சிறுவர் செடி வளர்ப்போம்

481359_326722007432627_1785123330_n
நாஞ்சில்நாடன்
இன்று  ஒன்று நன்று!
 (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது)
விகடன் வாசகர்களுக்கு வணக்கம் !
நாஞ்சில் நாடன் பேசுகிறேன் !
கோவையில், பெரிய கல்யாணங்களுக்குப் போனால், மணமக்களை வாழ்த்தி, சாப்பிட்டுத் திரும்பும் பொது, தாம்பூலப் பையில் ஒரு தாவரக் கன்று தருகிறார்கள்.  சில பெரிய துணிக்கடைகளிலும் துணி வாங்கித் திரும்பும் போது செடிகள் தருகிறார்கள்.
கொய்யா,  மாதுளை,  சீதாப்பழம்,  மா,  சப்போட்டா செடிக் கன்றுகள்.  வேம்பு,  புங்கன், பூவரசு,  புளியன் மரக்கன்றுகள்.
பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும்,  குழந்தைகள் ஆர்வத்தோடு வாங்கிச் செல்லும் பொது.  எப்படியும் வீட்டு சுற்றுச் சுவருக்கு உள்ளேயோ,  வெளியேயோ மண்ணில் குழி பறித்து நடுவார்கள்.  தண்ணீர் ஊற்றுவார்கள்.  தினமும் செடி நல்லாருக்கா என்று போய்ப் பார்ப்பார்கள்.  அது புதுத் தளிர் விட்டால் மகிழ்வார்கள்.  சின்னப் பூஞ்செடிகளாக  இருந்தால் மொட்டு விடுவதை, பூப்பதைக் கண்டு பூரிப்பார்கள்.  சின்ன காய்கறிச் செடிகளாக வெண்டை, கத்தரி,  அவரை,  சுண்டை,  மணத்தக்காளி,  தக்காளி என்றால் அந்தக் காய்கள் பெரிதாகிப் பறிப்பதை ஆர்வமுடன் செய்வார்கள்.  குழம்பில், கூட்டில், பொரியல்களில் அந்தக் காய்களைக் கண்டால் உற்சாகத்துடன் பேசி உண்பார்கள்.  இது நான் வளர்த்த வெண்டையாக்கும் என்று பெருமிதம் கொள்வார்கள்.
இதன் மூலம் நாம் சாதிப்பதென்ன?
மூன்று வெண்டைக்காய், மூன்று தக்காளிக்கான உழைப்பு, அதன் மதிப்பீடு, காய்களின் விலை என்றெல்லாம் யோசிப்பார்கள் பெற்றோர்.  மூடன்தான் அப்படி யோசிப்பான்.
இதன் மூலம் ஒரு உயிர்த் தாவரத்துக்கும் சிறுவர் சிறுமியருக்கும் இடையில் நாம் ஒரு நல்லுறவை ஏற்படுத்துகிறோம்.  காய்கறிகள் பால் அக்கறை ஏற்படுத்துகிறோம்.  தாவரங்களின் மீது கரிசனத்தை, நட்பை, அன்பை ஏற்படுத்துகிறோம்.  இது மனித மனத்தை மேம்படுத்த உதவும்.  சுற்றுச் சூழலைக்காக்க உதவும்.  ஒரு செடிக்குத் தண்ணீர் விட்ட பின் அதன் இலைகள் சிலிர்ப்பதை, பச்சை நிறம் காட்டி சிரிப்பதை உணருவார்கள்.
தாவரங்கள் சூழலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.  வெம்மையை வாங்கிக் கொள்கின்றன.  கார்பன் டை ஆக்சைடு சுவாசித்து ஆக்சிஜனை வெளியேற்றுகின்றன.
பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தமானதல்ல. பறவைகள், விலங்குகள், மீன்கள், புல் பூண்டுகள், மரம் செடி கொடிகள், சின்னஞ்சிறு பூச்சிகள் எல்லோருக்குமானது.  பூமியின் மொத்த இடத்தையும் வளங்களையும் மனிதன் அபகரித்துக் கொள்ள முனையும் பொது அவன் தனது சந்ததிகளின் அழிவுக்கான கண்ணி வெடிகளைப் புதைத்து வைக்கிறான்.  அது 30 ஆண்டு, 50 ஆண்டு, 100 ஆண்டு கழித்து வெடிக்கும்.
இந்த நிலையை சிறுவர் சிறுமியர் தடுக்க முடியும்?
உடனே கேட்கிறார்கள்!  ஆயிரம் செடிக்கன்றுகள் கொடுத்தாச்சு,  ஆயிரமுமா தழைத்து வளரும்?
எல்லாம் முளைக்காது, தழைக்காது, பூக்காது, காய்க்காது.
சில செடிகளை வாங்கிக் கொண்டு பொய், மறந்து மூலையில் வாடப் போட்டு விடுவார்கள்.
சில செடிகள் நட்டு வைத்தாலும் தளிர் விடாது,  வாடிப் போகும்.
சில செடிகளை ஆடு மாடுகள் கடித்துப் போகும். என்றாலும் ஆயிரத்தில் நூறு தழைக்காதா?  பிழைக்காதா?
என்றால் அது போதும் !  அதுவே பெரிய சாதனை.  சிறுவர்களின் மனப் போக்கில் நாம் செய்யும் மாறுதல்.
சிலர் சுற்றுச் சுவர்களுக்குள் ஒரு பிடி மண்தரை இல்லாமல்,  செடி வைக்க இடம் இல்லாமல் காங்கிரீட் பாவி விடுகிறார்கள், பாவிகள்!
மண் இருந்தால் புழு பூச்சி வருமாம்.  செடி இருந்தால் சருகு உதிர்ந்து குப்பை சேருமாம்!
தலை இருந்தால் முடிவளரும்,  முடி வளர்ந்தால்,  முடி உதிரும்.  முடி உதிருகிறது என்பதற்காகத் தலையை வெட்டும் அதிபுத்திசாலிகள் இவர்கள்.
ஆனால் சிறுவர் சிறுமியர் உலகத்துக் கறைகள் படாதவர்.  அவர்கள் நினைத்தால் இந்த தாவர நேசத்தை வளர்க்க இயலும்!.
############
தட்டச்சு உதவி: பிரவீன்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், இன்று ஒன்று நன்று, நாஞ்சில்நாடன் கட்டுரைகள், விகடன் கதைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to சிறுவர் செடி வளர்ப்போம்

  1. நல்ல விசயம். சிறுவர் சிறுமிகளை இயற்கையோடு இணைந்து வாழ வைக்க செடிகளை வளர்க்கப் பழக்குவது, கடல்-மலை போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்வது, மறைந்து வரும் நம்ம ஊர் விளையாட்டுகளை ஆடச்சொல்வது எல்லாம் அவர்களுக்கு உதவும். இதனால் சம்பாதிக்க முடியுமா என்று யோசிக்காமல் செயல்படுத்த வேண்டியது பெரியவர்களின் கடமை. பகிர்விற்கு நன்றி.

  2. இரா.ஹேமலதா சொல்கிறார்:

    மரம் வளர்ப்பது ஆரோக்கியமட்டுமில்லை மனித மாண்புகளையும் வளர்கிறது’ சிறுவர்களுக்குக் கற்று தர வேண்டிய அதிமுக்கிய பாடம்.தாங்கள் எழுத்து பணி மேலும் பசுமையாகட்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s