படைப்பு என்பது கதை சொல்வதல்ல

அற்றைத் திங்கள்
மார்ச் 15, சேலம் தமிழ்ச் சங்கம்படைப்பு என்பது கதை சொல்வதல்ல
http://tamilhelp.wordpress.com/2012/06/07/nanjil-nadan-kaalachuvadu-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF/
அ. கார்த்திகேயன்
சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சேலம் தமிழ்ச் சங்க அறக்கட்டளை இணைந்து நடத்திய ‘அற்றைத் திங்கள்’ நிகழ்ச்சியில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கலந்துகொண்டார். சிறந்த சிறுகதையாளராய், தேர்ந்த நாவலாசிரியராய் நுட்பமான வாசகர்களால் கொண்டாடப்படும் அவரை, சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க.வை. பழனிச்சாமி அறிமுகப்படுத்தினார்.
அடிப்படையில் தான் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவன், ஐம்பது ஆண்டு கால விவசாய வாழ்க்கையில் எவ்வித மாற்றத்தையும் காணாத கசப்பான வாழ்வு அனுபவம் தனக்கு உண்டு எனத் தொடங்கிய நாஞ்சில் நாடன், தன் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பைப் பற்றி விரிவாகக் கூறினார்.
தனக்குக் கிடைத்த நல்ல தமிழாசிரியர்களின் மூலமாக ஆழமான தமிழறிவைப் பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், கணிதத்தை முதன்மைப் பாடமாகப் படித்ததாகவும் பிற்பாடு தமிழ்மீது கொண்ட ஈடுபாட்டால் ஏராளமான பழந்தமிழ் நூல்களைக் கற்க முடிந்தது என்றும் குறிப்பிட்டார்.
தனது இளமைக் காலத்தில் எல்லோரையும் போலவே திராவிட இயக்கமும் திராவிட இலக்கியமும் தன்னைப் பாதித்ததாகவும் அப்போது புகழ்பெற்று விளங்கிய திராவிட இயக்கப் பேச்சாளர்களின் பேச்சைக் கேட்டு மதி மயங்கியதாகவும் திமுகவிற்காக வாக்குச் சேகரிக்கச் சென்ற அரசியல் தீவிரம் தனக்கு இருந்ததாகவும், நாளடைவில் அந்த ‘மயக்கம்’ அகன்றதையும் சுவாரசியமாகக் குறிப்பிட்ட நாஞ்சில் நாடன், பிழைப்பைத் தேடி மும்பை சென்று அங்கு தான் அடைந்த அவமானங்கள், காயங்கள், ஏமாற்றங்கள், ஆற்றாமைகளைச் சொற்கோலங்களாக தன் பேச்சில் வெளிப்படுத்த, ‘மிதவை’ நாவலின் காட்சியலைகள் பார்வையாளர்களின் மனத்திரையில் தெரிய ஆரம்பித்தன.
திராவிட மாயையினின்று தான் விடுபடப் பழந்தமிழ் வாசிப்புதான் மிகவும் உதவியாக இருந்தது என்றும் நிறைய வாசிக்கும்போதுதான் படைப்பாளிக்கு ஏராளமான சொற்கள் கிடைக்குமென்றும் காத்திரமான படைப்புக்கு அச்சொற்களே வழி வகுக்கும் என்றும் தெரிவித்த அவர், தான் சங்க இலக்கியம் தொடங்கி இன்றைய நாவல்வரை தொடர்ந்து படித்துக்கொண்டிருப்பதாகப் பெருமைபடக் கூறினார். படிப்பதன் மூலம் படைப்பில் நல்ல சொல்லாட்சிகளைக் கொண்டு வர முடியுமெனத் திடமாக நம்புவதாகவும் தனது எழுத்தில் நாஞ்சில் நாட்டுச் சொற்களைக் கூடுமானவரைக் கொண்டுவரத் தான் முயல்வதாகவும் குறிப்பிட்டார்.
வாழ்க்கை பற்றிய புரிதல் வாழும் போதுதான் கிடைக்கும். தமது 25 வருட எழுத்து வாழ்க்கையில் அந்தப் புரிதலைப் பல்வேறு கோணங்களில் தான் பதிவுசெய்திருப்பதாகக் கூறிய நாஞ்சில் நாடன், இன்றைய அரசியல் நிலை குறித்து தனது படைப்புகள் கவலை மற்றும் கோபம் கொள்வதைச் சுட்டிக்காட்டினார். படைப்புகளில் அவை குறித்துக் கவன ஈர்ப்பு பெற வைப்பதையும், பண்பாட்டுக் கூறுகள் குறித்துத் தனக்கு ஏற்படும் அதிர்வுகளைப் படைப்பாக்கங்களில் பதிவு செய்வதையும் தனது கடமையென்றும் கூறினார்.
படைப்பு என்பது கதை சொல்வது மட்டும் அல்ல, பண்பாட்டுக் கூறுகளை, தகவல்களை அடுத்தத் தலை முறைக்கு எடுத்துச் செல்வது எனக் கூறியவர் பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு விரிவான பதிலளித்தார்.
தங்களது நாவல் (தலைகீழ் விகிதங்கள்) திரைப்படமாய் (சொல்ல மறந்த கதை) வெளிவந்தபோது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது என்ற கேள்விக்கு, ‘ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. பொதுவாக எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பதைப் போலத் திரைப்படப் புகழ், பரபரப்பு எதுவும் தன்மீது விழவில்லை’ எனப் பதிலளித்தவர், இழந்த, நமது அடையாளங்களை மீட்க முடியுமா என்னும் கேள்விக்கு நமது அடையாளம் என்ன என்பதை முதலில் அறிய வேண்டுமென்றும் தன்னுடைய அடையாளம் எது என்பதைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் விடையளித்தார்.
பாடப் புத்தகங்களை மீறி நமது குழந்தைகள் ஏராளமானவற்றை அறிந்து கொள்வதுடன் நவீன வாழ்வு தரும் அதிர்ச்சிகரமான அலைகளிலிருந்து மீள வாழ்வைப் புதிய கோணத்தில், புதிய வார்ப்பில் எதிர்கொள்ள வேண்டுமெனவும் பார்வையாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
o

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to படைப்பு என்பது கதை சொல்வதல்ல

  1. silver price சொல்கிறார்:

    வந்திருந்தார். நானும் சென்றிருந்தேன். நாவல் இலக்கியம் பற்றிய கட்டுரை ஒன்றை நாஞ்சில் நாடன் வாசித்தார். (இந்த நிகழ்வில் வெளியான கட்டுரைகள் அனைத்தும் அடங்கிய தொகுப்பு ஒன்றை தில்லி தமிழ்ச்சங்கம் வெளியிட்டுள்ளது. இந்தத் தொகுப்பு சென்னை புத்தகக் கண்காட்சியின்போது கிழக்கு பதிப்பகம் அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கும்.) நாஞ்சிலுக்கே உரித்தான் கிண்டல், கேலி அதில் இருந்தது. அப்போது பேசும்போது தான் மீண்டும் தில்லி வருவது பற்றிச் சொன்னார். உடனே அரங்கிலிருந்து ‘பத்மஸ்ரீ விருது பெறவா?’ என்று கேட்டார்கள் என்று ஞாபகம். ‘ஏன்? பாரத ரத்னா விருது வாங்கக்கூடாதோ?’ என்று நாஞ்சில் எதிர்க்கேள்வி கேட்டதாக ஞாபகம். (கிட்டத்தட்ட இந்த ரீதியில்தான் இருந்தது. ஞாபகமறதி அதிகமாகிவிட்டது!) அப்போது சாகித்ய அகாதெமி விருதுபற்றி நாஞ்சில் நாடனுக்கு தகவல் தெரிந்திருக்காது என்றுதான் நினைக்கிறேன். இந்த விருது தொடர்பாக வெளியான அவரது கருத்துகளில் ஓர் ஏக்கம் வெளிப்படுகிறது. அது அவரைப் பற்றிய ஏக்கமல்ல. தமிழ் இலக்கியத் துறை பற்றியும் தமிழுக்குக் கிடைக்கும் சாகித்ய அகாதெமி விருதுகள் பற்றியுமான ஏக்கம். ஒரு கலைஞன் அவன் வாழ்நாள் சாதனையின் உச்சத்தில் இருக்கும்போது விருது கொடுக்கப்படவேண்டுமா அல்லது ரிடயர் ஆகிப் போகும்போது பென்ஷன்போலக் கொடுக்கப்படவேண்டுமா? மிகச் சரியான கேள்வி. (அப்படிப் பார்த்தால் பெரும்பாலும் சரியாகக் கிடைக்கும் கேரள எழுத்தாளருக்கான விருதில் இம்முறை நாஞ்சிலைவிட வயது அதிகமான வீரேந்திர குமாருக்குக் கிடைத்துள்ளதே?) நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்தபின் தமிழுக்குக் கிடைத்துள்ள சாகித்ய அகாதெமி விருதுகளை இந்தச் சுட்டியில் காணலாம். அதிலிருந்து எப்படிப்பட்ட ஏற்ற இறக்கங்களை நாம் பார்த்துவந்துள்ளோம் என்று தெரியும். நாஞ்சில் நாடனின் ஒரு நாவலை – எட்டுத் திக்கும் மதயானை – ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாங்கள் வெளியிட்டுள்ளோம். Against All Odds நாஞ்சில் நாடனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  2. offshore bank account சொல்கிறார்:

    ‘தலைகீழ் விகிதங்கள்’ என்ற நாவலின் மூலம் தமிழ் இலக்கிய உலகின் கவனம் கவர்ந்த படைப்பாளி நாஞ்சில்நாடன். நாஞ்சில் நாட்டின் தனித்துவமிக்க மொழியில் சமூக அக்கறையுடன் வீரியமிக்க படைப்புகளைத் தந்து கொண்டிருப்பவர். நவீனச் சூழலில் நாம் இழந்து கொண்டிருக்கும் விழுமியங்களை, பண்பாட்டை, கலாசாரத்தை தமது காத்திரமான படைப்புகள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s