by Bags
முந்தைய பகுதிகள்: கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -1, கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -2
நாள் 4 – ஜூன் 22, 2012
லாஸ் வேகஸ் சாலை, லாஸ் வேகஸ்
முந்தின நாள் கம்பராமயணம்-2 முடிந்து வீட்டிற்கு வந்த ஒரு மணி நேரத்திற்கு பின் ராஜன் போனில் “நாளைக்கு 6:30 மணிக்கெல்லாம் கிளம்பிடலாம்” என்றார்.
“ராஜன் மணி 10:40. எப்போ தூங்கி எப்போ எழுந்து… நான் 6:30க்கு ரெடியாயிடுவேன்”
“சரி. வொர்ஸ்ட் கேஸ் 6:45” என்றார்.
காலையில் நான் 6:30க்கு கூப்பிட்டேன். எழுந்து காஃபி குடிப்பதாக சொன்னார். ”இனி மேல் வொர்ஸ்ட் கேஸ் பத்தி நினைச்சு பிரயோஜனமில்லை. பெஸ்ட் கேஸ் எத்தனை மணிக்கு கிளம்பமுடியும் என்பது தான்”. பெஸ்ட் கேஸ் கடைசியில் 7:45 ஆனது. அப்புறம் gas ஃபில் செய்து கார் ஹைவேயை தொட்ட பொழுது 8 மணி. ”சரி போகும் பொழுது ஸ்பீட் பிக் பண்ணிக் கொள்ளலாம். எப்படியும் மூன்று மணிக்கு போய்விடலாம்” என்று ஆறுதல் அடைந்தேன்.
மூன்று நாள் பயணம். சேரும் இடம் – லாஸ் வேகாஸ்
புகைப்படங்கள்: https://picasaweb.google.com/rajeshmadras/NaanjilNadanVegasAndGrandCanyon
ஹோண்டா CRV. ராஜன், நாஞ்சில் முன்னால் உட்கார நான் பின்னால். ராஜன் உடனே பேச்சில் இறங்கிவிட்டார். அமைதியாக சம்பாஷனையை கேட்டுக் கொண்டு வந்தேன். காலை அலுவலக ட்ராஃபிக் இருந்தது. எப்பொழுதும் போல் பல திசைகளில் போனது பேச்சு. 65 மைல் வேகம் இடத்தில் 55ல் போய் கொண்டிருந்தார். ட்ராஃபிக்கினாலா இல்லை பேச்சு சுவாரஸ்யத்தினாலா என்று எனக்கு சரியாக கணிக்க முடியவில்லை. ”லிவர்மூர் தாண்டினால் ட்ராஃபிக் முடிந்து விடும், அப்புறம் என்ன, 75 அல்லது 80ல் பிடிக்கவேண்டியது தானே” என்று நினைத்துக் கொண்டேன். விரைவிலேயே அதற்கு பதில் கிடைத்துவிட்டது. ஸ்லோ லேனில் போகும் ட்ரக்குகலெல்லாம் எங்களை ஓவர் டேக் செய்ய ஆரம்பித்தன. ராஜன் வலதோரம் இருக்கும் ட்ரக் லேனில் போய் கொண்டிருந்தார். ஆம ஜானவாசம் நிகழ்த்தினார் 45 மைலில். ட்ரக் லேனிலிருந்து சில ட்ரக்குகள் பொறுமையிழந்து வெளிவந்து எங்களுக்கு ஹாங்க் பண்ணிவிட்டு சென்றது. நான் யோசித்தேன். இது தேறாது என்று பட்டது.
”நான் ஓட்டவா? நீங்க பேசிட்டே வாங்க”
580 கிழக்கிலிருந்து 5 தெற்கில் பிரிந்தது.
“பேக்கர்ஸ்ஃபீல்ட் வரை நான் ஒட்டறேன்.” அதாவது இன்னும் 250 மைல் இப்படியே போவோம் என்கிறார். இந்தக் சோகத்தை மறக்க ஒரு வழி இருந்தது. லாஸ் வேகாஸ் 3 மணிக்கு போகவேண்டும் என்பதை மறந்து சம்பாஷனையில் ஐக்கியமாவதே என்பது.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் முதல் முறையாக நாஞ்சில் என்ற ஆளுமையின் இன்னொரு பரிமாணத்தை பார்த்தேன். ராஜன் தன் நண்பர் ஒருவரின் கதை ஒன்றை சொல்லிக் கொண்டு வந்தார். எனக்கு அது முன்னரே ஓரளவு தெரியும். ராஜன் நண்பருக்காக போராடியது – மிகவும் ஏழ்மையில் வாழ்ந்து வந்த அந்த நண்பரை அமேரிகாவிற்கு வரவழைத்து வேலை வாங்கிக் கொடுத்து அவருக்கு எல்லா உதவிகளும் செய்து செட்டில் பண்ணி வைத்த பிறகு நண்பர் வாழ ஆரம்பித்து, தலை நிமிரத் தொடங்கிய நேரத்தில் நோய் வாய்பட்டார். மிக குறுகிய காலத்தில் மரணமடைந்தார். அதை தொடர்ந்து உடலை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தல், இன்ஸ்யூரன்ஸ் பணம், மற்ற பண உதவிகள் திரட்டல், பணத்தை குடும்பத்திற்குள் பட்டுவாடா செய்வதில் வந்த குழப்பங்கள் – எல்லாம ராஜனுக்கு பெரிய அளவில் மன அழுத்தங்களை விளைவித்தது. சொல்லி முடித்த பொழுது நாஞ்சில் தன் கண்ணாடியை அகற்றி கைகுட்டையால் கண்ணைத் துடைத்துக் கொண்டிருந்தார்.
நல்ல காலம் ஒரு ரெஸ்ட் ஏரியா வந்தது. ”வண்டி டீ, காபி, சாப்பிட ஒரு பத்து நிக்கும்” என்று யாரும் சொல்லவில்லை. பயோ பிரேக், ஸ்நாகஸ் – முறுக்கு, ஓமப்பொடி, பழங்கள் – கொரித்தல் முடிந்து மீண்டும் காரில் ஏறிய பொழுது ஓரளவு இறுக்கம் தளர்ந்து மீண்டும் உற்சாகமான மனநிலைக்கு திரும்பியிருந்தோம். கோலிங்காவில் மாட்டுப் பண்ணையில் துர்நாற்றம். கண்ணாடியை இறக்கி நாஞ்சிலுக்கு நறுமணம் இன்மையை காண்பித்து வேகமாக கடந்தோம். ராஜேஷிற்கு போன் பண்ணிப் பார்த்தார் ராஜன். அவர் பேக்கர்ஸ்ஃபீல்டை நெருங்கி கொண்டிருந்ததாக அறிந்தோம். பேக்கர்ஸ்ஃபீல்டில் அவரை பிக்கப் செய்து கொள்வதாக ஏற்பாடு.
அடுத்த 50 மைல்களுக்கு ”தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் டெமாக்ரட்ஸ், இயற்கை அல்ல” என்று ”தட்டி போர்ட்” (Billboard) வழியாக திட்டிக் கொண்டிருந்தார்கள் விவசாயிகள் அல்லது அவர்கள் பின்னால் இருந்த வலதுசாரிகள் (ரிபப்ளிக்கன்ஸ்). சாலையின் இடது பக்கம் – குறுக்குவெட்டில் ட்ரப்பீஸியமாக (Trapezium) வடிவமைக்கப்பட்ட விவசாய நீர் கால்வாயில் ”தொபுக் தொபுக்” என்று நிர்வாணமாக குதிக்கும் சிறுவர்கள், மார்பு வரை பாவாடையை அல்லது சேலையை தூக்கிக்கட்டி கொண்டு துணி துவைத்துக் கொண்டிருக்கும் பெண்கள், வேப்பங்குச்சியில் பல் விளக்கிக் கொண்டே மாடு குளிப்பாட்டி கொண்டிருக்கும் ஆணகள், என நிறைந்திருக்கும் தோவாளை (பழைய நாகர்கோவில் – திருநல்வேலி நெடுஞ்சாலையில்) கால்வாய் போல் ஆனால் – அதி பெரிய சைஸில் இருந்த ட்ரப்பீஸிய கால்வாயில் தண்ணீர் விளிம்பு வரை நிறைந்து ஆங்காங்கே கிளைகள் பிரிந்து சென்றது. ஆனால் கால்வாயில் நிர்வாணச் சிறுவர்களும், பெண்களும் இல்லை. அதனால் காட்சி முழுமை பெறவில்லை. அதில் ஓடிய தண்ணீர் தனியார் விவசாய நிலங்களை ஸ்பிங்க்லர் வழியாக குளிரச் செய்து கொண்டிருந்தது. ஸ்பிர்ங்கலரிலிருந்த பல patternகளில் சிதறிய தண்ணீர் சூரிய ஒளிகதிர்களால் வானவில் ஏற்படுத்தி ”பிரிஸம் என்றால் என்ன?” என்று டெமான்ஸ்ட்ரேட் பண்ணியது.
ஒரு வழியாக 1:30க்கு பேக்கர்ஸ்ஃபீல்டை அடைந்தோம். ராஜேஷ் வந்து ஒரு ஒன்றரை மணி நேரம் ஆகியிருந்தது. ஏர்போர்டில் காரை பார்க் செய்துவிட்டு உள்ளே காத்திருந்தார். பிக்கப் செய்து கொண்டு பயணத்தை தொடர்ந்தோம். கலிஃபோர்னியாவையும் நெவாடாவையும் பிரிக்கும் மலைத்தொடர் வழியாக மொகாவி பாலைவனத்துக்குள் நுழைந்த சமயத்தில் பசி எடுத்துக் கொண்டிருந்தது. வெயில் கலந்த பேய் காற்று. ராஜன் ரெஸ்ட் ஏரியா வரும் வரும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து இறுதியில் பாலத்தின் அடியில் நிறுத்தப் போவதாக கூறினார். அது சரிப்படாது, டிக்கட் வாங்க (அபராதம் கட்ட) நேரலாம் என்று தோன்றியது. இருந்தாலும் ஒரு பாலத்தின் கீழ் நின்றார். நான் கதவை திறக்க முயன்றேன். கதவை வெளிப்புறமாக மெதுவாக தள்ளியது தான் தெரியும். கதவும் நானும் சேர்ந்து இழுக்கப்பட்டு நான் முழுமையாக வெளியில் வந்திருந்தேன். பேய் காற்று. இதில் பேப்பர் ப்ளேட்டில் வைத்து சாப்பிடவேண்டும். சாப்பிடும் முயற்சியை கைவிட்டோம். ராஜேஷ் டிரைவர் இருக்கையில் அமர்ந்தார். இடம் மாற்றங்கள். நாஞ்சில் பின் சீட்டிற்கு வந்தார். வழக்கம் போல் சீட் பெல்ட்டிலிருந்து விடுதலைப் பெற்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை. ராஜேஷ் தானே இருபது டாலர் கொடுக்கவேண்டும்.
பின் ரெஸ்ட் ஏரியா கண்டு பிடித்து வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த வத்தக் குழம்பு, தயிர் சாதம் போன்றவை கபளீகரம் செய்து மிண்டும் பயணத்தை தொடர்ந்து பொழுது மணி நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது. திட்டப்படி லாஸ் வேகஸை அடைந்திருக்க வேண்டும் இல்லை நெருங்கியாவது இருக்க வேண்டும். இன்னும் குறைந்தது மூன்றரை மணி நேர பயணம் இருந்தது. ராஜேஷின் ஸ்பீட் பரவாயில்லை. இரண்டு மணி நேரத்திற்கும், இந்திய மளிகை கடைகளில் வாங்கிய பிர்ட்டாணியா சாக்லேட் பிஸ்கட், கார்டமம் பிஸ்கட், சிப்ஸ் என்று மூன்று, நான்கு பாக்கெட்களுக்கும் பிறகு மீண்டும் ரெஸ்ட் ஏரியா. பிளாஸ்க்கில் காஃபி இருந்தது. குடித்தார்கள். ரெஸ்ட் ரூம் அவசியம் யூஸ் பண்ண வேண்டுமா என்ற சந்தேகத்தில் ”இன்னும் ஒரு மணி நேரம் தான் சார்” என்றேன். “ பரவாயில்லை வாய்ப்பிருக்கும் பொழுதெல்லாம யூஸ் பண்ணிக்குவமே” என்றார் நாஞ்சில்.
ஒரிடத்தில் திடீரென்று காரை நிறுத்தி இறங்கினோம் ஜோஷுவா மரங்களின் காடு அது. சில ஃபோட்டோக்கள் எடுத்தப் பிறகு பயணம் தொடர்ந்தது. 6:30 மணி. பாலைவனத்தில் வெயில் கொழுத்தியது. இன்னும் ஒரு மணி நேரம் தானே என்று திடப்படுத்தி கொண்டிருந்த பொழுது தான் ”திட்டங்கள் மனிதனின் அறியாமை” என்பதை அறிவுறுத்தும் ஆணவ அழிப்பு நிகழ்ந்தது. ட்ராஃபிக் ஜாம். அடி அடியாக பயணம் செய்தோம். ஒரு பதினைந்து மைல் தொலைவிற்கு நேர் சாலை கண்ணுக்குத் தெரிந்தது. காத்திருந்து காத்திருந்து காரின் டைர்களுக்கு வலித்ததோ இல்லையோ எங்கள் பட்டெக்ஸ் வேதனைக் கொடுத்தது. வெளியே அமெரிக்காவில் சாதரணமாக நடக்காததெல்லாம் நடந்தது, காணக் கிடைக்காதெல்லாம் காணக் கிடைத்தது. ஒரு வெள்ளையர் ஜோஷுவா மரத்திற்கு உப்புத்தண்ணீர் ஊற்றினார். அதைப் பார்த்து சீனர்கள் சிலர் தைரியம் பெற்றதால் இன்னும் சில ஜோஷூவாக்கள் ”பயனடைந்தன”. ஆப்ரிக்க அமேரிக்கர்கள், ஹிஸ்பானியர்கள் அனைவருக்கும் பாலைவன ஜோஷுவா மரங்கள் மீது பரிதாபம் பிறந்தது. ஜாதியில்லை, மதமில்லை. Unity in Diversity. ஆத்திரத்தை அடக்கிவிடலாம். இந்தியாவில் சுதந்திரமாக தெருக்களை நறுமணம் செய்யும் இந்திய பாரம்பரியம் உடையவர்கள் மட்டுமே விதி விலக்கு. இந்தியர்கள் மிகவும் பயந்தவர்கள் என்ற புதிய ஸ்டீரியோடைப் எண்ணத்தில் உருவாகியது. மனதில் பயமிருந்தால் இந்தியாவில் சிவிக் சென்ஸ் வளர வாய்ப்பிருக்கிறது என்று எண்ணிக் கொண்டேன். ரெஸ்ட் ஏரியாவில் “வாய்ப்பு கிடைக்கும் போது யூஸ் பண்ணிக்குவமே” என்ற நாஞ்சிலின் அனுபவமும் விவேகமும் நிறைந்த தீர்கக்தரிசனத்தால் எங்களுக்கு உபாதைகள் ஒன்றும் இல்லாமல் மற்றவர்களை குறை சொல்லும் பாக்கியம் கிடைத்தது.
கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக தைரியம் பெற்று ஷோல்டரில் (service lane) செல்ல ஆரம்பித்தன. நாங்கள் இவற்றில் பங்கெடுக்காமல் நல்ல குடிமகன்களாக இருந்ததால் எங்களுக்கு பரிசு – இரண்டு மணி நேர தாமதம். சம்பவம் நடந்த இடத்தை கடந்த பொழுது ஏதோ ”கெமிக்கல் ஸ்பில்” என்று அறிந்துகொண்டோம். ஒரு வழியாக ”சர்க்கஸ் சர்க்கஸை” அடைந்த பொழுது 9:30. நவீன் மாற்றுப் பாதை வழியாக சென்றதால் ஒரு அரைமணி முன்னதாக அங்கே வந்து சேர்ந்திருந்தார். ”செக்கின்” (Check-in) செய்து அறையை அடைந்த பொழுது மணி 10. பதினான்கு மணி நேரப் பயணம். வாழ்க ராஜன், வளர்க அவர் கொற்றம்.
நாஞ்சில் தயார் ஆகி வரும்வரை காத்திருந்தோம். வந்தவுடன் Napa Valleyயில் வாங்கி வைத்திருந்த ”திராட்சை ரசம்” பரிமாறப்பட்டது. ராஜேஷ் ஒரு சிறிய ஸ்காட்ச் ஒன்றும் வாங்கி வந்தார். ராஜேஷும் நரேனும் ஒதுங்கினார்கள். எல்லாம் முடிந்த பின் 12.15க்கு ஸ்ட்ரிப்பை (Strip என்பது Las Vegas Strip என்று சொல்லப்படும் காஸினோக்கள் (casino) இருக்கும் மூன்று மைல் சாலை) அடைந்தோம். அனேகமாக அனைத்து ரெஸ்டாரண்ட்களும் மூடப்பட்டு இருந்தது. ”சீஸர்ஸ் பாலஸ்”க்குள் சென்றோம். கிரேக்கப் பெண்களின் சிலைகள், சித்தாந்தவாதிகளின் சிலைகள், கனித மேதைகளின் சிலைகள். நாஞ்சில் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் – ஒரு சுற்று சுற்றி வந்து கடைசியில் ஒரு 20 டாலர்களுக்கு டோக்கன்கள் வாங்கி கொடுத்தார் ராஜேஷ். நாஞ்சில் ”சூதாடினார்”. பணிப்பெண் ஒரு சக்கரத்தை சுழற்றுகிறாள். அதன் வெளி வட்டத்தில் நம்பர்கள் எழுதப்பட்டு இருக்கிறது. ஒரு இடத்தில் முள் ஒன்று இருக்கிறது. சக்கரம் சுழன்று அந்த முள் முன் இருக்கும் நம்பரில் வந்து நின்றால், எத்தனை டோக்கன் வைத்தோமோ அத்தனை டோக்கன் வெற்றிப் பெறலாம். பத்து, இருபது, நாற்பது என்ற எண்களில் விளையாடுமாறு நாங்கள் தூண்டினோம். தோல்வி. மீண்டும் பெட். மீண்டும் தோல்வி. கையிருப்பு 10 டாலர்களாக குறைந்தது. தர்மர் நாட்டை இழந்தார். ஆனாலும் ஆட்டத்தை நிறுத்தவில்லை. நாஞ்சில் நாட்டை இழக்க தயாரில்லை. 1 டாலரை கூட இழக்கத் தயாரில்லை. எங்களிடம் கொடுத்துவிட்டார். நானும் நரேனும் ஆடத் தொடங்கினோம். தேறவில்லை. நாஞ்சில் ஒரு ஆலோசனை சொன்னார். 1 அல்லது 2 அல்லது 5 கள் அந்த “சுற்றும் வட்டு”(டி)ல் அதிகமாக இருப்பதால் அதில் வைத்து ஆட சொன்னார். அது வேலை செய்தது. கொஞ்சம் காசு வந்தது. ஆனால் அது மிகவும் தாமதாகிவிட்டது. “முக்காடு” போட்டு வெளியே வந்தோம்.
வெனீஷியனுக்கு போனோம். செயற்கை ஆகாயம் நாஞ்சிலுக்கு மிகவும் பிடித்தது போலிருந்தது. சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அறைக்கு திரும்பினோம். படுக்கையில் விழுந்த பொழுது அதிகாலை மணி 3:45.
முழுக் கட்டுரைத் தொகுப்பையும் வாசிக்க: http://siliconshelf.wordpress.com/
Fantastic