சதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -13

நாஞ்சில் நாடன்
திருச்சதகம்
மாணிக்கவாசகர் அருளிய திருச்சதகம், சைவ இலக்கியங்களான பன்னிரு திருமுறைகளினுள் அடக்கம், பன்னிரு திருமுறைகளோ இறவாத் தமிழ் இலக்கியங்களினுள் அடக்கம்.
திருவாசகத்துக்கு திருவாவடுதுறை ஆதீன மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர் உரை எழுதியுள்ளார். இவர் வேறு, இசைப் பேரறிஞர் தண்டபாணி தேசிகர் வேறு. “தாமரைப் பூத்த தடாகமடி” நினைவுக்கு வரவில்லை என்றால் இசைப் பேரறிஞர் தண்டபாணி தேசிகர் என்பார் பெயர் அர்த்தமாகாது.
மகா வித்வான் தண்டபாணி தேசிகரின் மகன் வழிப் பேத்தி, என் மகளின் மருத்துவ மேற்படிப்பின்போது Friend, Philosopher and Guide. கோவையில் பிரபல மருத்துவமனையில் பணிபுரியும் அவரின் வழிகாட்டுதல், வசவு, ஆதரவு, என் மகளுக்குப் பெரும் அளவில் உதவி இருக்கிறது.
சதகம் என்பது, ‘நூறு பாட்டுக்களை அந்தாதித் தொடையான் தன்னகத்தே கொண்ட நூல். இது தெய்வத் தன்மை வாய்ந்த நூறு திருப்பாடல்களைக் கொண்ட பகுதியாதலின், திருச் சதகம் எனப்படுவதாயிற்று. இந்தச் சதகம் பதிற்றுப் பத்து அந்தாதியாம். பத்துக் கொத்துக்களை உடையதாம்,’ என்கிறார் உரையாசிரியர் மகாவித்வான்.
திருவாவடுதுறை ஆதீன வெளியீடாக 1964-ல் வெளியான இந்தத் திருவாசக உரை ஏறத்தாழ 1500 பக்கங்கள். தேடுங்கள்- கிடைக்காது. ஏனெனில் இது தமிழ் கூறும் நல்லுலகம். முன்பே சொன்னோம். சதகம் மூன்று வகைகளில் எழுதப்படும் என்று. மாணிக்க வாசகரின் திருச்சதகம் ‘பக்தி வைராக்கிய சூத்திரம்,’ என்கிறார் உரையாசிரியர். மெய்யுணர்தல், அறிவுறுத்தல், சுட்டறுத்தல், ஆத்துமா சுத்தி, கைம்மாறு கொடுத்தல், அநுபோக சுத்தி, காருணியத்து இரங்கல், ஆனந்தத்தழுந்தல், ஆனந்த பரவசம், ஆனந்தாதீதம் எனப் பத்துக் கொத்துகள்.
திருச்சதகத்தின் சில பாடல்களையாவது, அது திருச்சதகப் பாடல் என்று அறியாமலேயே, தமிழ் வாசிப்பும் கேள்வியும் உடையவர் அறிந்திருக்கக்கூடும்.

கொள்ளேன் புரிந்தபின் மாலை அயன்
வாழ்வு; குடி கெடினும்
தள்ளேன் நினது அடியாரொடு
அல்லால், நரகம் புகினும்
எள்ளேன் திருவரு ளாலே
இருக்கப் பெறின் இறைவா
உள்ளேன் பிறதெய்வம் உன்னை
அல்லது எங்கள் உத்தமனே!

இறைவா! இந்திரன், திருமால், பிரம்மனின் வாழ்வு தந்தாலும் அதைக் கொள்ளேன். குடியே கெட்டுப் போனாலும் நினது அடியாரோடு அல்லால் வேறு எவரோடும் நட்புப் பூணேன். நரகம் புகினும் அதனை இகழாமல் ஏற்றுக் கொள்வேன். உன்னை அன்றிப் பிற தெய்வம் எண்ணேன் – என்பது பொருள்.

யானேனும் பிறப்பஞ்சேன்
இறப்பதனுக்கு என் கடவேன்
வானேயும் பெறல் வேண்டேன்
மண்ணாள்வான் மதித்தும் இரேன்
தேனேயும் மலர்க் கொன்றைச்
சிவனேயெம் பெருமான் எம்
மானேயுன் அருள் பெறு நாள்
என்றென்றே வருந்துவனே!
எந்தப் பிறப்பு வரினும் அஞ்சேன் யான். இறப்பதனுக்குப் பின்னால் என்ன செய்ய இயலும்? வானுலகம் பெறினும் வேண்டேன், மண்ணை ஆள்வதைப் பெரிதாக மதித்தும் இரேன். தேன் ஒலிக்கும் கொன்றைமலர் மாலை அணிந்த சிவனே, எம்பெருமானே, எம்மானே! உன் அருள் பெறும் நாள் என்று வரும் என்றே ஏங்கி வருந்துவனே!
யாவரும் நாள்தோறும் செவி மடுத்திருக்கும் மற்றும் ஒரு பாடலும் திருச்சதகமே ஆகும்.

வானாகி மண்ணாகி
வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி
உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான எனது என்று
அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை
என் சொல்லி வாழ்த்துவனே.
வானும் மண்ணும் மற்றும் தீயுன் தோலும் உயிரும் உட்பொருளும் இல்பொருளுமாகி, இவ்வனைத்துக்கும் தலைவனும் ஆகி, யான் எனது என்று இருவகைப் பற்றுடையவர்களைக் கூத்தாட்டுவானும ஆகி நின்ற உன்னை, என் சொல்லி வாழ்த்துவனே!
வடமொழியில் பர்த்ருஹரியின் சதக வரிசையில், வைராக்கிய சதகம் எனும் பக்தி சாதகத்தை மாணிக்க வாசகர் மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் என்பதை நம்மால் உணர முடியும்.
கட்டளைக் கலித்துறை, கரவு கொச்சகக் கலிப்பா, எண்சீர் விருத்தம், எழுசீர் விருத்தம், அறுசீர் விருத்தம், கலி விருத்தம், கலிநிலைத் துறை ஆகிய செய்யுட்களால் பாடப் பெற்றது திருச்சதகம்.
அவிநாசி அடிகளால் இயற்றிய ‘கார் மண்டல சதகம்’ என்ற நூலை சிற்றிலக்கிய வகைகளில் முதல் சதக நூலாகும் என்று அழைக்கிறார் கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் கூறுகிறார்கள்.
கார் மண்டல சதகம், சோழ மண்டல சதகம், பாண்டிய மண்டல சதகம், ஈழ மண்டல சதகம், கொங்கு மண்டல சதகம், தொண்டை மண்டல சதகம், மிழமைச் சதகம், கானாப்படு சதகம், சந்த மண்டல சதகம் எனச் சதக நூல்கள் அமைந்தாலும் இவை யாவும் கார் மண்டல சதகம் வடிவமைத்த அமைதியைக் காத்து, அதனைப் பின்பற்றின என்கிறார்கள்.
இம்லா- பார்த்த சாரதி நாயுடு அண்ட் சன்ஸ் 1922-ல் வெளியிட்டத் தனிப்பாடல் திரட்டு நூலின் கடைசிப் பக்கத்தில் குமரேச சதகம் பற்றிய விளம்பரம் ஒன்று பார்த்தேன். நூலைப் பார்த்ததில்லை.
கி.பி. 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைத்தியநாத சதகம் தனது இலக்கண விளக்கப் பட்டியலில்,

விழையும் ஒரு பொருள் மேலொரு நூறு
தழைய உரைத்தல் சதகம் என்ப
என்று இலக்கணம் கூறுகிறார். ‘சதக இலக்கியம்’, ஒரு பொருள் கருதிப் பாடுதல் வேண்டும். வெண்பா அல்லது கலித்துறைச் செய்யுளால் இயற்றப் பெறல் வேண்டும். அகப்பொருள் புறப்பொருள் பற்றி அவை அமைய வேண்டும். நூல் முழுதும் ஒரே செய்யுள் வகையால் பாடப் பெறல் வேண்டும் என்பான் சதக இலக்கண விதிகளாகக் கூறப்பட்டுள்ளன’ என்கிறார் புலவர் செ. இராசு, சோழ மண்டல சதகம் முன்னுரையில். பிற்காலத்தில் இவையனைத்தும் மீறவும் பட்டுள்ளன என்கிறார்.
இறைவனைத் துதிக்க, நாட்டு வரலாற்றினை, வளமையை எடுத்துரைக்க, நீதி அறிவிக்க சதக இலக்கியம் பயன்பட்டுள்ளது. தமிழில் சிருங்கார சதகங்கள் எழுதப்பட்டுள்ளனவா, கிடைத்துள்ளனவா என்பதெல்லாம் நானறியேன். குருநாத சதகம் , கோகுல சதகம், கோவிந்த சதகம் போன்றவற்றுள் 102 பாடல்களும், தண்டலையார் சதகம் 104 பாடல்களையும் கொண்டுள்ளன என்கிறார்கள்.
சதக இலக்கியம் எனும் பெயரில், சதக இலக்கிய மரபு மீறி இராமாயண சதகம், மகாபாரத சதகம், கந்த புராண சதகம் என்பனவும் எழுதப்பட்டுள்ளன.
தண்டலையார் சதகம்
இந்நூலின் பெயரே, ‘பழமொழி விளக்கம் எனும் தண்டலையார் சதகம்’ ஆகும். படிக்காசுப் புலவர் எழுதிய இந்த நூலின் பதிப்பாசிரியர் பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை. புலவர் சிவா. கணியப்பன் இதற்கோர் பொழிப்புரை எழுதியுள்ளார்.
தண்டலை என்பது சோழ நாட்டில் காவிரியின் கடற்கரையில் அமைந்த சிவத்தலங்களில் ஒன்றாகும். திருத்தண்டலை நீணெறி என்பது அதன் முழுபெயராகும். இத்தலத்து சிவபெருமான் மீது பாடப் பெற்றது இந்நூல்.
படிக்காசுத் தம்பிரான் எனப்பட்ட படிக்காசுப் புலவர், தொண்டை மண்டலத்தைச் சார்ந்தவர். இவர் இயற்றிய நூல்கள் தொண்டை மண்டல சதகம், தண்டலையார் சதகம், சிவத்து எழுந்த பல்லவன் உலா, பாம்பலங்காரம், வருக்கக் கோவை, திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை ஆகியன.
‘வெண்பாவிற் புகழேந்தி என வரும் தனிப்பாடலில், “பண்பாகப் பகர் சந்தம் படிக்காசு அலாது ஒருவர் பகர ஓணாதே’ என்று முடிவதில் இருந்து படிக்காசுப் புலவர் சந்தம் பாடுவதில் வல்லவர் என்பது அறிவோம்.

சீர் கொண்ட கற்பகத்தின் வாதாவி
நாயகனைத் தில்லை வாழும்
கார் கொண்ட கரிமுகனை விகட சக்ர
கணபதியைக் கழுத்தில் வைப்பாம்
எனத் தொடங்கும் காப்புச் செய்யுட்கள் இரண்டும்,

வெள்ளை மதியினான், கொல்லன் தெருவதனில்
ஊசி விற்கும் வினைய தாமே
என்று முடியும் அவையடக்கச் செய்யுள் நீங்கலாக 101 பாடல்கள் கொண்டது.
முதற் பாடல், திருவிளக்கு இடுதலில் தொடங்குகிறது.

வரமளிக்கும் தண்டலையார் திருக்கோயில்
உட்புகுந்து வலமாய் வந்தே
ஒரு விளக்கு ஆகிலும் பசுவின் நெய்யுடன்
தாமரை நூலின் ஒளிர வைத்தாய்
கரு விளக்கும் பிறப்புமில்லை இறப்புமில்லை
கைலாசம் காணியாகும்
திரு விளக்கு இட்டார் தமையே தெய்வம் அறிந்திடும்
வினையும் தீரும் தானே!

இதில் அறியப்படுகிற தகவல், தாமரைத் தண்டில் இருந்து எடுத்த நூலைத் திரியாக்கி, நெய் ஊற்றி விளக்கெரித்தனர் என்பது.
‘கைலாசம் காணியாகும்’ எனும்போது, கைலாசம் உரிமையாகும் என்பதாய் காணி எனும் சொல், உரிமைப்பட நிலா எனும் பொருள் தருவது – மஞ்சட் காணி என்பது மனைவி வழியில் வந்த நிலம் என்றாகும். “உங்க அப்பன் காணியா?” எனும் சொல்லை, வசவாகச் சிறு மனதில் பல முறை கேட்டவன் நான். பராசக்தியிடம், பாரதி உரிமையுடன் கேட்டுப் பாடியதுதான், ‘காணி நிலம் வேண்டும், பராசக்தி காணி நிலம் வேண்டும்,’ என்ற பாடல். காணி நிலம் இல்லாதவனுக்கே அந்த ஏக்கம் புரியும். காணி நிலம் இழந்த, காணி நிலத்திலேயே வஞ்சனையால் கொல்லப்பட்ட ஈழத்துத் தமிழனின் இழப்பு நமக்கு இன்னும்கூட அர்த்தமாகவில்லை.
கற்புடை மங்கையர் பெருமை பேசுகிறது ஒரு பாடல்.

முக்கணர் தண்டலை நாட்டில் கற்புடை மங்
கையர் மகிமை மொழியப் போமோ?
ஒக்கும் எரி குளிர வைத்தாள் ஒருத்தி; வில்வே
டனை யே எரித்தாள் ஒருத்தி; மூவர்
பக்கமுற அமுதளித்தாள் ஒருத்தி; எழு
பரி தடுத்தாள் ஒருத்தி; பண்டு
கொக்கெனவே நினைத்தனையோ கொங்கணவா
என்றொருத்தி கூறினாளே !

முக்கண்ணன் சிவபெருமானுடைய தண்டலை நாட்டில், கற்புடைய மங்கையர் மகிமை மொழிய இயலுமா? நெருப்பை ஒத்தவளாகிய சீதை அந்நெருப்பையே குளிரச் செய்தாள், தீக்குளிக்க நெருப்புக் குண்டம் இறங்கியபோது. தகாத முறையில் மொழிந்த வேடனை எரித்தாள் தமயந்தி. மூர்த்தி மூவரையும் மகவாக்கி, பக்கம் வைத்துப் பாலூட்டி அமுதளித்தாள் அனுசூயை. எழும் பரிதியைத் தடுத்தாள் நளாயினி. தவ முனிவனையே, ‘கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா’ என்று முறைத்தாள் வாசுகி, என்றெல்லாம் பெருமை பேசுகிறார் கவிஞர். ஒரு பாடலுக்குள் ஐந்து புராணம் வைத்துப் பாடுகிறார்.
ஏற்கனவே சொன்னோம், நூலின் தலைப்பே பழமொழி விளக்கம் என்று. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் கையாளும் பழமொழிகளில் சுவையான சிலவற்றை மட்டும் தருகிறேன்.
1. பன்றி பல ஈன்றும் என்ன, குஞ்சரம் ஒன்று ஈன்றதனால் பயன் உண்டாமே! குஞ்சரம் – யானை.
2. கங்கையிலே படர்ந்தாலும் பேய்ச் சுரைக்காய் நல் சுரைக்காய் ஆகாதே!
3. விடியல் மட்டும் மழை பெயினும் அதில் ஓட்டாம் கிளிஞ்சல் முளை விடாதே!
4. ஐங்காதம் போனாலும் தன் பாவம் தன்னுடனே ஆகும்தானே!
5. எட்டி மரம் பழுத்தாலும் ஈயாதார் வாழ்ந்தாலும் என்னுண்டாமே?
6. துறவிக்கு வேந்தன் ஒரு துரும்புதானே!
7. பெற்ற தாய் பசித்திருக்க பிராமண போசனம் நடத்தும் பெருமைதானே!
8. அன்ன நடை நடக்கப் போய் தன்னடையும் கெட்ட வகை ஆகும்தானே!
9. வழுவழுத்த உறவுகளில் வயிரம் பற்றிப் பகை பன்மையாகும்!
10. இளைத்தவன் பெண்டிர் என்றால் எல்லார்க்கும் மச்சினியாய் இயம்புவாரே!
11. நாழி நெல்லுக்கு ஒரு புடைவை விற்றாலும் திருமணம் நாய்க்குத் தானே!
அற்புதமானதொரு பாடலுடன் தண்டலையார் சதகம் பற்றி முடித்துக் கொள்ளலாம்:

நொந்தவரும் பசித்தவரும் விருந்தினரும்
விரகினரும் நோய் உள்ளோரும்
தந்தமது வருத்தம் அல்லால் பிறருடைய
வருத்தம் அது சற்றும் எண்ணார்
இந்துலவும் சடையாரே! தண்டலையாரே!
சொன்னேன், ஈன்ற தாயின்
அந்த முலைக் குத்துவலி சவலை மகவோ
சிறிதும் அறிந்திடாதே!

இந்துமதி எனப்படும் சந்திரமதி உலவும் சடையாரே, தண்டலையாரே, சொன்னேன் கேளும் – நொந்தவர், பசித்தவர், விருந்தினர், விரகம் உடையவர், நோயப்பட்டவர் யாவரும் தந்தம் வருத்தம் அல்லது பிறருடைய துன்பமதிச் சதுரம் எண்ணிப் பார்க்க மாட்டார்கள். மெலிந்து, வயிறு பெருத்து, மார்பும் குண்டியும் சூம்பிய சவலைப் பிள்ளை தாயிடம் சரியாகப் பால் குடிக்காது. அவ்விதம் பால் குடிக்காது போனால், தாயின் முலைகளில் பால் கட்டிக் கொண்டு குத்துவலி ஏற்படும். ஈன்ற தாயின் அந்த முலைக் குத்துவலியைச் சவலை மகவோ சற்றும் அறிந்திராதே!
(தொடரும்)
முழுக் கட்டுரைகளையும் படிக்க:http://solvanam.com/?p=20884

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to சதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -13

  1. vetrichezhian9 சொல்கிறார்:

    னூரகப் பாடல் (Hundred Poems)
    http://ulikininpin15.tumblr.com/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s