கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -4

by 
முந்தைய பகுதிகள்:   கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -1கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -2 கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -3
நாள் 5 – ஜூன் 23, 2012
ஹூவர் அணை, கிராண்ட் கேன்யன்
காலை 8:30. அனைவரும் ரெடி. லாஸ் வேகஸ் மெக்டானல்ட்ஸ் ஒன்றில் பிரேக்ஃபாஸ்ட். ஒரு 45 நிமிட கார் பயணம். லேக் மீட் கண்ணில் பட்டதுமே வீடியோவை சுழலவிட்டார் நரேன். ஃபோட்டோக்களும் உண்டு. ராஜேஷ் நல்ல கேமரா ஒன்று வைத்திருந்தார். நாஞ்சிலுக்கு ஹூவர் டாம் விவரிக்கப்பட்டது. காரிலிருந்து டாம் சுவரில் இறங்கினோம். சுவற்றில் தான் சாலை போட்டிருக்கிறார்கள். ராஜேஷ் அரிஸோனாவில் பார்க் செய்தார். அணைக்கட்டு சுவர் நெவாடா, அரிஸோனா இரண்டு மாநிலத்தையும் பிரிக்கிறது. அனைக்கட்டு சுவற்றிலிருந்த “கைப்பிடி சுவற்றை விட்டு விலகவும்” என்ற வாசகம் எழுதப்பட்ட இடத்தில் இருந்து எட்டிப்பார்த்து அணைக்கட்டை பார்வையிட்டார் நாஞ்சில். நாங்களும் தான். “பிளாஸ்டிக் பாட்டில், பாலித்தீன் பாக்கெட், செருப்பு, பக்கெட், கண்ணாடி பாட்டில், மரக் குச்சிகள், இலைகள், அட்டைப்பெட்டிகள் இதெல்லாம் நம்மூர் ஏரிகளிலும் அணைகளிலும் மிதக்கும். ஒரு தூசி இல்லையே. நீல நிறத்தில் தண்ணீர் சுத்தமாக இருக்கிறதே” என்றார்.
புகைப்பட தொகுப்பு:https://picasaweb.google.com/rajeshmadras/NaanjilNadanVegasAndGrandCanyonஅவருக்கு பிடித்திருந்தது. ஒப்பு நோக்கி பார்த்து மனம் நொந்தார். சகிப்பு தன்மையை வளர்த்துக் கொள்வதைத் தவிர வழியில்லையா?. அவருக்கு அரசாங்கத்தை மட்டும் குறை சொல்வதில் உடன்பாடு இல்லை. “பாலித்தீன் கவரை போடு, செருப்பை போடுன்னு அரசாங்கம் சொல்லிச்சா? அவங்களுகால்ல தோணனும். டிஸிப்ளின் கிடையாது. அரசாங்கத்தை எதிர்த்து வேலையில்லை அது இதுன்னு போராட ரெடியாயிருப்பான். இன்னைக்கு தமிழ்நாட்ல ஒருத்தங்கூட வயிற்றுப் பிழைப்புக்கு கஷ்டப் படவேண்டாம் ஒழுங்கா வேலை செஞ்சான்னா. அவ்வளவு வேலை இருக்கு. சொல்லப் போனா வேலைக்கு ஆள் கிடைக்காது. மத்த மாநிலத்து காரன் இங்கே வந்து பிழைப்பு தேடுகிறான். சோம்பேறிகளைத் தவிர இன்னைக்கு எல்லோருக்கும் ஒரு வழி இருக்கு.” நாஞ்சில் ஒரு பிரக்மாட்டிக் மனிதர் என்பது அவருடன் பேச பேச தெரிய வந்தது.
மொத்தம் 17 டர்பைன்கள். நெவாடா பகுதியில் 8 அரிஸோனாவில் 9. உள்ளே அழைத்து செல்லவில்லை. அங்கே போனால் இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும். அவரும் பல ஹைட்ரொ எலக்ட்ரிக் அணைகட்டுகளை பார்த்திருக்கிறேன் என்றார். அங்கிருந்த படியே மேலே செல்லும் பைபாஸ் சாலையை பார்த்துக் கொண்டிருந்தோம். கிளம்பினோம். ”நாம் பைபாஸில் போகமாட்டோம், இப்படியே பிடித்து போய்விடுவோம்” என்று அணைக்கட்டிலிருந்து அரிஸோனா போகும் பாதையை நான் சுட்டினேன். அரிஸோனா ரஸ்தாவை அடைத்திருந்தார்கள். ஒரு மைல் சென்றபிறகு பெரிய சாலை அடைப்பான்கள் எங்களை தடுத்து திருப்பிவிட்டது.
பைபாஸை பிடித்து கிராண்ட் கேன்யான் தென் விளிம்பை நோக்கி செலுத்தினார் ராஜேஷ். 3 மணி நேர பயணம். வழியில் மதியம் சாப்பாடு. ஒரு இன்ஸ்யூரன்ஸ் ஏஜண்டின் அலுவலகத்தின் முன் காரை நிறுத்தி ராஜன் அன்று காலையில் வைத்த சாதத்தை வத்தக்குழம்புடன் சாப்பிட்டு – அதன் சுவையினால் ஈர்க்கப்பட்டு மேலும் கொஞ்சம் வத்தக் குழம்பு போட்ட படியால் உண்டான – வயிற்றெரிச்சலை மில்க் ஷேக் வாங்கி அணைத்தேன். நாஞ்சிலும் மற்றவர்களும் கொண்டு வந்திருந்த புதினா மோரை குடித்து அணைத்தார்கள். அந்த இன்ஸ்யூரன்ஸ் அலுவலகத்தின் முற்றத்தின் ஒரு ஓரத்தில் பெரும் குப்பை கூழம் ஒன்று. நாங்கள் சேர்த்த குப்பைகளை அதில் கொட்டிவிட்டு போய்விடலாமா என்ற எண்ணம் எங்களுக்கு தோன்றியது. மனசாட்சி இடம் தரவில்லை. அத்துமீறி நுழைந்து சாப்பிட்டதும் இல்லாமல் குப்பையையும் கொட்டிவிட்டு போவதா? அதை காட்டிலும் காமிரா வைத்திருப்பார்களோ என்ற பயம் வேறு. நரேன் விடாப்பிடியாக எல்லா குப்பைகளையும் எடுத்துக்கொண்டு அருகிலிருந்த காஸ் ஸ்டேஷன் குப்பைதொட்டிக்கு பயணம் செய்தார். “எல்லாம் பயம்தான்” என்றார் நாஞ்சில். இந்தியாவில் சிவிக் சென்ஸ் வளர ”தேவை பயம்” என்ற தர்க்கம் ஊர்ஜிதம் ஆகிக் கொண்டிருந்தது.
கிராண்ட் கேன்யன் IMAX முதலில் செல்லவேண்டும். பார்த்துவிட்டு விரைவில் லாஸ் வேகஸ் சென்றால் சிறிது சீக்கிரம் தூங்கலாம் என்றது என் மனக் கணக்கு. ராஜேஷ் வேறு உலகத்திலிருந்தார். Sunset பார்க்கலாம் என்றார். சரி தான் இன்றைக்கும் லேட் தான் என்று மனம் முடிவு செய்தது. IMAX தியேட்டருக்கு டிக்கட் எடுத்து உள்ளே நுழைந்தோம். கொலராடோ நதி சுழல்களில் (rapids) நாங்கள் திக்குமுக்காடியது, ஹெலிகாப்டரில் கிராண்ட் கேன்யனின் மலைகளுக்குள் நதியை ஒட்டி தாழ்வாக பறந்தது, செவ்விந்தியர்களுள் ஓரினம் இன்னொரு இனத்தை அழித்தொழித்ததைப் பார்த்தது – என்று ஒரு உயர் ரக அனுபவத்தை அடைந்துக் கொண்டிருந்த பொழுது என் அருகில் உட்கார்ந்திருந்த ராஜன் அதை விட ஒரு உயர் ரக அனுபவத்திலிருந்தார் – மெலிதான குறட்டை ஒலியுடன். நிம்மதியின் விலை அறுபது டாலர் என்று நினைத்துக் கொண்டேன்.
வெளியே வந்த நாஞ்சில் “IMAX IMAXன்னு நீங்க பேசிட்ட வந்தப்ப ஐபாட், ஐஃபோன் போல ஏதோ ஒரு பொருள்ன்னு நினைச்சேன். தலை சுத்ற மாதில்ல இருக்கு. க்ரேட் எக்ஸ்பீரியன்ஸ்” எனறார். கிராண்ட் கேன்யன் பார்க்கினுள் நுழைந்த பொழுது கிட்டதட்ட மாலை ஐந்து மணி. வெயில் உரைத்தது. பார்க் பண்ணிவிட்டு விளிம்பிற்கு சென்றோம். காட்சியில் நாஞ்சில் பரவசமானார். தன்னை இழந்து பார்த்துக் கொண்டேயிருந்தார். (இதை நாஞ்சிலே அவரது கட்டுரைகளில் வர்ணிக்கட்டும்) பின்னர் வழக்கமான ஃபோட்டோ படலம். இன்னும் சில ரிம்களில் நின்று விட்டு இயற்க்கையின் முன் உண்டான சிறுமையுடன் மனமில்லாமல் திரும்பினோம்.
மீண்டும் டிரைவ், மீண்டும் சாலை. மீண்டும் ஹூவர் டாம் பைபாஸ். எங்கும் நிறுத்தவில்லை. மீண்டும் லாஸ் வேகஸ். ஒரு பள்ளத்தாக்கில் தீ கணலாக மொத்த லாஸ் வேகஸும். அருமையான காட்சி. சர்க்கஸ் சர்க்கஸை அடைந்த பொழுது சுமார் பத்து. ஓய்வு. ஸ்காட்ச். பின்னர் ஸ்ட்ரிப்பை தொட்ட பொழுது இரவு 11:45. கிட்டதட்ட ”நடுநிசி“ 12 மணி. ஆனால் நம் மனதில் வரும் பிடி சாமி நடுநிசி அல்ல. பெருந் திருவிழா நடுநிசி. ராஜன் கால் வலி என்று சொல்லி எங்களுடன் வரவில்லை. ராஜேஷ் பெல்லாஜியோவில் எங்களை இறக்கிவிட்டு பார்க்கிங் தேடி சென்றார். அப்பொழுது நாங்கள் பேசி கொண்டிருந்த சமாச்சாரம் ஈழப்போர், தனித் தமிழ்நாடு கோரிக்கைகள் பற்றியது. (முன்னரே சொன்னது போல் அதை நான் டிஸ்கஸ் செய்யப் போவதில்லை). மனதின் எரிமலை ஜாகீர் உசேன் பிண்ணனி தபலாவினால் அடங்கி ”நம்பவைக்கும்” (முன்பு ஏ ஆர் ரஹ்மான் இசை) எரிமலைக் காட்சி கண் முன் தோன்றியது. கடைசி ரன். மக்கள் கூட்டம் ஆரவாரித்தது. காஸலின் எரிக்கப்படுவதால் உண்டான சூடு தாக்கியது. காட்சி ஒன்றும் பெரிய பிரமாதமெல்லாம் இல்லை. ராஜேஷ் வந்து சேர, எல்லோரும் இரவு உணவுக்காக டென்னிஸ் சென்றோம். நாஞ்சில் சீஸில் முங்கிய நாச்சோஸ் சாப்பிட்டார். முடிந்து சிறிது சுற்றினோம்.
சுறுசுறுப்பாக ”பாவ நகரம்” (Sin City) பாவங்களை செய்து கொண்டிருந்தது. வழியெங்கும் பாவம் செய்ய எங்களை சீட்டுக் கட்டு அட்டையில் பெண்கள் அழைத்தார்கள். சிரித்தோம். அசட்டு சிரிப்பா என்பது ஃபோட்டோக்களில் தெரிந்திருக்கலாம். பாவம் செய்ய மறுத்து காரில் ஏறி லாஸ் வேகஸை ஒரு சுற்று சுற்றி வரலாம் என்று ராஜேஷ் சொன்னார். சரி என்றோம். பாவக்கூடங்களை பார்க்கலாம் என்ற எண்ணத்தில் காரில் ஏறி உடகார்ந்ததும் நாஞ்சில் தூங்கினார். நான் தூங்கினேன். நரேனும் தூங்கியிருப்பார் என்று நினைக்கிறேன். கண் விழித்த பொழுது சர்க்கஸ் சர்க்கஸில் காரை பார்க் செய்து கொண்டிருந்தார் ராஜேஷ் வெறுப்புடன். மணி மீண்டும் அதிகாலை சுமார் 4.
நாள் 6 – ஜூன் 24, 2012
காலை 9 மணிக்கெல்லாம் செக் அவுட் செய்தாகி மாண்டலே பே (Mandalay Bay) வந்தோம். பிரேக் பாஸ்ட் பஃபே. 25 வெள்ளிகள். (டாலர்). விதம் விதமான உணவு. நன்றாக சாப்பிடுபவர்களுக்கு இங்கு ஒரு பெரிய அனுபவம் காத்திருக்கிறது. நான் பேன்கேக்கள் ஆப்பிள் க்ரேப்புகளை (crepe) தட்டில் நிரப்பிக் கொண்டு வந்த பொழுது எல்லோர் தட்டிலேயும்- இரண்டு மூன்று தட்டுகள் – கலர் கலராக வித விதமாக உணவு வகைகள். ஃபோட்டோக்கள் எடுத்துக் கொண்டோம். மூன்று நான்கு முறை உணவு பாருக்கு பயணம். காலையில் கேக், ஐஸ்கிரீம் என்று ஒன்று விடவில்லை.
ஒரு வழியாக சாப்பிட்டு வெளியே வந்தோம். ராஜேஷ் வெள்ளிக்கிழமை இரவில் திருமணம் செய்து, ஞாயிறன்று டைவர்ஸ் பெறும் மாண்டலே பேக்குள் இருக்கும் ஒரு சர்ச் சர்வீஸை பார்க்க அழைத்துச் சென்றார். எதிர்காலத்துக்காக குறித்துக் கொண்டோம். மாண்டலே பே செயற்கை கடற்கரையில் (Mandalay Bay Beach) நீச்சலுடைகளுடன் ஆண் பெண் குழந்தைகள் கண்ணாடி வழியாக தெரிந்தார்கள். மணி கிட்டதட்ட மதியம் 12.  வெளியே வரும் பொழுது தலையற்ற ஒரு பிரம்மாண்ட சிலை ஒன்று பார்த்தோம். கீழே “—–” என்று பொறிக்கபட்டிருந்தது. 1915-20களின் உச்சத்தில் இருந்த ஒரு இடதுசாரி போராளி-தலைவர். ஃபோட்டோ இருக்கிறது.  ராஜேஷ் “அடுத்தது எங்கே போகலாம்?” என்றார். ”சான் பிரான்ஸிஸ்கோவிற்கு” என்றேன். நாஞ்சில் புரிந்து கொண்டு ”சரி போகலாம்” என்றார். ராஜேஷ் ”அதுக்குள்ளவா?” என்றார்.
ராஜேஷுக்கு லாஸ் வேகஸை பிரிய மனம் இல்லை. அவரை கட்டாயப்படுத்தி மீண்டும் சர்க்கஸ் சர்க்கஸ் சென்று நரேனை கார் பார்க்கில் விட்டு விடைப்பெற்று ஃப்ரீவேயை தொட்ட இருபது நிமிடத்தில் ட்ராஃபிக் ஜாம். சம்பாஷனைகளில் மூழ்கினோம். ஒரு வழியாக ரெஸ்ட் ஏரியா வந்த பொழுது சாப்பிடவில்லை. இன்னும் சாப்பிட்டால் பிரச்சனைதான். நான் இந்தப் பயணத்தில் முதல் முறையாக ஓட்டுனரானேன். டிராஃபிக், மெதுபயணம் என்று இந்த விஷயங்களிலின் மேல் இருந்த அனைத்து ஆத்திரத்தையும் ஆக்ஸிலரேட்டர் என்ற அப்பாவி வஸ்துவின் மேல் செலுத்தினேன். கார் 90 மைலிருந்து 100 மைலில் (160 கிலோமீட்டரில்) சீறியது. ராஜேஷை பேக்கர்ஸ்ஃபீல்டில் இறக்கிவிட்டு மறுபடியும் அதே வேகம். நாஞ்சில் சிறிது தூங்கினார். விவசாய நிலத்தில் நேர்த்தியாக அமைந்த மரங்கள் சாலை ஒரங்களில் வந்து கொண்டேயிருந்தது. நானும் ராஜனும் சொந்த கதைகள், வெளி நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவில் சொத்து வாங்கி அதனால் நொந்த கதைகள் சில பேசினோம். நான் முன் செல்லும் காரை கட் செய்ததால் அவன் ஹாங்க்கில் சபித்தது போதாதென்று அருகில் வந்து வாய் வழியாகவும் சபித்தான். செடுஞ்சாலைகளில் நடக்கும் இந்த மௌண நாடகத்தை ஜன்னல் வழியாக பார்த்து ஆனால் புரியாமல் “அவன் ஏதோ சொல்றானே” என்று அப்பாவியாக நாஞ்சில் எங்களிடம் கூறினார். ராஜன் “ரோட் ரேஜ்” என்றார். நான் நிதானமடைந்து கண்ணாடி வழியாக மன்னிப்பு கேட்டு அதன் பின் மெதுவாக 85ல் வீடு வந்து சேர்ந்த பொழுது இரவு 9:30 மணி. “சீக்கிரமா வந்திட்டீங்க?” என்று மனைவி கரண்டியை எடுத்தாள்.
தோசை சுடுவதற்க்காக.
முழுக் கட்டுரைத் தொகுப்பையும் வாசிக்க: http://siliconshelf.wordpress.com/

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், அமெரிக்கா, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -4

  1. vetrimagal சொல்கிறார்:

    நாங்களும் தான் , இந்த இடங்களை பார்த்தோம், ஏன் அவருக்கு தோன்றியது, என் மனதில் படவில்லை? அவருடைய அறிவாற்றல், எவ்வளவு எளிமையான கருத்து மூலம் வெளிப்படுகிறது. வியப்பாக இருக்கிறது.

    அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

  2. Rathnavel சொல்கிறார்:

    Arumai

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s