விகடன் மேடை – வாசகர் கேள்விகள்… நாஞ்சில் நாடன் பதில்கள்- அனைத்தும்

e0aea8e0aebee0ae9ee0af8de0ae9ae0aebfe0aeb2e0af8d-e0aea8e0aebee0ae9fe0aea9e0af8d
4 ஜூன் 2014 விகடன் மேடை –
வாசகர் கேள்விகள்…
நாஞ்சில் நாடன் பதில்கள்- அனைத்தும்
ஷாஜகான், ஆம்பூர்.
”வாழ்வின் இளமையான காலங்களை, மக்கள் நலப் போராட்டங்களுக்காக வீதிகளிலும் சிறைகளிலும் கழிப்பவர்கள் எந்த அடையாளமும் இல்லாமல் கடந்துசெல்கிறார்கள். ஆனால், எழுத்தா ளர்கள் தங்களின் ஒவ்வோர் சொல்லுக்கும் அங்கீ காரத்தை எதிர்பார்ப்பதும் அங்கலாய்ப்பதும் கூச்சலி டுவதும், சுயநலத்தையே பொதுநலம் போல முன் வைப்பதும் மிக ஆபாசம் இல்லையா?”
”தியாகங்களைப் புறக்கணிப்பது சமூகத்தின் நோய்க்கூறு. இதைச் சுட்டிக்காட்டுபவனே எழுத்தாளன்தான். ஒரு சமூகத்தின் பண்பாட்டை, சிந்தனையை, மொழியை அடுத்த நூற்றாண்டுக்குக் கடத்துபவனும் அவனே. ஒருபோதும் சுயநலத்தை அவன் பொதுநலமாக முன்வைப்பது இல்லை. இங்கு நான் எழுத்தாளனைப் பற்றி பேசுகிறேன்; போலிகளைப் பற்றி அல்ல. எழுத்தாளனுக்கு சில முனகல்கள் இருக்கக் கூடும்.
புதுமைப்பித்தன், ‘செத்ததற்குப் பின்னால் சிலைகள் எடுக்காதீர்’ என்றார். கவிக்கோ அப்துல் ரகுமான் விருது வழங்கும் ஒரு மேடையில், ‘எங்களுக்கு ஒரு பூ கொடுங்கள் போதும்’ என்றார். எழுத்தாளன் என்பவனும் சமகால சமூகத்தின் ஒரு கூறுதான். உண்மையின் ஞானப்பால் உண்டவனோ, காளி வாயின் தாம்பூலம் பெற்றவனோ அல்ல. சமூக மதிப்பீடுகளின் வீழ்ச்சி, அவனையும் பாதிக்கும். அவன் படைப்புகள் மக்களின் வாசிப்பைக் கோரி நிற்பன. அவனது அங்கலாய்ப்புகளைக் கடந்து சென்று, அவன் எழுத்துகளைப் பொருட்படுத்தப் பழகுவோம். அப்படி என்ன இந்தத் தமிழ்ச் சமூகம் தகுதிசால் எழுத்தாளர்களைப் போற்றி, பாராட்டி, கைகுலுக்கிக் களைத்துப்போயிற்று?”
குணசுந்தரி, நாகப்பட்டினம்.
”ஃபேஸ்புக் என்பதை முகநூல் என்று பலர் எழுதுகின்றனர். பெயர்ச்சொற்களை இப்படி மொழியாக்கம் செய்வது சரியானதா?”
”அதில் தவறு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. பொருள் உணர்ந்து பொருத்தமாக, பயில இலகுவான மொழியாக்கம் வரவேற்கத் தகுந்ததே. ‘கூரியர்’ எனும் சொல் ‘தூதஞ்சல்’ என அழகாக மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகமும், பணிமனையும், அலுவலகமும் நிலைபெற்றுச் சிறக்கவில்லையா? சொற்சேகரம் மொழிக்கு வளம்தானே?”
கேசவன், குலசேகரப்பட்டினம்.
”ஆரம்ப காலத்தில் நீங்கள் தி.மு.க-வுக்குப் பிரசாரம் செய்திருக்கிறீர்கள். இப்போது உங்கள் பார்வையில் தி.மு.க பற்றி சொல்லுங்கள்?”
”நான் பிறந்த வீரநாராயணமங்கலம், நாஞ்சில் நாட்டின் இரண்டாவது தி.மு.க கிளைக் கழகம் அமைந்த சிற்றூர். பேராசிரியர் க.அன்பழகனும் நாஞ்சில் மனோகரனும் வந்து பேசிய ஊர். திராவிடக் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மாறி, வசைக்கும் தாக்குதல்களுக்கும் ஆளாகிய முன்னணித் தொண்டர்களைக்கொண்ட ஊர்.
வீ.அ.கருணாகரன் என்ற பெயர் அறிவாலயத்தின் ஆவணக்கிடங்குகளில் அகப்படக்கூடும். மோதிரத்தை விற்றும் தோப்புத் தேங்காயை விற்றும் கட்சிப் பணி ஆற்றிய பலர் வாழ்ந்தனர். சிறுதெய்வக் கோயில்களில் ஆட்டுக்கிடா, சேவல், கோழி பலியை நிறுத்தியவர்கள். கலைஞர் கருணாநிதி எழுதிய ‘நச்சுக்கோப்பை’ நாடகம் நடத்திப் பணம் திரட்டி, தமிழர் நூல் நிலையம் பராமரித்தவர்கள். விடுதலையும், திராவிட நாடும், மன்றமும், முரசொலியும் வாசிக்க வாங்கிப் போட்டவர்கள். அதுவே என் பின்புலம்.
1967-ம் ஆண்டு தேர்தலில், அம்பாசிடர் காரில் கன்னியாக்குமரி சட்டமன்றத் தொகுதி முழுக்க தி.மு.க-வுக்குப் பிரசாரம் செய்திருக்கிறேன். என்னுடன் மைக் பிடித்தவர் பின்னாளில் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலத்தில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தேன். பிரம்படியின் தழும்பு நினைவில் இன்னும் உண்டு. பிறகு அவர்களின் செயல்பாடுகள், பண மோகம், மக்கள் விரோதப்போக்கு எல்லாம் என் மனதில் ஏறியிருந்த தி.மு.க எனும் கடுஞ்சாயம் வெளிறச் செய்தது. ஈழ விடுதலைப் போரில் அவர்கள் ஆடிய நாடகங்கள், சாதித்த கள்ள மௌனங்கள் யாவும் அருவருப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தின. ஜெயகாந்தன் அமர்ந்திருந்த மேடையில், ‘தி.மு.க எனும் நோயில் இருந்து மீண்டவன் நான்’ என்று பேசினேன். 1967-ல் தேர்தல் முடிவுகள் வந்ததும் அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலம், ‘விஷக் கிருமிகள் பரவிவிட்டன’ என்று சொன்னது எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. ‘காகிதப் பூ மணக்காது, காங்கிரஸ் சமதர்மம் இனிக்காது’ என்று எனக்கு அன்று சொல்லித்தரப்பட்ட பிரசார வாசகமும் காரணமற்று நினைவுக்கு வருகிறது!”
ஆ.கிறிஸ்டோபர், சென்னை.
”இன்றைய நவீன தமிழ் வாழ்க்கையில் நம்பிக்கைக்குரிய விஷயங்கள் என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?”
”கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்த சமூகமாக நாம் மாறி வருவது. பெண்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற போதமும் விடுதலை உணர்வும் தன்னம்பிக்கையும் கொண்டிருப்பது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிற சமூகமாக மாறி இருப்பது. அரசியலை, சுயதொழிலாக முனையும் எவர் பின்னும் நம்பித் தொடராமல் இருப்பது!”
கே.இசக்கிமுத்து, தூத்துக்குடி.
”சமீபத்தில் நீங்கள் வாசித்ததில் உங்கள் மனதை உலுக்கிய படைப்பு எது?”
”2014-ம் ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய ‘ஊழிக்காலம்’ எனும் நாவல். ஈழத்தைச் சார்ந்த, தமயந்தி சிவசுந்தரலிங்கம் எனும் இயற்பெயர் கொண்ட, என் வயதொத்த, போராளி ‘தமிழ்க் கவி’ தடுப்புக் காவலில் இருந்தபோது எழுதி முடித்தது. இது இவரது இரண்டாவது நாவல். தமிழினி வெளியீடு, 320 பக்கங்கள். ஈழத்தில் நடந்த போரை, கொலைகளை, தமிழின அழிப்பை, கண்களில் குருதி கசியப் பதிவுசெய்தது.
ஆனால் நமக்கென்ன, மயிரே போச்சு. சினிமாவுக்கும் சீரியலுக்கும் நேரமாச்சு!”
கோ.திவாகர், மதுரை.
”பள்ளிக்குப் பக்கத்தில்கூட டாஸ்மாக் கடைகள் வந்துவிட்டன. இன்றைய தலைமுறைக்குக் கொண்டாட்டம் என்றால், அது குடியாகத்தான் இருக்கிறது. நீங்கள் குடிப்பவர்களை, குடிக்கு அடிமையானவர்கள் – குடி ருசி அறிந்தவர்கள் என்று பிரிப்பீர்கள். இன்றைய சமூகத்தின் மீது குடியின் தாக்கத்தை, அதன் சாதக – பாதகங்களைச் சொல்லுங்களேன்?”
”குடி பற்றி மூன்று கட்டுரைகளில் விரிவாகப் பேசி இருக்கிறேன். என் முதல் கட்டுரை தொகுப்பின் தலைப்பே,
‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’ என்பது. மதுப் பழக்கம் என்பது அறம் சார்ந்தது அல்ல. அது ஒழுக்கத்தின் பாற்பட்டது. சங்க இலக்கியங்கள் கள், மது, தேறல் என்று பேசுகின்றன. ஒழுக்கம் என்பது காலம் சார்ந்து, சமூகம் சார்ந்து மாறக்கூடியது. 40 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசு தனது வருவாய்க்காக மதுவை அறிமுகம் செய்தது. இன்று, ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என மதுக்குப்பிகளிலேயே அச்சிட்டு அனுப்புகிறது. மதுப் பழக்கம், இன்று மக்களிடையே நெறிப்படுத்தப்படாதோர் கொண்டாட்டமாக மாறிவிட்டது. நெறிப்படுத்தப்படாத எந்தக் கொண்டாட்டமும், விரும்பத்தகாத பின் விளைவுகளைத்தானே தரும்!
தமிழ்நாடு, கள்ளைத் தடை செய்திருக்கிறது. கள் என்பது உணவு, மருந்து, மிதமான போதையும்கூட. இன்று குடிக்கிற ஒருவன் செலவு செய்கிற பணத்தில் பெரும்பங்கு அரசாங்கம் வரியாகக் கவர்ந்துகொள்கிறது. மற்றொரு பங்கு பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகள் பறித்துக்கொள்கிறார்கள். மூன்றாவது பங்கு, ஆளும் கட்சி முகவர்களுக்குப் போகிறது. தென்னங்கள், பனங்கள் என்றால் இந்தச் சிக்கல் இல்லை. கிராமத்துப் பணம் கிராமத்திலேயே புழங்கும். நமது அரசுகள் கள்ளுக்குப் பகை, Indian Made Foreign Liquor-க்கு உறவு. இதற்குள் இருக்கும் சுதந்திரத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கேரள அரசு, மிக சமீபத்தில் மாநிலம் எங்கும் இருந்த மதுச்சாலைகளை மூடப் பணித்துள்ளது. ஆனால், விற்பனைக்காக மதுக்கடைகள் திறந்திருக்கும். குடித்தே தீர வேண்டும் என்றால் வாங்கிக்கொண்டு வீட்டில் போய்க் குடியுங்கள். குடித்துவிட்டு கை உதறி வீட்டுக்கு நடக்காதீர்கள் என்பது செய்தி. குடிப்பது அவரவர் சுதந்திரம். முறையாக, சரியாகக் குடிப்பது சுதந்திரம் தரும் பொறுப்பு.
மேலும் ஒன்று, குடிக்க எவரையும் வற்புறுத்தாதீர்கள், குடிக்க விருப்பம் இல்லாதவரைக் கேலி செய்யாதீர்கள். வாங்கிக் கொடுத்துக் கெடுக்காதீர்கள்!”
நா.சண்முகம், கும்பகோணம்.
”கொங்கு நாட்டு உணவு வகைகளில் உங்களைக் கவர்ந்தது?”
‘கொங்கு மக்களின் எளிய உணவுகளில் பலவும் எனக்குப் பிடிக்கும். கச்சாயம், காட்டுக் கீரை கடைசல், அரிசீம் பருப்பும் சாதம்… என்பன சில. அவற்றுள் என்னைக் கவர்ந்தது ‘அரிசீம் பருப்பும் சாதம்’. இதை விளையாட்டாகக் ‘கொங்கு பிரியாணி’ என்பார்கள்.
உரித்த முழுதான சின்ன வெங்காயம், கிள்ளிப்போட்ட வரமிளகாய், கறிவேப்பிலை, கடுகு, காயப்பொடி, மஞ்சள்தூள் போட்டு கடலை எண்ணெயில் வதக்கி, தக்காளி அரிந்துபோட்டு தண்ணீர் விட்டு புழுங்கலரிசி ஒரு கப், துவரம்பருப்பு கால் கப் போட்டு வேகவிட வேண்டும். அதில் பூண்டு, சீரகம், நல்ல மிளகு போட்டு வெந்தவுடன் இறக்கவேண்டியதுதான். சூடாகச் சாப்பிட வேண்டும்; வாசமாக இருக்கும். கண்டிப்பாக உப்பு போட மறந்துவிடாதீர்கள். கவனிக்கவும், கொங்கு மண்ணில் விளையாத எந்த இறக்குமதிச் சரக்கும் இந்த உணவில் இல்லை!”
தி.குணாளன், திருச்சி.
”இளைய தலைமுறையிடம் வாசிப்பு குறைந்திருக்கிறதா… அதிகரித்திருக்கிறதா?”
”மேலை நாடுகளோடு ஒப்பிடும்போது எப்போதுமே நம்மிடம் வாசிப்பு குறைவு. முன்பெல்லாம் புத்தகத்தின் ஒரு பதிப்பு என்பது 1,200 படிகள். இன்று மக்கள்தொகை இருமடங்கு, மும்மடங்கு பெருகிய பின் சிறுகதை, நாவல் எனில் 500 படிகள், கவிதை எனில் 250 படிகள். இது ஓர் அளவுகோல். ஊரக நூலகங்களைப் பயன்படுத்துவோர் தொகை அபாயகரமான வேகத்தோடு கீழிறங்கி வருகிறது. சில விதிவிலக்குகள் உண்டு. ஆனால், புத்தகக் கண்காட்சிகளில் சந்திக்கும் இளைஞர்கள் புத்தகம் தேர்ந்து வாங்குவது உற்சாகமூட்டுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடனில் நான் எழுதிய தொடர் ‘தீதும் நன்றும்’ புத்தகமாக ஏழாம் பதிப்பு ஓடுகிறது. பள்ளிக் குழந்தைகளிடம் இருந்து வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் பணியை நாம் தொடங்க வேண்டும்!”
 – தீதும் நன்றும் பேசலாம்..
படங்கள்: ரா.சதானந்த்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், விகடன் கதைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to விகடன் மேடை – வாசகர் கேள்விகள்… நாஞ்சில் நாடன் பதில்கள்- அனைத்தும்

  1. yarlpavanan சொல்கிறார்:

    பயனுள்ள தகவல்

  2. Arun சொல்கிறார்:

    ஆனால் நமக்கென்ன, மயிரே போச்சு. சினிமாவுக்கும் சீரியலுக்கும் நேரமாச்சு!” அய்யா! நான் ஏன் அவர்களை பற்றி கவலை பட வேண்டும் ? நம் தமிழ் தலைவர்கள் அதித கவலையின் மொண்ணை அறிவுரைகளை கேட்டு விடுதலை புலிகள் செயல் பட்டன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s