நாஞ்சில் நாடன்
இன்று ஒன்று நன்று
(விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது)
அன்புள்ள விகடன் வாசகர்களுக்கு வணக்கம் !
தெரியும் இல்லையா, இது நாஞ்சில் நாடன் !
சமீபத்தில் ஐம்பது நாட்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் போயிருந்தேன் அரசும் அனுப்பவில்லை, அமெரிக்க அரசும் அழைக்கவில்லை. அங்கு வாழும் இலக்கிய ஆர்வமுடைய நண்பர்கள் அழைத்துப் போனேன், அவர்கள் செலவில்.
இருபத்திரண்டு மாநிலங்கள் போனேன். சில மாநிலங்களில் சாலை வழியாகப் பயணம் செய்தேன், காரில், உத்தேசமாக 8000 அல்லது 9000 மைல்கள்
நல்ல சீரான சாலைகள் நவீன வாகனங்கள் அதி வேகம். ஒரு சந்தர்ப்பத்தில் பன்னிரண்டு மணி நேரம் Fremont நகரில் இருந்து Los Vegas நகரம் வரை போனோம். இரண்டு வேளைக்கும் உணவு கைவசம் காரில் இருந்தது
பயணம் போய்க் கொண்டிருக்கும் போது, எனது ஆச்சரியம் ஐம்பது மைல், நூறு மைலுககு ஒருமுறை, தேசிய நெடுஞ்சாலையின் வலது கைப் பக்கம் அறிவிப்புத் தட்டிகள் வைத்திருந்தனர். Rest Place 3 Miles, Rest Place 2 Miles, Rest Place 1 Mile என்று. அறிவிப்புத் தட்டிகள் காட்டிய அம்புக் குறிகளைத் தொடர்ந்து போனால் பத்து ஏக்கர் பரப்பளவில், மரங்கள் சூழ ஓய்விடங்கள் இருந்தன.
காரை பார்க்கிங் செய்து விட்டு, கை கால்களை நீட்டி நிமிர்ந்து உதறிக் கொண்டார்கள். காரில் சேமிதம் ஆகி இருந்த, வழியில் சாலையோரங்களில் தூக்கி வீசாத காலி பாட்டில்கள், செய்தித்தாள்கள், உண்ட மிச்சங்கள், பழத் தோல்கள் எல்லாவற்றயும் குப்பைப் பெட்டிகளில் தேடிக் கொண்டு போய் போட்டார்கள். அதில் இரண்டு வகைக் குப்பைத் தொட்டிகள். பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், கேன்கள், செய்தித்தாள் என மறு சுழற்சி செய்வதற்கானவை ஒரு தொட்டியில். மற்ற மட்கும் குப்பைகள் மறு தொட்டியில்.
சூயிங்கம் மென்று வந்த சிறுமி, தன கையில் இருந்த சூயிங்கம் பொதிந்த தாளில் மென்றதைச் சுருட்டி, தொட்டியில் போட்டு விட்டுப் போனாள் . வழக்கம் போல, நம்மூரில் ஒரு நாள் டவுன் பஸ்சில் பயணம் போனேன். நின்றபடி பிரயாணம், மேலே கம்பியைப் பிடித்தேன். கையில் பிசுபிசுவென்று ஒட்டியது. கையை எடுத்து மோந்து பார்த்தேன். மென்று துப்பிய சூயிங்கம். ஆகா! நாம் எத்தனை அறிவாளிகள் என்று வியப்பு ஏற்பட்டது.
அது கிடக்கட்டும்.
இந்த REST Place களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உபயோகிக்க சுத்தமான Rest Rooms எனப்படும் கழிப்பறைகள். கழிப்பறைகளில் சோப்புத் திரவம், துடைக்கக் காகிதங்கள், கை உலர்த்த உலர்காற்று.
வெளியே சுத்தமான குடி தண்ணீர். காசு போட்டு எடுத்துக் கொள்ளும் படியாகக் குளிர் பானங்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள், சாக்லேட்டுகள்.
உட்கார்ந்து சாப்பிட சிமென்ட் பெஞ்சுகள், மேசைகள், நிழற் கூடங்கள். வளர்ப்பு விலங்குகளுடன் பயணம் செய்வோர் பயன்படுத்த ஒதுக்கமான பகுதிகள்.
எல்லாம் இலவசமாக.
நாமும் பயணம் செய்கிறோம், தங்க நாற்கரச் சாலைகளில், காரில். வயிற்றெரிச்சல் படுவதைத் தவிர்க்க முடியவில்லை
ஒரு முறை கோவையில் இருந்து நாகர்கோயிலுக்கு அரசு சொகுசுப் பேருந்துகளில், தனியார் அதி நவீன குளிர்பதன சொகுசோ சொகுசுப் பேருந்துகளில் பயணம் செய்து பாருங்கள் வழியில் டீ குடிக்க நிறுத்துவார்கள். மூத்திரம் பெய்ய ஆண்களுக்கு 3 ரூ, பெண்களுக்கு 5 ரூ. உள்ளே போய்விட்டு வெளியே வருவதற்கு மூச்சுப் பயிற்சி வேண்டும், வியாதியும் உறுதி.
என்னத்தைச் சொல்ல ?
—————————————————
//எல்லாம் இலவசமாக//
என்று கொடுத்து விட்டு அதன் மூலம் எத்தனை கோடிகளை அடிக்கலாம் என யோசிக்க வைத்து விட்டீர்களே.
மேலும் நாமும் மாற நடிப்பதை விட்டு விட்டு மாறா முயற்சியாவது செய்ய வேண்டும் அல்லவா.
நாஞ்சில்நாடனின் இன்று ஒன்று நன்று கேட்டேன். அமெரிக்காவை பின்பற்ற முயலும் இந்தியாவில் இதுபோன்ற நல்ல விசயங்களை அங்கே போல இங்கேயும் செய்யலாமே!