நாஞ்சில் நாடனின் “கம்பனின் அம்பறாத்தூணி”

nanjilhead_thinnaiவளவ.துரையன்
நவீன எழுத்தாளர்களில் மரபிலக்கியத்தில் ஆழ்ந்த பயிற்சி உள்ளவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் குறிபிடத்தகுந்தவர் நாஞ்சில் நாடன். அவருடைய நூல்களுக்கு அவர் வைத்திருக்கும் சில தலைப்புகளே அதற்கு சாட்சிகளாய் நிற்கின்றன.
சாலப் பரிந்து, என்பிலதனை வெயில் போலக் காயும், எட்டுத் திக்கும் மத யானை, நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை, காவலன் காவான் எனின், தீதும் நன்றும் என்பன போன்றவற்றைக் கூறிக் கொண்டே போகலாம்.
5-1-2013—ஆம் நாள் காரைக் குடியில் பழனியப்பா—மீனாட்சி அறக் கட்டளை சார்பாக அவர் நடத்திய ஆய்வுச் சொற்பொழிவே ”கம்பனின் அம்பறாத்தூணி” எனும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. முதலில் இந்நூல் கம்பராமாயண நயங்களை வியந்தோதும் நூல் அன்று என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கம்பனின் நயங்களைப் பலவகைகளில் எடுத்துக் கூறியும் அவனது நூலைப் பல வழிகளில் ஆய்ந்தும் எண்ணற்ற புத்தகங்கள் நம் தமிழில் வெளிவந்துள்ளன.
ஆனால் நாஞ்சில் நாடனின் இந்நூல் அவற்றினின்று முற்றிலும் மாறுபட்டதாகும். கம்பராமாயணத்தில் கம்பன் எடுத்தாண்டுள்ள சொற்களை ஆய்ந்து அவை எங்கெங்கே என்னென்ன பொருள்களில் வருகின்றன,அவற்றின் வேர்ச் சொற்கள் எவை, அவை பிற மொழிச் சொல்லா, ஒரே சொல் எத்தனை இடங்களில் வருகிறது, அவை இப்போது என்ன பொருளில் வழங்கப் படுகின்றன போன்றவற்றையெல்லாம் ஆராய்ந்து நாஞ்சில் நாடனின் கடும் உழைப்பால் வெளி வந்துள்ள நூல்தான் “கம்பனின் அம்பறாத்தூணி”  ஆகும்.
மொத்தம் 15 அத்தியாயங்களைக் கொண்ட இந்நூல் ஒரு சொற் களஞ்சியமாக விளங்குகிறது எனலாம். முதலில் கம்பனில் தான் எப்படி ஈடுபட்டேன் என்பதை அவர் விளக்கமாகவே கூறுகிறார்.
தொடக்கத்தில் சிறுவயதில் ராமாயண தோல்பாவைக் கூத்து பார்த்தது, பிறகு இளம்பருவத்தில் பட்டி மன்றங்கள் பேசியது என்பதையெல்லாம் விரிவாகவே அவர் எழுதி உள்ளார். ஆனால் ரா.ப என அழைக்கப்படும் ரா. பத்மநாபனிடம் அவர் இல்லத்திற்கே சென்று சுமார் இரண்டரை ஆண்டுகள் வாரத்திற்கு மூன்று நாள்கள் மும்பையில் கம்பராமாயணம் பாடம் கேட்ட்துதான் அவரைக் கம்பனில் இழுத்ததற்கு அடிப்படை என்கிறார். அதனால்தான் நன்றி காட்டும் முகத்தான் இந்நூலையே நாஞ்சில் நாடன் ரா. பத்மநாபன் அவர்களுக்குக்  காணிக்கையாக்கி உள்ளார்.
நவீன எழுத்தில் குறிப்பிட்த்தக்க எழுத்தாளாராய் ஆன பின்பு ஜெயமோகன் நடத்திய இலக்கிய முகாம்களில் கம்பன் பற்றிய அமர்வுகள் நடத்தியது மீண்டும் நாஞ்சிலைக் கம்பனில் கொண்டுபோய்த் தள்ளிவிட்டது எனலாம்.
அம்புகளைச் சேர்த்து வைத்திருக்கும் ஒரு பாத்திரமே அம்பறாத்தூணி ஆகும். அக்கால வில் வீர்ர்கள் தங்கள் முதுகில் அதைக் கட்டி வைத்திருப்பார்கள். அந்தத் தூணியைப் புட்டில் வட்டில்,ஆவம் எனும் சொற்களாலும் கம்பன் குறிப்பதை எடுத்துக்காட்டும் நாஞ்சில்  தூணி எனும் சொல் சங்க இலக்கியங்களான அகநானூறு, சிறுபாணாற்றுப்படை, நற்றிணை, முல்லைப்பாட்டு, ஆகிய நூல்களிலும் புழங்கி இருப்பதைச் சான்றுகளின் மூலம் எடுத்துக் காட்டுகிறார்.
இந்த நூலூக்கு இப்பெயர் வைத்ததற்குக் காரணம் கூறும் போது,
’இராமனின் அம்பறத்தூணியில் அம்பு அற்றுப் போகாது; கம்பனின் அம்பறாத்தூணியில் சொல் அற்றுப் போகாது. எனவே ‘கம்பனின் அம்பறத்தூணி’ எனப் பெயரிட்டேன் நூலுக்கு” என்று கூறுகிறார். அவர் கூற்று. மிகவும் உண்மை என்பதை நாம் நூலில் போகப் போகப் புரிந்து கொள்கிறோம்.
இந்த நூலுக்கு விமர்சனம் எழுத வேண்டுமாயின் சிறந்த சொல் ஆய்வுத்திறன் பெற்றிருக்க வேண்டும். எனவே கம்பனின் அம்பறாத்தூணியை அறிமுகம் செய்வதோடு நான் நிறுத்திக் கொள்கிறேன்.
கம்பராமயண சொல்லாய்வில் மூழ்கிப் போகும் நாஞ்சில் எச்சொல்லையும் விடமுடியாமல் தவிக்கிறார். எல்லாமே அவருக்கு இன்றியமைதாதாகத் தோன்றுகிறது.எனவே அவர் எழுதுகிறார்.
’ பலமரம் கண்ட தச்சன், ஒரு மரமும் வெட்டான் என்பார்கள். இந்த மரத்தை வெட்டவா? அந்த மரத்தை வெட்டவா? தூரத்தில் இருக்கும் இன்னொரு மரத்தை வெட்டவா? எனும் தட்டழிவு., எதைத் தேர்வது எனும் அலைபாய்வு. அந்தத் தச்சன் போலவே உணர்கிறேன் நான். எந்தச் சொல்லை எடுக்க எந்தச் சொல்லை விடுக்க?” {பக்-268]
ஏனெனில் ஒரு படைப்பிலக்கியவாதியாகக் கம்பனை அணுகும் அவர் கம்பனின் சொல்லாழம் காண்பது எவ்வாறு என்று திகைக்கிறார்.
எடுத்துக் காட்டாக ‘ஊழி’ எனும் சொல்லைக் கம்பன் தனிச் சொல்லாக, சொற்றொடராக 43 இடங்களில் ஆள்கிறான் என்று ஒரு பட்டியல் தருகிறார். [பக்-152]
அவ்வப்போது நாஞ்சில் நாடன் வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம்  தன் கருத்துகளை ஆங்காங்கே விதைக்கவும் தவறவில்லை.
’ஒளவியம்’ எனும் சொல்லைக் கம்பன் ’அவ்வியம்’ என்று எதுகை அமைதியும், ஓசைப் பொருத்தமும், இலக்கண அமைதியும் கருதிப் பயன்படுத்துகிறான்.
வள்ளுவர் ”அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்” என்கிறார்.
கம்பனும் விசுவாமித்திரனைக் காட்ட ‘அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை’ என்கிறார்.ஒளவையார் ‘ஒளவியம் பேசேல்’ என்கிறார். ஆனால் இச்சொல் ’ஒளவியம்’ என்றோ அல்லது ’அவ்வியம்’ என்றோ சங்க இலக்கியத்தில்ஓரிடத்தில் கூடப் பயின்றுவரவில்லை என்று கூறும் நாஞ்சில் ஒளவையும் கம்பனும் வள்ளுவரும் இச்சொல்லைக் காப்பாற்றித் தந்துள்ளனர் என்கிறார். இருந்தாலும் மொழிச் சீர்திருத்தம் எனும் பெயரில் ஒள எனும் எழுத்திற்கு மாற்றாக ”அவ்’ என்று எழுதுவதை நாஞ்சில் ஏற்கவில்லை. அதனால்தான் ”
”ஒளடதமும் அவுடதமும் ஒன்றா?, ஒளகாரக்குறுக்கம் என்பது அவுகாராக்குறுக்கமா? எழுத்துச் சீர்திருத்தம் என்பது ஒலிக் குறிப்பைச் சீர்திருத்துவல்ல என்பதை நாம் யோசிக்க வேண்டும்’
என்கிறார் அவர்
கம்பன் பயன்படுத்தும் வழக்குச் சொற்களை நூல் மிகச் சிறப்பாகக் காட்டுகிறது. கம்பன் ஐந்து என்பதை வழக்குச் சொல்லாக அஞ்சு என்று கையாள்கிறான். சுந்தர காண்டத்தில் பாடல் 4913-இல் இலங்காதேவியைக் கண்ட அனுமன் ‘ஐந்து நிறங்களைப் பெற்ற ஆடை உடுத்தவள்’ எனும் பொருளில் ’அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள்’ என்பான்.
”எனவே பேராசிரியப் பெருமக்களே, எந்தச் சொல்லையும் இது மக்கள் வழக்கு, இது வட்டார வழக்கு என்று உதாசீனப் படுத்தி விடாதீர்கள்” என்கிறார் நாஞ்சில்.
பொருள் ஏதும் இன்றி செய்யுளில் ஓசைக்காகவும் உணர்ச்சிக்காகவும் இலக்கண அமைதிக்காகவும் பயன்படுத்தும் சொற்கள் அசைச்சொற்கள் என்பார்கள். கம்பனைப் போல இத்தனை பாடல்களில் அசைச் சொற்களை யாரும் கையாண்டிருக்கிறார்களா என வியப்புறும் நாஞ்சில் அடா, அன்றே, ஆல், அன்னோ, கொல், எல்லே, அம்மா, மன்னோ, ஐய்யோ, அரோ, மாதோ என்று 11 அசைச் சொற்களைக் கம்பன் பயன்படுத்தியதாகப்  பட்டியலிடுகிறார். இன்னும் கூட இருக்கலாம். “மிச்சம் நீங்கள் தேடுங்கள்; தேடுவது சுகம்; ஏசுபிரான், தேடுங்கள் கிடைக்கும் என்று சொன்னார்தானே’ என்கிறார்.
கம்பராமாயணத்தில், மொத்தம் 64 ஆயுதங்களின் பெயர்கள் கூறப்படுவதாக பட்டியலிடும் நாஞ்சில் நாடன், தனக்கே உரிய கிண்டல் மொழியில்
”இந்தக் காலத்து உருட்டுக் கட்டை, சைக்கிள் செயின், சோடா பாட்டில், ஆசிட் பாட்டில், மொலட்டாவ் காக்டெயில் போன்றவை அன்று இருந்திருக்காது” என்கிறார்.
முழுக்க முழுக்க சொல் ஆய்விலேயே நம்மைநகர்த்திச் செல்லும் இந்நூல் படிக்கக் களைப்பில்லாமல் இருக்கிறன்தென்றால் அதற்குக் காரணம் நாஞ்சிலின் நடைதான். அதுவும் ஆங்காங்கே சமூக சிந்தனையோடு தனக்கே உரிய எள்ளல் பாணியில் அவர் காட்டும் இடங்கள் நகைச் சுவை என்று      தோன்றினாலும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை.
நூலின் இறுதி அத்தியாயம் ‘எம்மனோர்’ எனும் சொல்லை ஆராய்கிறது. எம்மனோர் என்பதற்குப் பொருள் எம்மைப் போன்றவர் என்பதாகும். நாஞ்சில் கேட்கிறார்: கம்பன் எம்மனோர் என்பது யாரை? அவரேபதில் சொல்கிறார்:
”மடக்கி எழுதி 120 பக்கம் நிறைத்து, நீட்டி அடித்தால் 20 பக்கம் வரும் கவிதைத் தொகுப்பு போட்டவர்களையா? கவிஞர் விக்ரமாதித்தன் பாடியதுபோல் ஓய்ந்த நேரத்தில் கவிதை எழுதுபவர்களையா? இல்லை, 10000 பாடல்கள்எனும் பெருங்கனவு கொண்டவர்களையா?”நாஞ்சிலின் இந்தக் கூற்று இக்காலத்திய ஒரு சில கவிஞர்களைப் பற்றிச் சிந்திக்க வைக்கிறது.
பக்கம் 185- இல் தம்பி எனும் சொல் பற்றிக் கூறும்போது அவருக்கு அண்ணாவின் நினைவு வருகிறது. இன்றைய அரசியல் சூழலும் கண்ணில் படுகிறது.
உடனே துணிவுடன் எழுதுகிறார்.”தம்பி வா! தலைமை ஏற்க வா, என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைக்கு அழைத்த அண்ணனும் உண்டு. தம்பியும் உண்டு. தம்பி அன்ணனாத போது மகன்களையும் மகளையும் பேரன்களையும் அழைத்தது வேறு கதை.
இது புரிபவர்க்குப் புரியும். கம்பனுக்கும் படைப்பாளிக்கும் உள்ள தொடர்பைக் கூற வரும்போது யார் யாருக்கு என்ன தொடர்பு என்று நாஞ்சில் கூறுகிறார்:
”வாசகனுக்கு ரசனை சார்ந்த தொடர்பு என்றால், படைப்பாளிக்கு கம்பன் காப்பியம் என்பது சொற்சுரங்கம். அரசியல்வாதிகளுக்கு சத்தீஸ்கர் நிலக்கரிச் சுரங்கம் போல’
எதைக் கொண்டுவந்து எதனுடன் தொடர்புபடுத்துகிறார் பாருங்கள். அதுதான் நாஞ்சில் நாடன்.
பக்கம் 43 –இல் இலக்கியத்தின் நயம் கூறி அதை உணர வேண்டும் என்பதை வலியுறுத்தும்போது,
“இதுதான் ஐயா, இதுதான் ஐயா, இலக்கியத்தினுள் என்றும் வாழும் நுட்பம் என்பது. சும்மா கோடிகள் அடித்து மாற்ற, இராமன் எந்தப் பல்கலையில் பி.டெக் பயின்றான் என நையாண்டி செய்து என்ன பயன்?’
எனும் அவரின் ஆதங்கம் புரிகிறது. கவிதை என்பது எது என்பதில் நாஞ்சில் நாடன் மிகவும் கறாராக இருக்கிறார். அதனால்தான் இப்படி எழுதுகிறார்.
’நவ கவிஞர் பலரும் கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாக உரைநடையை ஒடித்தும் மடக்கியும் எழுதிக் கவிதை என்று சாதிக்கிறார்கள். கவிதை என்பது சாதனை என்னும் காலம் போய் கவிதையைச் சாதிப்பது என்று ஆகிவிட்டது’
தமிழில் வழக்கொழிந்துபோய் ஆனால் மலையாளத்தில் இன்றும் புழக்கத்திலிருக்கும் சில சொற்களை ஓர் அத்தியாயத்தில் காட்டுகிறார். எடுத்துக்காட்டாக அத்துச் சாரியை பற்றிக் கூறும்போது அச்சாரியை இப்போது தமிழில் வழங்குவது இல்லை. ஆனால் மலையாள மொழியில் உண்டு. ‘வெயிலத்துப் போகருதே’ ’மழையத்துப் போகருதே’ என்பனவற்றை நாஞ்சில் சான்றாகக் காட்டுகிறார். மேலும் நாம் தேன்மாவின் கொம்பில் என்பதை அவர்கள் தேன்மாவின் கொம்பத்து என்கிறார்கள் என்று எழுதுகிறார்.
இச்சமயத்தில் புதுவை முனைவர் அறிவுநம்பி சொன்னது நினைவுக்கு வருகிறது.
’வாழ்க வளமுடன்’ எனும் சொற்றொடரே பிழையானது. அது அத்துச் சாரியை பயன்பாட்டுடன் ‘வாழ்க வளத்துடன்’ என்றிருக்க வேண்டும் என்கிறார் அவர்.
சரிதான். குடமுடன் வந்தாள், மரத்துடன் வந்தான் என்றா சொல்கிறோம், இல்லையே, குடத்துடன் வந்தாள், மரத்துடன் வந்தான் என்றுதானே சொல்கிறோம்.
இந்த அறிமுகக் கட்டுரையை முடிக்கும்போது முக்கியமான ஒன்றைச் சொல்லவேண்டும். உறக்கம் எனும் சொல் இருந்த இடத்தில் இப்போது தூக்கம் எனும் சொல் வந்து ஆண்டுகொண்டிருக்கிறது என்கிறார் நாஞ்சில் நாடன்.
தூங்குதல் என்றால் மலையாளத்தில் தொங்குதல் நான்று கொண்டு நின்று சாதல் என்பது பொருளாகும். இன்று நாஞ்சில் நாட்டிலும் தெந்தமிழ் நாட்டிலும் உறக்கம், உறக்கு, உறக்காட்டு, உறங்குதல் என்பவை வழக்கத்தில் உள்ளன.
சங்க காலத்திலும்  தூக்கம் எனும் சொல் உறக்கம் எனும் பொருளில் இல்லை. ஆனால் திருக்குறளில் 668—ஆம் குறளில் தூக்கம் உண்டு. அங்கு கூட தூக்கம் என்பதர்கு காலநீட்டிப்பு என்று பொருள்.
கடைசியில் நாஞ்சில் நாடன் கூறுகிறார்.
”இதை எழுதி வரும்போது எனக்குத் தோன்றியது. இலட்சக்கணக்கில் அண்டை வீட்டுத் தமிழன் ஈவும் இரக்கமும் இன்றிக் கயமையினால், வஞ்சனையினால் கொன்று குவிக்கப் பட்டும் வாளாவிருக்கும் தமிழன் உறங்கினால் என்ன? தூங்கினால் என்ன?”
இறுதியில் கம்பன் தனது இராமகாதையில் 6 காண்டங்களில், 118 படலங்களில், 10368 பாடல்களில் 3 இலட்சத்துக்கும் அதிகமான சொற்களைப் பயன்படுத்தி உள்ளான் எனும் நாஞ்சில் நாடன்,
கம்பன் பயன்படுத்தி உள்ள மொத்தச் சொற்கள் எத்தனை எனும் ஆய்வும் கம்பனின் சொல் அடைவு தயாரிப்பும் நடக்க வேண்டும்
என்று விரும்புகிறார். இந்த நூல் அவருடைய கடும் உழைப்பில் வெளியாகி உள்ளது என்பதைக் கூறித்தானாக வேண்டும். ஒரு நூலின் நயங்களைப் பாராட்டுவதே இலக்கியப்பணி என்று நம்பிக் கொண்டு இருக்கும் இலக்கிய உலகில் இதுபோன்ற சொல்லாய்வுகள் அதிகம் நடப்பதில்லை. எனவே “கம்பனின் அம்பறாத்தூணி” எனும் அற்புதமான சொல்சுரங்கத்தைக் கொடுத்த நாஞ்சில் நாடனுக்குக் தமிழ் கூறும் நல்லுலகம் மிகவும் கடமைப் பட்டிருக்கிறது எனலாம்.
http://puthu.thinnai.com/?p=23528

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், கம்பனின் அம்பறாத் தூணி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to நாஞ்சில் நாடனின் “கம்பனின் அம்பறாத்தூணி”

  1. Karthikeyan Saravanan சொல்கிறார்:

    தமிழறிந்தோர் அனைவரும் மறுப்புக்கூறாமல் பாராட்டதக்க அருமையான தனித்தன்மை வாய்ந்த இலக்கிய பணிகளை தொடர்ந்து செய்துவரும் நாஞ்சில் நாடன் ஐயாவுக்கு எமது அடர்ந்த அன்பும்,கனத்த வாழ்த்துகளும்,நெகிழ் பாராட்டுகளும்,…

    அம்பறாத்தூணி…
    வழமை போல அழகான அர்த்தம் பொதிந்த தலைப்பு.

    அம்பு அறா தூணி என்றால் எடுக்க எடுக்க அம்பு குறையாமல் தோள்மீது சாய்ந்திருக்கும் குட்டிப் பெட்டகம்.

    கம்பனின் சொல் அற்றுப் போகாது. எனவே ‘செல்லறாத்தூணி’ என்பது சரியாக வருமா….!!

  2. rathnavelnatarajan சொல்கிறார்:

    நான் படித்து விட்டேன். எவ்வளவு சொற்களை நாம் பயன்படுத்தாமல் இருக்கிறோம். மலையாளத்தில் நல்ல தமிழ் சொற்கள் இருக்கின்றன என அழகாக திரு நாஞ்சில் நாடன் அவர்கள் தொகுத்திருக்கிறார்கள்.
    படிக்க வேண்டிய அருமையான புத்தகம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s