தெய்வத்தான் ஆகாது எனினும்…

IMG_20130608_212644நாஞ்சில் நாடன்

(2013 ஜூன் 15 ஆம் நாள் கனடா நாட்டில் டொராண்டோ நகரில் இலக்கிய தோட்டம் வழங்கிய இயல் விருது விழாவில் வாசிக்கப்பட்ட உரை)

படைப்புலகுக்கான முதற்சொல்லை என் பேனா எழுதியபோது பிறந்த மண்ணில் இருந்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் அயலில் இருந்தேன். இந்த ஏற்புரையை எழுதும்போதும் சொந்த மண்ணில் இருந்து ஐந்நூறு கிலோ மீட்டர் அயலில்தான். இன்று இந்தச் சொல்லை உச்சரிக்கும்போதும் பிறந்த மண்ணிலிருந்து பதினைந்தாயிரம் கிலோ மீட்டர் அகல நிற்கிறேன். இதைக் கேட்கின்ற உங்களில் பலரும் என்னை ஒத்தே 15,000 கி.மீ அயலில்தான் இருக்கிறீர்கள். ஆனால் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.

தொலைவு எனில் தொலைந்து போதல் என்றும் கடக்கும் தூரம் என்றும் பொருள்கள். தொலைந்து போவதிலும் தூரம் கடத்தலிலும் வலிகள் உண்டு. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கடந்த தொலைவு எனக்கு 2000 கி.மீ, இரண்டு பொருள்களிலும்..

இந்தத் தொலைவுதான் என்னை எழுத்தாளன் ஆக்கியது என்று நம்புகிறேன். இதைப் புலம்பெயர்தல் எனும் சொல்லால் குறிக்கலாமா என்று எனக்குத் தெரியவில்லை. பின்னவீனத்துவப் பண்டிதர்களிடம் கேட்க வேண்டும். ஆனால் பிறந்ததிலிருந்து நாஞ்சில் நாட்டில் வளர்ந்து, பட்ட மேற்படிப்பு ஈறாகக் கல்வி கற்று, சற்றும் தொடர்பில்லாத மொழியும் பண்பாட்டு வெளியும் கொண்ட பிரதேசம் எனக்குள் ஏற்படுத்திய திகைப்புத்தான் எழுத வரக் காரணம். உறவுகள், நட்புகள் இல்லாத தனிமையுடன் செய்த தீராத சமர் எனச் சொல்லலாம்.

ஆனால் படைப்புக்கான முதல் சொல்ல எழுத நேர்ந்த காலத்து, ஒரு சிறுகதை ஆசிரியனாக, நாவல் ஆசிரியனாக, கட்டுரை ஆசிரியனாக, கவிதை எழுதுபவனாக, சினிமாவுக்கு உரையாடல் எழுதுபவனாக ஆவேன் எனும் கனவேதும் இருந்ததில்லை.

எனது முதல் நாவல், 1977 – இல் தலைகீழ் விகிதங்கள் முன்னுரையில் எழுதினேன் – இது காகமா குயிலா என்பது வசந்தகாலம் வரும்போது தீர்மானமாகட்டும் என்று. என் எழுத்து ஆற்றலுக்கான வசந்தகாலம் வந்து விட்டது என்று இன்றும் நான் கருதவில்லை. உண்மையில் எனக்கே இன்னும் தீர்மானம் ஆகாத விஷயம் நான் காகமா, அல்லது குயிலா என்பது!

ஆனால் வேறோர் தெளிவு பிறந்திருக்கிறது. காகம் தாழ்ந்தது, குயில் உயர்ந்தது என்று யார் சொன்னது? மேலதுவும் கீழதுவும் மனிதனின் பார்வையும், செவியுணர்வும், மூக்கும், நாக்கும், தொடுவுணரவும் தீர்மானிக்கிற சங்கதிகள்தானா?

‘புல்லும் மரனும் ஓர் அறிவினவே

நந்தும் முரலும் ஈர் அறிவினவே

சிதலும் எறும்பும் மூ அறிவினவே

வண்டும் தும்பியும் நான்கு அறிவினவே

மாவும் மாக்களும் ஐ அறிவினவே

மக்கள் தாமே ஆறு அறிவினவே’

என்கிறது தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல் நூற்பா.

ஆனால் இந்த ஆறு அறிவுகளை வைத்துக்கொண்டு நான் செய்ததென்ன? செய்வதென்ன? செய்யப் போவது என்ன?

ஆமையின் ஆயுட்காலம் முந்நூறு ஆண்டுகள் என்றும், மானுட ஆயுட்காலம் அறுபது ஆண்டுகள் என்றும், நாயின் ஆயுட்காலம் பன்னிரண்டு ஆண்டுகள் என்றும் வல்லோர் வகுத்துள்ளனர். எப்படி மூன்றில் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பாகுபடுததுவது?

காகம் அழகற்றது, வன் குரல் உடையது; ஆனால் குயிலோ அழகானது, இன் குரல் உடையது எனும் மதிப்பீடுகளீல் இருந்து நான் விடுபட விரும்புகிறேன். இந்த விடுபடல் என்னைக் கர்நாடக இசையையும் இந்துஸ்தானி இசையையும் அரபு இசையையும் சீன இசையையும் ஐரோப்பிய இசையையும் ஆப்பிரிக்க இசையையும் புரிந்து அனுபவிக்க உதவுகிறது. இத்தனை ஆண்டுகள் இலக்கியப் பயிற்சியில் எனக்குக் கிடைத்த தெளிவு இது.

சென்ற ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஐம்பத்து இரண்டு நாட்கள் சுற்றிக்கொண்டிருந்தபோது, ஹ்யூஸ்டன் நகரில் ஐந்து நாட்கள் இருந்தேன். நண்பர்கள் என்னை இரவு கேளிக்கை விடுதிகள் சிலவற்றுக்கு அழைத்துப் போனார்கள். ஈ.வெ.ரா வெளிநாட்டில் நிர்வாண முகாம்களுக்குப் போகலாம் என்றால், பாவப்பட்ட நாஞ்சில் நாடன் சில நாட்டியங்களைப் பார்க்கக் கூடாதா?

கருப்பாக, ஒல்லியாக, சுருட்டைத் தலைமயிருடன், அடுத்தடுத்துக் கணுக்கள் கொண்ட செங்கரும்பு என, அழகியொருத்தி ஆடிக் கொண்டிருந்தாள். ஆடி, முடித்து, உடை அணிந்து, எங்கள் பக்கலில் வந்து அமர்ந்தாள். மூதாதையர் எந்தத் தேசம் என்று கேட்டேன். கையில் பீர் கோப்பையை வைத்து உறிஞ்சிக்கொண்டே, எத்தியோப்பியா என்றாள். நான் திருப்பிக் கேட்டேன், எத்தியோப்பியாவா, எரித்திரியாவா? திகைத்துப் பார்த்து ஏன் என்றாள். எரித்திரியா, கிளியோபாத்ரா பிறந்த தேசம் என்றேன். அவள் முகத்தில் அத்தனை பரவசம், பெருமிதம்.

அந்தப் பெருமிதத்தை என் மொழியில் நான் எழுதும்போதும், பிறர் எழுதும்போதும் அடைகிறேன். இந்தத் தெளிவை வந்தடைவேன் என்பதை, படைப்பு வயலில் ஏர் கட்டி முதல் சால் அடித்தபோது, அறிந்திருக்கவில்லை. எனவே காகமா, குயிலா என்பதை எந்த வசந்தகாலமும் தீர்மானிக்க வேண்டாம். காகமாகவே இருப்பதில் எனக்கு மறுப்பு ஏதும் இல்லை; ஒவ்வாமை இல்லை; உவப்பின்மை இல்லை. குயிலாக இருப்பதில் அதீத மகிழ்ச்சியும் இல்லை.

காகமும் குயிலும் தம்மில் தம்மில் உயர்ந்தது தாழ்ந்தது என்று எண்ணிக் கொண்டிருக்குமா? குயிலின் குரலை, வடிவுடை மூக்கை, அடர்கருமை நிறத்தை, மஞ்சாடிக் கண்ணைக் காகம் அழுக்காறுற்றது என்பதற்கு ஏதும் ஆதாரம் உண்டா? ஆமைக்கு வயது 300, எனக்கு 12 தானே எனக் குக்கல் கவன்றதா?

இந்த இடம் வந்து சேர எனக்கு 38 ஆண்டுகள் எடுத்து இருக்கின்றன. எனில், மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்தால் – எழுதப் புகுமுன், எனக்கென்ன கனவுகள் இருந்திருக்க இயலும்? உண்மையில், சின்ன வயதில் எனக்கு வந்த கனவுகள் – பெரியதொரு தோசையை வைத்துக்கொண்டு தின்ன முடியாமல் தின்று கொண்டிருப்பது; என்னைப் பழையாற்று வெள்ளம் அடித்துக்கொண்டு போவது; பாம்புப் படை பல்திசைகளிலும் துரத்துவது… கனவுகளை விஞ்ஞானி சிக்மண்ட் ஃபிராய்டின் கனவுக் களஞ்சியத்துடன் ஒத்துப் பார்க்க முனைந்ததில்லை.

கனவு காண்பதற்கான வெளி மறுக்கப்பட்ட பின்புலம் எனது. எம்.எஸ்சி வரைக்கும் கல்லூரியில் படித்த நான் எந்தப் பெண்ணையும் காதலித்ததில்லை, காதல் கடிதம் எழுதியதில்லை என்றால் உங்களால் நம்ப முடியுமா? இந்த நிலையில் பாரதியை, தாகூரை, ஒளவையை, ஆண்டாளை நாம் எவ்விதம் கனவு காண்பது?

‘இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்

நம்மை உடையவன் நாராயணன் நம்பி

செம்மை உடைய திருக்கையால் தாள்பற்றி

அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்’

என்று ஆண்டாள் கனாக் கண்டதுபோல் எக்கனவும் எனக்கு இருந்ததில்லை. இருந்த ஒரே கனவு, திரும்பத் திரும்ப வருவது, பெரிய தோசை…

எனவே எழுதப் புகுமுன் கனவுகள் சுமந்து அலைந்தவன் இல்லை.

என்னை வெளிப்படுத்துதல்,

என்னை நெறிப்படுத்துதல்,

என்னைத் தெரிவு செய்தல்,

என்னைத் தெளிவு செய்தல்…

சிக்கல் என்னவெனில், நான் தெளிவு பெறப்பெற மற்றவர் குழப்பம் அதிகமாகியது. ‘இவன் திராவிட இயக்க எதிரியா? இவன் இந்துத்துவனோ? இவன் பிராமண அடிவருடியோ? இவன் வெள்ளாள சாதி வெறியனோ? இவன் முற்போக்காளன் அல்லனோ? இவன் மனிதனே தானோ?’ பெர்ட்டோல்ட் பிரெக்ட் சொல்கிறார் – ‘நீங்கள் தேடுவது யாராக இருந்தாலும் அது நானில்லை!’

கம்பராமாயணத்தின் இறுதிக் காண்டமான யுத்த காண்டத்தில், கம்பன் அறுசீர் விருத்தத்தில் ஒரு கடவுள் வாழ்த்து அமைத்தார்.

‘ஒன்றே என்னின், ஒன்றே ஆம்;

பல என்று உரைக்கின், பலவே ஆம்;

அன்றே என்னின், அன்றே ஆம்;

ஆமே என்னின், ஆமே ஆம்;

இன்றே என்னின், இன்றே ஆம்;

உளது என்று உரைக்கின், உளதே ஆம்;

நன்றே, நம்பி குடிவாழ்க்கை!

நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!’

எதற்கு இந்தப் பாட்டை மேற்கோள் சொல்கிறேன் எனில், படைப்பாளி சாதாரண மாந்தனாக இருக்கலாம். ஆனால் படைப்பு நிலை என்பது ஞான நிலை. ஆகவேதான் கவிதை என்பது ஞானத்துக்கு அண்மையிலும், கவிஞன் என்பவன் ஞானியாகவும் இருப்பது. எப்படி திருவள்ளுவரும், அப்பரும், மாணிக்கவாசகரும், ஆண்டாளும், காரைக்கால் அம்மையும், குமரகுருபரனும், பெரியாழ்வாரும், நம்மாழ்வாரும் எந்த அளவுக்குக் கவிஞர்களாக இருக்கிறார்களோ அதைவிட அதிக அளவுக்கு ஞானிகள் வள்ளலாரையும் தாயுமானவரையும் சித்தர் பெருமக்களையும் சேர்த்தே சொல்லலாம்.

எனவே இயங்களை அரைகுறையாகக் கற்றுக்கொண்டு, படைப்பை, படைப்பாளியை, எடை போடவந்தால், பல கணக்கும் தப்பிப் போகும். பிழைபட அச்சிடப்பட்டுள்ள ISO தரச்சான்றுகள் போன்றவை இவை.

தமிழ் எனத் துணிந்து நிற்கும் எவனுக்கும் இனமில்லை, மதமில்லை, தேசம் என்பது கூட இல்லை. அதைத்தான் தமிழ் விடு தூது பாடுகிறது.

இருந்தமிழே உன்னால் இருந்தேன், இமையோர்

விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்

‘திகம்பரம்’ என்று தலைப்பிட்ட கட்டுரையில் தெளிவாகப் பேசி இருக்கிறேன். இல்லை என்றால், கணியன் பூங்குன்றன் பாடி இருப்பானா, புறநானூற்றின் 192 – வது பாடலை.

‘மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’

எழுத ஆரம்பித்த அந்தக் காலத்தில், இவை எதுவும் என் நினைப்பில் இல்லை.

‘நல்லா எழுதணும், நியாயமா எழுதணும், நாலு பேர் வாசிச்சுச் சொல்லணும், வாசிக்கறவருக்குப் பயன்படணும்’ என்பனவே எதிர்பார்ப்புகளாக இருந்தன.

எனக்கு முன் எம்மொழியில் இலக்கியம் சாதித்தவர் எல்லோரையும் கழுத்து வலிக்க, வலிக்க நான் அண்ணாந்து பார்த்திருக்கிறேன். வியப்புடனும், மரியாதையுடனும், திகிலுடனும், எம்மொழியில் இது நிகழ்ந்துள்ளது எனும் கர்வத்துடனும்.

காலந்தோறும் அவ்வை வாழ்ந்திருந்தாள். இன்றைய அவ்வை யாரென்று நம்மால் கண்டடைய முடியவில்லை.

பிரம்மன், படைப்புக் கடவுள். அவனுக்கு மொத்தம் ஐந்து தலைகள். கடுஞ்சினத்தால் அவற்றில் ஒன்றைக் கிள்ளினான் நீலகண்டன். அதனால், அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் வந்தது. பிற்காலத்து அவ்வை ஒருத்தி பாடுகிறாள், மிச்சமிருக்கும் பிரம்மனின் நான்கு தலைகளையும் நான் பற்றி, திருகிப் பறித்தெடுக்க மாட்டேனோ? ஏன் பற்றித் திருகிப் பறிக்க வேண்டும்? வற்றும் மரம் போன்றவனுக்கு இந்தப் பெண்மானை வகுத்து, நேர்ந்து, மணமுடித்து வைத்தானே அதற்கு!

‘அற்ற தலை போக, அறாத தலை நான்கினையும்

பற்றித் திருகிப் பறியேனோ – வற்றும்

மரமனையானுக்கு இந்த மானை வகுத்திட்ட

பிரமனை யான் காணப் பெறின்.’

அவ்வை எனும் மாமணியின் முன்பு நான் யார்? ஒரு கூழாங்கல் கூட இல்லை என உணரும்போது நாணம் தரும் எனக்கு! மொழி மட்டும் அல்ல. நேரிசை வெண்பா எனும் இலக்கணம் மட்டும் அல்ல. ஓசைநயம் மட்டுமல்ல. பொருத்தம் இல்லாத, புரிதல் இல்லாத கணவனுடன் பெண்ணைக் கூட்டி வைத்த குற்றத்திற்கு, பிரம்மனின் நான்கு தலைகளையும் பற்றித் திருகிப் பறித்து எடுப்பேன் நான்முகனை நான் காணப் பெற்றால் என்று பொங்கி வரும் பெண்ணின் சீற்றம் கருதி.

இதைத் தாண்டிப் போக இயன்றதா எம்மால்? இத்தனை ஆண்டுகாலப் பயிற்சியில், இந்தக் கூழாங்கல் சற்று வடிவ நேர்த்தியும், பளபளப்பும் தண்மையும் தாண்டி வேறேதும் நடந்து விட்டதாக எனக்குத் தெரியவில்லை.

தமிழ் இலக்கிய ஆளுமைகள் என்று அறிந்தோ அறியாமலோ நாம் கொண்டாடும் பலரும், அவர் வாழ்ந்த காலத்து, என்ன மாட்சியுடன் வாழ்ந்திருப்பார்கள்?

‘ஆடு நனி மறந்த கோடுஉயிர் அடுப்பின்

ஆம்பி பூப்பத் தேம்பு பசி உழவாம்

பாஅல் இன்மையில் தோலொடு திரங்கி

இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை’ (புறம் – 164)

என்பதுதானே பெருந்தலைச் சாத்தன் வாக்குமூலம்!

‘உப்புக்கும் பாடிக் கூழுக்கும் ஒரு கவிதை

ஒப்பிக்கும் எந்தன் உளம்’

என்பதுதானே இடைக்காலத்து அவ்வையின் பொருளாதார நிலை!

‘சொல்லடி பராசக்தி! வீழ்வேன் என்று நினைத்தாயோ?’ என்பது தானே பாரதியின் குமுறல்!

பின் எதைக் காமுற்று எழுத வந்தேன், முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றது போல்? எம்மனோர் என்று கம்பன் பேசும் மகாகவிகளின் சங்கத்தில் உறுப்பினன் ஆகி விடலாம் என்ற நம்பிக்கையாலா? மலையடிவாரத்தில் ஒரு பண்ணை வீடும் குடும்ப உறுப்பினருக்கெல்லாம் தலைக்கு ஒரு காரும், தினமும் இரண்டு வேளை நீராட ஐந்நூறு லிட்டர் பிஸ்லேரி வாட்டரும், மாலை மதுவுக்குத் தொட்டுக்கொள்ள மான் கறி வறுவலும், பார்த்தெழுதப் பக்கத்துக்கு ஒரு காமக்கிழத்தியும் கிட்டும் என்ற நம்பிக்கையாலா? சுந்தர ராமசாமிக்கே லோஷன் மணக்கும் பாத்ரூம் போதும் என்றால், எனக்குக் கொடுத்து வைத்திருந்தது உப்புக் கிணற்று வெள்ளம்தானே!

என்றாலும் இடையறாத இத்தனை ஆண்டுகள் எழுதுவதற்கான உந்துதல் வரக் காரணம் என்ன? கனவா? சாகித்ய அகாதெமி, ஞான பீடம், புக்கர், நோபல்…

அம்மணக்குண்டியாக அறுவழிச்சாலையில் ஓடும் அளவுக்கு எனக்குப் பித்தம் ஏறி அடிக்கவில்லை!

ஒரு வழிப்போக்கனைப் போல, வேடிக்கை பார்த்து நின்றிருக்கிறேன், பலரும் பல விருதுகளையும் பரிசுகளையும் கவர்ந்து சென்றதை… சில சமயம் திருடன், திருடன் என்று ஒச்சம் எழுப்பியிருக்கிறேன்.

எம்மொழியில் கள்வரும் காவலரும் ஒரே இலையில் அமர்ந்து உண்பவர்கள். என் கதை இருக்கட்டும் – கல்லாதான் கற்ற கவி! கையால் ஆகாத காமம்… ஆனால் – சு.ரா எங்கே? நகுலன் எங்கே? ஆ. மாதவன் எங்கே? வெ.சா எங்கே? எங்கே? எங்கே?

எனவே, பெரும் பரிகாசத்துக்கு உரியன ஆயிற்று எமக்கு இந்தப் பரிசுகள். நான் பெரிதும் மதிக்கும் தமிழ் எழுத்தாளர் எஸ்.பொ.வுக்கு 75 – வது வயது கொண்டாடப்பட்டபோது, சென்னையில், பொதுமேடையில் கேட்டேன். தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் இதுவரை எத்தனை தமிழ் எழுத்தாளருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் தந்துள்ளன? கி.ராவுக்கு இன்று 91. லா.ச.ரா அந்த வயது வரை வாழ்ந்தவர். ஆ. மாதவன், அசோகமித்திரன் எண்பதைத் தொட்டுக்கொண்டு இன்னும் வாழ்பவர்கள்.

இந்திய அரசு, ‘பத்ம’ விருதுகள் தொடங்கப்பெற்ற காலத்தில் இருந்து, தமிழ் எழுத்தாளர் எத்தனை பேருக்கு, இன்றுவரை விருதுகள் வழங்கியது? பெரும் பொருளோ, அரசியல் தலைமைகளின் அணுக்கமோ கொண்டு இந்தப் பெருமை வாங்கும் சாமர்த்தியம் தமிழ் எழுத்தாளனுக்கு இல்லை என்றுதானே பொருள்!

படைப்பு என்பது பூக்குழி மிதிப்பது. அங்கீகாரம் என்பது ஆள் வைத்து அடித்துப் பறிப்பது.

எஸ்.பொ வும் அ. முத்துலிங்கமும் இந்திய அரசால் தமிழ்நாடு அரசால் எந்த மரியாதையும் செய்யப்படாமற் போனதற்கு, அவர்கள் இந்திய தேசக் குடிமக்கள் இல்லை என்கிறார்கள். இந்தியக் குடிமகன் ஆக இல்லாத எவரையும் உலகத் தமிழ் மாநாடுகள், செம்மொழி மாநாடுகள் கௌரவித்ததில்லையா? இந்தியப் பிரஜையாக இல்லாத எவருக்கும் இந்திய அரசு எந்த விருதும் தந்ததில்லையா? அரசாங்கம் இருக்கட்டும், தனியார் அறக்கட்டளைகள் என்ன செய்கின்றன?

தமிழ் படைப்பிலக்கிய உலகில் தொழிற்படும் இந்தப் பகைமுரண், நகை முரண் எம்மை வெகுவாக நம்பிக்கை இழக்கச் செய்துள்ளன. அண்மையில், சென்னையில் தமிழ்த் தேசிய இயக்கங்களின் தனித்துவம் மிக்க தலைவர் ஒருவருடன் ஒரே மேடையில் அருகே அமர்ந்திருந்தேன். சற்று உரையாட நேர்ந்தபோது, என் பெயர் கூட அவர் செவிப்பட்டிருக்கவில்லை. மேலும் சில படைப்பாளிகளின் பெயர் சொல்லி, அவர்களைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று கேட்டு, அவரிடம் ஒரு பொய்யை வாங்க எனக்குப் பிரியம் இல்லை. எனக்குத் தோன்றியது, அவர் விரும்பியபடி – எனக்கதில் எதிர்ப்பில்லை – ஒரு வேளை தமிழ்த்தேசியம், உட்கார்ந்திருக்கும் வாத்தைப் பிடிப்பது போல் அமைந்து, அவர் அதற்குப் பிரதம மந்திரியாகவும் ஆனால், எம்மை ஒத்தோர் நிலைமை, இப்போது இருப்பதை விடச் சிறப்பாக இருக்குமா அல்லது புறக்கணிப்பில் இருந்து பெரும்புறக்கணிப்புக்குத் தள்ளி மண் போட்டு மூடப்படுவோமா? அவரது தேசத்தில் எவருக்குப் பல்கலைக்கழக முனைவர் பட்டங்கள், பத்ம பூஷண்கள், பேராயத் தலைமைகள் விற்கப்படும்?

1975 – இல் இருந்து தொடர்ச்சியாக, 38 ஆண்டுகள், முப்பது புத்தகங்கள், யாவும் புல்லிடை உகுத்த அமுதா?

வரலாறு, எமக்கு ஒரு வாய்ப்பை வழங்க இருந்தது. மீட்டு எடுக்க இயலாத வகையில் அந்தக் கனவு வெடித்துச் சிதைந்து போயிற்று. தொழுத கையுள்ளும் படை ஒடுங்கி இருந்தது. தம் படை வெட்டிச் செத்தோம் நாங்கள். அது எம் தலைமுறையின் தலையாய சோகம். இந்த மொழியின் புத்திர சோகம்!

தமிழ் இலக்கியத்தின் தரத்தைப் பரிசுகள், விருதுகள், பட்டங்கள் வழங்கித் தீர்மானிக்கும் தகுதியை அரசு சார் அமைப்புகளும் தனியார் அறக்கட்டளைகளும் இழந்து நின்ற அவலத்தைப் பார்த்தும் நம்பிக்கை இழந்தோம்.

தமிழ் நாட்டில், நவீன படைப்புலகுக்கும் பல்கலைத் தமிழ்ப் புலங்களுக்கும் பெரும் பகை. சமீபத்தில் வெளியான, கம்பனின் அம்பறாத்தூணி எனும் ஆய்வு நூலில், பல்கலைக்கழக வளாகங்களில் பாம்புகள் படமெடுத்து ஆடுகின்றன என்று எழுதினேன். ‘பாம்பு’ என்று தலைப்பிடப்பட்ட என் சிறுகதை ஒன்றினை வாசித்துப் பாருங்கள்.

அண்மையில், தில்லியில், தமிழறிஞர் – முதுபேராசிரியர் – இலக்கணத்தில் மேதை ஒருவருடன் மூன்று நாட்கள் ஒரே விடுதியில் தங்க நேர்ந்தது. அடுத்தடுத்த அறைகள். அவரது தமிழ்ப் புலமை மீது எனக்கு மதிப்புண்டு. பல ஆண்டுகள் சாகித்திய அகாதெமி விருதுகளைத் தீர்மானிக்கும் பொறுப்பில் அவருக்கும் பங்கிருந்தது. அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். கூடவே ஓய்வு பெற்ற பேராசிரியர், பெரிய புராண அறிஞர் இருந்தார். நான் கேட்டேன், ‘ஐயா, உங்களுக்கு நாட்டியம் தெரியுமா?’

திகைத்துப் போய்ச் சொன்னார், ‘தெரியாது! ஏன் கேட்கிறீர்கள்?’

‘நாட்டியப் போட்டிக்கு நடுவராக இருக்கக் கூப்பிட்டால் போவீர்களா?’

‘கண்டிப்பாகப் போக மாட்டேன்!’

‘நீங்கள் பேராசிரியர், தமிழறிஞர். நானறிய நவீன இலக்கியத்தில் ஒரு கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் வாசித்தவரில்லை. அது உங்கள் குறையல்ல. தவறும் அல்ல. பிறகு எப்படி அவற்றுக்கான விருதுகளைத் தீர்மானிக்கும் நடுவர் குழுவில் இத்தனை ஆண்டுகள் தொண்டாற்றினீர்கள்?’

பேராசிரியர் முகம் இறுகிச் சிவந்து கனன்றது. நான் மீண்டும் சொன்னேன், ‘எனக்கு உங்கள் மீது மரியாதை உண்டு. ஆனால் தமிழ்ப் படைப்புலகு ஒரு போதும் உங்களை மன்னிக்காது’.

எனக்கு வாய்க்கொழுப்பு அதிகம்.

கம்ப ராமாயணத்தில், யுத்த காண்டத்தில், இந்திரசித்து வதைப் படலத்தில் ஒரு பாடல். இந்திரசித்தன், தன் தகப்பன் பத்துத் தலை இராவணனுக்கு அறிவுறுத்திச் சொல்லும் இடம்.

‘ஆதலால், “அஞ்சினேன்” என்று அருளலை; ஆசைதான் அச்

சீதைபால் விடுதியாயின், அனையவர் சீற்றம் தீர்வர்,

போதலும் புரிவர்; செய்த தீமையும் பொறுப்பர்; உன்மேல்

காதலால் உரைத்தேன் என்றான் – உலகெலாம் கலக்கி வென்றார்’

இந்திரசித்தன் அறிவுரை கேட்டு, இராவணன் பதிலாக அமைந்த பாடல். இந்தப் பாடலைத்தான் நான் கருதியது.

‘முன்னையோர் இறந்தார் எல்லாம்

இப்பகை முடிப்பர் என்றும்,

பின்னையோர், நின்றோர் எல்லாம்,

வென்றனர் பெயர்வர் என்றும்,

உன்னை, “நீ அவரை வென்று தருதி”

என்று உணர்ந்தும், அன்றால்

என்னையே நோக்கி, யான் இந்

நெடும்பகை தேடிக் கொண்டேன்’

ஆம்! என்னையே கருதித்தான், யான், இந்நெடும்பகை தேடிக் கொண்டேன். தமிழ்நாட்டில், இந்திய நாட்டில், தமிழ் பயிற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர் பலரும் நவீன இலக்கியம் என்ன என்றே அறியார். கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கும் பேராசிரியர்களோ, சிந்துபாத் கிழவன் ஒருவனைச் சுமந்தது போல முற்போக்கு இலக்கியம் என்று வாழ்நாள் பூராவும் சுமந்து நடக்கிறார்கள். இந்த உவமை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், ‘அடிமைப் பெண்’ படத்தில் எம்.ஜி.ஆரின் அம்மையாக நடித்த பண்டரிபாய் சுமந்து நடந்த, காலில் கட்டிய விலங்குச் சங்கிலியும் அதில் கோர்க்கப்பட்டிருந்த பத்துக்கிலோ எடையுள்ள இரும்புக் குண்டும் போல, என வைத்துக் கொள்ளலாம்.

இந்தச் சூழலில்தான் 2010-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி எனும் நாக லோகத்து நீலமணி, ஒரு அதிசயம் போல எனக்குக் கிடைத்தது. நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள், விருதை நான் வாங்கவில்லை. விருது எனக்குக் கிடைத்தது. அந்தச் சந்தர்ப்பத்தில், நேரடியாக, ஆனந்த விகடன் நேர்காணல் மூலம், படைப்பிலக்கியவாதிகளைத் தமிழக அரசு அலட்சியம் செய்கிறது, புறக்கணிக்கிறது எனும் குற்றச்சாட்டை வைத்தேன். எனக்கு 2009 – கான ‘கலைமாமணி விருது’ அறிவித்தனர், குற்ற உணர்வாலோ, குரைக்கின்ற நாய்க்கு ரொட்டித் துண்டாகவோ!

என் நண்பர்கள் பலரும், இரண்டையுமே புறக்கணிக்க வேண்டும் என்றும், ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் அபிப்பிராயப்பட்டனர். நான் சொன்னேன், இந்த விருதுகளுக்காக நான் முயற்சி செய்யவில்லை. எவரையும் கண்டு வரவில்லை. எந்த நடுவர் இல்லத்துக்கும் எட்டு முறை போகவில்லை. அதன் பொருள் ஏழு முறை, ஆறு முறை, ஐந்து முறை மட்டுமே போனேன் என்று அல்ல. ஒரு முறை கூடப் போனதில்லை. எனக்காக உழைக்கும் சாதி அமைப்பு கிடையாது. முற்போக்கு அரசியல் கட்சிகள் கிடையாது. என் கையில் துட்டும் கிடையாது. மேலும் இந்தப் பரிசுகள் எவன் அப்பன் – பாட்டன் – அம்மான் வீட்டுச் சொத்தை விற்று வழங்கப்படுவதும் அல்ல.

சென்னை போய், கலைமாமணியும் அங்கிருந்தே தில்லி போய் சாகித்திய அகாதெமியும் பெற்றுக்கொண்டு, நானும் என் மனைவியுமாக, அரித்துவார், ரிஷிகேஷ் போனோம். நண்பர்கள் முகநூலில் எழுதினார்கள், ‘நாஞ்சில் இந்த விருதுகளைக் கங்கையில் கழுவப் போயிருக்கிறார்’ என்று.

சாகித்திய அகாதெமி விருதளிப்பு விழாக்களுக்கு, ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் இருந்து, பத்திருபது பேர், தத்தம் துணைகளுடன், விமானத்தில் போகிறார்கள். செயற்குழு உறுப்பினர் என்றார்கள், பொதுக்குழு உறுப்பினர் என்றார்கள், பரிசுக்குழு உறுப்பினர் என்றார்கள், விருது பெறும் இருபது மொழி எழுத்தாளர்களும் மிகச் சாதாரணமான விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்தோம். லொடக்கு பஸ்ஸில் பயணம் செய்தோம். ஆனால் உறுப்பினர்களுக்கோ மேன்மையான விடுதிகள், சொகுசு மகிழ்வுந்துகள். விருது பெறும் படைப்பாளிகளின் எடையை எப்படித் தீர்மானித்தார்களோ! பரிசளிப்பு விழாவில் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் ஒருத்தர் மட்டுமே இருந்தார். அடுத்த நாள் அந்தந்த மொழியின் விருது பெற்றோர், அவரவர் உரையை ஆற்றும்போது, தமிழ்நாட்டைச் சார்ந்த சாகித்திய அகாதெமி உறுப்பினர்கள் ஒருவர் கூட இல்லை. இதுதான் பரிசு பெறும் படைப்பிலக்கியவாதி மீது, தமிழ் மொழியை அகில இந்திய அளவில் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் கொண்டிருக்கும் மதிப்பு. அவர்களுக்கு காலணிகள், ஆயத்த ஆடைகள் வாங்க அலையவே நேரம் இருந்திருக்கும்.

எதற்காக இத்தனை நேரம் இதை ஆலாபனை செய்கிறேன் என்று நீங்கள் எண்ணக்கூடும். கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனைக்கான ‘இயல் விருது’ பற்றிய முக்கியத்துவத்தை விளக்க.

கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது பற்றி, எனக்கொரு மதிப்பீடு இருந்தது. அதன் காரணம், இந்த அமைப்பு முதன்முதலில் சுந்தர ராமசாமிக்கும் தொடர்ந்து வெங்கட் சாமிநாதன், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி, எஸ்.பொ என வழங்க முனைந்ததே. நவீன தமிழ் படைப்புலகில் புறக்கணிப்பின் நீண்ட பட்டியல் ஒன்றுண்டு. சாதி அரசியல், முற்போக்கு – பிற்போக்கு அரசியல், அடங்க மறுக்கும் அரசியல் எனப் பன்முகப் பின்னணி உண்டு. தீவிரகதியில், சாகித்திய அகாதெமி பரிசுக்கு சுந்தர ராமசாமியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது, அவருக்குக் கொடுக்கக் கூடாது என்றும் கொடுத்தால் அண்ணா சாலையில் அம்மணங்குண்டியாக ஓடுவேன் என்று அச்சுறுத்திய மூத்த முற்போக்கு ஆளுமை உண்டு தமிழில். 1998 – இல் வெளியான எனது எட்டுத்திக்கும் மதயானை இறுதிச் சுற்றுக்கு வந்தபோது, அதே ஆளுமை, அவன் கெட்ட வார்த்தை எழுதுகிறவன் என்று சொன்னதுண்டு.

இந்தச் சூழலில்தான், தகுதி மிக இருந்தும் அரசியல் காரணங்களுக்காகவும் ஆள் பிடிக்காத காரணத்துக்காகவும், எந்த விருதும் கௌரவம் செய்யாத ஆளுமைகளை நீங்கள் பொருட்படுத்தி மரியாதை செய்து வருகிறீர்கள். அந்த வரிசையில் என் பெயரும் வருவது உண்மையில் எனக்குப் பெரிய கௌரவம்.

இந்தியாவின் 28 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்கள், ஒரு தேசிய தலைநகரப் பகுதி எனும் 35 உண்டு. அவற்றுள் 11 பிரதேசங்கள் என் காலடி படாதவை. தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் என் கால் படாத தாலுகா இல்லை. ஆனால் என் முதல் வெளிநாட்டுப் பயணம், எனது 63 – வது வயதில், மலேசியா போனதுதான். பின்புதான் குவைத்துக்கும் U.A.E க்கும் U.S.A க்கும் போனது. எனது தன்விவரக் குறிப்பில் கனடா ஆறாவது நாடு. நாடு பார்ப்பது இருக்கட்டும், இங்கு வந்திருக்காவிட்டால், இயல் விருது வழங்கப் பட்டிராவிட்டால், நான் அ. முத்துலிங்கத்தைக் காண்பதெங்கே?

பலரையும் தேடித்தேடிப் போய்ப் பார்த்திருக்கிறேன். சி.சு. செல்லப்பா, க.நா.சு, சிட்டி பெ.கோ. சுந்தரராஜன், தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராமன், நகுலன், சுந்தர ராமசாமி, அசோக மித்திரன், சா. கந்தசாமி, ஆ. மாதவன், நீல. பத்மநாபன், அம்பை, புவியரசு, வல்லிக்கண்ணன், தி.க.சி, வெங்கட் சுவாமிநாதன், ம.இல. தங்கப்பா, சிற்பி, கோவை ஞானி, எஸ்.வி. ராஜதுரை, தகழி சிவசங்கரப் பிள்ளை, எம்.டி. வாசுதேவன் நாயர், கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்,  பெரும்புலவர் பா. நமச்சிவாயம், அ.ச. ஞான சம்பந்தம், குன்றக்குடி அடிகளார், பெரும் பட்டியல் அது.

ஈழத்து எழுத்தாளர்கள் என்று கணக்கிட்டால் பேராசிரியர்கள் சிவபாத சுந்தரம், கா. சிவத்தம்பி, டேனியல், எஸ்.பொ, வ.ஐ.ச. ஜெயபாலன், சேரன், காலம் செல்வம், தமிழ் நதி, சயந்தன், என் பிரியமான ஷோபா சக்தி முதலானவரை இந்தியாவிலேயே பார்க்கும் வாய்ப்பு இருந்திருக்கிறது எனக்கு.

காலச்சுவடு சென்னையில் நடத்திய தமிழ் இனி 2000 மாநாட்டுப் புத்தகக் கண்காட்சியில், நீண்ட நாட்களுக்குப் பிறகு மறுபதிப்பு வந்த என் மூன்றாவது நாவல், மாமிசப் படைப்பு, 10 படிகள் ஒருவர் வாங்கிப் போனார். அன்று வாங்கிப் போனவர் காலம் செல்வம் என்று எனக்குத் தெரியாது. என்னையும் அவர் அறிந்திருக்கவில்லை. பார்க்க எனக்கு அழுகையே வந்துவிட்டது. இத்தனை மோசமான நாவலைக் காசு கொடுத்து வாங்கிப் போகிறாரே என்பதனால் வந்த அழுகை அல்ல அது.

நான் சொல்ல வருகிற விஷயம், இந்த இயல் விருது எனக்கு வழங்கப் பெறாதிருந்தால் நான் கனடா வருவதெங்கே, அ. முத்துலிங்கத்தைக் காண்பதெங்கே?

2012 ஆம் ஆண்டு, ஜூன் முதல் வாரத்தில், நான் பாஸ்டனில் இருந்தபோது அவரும் அந்நகரில் இருந்திருக்கிறார். அவர் நகர் நீங்கிய பிறகே, பாஸ்டன் பாலாஜி மூலம் எனக்கந்தத் தகவல் கிடைத்தது.

இப்போது எனக்குத் தோன்றும் திருக்குறள் – 484,

‘ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி இடத்தாற் செயின்’

எனவே எனக்குத் தோன்றுவது, இந்தப் பின்புலத்தில், இந்த விருது, என் படைப்புக்களின் தர மதிப்பீடு என்று. சில ஆண்டுகளுக்கு முன்பு, கனடா இலக்கியத் தோட்டம், கட்டுரை இலக்கியத்துக்கு எனக்கு விருதளித்தபோது, என்னைக் குறித்து எழுதப்பட்டிருந்த வாசகம் எனக்கு அளவிலா ஊக்கம் தந்தது. அதுபோல் இந்த விருதும் எனக்கு வழங்கப்பட்டாலும் எதையும் சாதித்துவிட்டதான உறுதி இல்லை. ஒரு வேளை வரும் சில ஆண்டுகளில் சாதிக்கும் வாய்ப்பு உண்டு. 2013 – ஆம் ஆண்டுக்கான என் திட்டம் மொத்தம் 1000 பக்கங்களில் மூன்று நூல்கள்.

1.         கம்பனின் அம்பறாத்தூணி

2.         சிற்றிலக்கியம்

3.         நாஞ்சில்நாட்டு உணவு.

உடல், மன ஆரோக்கியம் சீராக இருந்தால், இன்னுமோர் 10 ஆண்டுகள் நான் எழுத நேரலாம். மேலும் ஐந்து நூல்களேனும் அப்போது, திருத்தப்பட்ட இன்னுமோர் வாழ்நாள் சாதனைக்கான விருது நீங்கள் திட்டமிட வேண்டியதிருக்கும்.

1996 – ஆம் ஆண்டில் சதங்கை இதழில் நானொரு கவிதை எழுதினேன். எனது முதல் கவிதைத் தொகுப்பு மண்ணுள்ளிப் பாம்பு. அதை உள்ளடக்கியது. சொல்லில் முடியாத கோலம் என்பது தலைப்பு.

‘இரவெலாம் விழித்து

அடர்மழை பொழியும்

காலையில்

எழுதி முடித்தான்

நோபல் பரிசின் ஏற்புரை

படைப்பை இனிமேல்

யோசிக்கலானான்’

அஃதோர் பகடிக் கவிதை. ஆனால் பகடி இல்லாமல் இப்போது சொல்கிறேன். வெகுநாளாய் மழையற்றதொரு கோடை நாளில் எழுதி முடித்தேன் இந்த ஏற்புரை. பேசி முடித்திருக்கிறேன் டொராண்டோவில், ஜூன் 15, 2013 – இல். படைப்பை இனி நான் தீவிர கதியில் யோசிக்க வேண்டும்.

என் எழுத்துகள் மீது நம்பிக்கை வைத்து இயல் விருதை எனக்கு வழங்கிய கனடா இலக்கியத் தோட்டத்துக்கும், கனடா வாழ் தமிழர்களுக்கும், கனடா வாழ் எழுத்தாளர்களுக்கும், கனடா நாட்டைச் சுற்றிக் காட்டிய நண்பர்களின் பெருந்தன்மைக்கும் நன்றி. எல்லோருக்கும் வணக்கம்.

(2013 ஜூன் 15 ஆம் நாள் கனடா நாட்டில் டொராண்டோ நகரில் வாசிக்கப்பட்ட உரை)

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், கானடா, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to தெய்வத்தான் ஆகாது எனினும்…

  1. T S VAIDYARMAN, சொல்கிறார்:

    As a Tamilian , i verywell appreciate and in current age, there are still people who feel shy to talk, write in Tamil and i am interested and to read more.vaazhga Tamil.Yengum Tamizh,
    Tamizhan Yenru sollada, Thalai nimirndhu nilladaa. Nanri, vanakkam.
    THIRUVENGADU SEETHARAMA VAIDYARAMAN, SYDNEY 16/6

  2. ஜெகதீஷ் குமார் சொல்கிறார்:

    அற்புதமான உரை. நாஞ்சில் ஐயா, தமிழ் இலக்கியத்தில் உங்கள் போன்றோர் இருந்து ஒளியும் வழியும் காட்டுவதால்தான் எங்கள் பயணம் சிரமமின்றித் தொடர்கின்றது.

    பாரதியின், கம்பனின், அவ்வையின் கவிச்சீற்றத்தை உங்களிலும் காண்கிறேன்.

    தங்கள் பாதம் பணிகிறேன்.

    • Vaidya Raman சொல்கிறார்:

      i do not know whether I am right or wrong,but the starting
      ‘must be DAIVATHAAL yenru irrukkavenum.ANYWAY, the whole thamizh lanuage is
      well written and happily read.regards tsv sydney 17/6

      KEEP GOING:
      U R about to discover ur own greatness:
      ===============================

  3. அ.பகீரதன் சொல்கிறார்:

    நன்றாக இருக்கிறது, உங்களை சந்திக்க முடியாமல் போனதில் மிக வருத்தமாக உள்ளது. வாழ்க பல்லாண்டுகள்.

  4. rathnavelnatarajan சொல்கிறார்:

    நாஞ்சில் நாடன்

    (2013 ஜூன் 15 ஆம் நாள் கனடா நாட்டில் டொராண்டோ நகரில் இலக்கிய தோட்டம் வழங்கிய இயல் விருது விழாவில் வாசிக்கப்பட்ட உரை) = எனது பக்கத்தில் பகிர்கிறேன். ஆதங்கமான உரை. நண்பர்கள் படிக்க கேட்டுக் கொள்கிறேன்.

  5. k. s. ilamathi writer சொல்கிறார்:

    மிக நல்ல பதிவு ஐயா. காகம் என்ன குயில் என்ன இரண்டுமே இயற்கையின் எழில் ஓசைகள்தானே. ஆயினும் அந்தக் குயிலின் முட்டையைக் கூட காகம்தானே அடைகாக்கிறது.

    அடியேனும் ஒரு தமிழ் எழுத்தாளன் என்ற முறையில் தங்கள் கருத்துக்களை கூர்ந்து வாசித்தேன். பல இடங்களில் தமிழ் எழுத்தாளர்களின் நிலை குறித்து மனம் வருந்தினேன்.

    தாங்கள் எதற்கும் தலைவணங்காமல் தங்கள் கொள்கையில் நிலை நிற்கும் பாங்கு தமிழர்களின் நெஞ்சார்ந்த உறுதியைப் படம் பிடித்தது. நன்றி வணக்கம்.

  6. A.Chandrasekar சொல்கிறார்:

    Dear Sir,
    Keep going. We are proud of you. Our heart is with you.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s