வந்தான்,வருவான்,வாராநின்றான்

 photo (31)
நாஞ்சில்நாடன்
ஜீன்மாத மழையில் நனைந்து கொள்ளலாம் என மே மாத வெயில் சாலைகளையும் உயர்ந்த அடுக்குக் கட்டிடங்களையும் சாக்கு படுதாவும் பாலிதீன் கூரையும் வேய்ந்த குடிசைகளையும் ஓட்டுக்கூரை வரி வீடுகளையும் பழுக்கக் காய்ச்சிக் கொண்டிருந்தது.அபூர்வமாய் தென்பட்ட மரங்களின் நாசித் துவாரங்களில் எல்லாம் தூசி அடைத்துக் கொண்டு வெயில் அதனை இறுக்கிக் கொண்டிருந்தது. காலை ஒன்பது மணி முதல் மதியம் இரண்டு மணி வரை வெயிலில் அலைவதென்பது அன்றாடம். தலையில் இருந்து மயிர்க்காடுகள் வழியாக நீரூற்றுக்கள் வழிந்தன. அன்று வெயில் மேலும் காட்டமாக இருந்தது. தூசுகள் மினுங்கிய சந்துகள் வழியாக நிறைய அலைய வேண்டியது இருந்தது.
மொரார்ஜி மில்லின் இரண்டாவது யூனிட் பக்கமுள்ள சந்து வழியாக பிரகாஷ் மில்லுக்கு நடந்து  போய்வருவது என்பது செளகரியமான காரியம் அல்ல.அந்த பாதையில் பஸ்கள் போவதில்லை.நகரின் அந்தப் பகுதியில் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.டாக்ஸியில் போனால் கட்டுப்படி ஆகாது.அந்த வெயிலிலும் இறுக்கமான சாட்டின் பாவடையும் ரவிக்கையும் போட்டுக்கொண்டு குடிசை வாசல்களில் புணர்ச்சிக்கூலிக்கு ஆள் தேடிக்கொண்டு நிற்கும் பருவம் தாண்டிய தெலுங்குக்காரிகள்.
நாக்கை வறட்டியது தாகம்.எலுமிச்சம் பழமும் இஞ்சியும் சேர்த்துச் சதைத்த கரும்புச்சாறு ஐஸ் போட்டு இரண்டு தம்ளர்கள் இறங்கியும் நாவறட்சி தணியவில்லை.
மாலையில் மூக்கு ‘ஙொணஙொண’ என்றது.தொண்டையில் இளஞ்செருமல்.அடுத்த நாள் காலையில் மூக்கு அவ்வளவாய் ஒழுக வில்லை என்றாலும் நாசித்திமிர்கள் ‘கணகண’வென்று தணிந்து எரியும் அடுப்பாய் காந்தின.அன்று மேலும் அலைச்சல்,வெயில்,தூசி,ஐஸ் போட்ட கரும்புச் சாறு.
மூன்றாம் நாள் எழுந்திருக்கும்போது மேல் எல்லாம் வலிப்பது போலிருந்தது.வறண்ட இருமல்.சுவாசிக்கச் சற்று சிரமமாக இருந்தது.ஒருநாள் ஓய்வெடுத்தால் சரியாகிப் போகும் என்று வேலைக்குப் போகவில்லை.இரவில் மூச்சுவிடும்போது விரல்களால் இருபக்க செவித்துவாரங்களை அடைத்துவிட்டுக் கேட்டால் விசில் அடிப்பது போல் சன்னமான ஒலி.மறுநாள் காலையில் பாத்ரூம் போய்விட்டு வந்தாலே மூச்சு வாங்கியது. தொடர்ந்து பேசினாலும் இருமல் வந்தது.நெற்றியில் வியர்வை துளிர்த்தது.விக்ஸ்,அமிர்தாஞ்சன்,கோல்ட்ரின் பிளஸ்,ஆக்‌ஷன் நானூற்றுத் தொண்ணூற்று எட்டு எதுவும் எடுபட வில்லை. சுக்கும் மிளகும் தட்டிப்போட்ட கருப்பட்டிக் காப்பி சற்று இதமாக இருந்ததே தவிர நிவாரணம் இல்லை.
சாயங்காலம் மெதுவாக நடந்து கடைத்தெருப்பக்கம் வந்தான்.வழக்கமாய் இது போன்ற சில்லறை உபாதைகளுக்காய் பார்க்கும் வாமன்ராவ் பாட்டீல் அன்று வார விடுமுறை.நல்ல டாக்டராய் பார்த்துக் காட்டலாம் என்று பாலிகிளினிக் வாசல்களில் பெயர்ப்பலகைகளை படித்துக்கொண்டு நடந்தான்.மனதுக்கு பிடித்த மாதிரி ஒரு பெயரும் அமையவில்லை.ஜரிவாலா,லோகன்ட் வாலா,பாட்லி வாலா என்று தொழிலுகு சம்பந்தமில்லாமல்…சூரத் மிட்டாய் வாலா கடைக்கு அடுத்த வாசலில் டாக்டர் விஜய் நெகலூர் என்று கண்டிருந்தது.இவரே ஆகலாம் என்று முதல் மாடி ஏறி போனான்.மாடிப்படி ஏறுகையில் இளைத்தது.மூச்சு வாங்கும் சத்தம் சன்னமான சோகரசம் பிழியும் ஷெனாய் வாத்தியம் போல பொதுமக்களுக்குக் கேட்குமோ என்று அச்சமாக இருந்தது.
டாக்டர் இருந்தார்.கூட்டம் அதிகமில்லை.’இந்த நோயினால் நீங்கள் செத்து போகத்தான் வேண்டுமென்றால் கவலைப்பட்டு பயனில்லை. சாகப்போவதில்லை என்றால் எதற்காக கவலைபட வேண்டும்’ என்ற ரீதியில் ஆங்கில வாசகம் கொண்ட அட்டை சுவராசியம் தருவதாக இருந்தது.
தன்முறை வந்ததும் உள்ளே போனான்.சுருக்கமாகச் சொன்னான்.குழல் வைத்து பரிசோதித்து,நாக்கை நீட்டச் சொல்லி டார்ச் அடித்துப் பார்த்தார்.கண் இமைகளைத் தாழ்த்திப் பார்த்தார். பலமாக மூச்சை இழுத்துப் பிடித்து நிறுத்தச் சொன்னார்.
முழுக்கதையயும் தொடர்ந்து படிக்க :
வந்தான்,வருவான்,வாராநின்றான் – நாஞ்சில்நாடன்
அழியாச் சுடர்கள்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to வந்தான்,வருவான்,வாராநின்றான்

  1. Aadhi சொல்கிறார்:

    Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s