அஃகம் சுருக்கேல்

Screen Shot 2014-03-19 at 6.50.23 pm
நாஞ்சில்நாடன்
ஔவை எனும் தமிழ்க் கிழவி, ‘அறம் செய விரும்பு’ தொடங்கி ‘ஓரம் சொல்லேல்’ ஈறாக ஆத்திச்சூடி எழுதுகிறார்.
இந்த ஔவையார் புற நானூறு முதலாம் சங்கப்பாடல்களில் இடம்பெற்ற ஔவையார் அன்று.
சங்க கால ஔவை பாடிய பாடல்கள் மொத்தம் 59.
அவரால் பாடப்பெற்றோர் 17 மன்னர்களும் மற்றவர்களும்.
சேரமான் மாரி வெண்கோ, பசும்பூட் பொறையன், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கைவண் கிள்ளி, பாண்டியன் கானப்போர் தந்த உக்கிரப் பெருவழுதி, அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமான் அஞ்சி மகன் பொக்குட்டு எழுனி, எழுனி, தொண்டைமான், நாஞ்சில் வள்ளுவன், பாரி, முடியன், அதியர், கோசர், மழவர், வெள்ளிவீதி, பரணர்.
பரணர் போல சங்க புலத்தினுள் வெள்ளிவீதியார் புகழ் பெற்ற புலவர். பெண்பாலர்.
அவர் எழுதிய பாடல்கள்,
அக நானூறு – 2
குறுந்தொகை – 8
நற்றினை – 3
எனப் பதின்மூன்று. ஔவை எனும் பெண்பால் புலவர் மற்றொரு பெண்பால் புலவரான வெள்ளிவீதியாரைப் பாடினார் என்பது இன்றைய இலக்கியச் சூழலில் வியப்பளிப்பது.
ஆத்திச்சுடி எழுதிய ஔவைப் பிற்காலத்தவர். கம்பர் முதலாய் புலவர் பெருமக்கள் வாழ்ந்த காலத்துப் புலவர் இவர் என நம்பப்படுகிறார். ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை, பந்தனந்தாதி எனும் நூல்களும் பல தனிப்பாடல்களும் இந்த ஔவைக் கணக்கில் சேரும்.
இவருக்குப் பின்னர் இன்னுமொரு ஔவை இருந்திருப்பதாகத் தெரிகிறது.
ஆத்திச் சூடி மொத்தம் 108 நூற்பாக்கள், அதாவது சூத்திரங்கள். அதென்ன கணக்கு நூற்றெட்டு?
பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் உயிரேறிய க், ச், த், ந், ப், ம், வ், ய், ஞ் எனும் ஒன்பது மெய்யெழுத்துக்களும் மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்களாம், என்கிறார் யாழ்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர், தமது ‘இலக்கண வினா-விடை’ எனும் நூலில். அவர் தரும் எடுத்துக்காட்டுகள்:
அணி, ஆடை, இலை, ஈரல், உரல், ஊர்தி, எழு, ஏணி, ஐயம், ஒளி, ஓடு, ஔவை,
கரு, சரி, தயை, நன்மை, பந்து, மணி, வயல், யமன், ஞமலி
12 x 9 =108 என்பது ஔவையின் கணக்கா என்றால் இல்லை. மேற்சொன்ன ஒழுங்கில் எல்லா எழுத்துக்களுக்கும் ஆத்திச்சூடி எழுதப்படவில்லை. ஆத்திச்சூடி 108 என்றாலும், நூற்பாக்களின் மொழி முதலாக, ஔவை பயன்படுத்திய எழுத்துக்கள்,
அ -6, ஆ – 1, இ -6, ஈ -1, உ -2, ஊ -2, எ -1, ஏ – 1, ஐ – 1, ஒ -2, ஓ -2, ஔ -1 என 26. மேலும், க வரிசை -12, ச – வரிசை -12, த வரிசை -12, ந வரிசை -12, ப வரிசை – 12, ம-வரிசை -12, வ-வரிசை -8, ஞ வரிசை 1 என 81.
ய-வரிசை பயன்படுத்தப்படவில்லை. ஆனால், இலக்கண வினா-விடை குறிப்பிடாத ங-வரிசை -1 ஆக 108 நூற்பாக்கள்.
ஆத்திச்சூடியின் சிறப்பு சின்னன்சிறு நூற்பாக்களால் ஆன நூல் என்பது. சூத்திரங்கள் போன்றவை. இந்நூலுக்கு உரை விளக்கம் எழுதிய நாவலர் பண்டியத ந.மு.வேங்கடசாமி நாட்டார், இது போன்ற நூல் எழுத பெருங்கருணையும் பேரறிவும் வேண்டும் என்கிறார்.
‘மன்னனில் கற்றோன் சிறப்புடையன்’ என்று சொல்லும் துணிச்சலும் கொண்டவர் ஔவை. 2009 – ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது, இலக்கியத்துக்கானது, வாங்கப் போய் வரிசையில் நின்றோம் நானும் சா.கந்தசாமியும், 2011 -ஆம் ஆண்டின் முற்பகுதியில். மாமன்னர் மேடையில் வீற்றிருக்க, எங்களை யாரென்றே அறியாத அதிகாரிகள், ‘விலையில்லா வேட்டி சட்டை’ வாங்க வந்தவர்களைப் போல, முதுகில் கைவைத்துத் தள்ளினார்கள். தெரிந்திருந்தும் ஏனங்கே போனாய் என்பீர்கள். பரிசில் வாழ்க்கைதானே புலவர் தொழில்.
ஆத்திச்சூடியின் பல நூற்பாக்கள், என்னை இளம் பருவத்தில் இருந்தே கவர்ந்தவை. அவற்றுள் ஒன்று, 31-வது நூற்பா, ‘அனந்தல் ஆடேல்’. அனந்தல் எனும் சொல்லுக்கு அகராதி உறக்கம் என்று பொருள் தரும். இன்னொரு பொருள் மயக்கம். மூன்றாவது பொருள் மந்த ஒலி. ஆண்டால் திருப்பாவையின் ஒன்பதாவது பாடலில், ‘என் மகள் தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?’ என்கிறார். இங்கு அனந்தல் என்பதற்கு ஆழ்ந்த உறக்கம் என்பது பொருள். ‘அனந்தல் ஆடேல்’ என்றால் உறக்கத்தை மிகுதியாகக் கொள்ளாதே என்று பொருள் தருகிறார்கள்.
இனியொன்று, 54-வது நூற்பா. ‘தக்கோன் எனத் திரி’. தக்கவன் என்று பெரியோர்கள் உன்னைப் புகழும்படி நடந்து கொள். தக்கோன் என வாழ்த்து செம்மாந்து நட. இதை இளைஞர்கள் கருத்தில் கொள்வது நல்லது.
‘தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்’
என்பது நடுவு நிலைமை அதிகாரக் குறள், 114.
‘ஒருவர் தகுதி உடையார் அல்லது தகுதி இல்லார் என்பது அவருடைய புகழால் அல்லது இகழால் அறியப்படும்’ என்பது வ.உ.சி உரை.
23-வது நூற்பா, ‘மன்று பறித்து உண்ணேல்’. நீதிமன்றத்தில் இருந்துகொண்டு, தீர்ப்புக்கு என வழக்குடன் வரும் குடிமக்களின் பொருளைக் கவர்ந்துகொண்டு வாழாதே என்பது பொருள். அஃதாவது, நீதித்துறைக்காரர்கள் – அமைச்சர், அதிகாரிகள், நீதிபதிகள், ஊழியர்கள் எவரும் கையூட்டு வாங்கக்கூடாது என்கிறார் ஔவை. இன்று அதைக் கேட்டால் அம்மணங்குண்டியோடு ஆற்றில் போய் விழலாம் என்று தோன்றும்.
தொன்மை மறவேல்.
நன்றி மறவேல்.
அறனை மறவேல்.
சீர்மை மறவேல்.
தோற்பன தொடரேல்.
போர்த் தொழில் புரியேல்.
பூமி திருத்தி உண்.
சூது விரும்பேல்.
என்பன, மாதிரிக்காக சில.
ஆனால், இந்த கட்டுரையின் நோக்கம், தமிழின் புறக்கணிக்கப்பட்ட இரண்டு உயிரெழுத்துக்களில் ஒன்றான ஃ எனும் எழுத்து பற்றியது. மற்றொன்று ஔ. அதனைப் பிறிதோர் சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.
அஃகம் என்று அழைக்கப்படும் ஃ ஆய்த எழுத்து எனப்படும். முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, ஆயுத எழுத்து என்பது சரியல்ல, ஆய்த எழுத்து என்பதே நேர். அறியாமைக் காரணமாக நானே ஆயுத எழுத்து என்று பயன்படுத்தியதை எண்ணி, இன்று வெட்கப்படுகிறேன்.
பள்ளி நாட்களில் இந்த எழுத்தை நாங்கள் அடுப்பாங்கட்டி எழுத்து என்போம், அதன் வடிவம் கருதி.
வெண்பாப் பாட்டியல் என்னும் இலக்கண நூல், குறில் எழுத்துக்களை ஆண் என்றும், நெடில் எழுத்துக்களைப் பெண் என்றும் ஒற்று மற்றும் ஆய்த எழுத்துக்களைப் பேடு என்றும் வகைப்படுத்தியுள்ளதையும் பன்னிரு பாட்டியல், இலக்கண விளக்கம் என்னும் நூல்களும் அவ்வாறே பேசுகின்றன என்றும் எழுதுகிறார் முனைவர் வெ.முனீஷ், தனது அண்மை நூலான ‘காலந்தோறும் தமிழ் இலக்கணங்களில் மூன்றாம் பாலினம்’ எனும் நூலில்.
தமிழில் உயிர் எழுத்துகள் 12, மெய் எழுத்துகள் 18, உயிர் மெய் எழுத்துகள் 216, ஆய்த எழுத்து ஒன்று ஆக மொத்தம் 247 என்பதறிவோம் நாம். ஒலி அடிப்படையில் இவற்றுள் குறில் யாவும் ஒரு மாத்திரை, நெடில் யாவும் இரு மாத்திரைகள், மெய் அல்லது உடம்பு எழுத்துகள் அரை மாத்திரை எனவும் காலம் வகுத்துள்ளனர்.
ஒற்றெழுத்து, மெய்யெழுத்து அல்லது உடம்பெழுத்து பதினெட்டும் ஆய்த எழுத்து ஒன்றுமாகப் பத்தொன்பது எழுத்துக்களையும் அலி எழுத்துகள் என்றார்கள் பண்டைய இலக்கண ஆசிரியர்கள். முந்தைத் தமிழ் இலக்கியங்கள் கையாண்ட அலி அல்லது பேடு எனும் சொல் மீது காழ்ப்பு ஏற்றிப் பார்க்க வேண்டியதில்லை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கை, திருநம்பி எனும் சொற்கள் புழங்காத காலத்துச் சொற்கள் இவை.
திருவெம்பாவையில் பதினெட்டாவது பாடலில் ‘பெண்ணாகி ஆணாய் அலியாய்’ என்கிறார் மாணிக்கவாசகர். அலி, பேடு என்று அன்று பயன்படுத்திய சொற்கள் வசவு எனக் காண வேண்டியதில்லை. அது போன்றே கூன், குருடு, செவிடு, ஊமை, நொண்டி எனும் சொற்கள் இன்று வசவுச் சொற்களாயும் மாற்றுத் திறனாளி எனும் சொல் காருண்ய சொல்லாகவும் ஆளப்படுகிறது.
அலி எழுத்துக்கள் என்று அறியப்பட்ட பத்தொன்பது எழுத்துக்களில் ஆய்த எழுத்தான ஃ பற்றி மட்டுமே நமது ஆய்வு ஈண்டு.
சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகன், ஃ எனும் எழுத்துக்கு k எனும் ஒலிக்குறிப்பு எழுதுகிறது. அவ்வெழுத்து பற்றிய விளக்கம் : the 13th letter of Tamil alphabet occurring only after a short initial letter and before a hard consonant as அஃகம், and pronounced sometimes as vowel and sometimes as a consonant; ஆய்தவெழுத்து.
தமிழின் பதின்மூன்றாவது அகரவரிசை எழுத்தான ஃ, எப்போதும் குறில் அடுத்தே வரும். வல்லெழுத்துக்கு முன்பாக வரும். சில சமயம் உயிரெழுத்தாகவும் சில சமயம் மெய்யெழுத்தாகவும் உச்சரிக்கப் பெறும்.
தமிழ் லெக்சிகனை வைத்து கணக்கெடுத்துப் பார்த்ததில் ஃ பயன்படுத்தப்பட்ட சொற்கள் 45. Errors and omissions expected. அதாவது எனது கணக்கீட்டில் பிழைகள் இருக்க வாய்ப்பு உண்டு.இந்த 45 சொற்களில் மிக குறைவான சந்தர்பங்களில் ஏழு அல்லது எட்டு சொற்களையே செந்தமிழில் பயன்படுத்துகிறோம். நாற்பத்தைந்தே சொற்கள் என்பதால், பட்டியல் இடுவது எளிது என்பதனால், ஒரு பதிவு கருதி அவற்றைக் கீழே தருகிறேன்.
1. அஃகடி – அக்கடி, துன்பம்
2. அஃகம் – தானியம், நீரூற்று, முறைமை
3. அஃகு – தகுதி, ஊறு நீர்
4. அஃகரம் – வெள்ளெருக்கு
5. அஃகான் – The letter of அ. அகரம்
6. அஃகுதல் – அளவில் குறுகுதல், சுருங்குதல், மனம் குன்றுதல், நுண்ணிதாதல், கழிந்து போதல், குவிதல் – ‘ஆம்பல் அஃகுதலும்’
7. அஃகுவஃகெனல் – Expression of restless wanderings. அஃகு அஃகு எனல்.
8. அஃகுல்லி – உக்காரி எனும் சிற்றுண்டி (பிங்கல நிகண்டு)
9. அஃகேனம் – The letter ஃ. ஆய்த எழுத்து
10. அஃதான்று – Besides
11. அஃது – அது
12. அஃதே – Indeed, Alright. அப்படியே.
13. அஃதை – சோழன் ஒருவனின் மகள்
14. அஃபோதம் -சகோலப் பறவை (பிங்கல நிகண்டு)
15. அஃறிணை – அல் திணை
16. இஃது – இது
17. எஃகம் – எஃகு, எஃகாயுதம், வாள், வேல், சக்கரம், பிண்டி பாலம் (Javelin) , சூலம் (Trident)
18. எஃகுதல்   – To pull with fingers, as cotton. பன்னுதல், எஃகின பஞ்சு போல, அராய்தல், எட்டுதல். அவனை எஃகிப் பிடி. நெகிழ்தல், அவிழ்தல் வளைவு நிமிர்தல், To Spring back ஏறுதல்
19. எஃகு  – கூர்மை, மதிநுட்பம், உருக்கு (steel), ஆயுதம், வேல்.
20. எஃகு கோல் – பஞ்சு அடிக்கும் வில்.
21. எஃகு செவி – நுனித்து அறியும் செவி.
22. எஃகு படுதல் – இளகின நிலை அடைதல்
23. எஃகுறுதல் – அறுக்கப்படுதல், பன்னப்படுதல்
24. ஒஃகுதல் – பின் வாங்குதல்
25. காஃசு – ¼ பலம்
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும் [குறள் – 1037]
26. கஃறெனல் – கறுத்துள்ளமை காட்டும் குறிப்பு
An expression signifying blackness
27. சஃகுல்லி – சிற்றுண்டி வகை (பிங்கலம்)
28. சிஃகுவீகம் – நாக்கை உள்ளே இழுக்கும் ஜன்னி
29. சுஃறெனல் – Expression of rusting – as of Palmyra leaves, spreading fire, ஒலிக்குறிப்பு
30. சுஃஃறெனல்              “       “         “         “         “         “            “            “             “            “            “             “
31. சுஃறு                             “       “         “         “         “         “            “            “             “            “            “             “
32. பஃதி – பகுதி
33. பஃது – பத்து
34. பஃபத்து – பத்துப் பத்து
35. பஃறி – படகு, மரக்கலம், ரேவதி நட்சத்திரம்
36. பஃறியர் – நெய்தல் நில மக்கள் (சூடாமணி நிகண்டு)
37. பஃறுளி– பல் துளி – பஃறுளி ஆறு.
38. பஃறொடை – பாவினம்
39. பஃறொடை வெண்பா – நாலடிக்கு அதிகமான வெண்பா
40. மஃகான் – மகர ஒற்று
41. வெஃகு – பேராசை
42. வெஃகல் – பேராசை
43. வெஃகா – வேகவதி நதி, திருமால் திருப்பதி.
44. வெஃகாமை – அவாவின்மை, பிறர் பொருளை வெளவக் கருதாமை, வெறுப்பு. திருக்குறளின் 18-ஆம் அதிகாரம்
45. வெஃகுதல் – மிக விரும்புதல், பிறர் பொருளை இச்சித்தல்
ஒளவையார் ஆத்திசூடி எழுதுங்காலை, பல எழுத்துகளைத் தாண்டிச் சென்றாலும், மறக்காமல் ஃ எழுத்துக்கு ஒரு சூத்திரம் எழுதுகிறார். 13- ஆவது சொற்றொடர் அது, அஃகம் சுருக்கேல்!
அஃகம் சுருக்கேல் என்பதன் பொருள், நெல் முதலான தானியங்களைக் குறைத்து விற்காதே! அஃதாவது, மிகுந்த லாபத்துக்கு ஆசைப்பட்டு, தானியங்களை அளவு குறைவாக விற்காதே`
பழைய சினிமா  பாடல் ஒன்றுண்டு.
`பக்கா படிக்கு முக்கா படியை அளக்கிறான்.
அந்த பாழாப் போனவன்
நம்மளை பாத்து மொறக்கிறான்.`.
பக்கா படிக்கு முக்காப் படி அளப்பது தான் அஃகம் சுருக்குதல்.
தானியம் சுருக்குதல் என்று சொல்லலாம் ஔவைக்கு. அளவு சுருக்கேல் என்று கூட சொல்லலாம்.ஆனால் ஃ எனும் எழுத்தை இழந்து விட்டு ஒதுக்கி விட்டு போக மனமில்லை. மேலும் தானியம் என்று பொருள் தரும் அஃகம் என்ற சொல்லுண்டு அவர் கைவசம். எனவே அஃம் சுருக்கேல்!
எங்களூரில் பொலி அளக்க ஒரு மரக்கால் உண்டு. அறுவடையாகிச் சூடடித்து பொலி விட்ட நெல்லை அளப்பதற்கான மரக்கால். திருத்தமாக  ஒரு மரக்கால் என்பது எட்டு நாழி. நெல்லளவு மரக்கால் என்பது, விலைக்கு நெல் வாஙக வரும் வியாபாரி கொண்டு வரும் மரக்கால். மரக்காலுக்கு எழரை நாழி இருக்கும். மூன்றாவது கொத்தளவு மரக்கால். அதாவது அறுத்தவருக்கு, சூடடித்து கொடுத்தவருக்கு கொத்து அளந்து கொடுக்கும் மரக்கால். இந்த மரக்காலில் ஆறரை நாழியே கொள்ளும். இது நிலக்கிழார், வேலை பார்க்கிறவனுக்கு வைக்கும் சூத்திரம். அன்று இது பற்றி கேள்வி கேட்க ஏலாது. சூடடிக்கார கூட்டத்தில் பிணையல் அடிக்கப் போய், கொத்து நெல்லைக் கொத்து மரக்காலுக்கு வாங்கி வந்தது நினைவிருக்கிறது.
அதாவது வீட்டுக்கு, பத்தயப் புரைக்கு போகும் நெல்லை அளக்க, மரக்காலுக்கு எட்டு நாழி. கூலிக்கு என வெளியே போகும் நெல்லை அளக்க மரக்காலுக்கு ஆரறை நாழி. இதுதான் ஔவை பேசும் அஃகம் சுருக்குதல்.
அஃகம் என்பது தானியம் என்பது பொதுப் பொருளே ஆனாலும், அதை ஒரு குறியீடாக நாம் காணவியலும்.
ஒரு மாத்திரை வாங்க போகிறோம். அது மூன்று மருந்துகளின் கூட்டு என்றும் , பெயர் ABC என்றும் வைத்து கொள்வோம்.அதில் A-200 மில்லிகிராம், B-200 மில்லிகிராம், C-100 மில்லிகிராம் என்றும் வைத்து கொள்வோம். இதில் C மிக விலை உயர்ந்த இரசாயனம் என்று கொள்வோம். தயாரிப்பாளர் A–225, B-200,C-75 என்று கலப்பாரேயானால், முதல் கூட்டை விடவும் இரண்டாம் கூட்டின் தயாரிப்பு செலவு குறையும்.இது அஃகம் சுருக்குதல், செய்யாதே என்கிறாள் ஔவை. செய்வார்களா அப்படி என்று கேட்பார்கள். செய்கிறார்கள் என்பேன் நான்!
நாம் அணியும் சட்டை துணியை எடுத்து கொள்வோம். பஞ்சு நூல் 50 சதவீதம், விஸ்கோஸ் நூல் 50 சதவீதம் என்று அச்சிட்டிருப்பார்கள்.அவற்றுள் பஞ்சு விலை அதிகம், விஸ்கோஸ் விலை குறைவு என்று கொள்வோம். பஞ்சு நூல் 40, விஸ்கோஸ் நூல் 60 சதவீததில் கலந்து நெய்யப்பட்டிருந்தால், நமக்கு என்ன தெரியும்? பரிசோதனை சாலைக்கு அனுப்பினால் தெரியும். நம்மால் அனுப்ப இயலுமா? இது கண்ணுக்கு தெரியாத சுரண்டல். இதை தான் அஃகம் சுருக்குதல் என்கிறேன்.
ஒரு மீட்டர் எனில் 100 செ.மீ இரண்டு மீட்டர் துணி கிழிக்கச் சொன்னால் 190 செ.மீ கிழித்தால் அது அஃகம் சுருக்குதல்.
கத்திரிக்காய் வாங்க போகிறோம். கிலோ முப்பது ரூபாய் என்கிறார். நாம் பேரம் பேசவில்லை. அவர் விற்கும் விலை. நாம் வாங்கும் விலை. ஒரு கிலோ கத்திரிக்காயில் கால் கிலோ சொத்தை எனில் அது தரம் பற்றிய கேள்வி. ஆனால் கிலோவுக்கு 900 கிராம் தான் நிறுக்கிறார் என்றால், அது அஃகம் சுருக்குதல்.
எடையை குறைக்க மூன்று வித்தைகள் செய்வார்கள். துலாக்கோலின் நீளம் சரியாக பகுக்கபடாமல், கத்திரிக்காய் தட்டின் பக்கம் நீளம் அதிகமாக இருக்கும். முதலில் அந்த தட்டு தாழும்படி நிறைய காய்களை போட்டுவிட்டால், பின்பு எவ்வளவு எடுத்தாலும் தட்டு மேலே வராது. வியாபாரி போதும் என்று தோன்றும் வரை எடுக்கலாம். இரண்டாவது நிறுக்கும் எடைகல்லே 900 கிராமுக்கு சீவி எடுக்கப் பட்டிருக்கும். 1 கிலோ=900 கிராம். ½ கிலோ – 450 கிராம் என்று   தயாரிக்கும் தொழிற்சாலைகள் உண்டு நம் நாட்டில்.அதை கொண்டு நடந்து விற்பவரும் உண்டு. விற்பவர் உண்டெனில் வாங்குபவர் இருப்பார் தானே!
நிறுத்தல் அளவு, முகத்தல் அளவு, நீட்டல் அளவுகளைச் சரிபார்க்க சட்டங்களும், அலுவலர்களும் சான்றிதழ்களும் உண்டு. ஆனால் பாதுகாவலரே கூட்டு களவாணிகளாகவும் நடமாடும் நாடு இது.
விற்பது-வாங்குவது என்பது தானியங்கள், பருப்புகள், காய்,கனி,கந்தமூலம் என்பது மட்டுமல்ல.ஔவையை விரிவானதோர் பொருளில் காணல் வேண்டும். எந்தச் சேவையையும் அதன் உள்ளே அடக்கலாம்.
எத்துறையாக இருந்தாலும் ஐம்பதினாயிரம் மாத ஊதியமும் வாங்கி ஒன்றரை இலட்சம் மாதம் குடிப்பறியும் செய்து, முப்பதினாயிரம் பெறுமதிப்புள்ள சேவையே வழங்குபவருக்கும் பொருந்தும். அஃகம் சுருக்கேல் என்பது. நூறு ரூபாய் அடக்கவிலை வரும் இனிப்பை நூற்றைம்பது விற்பவருக்கும் பொருந்தும். கொன்றால் பாவம் தின்றால் தீரும் என்பார்கள் கிராமத்தில். இது அதுவல்ல. ஏமாற்று, வழிப்பறி, புதைக்கக் கொடுத்த பிள்ளையில் பாதிப் பிள்ளையை வீட்டுக்கு எடுத்துப் போவது. சிலர் நினைக்கிறார்கள் ஊசிப்போவதற்கு முன் தினம் அதை நாய்க்கு அல்லது நாயினும் கடைப்பட்ட இந்தியனுக்கு வீசினால் பாவக்கணக்கில் செலவு புண்ணியக் கணக்கில் வரவு என்று.
நான் சொல்லவருவது, பருப் பொருட்கள் என்றில்லாமல், எந்த சேவையானாலும் மருத்துவம் – நீதி – உபாத்திமை – எதுவானாலும் வாங்கும் ஊதியம் அல்லது கட்டணத்துக்குக் குறைவான சேவை அஃகம் சுருக்குதல்தான்.
உங்களுக்குத் தோன்றுகிறதா அரசாங்கத்தால் நமக்கு வழங்கப்படும் சேவை எதுவும் குறைவற்று நடக்கிறது என்று. தபால், இரயில், சுகாதாரம், மருத்துவம் அஃகம் சுருங்காத சேவை தருகிறதா? பேருந்துகள், இரயில் பெட்டிகள், பொதுக் கழிப்பிடங்கள் சரியாகக் கழுவப்படுகின்றனவா? வாங்கும் சம்பளத்துக்கு ஆசிரியர்கள் பயிற்றுவிக்கிறார்களா?
எங்களுரில் ஒரு பழமொழி உண்டு ‘குறை மரக்கால் அளக்காதே!’ என்று. மரக்காலின், நாழியின் உள்ளே புளி அடைத்து வைத்திருந்தால் எங்ஙனம் சரியாக அளப்பது?
தம்மைத் தாமே சுரண்டும், களவாடும், ஏமாற்றும், அறுத்துத் தின்னும் சமூகமாக நாம் மாறியாயிற்று. இன்று ஔவையின் ஆத்திச்சூடி வாசகம் ‘அஃகம் சுருக்கேல்’ நடைமுறை சாத்தியமா என்றுமக்குத் தோன்றக்கூடும். இஃதொன்றும் யாரும் யாருக்கும் செய்யும் சலுகையோ தயவோ இல்லை. உழைப்புக்கான ஊதியமும் விலைக்கான பொருளும் நமது உரிமை. இதைச்சொல்ல முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலோ, கலை இலக்கிய பெருமன்றத்திலோ அங்கமாக இருக்க வேண்டும் எனும் விதி இல்லை.
இன்று இவை சாத்தியமா எனக் கேட்டால், வழிப்பறியும், கொள்ளையும், கொலையும், வன்கலவியும் நடக்காமல் இருப்பது சாத்தியமா எனத் திருப்பிக் கேட்பேன்.
ஔவையார் சொல்கிறார் – ‘கெடுப்பது ஒழி.’
– See more at: http://solvanam.com/

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அஃகம் சுருக்கேல்

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான பதிவு.
    நன்றி ஐயா.

  2. NARENDRAN RB சொல்கிறார்:

    First class பதிவு, ஐயா

NARENDRAN RB க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s