அரவிந்த்
முன் பகுதிகள்: நாஞ்சில் வருகை…1 நாஞ்சில் வருகை…2
வெள்ளி அன்று காலை ஒன்பது மணி வாக்கில் பாஸ்டன் பாலாவும் நாஞ்சிலும் நான் தங்கியிருக்கும் மாணவர் குடியிருப்பு பகுதிக்கு வந்தார்கள். கருப்பு தோள் பை ஒன்றுடன் நாஞ்சில் காரில் இருந்து இறங்கினார். நன்கு தூங்கி, குளித்து, காலையுணவு உண்ட புத்துணர்ச்சியுடன் இருந்தார். கார் டிரங்கில் இருந்து நாஞ்சிலின் பெட்டியை பாஸ்டன் பாலா இறக்கி வைத்தார். இரவு ஏழரை மணிக்கு நாஞ்சில் வாஷிங்டன் டி.சி. செல்வதற்கான விமானம்.
“அப்போ ஒரு ஐஞ்சு ஐஞ்சேகாலுக்கு வந்து உங்கள இங்க பிக்கப் பண்ணிக்கிட்டுமா சார்? இங்கிருந்து நேரா ஏர்போர்ட் போயிடலாம்” என்றார் பாலா. “ஐஞ்சேகாலுக்கா? கொஞ்சம் சீக்கிரம் ஒரு நாலரை மணி போல கிளம்பிடலாமே? ஃபிளைட்டுக்கு டூ அவர்ஸ் முந்தி ஏர்போர்ட்ல இருக்கணுமில்ல?” என்றார் நாஞ்சில்.
“டொமஸ்டிக் ஃபிளைட் தான சார். அதனால கொஞ்சம் முன்ன பின்ன ஆனா ஒண்ணும் பிராப்ளம் இல்ல. தவிர இங்கிருந்து ஏர்போர்ட்டுக்கு இருவத்தஞ்சி நிமிஷத்துல போயிடலாம்” என்றேன். “வேணாம்… எதுக்கு ரிஸ்க்கு. கொஞ்சம் சீக்கிரமே கிளம்பிடுவோம்” என்றார். நாலரை மணிக்கு இதே இடத்தில் மீண்டும் சந்திப்பதாக முடிவானது. பாஸ்டன் பாலா அவரது அலுவலகம் கிளம்பிச் சென்றார்.
நாஞ்சிலும் நானும் என் அறைக்குச் சென்று பெட்டியையும் பையையும் வைத்து விட்டு திரும்பினோம். மாணவர் குடியிருப்பை சுற்றிக் காட்டினேன். “பிரேக்ஃபாஸ்ட் ஆச்சா?” என்று கேட்டார். “ஆச்சு சார். இன்னிக்கு பட்டமளிப்பு விழாங்குதறதுனால எல்லாருக்கும் ஓசி பிரேக்ஃபாஸ்ட். ஆம்லெட், சாஸெஜ், சாண்ட்விட்ச், ஃப்ரூட் சாலட்ன்னு.. நீங்க ஏதாவது சாப்பிட்றீங்களா?” என்று கேட்டேன் “இல்லெல்ல. நான் பாலாஜி வீட்டுல சாப்ட்டு தான் வந்தேன். இங்க உள்ளயே மெஸ் இருக்கா? அங்க தான் தினமும் சாப்பாடா?” “இல்லை சார். இன்னிக்கு ஒரு நாள் தான் இப்பிடி. மத்தபடி சொந்தமா சமைச்சு சாப்பிட்டுக்கிறது தான். ரெண்டு மாசத்துக்கு ஒருக்கா இது மாதிரி ஏதாவது பங்ஷன் இருந்தா நல்ல சாப்பாடு கிடைக்கும்” என்றேன்.
பின்பு நாஞ்சில் அவரது மனைவிக்கு போன் பேசினார். நான் கூச்சப்படாமல் ஒட்டுக் கேட்டுக் கொண்டு இருந்தேன்.
“…. அங்க மணி என்ன சாயங்காலம் ஆறரையா… இங்க காலைல ஒன்பதேகால் ஆகப் போகுது.. நேத்திக்கு இங்க பாஸ்டன்ல சுத்திக் பாத்திட்டு இருந்தோம். சொல்வனம் பத்திரிக்கைய நடத்துறாருல்ல ரவிசங்கர், அவரோட. முந்தாநேத்து ஸ்ட்ராபெர்ரி தோட்டம். இன்னிக்கி இந்த மும்பை நண்பர் கெவின்கேர் பாலா இருக்காருல்ல… ஆமா, ஒருதடவ ஓமப்பொடி காராசேவ் நம்கீன் எல்லாம் கூட அனுப்பிச்சிருந்தாரே… அவரு பிரதர்-இன்-லாவோட கேம்பிரிட்ஜ் பாக்க போறேன். சாயங்காலம் ஏழரை மணிக்கு இங்கிருந்து வாஷிங்டன் டிசிக்கு ஃபிளைட்டு. அங்கிருந்து ஜூன் பதிணொன்ணு கிளம்பி சார்ல்லட். அங்க நம்ம ஐயாவோட ஒரு வாரம். ஜூன் பத்தொம்மதாம் தேதி கலிஃபோர்னியா. அங்கிருந்து திரும்ப சார்ல்லட், வாஷிங்கடன் டிசி. ரிடர்ன் ஃபிளைட் ஜூலை பதினேழு. பத்தொன்பது விடியகாத்தால பெங்களூர்.. அங்கிருந்து மதியத்துக்குல்ல கோயம்பத்தூர் வந்திருவேன்”.
மாமா நம்கீன் சப்ளையராக அடையாள உருமாற்றம் பெற்றது குறித்து ஜாலியாக இருந்தது. ஆனால் எதற்கு இப்படி முழு பயண அட்டவணையையும் ஒப்பிக்க வேண்டும்? அதுவும் கிளம்ப இன்னும் ஒன்றரை மாதங்களுக்கு மேல் இருக்கும் போது? அதற்குள் ஊர் ஏக்கம் வந்துவிட்டதா? சிறுவாணித் தண்ணீரா? அல்லது கிழக்கு கடற்கரை மக்களின் அன்புத் தொல்லை (இம்சை) தாங்க முடியவில்லையா?
“அதெல்லாம் இல்ல… இப்பிடி ஒரு போன் பண்ணி சொல்லிட்டா அவங்களுக்கும் நிம்மதியா இருக்கும், நாமும் கவலைப் படாம ஊர் சுத்தலாம்” என்றார் சிரித்துக் கொண்டே. நாஞ்சில் அமெரிக்கா வந்து இறங்கிய அடுத்த நாள் முதல் இந்த பயண அட்டவணை ஒப்பித்தல் சடங்கு இரு தினங்களுக்கு ஒருமுறை நடந்தேறி வருவதாக பின்பு பாஸ்டன் பாலாவின் மூலம் அறிந்து கொண்டேன்.
”சரி, இன்னைக்கு என்ன பிளான்?” என்றார். சொன்னேன். “ஓகே.. ஒரு த்ரீ தர்டிக்கா திரும்ப ரூமுக்கு வந்திறலாம். பெட்டில இன்னும் கொஞ்சம் திங்க்ஸ் அடுக்க வேண்டியது இருக்கு” என்றார். “சார்..!.” என்றேன். “கொஞ்சம் ரிலாக்ஸடா கிளம்புவோமே. தவிர நான் கொஞ்சம் டென்சன் பார்ட்டியாக்கும்.… படிச்சிருப்பீங்களே” என்றார்.
போட்டிருந்த பயண திட்டத்தை மனதிற்குள் சரசரவென்று மாற்ற ஆரம்பித்தேன். உடனடியாக அங்கிருந்து கிளம்பி எம்.ஐ.டி. மைய வளாகத்திற்கு சென்றோம். பில்டிங் 7 என்றும் தி கிரேட் டோம் என்றும் 77 மாசசெஸட்ஸ் அவின்யு என்று பலவாறு அழைக்கப்படும் அந்த வளாகம் ரோமில் உள்ள பாந்தியன் ஆலயத்தை முன்மாதிரியாக வைத்து கட்டப்பட்டது.
நாங்கள் அங்கு சென்று சேரவும், வாசலில் முகாமிட்டிருந்த பாண்ட் வாத்திய கலைஞர்கள் வாசிக்க ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது.
எம்.ஐ.டியின் தலைவர், துணைவேந்தர், கல்லூரி முதல்வர்கள், மற்றும் சில முக்கிய பேராசிரியர்கள் எல்லாரும் ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்துச் சென்றார்கள்.
அங்கிருந்து அவர்கள் இடது பக்கம் திரும்பி, சார்ல்ஸ் நதியோரம் நடந்து எம்.ஐ.டி வளாகத்தின் மறுமுனையை அடைவார்கள். அங்குள்ள மிகப்பெரிய புல்வெளியின் மீது அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி கூடத்தில் தான் பட்டமளிப்பு விழா ஒவ்வொருவருடமும் நடக்கும். மாணவர்கள் ஏற்கனவே அங்கு குழுமி இருந்தார்கள். இவ்வருடம் கான் அகாடமியின் நிறுவனர் சல்மான் கான் சிறப்புரை [commencement speech] ஆற்ற வந்திருந்தார். முப்பத்தாறு வயது கூட இன்னும் ஆகவில்லை. பல்வேறு அறிவுத் துறைகள் சார்ந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோ விரிவுரைகளை யுடியூபில் ஏற்றி, பராமரித்து வருகிறது இவரது நிறுவனம். இவரும் ஒரு முன்னாள் எம்.ஐ.டி மாணவர்.
சிறுது நேரம் பட்டமளிப்பு விழாவை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தோம். பின்பு அங்கிருந்து கிளம்பி எம்.ஐ.டியில் உள்ள மற்ற இடங்களை பார்க்கச் சென்றோம். கணிப்பொறியியல் மற்றும் செயற்கை அறிவு ஆய்வகம், டேவிட் கொச் கான்சர் ஆய்வுமையம், நரம்பியல் ஆராய்ச்சி நிலையம், மற்றும் ஸ்லோன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட் ஆகியவற்றுக்கு சென்றோம். அங்கிருந்து ஊடக ஆய்வு மையத்திற்கு [MIT Media Lab] சென்றோம். அங்குள்ள மாணவர்கள் கண்டதையும் அக்குவேறு ஆணிவேறாக கழட்டி போட்டு ஏதாவது பண்ணிக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக மொபைல், கணினி மற்றும் எலக்ட்ரானிக் சமாச்சாரங்கள். நாஞ்சில் அவற்றை எல்லாம் ஆர்வமாக பார்த்தார்.
பொதுவாகவே கொந்தர் கலாச்சாரம் [hacking culture] என்பது எம்.ஐ.டியில் அதிதம். அதிலும் ஊடக ஆய்வு மையத்தில் இது ஒரு உச்சகட்டத்தில் இருக்கும். கணினி காப்பு நிரல்களை மீறிச் செல்லுதல், பாதுகாப்பு வலையத்தை உடைத்தல் என்பதையெல்லாம் தாண்டி ஒரு பொது தளத்திற்கு இதை எடுத்துச் சென்றிருப்பார்கள். உதாரணமாக மைய வளாக குவிமாடத்தில் [dome] ஃபாப்ரிக் பேனல்களை தொங்க விடுவது, அதன் உச்சியில் ஒரு மிகப்பெரிய புரொபெல்லரை மாட்டுவது, போலீஸ் கார் ஒன்றின் மாதிரியை அங்கு வைத்து விட்டு ஓடிவிடுவது, கட்டிட ஜன்னல்களை பல வண்ணங்களில் ஒளியூட்டி, அதில் டெட்ரீஸ் (Tetris) வீடியோ கேம் ஆடுவது இத்யாதி.
டிஜிடல் தூரிகை ஒன்றின் பரிசோதனை மாதிரி ஒன்றை அங்கு காட்சிக்கு வைத்திருந்தார்கள். தூரிகையை எடுத்து ஏதாவது ஒரு பொருளின் மீது தோய்த்தால் அந்த பொருளின் இழையமைப்பு [texture] மற்றும் வண்ணச்சாயலை அது உள்ளித்துக் கொள்ளும். பின்பு ஒரு சிறப்பு கேன்வாஸில் அதே இழையமைப்புடன், வண்ணச்சாயலுடன் நாம் வரைய ஆரம்பிக்கலாம்.
அதி வேகமாக செல்லும் நுண்பொருட்களை படம்பிடிக்கக் கூடிய வீடியோ காமிராவும், கண்புரை [cataract] பரிசோதனையை அலைப்பேசி காமிரா மூலம் எளிதாக செய்து கொள்ளக்கூடிய தொழில்நுட்பமும் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. நாஞ்சில் கண்புரை பரிசோதனை செய்து கொள்ள ஆசைப்பட்டு அங்கிருந்த அலைப்பேசி காமிராவின் முன் கண்ணை தொடுத்தார். பரிதோதனை முடிவுகள் எதுவுமே வரவில்லை. பட்டமளிப்பு விழா என்பதால் அந்த அலைபேசியையும், அதை இயக்கும் கணினினையும் அணைத்து விட்டு சென்றிருக்கிறார்கள். “உங்களுக்கு காட்டார்க்ட் எல்லாம் வராது சார்… வாங்க போகலாம்” என்று கூட்டிக் கொண்டு வெளியில் வந்தேன்.
அங்கிருந்து பாஸ்டன் பொது நூலகத்திற்கு ரயிலில் செல்வதாக திட்டம். ஊடக ஆய்வகத்திற்கு மிக ஆருகிலேயே ஸ்டேஷன் இருந்தது. ஸ்டேஷனில் நுழைவதற்கு முன் நாஞ்சில் இன்னொரு போன் பேசினார். இம்முறை தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் படிக்கும் ஒரு மாணவனுக்கு. இம்முறை கொஞ்சம் டீஜண்டாக தள்ளி நிற்போம் என்று நின்றிருந்தேன். இருந்தும் அவர் பேசுவது கேட்டது “…..இன்னிக்கு ஏதாவது எழுதுனேளா… எப்டி போய்ட்டிருக்கு? ஆமாம், போன வாரம் நியூயார்க் நியூஜெர்சி சுத்தி பார்த்தேன். இப்போ இங்க கேம்ப்ரிட்ஜ் எம்.ஐ.டில இருக்கேன். நல்ல பிரமாதமா கட்டி வைச்சிருக்கான்….”
நாஞ்சில் ஒரு இடத்திற்கு செல்லும் போது அது அவருள் ஒரு அருவமான உருவகத்தையோ, படிமத்தையோ உருவாக்குவதில்லை என்று தோன்றுகிறது. மாறாக ஒரு இடம் என்பது நாஞ்சிலுக்கு அவர் பார்த்து பழகிய ஒரு மனிதனை ஞாபகப் படுத்துகிறது. அது வெறும் நாஸ்டால்ஜியா சார்ந்தது அல்ல, அவர்கள் மீள் உள்ள அக்கறை சார்ந்தது என்று படுகிறது. முன்பு ஒருமுறை திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவிலில் இருந்து பழைய நண்பர் ஒருவருடன் போன் பேசிக் கொண்டிருந்தார். ரமணாசிரமத்தில் இருந்து சேதுபதி அருணாசலத்திற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொண்டிருந்தார். “என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என்று பக்கத்தில் இருக்கும் நாம் கேட்டால் “இவங்கிவங்க ஞாபகம் வந்தது. அதான் போன் பேசீட்டு இருக்கேன்” என்று சொல்லுவார். ஆனால் அவர்களிடம் அப்படி நேரடியாக சொல்லி நான் இதுவரை கேட்டதில்லை. “சும்மாத்தான் பண்ணேன்…” என்றதொரு தொனியுடனே பேச ஆரம்பிப்பார்.
இரு நாட்களுக்கு முன்பு நாஞ்சில் அவர் மகன் வீட்டில் இருந்து எனக்கு ஒரு போன் அடித்தார். “…. இங்க சார்ல்லட் வந்துட்டேன்….. ஏர்போர்ட்லயா, அங்க ஒண்ணும் பிரச்சனை இல்ல. இப்பெல்லாம் மெக்ஸிகன் ஃபுட், தாய் ஃபுட்டுன்னு போயிட்டிருக்கு… நான் படிச்ச காலேஜில இந்த அக்டோபர் மாசம் பவளவிழா கொண்டாடுறாங்க. நாம தான் இப்போ அங்க செலிப்ரிட்டி ஸ்ட்டூடண்ட் ஆச்சே! கட்டுரை ஒண்ணு கேட்டிருந்தாங்க. இன்னிக்கி உக்காந்து பர்ஸ்ட் டிராஃப்ட் எழுதி முடிச்சேன்…” என்றார். இதில் எனக்கு இருக்கும் சந்தேகம் என்னவென்றால் சார்ல்லட்டில் மெக்ஸிகன் ஃபுட் தாய் ஃபுட் என்று ஒரு வெட்டு வெட்டிக்கொண்டிருக்கும் போது என் ஞாபகம் வந்ததா? அல்லது கல்லூரி குறித்த அந்த கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போதா? (இரண்டில் எதுவானாலும் நமக்கு சந்தோஷம் தான். ஆனால் அது வேறு விஷயம்). சுசீந்திரம் தாணுமலையானுக்கும், வீரநாராயணமங்கலம் முத்தாரம்மனுக்கும்மே வெளிச்சம்!
பாஸ்டன் பொது நூலகத்திற்கு வந்து சேர்ந்தோம். ஹென்ரி ஜெப்ரூஸ்தே என்பவரால் வடிவமைக்கப்பட்ட பாரிஸில் உள்ள புனித ஜெனீவீவ் நூலகத்தை மாதிரியாக வைத்து கட்டப்பட கட்டிடம் இது என்கிறார்கள். பேட்ஸ் ஹால் [Bates Hall] என்று அழைக்கப்படும் இதன் படிப்பரை மிக அழகான உட்கட்டமைப்பு கொண்டது. அரைவட்ட வடிவில் ஆன கூரைகள். வில் வடிவ ஜன்னல்கள். இரு பக்கமும் தேக்கு நிற நீள மேஜைகள். அதன் மேல் மெல்லிதாக ஒளி விடும் பச்சை வண்ண விளக்குகள். சுவரடுக்கு முழுக்க புத்தகங்கள். பக்கங்களை திருப்பினாலே கேட்கும் அளவு பேரமைதி.
உட்கார்ந்து பலர் படித்துக் கொண்டும், குறிப்புகள் எடுத்துக் கொண்டு இருந்தார்கள். பெரும்பாலும் இளைஞர்கள். நாஞ்சில் அந்த படிப்பரையே கொஞ்ச நேரம் சுற்றிச் சுற்றி வந்தார். பின்பு நூலகத்தின் மற்ற சில பகுதிகளையும் பார்த்து விட்டு வெளியில் வந்தோம். வீதிக்கு வர நூலகத்தின் மத்தியில் உள்ள நாற்க்கோணத்தை [quadrangle] கடக்க வேண்டும். அதன் நான்கு பக்கமும் உள்ள நடைவழி பாதையில் சிறு மேஜைகள் நாற்காலிகளை போட்டு வைத்திருக்கிறார்கள். மத்தியில் ஒரு செயற்கை நீருற்று. அங்கும் மக்கள் உட்கார்ந்து காபியையோ குளிர் பானத்தையோ பருகிக் கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்கள். “இப்டி கொஞ்ச நேரம் உட்காரலாம்” என்றார் நாஞ்சில். கண்ணாடியை கழட்டி விட்டு கைக்குட்டையால் முகம் துடைத்தார். நிறைய நடக்க விட்டுவிட்டோமோ என்று இருந்தது. ”தாகமா இருக்கா சார்… தண்ணீ ஜூஸ் ஏதாவது சாப்பிடறீங்களா?” என்றேன். “இல்ல பரவால்ல.. ஆனா எப்டி கட்டிருக்கான் பாத்தீங்களா… எவ்ளோ சுத்தம்.. அமைதி” என்றார். கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்ட நிலையில் இருந்தது போல எனக்கு பட்டது. சமனப்படுத்த ஏதோ சொல்லிக்கொண்டிருந்தேன். “ஆமா சார், ஆனா இப்பெல்லாம் அத்தன ஆளுங்க இங்க படிக்க வரதில்லை. புத்தகம் படிக்கறதே அமெரிக்காவுல ரொம்ப குறைஞ்சிடுச்சுன்னு சொல்றாங்க.. அங்க பேட்ஸ் ஹால்ல முக்காவாசி டேபிள் காலியா இருந்திச்சு பாத்தீங்கில்ல. புக் ஆர்டர்ஸை வேற குறைச்சிட்டதா சொல்றாங்க” என்றேன்.
“இருக்கலாம், ஆனா இதை இத்தன அழகா சுத்தமா இவ்வளவு காலம் maintain பண்ணிட்டு வர்ரது பெரிய விஷயம் இல்லையா” என்றார்.
நாஞ்சில் சொல்வது தான் நியாயமாக பட்டது. நாமும் ஒரு எதிர்கருத்து ஒன்றை சொல்லி வைப்போமே என்ற ரீதியில் தான் அவற்றை சொல்லியிருக்கிறேன் என்று இப்பொழுது தோன்றுகிறது. உண்மையில் அமெரிக்கா வந்த புதிதில் அதன் நூலகங்களே என்னை மிகவும் கவர்ந்தன. குறிப்பாக அதன் inter-library loan அமைப்பு. அதன் மூலம் எந்த புத்தகங்களை வேண்டுமானாலும் உங்கள் அருகில் உள்ள நூலகத்திற்கே வரவைத்து, படித்து முடித்து, திரும்பத் தரலாம். மறுபதிப்பே பல காலம் வராமல் இருந்த தமிழ் புத்தகங்களை கூட அப்படி படித்திருக்கிறேன். சமீபத்தில் படித்த மணல் கடிகை நாவல் கூட அப்படி யேல் பல்கலைக்கழக நூலகத்தில் இருந்து கடன் வாங்கி வாசித்தது தான். கைப்போன போக்கில் அடுக்கப்பட்ட நூல்களையும், எரிந்து விழும் நூலகர்களையும், இருட்டு படிப்பறைகளையுமே பார்த்து பழகிய எனக்கு அமெரிக்க நூலகங்கள் ஒரு பிரம்மிப்பையே ஏற்படுத்தின. நாஞ்சிலுக்கும் இவை அத்தகைய ஒரு மன எழுச்சி ஒன்றை அளித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.
பேசிக்கொண்டே கிளம்பி வெளியில் வந்தோம். நூலகத்தின் எதிரில் உள்ள ட்ரினிட்டி தேவாலயத்தை அடுத்து பார்ப்பதாக திட்டம்.
அன்று வெள்ளிக்கிழமை என்பதால் நூலகத்திற்கும் தேவாலயத்திற்கும் இடையே உள்ள திறந்த வெளி கூடத்தில் சிறு கூடாரங்கள் அடித்து உழவர் சந்தையாக [Farmers market] மாற்றியிருந்தார்கள். நாஞ்சில் குஷியானார். “வாங்க போய்ப் பாப்போம்” என்றார். “இன்னைக்கு மூன்றைக்குள்ள திரும்பினாப்போல தான்” என மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். வெள்ளை உருளை, சிவப்பு உருளை, தக்காளி, வெங்காயம், கேரட், ஊதா கத்திரிக்காய், பச்சை குடமிளகாய், சிவப்பு குடமிளகாய், மஞ்சள் குடமிளகாய் என்று ஒன்று விடாமல் உற்சாகமாக பார்த்தார். “தக்காளி என்ன இவ்ளோ பெரிசா இருக்கு” என்றவர் கத்திரிக்காய் மற்றும் இஞ்சியை பார்த்ததும் பயந்துவிட்டார். “எல்லாமே இங்க ஒரு அமெரிக்கன் சைசுல தான் இருக்கு. ஹைபிரிட்டோ?” என்றார். முக்கால்வாசி அப்படி தான் தெரிந்தது.

டிரினிட்டி தேவாயாலத்தில் மதியம் இசை நிகழ்ச்சி ஒன்று நடக்க இருப்பதால் உள்ளே ஏதோ வேலைகள் நடந்து கொண்டு இருந்தன. இருந்து கேட்போமா என்றேன். வேண்டாம், தேவாலய வாசலில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு கிளம்பலாம் என்றார். அங்கு உட்கார்ந்து கொண்டு குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார். பாஸ்டனில் அன்று ஓரளவு நல்ல வெயில். “ஜூஸ் ஒண்ணு அடிப்போமே சார்” என்றேன். சரி என்று கூட வந்தார். எலுமிச்சை அல்லது தர்பூசணி என்று அந்த கடையில் போட்டிருந்தது. தர்பூசணி இரண்டு ஆர்டர் செய்தோம். வாங்கிப் பார்த்தால் அது ஜூஸ் அல்ல, பனிக்கட்டியை நன்கு அரைத்து அதன் மேல் தர்பூசணி போன்று சுவைதரும் ஏதோ ஒன்றை போட்டுக் கலந்து தந்திருந்தார்கள். பெயர் “Ice Slurp” என்றார்கள். கலங்கிய நதி நாவலில் ரமேஷ் சந்திரனின் மகள் இது போன்ற ஏதோ ஐஸ் சமாச்சாரத்தை சாப்பிட்டு விட்டு தான் உடம்புக்கு முடியாமல் போகும் (என்பதாக ரமேஷின் மனைவி குற்றம் சாட்டுவார்). இது மாதிரி இலக்கிய ரெஃபரன்சுகள் எல்லாம் நேரம் கெட்ட நேரத்தில் தான் வந்து பயமுறுத்தும். நான் கண்டதையும் சாப்பிடுவேன், அதனால் பரவாயில்லை. ஆனால் நாஞ்சில் புது ஊரில் அதுவுமாக இப்படி ஏதாவது சாப்பிட்டு உடம்புக்கு முடியாமல் போனால்? “சார் இதை திரும்ப கொடுத்திட்டு ஒரு ஜூஸ் ஒண்ணு ஆர்டர் பண்ணிடுவோம்” என்றேன். “இல்ல பரவால்ல, இதையும் சாப்பிட்டுத் தான் பாப்போமே” என்று சொல்லிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்து விட்டார். சரி, இனி கடவுள் விட்ட வழி; பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியுமான டிரினிட்டி ஆண்டவர் காப்பாத்துவார் என்று நினைத்து கொண்டேன்.
சாப்பிட்டு முடித்து ஒரு டாக்ஸியில் பாஸ்டனின் வடக்கு முனையில் உள்ள லிட்டில் இத்தாலி என்ற இடத்திற்கு சென்றோம். பாஸ்டன் நகரின் மிகப் பழமையான குடியிருப்பு பகுதிகளில் ஒன்று. ஆயிரக்கணகான இத்தாலிய அமெரிக்க குடும்பங்கள் அப்பகுதிகளில் வசித்து வந்திருக்கிறார்கள். இன்று அது ஒரு முக்கியமான சுற்றுலா தளம். குடியிருப்பு பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக சுறுங்கி நூற்றுக்கணக்கான இத்தாலிய ஹோட்டல்களும், பாஸ்தா மற்றும் பேஸ்ட்ரி கடைகளும் முளைத்திருக்கின்றன.
நாஞ்சில் கம்பராமாயணம் பற்றி பேசிக் கொண்டு வந்தார். “நீர்க்கோல வாழ்வை நச்சி நெடுதுநாள் வளர்த்துப் பின்னை போர்க்கோலம் செய்து விட்டார்க்கு உயிர்கொடாது அங்கு போகேன்” பாடலுக்கு உருக்கமான ஒரு விளக்கம் சொன்னார். மேலும் பல பாடல்கள், அதன் நாடகீய தருணங்கள் ஆகியவற்றை பற்றி பேசிக் கொண்டு வந்தார். “நீங்க கம்பராமாயணம் கண்டிப்பா படிக்கணும்” என்றார். “படிக்கறேன் சார்.. தனியா படிக்கிறதுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு. தவிர செய்யுட்களை பிரிச்சு தொகுத்து புரிஞ்சிக்கறத்துகான பயிற்சி எனக்கு இன்னும் வரலை..” என்றேன். “போன தடவை ஊட்டி கூட்டத்துல நீங்களும் ஜடாயுவும் பேசினத ஆடியோ எடுத்து போட்டிருந்தாங்கா. அது ஒரு நல்ல அறிமுகமா எனக்கு இருந்திச்சி.. இந்த தடவை ஏனோ ஒலிப்பதிவு செய்யல போல இருக்கு…” என்றேன். “இல்லையே… ஆடியோ எடுத்திருந்தாங்களே” என்றார்.
பிறகு பேச்சு நாஞ்சிலின் கதைகளில் வரும் தமிழாசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் குறித்து திரும்பியது. “பல்லில்லாதவன் பரோட்டா தின்பது போல” [”வாலி சுக்ரீவன் அங்கதன் வதைப்படலம்,”] ஒரு சுவாரசியமே இன்றி எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த ஆசிரியையை பற்றி நாஞ்சிலிடம் நினைவு கூர்ந்தேன். பள்ளியில் இருந்ததோ ஒரே தமிழ் ஆசிரியை தான். ஆண்டு விழாவில் அவர் வடிவமைத்து எழுதி இயக்கிய “வீரபாண்டிய கட்டபொம்மன்” நாடக மறுஆக்கத்தில் நடிக்காமல், ஜூலியஸ் சீசரில் நடிக்கப் போனதால் தமிழின துரோகி ஆனேன் (நாடகத்தில் கட்டபொம்மன் ஹோட்டல் முதலாளியாக வருவார். கிழங்கு நுறுக்கினாயா, மாவு அரைத்தாயா, வடை சுட்டாயா, மானங்கெட்டவனே, இத்யாதி). அடுத்த ஒருவருடம் அவர் எனக்கு கொடுத்த டார்ச்சர் தாங்காமல் பதிணொன்னாம் வகுப்பில் பிரஞ்சை மொழிப் பாடமாக எடுத்து தப்பித்தேன். மரபிலக்கிய பயிற்சியே எனக்கு இல்லாமல் போனதற்கும் இதுவும் ஒரு காரணம் என்று நாஞ்சிலிடம் புலம்பிக் கொண்டு இருந்தேன். தமிழ் பேராசிரியர் ஒருவரை சிவலோகம் அனுப்ப “வக்காளி வரட்டும்” என்று காத்திருக்கும் அந்த பாம்பு பற்றியும் சிறிது நேரம் கதைத்துக் கொண்டு இருந்தோம் [”பாம்பு”].
லிட்டில் இத்தாலியில் உள்ள பிரபலமான கடையான “மைக்ஸ் பேஸ்ட்ரிக்கு” சென்று ஒரு Ricotta cheese cannoliயும், ஒரு Rum and Chocolate cannoliயும் பாதி பாதி சாப்பிட்டோம். அங்கிருந்து ரயிலில் கிளம்பி நேராக ஹார்வர்ட் சதுக்கம் சென்று மதிய உணவு சாப்பிட்டு விட்டு ஹார்வர்ட் பலகலைக்கழகத்தை சுற்றிப் பார்ப்பதாக திட்டம். ரயில்வே ஸ்டேஷன் போகும் வழியில் இன்னொரு சந்தை ஒன்று வந்தது. இது கொஞ்சம் பெரியது. ஹேமார்க்கெட் [Haymarket] என்று பெயர். நாஞ்சில் அதற்குள் புகுந்தார். இனி ஹார்வர்ட் அவ்வளவு தான் என தோன்றியது.
ஹேமார்க்கெட்டில் வைத்திருந்த கறிகாய்கள் எல்லாம் பார்த்து சலித்ததும் மீன் மார்க்கெட்டுக்கு சென்றார். “பாக்கறத்துக்கே அழகா இருக்கு இல்ல…எவ்ளவு நீட்டா கச்சிதமா அடுக்கி வெச்சிருக்கான் பாருங்க” என்றார்.
கந்த கோலமாக கிடந்த என் அறையை காலையில் பார்த்து விட்டு என்ன நினைத்திருப்பார் என்று யோசித்து பீதியுற்றேன். மீன் மார்க்கெட்டில் வைக்கப்பட்டிருந்த முக்கால் வாசி மீன்வகைகளின் பெயர்களை சரியாக கண்டுபிடித்துச் சொன்னார். கண்டுபிடிக்க முடியாதவைகளை கடைக்காரியிடம் கேட்டு தெரிந்து கொண்டார். மீன் சந்தைக்கு அருமே ஒரு சலாட் பார் இருந்தது. அங்கிருந்த மக்கள் oysterகளை எடுத்து அப்படியே பச்சையாக முழுங்கிக் கொண்டிந்தார்கள். வேண்டுமானால் மேலே கொஞ்சம் தக்காளி வெங்காயம் எலுமிச்சை மற்றும் கார சாஸ் சேர்த்துக் கொள்ளலாம். Oyster உடம்புக்கு நல்லது..சாப்பிடுகிறீர்களா. இதோ இங்கு எதிரில் “Union Oyster House” கூட இருக்கிறது..அங்குகூட போகலாம் என்றேன். வேண்டாம் என்று சிரித்து மறுத்து விட்டார்.
***
இப்படி தினசரி வாழ்வில் இருக்கும் டென்சனும், ஜாக்கிரதை உணர்வும் அவரை நமக்கு ஒரு லௌகீகராக, ஒரு பிரக்மாட்டிச நோக்கு உடையவராக காட்டுகிறது. ஆனால் மொழி தெரியா பெருநகரில் ஏழு ரூபாய் தினக்கூலியில் ஆரம்பித்து, முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக இலக்கியத்தில், அதுவும் எந்த ஒரு பெரிய அங்கீகாரமும் இல்லாமல், தொடர்ந்து ஈடுபடுவது என்பது லட்சியவாத நோக்கும், ஏன் அதை தாண்டிய ஏதோ ஒரு அம்சமும் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்று படுகிறது.
அருமையான பதிவு. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி.