முந்தைய பகுதிகள்: கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -1 கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -2 கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -3 கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -4
நாள் 7 – ஜூன் 25, 2012
ஃப்ரீமாண்ட், மில்பீட்டஸ் நூலகங்கள், கம்பராமாயணம் இறுதிப்பகுதி
நாஞ்சிலுக்கு ஓய்வு நாள். அனேகமாக. கம்பராமாயணம் – 3 மட்டும் தான் இன்று. நான் சுமார் பத்து மணிக்கு நாஞ்சிலைப் பார்க்க சென்றேன் கையில் மூன்று கதைகளோடு. எல்லாம் சிலிக்கன் ஷெல்ஃபில் வெளிவந்த கதைகள் தான். முன்னர் இரண்டாவது கதைப்பற்றி தனிமடலில் ஜெயமோகன் கருத்து தெரிவித்திருந்தார். எங்கே நான் அழுதுவிடுவேனோ என்று நினைத்து ”சுமார்” என்று ஜெயமோகன் சொல்லி கதை எப்படி எழுதவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். அசோகமித்ரனின் பிரயாணம் என்ற கதை, கதை எழுதுவதில் இருக்கும் எனக்கிருந்த ஒரு பெரிய முடிச்சை அவழித்தது. மூன்றாவது கதையை எழுதும் பொழுது இந்த இரு படிப்பினையும் அப்ளை செய்திருந்தேன். பின்னூட்டமிட்ட வாசகர்கள் உப்பிலி, சாரதா மற்றும் ஆர்வி கருத்துகள் மூலம் ஓரளவு வந்திருக்கிறது என்று எடுத்துக் கொண்டேன். நாஞ்சிலிடம் validate செய்து பார்க்கலாம் என்ற ஐடியாவில் “சார் வாசித்து சொல்லுங்க” என்று ”தண்டனை” கொடுத்தேன். ஏற்றுக்கொண்டார்.
சிறிது நேரம் தமிழ் டைப் கிளாஸ் எடுத்துவிட்டு ”ஈவ்னிங் பார்க்கிறேன்” என்று சொல்லிக் கிளம்பினேன். செல்வி ஃப்ரீமாண்ட், மில்பீட்டஸ் லைப்ரரிகளுக்கு அழைத்து சென்றிருக்கிறார். பிரமித்து, ஒப்பு நோக்கி, வெறுத்து போயிருந்தார் நாஞ்சில். “எங்காவது உட்கார்ந்து அழவேண்டும்” என்று தோன்றியிருக்கிறது அவருக்கு. தமிழ்நாட்டின் எதிர்கால சந்ததியர்கள் மீது அவருக்கு கவலை பிறந்தது.
மாலை 7 மணிக்கு வந்தார். கதைகளை படித்து விட்டதாகவும் பின்னர் டிஸ்கஸ் செய்யலாம் என்றும் கூறினார். கம்பராமாயணம் கூட்டத்திற்கு ஒரு 25லிருந்து 30பேர்கள் வந்திருந்தார்கள். நாஞ்சில் ஆரம்பித்த உடன் “இன்று கம்பராமாயனம் தவிர பிற சங்க இலக்கியங்கள் பற்றி பேசுகிறேன்’ என்றார். (இந்த மூன்று நாள் செஷன்களும் பின்னர் வீடியோவாக வெளியிடுகிறோம்). அருமையான பேச்சு. என்ன பேசினார் என்பது வீடியோக்களில். முடிவில் ஒரு சிறிய அன்பளிப்பு அளிக்கப்பட்டது. சேவை, டோக்ளா, சப்பாத்தி, சப்ஜி, பல வகை வெரைட்டி ரைஸ் என்று உணவு வகைகள். சித்ரா ”சுக்கு வென்னீர்” கொடுத்தாள். செவிக்கு இடப்பட்ட உணவுடன் வயிறுக்கு இடப்பட்ட உணவும் செரிக்கத் தொடங்கியிருந்த பொழுது அனைவரும் விடைப்பெற்றனர்.
நாள் 8 – ஜூன் 26, 2012.
யோசமிட்டே (Yosemite)
இன்று பாலாஜியுடனும் கீதா கிருஷ்ணனுடனும் யோசமிட்டே நீர்வீழ்ச்சி, காடு, மலைக்கு சென்றார் நாஞ்சில். கீதா கிருஷணன் கார் ஓட்டியிருக்கிறார். என்ன கார் என்று தெரியவில்லை. பாலாஜியிடம் குறிப்பு கேட்டேன். XXXக்கு கிளம்பினோம். YYYப் பார்த்தோம் ZZZ சாப்பிட்டோம் என்று தான் குறிப்பு கொடுக்க முடியும். பேசிய எதையும் எழுத முடியாது என்றார். நான் மட்டும் பிரம்மாசூத்திரமா எழுதுகிறேன்? சரி நம்மிடம் கை வந்த கற்பனை அல்லது கப்ஸா கலை இருக்கிறது. எடுத்து விடலாமா? அதற்க்காக சுத்தமாக போகமலேயே சென்றது போல் எழுதுவது அநியாயம் என்பதால், அவர் வந்தவுடன் கேட்ட கேள்வியும், பதிலும் இங்கே- “சார் எப்படி இருந்தது?” “டிவைன், அருவியில் தண்ணீர் வந்தது, உயரமான அருவிகள். அடர்ந்த காடுகள். குப்பைகளிலில்லை. எப்படி மெயிண்டெயின் பண்ணுகிறார்கள்!”. பரவாயில்லை. இது பாலாஜி கொடுத்ததை விட கொஞ்சம் அதிக தகவல்.

எனக்கு சற்று கவலை அளித்த விஷயம் எப்பொழுது திரும்பப்போகிறார்கள் என்பது. ஏனென்றால் மறுநாள் 6:30க்கு கிளம்பவேண்டும். சுமார் 11 மணிக்கு திரும்பியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
நாள் 9 – ஜூன் 27, 2012
இட்ஸ் டிஃப் வானொலி
காலை 6:30 மணிக்கு ராஜனும் நாஞ்சிலும் ஹோண்டா அக்கார்டில் வந்து பிக் அப் செய்து கொள்ள Standord Universityயை நோக்கிச் சென்றோம். KZSU ஸ்டுடியோவில் தமிழ் ஒலிபரப்பை காலை 6 மணி முதல் 9 மணி வரை புதன் கிழமை தோறும் கடந்த எட்டு வருடங்களாக நடத்தி வருகிறார் ஸ்ரீ என்ற Srikanth Srivatsava. அமெச்சூர் ரேடியோ என்றாலும் பிரொஃபெஷ்னல் குவாலிட்டிக்கு முயற்சி செய்து வருகிறார். தமிழக FM சானலை விட தேவலாம், பல நாட்களில். அவர் கல்கியின் பொன்னியன் செல்வன், பார்த்திபன் கனவு போன்ற நாவல்களை ஆடியோ வடிவத்தில் கொடுத்து வருகிறார்.
ஸ்டுடியோவிற்கு வந்துவிட்டேன் – விசு தொலைப்பேசியில் சொன்னார். அவருக்கு இரண்டாவது நிகழ்ச்சி. இரண்டு வாரங்களுக்கு முன்னர் பி.ஏ. கிருஷ்ணன் அவர்களை பேட்டிக் கண்டோம். முன்னதாக நானும் ராஜனும் சில நிகழ்ச்சிகள் அளித்துள்ளோம். எனக்கு ஒன்றரை வருடமாக ஒரு 4 நிமிட செக்மெண்ட் ஓடுகிறது. இந்த முன் அனுபவங்களை வைத்து தான் நாங்கள் நாஞ்சிலை இண்டெர்வியூ பண்ண புறப்பட்டிருக்கிறோம். 2009ல் ஜெயமோகனையும் விட்டு வைக்கவில்லை.
7 மணிக்கு ஸ்டுடியோவில் இரண்டு முறை பெல் அழுத்தி காத்திருந்தோம். ஒரே மனிதர் தான் இயக்குகிறார். ஸ்ரீ உள்ளே வானொலியில் பேசுவது கேட்டது. கேப் பார்த்து கதவைத் திறந்தார். பேனல் (நாங்கள் நான்கு பேர்) கான்ஃபெரன்ஸ் ரூமில் ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு செட்டில் ஆகியது. 7:30க்கு காத்திருந்தோம். எஞ்சினியரிங் கண்ட்ரோல் ரூமிலிருந்து கண்ணாடி வழியாக சைகை செய்து ஸ்ரீ கான்ஃபெரன்ஸ் ரூமில் “ON THE AIR” விசையை அழுத்தியதும் ஸ்ரீ மற்றும் ராஜனின் ”நாஞ்சில் நாடன் என்ற எழுத்தாளர்” அறிமுகத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. நேயர்களுக்கு பெருத்த ஏமாற்றம். ஔவையாரை புல்லரிக்க வைத்து பேரானந்தத்தில் உண்மத்த நிலையை அடைய வைக்கும் ”அறம் செய்ய விரும்பு மவனே ஆஆஆஆஆ…..த்திச்சுடி” போன்ற தேவகானங்களை போடாத ஸ்ரீகாந்தையை ”நாஞ்சிலாம் நாஞ்சில்” என்று சபித்தார்கள்.
சாகித்ய அகடெமி பெற்ற நாஞ்சிலை மக்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. பாவம் பிஸியாக விஜய் அஜித் சினிமா பார்த்துக் கொண்டிருப்பார்கள். நாஞ்சில் சம்பத், நாஞ்சில் மனோகரன், நாஞ்சில் நாடன் என்பது போன்ற பெயர்களில் உள்ள ராகெட் சைன்ஸை புரிந்துகொள்வது நேயர்கள் மண்டையை சூடு ஏற்றியிருக்கிறது என்பது தெரியவந்ததால் இந்த அறிமுகம் தேவையிருந்தது. நாஞ்சில்களிடம் ஆறு வித்யாசம் கண்டுபிடிப்பதை காட்டிலும் அலுவலகத்திற்கு போய் இண்டர்நெட் பிரவுஸ் பண்ணுவது சாலச் சிறந்தது என்ற நம்பிக்கை கொண்டவர்கள் வானொலியின் டுயூனரை திருக்க ஆரம்பித்தார்கள்.