எனவே கடைவிரித்தோம்,
கொள்வதும், கொடுப்பதுவும் வாசகரின் வசதி போல,
மற்றெந்தப் பந்தயத்திலும் நாமில்லை.
நமக்கு நாலடியார் கூறுவது போல
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’
எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
S.i.சுல்தான்
நாஞ்சில் நாடன் ஐயாவின் ‘எப்படிப் பாடுவேனோ’ கட்டுரைத் தொகுப்பை நேற்று வாசித்து முடித்தேன். நூல் இரு பகுதிகளைக் கொண்டு முதல் பகுதி கடுரைகளும் இரண்டாம் பகுதி பல்வேறு நூல்களுக்கு எழுதப்பட்ட முன்னுரைகளையும் கொண்டது. கட்டுரைப் பகுதிகளுக்கிடையே தாங்கள் எடுத்தாண்ட சங்க இலக்கியப் பாடல்கள், கம்பராமாயணம், சிலம்பு, சிந்தாமணி, பக்தி இலக்கியப் பாடலடிகள், ஔவையின் பாடல்கள் என படிக்கப் படிக்க வியப்பினைக் கொடுத்தது. தாங்கள் எடுத்தாண்ட பாடல்கள் அனைத்தும் வாசித்துப் புரிந்து கொள்ள எளிதாக இருந்தது. மேலும் பழந்தமிழ் சொற்களான துன்னல், விளம்பல், எக்கர், அனந்தல் உள்ளிட்ட சொற்களையும் அதற்கான பொருளையும் வாசிக்கும் போது புதிய சொற்களை அறிந்த மகிழ்ச்சியில் உள்ளம் பூரித்தது. ஒரு நல்ல நூலை வாசித்த மனநிறைவு கிட்டியது. தங்களுக்கு என் அன்பு நன்றி உரியது.