நாஞ்சில் நாடனுடன் சில நாட்கள்

விசு
எழுத்தாளர் நாஞ்சில்நாடன் Bay Area வந்து சென்று ஒரு மாதகாலமாகிறது. அவருடன் உரையாடியவற்றிலிருந்து :
***
கம்ப ராமாயண சொற்பொழிவாற்ற வந்தவரிடம், ஒரு பெரிய குஷன் சேரில் உட்காரச் சொன்னோம். மெதுவாக, “வாழ்க்க முழுக்க அதிகார பீடத்தையும், சிம்மாசனத்தையும் உடைக்கனும்னு பேசிகிட்டிருக்கேன். என்ன சிம்மாசனத்தில உட்கார சொல்றீங்களே. சாதா சேர் போதும், இது வேண்டாம்” என்றார். “பாற்கடல் முன்னால வந்து நின்ன ஒரு பூனை, மொத்த பாற்கடலையும் நக்கிக் குடிச்சுடுவேன்னு நினைக்கறது மாதிரி, ராம காவியத்தை பாட வந்திருக்கேன்னு கம்பன் சொல்றான்” என்று ஆரம்பித்தவர், அடுத்த இரண்டு நாட்கள் ‘ராவணன்’ என்ற தலைப்பில் அற்புதமாக உரையாற்றினார். தலைப்பு ராவணனாக இருந்தாலும், அவர் உரையில் வந்த கும்பகர்ணனின் பாடல்கள் என் நினைவை விட்டு நீங்கவேயில்லை.

‘நீர்க் கோல வாழ்வை நச்சி, நெடிது நாள் வளர்த்துப் பின்னைப் போர்க் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது, அங்கு போகேன்;’ ‘தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ, தமையன் மண் மேல்?’ ‘வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன்; விதி நின்றது; பிடர் பிடித்து உந்த நின்றது;’ ‘என்னை வென்றுளர் எனில், இலங்கை காவல! உன்னை வென்று உயருதல் உண்மை;’

“வான்மீகியும், கம்பனும் கையாண்டது செவ்வியல் வடிவம். ராமாயணத்திற்கு நாட்டாரியல் கதைகளில் நிறைய version உள்ளது. ஏதாவது பல்கலை, அனைத்து வடிவங்களையும் திரட்டி ஆராயவேண்டும்” என்றார். மூன்றாம் நாள், மரபிலக்கியம் பற்றி ஒரு அறிமுக வகுப்பெடுத்தார். முதல் நாள் வந்தவர்கள் பெரும்பாலும் மூன்று நாட்களும் வந்திருந்தார்கள். அவர் சொல்வதையே வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்த எங்களிடம் “இப்ப வெறும் சக்கையதாங்க மெல்றோம். சாற தொலச்சிட்டோம். நிறைய பண்டிதர்கள் இருந்தாங்க. சில சமயம் என் மனசுல ஒரு வரி ஓடிட்டே இருக்கும். எந்த பாட்டுல அந்த வரி வருதுன்னு சட்டுனு பிடிபடாது. அவங்ககிட்ட கேட்டா உடனே சொல்லிடுவாங்க. அதே பொருள் வர்ற மத்த பாட்டும் சொல்லுவாங்க. எல்லோருக்கும் எண்பதுக்கு மேல வயசாயிடுச்சு. இனி அந்த மாதிரி யார் இருப்பாங்கன்னு தெரியலை” என்றார். கணினி இருக்கும்போது, வரி கண்டுபிடிப்பது மிகச் சுலபம். அது போலவே நல்ல தமிழ் அகராதியும், பதம் பிரிக்கப்பட்ட பாடல்களையும் வைத்து, reference பாடல்களையும், கணினி துணை கொண்டு அடையாளம் காண முடியும். நாஞ்சில் இருக்கும்போது, அவருடைய படைப்புகளைப் பற்றி பேசாமல், பழந்தமிழ் வகுப்பெடுக்கச் சொல்கிறோமே என்று ஒரு சிறிய வருத்தம் இருந்தது. ஆனால், நாஞ்சில் படைப்புகள் உள்ளிட்ட நவீன இலக்கியம், மண் மேல் இருக்கும் நீர்த்தடாகம் போல. எங்கள் சிலிக்கன் ஷெல்ஃப் வட்டத்து ஆட்களுக்கு அதை கண்டடைவது கடினமல்ல. ஆனால், பழந்தமிழ் இலக்கியங்கள் நிலத்தடி நீர் போல, நீர் நோட்டம் பார்த்துச்சொல்லும் ஆசான் இல்லாமல் வாய்ப்பே இல்லை.
முதல் நாள் முடிவில், மரபிலக்கியத்தை புதிதாக துவங்க வேண்டுமென்றால் எங்கிருந்து துவங்க என்று கேட்டேன். ஆத்திச்சூடியிலிருந்து இருந்து துவங்கலாம் என்றார். ஒரு கணம், சார்.. ஆத்திச்சூடியா.. அறம் செய்ய விரும்பெல்லாம் தெரியுமே என்று நினைத்தபோதே, நாஞ்சில், ஆத்திச்சூடியில் ‘ஔவியம் பேசேல்’ என்று வருகிறது, ‘ஔவியம்’ என்றால் என்ன ? எத்தனை பேருக்கு தெரியும், நீங்கள் மரபிலக்கியத்தை எதற்காக படிக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள் அழகியலுக்கா, கவிதைக்கா, சொற்களுக்கா, உவமைகளுக்கா, வாழ்வனுபத்திற்கா என்பதைப் பொறுத்து, நீங்கள் நூல்களை தேர்வு செய்யவேண்டும். ஔவையிலும், வள்ளுவனிலும் துவங்கலாம். பக்தி இலக்கியம், நவீனத் தமிழிற்கு அருகிலேயே உள்ளது; பதம் பிரிக்க கற்றுக் கொண்டீர்களென்றால், கம்ப ராமாயணத்தில், நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் முக்கால்வாசி உங்களுக்கு புரியும்; அகராதி துணையுடன் மற்ற சொற்களுக்கும் பொருள் கொள்ளலாம்; சங்க இலக்கியத்திற்கு உரை ஆசிரியர்கள் துணை வேண்டும் என்றார்.
பிறகு, எழுத்தாளனாக வேண்டும் என்று நினைப்பவர்கள், ஏன் கம்ப ராமாயணம் போன்ற காவியங்கள் படிக்கவேண்டும் என்று சொன்னார். “விற்போர்ல ஈடுபடறவனுக்கு ஹெல்ப் பண்றதுக்காக அவன் கூடவே ஒருத்தன் இருப்பான். எதிரியோட தரம், தூரம், ரதத்தோட வேகம்ன்னு பல கணக்குபோட்டு, அவன் அம்பறாத்தூளியில அம்ப நிரப்புவான். வில்லாளி, தூளியில கை வச்சான்னா, அந்தக் கனத்துக்கேத்த மாதிரி அம்பு இருக்கனும். அப்பதான் ஜெயிக்கமுடியும். அந்த மாதிரி, ஒரு கவிஞரோ, எழுத்தாளரோ ஒரு இடத்தில ஒரு வார்த்தை போடணும்னா, அவனுக்கு அந்த இடத்தில போடறதுக்கான சரியான சொல் வரணும். கம்பன் அந்த மாதிரியான ஒரு கவிஞன். அவனோட காவியத்தில எந்த இடத்திலயும், அங்க இருக்கிற சொல்ல விட வேற ஒரு சொல்ல யோசிக்க முடியாது. சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்துன்னு சொல்லியிருக்கானே வள்ளுவன். காவியங்களையும், மரபிலக்கியத்தையும் படிங்க, உங்க அம்பறாத்தூளி நிறையும்” என்றார். அதை ஒட்டி, முத்துகிருஷ்ணன் நவீன கவிதைகளை பற்றி நாஞ்சிலின் கருத்தை கேட்டார். “மரபுக் கவிதைகளில் இருக்கிற இலக்கணம் வேண்டாம்னா, இவங்க சங்க இலக்கியத்த நோக்கி போயிருக்கனும். அதில எதுக மோன இல்ல, கடுமையான இலக்கிய விதிகள் இல்ல. ஆனா, கவித்துவம் இருக்கு. இவன், ஒரு வரிய உடச்சி உடச்சி கவிதைன்னு எழுதறான். மொத்தமா எழுதினா, முப்பது பத்தி தாண்டாது. அத கவிதைன்னு போட்டுக்கறான். ஐந்தாயிரம் வார்த்தைகளுக்கு மேல் உபயோகபடுத்த மாட்டேங்குறான். என்ன மயித்துக்கு இவன் பத்து லட்சம் சொல் இருக்கிற மொழில எழுதறான்” என்று ஒரு பிடிபிடித்தார். கெட்ட வார்த்தைகளோ, வில்லங்கமான பழமொழிகளோ சொல்லும்போது, “பெண்கள் யாரும் இல்லைதான” என்று ஒரு தடவை சுற்றும்முற்றும் பார்த்துக்கொள்வார். “எக்ஸ்க்யூஸ் மி ஃபார் மை லாங்வேஜ்” என்று ஒரு முன்னறிவிப்பும் வந்துவிடும். (கவிதையா, காவியமா அப்படீன்னா என்று கேட்டு பல மைல் தூரம் ஓடும் நான், இவர் மந்திரித்து விட்டதில், வை.மூ.கோ.வின் கம்ப ராமாயண உரையை உடுமலை தளத்தில் வாங்கிவிட்டேன். தனியாக படித்து முடிப்பதற்கு கம்பனின் அருளும், நாஞ்சிலின் ஆசியும்தான் துணை புரிய வேண்டும்.)
மூன்றாம் நாள் பேசும்போது, ‘பெரியாழ்வாருடைய டபுள் ஆக்ட் ஆண்டாள்’ என்று சொல்வது தவறு என்றவர், ஆண்டாளின் பாடல்களை சுட்டி, இவற்றை ஒரு பெண் மட்டுமே எழுதியிருக்கமுடியும் என்றார். சமீபத்திய – நெல்லை பல்கலை கழகத்தில் பாடதிட்டத்தின் ஆண்டாள் கதை controversy பற்றி கேட்டபோது, ஆண்டாள் நந்தவனத்தில் கிடைத்த குழந்தை; எந்த குலம் என்று தெரியாது, தாய் தந்தை தெரியாது; அன்றைய சமூகம் அவளை முறை தவறிய குழந்தையாக கருதியிருக்கும்; தன்னை யார் திருமணம் செய்ய வருவார்கள் என்று நினைத்து, அவள் எவ்வளவு வேதனைபட்டிருப்பாள்; அந்த சோகத்தை முன்னிலைப்படுத்தாமல், அவள் பிறப்பை மட்டுமே இழிவுபடுத்துவது தனக்கு உவப்பல்ல என்றார்; ஆண்டாள் எழுதிய மொழியில், இன்று பெண்கள், சுதந்திரமாக எழுவதற்கு உகந்த சூழல் இல்லை; சில எழுத்தாளர்களிடமும், அவர்களுடைய வாசகர்களிடமும் இருந்து, ஆபாச குறுஞ்செய்திகளில் தொடங்கி பல்வேறு வகையில் பாலியல் தொந்தரவுகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர் என்று சில உதாரணங்களைச் சொன்னார். செம்மொழியான தமிழ்மொழியில் எழுத ஒன்று கிழவியாக (அவ்வை) இருக்கவேண்டும், இல்லையென்றால் பேயாக (காரைக்கால் அம்மையார்) இருக்க வேண்டும் என்றார்.
பின்பு ஒரு நாள் ‘சொல்’ பற்றி பேசும்போது, ‘தெரிவை’ (மாமனார், கைத்தலம் பற்ற கனாக் காணும் கதை) என்ற கதையை ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன். தெரிவைன்னா என்னான்னு தெரியாது, அதனால, கதை தலைப்ப ‘நீலவேணி டீச்சர்’ ன்னு மாத்திட்டான் எடிட்டர். பல சொல் நம்ம மொழியில் இருந்து அழிந்துவிட்டது. உதாரணமாக ‘அவ்வ’ என்ற சொல். வயதான முதாட்டியை குறிக்கும் சொல். (‘அவ்வையாரின்’ வேர்ச்சொல்). தமிழில் அது புழக்கத்தில் இல்லை. ஆனால், படுக மொழியிலும், தெலுங்கிலும் இருக்கு. நாம் பத்தாம் நூற்றாண்டில் பயன்படுத்திய பல சொற்கள் மலையாளத்தில் இன்றும் உள்ளது. நம்மால் இந்த சொற்களை ஆவணப்படுத்தக்கூட முடியல. 1920களில் வந்த அகராதியை விட அதிக சொற்கள் கொண்ட அகராதி அதுக்கு பிறகு வரலை. கண்மணி குணசேகரனின் ‘நடுநாட்டு சொல்லகராதி’, ‘நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கு’, தெலுங்கைத் தாய் மொழியாக கொண்ட ஒரு நெசவுத் தொழிலாளியின் ‘எதுகை மோனை அகராதி‘ என்று அமைப்பின் உதவியில்லாமல், தனி நபர்கள் தங்கள் உழைப்பால் அகராதி உருவாக்குகிறார்கள். அரசோ, பல்கலைக்கழகங்களோ அவர்களை அங்கீகரிப்பதில்லை என்றார்.
முதல் நாள் சொற்பொழிவில் வந்த நண்பரை (இளங்கோ?) அறிமுகப்படுத்திய ராஜன், இவர் சிறுகதைகள் எழுதுவார் என்றார். “கதைகள அனுப்புங்க, ராயல்டி கேக்காத எழுத்தாளர்கள நம்ம பப்ளிஷ்ர்கள் தேடிட்டு இருக்காங்க” என்று சொன்னவர், “முதல் பதிப்புக்கு ஏதோ ராயல்டி தருவாங்க. இரண்டாவது, மூணாவது பதிப்புக்கெல்லாம் எதிர்பாக்க முடியாது” என்றார். “தமிழில் எல்லா தினசரிகளையும் சேர்த்தாலும் அவற்றின் பதிப்பு பதினைந்து லட்சத்தை தாண்டாது. தமிழகத்தை விட பாதி அளவு மக்கள் தொகை கொண்ட கேரளாவில், ஒரு நாளைக்கு எழுவத்தைந்து லட்சம் தினசரிகள் விக்குது. அன்னிக்கி, ஒரு குழந்தை ஒரு புக்க எடுக்குது, அதோட அம்மா, ஏய், தாத்தா புக்க எடுத்து கிழிக்காதன்னு சொல்லி கொழந்த கைலயிருந்து புத்தகத்தை புடுங்கி வச்சுட்டா. ஏம்மா, கிழிஞ்சா பரவாயில்ல, வேற புத்தகம் வாங்கிக்கலாம்ன்னு சொன்னேன். குழந்தைகள பாடப்புத்தகங்கள் தவிர வேற புத்தகங்களை தொட விடமாட்டேங்குறாங்க பெற்றோர்கள். அவங்க கிட்டதான் பிரச்சனை” என்றார்.
நீங்க கடந்த சில வருடங்களில் மலேசியா, வளைகுடா நாடுகள், அமெரிக்கா என்று பல வெளிநாடுகளுக்கு செல்கிறீர்கள், அங்கு தமிழர்களின் வாழ்க்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். மலேசியத் தமிழர்கள் சில பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், பெரும்பாலும் நன்றாகவே இருக்கிறார்கள்; அமெரிக்காவில் ஒரு சாரார் தங்கள் வேரோடு/மரபோடு தொடர்பை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறார்கள், மற்றொரு சாரார் முழுக்க அமெரிக்கர்களாகவே மாறிவிட்டார்கள்; வளைகுடா நாடுகளில்தான் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்றார். (தன்னோடு பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை, அவள் முதலாளியோ, யாரோ ஓங்கி முதுகில் அடித்தான் என்றார்.) வேறோரு நாளில், பாலாஜிஇங்குள்ளவர்களைப் பற்றி உங்கள் கருத்தென்ன என்ற கேள்விக்கு, “எனக்கு உங்களைப் பத்தி கவலையில்லங்க. நீங்க யாரும் வழி தவறிய ஆடுங்க இல்ல, வழியைத் தேடிக்கிட்ட ஆடுகள், நீங்களும், உங்க புள்ளங்களும் பொழச்சுக்கும். நான் என் நாட்டப் பத்தி கவலைப்படுறேன். நேத்து இரண்டு நூலகத்துக்கு கூட்டிட்டுப் போனாங்க, அத பாத்த பின்னாடி, எங்கேயாவது மூலையில உக்காந்து ஓன்னு அழலாம் போல இருக்கு. இங்க புக்கெல்லாம் எப்படி அடுக்கி வெச்சிருக்கான். நம்ம ஊர் லைப்பரரில போய் ஒரு புத்தகத்த தேடினா ஆஸ்துமா வந்துடும்” என்று வருத்தப்பட்டார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு, இளைய தளபதி விஜய் தன் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக Bay Area வந்திருந்தார். அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக நாற்பது டாலர்கள் கட்டணம் கட்டி, ஐந்நூறு-அறுநூறு தமிழர்கள், பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தார்கள். கூட்டத்தை பார்த்து பேதியடைந்த இளைய தளபதி பாதியிலேயே போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டார். இதை நாஞ்சிலிடம் தெரிவித்தபோது உண்மையிலேயே நொந்துவிட்டார். “கோயமுத்தூர் மெடிக்கல் காலேஜ் விழாவுக்கு சிறப்பு விருந்தினரா கூப்பிட்டிருந்தாங்க. அதுக்கு முந்தய வருஷம் சிறப்பு விருந்தினர், எட்டாம் கிளாஸ் படித்த ‘காதல்’ பட நாயகி. மேடையிலேயே, ‘ஏண்டா, அவகிட்டருந்து என்னடா கத்துகிட்டீங்கன்னு’ ஒரு பிடி பிடிச்சேன். ஒரு அழுகல் கேக்க பாதி நம்ம ஊர்ல திங்கறான். மீதிய நீங்க திங்கிறீங்க. தமிழர்களுக்கு எப்ப சினிமா மோகம் குறையுமோ தெரியலை” என்றார். இயக்குனர் பாலாவின் ‘பரதேசி‘ படத்தில் கதை-வசனம் எழுதுவதாக சொன்னவர், “நாம் ஒரு சீன எழுதிக் குடுப்போம். டைரக்டர் அவரு கற்பனைக்கு ஏத்த மாதிரி, அத வேற லெவலுக்கு எடுத்துட்டு போவார்” என்று ஒரு உதாரணம் சொன்னார். (வெள்ளித்திரையில் காண்க – அது பட க்ளைமேக்ஸ்.) சில இயக்குனர்கள், தன் நாவல்களிலிருந்து பல பகுதிகள், க்ளைமேக்ஸ் போன்றவற்றை அப்படியே எடுத்தாண்டிருக்கிறார்கள் என்றவர், “சம்பளமெல்லாம் பேசலீங்க. ஒரு ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்தான். படம் பேர் போடும்போது, நம்ம பேர் வந்தா சரி. நான் அதத் தவர வேற எதயும் எதிர்பார்க்கல” என்றார்.
தொண்ணூறுகளின் இறுதியில், புலமைப் பூசல், எழுத்தரசியல் காரணங்களுக்காக, ஜெயமோகனை விட்டுவிட்டு தங்கள் தரப்பிற்கு வருமாறு சொன்னவர்களிடம், “ஜெயமோகன் கொலையே பண்ணிருந்தாலும், நான் அவனோடதான் இருப்பேன். உங்களோட வரமுடியாதுன்னுட்டேன்” என்றவர், “இவன் வீட்டு வாசப்படிய மிதிக்கக்கூடாதுன்னு நினைச்சுட்டு வந்த நாளெல்லாம் இருந்திருக்கு, ஆனா, அடுத்த நாளே திரும்ப போயிருக்கேன். ஏன்னா, அவன் என் மொழியில தோன்றின அபூர்வமான கலைஞன்” என்று மேலும் சில நிகழ்வுகளை சொன்னார். ஜெயமோகனுக்கும் நாஞ்சிலுக்கும் உள்ள நட்பை அறிந்திருந்தாலும், அவர் சொல்லும்போதே, அதில் நட்பை மீறிய பாசமும் தெரிந்தது. தான் எழுதத் துவங்கிய காலத்தில் தன்னை ஊக்கப்படுத்திய மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் மீதும் பெரும் மரியாதை வைத்திருக்கிறார்.
தன்ராம்சிங் மாதிரி கதைகள படிச்சு, அதன் பாதிப்பிலிருந்து வெளிவர நாங்கள்லாம் சிரமப்படறோம், நீங்க எழுதும்போது, உங்க மனநிலை எப்படி இருக்கும், நேரம், இடம்ன்னு தேர்ந்தெடுத்து எழுதுவீங்களா” என்ற கேள்விக்கு, “உக்கிரமான பகுதிகள், முக்கியமா காமம் சார்ந்த பகுதிகள் எழுதும்போது, காதெல்லாம் சிவந்து, மனசு வேறேங்கயோ இருக்கும். யாராவது அப்ப வந்து டிஸ்டர்ப் பண்ணா, கடும் கோபம் வந்து எரிஞ்சு விழுவேன். எழுதறதுக்கு நேரம், காலம் எல்லாம் கிடையாது. நிறைய முறை ஆஃபீஸ்லயே உக்காந்து எழுதிருக்கேன். எவனாது வந்து கேட்டான்னா, போடா மயிரு, நீ குடுக்குற சம்பளத்த விடவே அதிகமாவே வேலை செஞ்சுட்டேன்னு சொல்லிடுவேன்” என்றார்.
முழுக்கட்டுரையையும் படிக்க  http://siliconshelf.wordpress.com/category/visu-posts/

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், அமெரிக்கா, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to நாஞ்சில் நாடனுடன் சில நாட்கள்

  1. மிக்க நன்றி ஐயா… தங்கள் கொடுத்த தளத்திற்கு (Link) செல்கிறேன்…

  2. நாஞ்சில்நாடனுடனான சந்திப்பை அருமையாக தொகுத்து பகிர்ந்தமைக்கு நன்றி.

  3. பிங்குபாக்: சில பழைய பதிவுகள் | visu

  4. பிங்குபாக்: நாஞ்சில் நாடனுடன் சில நாட்கள் – Visu

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s