத்தான இலக்கியம். மகத்தான கலைஞர்களே மகத்தான இலக்கியம் படைப்பார்கள்!’
– அடுத்த வாரம்…
 ‘‘நரேந்திர மோடியை ஆதரிக்கும் இலக்கியவாதிகளின் பட்டியலில் உங்கள் பெயரும் இருந்ததே… உங்கள் நிலைப்பாடு என்ன?”
 ”சமகாலப் பிரச்னைகளைப் பேசவும் எழுதவும் நம் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு என்ன அப்படி ஒரு தயக்கம்… அல்லது பயம்? இதே கூட்டம்தான் பிரச்னைகளைப் பேசும் உலக இலக்கியங்களையும் கொண்டாடுகிறது. ஏன் இந்த முரண்?”
”தங்களின் மிகச் சிறந்த நாவலான ‘தலைகீழ் விகிதங்கள்’, ‘சொல்ல மறந்த கதை’ சினிமாவான சுவாரசியத்தைச் சொல்லுங்களேன்!”
– அடுத்த வாரம்…

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், விகடன் கதைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s