சேத்தன் பகத்தும், நாஞ்சில் நாடனும்

மணி
புறநகர் பேருந்தின் – இலக்கியப்பதிவு:
சேத்தன் பகத்தின் எழுத்துக்கள் மெட்ரோதன்மையின் இளமைப்பக்கத்தைக் காட்டுகிற நேரத்தில் நாஞ்சில் நாடனின் ‘மொகித்தே’ கதை ஒரு மும்பை தமிழ் சாமான்யனின் அக, புற உலக வாழ்க்கையின் குறுக்குத்தோற்றத்தைக் காட்டுகிறது.
புறநகர்ப் பேருந்தில் பயணம் செய்யும் பயணியின், அதன் பேருந்து நடத்துனருக்குமான கதை.  தளவாய் – மும்பாய் பெஸ்ட் – பயணி. தன் குடியிருப்பில் புதிதாய் வசிக்கவரும் மொகித்தே – பேருந்து நடத்துனர்.புதிதாய்க் குடிபுகுந்த வீட்டின் பூசைக்கு மொகித்தே அழைக்கிறான்.தளவாயும், அவன் மனைவியும் சென்று வருகிறார்கள். உறவு துளிர்க்கிறது.
இங்கிருந்து இட்லி போகிறது. அங்கிருந்து காய்கறி பரிவர்த்தனை.மொகித்தே – அவன் போகும் பேருந்துக்கும் நடத்துனராகிறார். ஆனால் அவனிடம் மட்டும் பயணச்சீட்டு வாங்கப்படுவதேயில்லை. தளவாய்க்குக் குற்றவுணர்ச்சி. கவனமாய் உணர்கிறான். இடையில் ஏறும் பரிசோதகர் பற்றிக் கவலை வேறு. நேராய் போய் மொகித்தேயிடம் கேட்கிறார். அவன் திரும்பிக் கேட்கும் கேள்விதான் – கதையின் நாதம்..
“ எனக்கு சொந்தக்காரன் ஒருத்தனை எப்ப வேணும்னாலும் எத்தனை மட்டம் வேணும்னாலும் கூட்டிட்டுப் போலாம். கட்டணம் இல்லாமல். ஒரு பய கேக்கமுடியாது.”
“ காய் அண்ணாதும்.. ? எனக்கு சொந்தக்காரன் இல்லையா .. நீ.. “
ஒன்றும் பேசமுடியவில்லை தளவாய்க்கு. நமக்கும்தான்.
கதை மெல்லிய நட்புறவையும், சகோரத்துவத்தையும் பற்றியது. மும்பை வாழ்வுக்கும், எழுத்துக்குமிடையேயான இடைவெளியைக் குறைக்கவல்லவை. புலம்பெயர்ந்தவர்களின் கலாச்சாரக் கலப்பின் நல்ல பக்கத்தைக் காட்டக்கூடியவை. இந்த மாதிரி மெல்லிய கதைகள்தான் உண்மை விளிம்புகள் எனப்படுகின்றன.
ஒரு வரியில் உறவுகள் இறுகி, பல்கி உயர்ந்து வானத்தையும் கிழித்து விடுகிறது. எல்லா நல்ல உறவுகள் எல்லாமே இப்படித்தான்.ஆர்ப்பாட்டமில்லாது அமைதியான நீரோடைபோல் தெளிவாய், ஈரமாய் ஓடிக்கொண்டேயிருக்கும். அது சாதி, மொழி தாண்டி உறவின் உணர்வுகள்.மும்பை போன்ற நகரில் புலம்பெயர்ந்து, நம் அக்கம் பக்கங்களில் அத்தகைய உறவுகளின் வாசம் கண்டோர் அதிபாக்கியசாலிகள். அவர்களின் அன்பு உலகங்கள் எல்லையற்றது.
கண்ணுக்குத் தெரியாத நட்பு நூலிழைகளுக்குள் அது இணைந்து விடுகிறது.‘யாதும் ஊரே.. யாவரும் கேளீர் ‘ என்று மேடை போட்டுப் பிளிறும் போலித் தன்மையற்றது அந்த உறவுகள். குறிப்பாய் இத்தகைய உறவுகளில் ‘சாதி‘வெகுவேகமாய்க் காணாமல் போய்விடுகிறது.
‘மொகித்தெ’  எந்த அரசியலும்,  தலைவர்களும் தரமுடியாத நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் – நம்மைப்போல் புலம்பெயர்ந்தவர்களுக்குக் கொடுத்து, நம் வாழ்க்கையின் இருப்பை அர்த்தமாக்குவான்.
மும்பை வாழ்வின் – அப்பட்டமான, நிர்வாண உண்மைகளைப் பதிவு செய்யும் பாசாங்கற்ற வரிகள் கீழேயுள்ளவை.
‘சமயங்களில் வேலை நேரத்துக்கு இணையாக பிரயாண நேரம் அமைந்துவிடும்.”
”வாடகைக்குக் குடியிருப்போரெனில் பதினோரு மாதத்தில் ஒரு முறை சனிப்பெயர்ச்சி“
“இட்லி சாம்பார் என்பது பாற்கடலைக் கடைந்தபோது திரண்டு வந்ததன் சாறு“
காலை அகட்டிவைக்கிற கண்டக்டர், சில்லறையில்லாததால் மராத்திய வசவு, போகும் வழியில் பேப்பேர் படிப்பு, உலகச் சந்தை அரட்டையடிப்பு, ( 40 %வாழ்க்கையைப் பயணத்தில் மும்பைக்காரர்கள் தொலைக்கிறார்கள் -என்கிறது ஒரு கணக்கு.) பயணச்சீட்டு துளையிடும் கருவியின் டிக்..டிக்..ஒலி..  பெஸ்ட் ( BEST) பேருந்தில் பயணம் செய்யும் வரம் பெற்றால் நீங்கள் கண்டிப்பாய் மொகித்தேவைத் தேடவேண்டும்…
எந்த அரசியலும், தலைவர்களும் தரமுடியாத நம்பிக்கையையும்,மகிழ்ச்சியையும் – நம்மைப்போல் புலம்பெயர்ந்தவர்களுக்குக் கொடுத்து, நம் வாழ்க்கையின் இருப்பை அர்த்தமாக்குவான்.
நாஞ்சில் நாடனின் மும்பை பற்றிய சிறுகதைகள், நாவல்கள் பெரும்பாலும் ஊரை நோக்கி எழும் ஏங்கல் பார்வை மற்றும் பழைய ஞாபகக்கிளறல்கள் மட்டும்தான் என்றாலும் ’மொகித்தே’  புறநகர் பேருந்து தமிழ் இலக்கியத்தில் படைக்கப்பட்ட காலம் தாண்டி நிற்கிற – மெட்ரோ சாமான்யன்.
*
கிராமங்கள் கூட மெட்ரோ புறநகரின் பிரதியாக மாறக்கூடிய வேகவளர்ச்சி.எதிர்கால இலக்கியத்தில் கிராம இலக்கியங்கள் புத்தகத்தில் மட்டுமான ஒரு பழைய நினைவாகத்தானிருக்கும் போல. இடம் சார்ந்த இலக்கியத்தின் எதிர்காலம் மெட்ரோ மற்றும் மெட்ரோ புறநகரில்தான் ஒட்டிக் கொண்டிருப்பதாக நினைக்கத் தோன்றுகிறது.

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், பம்பாய் கதைகள். Bookmark the permalink.

4 Responses to சேத்தன் பகத்தும், நாஞ்சில் நாடனும்

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

  2. Naga Sree சொல்கிறார்:

    Each lines are very excellent- Thank you

  3. radha22 சொல்கிறார்:

    நாஞ்சில் நாடனுக்கென்று அனுபவங்கள் எங்குதான் கிடைக்கின்றனவோ?
    ஆனால் கிடைப்பவற்றை இலக்கியமாக்க எல்லாராலும் இயலுமா? அருமையான கதை. அதில் தோய்ந்து எழுதப்பட்ட பதிவு, வெல் டன்.

  4. கார்த்திகேயன் சொல்கிறார்:

    நாஞ்சில் நாடனின் ‘மொகித்தே’ கதை ஒரு கவிதை….இலக்கியத்தைக் கதைகளில் இழைத்துப் பரிந்தூட்டும் ‘தாய்மை’க்குச் சொந்தக்காரர்… கனடாவின் ” இயல் ” 2012 விருது இவரால் தன் தகுதியை உயர்த்திக் கொண்டது….அவருக்கு வாழ்த்துகள் !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s