பெருந்தவம்

நாஞ்சில் நாடன்
மேல மலை இறங்கிக் கொண்டு இருந்தான் சிவனாண்டி உச்சி சாய்ந்து. மேற்கில் படிய ஆரம்பித்த பகலவன், அவன் முதுகில் உப்புக் காய்ச்சிக்கொண்டு இருந்தான். மணி மூன்று கடந்திருக்கும். தலையில் மரச் சீனிக் கிழங்கு நிரப்பாகத் திணித்து அடுக்கப்பட்ட சாக்கு. ஓடி இறங்கி ஊருக்குள் போனால்தான் நாலு மணிக்காவது தராசும் படியுமாக யாவாரம் தொடங்க முடியும்.
 எப்படிப் பார்த்தாலும் நூற்றிருபது, நூற்று முப்பது ராத்தல் இருக்கும். சிவனாண்டி நல்ல சுமட்டுக்காரன். இருபத்தைந்து ஆண்டுகளாக மலை ஏறுகிறான். மலைக் கூப்புகளில் மரச் சீனிக் கிழங்கு நிலுவை கிடையாது. ஓரடி இடைவெளியில், இரண்டு கைகளுக்கு இடையிலும் சேர்த்து எடுக்க முடிகிற கிழங்கு ஒரு பூட்டு எனப்படும். விலையைக் கூப்புக்காரர் தீர்மானிப்பார். ஒரு பூட்டுக் கிழங்கு என்பது நாலு ராத்தலுக்குக் குறையாது. அன்றைய விலை பூட்டு ஓரணா.
நல்ல கிழங்கு, பிடுங்கும்போதே தெரிந்தது. கன்னங்கரிய மேல் தோல். வெள்ளை வெளேர் என உள் தோல். அடி பெருத்து, நுனி குறுகி, கூம்பு வடிவத்தில் ஓரடி நீளத்தில் தெறிப்பான கிழங்குகள். கிழங்கின் தூர் கைப்பிடிக் கனம் இருக்கும். சாக்கில் அடுக்கி, சுமந்து கீழே இறக்கி எடை போட்டு விற்கும் வரை கிழங்கு உடையாது. தொடையில் அடித்து உடைத்துப் பார்த்தால், பால் வெள்ளையாகக் கிழங்கு வெகுளியாகச் சிரிக்கும்.
மரச் சீனியில், அந்த நாட்களில் நாலைந்து ரகங்கள் இருந்தன. செடிக்கே ஊருக்கு ஒரு பெயர். மரச் சீனி, மர வள்ளி, ஏழிலைக் கிழங்கு, குச்சிக் கிழங்கு, டேப்பியோக்கா என்றெல்லாம் கூப்புக்காரர்களின் வர்த்தமானம் கேட்டுக் கேட்டு, சிவனாண்டிக்குக் கிழங்குகளின் பெயர் தெரியும். பார்த்தால் அடையாளம் தெரிந்துகொள்வான். நீங்கள் பார்த்ததும் இது இட்லி, கொழுக்கட்டை, இடியாப்பம், புட்டு என அடையாளம் தெரிந்து கொள்வது இல்லையா?
செங்கொம்பன் என்றோர் இனம் உண்டு. செடியின் தண்டு, இலைக் காம்பு எல்லாம் சிவப்பாக இருக்கும். கிழங்கில் சித்துக் கசப்பு உண்டு. அடுப்பில் போட்டால் வேகவே வேகாது. இது, மாவுக்கு அடிக்கத்தான் லாயக்கு.
கோயில் வெள்ளை என ஒன்று உண்டு. இந்தக் கிழங்கின் மேல் தோல் தவிட்டு நிறத்திலும் உள் தோல் வெள்ளை நிறத்திலும் இருக்கும். இதிலும் கொஞ்சம் கடுப்பு உண்டு. வேகலாமா, வேண்டாமா என நீண்ட நேரம் யோசிக்கும். மாவுக்குத்தான் இதையும் பயிர் செய்வார்கள். தீத்திக் கிழங்கு என்ற பெயரே தீவனத்தை நினைவுபடுத்துவது. தீனி, தீற்றி, தீத்தி என்று போகிறது சொல். ‘தானும் திம்பான்… கூட இருக்கப்பட்டவனையும் தீத்திப்பான்’ என்பது வழக்கு. உள் தோலும் ஆகாரத்துக்கு உகந்தது. அடுப்புக் கங்கில் ஐந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் புட்டு மாவுபோல வெந்து உதிரும்.
நான்காமவன் கரிகாலன். பெயர் சொல்லாமல், முன்பே இந்தக் கிழங்குபற்றிச் சொன்னோம். தீ என்று சொன்ன உடனேயே வேக ஆரம்பித்துவிடும். சிவனாண்டிக்குத் தெரியாமல் வேறு சிலவும் இருக்கலாம். எதிர்காலத்தில் வளர்த்து எடுக்கப்படலாம். எதுவானாலும் பச்சையாகத் தின்பது உகந்தது அல்ல. ஆசைக்கு ஒரு துண்டு தான் அளவு. மீறினால் பித்தம் பிரட்டும். ஆகவே, வேகவைத்துத் தண்ணீர் இறுத்துவிடுவார்கள். காயவைத்து மாவடிக்கும்போதும், கண்டம் வெட்டிப் பாறையில் உலர்த்தி, வாங்கி வந்து வீட்டில் நனையப்போட்டு புட்டுக்கு இடிக்கும்போதும் இந்தப் பித்தம் எங்கே போகும் என்றே தெரியவில்லை. ஒருவேளை உலர்வதால் மாயுமாக இருக்கும்.
கிழங்கு பிடுங்குகிறார்கள் கூப்பில் என்கிற சேதி, எந்தக் கூப்பு என்ற தகவலுடன் காற்றில் மிதந்து வரும். காற்று வதந்திகளை மட்டுமே பரப்புவது இல்லை. விதையை, நோயை, தட்பத்தை, வெப்பத்தை, கானத்தைப் பரப்பும். மழையைக் கொணரும், மாரியைத் துரத்தும், பருவமான பயிர்கள் கதிர் தள்ள உதவும், கதிரான பயிரின் பால் குடித்துப்போகும், காதலியாகக் கொஞ்சும், பகைபோல் வெருட்டும். ஆனி ஆடிக் காற்றுக்கு அம்மியும் குழவியும் பறக்கும்.
காற்றில் சேதி வந்ததும் சிவனாண்டி பெரிய சாக்கு ஓட்டைகளைத் தைத்து, சீர் பார்த்து, வாய்க்கட்டும் சணலால் சுருட்டிக் கட்டி வைப்பான். சேவல் கூப்பிட எழுந்து, உமிக் கரியால் பல் துலக்கி, முகம் கழுவி, உப்புப் போட்டு ஆற்றிய பழஞ்சித் தண்ணி இரண்டு போணி குடித்து, சாரத்தை மடித்துக் கட்டி, துவர்த்தை தலையில் சுற்றி, கூப்புக்கு மலை ஏறத் துவங்குவான்.
முழுக்கதையையும் படிக்க: http://www.vikatan.com/anandavikatan/Stories/25952-nanjil-nadan-short-story.html#cmt241

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள், விகடன் கதைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to பெருந்தவம்

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான கதை. விகடனில் படித்தேன்.
    நன்றி ஐயா.

  2. வியாழன் அன்றே விகடனில் வாசித்துவிட்டேன். மிகவும் அருமையான சிறுகதை.கதையின் முடிவு அருமை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s