ஔவியம் பேசேல் – 2.

nanjil3நாஞ்சில் நாடன்
(முன் பகுதி: ஔவியம் பேசேல்-1 )
இனி ‘கௌ’வுக்கு அடுத்த ஔகார உயிர்மெய் ‘ஙௌ’ பார்க்கலாம், என்றால் ‘ங’கர வரிசையில் லெக்சிகன் ஐந்து எழுத்துக்களே பதிவு செய்துள்ளது. ஙௌ எழுத்தில் பதிவு இல்லை. அடுத்த எழுத்தான சகர வரிசையில், சௌ பற்றிய பதிவுகள் 82. அவற்றுள் சில:
  1. சௌ – சௌபாக்கியவதி என்பதைச் சொல்லும் முதலெழுத்துக் குறிப்பு
  2. சௌக்கம் – பண்டங்களின் மலிவு
  3. சௌக்கிதார் – பாராக்காரன்
  4. சௌக்கியம் – நலம்
  5. சௌகந்தி – மாணிக்க வகை, கந்தக பாஷாணம்
  6. சௌகந்திகம் – வெள்ளாம்பல்
  7. சௌகம் – நான்கு
  8. சௌகரியம் – வசதி, மலிவு
  9. சௌசன்னியம் – அன்னியோன்னியம்
  10. சௌண்டி – திப்பிலி
  11. சௌண்டிகன் – கள் விற்பவன்
  12. சௌத்தி – சக்களத்தி
  13. சௌதாயம் – வெகுமதிப் பொருள்
  14. சௌந்தம் – கனிம நஞ்சு
  15. சௌந்தரம் – சௌந்தரியம்
  16. சௌந்தர முகம் – முகக்குறிப்பு பதினான்கினுள் மிக்க மகிழ்ச்சியைக் காட்டும் அபிநயம்
  17. சௌந்தரியம் – அழகு
  18. சௌந்தர்ய லகரி – ஆதிசங்கரர் இயற்றிய, வீரைக் கவிராச பண்டிதர் மொழி பெயர்த்த செய்யுள் நூல்
  19. சௌந்தர்யவதி – அழகுள்ளவள்
  20. சௌப்திகம் – இரவில் துயில்வோரை எதிர்த்துக் கொல்லுதல்
  21. சௌபஞ்சனம் – நீர் முருங்கை
  22. சௌபாக்கியம் – மிகுந்த பாக்கியம், 108 உபநிடதங்களில் ஒன்று
  23. சௌபாக்கிய ரேகை – கையில் ஓடும் ஒரு ரேகை
  24. சௌபாக்கியவதி – மகளிருக்கான மங்கலச் சொல்
  25. சௌபானம் – படிக்கட்டு
  26. சௌமன் – சந்திரன் மகன், புதன்
  27. சௌமிய – 60 ஆண்டுகளில் 43-வது ஆண்டு
  28. சௌமியம் – சாந்தம், அழகு
  29. சௌமிய வாரம் – புதன்கிழமை
  30. சௌமியன் – சாந்தமுள்ளவன், புதன், அருகன்
  31. சௌரம் – 18 உபபுராணங்களில் ஒன்று, சூரியனை வழிபடும் மதம், மயிர் மழித்தல்
  32. சௌராட்டிரம் – ஒரு பண் வகை. சௌராஷ்ட்ரம் – கத்தியவார் தேசம்
  33. சௌரி – சனி, யமன், கர்ணன், யமுனை நதி, திருமால், சவுரி
  34. சௌரியம் – களவு, வீரம், சௌகரியம்
  35. சௌரு – கொச்சை நாற்றத்தோடு கூடிய சுவை – துவர்ப்பு
  36. சௌல் – மகிழ்ச்சி, இடம்பம்
  37. சௌலப்பியம் – சுலபமான தன்மை
  38. சௌவர்ச்சலம் – உப்பு வகை உவர் நீர்
  39. சௌவீரம் – 32 வைப்பு நஞ்சுகளில் ஒன்று
  40. சௌஸ்தி – தருமக் கொடை
  41. சௌபன்னம் – சுக்கு
ஞ கர வரிசையில், ட கர வரிசையில், ண கர வரிசையில், குறிப்பாகச் சொல்ல ஏதுமில்லை. தகர வரிசையில், ‘தௌ’வில் தொடங்கும் பதிவுகள் 26. அவற்றுள் சில.
  1. தௌகித்திரன் – மகளுக்கு மகன்
  2. தௌகித்திரி – மகளுக்கு மகள்
  3. தௌசருமியம் – சுன்னத்து
  4. தௌசாரம் – குளிர், பனி (யாழ்ப்பாண அகராதி)
  5. தௌத்தியம் – தூது, ஒருத்தியைக் கூட்டிக் கொடுத்தல், pimping
  6. தௌசிலம் – பளிங்கு (யாழ்ப்பாண அகராதி)
  7. தௌதம் – துவைத்த ஆடை, குளித்தல், வெள்ளி
  8. தௌதிகம் – முத்து
  9. தௌமியன் – பாண்டவர் புரோகிதன்
  10. தௌர்ப்பல்லியம் – பலவீனம்
  11. தௌரிதம் – துரதம் (யாழ்ப்பாண அகராதி)
  12. தௌல் – மதிப்பீடு
  13. தௌலத் – தவுலத்து (அரபு)
  14. தௌலேயம் – ஆமை
  15. தௌவல் – கேடு
  16. தௌவாரிகன் – வாயிலோன்
  17. தௌவை – தவ்வை, அக்கா, மூதேவி
நகர வரிசையில், ‘நௌ’ எழுத்தில் எட்டுப் பதிவுகள். அவற்றுள் சில.
  1. நௌ – மரக்கலம்
  2. நௌகா – மரக்கலம்
  3. நௌவி – நவ்வி, மான்
பகர வரிசையில், பௌ எழுத்துக்கு 85 பதிவுகள் லெக்சிகனில். சுவாரசியமான சில.
  1. பௌட்கரம் – சைவ உப ஆகமங்களில் ஒன்று
  2. பௌட்டிகம் – பூமியில் விழுமுன் தாமரை இலைகளில் ஏந்திய பசுஞ்சாணம்
  3. பௌடிகம் – ரிக் வேதம்
  4. பௌண்டிரம் – ஒரு தேசம்
  5. பௌத்தம் – புத்த மதம்
  6. பௌத்தி – மரணம்
  7. பௌத்திரம் – மூலநோய், பவித்திரம்
  8. பௌத்திரன் – மகனின் மகன், பவித்திரன்
  9. பௌத்திரி – மகனின் மகள்
  10. பௌதிகம் – கரு நெல்லி
  11. பௌதிகன் – சிவன்
  12. பௌமி – சீதை
  13. பௌர்ணமி, பௌரணை, பௌர்ணமை, பௌர்ணிமி – நிறைமதி நாள்
  14. பௌரகம் – புறநகர்ச் சோலை
  15. பௌரணை – மரக்கன்று, கடல்
  16. பௌரன் – நகரவாசி
  17. பௌராணிகம் – பௌராணிக மதம்
  18. பௌரி – பெரும் பண் வகை (பிங்கல நிகண்டு)
  19. பௌரிகன் – குபேரன்
  20. பௌருஷம் – ஆண் தகைமை
  21. பௌலுருவி – புல்லுருவி
  22. பௌலஸ்தி – சூர்ப்பணகை
  23. பௌலஸ்தியன் – இராவணன், குபேரன்
  24. பௌழியன் – பூழியன் என்னும் சேரமன்னன், கடவுள்
  25. பௌளி – இராக வகை
  26. பௌன் – பவுன்
  27. பௌ கண்டம் – ஆறு முதல் பத்து வயது வரையான குழந்தைப் பருவம்.
மகர வரிசையில், ‘மௌ’ எழுத்துப் பதிவுகள் நாற்பத்தொன்று. அவற்றுள் தேர்ந்தெடுத்த சில.
  1. மௌகூப் – நிறுத்தப்பட்டது (உருது)
  2. மௌசானி – பெரும் பண்கள் பதினாறில் ஒன்று
  3. மௌசு – கிராக்கி (உருது), மிகு பிரியம், கவர்ச்சி, ஆடம்பரம்
  4. மௌட்டியம் – அறியாமை
  5. மௌட்டியன் – முட்டாள்
  6. மௌட்டை – முஷ்டிக் குத்து
  7. மௌடி – மகுடி
  8. மௌண்டிதம் – ஓர் உபநிடதம்
  9. மௌண்டிதன் – தலை மழிக்கப்பட்டவன், முண்டிதன்
  10. மௌத்திகம் – முத்து
  11. மௌத்து – மரணம் (அரபு)
  12. மௌரியர் – ஒரு பேரரசு
  13. மௌல்வி – முகம்மதிய மத வித்வான் (அரபு)
  14. மௌலன் – நற்குணத்தான் (யாழ்ப்பாண அகராதி)
  15. மௌலானா – மௌல்வி
  16. மௌலி – சடை முடி, மயிர் முடி, மணிமுடி, தலை, கோபுரச் சிகரம். ‘தாரணி மௌலி பத்தும்…’ – கம்பன்
  17. மௌவல் – காட்டு மல்லிகை, முல்லை, தாமரை
  18. மௌவலாரம் – சலங்கைச் சிலம்பு
  19. மௌவழகன் – குதிரை வகை
  20. மௌவை – ஔவை, தாய்
  21. மௌனம் – பேசாமை
  22. மௌனி – மௌன விரதம் பூண்டவன். மூத்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியரின் புனைப் பெயர்
‘ய’ வரிசையில் ‘யௌ’ பற்றிய பதிவுகள் பன்னிரண்டு. அவற்றுள் சில.
  1. யௌகிகம் – பகுபதம்
  2. யௌதம் – மகளிர் கூட்டம்
  3. யௌவன கண்டகம் – முகப்பரு (யாழ்ப்பாண அகராதி)
  4. யௌவன தசை – வாலிபப் பிராயம்
  5. யௌவனம் – இளமை, அழகு, களிப்பு
  6. யௌவன லக்கணம் – அழகு, கொங்கை
  7. யௌவனிகை – பதினாறு முதல் ஐம்பது வயது வரையுள்ள பெண்.
ர கர வரிசையில், ரௌ எழுத்தில் தொடங்கும் சொற்கள் ஐந்தேதான். அவற்றுள் நான்கு.
  1. ரௌத்திராகாரம் – பயங்கரத்தின் வடிவம்
  2. ரௌரவம் – ஒரு நகரம்
  3. ரௌத்திரி – ஆண்டு அறுபதினுள் 54-வது
  4. ரௌத்திர – நவ சக்திகளில் ஒன்று
ல கர வரிசையில் ‘லௌ’ எழுத்துப் பதிவுகள் பத்து. அவற்றுள் ஆறு.
  1. லௌகிக தந்திரம் – உலக வாழ்வில் சாமர்த்தியம்
  2. லௌகிக தர்மம் – உலகியல்
  3. லௌகிகம் – உலகியல்
  4. லௌகிகன் – உலகியல் வாதி
  5. லௌகீகம் – உலகிற்கு உரியது, உலகப் பற்றுடைமை, உத்தியோகம்
  6. லௌகீகன் – உலகப் பற்றுடையவன்
வகர வரிசையில் ‘வௌ’ எழுத்தின் பதிவுகள் எட்டு. அவற்றுள் ஆறு.
  1. வௌ – வௌவுதல், கைப்பற்றுதல்
  2. வௌவால் – Bat
  3. வௌவால் வலை – மீன் பிடிக்கும் வலை வரிசை
  4. வௌவுதல் – கைப்பற்றுதல், திருடுதல், கவர்தல்
  5. வௌவுலகம் – மரவகை
  6. வௌவால் – ஒரு மீன். இந்த மீனை வாவல் எனும் பெயரில் அறிவேன்
ழ வரிசையில், ள வரிசையில், ற வரிசையில், ன வரிசையில் ஔகாரம் ஏறிய பதிவுகள் இல்லை.
மேற்கண்ட பட்டியல் அலுப்பூட்டுவதாக இருக்கக் கூடும். எனினும் பல புதிய சொற்களை அறிந்து கொள்ள உதவியது. எழுத்துப் போலி மூலம் அசலை இழக்க நினைப்பதும் தற்பவம் எனும் இலக்கணம் மூலம் மொழிக்குள் ஏற்கனவே புகுந்து நடமாடும் சொற்களை மறக்க நினைப்பதும் நியாயம் தானா? தொல்காப்பியமும் பாட்டும் தொகையும் கீழ்க்கணக்கு நூல்களும் வள்ளுவமும் பெருங்காப்பியங்களும் பயன்படுத்திய சொற்களை இன்று திருத்தி எழுதுவது சாத்தியமா? திருத்தி எழுத ஒத்த புலமை உடையவர் தற்காலத்தில் வாழ்கிறார்களா? இல்லை பல்கலைக் கழகங்கள் பொறுப்பில் விட்டுவிடலாமா?
சங்க இலக்கியம் ஔகாரம் பயன்பட்ட பல சொற்களை ஆண்டிருக்கிறது.
கௌவை எனும் சொல் அலர் தூற்றுதல் எனும் பொருளில் சங்கம் ஆள்கிறது. அகநானூற்றின் 50-வது பாடல், நெய்தல் திணைப் பாடல், கருவூர்ப் பூதஞ்சாத்தனார் பாடியது:
‘கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி,
நெடு நீர் இருங் கழிக் கடுமீன் கலிப்பினும்
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்’
எனும் வரிகளில், கௌவை எனில் பழிச் சொல் அல்லது அலர் தூற்றுதல் என்று பொருள் சொல்கிறார்கள்.
குளிர்ந்த கடற்கரையை உடைய நம் தலைவன், முன்பு கடல் ஒலி அவிய, தோணி கடலில் செல்லாது ஒழிய, மிக்க நீரினை உடைய பெரிய கழியில் சுறா முதலியன செருக்கித் திரியினும், கொடிய வாயினை உடைய பெண்கள் அலர் தூற்றினாலும் பெருமை மிகு இழையினை உடைய நீண்ட தேர் தாழ்ந்து நிற்க, பகற்காலத்தும் நம்மிடத்து நின்று பிரியாதவனாக, அடுத்தடுத்து வருவான் என்று தோழி பாணனுக்குச் சொல்வதாகப் பொருள் வளர்ந்து நடக்கும் வரிகள்.
நற்றிணையில் ‘தௌவின’ எனும் சொல் இழந்தன எனும் பொருளில் கையாளப் படுகிறது. அம்மூவனார் பாடல், தலைவி தோழிக்கு உரைப்பது போன்று:
‘தோளும் அழியும், நாளும் சென்றன,
நீள் இடை அத்தம் நோக்கி, வான் அற்று
கண்ணும் காட்சி தௌவின’
என்பன பாடல் வரிகள். அத்தம் – வழி, வாள் – ஒலி, தௌவின – இழந்தன.
‘நௌவி’ எனும் சொல் மானின் வகை எனும் பொருளில் ஆளப்பட்டிருக்கிறது. ‘பெருங் கவின் பெற்ற சிறு தலை நௌவி’ என்பது மதுரைக் காஞ்சி. கவின் எனில் அழகு என்று பொருள்.
‘பௌவம்’ எனும் சொல் கடல் எனும் பொருளில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
‘தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு’
என்று கபிலர் பாடிய நற்றிணைப் பாடல் பேசுகிறது.
பாண்டியன் பல்யாக சாலை முது குடுமிப் பெருவழுதியைக் காரி கிழார் பாடுகிறார்:
‘வடா அது பனி படு நெடுவலை வடக்கும்,
தெனா அது உருகெழு குமரியின் தெற்கும்,
குணா அது கரையொரு தொட கடற் குணக்கும்,
குடா அது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்’
என்று எல்லைகளை வரையறுக்க. எளிய பொருள், வடக்கு இமயமலை, தெற்கே குமரிக்கடல், கிழக்கே ஆழ்கடல், மேற்கே பழமையான கடல் என்பதாகும்.
திரைப்பாடல் ஒன்றில் இன்று ஆம்பல், மௌவல் எனும் சொற்கள் ஆளப்பட்டுள்ளன. ஆம்பல் தெரியும், மௌவல் என்றால் என்ன? காட்டு முல்லை என்று பொருள் தருகிறார்கள்.
மனை இள நொச்சி மௌவல் வால் முகை’ என்று அகநானூறும், ‘மல்லன் மருங்கில் மௌவலும் அரும்பின’ என்று நற்றிணையும், எல்லுறும் மௌவல் நாறும் பல் இருங் கூந்தல் யாரளோ நமக்கே?’ என்று குறுந்தொகையும் மௌவலைப் பேசுகின்றன.
வௌவல்’ எனும் சொல் பற்றுதல் எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டது. கலித் தொகை, நெய்தல் கலி, பாடல்-133. தலைவனுக்கு தோழி கூற்று.
‘ஆற்றுதல் என்பது ஒன்று அலர்ந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பெனப் படுவது தன் கிளை செறா அமை;
அறிவெனப் படுவது பேதையார் சொல் நோன்றல்
செறிவெனப் படுவது கூறியது மறா அமை
நிறைவெனப் படுவது மறைபிறர் அறியாமை
முறையெனப் படுவது கண்ணோகாது உயிர் வௌவல்
பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்’
என்பது பாடல். பற்றுதல் என்பது கவர்தல் என்றும் பொருள் தரும். புறநானூற்றில் மாங்குடிக் கிழார், ‘முரசு வௌவி’ என்று பாடுகிறார்.
ஏற்கனவே ஔகாரத்தை இன்றைய தமிழ் வழக்கு புறக்கணிப்பது என்பது மொழியை வாழவைக்க ஒரு போதும் உதவாது. எனவேதான் ஆத்திச்சூடியைத் துணை கொண்டு நாம் ஔகாரம் பார்த்தோம். ஔவியம் என்பதற்குப் பொருந்திய பொருள் அழுக்காறு.
‘அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.’
என்பது திருக்குறள். பொறாமை, ஆசை, வெகுளி, இன்னாச்சொல் இந் நான்கையும் நீக்கிச் செய்யப் பெற்ற வினையே அறமாகும். ஆக ஔவியம் பேசுவது அறத்திற்கு எதிரான செயல்பாடு.
அனுமானைப் பேசும் போது, கம்பன் கூறுவது, ‘தர்மத்தின் தனிமை தீர்ப்பான்’ என்று. அதாவது தர்மம், அறம் என்பது எப்போதும் தனியனாக இருப்பது. அதற்கொரு கூட்டுக் கிடைப்பது எளிதன்று. அனுமன் என்பவன் அறத்தின் தனிமை தீர்த்து அதற்கொரு துணையாக இருக்கும் தன்மை கொண்டவன். அந்த அறத்தின் எதிரி அழுக்காறு.
‘அழுக்காறு எனவொரு பாவி திருச் செற்றுத்
தீயுழி உய்த்து விடும்’
என்பதும் திருக்குறள்.
அழுக்காறு என்று சொல்லப்பட்ட ஒப்பற்ற பாவி, செல்வத்தைக் கொடுத்து, நரகத்தின் கண் புகுத்திவிடும் என்பது பொருள்
எனவே, எளிமையாக, ஒரு கட்டளையாக, ஔவை சொல்வது ‘ஔவியம் பேசேல்’!
நாலடியார் பேசுவது:
‘அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்
செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்;
கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
செவ்வி கொளல்தேற்றாது ஆங்கு.’
அதாவது, தோலை வாயினால் கவ்வித் தின்னும் நாயானது, பால் சோற்றின் நன் சுவையை அறிந்து கொள்வதில் தெளிவற்று இருக்கும். அது போல, அழுக்காறு இல்லாத சான்றோர் அறநெறியை உரைக்கும் போது, நற்குணம் இல்லாத புல்லறிவாளர் செவி கொடுத்தும் கேட்க மாட்டார்கள்.
எனவே ஔவியம் இல்லாதவர்களே அறத்தின் வழிகள் பற்றிப் பேசத் தகுதியானவர்கள் என்பது பெறப்படும்.
ஆகவே ஔவை சொல்கிறாள், ‘ஔவியம் பேசேல்’
– See more at: http://solvanam.com/

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", இலக்கியம், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஔவியம் பேசேல் – 2.

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    நிறைய விபரங்கள் படித்துக் கொண்டேன். நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s