by RV
நாஞ்சில்நாடனின் கட்டுரைகள் பற்றிஃப்ரீமான்ட் நிகழ்ச்சியில் சுந்தரேஷ் ஆற்றிய உரை:
(அமெரிக்காவின்) கிழக்குக் கடற்கரையில் நான் வசித்தபோது இந்தியாவிலிருந்து யார் வந்தாலும் ஒரு நயாகரா பயணம் உறுதி. அது போலத்தான் என் பெற்றோர் வந்திருந்தபோதும் நயாகரா போனோம். அங்கே போயிருப்பவர்களுக்குத் தெரியும். அருவிக்கு மிக அருகில் போகும் ஒரு இடம் உண்டு. அருவியின் மொத்த உக்கிரத்தின் சிறு பகுதியை அருகிலிருந்து பார்க்கும்படி கம்பி கட்டி, படிகளால் ஆன பாதை ஒன்றை அமைத்திருப்பார்கள். பேரிரைச்சலுடன் விழும் அருவி, கண் திறக்க முடியாத அளவுக்கு முகத்தில் வந்து குளிராய்க் குத்தும் ஒரு நூறு நீர்க்குச்சிகள். அந்த இடத்தை பலர் வேகமாய்த் தாண்டி விடுவார்கள். பலருக்கு முகம் வெளிறி விடும். கவனமாகக் கால் எடுத்து நடக்காவிட்டால் வழுக்கி விட்டுவிடும்.
நான் அந்த இடத்தைத் தாண்டி வந்ததும் கவனித்தேன், என் அம்மா மட்டும் எங்களுடன் இல்லை. சட்டென்று வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தால் அங்கே அம்மா, நயாகராவைப் பார்த்து கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு தெறித்து விழும் அந்தத் தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு வந்தார்கள். மகன்களுக்கே உரிய தெனாவெட்டுடன் “அம்மா இது என்ன நம்மூர் கோவில் குளமா, நயாகராம்மா” என்றேன். என் அம்மா, அம்மாக்களுக்கே உரிய அன்பான அலட்சியத்துடன் ”எல்லாம் ஒண்ணுதாண்டா பித்துக்குளி” என்றாள். ஒரு கணம் எனக்கு மண்டையில் அடித்தாற்போல இருந்தது. பேச வரவில்லை, சொல்லழிந்து நின்றேன்.
நாஞ்சில்நாடன் மூன்று நாட்கள் இலக்கிய சொற்பொழிவு நிகழ்த்தினார். சொல்லும், சொல்லின் பொருளும் அழிந்து நிற்கும் நிலை பற்றி அதில் ஒருநாள் பேசினார். இலக்கியம் என்பது சொற்களால் நிறைந்தது, என்றாலும் சொல்லழிந்து நிற்கும் ஒரு உன்னத நிலையை நோக்கியே அது எப்போதும் முனைந்து கொண்டிருக்கிறது. வாழ்க்கையின் ஒப்பற்ற அனுபவங்களை வார்த்தைகளால் வடித்துக் காட்டுபவன் எழுத்தாளன். உன்னத அனுபவங்களின் எல்லையற்ற தன்மையை சொற்களால் தொட்டுவிட முயன்று கொண்டே இருப்பவன் இலக்கியவாதி.
சொல்லும் பொருளும் அழியும் மனநிலை என்பது எப்போதாவது ஒரு சிறிய கணத்தில் நாம் எல்லோருக்குமே நிகழ்ந்திருக்கும். வேகமாய்ப்போகும் ரயிலின் வெளியே டாட்டா காட்டும் சிறுவனின் சித்திரம் என்ன காரணத்தினாலோ மனதில் நீண்ட நாள் பதிந்துவிடுவது போன்றது அது. பார்த்த காட்சி சட்டென மாறிவிடும், ஆனால் காட்சி அனுபவம் தந்த அதிர்வு மட்டும் மனதை நெடுங்காலம் மீட்டிக்கொண்டிருக்கும். அனுபவம் தரும் அத்தகைய அதிர்வுதான் ஓர் இலக்கியவாதிக்கு, அவனது படைப்பு சூல் கொள்ளும் தருணமாகிறது. நாஞ்சில் நாடனின் அனுபவங்கள் அவரது எழுத்துகளெங்கும் அதிர்ந்து வழிகின்றன. வெம்பி அழுகின்றன. கோபத்தில் கொப்பளிக்கின்றன. எள்ளி நகையாடுகின்றன. அன்பில் நெகிழ்கின்றன.
நவீன படைப்பிலக்கியம் பயிர் செய்ய மரபார்ந்த எழுத்துக்களை உரமாக்கிக் கொண்டவர் நாஞ்சில் நாடன். அவரது கட்டுரைத் தலைப்புகள் மரபின் வாசனையே தெரியாத ஒரு நவீன வாசகனைக் கூட மரபை நோக்கி திருப்பி விட்டுவிடும்.
ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும்போதும் கட்டிடங்களும் குப்பைகளும் பெருகி வருவது போலவே எனக்குத்தோன்றும். நம் நீர்நிலைகளை, குளங்களை, வாய்க்கால்களை, ஏரிகளை, படுகைகளை பிளாஸ்டிக் குப்பைகளாலும், கருவேலங்கொடிகளாலும், மணற்கொள்ளைகளாலும் ஊர்தோறும் பாழாக்கி வைத்திருக்கிறோம். இது குறித்த நாஞ்சில்நாடனின் கட்டுரை கம்பனின் சொற்களில் ”நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை” என்னும் கட்டுரையாகிறது.
’நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’ என்பது குடி பற்றிய கட்டுரையின் தலைப்பு.
நீர்நிலைகள் எல்லாம் தூர்ந்து போகும்படி ஆகிக் கொண்டிருக்கும் கட்டுரைக்கு ஔவையின் ”வரப்புயர நீர் உயரும்” எனும் கவிதையின் முதல் வார்த்தையைக் கையாள்கிறார்.
வரப்புயர நீர் உயரும் என்பது பொதுமக்களுக்கு இருக்க வேண்டிய குடிமை உணர்வைப் பேசுகின்றதென்றால் ”காவலன் காவான் எனின்” என்கிற கட்டுரை ஆள்பவர்களுக்கு இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் பொறுப்புணர்வைப் பற்றிப் பேசுகின்றது.
கிளிண்டன் விவகாரம் உச்சத்திலிருந்தபோது நகைச்சுவையாக அமெரிக்க வாக்காளனுக்கும் இந்திய வாக்காளனுக்கும் உள்ள வேறுபாடு என்று ஒன்றைச் சொல்வார்கள் – ஒரு சராசரி அமெரிக்கன், தான் எப்படியிருந்தாலும் சரி, தன்னை ஆள்பவன் ஒழுக்கசீலனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பானாம். ஒரு சராசரி இந்தியனோ தான் ஒழுக்கமானவனாக இருந்தாலும் கூட, தலைமை என்று வரும்போது ’மேலிடத்தில் அப்டி இப்டித்தானப்பா இருக்கும்’ என்று அட்ஜஸ்ட் செய்து கொள்வானாம். காவலன் காவான் எனின் கட்டுரையில் ”ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின்” என்னும் திருக்குறளை நினைவுறுத்தி, ஆள்பவன் சரியில்லை என்றால் பசு கூட ஒழுங்காகப் பால் கறக்காது என்பதை நாஞ்சில்நாடன் சொல்லும்போது, பொருளாதார வளர்ச்சியோடு சேர்ந்து அள்ளிச் சுருட்டும் ஊழலிலும் உலகில் முன்னணி இடம் பெற்று விட்ட நம் அரசியல் எங்கே தவறிப் போனது என்பது நமக்குக் கோடி காட்டப்படுகிறது.
இந்தியாவின் ஊழல் கேடுகள் எல்லாமே, நம்மால் மேலே போனவர்கள் மேலிருந்து நம் மேல் ஊற்றிய சாக்கடைகள்தான்.
ஒவ்வொரு வருடமும் விடுமுறை நாளிலும் வேண்டுதல் நிறைவேற்றவும் குடும்பத்தோடு இந்தியாவின் புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்பவர்கள் உண்டு. நாமும் அவ்வாறு யாத்திரை சென்றிருப்போம்தான், இல்லையா? அப்படி வடநாட்டில் இருந்து தெய்வ யாத்திரைக்கு ராமேஸ்வரத்துக்கு குடும்பத்துடன் வருகிறார் மராட்டியப் பெரியவர் ஒருவர். இந்தியாவின் மற்ற பகுதிகளில் காணாத வரவேற்பு வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் அவருக்குக் கிடைக்கிறது. ரயிலில் ஏறும் தமிழன் குடும்பத்துடன் சட்டமாய் சப்பணமிட்டு அமர்ந்திருக்கும் மாகாதேவ் தெல்கேயைக் கண்டு கடுப்படைகிறான். கெட்ட வார்த்தை சொல்லி வெறுப்பாய்த் திட்டுகிறான். ரத்தம் வர அடித்து அவமதித்து தன் தமிழ்ப் பற்றை நிலைநாட்டுகிறான். மனதிற்குள் வளையம் போட்டு அதற்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து, தன் மொழி பேசாத, தன்னைப் போல் இல்லாத எல்லோரையும் வெறுத்து சிறு வாழ்க்கை வாழும் வேடிக்கை மனிதர்களை நாஞ்சில்நாடன் உற்றுக் கவனிக்கிறார். ”வளைகள் எலிகளுக்கானவை” என்று எழுதுகிறார். மனிதனாயிருப்பவன் தனது வளைகளை விட்டு வெளியே வர வேண்டும்.
இன்னொரு கட்டுரை – சூடிய பூ சூடற்க என்பது தலைப்பு. தொழிலாளர்களுக்காகப் போராடி முப்பது வயதில் மரித்த தியாகியின் சிலை முன் ஒவ்வொரு நாளும் ஒரு பெரியவர் நின்று கண் கசியப் பாடுகிறார். அரசு அலுவலகத்தில் கடைநிலைப் பணியில், விரலுக்கேற்ற வீக்கம் என்று அவனுக்கான ஊழலுடன் ஓரளவு காசு பார்த்து வாழ்பவன் பூமிநாதன், அவனுக்கு ஒரு நாள் திடீரென்று ஏதோ தோன்றுகிறது. கையில் ஒரு மாலையை எடுத்துக் கொண்டு சிலையை நோக்கியோ பெரியவரை நோக்கியோ விடுவிடுவென்று நடக்கத் தொடங்குகிறான். எனக்கென்னவோ நாஞ்சில்நாடன் கட்டுரைகள் எல்லாமே அந்த பெரியவரின் பாட்டு போலத்தான் தோன்றுகின்றது. தினமும் கடமையே என்று பாடிக் கொண்டிருந்தால். ஒரு நாள் இல்லை ஒரு நாளாவது சமூகம் பூ மாலையைக் கையில் எடுக்காதா?
நாஞ்சில்நாடன் கட்டுரைகள் வறட்டு தத்துவங்களாலும் புள்ளிவிவரங்களாலும் நிறைந்தவை அல்ல. அவை கதைபோல் நம்மிடம் பேசுபவை. வாழ்க்கை அனுபவங்களை நேரடியாகச் சொல்பவை. கண்டு உரைப்பதையே கட்டுரையாக்கியவர் நாஞ்சில்நாடன். அவர் செய்யும் எள்ளல்கள் கூர்மையானவை. சொல்லும் உண்மைகள் அப்பாவின் அடி போல வலியை ஏற்படுத்துபவை. அந்த வலியை உணர்பவர்களாக நம் சமூகம் இருக்கும் வரை நல்லது, மருந்தால் குணப்படுத்தி விடலாம். வலி மரத்துப் போய்விட்ட சமூகம் அறுவை சிகிச்சைக்கு தயாராகிவிட்ட, நோய் முற்றிய சமூகம். எனவே, அவரது கட்டுரைகள் தரும் வலிகளை வரவேற்போம்.
நாஞ்சில்நாடன் சொற்கள் அவர் வாழும் மண்ணுக்கும் மனதுக்கும் உண்மையான சொற்கள். ஒவ்வொரு மழைத் திவலையாய்த் திரட்டி கீழிருந்து மேல் நோக்கிப் போகும் மழைதான் எல்லோர்க்கும் பெய்யும் மழையாகவும் ஆகிறது. அது மண்ணை மட்டுமல்ல வானத்தையும் கூட வசப்படுத்திவிடுகிறது.
பிரமிள் தன் கவிதையொன்றில் ”சொல் மழைத்துளிகளாய்த் திரண்டது, மேல்நோக்கிப் பொழிந்தது” என்பார். நாஞ்சில்நாடனின் சொல் மண்ணில் உருவாகி மேல் நோக்கிப் பெய்யும் மழை.
அதை வணங்குவோம்.
மேலும் படிக்க: http://siliconshelf.wordpress.com/category/nanjil-nadan/
உங்கள் உரையின் கட்டுரை வடிவம் அழகாக அமைந்திருக்கிறது. ஒரு சிறிய திருத்தம்:
வளைகள் எலிகளுக்கானவை, சூடிய பூ சூடற்க – இவை இரண்டும் நாஞ்சில் நாடனின்
சிறுகதைகள், கட்டுரைகள் அல்ல !
சங்கர்,புனே.
——————