பூனைக் கண்ணன் கடத்திய அம்மன்

p74
நாஞ்சில் நாடன்
நினைத்ததுபோல் அம்மன் சிலை அவ்வளவு கனமாக இல்லை. உள்ளே கோயில் கருவறையில் இருப்பது கற்சிலை. அதைக் கிளப்பத்தான் பொக்லைன் வேண்டும். ஆனால், கோயில் உக்கிராண அறையில் பூவரச மரப் பத்தாயத்தில் காலம் முழுக்கக்கிடந்த அம்மன் சிரமம் தரவில்லை. ஐந்து கிலோ இருப்பாள். சின்ன உரச் சாக்கில் அடக்கஒடுக்கமாக நட்டக்குத்தறக் கிடக்கிறாள். மாசி, பங்குனி மாதக் கொடை நாட்களில் வெளியே எடுத்து, புளி போட்டுத் தேய்த்து, மற்றொரு முறை திருநீறு போட்டுத் துலக்கி, தயாராக உள்கோயிலில் அம்மனின் கற்சிலைக்கு இடது பக்கம் வைத்திருப்பார்கள்.
நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வில்லுப்பாட்டுக்காரர் அம்மன் வரத்துப் பாடி, முரசு எகிறிக் குதிக்க, கோமரத்தாடிகளுக்கு ஆராசனை வந்து ஆடிப் பூ எடுத்து, சுற்றுபாடுத் தெய்வங்களுக்குப் பலி முடிந்து, சாமிக் கொண்டாடிகள் கோயில் நடைக்கு இறங்கும்போது, கோயில் முன் வாசலில் மான் வாகனம் ஜோடிக்கப்பட்டு பீடத்தின் மேல் அம்மன் சிலையை இருத்தி, மணிக்கயிற்றால் வரிந்துகட்டி, சர்வ அலங்காரியாகச் சற்றுக் கர்வத்துடன், கனிந்த பார்வையுடன் வீற்றிருப்பாள் அம்மன். அவளுடைய கையில் அவள் தோள் உயரத்துக்கு முச்சூலம் பொன்னே போல் ஒளிரும்.
சற்றுப் பயமாகவே இருந்தது பூனைக் கண்ணனுக்கு. எத்தனையோ குற்றங்கள், பாவங்கள் செய்திருக்கிறான். என்றாலும், தினமும் அம்மனின் மஞ்சள் காப்பைப் பூசித் திரிபவனுக்கு அவளையே களவாடுவதில் அச்சம். அன்ன விநாயகம் அடியாளான பூனைக் கண்ணனுக்குப் பலதரப்பட்ட வேலைகள்.  நாகரிக உலகத்தில் பல நிறுவனங்களில் சமூக விரோத வேலைகளுக்கு என்றே, நல்ல சம்பளத்தில் கார் வசதியுடன், செல்போன் சகிதம் அலுவலர் ஒருவர் இருப்பார். லஞ்சம் பேசி, அதை எவ்விடம், யாரிடம் கொடுப்பது; மது விருந்துகள் ஏற்பாடு செய்வது; சட்ட விரோதமாக உதவிகள் செய்வோருக்கு வெளிநாட்டுப் பயணங் கள் ஏற்பாடுசெய்வது; கேளிக்கைகளுக்கு அழகிகளைக் கூட்டிக்கொடுப்பது என ஏகமான பணிகளை அவர் பார்ப்பார். இவற்றை சின்னத் தோதில், ஊர்ப்புறத்துத் தோட்ட உரிமையாளருக்குச் செய்துகொடுப்பது பூனைக் கண்ணனின் வேலை. பண்ணை வீடுகளுக்கு இரவு விருந்தாட வரும் சின்னச் சின்னப் பெரும்புள்ளிகளுக்கு, அவர் சொல்லும் கேளிக்கைக்காரிகளை டிரைவருடன் சென்று பாதுகாப்பாகக் கொணர்ந்து, அதிகாலை திரும்பக்கொண்டுவிடுவது; சில்லறை வெட்டுக் குத்துக்களுக்கு ஆட்களை அடையாளம் காட்டுவது; எதிர்க் கட்சிக் கூட்டங்களில் சாரைப் பாம்பு அவிழ்த்துவிடுவது; தேர்தல் காலங்களில் சாக்குமூட்டைகளில் ரூபாய் நோட்டுகளைக் கொண்டுசேர்ப்பது… சின்னத் தோதில் அரசியல் கட்சிக்கு ஆதரவாக இருப்பவரின் அடியாளாக இருப்பது என்பது லேசுப்பட்ட காரியமா என்ன?
அன்னவிநாயகம் மத்திய-மாநில அமைச்சராக, நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினராக, மாநகர-பெருநகரத் தந்தையாக, மாநில ஆளுநராக எல்லாத் தகுதிகளும் உடையவர். இன்றெல்லாம் பணம் அலையும் காற்றில், உறைந்த மலையில், சலிக்கும் மணலில், பொடியும் கரியில் காய்க்கிறது. தவிரவும் பெரும்புள்ளி ஒருவரின் பினாமி ஆகவும் தனது மனைவியை, மக்களை, மைத்துனர்களைத் தயாரித்திருந்தார். முன்னால் போனால் கடிக்கும்… பின்னால் போனால் உதைக்கும் என்பதால், ‘சட்டம் ஒரு கழுதை’ என்றானாம் அறிஞன் ஒருத்தன். ஆனால், மேதைகள் வடிவமைத்த இந்தியச் சட்டம் இல்லாப்பட்டவனைத்தான் கடிக்கும், உதைக்கும்.
அன்னவிநாயகத்தின் பண்ணை வளாகத்தில்தான் பூனைக் கண்ணனின் இருப்பு. கூட இரண்டு நாட்டு நாய்களின் கூட்டு. செல்லும், செலவும், உணவும், துணியும் கிடைக்கும். கட்சிப் பேரணிகள், எழுச்சி மாநாடுகள், பொன்மொழி மாநாடுகள் என்று வெள்ளை ஸ்கார்ப்பியோவில் அன்னவிநாயகம் போகும்போது செந்நாய்ப் படைபோல, ஓட்டுநருக்குப் பக்கத்து இருக்கை, பூனைக் கண்ணனுக்கு. ஸ்கார்ப்பியோ நிற்க யத்தனிக்கும்போதே கதவு திறந்து குதித்து, அன்னவிநாயகத்துக்குக் கதவு திறந்துவிடுவது, அவர் நடக்கும்போது, ‘விலகு விலகு’ என்று ஆள் ஒதுக்குவது, தங்கும் இடங்களில் எடுபிடி வேலைகள் செய்வது என்று ஏகப்பட்ட மக்கள் பணி அவனுக்கு. பூனைக் கண்ணன் சின்னத் தோதில் செய்த வேலைகளைப் பெரிய தோதில் செய்தார் அன்ன விநாயகம்.
அம்மனைத் தலையிலும் தூக்க முடியாது, தோளிலும் போட முடியாது. சாக்கின் வாயைச் சுருட்டிப் பிடித்து, புத்தகப் பையைத் தோளில் மாட்டுவதுபோலப் பற்றி இருந்தான் பூனைக் கண்ணன். அருள் பாலிக்கும் கமலக் கால்களாலும், மூவுலகின் பசியாற்றும் பொற்கிண்ண முலைகளாலும், அபயம் அளிக்கும் கருணைக் கரங்களாலும், திரிசூலத்தாலும் முதுகில் குத்திக்கொண்டே இருந்தாள் அம்மன்.
பூனைக் கண்ணனுக்குத் தலைவர் உத்தரவு வேறாக இருந்தது. ‘ஊர் முதலடி’ எனும் பதவி நிலவுடமையாளர், ஆள்கட்டு உடையவர், அதிகாரம்கொண்டவர், பணம் போட்டுப் பணம் எடுப்பவருக்கு ஊர் ‘மனமுவந்து’ அளிப்பது. இந்து அறநிலையத் துறை ஆலயங்களின் தக்கார்போல. தக்கார் என்பவர் பெரும்பான்மையும் தகவிலர்தானே! ஆனால், அரசாங்கக் கெடுபிடிக்குள் வராத ஊர்க் கோயில்களுக்கு, ஊரே முதலடியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும். கோயில் நிலங்களைப் பாட்டம் கொடுத்து நெல் அளந்து வாங்குவது; அல்லது தானே பாட்டமாக வைத்துக் கொள்வது; நெல்லைப் பத்தாயப் புரையில் போட்டுவைத்திருந்து, சமயம் பார்த்துக் கூடுதல் விலைக்கு விற்று, குறைந்த விலையில் கணக்கை எழுதிக்கொள்வது; வரி வசூலித்துக் கொடை விழா நடத்துவது; கோயில் பிரசாதங்களில் முதல் மரியாதை பெறுவது; கோயில் சாவி, அம்மன் சிலை, வெள்ளி அங்கிகள், உருப்படிகள் பாதுகாக்கப்படும் பத்தாய சாவி, நெல்புரை சாவி, செம்பு -உருளி-நிலவாய் -அண்டா- போணி – குட்டுவம் எனக் கிடக்கும் பாத்திரப் புரைச் சாவி, கணக்கு வழக்குகள் எல்லாம் முதலடியின் பொறுப்பில் வரும்.
சரிகைக் கரை வேட்டி, மாரில் சந்தனம், நெற்றியில் திருநீறு, மஞ்சள் காப்பு, குங்குமம் என்றொரு தோரணை உண்டு கோயில் காரியங்களில். சுய மரியாதைக் கட்சி, இந்திய தேசியக் கட்சி, ஊர் முதலடி, எல்லாம் முரண்பாடான கூட்டணி அல்லவா என்று உமக்குத் தோன்றக்கூடும். இன்றைய சமூகப் பின்நவீனத்துவம் அது. நள்ளிரவில், கோயில் சாவியை எடுத்துக் கொடுத்து, உக்கிராணப் புரைச் சாவியை அடையாளம் காட்டி, பத்தாய சாவியைத் தெரியக்காட்டிச் சொன்னார் முதலடி.
”உருப்படிகளைத் தொடப்படாது. அங்கிகள்ல கை வைக்கப்படாது. அம்மன் சிலைய மட்டும் இந்தச் சாக்கிலே போட்டுக் கட்டிக்கொண்டாந்திரு. ஒரு குருவி அறியக் கூடாது. வீட்டுக்குக் கொண்டாராண்டாம். வயக்காட்டோட பம்மிப் போய், இலுப்பாத்தங்கரையிலே ஏறு… அங்க நம்ம கட்டைப் பூலிங்கம் நிப்பான். அம்பாசடர் காரு இருட்டிலே ஒதுங்கி நிறுத்திக்கெடக்கும்… நேரே கும்பகோணம் போயிருங்கோ. விடிஞ்ச பெறவு நான் ஸ்கார்ப்பியோவில் பொறப்பட்டு வாறன்… என்னா? சூதானமாச் செய்யணும்… அம்புட்டேனு வையி, கொரவளையை அறுத்தாலும் என் பேரு வெளியில வரப்படாது. கோயிலைப் பூட்டி, சாவியை மட்டும் நம்ம மாட்டுத் தொழுவிலே வெச்சிட்டுப் போ. செலவுக்குப் பணம் கட்டப் பூலிங்கத்துக்கிட்டே இருக்கு… போ… பாத்துச் செய்யி.”
ஆனால், பணிக்கப்பட்ட திசைக்கு எதிர்த் திசையில் ஓடிக்கொண்டிருந்தான் பூனைக் கண்ணன்.
போன கொடைக்கு அம்மன் சிலையைத் துடைத்துச் சுத்தப்படுத்த வெளியே எடுத்தபோது, அன்னவிநாயகத்தின் இரண்டாம் மருமகன் தொல்லியல் துறை அதிகாரியாக இருந்தான். கொடை பார்க்க மாமனார் வீட்டுக்கு வந்தவன், பொழுது போகாமல் கோயிலுக்குள் நுழைந்தான். இரவு வாகனத்தில் வைத்துக் கட்ட, புளிபோட்டுத் துலக்கிவைத்திருந்த அம்மன் சிலையைத் தூக்கிப் புரட்டிப் புரட்டிப் பார்த்தான். முகத்தில் வியப்பு ரேகைகள் அடர்ந்தன.
அன்னவிநாயகம் சொன்னார் ”என்ன மாப்பிள? வெறும் பித்தளைதான். சவம் கறுத்துப் போயிக் கெடந்து…”
மருமகன் ஒன்றும் சொல்லவில்லை. திங்கள் இரவில், கோயிலில் ‘குடி அழைப்பு’ முடிந்த பிறகு, அன்னவிநாயகம் வெற்றிலை போடும்போது மெதுவாகப் பேசினான்.
”மாமா, அம்மன் சிலை பித்தளை இல்ல.”
”பின்னே?”
”ஐம்பொன்னாக்கும்…”
”ஓகோ! அப்படின்னா மதிப்புக் கூடுதல்லா?”
”ம்… இந்த உசரம், எடைக்கு ஐம்பொன்னுன்னா உள்ளூர் மார்க்கெட்ல பத்துப் பதினஞ்சு லகரம் போகும். ஆனா, சங்கதி அது இல்ல. சிலையோட பீடத்தில் ஒரு லச்சினை இருக்கு, கவனிச்சேளா?”
”லச்சினைன்னா?”
”அரச முத்திரை. என் கணக்கு சரியா இருந்தா… ஆயிரத்தி நூறு வருஷத்துக்கு முந்தினது. உங்க ஊர்ப் பெயரைவெச்சுப் பாத்தா வீரநாராயணன் சடையன் காலமாட்டு இருக்கும்.”
”அதாரது மாப்பிளை?”
தொடர்ச்சியை படிக்க:  http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=33477
ஓவியங்கள்: அரஸ்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், விகடன் கதைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

2 Responses to பூனைக் கண்ணன் கடத்திய அம்மன்

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான பதிவு.
    நன்றி.

  2. Naga Rajan சொல்கிறார்:

    பணம், அலையும் காற்றில், உறைந்த மலையில், சலிக்கும் மணலில், பொடியும் கரியில் காய்க்கிறது – அருமையான பதிவு

பின்னூட்டமொன்றை இடுக