துன்னல்

oooty (7)

நாஞ்சில்நாடன்
ஓய்வு பெறுவதற்கு இன்னும் 1323 நாட்கள் இருந்தன இடையில் வரும் லீப் வருடத்தின் அதிகப்பிரசங்க நாளையும் சேர்த்து இதில் 205 ஞாயிறுகள், 99 இரண்டாம் – நான்காம் சனிக்கிழமைகள், வழங்கப்படும் 36 பொது விடுமுறைகள், எடுத்துக் கிழிக்க வேண்டிய 35 மருத்துவ விடுப்புகள், 24 சில்லறை விடுப்புகள், கையிருப்பான 53 நாட்கள் உரிமை விடுப்புடன் வரவிருக்கும் ஆண்டுகளுக்கான 90 நாட்கள், உரிமை விடுப்புக்கள் ஆகியவை கழியும்
எப்படியும் ஆளும் கட்சியோ, எதிர்க் கட்சியோ ஆண்டில் மூன்று நாட்கள் பந்த் நடத்துவார்கள்.அதைச் சேர்க்காமல் கணக்கிட்டால் இன்னும் வேலை செய்ய வேண்டிய நாட்கள் 781. மணிக்கூரில் சொல்வதானால் 5858. உத்தேசமாய் 244 நாட்கள். என்றாலும் அது எட்டு மதங்களில் முடியக் கூடிய சங்கதி அல்ல இன்னும் மூன்று ஆண்டுகளும் ஏழு மாதங்களும் அலுவலகம் வந்துதான் ஆகவேண்டும்.
சில தனியார் நிறுவனங்களில் அரசுக் கழகங்களில் விருப்ப ஓய்வு வழங்குகிறார்கள். கால் கோடி வரை பெற்றுக்கொண்டு பின்னங்கால் பிடரியில் பட ஓடுகிறவர்கள் உண்டு. நார்ப்பத்தைந்து வயதுக்குள் விருப்ப ஓய்வு. என்ன செய்வார்கள் வரும் நாட்களை? நீள் தொடர்கள், பூச்சி சினிமாக்கள், தொடையாட்டம் – முலையாட்டம் பார்த்தே காலம் கழித்து விட இயலும் தான்
அவனது இலாக்காவில் விருப்ப ஓய்வுக்கான திட்டம் வர வாய்ப்பில்லை. மேலும் இவ்வளவு கடினமாகப் பாரமிழுக்கும் இன்னொரு மாட்டை நிறுவனம் அத்தனை இலகுவில் தேடிக் கண்டடையவும் இயலாது ஒரு டன் விறகுக் கட்டைகள் நிறைந்த பார வண்டியின் வலத்தக்காளை, வாயில் நுரை தள்ளி மூச்சிரைக்க முட்டுக் குத்தும் ஏற்றம் ஏறுவதைப்போல உணர்ந்தான். மேலும் இழுக்க இயலாமல் கால்களை அகலப் பரத்தி, சிறுநீர் பிரிய, ஏற்றத்தில் நின்று பீயச்சிச் செத்துவிடலாமா, ‘தம்’ விட்டு பின்னோக்கி வண்டியை உருளச் செய்யலாமா என்றெல்லாம் தோன்றியது.
எதுவும் தீர்மானிக்கவியலாத கீழ் மத்திய தர வாழ்க்கை. முப்பதாண்டுப் பணிக்காலத்தில் முட்டாள்போல வாழ்ந்திருப்பதாக எண்ணினான். ஊழல் செய்யவும் லஞ்சம் வாங்கவும் வாய்ப்பிருந்த முன் பணிக் காலத்தில் இரத்தம் கொதித்துத் திளைத்துக்கொண்டிருந்தது. வறட்டுக் கொள்கை பேசி வாய்ப்புண்ணுடன் நின்றது இன்று வருத்தம் தருவதாக இருந்தது.
யோசித்துப் பார்க்கும்போது மூன்று விதமான மனிதப் பண்புகள் தெரிந்தன லஞ்சம் கேட்டுப் பிடுங்கிச் செல்வம் சேர்ப்பது. கேட்க இயலாமல், ஆனால் தரமாட்டானா என்று அங்கலாய்த்திருப்பது. மருந்துக்கு மோளச் சொன்னால் மண்ணில் மோண்டு கொள்கைப் பிடிப்பில் நிற்பது. பின் பணிக் காலத்தில் இரத்தம் சுண்டிய பிறகு உலகத்தோடு ஒட்ட ஒழுக மனது தயாராகிவிட்டாலும் வாய்ப்பும் வசதியும் இல்லாத இருக்கை. எல்லாம் ‘நீர் வழிப் படூஉம் புணை’.
பணி ஒய்வு பெற்று வெளியே வருகையில் மகள் படிப்பை முடித்து விட்டிருக்கலாம். மகன் பாதிக் கிணறு தாண்டியிருக்கலாம். ஜூன் மாதச் சம்பளத்தை மே மாதமே செலவு செய்து முடிந்து போகும் நகர வாழ்க்கையில் சொந்த வீட்டுக் கனவு, மகள் திருமணக் கனவு, சொந்த நாட்டில் பார்த்திராத காட்சித் தலங்கள்… ஏமப்புணைக்காகக் காண வேண்டாமோ கோபுர தரிசனங்கள்?
எல்லாம் வயிறார(?) உண்பதும் உடுப்பதுவும் வாரப் புணர்ச்சியில் வசமிழப்பதும் நீளிரவு உறங்குவதுமாக முடிந்து போய்விடும். இன்னும் சற்று வாய்வயிறு கட்டி இருந்திருக்கலாம். சடங்கு, சீமந்தம், பாண்டசுத்தி, பிறந்தநாள், நிச்சயதாம்பூலம், தாலிக்குப் பொன்னுருக்கு, செத்த துட்டி, அடியந்திரம், கோயில் கொடை என்ற ஊர் நோக்கிய ஓட்டத்தைக் குறைத்திருக்கலாம் நூறுக்கு எழுதிய மொய்யை ஐம்பதாக்கி இருக்கலாம். இருக்கலாம்…கலாம்..லாம்…ம்.கவியொருவன் பாடினான் – செத்த பின்பு பாம்பு என்றும் சுட்ட பின்பு நெருப்பு என்றும்… உதிர்ந்த தத்துவச் சாம்பல் சுட்டது எங்கணும்.
வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிற, ஏற்றிய பாரத்தை உதறி எறிந்து விட்டு வாலுயர்த்திச் சுழி போட்டுத் திரிகிற, இல்லாத பாரத்தை முக்கல் முனகல்களுடன் இழுப்பதான பாவனையில் அலட்டிக்கொள்கிற, என்றுமே பாரம் சுமக்காத சக பணியாளர்களின் சமீபமே எரிச்சலூட்டுவதாக இருந்தது.
தூரங்கள் தாண்டிவிட வேண்டும். இரவு இரண்டு மணிக்கோ, கழிப்பறை வாசலிலோ, மயான வெளியிலோ சந்தித்தால்கூட, அரசாணை, சம்பளக் கமிஷன், மாற்றல் உத்தரவு, விடுப்பூதியம் என்று சலம்பித் திரிகிற சக பணியாளக் கிருமிகளின் தொற்று தாக்கிவிடாத தூரத்தை எய்திவிட வேண்டும்.
எதைத் துறந்து எதைப் பற்ற ஓடினோம் என்று தெரிவதில்லை. ஓடியது மட்டும் உண்மை. எதையும் துறக்கவும் இல்லை பற்றவும் இல்லை. பாதுகாப்புப் பின்னல் வலை இல்லாமல் கூடாரத்தின் உச்சியில் ட்ரபீஸ் ஆடும் சாதகம் தெற்றி தலைகுப்புற வீழும்போது என்ன மனநிலையில் இருப்பான் மனிதன்?
எல்லாம் நிர்மூலம். மறுபடி கண்டு எய்த இயலாத மானுடப் பிறப்பு. வீணாய் நொறுங்கிக் கிடக்கிறது யாருக்கும் பயனற்று.
எதிர்காலம் இளைஞர்களுக்கானது என்றெண்ணிப் பெரு மூச்செறிந்தான. கழிப்பறை போய் வரலாம் எனத் தோன்றியது. தாங்கொணாத் துயர் நேர்கையில் ஒன்று உறக்கம் வருகிறது, அல்லது வயிற்றைக் கலக்குகிறது.
எழுந்து நடக்கும்போது போன மாதம் தலைமை அலுவலகத்திலிருந்து மாற்றலாகி வந்த இளம் பொறியாளரின் இருக்கையின் பக்கம் தாளொன்று பறந்து கிடந்ததைக் கண்டான். குனிந்து எடுத்து வாசிக்கலானான் –
‘ஓய்வு பெறுவதற்கு இன்னும் 13,486 நாட்கள் இருந்தன. இடையில் வரும் லீப் வருடங்களின் அதிகப் பிரசங்க நாட்களையும் சேர்த்து…’
…………………………………………………………………ஓம்சக்தி, செப்டம்பர் – 2002
நன்றி: தட்டச்சு உதவி..Praveen.

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to துன்னல்

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    நிஜம் தான். சிரமம் தான்.
    அருமையான பதிவு.
    நன்றி ஐயா.

  2. கவிஞா் கி. பாரதிதாசன் சொல்கிறார்:

    வணக்கம்!

    பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
    எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s