கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -1

http://siliconshelf.wordpress.com/2012/07/02/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/
நாள் 1 – ஜூன் 19, 2012
மதியம் 1 மணி
சிறு குழப்பத்திற்கு பிறகு மதியம் 1:20க்கு ராஜனை பிக் அப் செய்து கொண்டு ஸான் ஓஸே (San Jose – புதிதாய் அமேரிக்கா வருபவர்களுக்கு இது ஸான் ஜோஸ்) ஏர்போர்டை நோக்கி பறந்தேன். 1:50க்கு லேண்டிங். இன்னும் அரை மணிநேரம் தான் இருந்தது. ஏர்போர்ட்டை அடைந்து விடமுடியுமா? விண்ட் ஷீல்ட் வழியாகவும் ரியர் வியூ ஃபைண்டரில் ஒரே நேரத்தில் பாலத்தின் அடியிலும், ஃப்ரீவே நுழைவுகளிலும்  கருப்பு வெள்ளைக் கார்கள் நிற்கின்றனவா என்று என் கண்கள் ஸ்கேன் செய்தவாறு (இது ஒரு தனி கலை – சாலையின் அப்பொழுது உள்ள ட்ராஃப்ஃபிக்கிலிருந்து கண்களை அகற்றாமல் இப்படி ரோட் சைட் டிக்கட் கொடுக்கும் ரோமியோக்களுக்கு கல்தா கொடுப்பதில் கிட்டதட்ட மூனறரை லட்ச மைல்களுக்கும் பதினெட்டு வருஷ அமேரிக்க வாழ்க்கைக்கு பிறகும் ஓரளவு எக்ஸ்பர்டாகிதான் இருக்கிறேன்) அக்ஸிலரேட்டரை கிட்டதட்ட் கிரவுண்டு பண்ணியபோது தான் உதித்தது வளைகுடா தங்கம் தீர்ந்து ரிசர்வில் போய் கொண்டிருப்பது. இதை வைத்துக் கொண்டு ஏர்போர்ட் போய்விடலாம். ஆனால் வரும் பொழுது ஒரு சீஃப் கெஸ்டை வண்டி தள்ள வைப்பது அவ்வளவு நாகரீகமாக இருக்காது என்பதால் பேசாமல் காஸ்ட்கோ இருக்கும் எக்ஸிட்டை எடுத்துவிட்டேன். ராஜன் ஏதோ முணு முணுத்துக் கொண்டே வந்தார். சரி நேரம் ஆகிவிட்டதால் பதட்டப்படுகிறார் என்று நினைத்தேன். வரிசையில் நின்று எப்படியும் காஸ் ஃபில் அப் செய்ய ஒரு பத்து நிமிடம். ஏர்போர்ட் அடைய அப்புறம் ஒரு இருபது நிமிடம்.
”ராஜன், டைம் நிறைய இருக்கிறது. அவர் வருவதற்குள் போய்விடலாம்” என்று சொல்லிவிட்டு டேஷ் போர்டில் உள்ள கடிகாரத்தைப் பார்த்தேன். 1:40 காட்டியது.
”ஆமாமா போய்விடலாம்” என்று அவரும் ஆமோதித்தார்.
டொயொட்டா ஸியென்னா 1:55க்கு ஏர்போர்ட் வெளிபுறமாக செல்லும் 880 தெற்கில் ”பறந்து” கொண்டிருந்த பொழுது எங்கள் தலைக்கு மேல் அமேரிக்கன் ஏர்லைன்ஸ் ரன் வேயை குறிவைத்து பாய்ந்து கொண்டிருந்தது. “ராஜன் இதான்”
ராஜன் முணு முணுப்பு அதிகமாகியது.
”என்ன இன்னும் முணு முணுக்கிறீர்கள்?”
“இல்லை பாஸ்டன் பாலாஜிக்கு லோகன் யார் என்று சொல்லத் தெரியவில்லை. நார்மன் மின்னட்டா யாரென்று நானும் விக்கிப்பீடியாவை பார்க்கவில்லை. அதான் கொஞ்சம் டென்ஷன்”
பார்க்கிங் லாட்டில் பார்க் செய்துவிட்டு உள்ளே நுழையும் பொழுது 2:05. அதற்குள் ராஜனுக்கு அலுவலகத்திலிருந்து தொலைப்பேசி அழைப்பு.
“ராஜன் இந்த எஸ்கலேட்டரில் ஏறி கேட்டிலிருந்து வெளியே வரும் பாதையில் போய் நின்று கொள்வோம். அப்ப அவரை மிஸ் பண்ண வாய்ப்பேயில்லை”
”அதற்கு முன் பேக்கேஜ் கிளெய்மை ஒரு முறை செக் செய்வோம்” என்று சொல்லி அங்கு போய் பார்த்தோம். AA என்று டிஸ்பிளே ஆகும் ஸ்டீல் பெல்ட்டில் பெட்டிகள் இல்லை; அருகில் எவரும் இல்லை.
”அப்பாடா நல்ல காலம் பேக்ஸ் இன்னும் வரவில்லை. டைமுக்கு வந்துட்டோம்” என்று பெருமூசெறிந்து எஸ்கலேட்டரில் பாய்ந்தேன். ராஜன் போனில் பேசியவாறு நொண்டினார். கால் வலி உபாதை.
ஒரளவு அறிமுகமாயிருந்த உருவ வடிவத்தை வழி மேல் பதினைந்து நிமிடம் விழி வைத்து பார்த்துக் கொண்டிருந்தோம். நிறைய வெள்ளை மனிதர்கள் வந்த வண்ணமிருந்தார்கள். பின் ராஜன் பேக்கேஜ் கிளெய்மில் போய் நிற்கிறேன் என்றார்.
கொத்து கொத்தாக வந்த மனிதர்கள் குறைந்து பின்னர் உதிரிகளாக வருவதும் குறைந்து கடைசியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விமான நிலைய சிப்பந்திகள் நடமாடத் தொடங்கியுடன் நான் ஏமாற்றத்துடன் இறங்கும் எஸ்கலேட்டரை நோக்கி வந்தேன். மேலிருந்தவாறு பேக்கேஜ் கிளேய்மை பார்த்த பொழுது ராஜன் போனில் நமபரை துழாவிக் கொண்டிருந்தார். அவரும் சோர்ந்து ஈஸ்ட் கோஸ்டுக்குதான் அடிக்கிறார் என்று நினைத்து கீழே வந்துக் கொண்டிருந்தேன். அதற்குள் என் செல் போன் கிணி கிணுத்தது. ஃபோனில் திருமலை ராஜன். நான் எடுக்கவில்லை. ஆனால் “என்ன் ராஜன்” என்று கேட்டேன்.
“வந்துட்டார். வெளியே வெயிட் பண்ணிகிட்டிருந்தார்”
எப்படி எங்கள் சல்லடையில் பிடிபிடவில்லை என்பது இன்றும் புரியாத புதிர். முதல் ஆளாக வெளியே வந்திருக்க வேண்டும். அதாவது நாங்கள் உள்ளே நுழைவதற்கு முன்னரே அவர் வெளியே வந்துவிட்டார் என புரிந்து கொண்டோம்.
கீழே இறங்கி சுற்றுமுற்றும் பார்த்த பொழுது எஸ்கலேட்டர் பக்கவாட்டிலிருந்து கோடிட்ட முழுக் கை ஷர்ட், பேண்டில் நாஞ்சில் நாடன்.
”வெல்கம் டூ கலிஃபோர்னியா. ஞாபகம் இருக்கிறதா?” என்றேன்.
”நல்லா. போன வருஷம் வீட்டிற்கு வந்திருந்தீர்களே” என்றார். கோயமுத்தூர் GV ரெஸிடென்ஸியில் வேஷ்டி-கைபணியனுடன் பார்த்த உருவம் ஃப்ளாஷ் ஆகி மறைந்தது.
பெரிய பெட்டிகளுடன் வந்திறங்குவார் என்று பார்த்தால் ஒரு ஹேண்ட் பேக், ஒரு சிறிய சூட்கேஸ். வேனில் ஏறி மெதுவாக வெளியில் வந்து ஃப்ரீவேயை அடைவதற்குள் ஸிலிக்கன் வேலியை பற்றி ஒரு ரவுண்ட் லெக்சர் அடித்துவிட்டார் ராஜன். அப்புறம் நார்மன் மின்னட்டா, ஏமி டான் (The joy luck club), மற்றும் நான் மூவரும் CSU – San Jose State டில் ஒரே வருடம் பட்டம் பெற்றோம் என்ற விவரத்தை கூறினேன். (அவர்கள் இருவரும் கௌரவ டாக்டர் பட்டம் என்கிற ஒரு வித்தியாசம் அவர்களை மேடையிலும் என்னை பிற புதிய பட்டதாரி மாணவர்களுடன் அமரச் செய்திருந்தது.)  உலகம் எல்லாம் ஒரே மாதிரி தான் – அறிஞர் அண்ணா சர்வதேச விமான நிலையம், காம்ராஜர் உள்நாட்டு விமான நிலையம், லோகன் இண்டெர்நேஷனல், நார்மன் மின்னட்டா சான் ஓஸே இண்டர்நேஷனல் ஏர்போர்ட்…
வழியில் Intel, Network Associates, EMC என்று சிலிக்கன் வேலிச் சின்னங்கள். ராஜன் சொல்லிக் கொண்டு வந்தார். நாஞ்சில் நாடன் பார்த்துக் கொண்டே வந்தாரே தவிர இந்த தகவல்களை கொண்டு அவரால் எதனுடனாவது தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்ததா என்று என்னால் சொல்ல முடியவில்லை. டம்பார்டன் ஏறி வீடு வந்து சேர்ந்த பொழுது கிட்டதட்ட மூன்று மணி. செல்வியின் மதிய உணவு அவருக்காக காத்திருந்தது. ராஜன் பெர்க்லி லாப்ஸை ஏதோ ஆபத்திலிருந்து காப்பாறுவதற்க்காக அவர் மாடியில் உள்ள கம்ப்யூட்டரை நோக்கி பாயந்தார். நாஞ்சில் உணவிற்கு அமர்ந்தார். நான் அவருடன் பாயாசம் குடித்தேன்.
சாப்பிட்டு முடித்ததும் ”சரி ரெஸ்ட் எடுங்க சார்” என்று கூறிவிட்டு வீடு நோக்கி தனியாக வீட்டிலிருக்கும் என் பெண்ணை நோக்கி பறந்தேன்.
மாலை 6:30 மணி
நாஞ்சில் நாடன் ரெஸ்ட் எடுத்து முடித்திருந்தார். ராஜனும் நானும் நாஞ்சில் நாடனுடன் சுந்தரேஷ் வீட்டிற்கு விறைந்தோம். அங்கே தான் அன்று முதல் கலிஃபோர்னியா டின்னர். பின் பக்க பேடியோவில் பெரிய பிக்னிக் குடைக்கு கீழ் கண்ணாடி மேசைக்கு முன் பல கார்டன் சேர்ஸ் போடப்பட்டிருந்தது. நல்ல தென்றல் காற்று. நண்பர்கள் ஒருவர் ஒருவராக குழுமினார்கள். திருமுடி, கீதா கிருஷணன், ஆனந்த கோனார் (பாலாஜி). ஆனந்த கோனார் குரல் வெண்கலம் கலந்தது. சுந்தரேஷ் மெதுவாக பாரை திறந்து வைதார். டக்கீலா, மார்கரீட்டா போன்ற சோம பானங்களு கோப்பைகளில் வரத் தொடங்கின. உள்ளே கிச்சனில் சுந்தரேஷ் மனைவியும் (நித்யவதி), திருமுடியின் மனைவியும் மசால் வடை தயாரிப்பில மும்மரமாக இருந்தனர். நாஞ்சிலிடம் அசட்டு பிசட்டு என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்தோம். சிறிது நேரத்தில் வடைகள் ஒரு பாத்திரம் நிறைய வந்தது. வந்த வேகத்தில் காணாமல் போனது. நான் சோம பானம் சாப்பிட மறுத்தேன். வடை சாப்பிட மறுத்தேன். வெஜிடபிள் ப்ளாட்டர் வந்தது. கேரட்டை கடித்துக் கொண்டேன். ஆனந்த கோனார் இதன் ரகசியத்தை வெளியே கொண்டு வந்தே தீருவது என்று முடிவு செய்து என்னிடம் ஏன் ஏன் ஏன் என்று மென்னியை பிடித்து முறுக்காத குறையாக கேட்டுக் கொண்டிருந்தார். நான் மாதம் தோறும் என் தந்தை மேல் வரும் பாசம, பக்தி பற்றிய உண்மையை கூறினாலும் மனதுக்குள் மனைவியின் ”நோ டிரிங்க்ஸ், நோ ஆனியன், அமாவாசை ஞாபகமிருக்கட்டும்” என்ற கட்டளையினால் மசால் வடையும் மர்கரீட்டாவையும் ஆசையோடு பார்த்து நொந்துகொண்டே (ஜொல்லு விட்டுக் கொண்டே என்றும் சொல்லலாம்) பச்சை காரட்டை கடித்தேன். கீதா ஃபோட்டா எடுத்து தள்ளிக் கொண்டிருந்தார். மசால் வடை ஒவ்வொரு முறையும் 30 அல்லது 35ஆக சலிக்காமல் அனுப்பிக் கொண்டிருந்தார் நித்யாவும், மிஸஸ்.திருமுடியும். ஐந்து ரவுண்ட் வந்தது. வறுத்த வேர்கடலை, முந்திரி பருப்பு போன்ற கொசுறுகள் ஒரு பக்கம். நாஞ்சில் இரண்டு லார்ஜுடன் நிறுத்திக் கொண்டார். மற்ற ”குடி” மகன்களும் ஓரளவு திருப்தி அடைந்திருந்த பொழுது சிறிது குளிர் அடிக்கத் தொடங்கியிருந்தது.
பாரை குளோஸ் செய்து எல்லோரும் வீட்டிற்குள் சென்ற பொழுது நித்யாவும், மிஸஸ்.திருமுடியும் காத்திருந்து காத்திருந்த அலுத்துப் போயிருந்தார்கள். ஆனால் புத்துணர்ச்சி பெற்று எல்லா உணவையும் சூடேற்றினார்கள். நான் ஜெயமோகன் ஸ்டைலில் பழங்கள் மட்டும். அப்புறம் ஒரு அருமையான ஃபலூடா.
ஒரு வழியாக சாப்பிட்டு கடையை கட்டி BARTல் ஆனந்த கோனாரை ட்ராப் செய்து கிளம்பி ராஜனையும் நாஞ்சிலையும் ராஜன் வீட்டில் விட்டு வீட்டு என் வீட்டை அடைந்த பொழுது பி.டி.சாமியின் மணி ”டங் டங் டங் என்று பண்ணிரண்டு அடித்தது”. என் மனைவி விரைவில் வீடு திரும்பிய கணவனை தூக்கக்கலக்கத்தில் அன்புடன் வரவேற்றாள்.
நாள் 2 – ஜூன் 20, 2012
இன்று ஆர்விக்கு டுயூட்டி. காலை பத்து மணிக்கு ராஜன் வீட்டில் நாஞ்சிலை பிக்கப் செய்து ஸான் பிரான்சிஸ்கோவிற்கு சென்றான். பியர் 39, கோல்டன் கேட் போன்ற இடங்களை சென்று பார்த்தார்கள். மாலை ஐந்து மணிக்கு திரும்பியிருந்தார்கள்.
நான், என் மனைவி மகள் மூவரும் ஆறரை மணியளவில் சென்று ராஜன், நாஞ்சில் இருவரையும் பிக் செய்த பிறகு காவேரியின் வீட்டிற்கு சென்றோம்.கம்ப ராமாயணம் 7 மணிக்கு ஆரம்பமாக வேண்டும். காவேரி வீடு தெரியாததால் சுற்றி சுற்றி வந்து ஏழு மணி தாண்டிவிட்டதால்  பதட்டம் நுழைந்து கொண்டது. என் GPS உய்ர்தெழவேயில்லை. Acquiring Satellite Connection என்பது தவிர அதனிடமிருந்து எந்த மூச்சும் இல்லை. இந்த லட்சணத்தில் ஆர்வி போன் செய்து ”காவேரி விட்டிற்கு எப்படி போகவேண்டும்”என்றான். இன்பத்தை வையகம் பெறவேண்டுமே என்ற நல்லெண்ணத்தில் அவனிடம் “தெளிவாக” நாங்கள் வந்த பாதையை கூறிவிட்டு அவன் இன்பம் அனுபவிப்பதை அசை போட்டவாறு தேடிக் கொண்டிருந்தோம். கடைசியில் பல தொலைப்பேசி அழைப்பிற்கு பின் 7:20க்கு போய் சேர்ந்தோம். அங்கே பார்த்தது தலையா கடல் அலையா? 30-35 பேர். உப்பிலி ஸ்ரீநிவாஸ், அருண், விசு, திருமுடி, கீதா கிருஷணன், ஆனந்த கோனார் மற்றும் பலர். அறிமுகத்திற்கு பின்னர் கம்பராமாயணம் பாலகாண்டம் ஆரம்பமாகியது. தமிழகத்திலிருந்து வந்திருந்த ஒரு பெண் பேராசிரியை கம்பர் சமணர் என்றோ அது மாதிரி ஏதோ சொல்லி நாஞ்சிலுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். கொஞசம் விஷயம் தெரிந்தால் இது ஒரு பிரச்சனை. எனக்கு அவரின் உரை நன்றாகத்தான் இருந்தது. ஆனால் நாஞ்சில் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றார்.
9 1/2 அளவிற்கு முடிந்து உணவு பறிமாறப்பட்டு. கலைந்து சென்று பின்னர் ராஜன், நாஞ்சிலை ராஜன் இல்லத்தில் இறக்கிவிட்டு, சிறிது நேரம் பேசிவிட்டு பின்னர் கிளம்பினோம். வீட்டிற்கு வந்த பொழுது மீண்டும் பி.டி.சாமி வரவேற்றார்.
(தொடரும்)
தொடர்ந்து படிக்க: http://siliconshelf.wordpress.com/2012/07/02/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், அமெரிக்கா, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s