by Bags
நாள் 12 – ஜூன் 30, 2012

இன்று பெரிய நாள். பிறபகல் 2 மணிக்கு ஃப்ரீமாண்ட் லைப்ரரியில் பி.ஏ.கிருஷ்ணன், நாஞ்சில், இருவருக்கு பாராட்டுப் பொது கூட்டம். மதிய உணவு எங்கள் இல்லத்தில் முடித்துவிட்டு செல்வதாக ஏற்பாடு. பதட்டம் மனதை மெதுவாக ஆக்ரமிக்க தொடங்கியது.
காலையில் எழுந்து மிக சுறு சுறுப்பாக மனைவிக்கு “சொதி” என்ற ஒரு உணவு சமாச்சாரம் செய்ய உதவிகள் செய்யவும், கடைகளுக்கு ஓடும் எர்ரண்ட் பாயாக இருக்கவும், பெண்ணை வகுப்புகளுக்கு அழைத்துச் செல்லவும் நேரம் சரியாயிற்று. PA கிருஷ்ணன் குடுமபம் (திருமதி ரேவதி கிருஷணன், மகன் சித்தார்த், சித்தார்த்தின் மனைவி வினிதா) காலை 11:30க்கு வந்தார்கள். பிஏகே என் மினி கலெக்ஷனைப் பார்வையிட்டார். ’வேற தமிழ் புக்ஸ் வச்சிருக்கீங்களா?” என்றார். மிகக் குறைவு என்று நினைத்தார் போலும். அவருடைய வாசிப்பு வேகத்திற்கு இதெல்லாம் மைக்ரோபியல். “சார் மாடியிலே கொஞ்சம் புக்ஸ் இருக்குது”என்றேன். சரி இந்த முறை இந்திய பயணத்தின் பொழுது அள்ளிக் கொண்டு வரவேண்டியது தான். கோவையில் ஹரன்பிரசன்னா போன்ற நணபர்களை பார்க்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.
சாப்பிட்ட ஸூப்புடன் என் பதட்டமும் ஆவியாக ஆனது. தற்காலிக ரிலீஃப். புகைப்படங்களுக்கு அனைத்து பெர்ம்யூட்டேஷனையும் உபயோகித்தோம். ஆர்வி & குடுமபம், ராஜன் & நாஞ்சில் மற்றும் திருமுடி, மணிராம் ஆகிய அனைவரும் சுமார் 12 மணிக்கு ஒரு காலிங் பெல்லில் இணைந்தார்கள். ஒருவித பரபரப்புடன் எல்லோரும் ஸூப்பிலிருந்து சாதம் சொதி இஞ்சி சட்னி வழியாக பாயாசம் வந்தடைந்தார்கள். ராஜன் பரபரத்து திருமுடியை இழுத்துக் கொண்டு 1 மணிக்கு லைப்ரரியை நோக்கி ஓடினார். நானும் ஆர்வியும் எங்கள் பேச்சுகளை பிரிண்ட் எடுக்க மாடியை நோக்கி ஓடினோம். கிச்சனில் பெண்கள் எதற்கோ ஓடிக் கொண்டிருந்தார்கள். இதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பது போல் அமைதியாக பிஏகேயும் நாஞ்சிலும் இலக்கிய உலகில் சஞ்சரித்தனர். காலச்சுவடு கண்ணன், நீல பத்மநாபன், ஜெயமோகன் என்றெல்லாம் காதில் விழுந்தது. எல்லாம் நல்ல விஷயம் தான்.
1:50க்கு நாஞ்சில், பிஏகே, நான், ஆர்வி நால்வரும் ஆர்வியின் மெர்சேடிஸ் பென்ஸில் கிளம்பினோம். ராஜன் போனில் இன்னும் 15 நிமிடம் தாமதிக்கச் சொன்னார். ”கிளம்பியாச்சே”. ஒரு லெவல் கிராஸிங்கில் டென்ஷனுடன் காத்திருந்த நாங்கள் ரிலாக்ஸ் ஆனோம். ஒரு ஏரியை சுற்றிவிட்டு லைப்ரரி சென்றடைந்தோம். லைப்ரரியில் மைக் செட் அரெஞ்ச்மெண்டெல்லாம் செய்ய வேண்டியதில்லை. ஆங்காங்கே இருக்கும். ஒரு சில வேலைகள் மட்டுமே. வரிசையாக சேர் போடுவது, பேனர் ஒட்டுவது போன்ற சமாச்சாரங்கள். கூட்டம் பரவாயில்லை. பாரதி தமிழ் சங்கத்தின் விழா. இந்த ஆண்டின் தலைவர் இட்ஸ்டிஃப் ஸ்ரீகாந்த். அவர் அறிமுகம் செய்ய அடுத்த இரண்டரை மணி நேரம் நல்ல பொழுதாக அமைந்தது. அதன் வீடியோ வடிவம் இந்த சீரிஸ் முடிந்ததும் வெளியிடுகிறோம். பாலாஜி, விசு, ஆர்வி, சுந்தரேஷ் ஆகியோரின் உரைகளின் எழுத்து வடிவம் வெளியிடப்பட்டுள்ளது. காவேரி, என்னுடையது எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. பிஏகே முதலில் பேசினார். பின்னர் நாஞ்சில். வீடியோவில் பார்க்கலாம்- சிறிது நாட்களுக்குப் பிறகு.

கூட்டம் முடிந்த பின்னர் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த நாஞ்சில், பிஏகே புத்தகங்கள் காணாமல் போயிருந்தது. டீ விநியோகிக்கப்பட்டது. ஒரு சமோசா, கட்லட் என்று போயிருந்தால் அரங்கு நிறைந்திருக்கும். வெளியில் வந்து எல்லோரும் எழுத்தாளர்களுடன் கூட்டத்திற்கு வந்தவர்கள் உரையாடினர். பிஏகே குடும்பத்தினர் விடை பெற்றனர். ராஜனும் நாஞ்சிலும் ஓய்வெடுக்கச் சென்றனர். விசு, அருண், பாலாஜி, நான், ஆர்வி வீட்டில் குழுமினோம். ராஜன், நாஞ்சில் 7 மணிக்கு வந்தார்கள். நாஞ்சில் என் உரை நன்றாக இருந்ததாகவும் நுணுக்கங்களுடன் இருந்ததாகவும் கூறினார். ஆனால் மெஸேஜ் ஆடியன்ஸை சென்று சேர்ந்திருக்கமா என்பதில் ஐயப்பட்டார். ஒரு மூன்று மணி ”மகிழ்ச்சி” கலந்த அரட்டை நண்பர்களிடையே. எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். சுந்தரேஷ் மிக மகிழ்ச்சியாக இருந்தார். ஹேப்பி ஹவர்ஸ்….!
நாள் 13 – ஜூலை 1, 2012
கிரேட்டர் லேக், மவுண்ட் சாஸ்தா
புதிய மாதம். பிஏகே தம்பதியினர், நாஞ்சில், ராஜன், சுந்தரேஷ் ஆகியோர் கட்டுச்ச்சோற்றுடன் ஹோண்டா வேனில் வடக்கு நோக்கி பயணம் செய்தனர். இரண்டு நாள் டூர். கிரேட்டர் லேக், மவுண்ட் ஷாஸ்தா. ராஜனிடமிருந்து கட்டுரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். (நேற்று ஜூலை 13) ”நீங்களே எழுதிவிடுங்கள், பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் எழுதிகிறீர்கள்” என்று ஐஸ் வைத்ததால் குளிர்ச்சி தாள முடியாமல் சில புகைப்படங்கள் மட்டும் இங்கே. சுந்தரேஷ், இந்தஇடங்களெல்லாம் ”அனுபவிக்கணும், எழுதக்கூடாது” என்று ரேஞ்சில் பேசினார். வழியில்லை.
நாள் 14 – ஜூலை 2, 2012
இரவு 12க்கு திரும்பினார்கள். பாவம் நாஞ்சில். தூங்குவதற்கு கூட அவருக்கு அவகாசம் அளிக்கப்படவில்லை. அவருடைய வயதில் அவர் சலிக்காதது ஆச்சரியம்தான். மறுநாள் அதிகாலையில் துயில் எழவேண்டும்.
நாள் 15 – ஜூலை 3, 2012
லாஸ் ஏஞ்சலீஸ் – டிஸ்னிலாண்ட், யுனிவேர்ஸல் ஸ்டுடியோ
காலையில் 4:45க்கு கிளம்பி ராஜன் வீடு சென்றேன். நாஞ்சில் கிளம்பி காஃபி அருந்திக் கொண்டிருந்தார். முடித்ததும் 5:05 கிளம்பி சான் பிரான்ஸிஸ்கோ ஏர்போர்ட் சென்றோம். “தூங்க முடிந்ததா?” என்று கேட்டதற்கு ”ஒரு மணி நேரம்” என்றார். அசாத்தியம். விர்ஜின் அமெரிக்கவில் செக்கின் செய்து செக்யூரிட்டி செக் கடந்து கையசைத்தபின் ஆறரை மணி பக்கம் வீடு வந்து சேர்ந்தேன். ராஜேஷ் ஏர்போர்டிலிருந்து அப்படியே அவரை டிஸ்னிலாண்டுக்கு அழைத்துச் சென்றார். ஏற்கனவே டிஸ்னிலாண்ட் ஒரு ”டிரீம்லேண்ட்”. நாஞ்சில் தூக்கமினமை டிஸ்னிலாண்டை கனவுலகா நினைவுலகா என்று அறிந்துகொள்ளாதபடி செய்ய வாய்ப்பிருக்கிறது.
நாள் 16 – ஜூலை 4, 2012
இண்டிபெண்டன்ஸ் டே. விசுவும், அருணும் காரில் கிளம்பிச் சென்றார்கள். மறுநாள் யுனிவர்ஸல் ஸ்டுடியோஸ். விசு நீண்ட அறிக்கை தயார் செய்கிறேன் என்றார். இல்லை அவரும் இரட்டை கிளவிகளை தேடிக்கொண்டிருக்கிறாரா தெரியவில்லை.
நாள் 17 – ஜூலை 5, 2012
அன்று மாலை பாலாஜி வீட்டில் பிஏகே குடும்பத்தினருக்கும் நாஞ்சிலுக்கும் டின்னர் ஏற்பாடு. அதன் பொருள் கூத்து, கொண்டாட்டம், ”மகிழ்ச்சி”. விசுவும் அருணும் நாஞ்சிலை அழைத்துக் கொண்டு லாஸ் ஏஞ்சலீஸிலிருந்து சான் பிரான்ஸிஸ்கோவை நோக்கி கிளம்பியதுமே கார் டயர் பஞ்சர். பயணத்தில் அவரை மதியம் பட்னி போட்டு மாலையில் பேலோ ஆல்டோ வரை வந்து ஒரு க்ரேப் (crepe) ஜாயிண்டில் சாப்பாடு கொடுத்திருந்தார்கள். ஒரு வழியாக மாலை 5.45 க்கு வந்து என்னை பிக்-அப் செய்து கொண்டு ராஜன் வீட்டிற்கு சென்றோம். அவருக்கு லாஸ் ஏஞ்சலிஸ் பயணம் திருப்திகரமாக இருந்ததாகக் கூறினார். பொதுவாக குழந்தைகளை அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதை வைத்து அவர் டிஸ்னிலாண்டை மிகவும் விரும்புவார் என்று நினைத்திருந்தேன். ஆனால் யுனிவேர்ஸல் ஸ்டுடியோஸ் அதை காட்டிலும் பிடித்திருந்தது என்றார்.
ஓய்வுக்கு பிறகு பாலாஜி வீட்டிற்கு படையெடுப்பு. பிஏகே குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் மீண்டும் சந்தித்தார்கள். அனேகமாக கடைசி கூட்டம் என்று நினைத்து வந்திருந்தார்கள். பிறகென்ன பாலாஜி வீடு ”மகிழ்ச்சி”புரம் தான். சரி பேசியதில் போனால் போகட்டும் என்று ஒரு விஷயத்தை சொல்கிறேன்.
ராஜீவ் கொலை வழக்கு பற்றி ஒரு விவாதம் வந்தது. முன்னாள் CBI இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் (நெல்லை ஜெபமனியின் மகன்) ரகோத்மன் காசு பண்ணுவதற்க்காக அந்த நூலை எழுதியிருக்கிறார், அவர் அந்த நூலில் இன்னும் சில உண்மைகள் வந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார். ரகோத்மன் கார்த்திகேயன் மேல் இன்னும் கடுமையாகவும், உறுதியாகவும் வந்திருக்கலாம் என்பது அவரது தரப்பு. ரகோத்மன் ஒரு எல்லைக்குள் செயல்பட்டிருந்தாலும் சிறந்த ஆவணம் என்று நான் நினைக்கிறேன். ரகோத்மனின் தரப்புபடி சிவராசனே இந்த சதியை உருவாக்கி செயல்படுத்தியவர் என்பதும் அனுமதிக்கு மட்டும் தான் பிரபாகரனிடம் சென்றார் என்றும் பிரபாகரன் விரைவிலேயே (தீர்க்கமாக பின்விளைவுகளை சிந்திக்காமல்) சதி திட்டத்திற்குக்கு பச்சைக்கொடி காட்டினார் என்பதும் என் புரிதல். அப்படி தான் தெளிவாக ரகோத்மன் முன் வைப்பதாக என் நினைவு. அதை பேசிக் கொண்டிருந்த பொழுது நாஞ்சில் பிஏகே போன்றவர்களின் விவேகமான பதில்களும், அதன் பின்னர் சில வாக்குவாதங்களும் எழுந்தன. மொத்தத்தில் தரமான நேரம்.
ஃபோட்டோ செஷன்ஸ் முடிந்து விடைப்பெற்ற பொழுது சுமார் 11 மணி.

நாள் 18 – ஜூலை 6, 2012
இன்று நாஞ்சில், ராஜன், நான் மூவரும் ரோகில் 17-மைல் டிரைவ் என்ற மாண்ட்ரே பகுதி கடற்கரைக்குச் சென்றோம். செல்லும் பொழுது பாஸ்டன் பாலாவை ராஜன் தொலைபேசியில் அழைத்து பேசினார். பாலா நாஞ்சிலிடமும் என்னிடமும் பேசினார். இந்த ”கலிஃபோர்னியாவில் நாஞ்சில்” கட்டுரை தொடர் நன்றாக வருகிறது என்றார். ItsDiff ரேடியோ நிகழ்ச்சியும் அருமையாக இருந்தது என்றார்.
வாயிலில் நுழைவுசீட்டு கொடுத்தவன் முறைத்தான். பேச மறுத்தான். பொதுவாக தங்கள் விருந்தினர்களை அன்பு வார்த்தைகளால் வரவேற்கும் இது போன்ற பொது சுற்றுலா ஈர்ப்புகளில் இந்த அனுபவம் புதிதாக இருந்தது. டிக்கட்டை வாங்கிக் கொண்டு நுழைந்தோம்.
Arumai.
பக்ஸ் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
deja vu?
நாஞ்சில் நாடனின் வாசகனான எனக்கு அவரது பயணக் கட்டுரை மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. சொல்லவந்ததை முடிந்தவரை சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
நன்றி.
ஜெயக்குமார்