கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -2

by 

முன் பகுதி: கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -1
நாள் 3 – ஜூன் 21, 2012 NAPA valley
நான் நாஞ்சிலை மறுநாள் எட்டரை மணிக்கு தயாராக இருக்குமாறு கூறியிருந்தேன்.
முந்தைய தினங்களில் நடந்த சம்பாஷனைகளின் பொழுது நாஞ்சில் ஒரு விஷயம் சொல்லியிருந்தார். சிலர் கோவையில் அவர் இல்லத்திற்கு ஒரு 9 மணிக்கு வருவதாக சொன்னால் 11 மணிக்கு தான் வந்து சேர்வார்கள். வெளி வேலைகளை விட்டு விட்டு அவர்களுக்காக காத்திருந்து அன்று நடக்கவிருக்கும் வேலைகளெல்லாம் பாழாகிவிடும் என்றார்.
அதை மனதில் வைத்துக் கொண்டு காலையில் பெண்ணை பள்ளியில் விட்டு விட்டு 8:15க்கெல்லாம் ரெடியாகி விட்டேன். கிளம்பலாமா என்று நினைத்துக் கொண்டிருந்த பொழுதே ராஜன் ”9:30 மணிக்கு மேல் கிளம்புங்க, ட்ராஃபிக் குறைந்திருக்கும்” என்று தொலைப்பேசியில் கூறினார். 10 மணிக்கு போய் 4 மணிக்குள் எப்படி திரும்புவது, இன்னைக்கு கம்பராமாயணமா கோவிந்தபுராணமா என்று ஒரு சந்தேகம் வந்தது. சரி என்று கொஞ்சம் அலுவலக வேலைகளை முடித்துவிட்டு சென்றேன். உள்ளே நுழைந்த போது 9:30 மணி. ராஜன் அலுவலகம் சென்றிருந்தார்.  நாஞ்சில் பிரிஸ்காக இருந்தார்.  தாமத்திற்கு மன்னிப்பு கேட்டேன். ”நதியின் பிழையன்று …” என்று சொன்னால் அதிகப்பிரச்ங்கிதனம் என்பதால் ”ராஜன் தான் சார் லேட்டா வரச் சொன்னார்” என்றேன்.  கிளம்பினோம்.
நிஸ்ஸான் ரோக் – SV. நாஞ்சிலுக்கு ஸீட் பெல்ட்டினால் வசதி குறைவு. அதனால் அவர் பின்னால் உட்காரத்தான் பிரியப்படுகிறார். ஸீட் பெல்ட் போடவேண்டாம் என்று யாரோ சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இரண்டே பேர்கள் என்பதால் அந்த சுகத்தை அவருக்கு கொடுக்க வாய்ப்பில்லை. முன் இருக்கையில் அமர்ந்து கொண்டார். மனதில் உற்சாகம் நிறைந்திருந்தது.
Napa Valley. Wine Country என்றும் சொல்கிறார்கள். பதினேழு வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை சென்றிருக்கிறேன். எங்கிருக்கிறது என்று அவ்வளவு சரியாக தெரியவில்லை. GPS ஒன்று சொல்ல ராஜன் ஃபோனில் வேறொறு பாதை சொன்னார். நான் மூன்றாவது ஒன்றில் சென்று கொண்டிருந்தேன். மொத்தத்தில் கேலிஸ்டோகா (Calistoga) இருக்கும் திசையை உத்தேசமாக நோக்கி செலுத்தினேன். சான் பிரன்சிஸ்கோவிலிருந்து கேலிஸ்டோகா செல்வதற்கு 80 கிழக்கு. அதில் போய் கொண்டிருதோம்.
முதலில் Old Faithful Geyser என்ற ஹாட் ஸ்பிரிங்ஸ். எப்பொழுதோ பார்த்தது. என்ன நடந்தது அங்கே என்று சுத்தமாக நினைவில்லை. ஏதோ ஒரு வென்னீர் ஊற்று என்று சொன்னேன். ஏதேதோ பேசத் தொடங்கி இறுதியில் பெண்களின் கற்பு என்பதை பற்றிய ஒரு புள்ளியில் நங்கூரத்தை பாய்ச்சிவிட்டோம். ஆம். பேசினோம். பேசினோம். மூன்று மணி நேரமாக அதைப் பற்றி பேசினோம்.
பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது. பெண்களை மட்டும் கற்பு என்று ஒன்றுக்குள் அடைப்பது  எனபது அயோக்கியத்தனம் என்ற ரேஞ்சில் பேச்சு போனது. ”நதியின் பிழையன்று நறும் புணல் இன்மை” கட்டுரை தொகுப்பில் கற்பு பற்றி எழுதியிருப்பதாக கூறினார் நாஞ்சில். திடீரென்று தூக்கி வாரிப்போட்டது எனக்கு. நான் போய் கொண்டிருக்கும் பாதை சான் பிரான்சிஸ்கோ 80 மேற்கு என்று காட்டியது. பேச்சு சுவரஸ்யத்தில் ஏதோ எக்ஸிட் எடுத்து U டர்ன் எடுத்து வந்த வழியிலே போய் கொண்டிருந்தோம். இரண்டு மூன்று முறை பாதையை தவற விட்டேன். அவ்வளவு சுவாரஸ்யம். எல்லவற்றையும் கேன்சல் பண்ணி ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசி கொண்டிருக்கலாம் என்று தோன்றியது.
வழியெங்கும் பச்சை. திராட்சைக் ”கொடிகள்” அல்லது மரங்கள். எப்படி திராட்சை, மரமாக இருக்கிறது என்றார். எனக்கு சொல்லத் தெரியவில்லை. ”நமக்கெல்லாம் திராட்சையிலிருந்து வரும் ரசம் தான் தெரியும், அதுவும் உருப்படி கிடையாது” என்று நினைத்துக் கொண்டேன். கொடியா, மரமா எனபதை விட இது திராட்சை தானா? அதிகப் பிரசங்கி தனமாக ”கண்ணுக்கு தெரிவதெல்லாம் திராட்சை என்று வேறு சொல்லிவிட்டேனே” என்று நெளிந்தேன். எதற்க்கும் ”நான் அப்படி சொல்லவேயில்லை” என்று பின் வாங்க வசதியாக இருக்கட்டுமே என்று “இது திராட்சையாகத் தான் இருக்கும். ஆனால் சரியாத் தெரியல…” என்று ஒரு வித அசட்டு இழுவையுடன் தப்பித்தேன்.
இருபக்கமும் மலைகள். மிதமான வெயில். மென்மையான் தென்றல். கவிஞன் கவிதையெழுத வேண்டிய மூட் (mood) வரும் பயணம். காருக்குள் ”கற்பு கணல்” தெறித்தது. அதே சமயம் வெளிபுறக் காட்சிகளை கண்கள் விழுங்கியாவாறே இருந்தது. ஒரு வழியாக கேலிஸ்டோகாவை தொட்டோம். Old Faithful Geyserக்கு பிரியும் பாதையில் ஒரு மைல் சென்றவுடன் இடது புறம் இருந்தது. கூட்டமில்லை. வியாழக்கிழமை. உள்ளே நுழைந்து டிக்கட் பெற்று பயோ பிரேக்கெல்லாம் முடிந்து ஊற்றின் அருகே போய் நின்றோம். சுற்றி மலைகள். அதன் நடுவே திராட்சை ”மரங்கள்”. அதன் உள் வட்டத்தில் கொத்தாக ஒரு வித மெலிந்த மரங்கள் அல்லது உயர்ந்த செடிகள். நாஞ்சில் மூங்கில் இல்லை, மூங்கில் குடும்ப மரங்கள் என்றார். அதனுள் வட்டத்தில் இந்த ஊற்று. அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஊற்று சீறுகிறது. நாங்கள் போய் ஒரு 15 நிமிஷம் காத்திருந்தோம். குக்கரில் சத்தம் வருவது போல் ஒரு சத்தம் வரத் தொடங்கியது. ஒரு அடி உயரத்திற்கு சிறிது தண்ணீர் தெரித்தது. அப்புறம் அடங்கிவிட்டது. பெரிய ஏமாற்றம். ”இதெல்லாம் ஒரு காட்சி என்று நாஞ்சிலை அழைத்து வந்திருக்கிறோமே. பதினைந்து டாலர் டிக்கட் வேறு. நல்ல தெரிந்து வைத்திருக்கிறார்கள் நம் பாக்கெட்டிலிருந்து பணம் பிடுங்க.” என்று அவர் முகத்தை பார்க்க மனமில்லாமல் அடுத்தது இந்த தர்மசங்கட சிக்கலிலிருந்து எப்படி gracefulலாக வெளியே வருவது எனறு மனக்கணக்கு போட்டுக் கொண்டிருந்த பொழுதே குக்கர் ஃபுல் பிரஷரில் ஆகாயம் நோக்கி பீரிட்டது. ஒரு முப்பது நாற்பது அடியிருக்கும். தண்ணீர் பீய்ச்சியது. சுமார் 5 நிமிடங்கள் சீற்றம் குறையாமல் அடித்து பின் மெல்ல அடங்கியது. நாஞ்சிலின் முகத்தை பெருமிதத்துடன் பார்த்தேன்.
அடுத்து அங்கிருந்த லாமஸ், நான்கு கொம்பு ஆடு என்று பார்த்தோம். இவை பற்றி விரிவான தகவல்கள், நில அதிர்ச்சி தொடர்பான விஷயங்களெல்லாம் நான் நாஞ்சிலுக்கு விட்டு விடுகிறேன். விரிவாக நாஞ்சில் பயணக் கட்டுரைகளில் எழுதுவார் என்று நினைக்கிறேன்.
வெளியே வந்தோம். மணி 12. காரில் ஏறி உட்கார்ந்தோம். சாப்பாடு. சித்ரா (என் மனைவி) இரண்டு லஞ்ச் பாக்ஸில் தனி தனியாக சாண்ட்விச் நாஞ்சிலுக்கும் எனக்கும். அப்புறம் பிரட் ப்க்கோடா மொத்தமாக ஒரு ziploc பேக்கில். சாஸ் sachet. காரில் உட்கார்ந்து கொண்டே சாப்பிட்டோம். நிம்மதியாக இருந்தது.  ”சார் சாப்பாடு ஓக்கேயா?” “இதுதான் பெஸ்ட். ட்ராவல் செய்யும் பொழுது லைட்டாக தான் இருக்கவேண்டும்” என்றார். ஒரு டொமேட்டோ ரைஸ், தயிர் சாதம் என்று வழக்கமாக கொடுக்காமல் எதற்க்காக இப்படி கொடுத்திருக்கிறாள் என்பது கை வாஷ் பண்ணும் நேரம் வந்த பொழுது புரிந்தது. அதற்கு அவசியமே இல்லை. நேப்கினை வைத்து துடைத்தவுடன் எல்லாம் முடிந்து விட்டது. காலையில் ஜெர்மனியுடன் ஃபோனில் இருந்துக் கொண்டே இவ்வளவையும் செய்து முடித்த சித்ராவுக்கு மனதிற்குள் ஜே ஒன்று போட்டுக் கொண்டேன். பெண் புத்தி முன் புத்தி. இரண்டு Aqua Fina செல்வி (ராஜனின் மனைவி) தந்திருந்தார். திவ்யமாக குடித்து ஸ்டெர்லிங் வைன்யார்ட்ஸை நோக்கி செலுத்தினோம்.
வைன்யார்ட்ஸில் வின்ச் ரைட். கழுக்குப் பார்வையில் ஸ்டெர்லிங் வைன்யார்ட்ஸ். ஒரு ஏரி. சுற்றி மலை. மாசு கட்டுப்பாடு. கண்கள் பச்சையில் உரைந்தது. மனதும் சேர்ந்து பச்சையாகியது. நாஞ்சில் டிவைன் எக்ஸ்பீரியன்ஸ் என்றார். என் மனம் கரைந்தது. இறங்கும் இடம் வந்ததும் அன்புடன் வரவேற்றார்கள் வின்ச்சை தடுத்து நிறுத்திய சிப்பந்திகள். இறங்கினோம். வரிசையாக வைன் டேஸ்டிங். நாலைந்து இடங்களில். பின்னர் வைன் பதமிடும் பேக்டரி. (நாஞ்சிலின் வார்த்தைகளில் கேட்பது சுவை குறையாமலிருக்கும் எனபதால் அதை பற்றி இங்கே சொல்லப்போவதில்லை). பிறகு ஒரு பெரிய ரூஃப் கார்டன். சுற்றிப் பார்த்தோம். மீண்டும் டிவைன் எக்ஸ்பீரியன்ஸ். மனிதன் ஏன் சண்டை போட்டுக் கொள்கிறான் என்று திடீரென்று புரியாமல் போனது.
சில புகைபடம் எடுத்துகொண்டு வெளியே வரும் பொழுது காம்ப்ளிமண்ட்டாக இரு வைன் கிளாஸ் கொடுத்தார்கள். நேரம் 2:15. மூன்றாவது இடம் போகலாமா என்று கேட்டேன். என் பெண்ணிற்கு டெண்டிஸ்ட் அப்பாயிண்ட்மெண்ட் 3:45க்கும் மனைவிக்கு MRI அப்பாயிண்ட்மெண்ட் 4:30க்கும். நான் ஒன்றை சமாளித்தால் தான் இன்னொன்று கைகூடும். கம்பராமாயணம் பாலாஜி வீட்டில் ஏழு மணிக்கு இரண்டாம் நாள் கூட்டம். நாஞ்சிலுக்கு ஒரு மணி நேர ஓய்வு தேவைப்பட்டது. எல்லாவற்றையும் மனதில் கொண்டு ”இல்லை வீட்டிற்கு போகலாம்” என்றார் நாஞ்சில். திரும்பினோம்.
நேரத்துடன் போட்டியில் இறங்கினேன். ஃப்ரீவேயில் விளையாடினேன். நேரம் 3:00. சிறிது கண் அசந்தார் நாஞ்சில். அலுவலகத்தில் ஓப்பி அடிப்பவர்கள் அதுவும் போரடித்துப் போய் சிக்கிரமாக வீட்டிற்கு கிளம்பி ”டிராஃபிக்” ஏற்படுத்தினார்கள். கேஸ் தீர்ந்தது. என் பதற்றம் நாஞ்சிலையும் பற்றிக் கொண்டது. “வேண்டுமானால் வீட்டிற்கு அப்புறம் செல்லலாம். முதலில் டாக்டரிடம் செல்வோம். இன்னும் எவ்வளவு நேரம் போகவேண்டும்?” என்றார். ”அரை மணி நேரம் தான் சார்” என்றேன். ஆனால் அங்கிருந்து ஹெலிகாப்டரில் போனால் கூட அரை மணி ஆகும். மொத்தத்தில் என் தோல்வியை காலத்திடம் சமர்ப்பிக்க சித்தமானேன். என் மனைவி ஆபத்பாந்தவளானாள். ஸ்டியரிங் மண்டை வழியாக நான் பதட்டத்துடன் பேச, அதை புரிந்துக் கொண்டு ரோகின் (Rogue) ஆடியோ ஸிஸ்டத்தில் ”இரண்டு அப்பாயீன்மெண்ட்டுக்கும் பத்து நிமிஷம் அட்ஜஸ்ட் பண்ணி நானே பார்த்துக் கொள்கிறேன்” என்றாள். நிம்மதி பெருமூச்சு விட்டோம். ராஜனின் வீட்டில் நுழைந்த பொழுது 5:15. இன்று திருப்தியாக இருந்தது.
மாலை 7:00
நான் ஏழரைக்கு தான் பாலாஜி வீட்டிற்க்கு சென்றேன். நாஞ்சில் அதற்குள் ஓய்வெடுத்து பிரிஸ்காக இருந்தார். கமபராமயணம் கும்பகர்ணன் விபீஷ்னன் ராவணன் என்று போய்க் கொண்டிருந்தது. அதி உக்கிரமான கட்டங்கள். நாஞ்சில் ஏன் முதல் கூட்ட சொற்பொழிவு அவருக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறினார் என்பது இப்பொழுது எனக்கு உதித்தது. உச்சத்திற்கு சென்று கொண்டிருந்தார். எல்லோரும் மெஸ்மரைஸ் ஆகியிருந்தார்கள். பேச்சு மூச்சு இல்லை. நேரம் போனதும் தெரியவில்லை. 9:30 மணிக்கு நின்றது. இன்னும் மேலே போகமாட்டாரா என்று ஏக்கம் மிஞ்சியது. பின்னர் சாப்பாடு படலம். நான் 9:40க்கு விடைப்பெற்றேன். அடுத்த நாள் பெரிய பயணம்.
(தொடரும்)
முழுக் கட்டுரையையும் படிக்க: http://siliconshelf.wordpress.com/

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், அமெரிக்கா, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s