பசித்தவனின் பயணம் – நாஞ்சில் நாடன் சிறுகதைகள்

புதிய மாதவி
(12-2-2012 ஞாயிறு மாலை மும்பை தமிழ்ச் சங்கத்தில் மும்பையின் பல்வேறு அமைப்புகள் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து நடத்திய பாராட்டு விழாவில் நாஞ்சில் நாடன் சிறுகதைகள் குறித்த என் (ஆய்வுரை) உரை
நாஞ்சில் நாடனையும் மும்பையையும் என்றைக்கும் பிரித்துப் பார்க்க முடியாது. மும்பைக்கு வந்ததால் தான் நாஞ்சில் நாடன் எழுத ஆரம்பித்தார் என்று சொல்வதைவிட மும்பை மண்ணும் மும்பை மனிதர்களும் அவர் கதைகளின் உயிரோட்டமாக வாழ்ந்து கொண்டிருப்பதால் அதுவே அவர் எழுத்துகளின் தனித்துவமான அடையாளமாக இருக்கிறது.
நாஞ்சில் நாடன் என்ற மானுடன் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. நாஞ்சில் நாடன் என்ற படைப்பாளி இதே இந்த மும்பை மண்ணில் எழுத ஆரம்பித்தக் காலக்கட்டத்தில் தீபம் இதழில் வெளியான அவர் சிறுகதையை வாசித்துவிட்டு கழிவறைக் காகிதம் அதாவது டிஷ்யு பேப்பர் என்று விமர்சித்த காலக்கட்டம் இருந்தது என்பதை அவர் மறந்திருக்க முடியாது. எங்களாலும் மறக்க முடியவில்லை. அடுத்ததாக விருதுகள் பரிசுகள் குறித்து மிகத் தீவிரமாக தன் கருத்துகளை முன்வைத்த ஒரு நேர்மையான எழுத்தாளராக படைப்புலகம் அவரைக் கண்டது. அவருடைய அந்த அறச்சீற்றம் அவர் படைப்புகளையும் தாண்டிய ஒரு வாசகர் வட்டத்தை அவருக்கு உருவாக்கியது என்பது மற்ற எவருக்கும் வாய்க்காத ஒரு பெரும்பேறு என்றுதான் நினைக்கிறேன்.
இன்று, நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க சிறுகதை தொகுப்புக்கு சென்ற ஆண்டில் 2010ல் சாகித்திய அகதெமி விருது கிடைத்தப் பின் விருதுகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுவதன் மூலம் அந்த விருதுகளும் தங்களுக்கான தகுதிகளை நினைவுபடுத்திக் கொள்வதாகவே நினைக்கிறேன். இந்த விருதுக்குப்பின் இதுவரை சாகித்திய அகதெமி விருது பெற்ற எந்த ஒரு படைப்பாளருக்கும் கிடைத்திராத ஊடக கவனிப்பும் கணினி இணைய வாசல்கள் எங்கும் நாஞ்சில் நாடனின் தோரணங்கள் அலங்கரித்திருக்கும் காட்சியும் கொஞ்சம் மகிழ்ச்சியைத் தந்தாலும் அந்த ஆரவாரமான கொண்டாட்டங்களுக்கு நடுவில் சின்னதாக ஓர் இனம்புரியாத அச்சம் என் போன்றவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தருணம் இது.
இந்தச் சூழலில் தான் நாஞ்சில் நாடனின் சிறுகதைகளை மறுவாசிப்பு செய்தேன். விருது பெற்ற சூடிய பூ சூடற்க கதைகளையும் வாசிக்கும் அனுபவம் கிடைத்தது. ஒருவகையில் என் முதல் கவிதை தொகுப்பு ‘சூரிய பயணம் ‘ தொகுதிக்கு ஓர் அறிமுகமாக ஓர் அணிந்துரை தந்தக் காரணத்தாலேயே ஆசான் என்று சொல்ல வரவில்லை! ஆனால் இன்றைக்கு கும்பமுனி தான் எம் பாட்டன், எம் சொத்து, எம் சித்தன், எனக்குத் தெரியாத என் வயக்காட்டையும் சூடடிப்பையும் என் மாட்டையும் என் மனுசர்களையும் அட எனக்கு கெட்ட வார்த்தைகளையும் கூட போகிற போக்கில் வசவாகவும் வர்ணனையாகவும் குசும்பாகவும் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கும் ஆசான். ஆமாம் ஆசாந்தான். கும்பமுனி என் கட்டைவிரலை காணிக்கையாகக் கேட்க மாட்டார் என்ற நம்பிக்கையில் தான் மும்பை வாழ் தமிழர்களே! உங்கள் முன்னிலையில் உங்கள் சாட்சியாக கும்பமுனி எனக்கு மட்டுமல்ல, மும்பை தளத்தில் இயங்கும் எழுத்தாளர்களுக்கு மிதவையில் ஒரு பரிசில் ஓட்டி சதுரங்க குதிரையில் காய்நகர்த்தி ஆட்டம் சொல்லிக்கொடுத்து தலைகீழ் விகிதங்கள் வாழ்க்கையில் விதிவிலக்கல்ல என்பதைப் புரிய வைத்த ஓர் ஆசான்.
அடுத்து அவர் படைப்புகளைத் தொடர்ந்து வாசிப்பதால் நான் அவருடைய நல்ல வாசகர். இதில் ‘நல்ல ‘என்பது எனக்கு நானே கொடுத்துக் கொள்ளும் அடைமொழி. அவர் பார்த்த அனுபவித்த அதே மண்ணும் அதே மும்பை மனிதர்களும் எனக்கும் பார்க்கவும் அனுபவிக்கவும் கிடைத்திருப்பது எனக்கும் என் எழுத்துகளுக்கும் கிடைத்திருக்கும் பாக்கியமோ துரதிருஷ்டமோ யானறியேன் பராபரமே. இன்றைக்கு கட்டுரைகள் பக்கம் அவர் உதிர்க்கும் அனைத்து statements களுடன் ஒத்துப்போவது என்பது என் போன்றவர்களுக்கு சாத்தியமில்லை என்பதும் முரண்தொடையாக இருப்பதை மறைப்பதற்கில்லை.
இவ்வளவு பீடிகையும் இப்போது எனக்குத் தேவைப்படுகிறது. ஆய்வுரை என்று சொன்னதாலேயே புரிந்த புரியாத சரியாக உச்சரிக்க கூட தெரியாத எந்த இசங்களையும் மேற்கோள் காட்டி அந்தச் சட்டத்துக்குள் நாஞ்சில் நாடனின் சிறுகதைகளை அளந்துப் பார்க்கும் அதிமேதாவி அறிவுஜீவித்தனம் எனக்கு உடன்பாடல்ல. கொடுக்க கொடுக்க குறையாத அமுதசுரபியும் அந்த ஆபுத்திரன் கதையும் பிற எந்த மொழியிலும் காணக்கிடைக்காத தமிழனின் அசல் கதை. தமிழனின் மூலக்கதை. தமிழ் மரபின் கனவு, கற்பனை. தமிழ் பண்பாட்டின் உச்சம், தமிழன் இந்த உலக மானுட குலத்திற்கே கொடுத்த ஓர் உன்னதமான பண்பாடு. தமிழ் தொன்மங்களை நன்கு படித்தவர் , தெரிந்தவர், புலமை மிக்கவர் என்பதுடன் அந்தச் சாலச்சிறந்த தொன்மத்திலிருந்து எடுத்துச் சொல்ல எத்தனையோ இருப்பதினால் இன்றைய நவீன படைப்புலக விலாசத்தில் மேனாட்டு வாந்தி எடுப்புகளுக்கெல்லாம் தனிக் கவனிப்பு இருப்பதைக் கண்டும் கேலியும் கிண்டலுமாக அதைக் கடந்து தொடர்ந்து எழுத்துலகில் தன் பயணத்தைத் தொடர்வதை அவர் சிறுகதைகளின் போக்கு நமக்கு உணர்த்துகிறது.
‘கவிதை எழுதுவதில் உள்ள கவுரவம் நிலத்தை உழுவதிலும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாத எந்த சமூகமும் முன்னேற முடியாது ‘ என்று அடிக்கடி முழுங்குகின்ற மார்க்சிய மேடைகள் , பேரணிகள், இன்குலாப் ஜிந்தாபாத் கோஷங்கள் கற்பிக்காத அல்லது காட்டாத எம் நிலத்தையும் வாழ்க்கையையும் இவர் சிறுகதைகள் காட்டி இருக்கின்றன என்பது உண்மை.
‘வயல் அறுவடையின் போது ஏராளமான நெல்மணிகள் வயலில் உதிர்ந்து போய் வீணாகின்றன. இப்படி நெல் தொளிந்து போகாமல் இருக்க விவசாய விஞ்ஞானிகள் வழி கண்டு பிடிக்க கூடாதா? என்று ஒரு சிறுவன் தன் அப்பாவிடம் கேட்கிறான். ‘இங்க வீசக்கூடிய காத்துக்கு, பெய்யப்பட்ட மழைக்கு, அடிக்கக்கூடிய வெயிலுக்கு எல்லாம் ரூவாயா கொடுக்கோம்? நாம பாடுபட்டதுக்குக் கூலி எடுத்துக்கிடலாம். நம்மைச் சுத்தி காக்கா, குருவி, எலி, பாம்பு , தவளை, விட்டில், புழு, பூச்சி எல்லான் சீவிக்கணும். அதை மறந்திரப்பிடாது’ என்கிறார் அவன் அப்பா. அந்தச் சிறுவன் தான் எழுத வரும்போது அவன் கண்ட அந்த விவசாய உலகம் அவன் படைப்புலகமாக விரிகிறது. விவசாயத்தின் ஒவ்வொரு நெளிவு சுழிவுகளையும் அறிந்தவர் என்பதால் அந்தப் பின்புலம் அவர் சிறுகதைகளின் ஆளுமையாக தனித்துவமாக இருக்கிறது.
வாய் கசந்தது என்ற சிறுகதையில் சூடடிக்கும் காட்சி விலாவரியாக அவர் எழுதிச் சென்றிருக்கிறார். அரிசி மரத்தை ஊருக்குப் போனபோது தோட்டத்தில் தேடிய மும்பை குழந்தைகள் பலருண்டு. இதைச் சொல்லும் போது வேதனை தான் மிஞ்சுகிறது. இந்தக் கதையின் இந்த விவரங்கள் கூட நாளைய நம் தலைமுறைக்கு ஓர் ஆவணமாகிவிடுமோ என்ற அச்சம் இருக்கத்தான் செய்கிறது. இக்கதையை நான் சொல்ல வருவதற்கு காரணம் இக்கதையின் உத்தியோ கருப்பொருளோ ஏன் ஆவணமாக்கியிருக்கும் விவசாயக்காட்சியோ அல்ல. இக்கதையின் ஊடாக அவர் வைக்கும் ஒரு நுண்ணிய அரசியல். இந்த அரசியலில் எவ்விதமான ஆரவாரமும் இல்லை.
வயலில் விளைந்த நெல்லை கூலியாக அளந்து கொடுக்கும்போது அளக்கின்ற மரக்கால் வேறாகிவிடுகின்ற காட்சி, இரவு ஒன்றரை மணிக்கு எழுந்து சூட்டடிக்கப் போன ஐயப்பனுக்கு கிடைக்கின்ற கூலியின் மதிப்பு 2 ரூபாயும் இருபது பைசாவும். க்தைக்கு த்லைப்பு வாய் கசந்தது. இந்த மரக்கால் மாறுவதும் கூலியும் காலம் காலமாக விவசாய பெரும்புள்ளிகள் நடத்தும் சுரண்டல் தான். ஆனால் ஐயப்பனின் தாத்தாவோ அப்பனோ புரிந்து கொள்ளாததை அல்லது ஏற்றுக்கொண்டதை இவனால் மட்டும் அப்படியே ஏன் ஏற்றுக்கொள்ள முடிய்வில்லை? அவன் படிக்கிற பையனாக இருப்பதாலா? உழைப்புக்கும் உழைப்புக்கான கூலிக்குமான விகிதாச்சார கணக்கு வாய் கசக்க வைக்கிறது. ஐயப்பனுக்கு. வாசிப்பவனுக்கும் வாய்க்கசக்கும் அனுப்வத்தை கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தந்துவிட முடிகிறது நாஞ்சில் நாடனால்.
நாஞ்சில்நாடன் படைப்புகள் குறித்து கடுமையான இன்னொரு விமர்சனம் வைக்கப்படுவதை நானறிவேன். அதுதான் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் சாதி சான்றிதழ். அதாவது வெள்ளாளர் எழுத்து என்று. மொக்கையான விமர்சனம். இவை குறித்து நாஞ்சில்நாடன் அவர்களே அதிகமாக பேசி இருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம் அவருடைய ‘சில வைராக்கியங்கள்’ சிறுகதை என் நினைவுக்கு வரும். குமரி மாவட்ட வேளாளர் மாநாடு நடக்கிறது. மேடையில் வேளாளர்களையும் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பேசுகிறார் தலைவர்.பூதலிங்கம் பிள்ளை. மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற .கதை மாந்தர்களான பரமசிவம் பிள்ளைக்கு அவர் பேச்சு ரசிக்கிறது. சங்கரலிங்கம் பிள்ளை முகத்தில் சுரத்தில்லை. அவன் ஏன் பேச மாட்டான்? அவனுக்கென்ன? நிமுந்தா வானம், கவுந்தா பூமி! பேசுதான்! என்கிறார் சங்கரலிங்கம் பிள்ளை. “ஏன் பேசுவதிலே என்ன தப்பு? உள்ளதத் தானே சொன்னாரு! இந்தக் காலத்தில் சாதீகீதி எல்லாம் ஏது ஓய்? எல்லாம் ஒண்ணுதாலா? எல்லார் ஒடம்பிலேயும் ரெத்தம் சிவப்புதாலா? புல்லறுக்கிறவளைத் தூக்கி வரப்பிலே கெடத்தும் போது சாதி எங்கே ஓய் போச்சு?… …………………………….காலத்துக்கு ஏத்தாப்பிலே மாறாண்டாமா நாமளும்?…” என்று ப்ரமசிவம் பிள்ளை பொரிந்தார் என்று ஒரு காட்சி. அடுத்த காட்சி அவர் வீட்டில் மகளுக்கு வரன் துப்பு கொண்டு வந்து காத்திருக்கிறார் அவர் மைத்துனர். விசாரிக்கும் போது தெரியவருகிறது பையன் யாரென்பது.
யாருண்ணா கேக்க? அவன் மருமக்கவழிக்காரம்லா? ஒனக்கு புத்தி ஏண்டே இப்படிப் போகணும்?’ என்ற பரமசிவத்திடம் ‘அதெல்லாம் பாத்துக்கிட்டிருந்தா முடியுமா? இந்தக் காலத்தில? என்கிறார் மைத்துனர். பரமசிவம் பிள்ளை இடைவெட்டினார். ‘சரிதான், சோலியைப் பாத்துக்கிட்டு போடே! மாப்பிள்ளை பாக்கான் மாப்பிள்ளை!” என்று முடியும் கதையில் தான் சாதியம் இன்றுவரை நிலைத்திருப்பதற்கான அடிப்படைக் காரணமான அகமண முறை அம்மனமாக்கப்பட்டிருக்கும! இந்தியாவில் சுயசாதி அடையாளத்தை துறந்தவர் எவருமில்லை. எழுத்தாளன் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அந்த சாதிக்குள்ளெ பிறந்து வளர்ந்து வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் படைப்பாளி தன் படைப்புகளில் சாதிய முள் வேலிகளை உடைத்துக்கொண்டு திமிறிக்கொண்டு காயங்களுடனும் ரத்தம் சொட்டவும் வெளிவர தொடர்ந்து முயற்சி செய்துக்கொண்டுதான் இருக்கிறான்.
நாஞ்சில் நாடன் சிறுகதைகளின் பெருவெளியாக இருப்பது தீராதப் பசி.
கட்டுரையின் தொடர்ச்சியை தொடர்ந்து படிக்க:    http://puthu.thinnai.com/?p=8706

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to பசித்தவனின் பயணம் – நாஞ்சில் நாடன் சிறுகதைகள்

  1. Naga Sree சொல்கிறார்:

    அருமையான கட்டுரை!நன்றி

  2. rathnavelnatarajan சொல்கிறார்:

    ‘வயல் அறுவடையின் போது ஏராளமான நெல்மணிகள் வயலில் உதிர்ந்து போய் வீணாகின்றன. இப்படி நெல் தொளிந்து போகாமல் இருக்க விவசாய விஞ்ஞானிகள் வழி கண்டு பிடிக்க கூடாதா? என்று ஒரு சிறுவன் தன் அப்பாவிடம் கேட்கிறான். ‘இங்க வீசக்கூடிய காத்துக்கு, பெய்யப்பட்ட மழைக்கு, அடிக்கக்கூடிய வெயிலுக்கு எல்லாம் ரூவாயா கொடுக்கோம்? நாம பாடுபட்டதுக்குக் கூலி எடுத்துக்கிடலாம். நம்மைச் சுத்தி காக்கா, குருவி, எலி, பாம்பு , தவளை, விட்டில், புழு, பூச்சி எல்லான் சீவிக்கணும். அதை மறந்திரப்பிடாது’ என்கிறார் அவன் அப்பா. அந்தச் சிறுவன் தான் எழுத வரும்போது அவன் கண்ட அந்த விவசாய உலகம் அவன் படைப்புலகமாக விரிகிறது. விவசாயத்தின் ஒவ்வொரு நெளிவு சுழிவுகளையும் அறிந்தவர் என்பதால் அந்தப் பின்புலம் அவர் சிறுகதைகளின் ஆளுமையாக தனித்துவமாக இருக்கிறது.

    அருமையான பதிவு. அருமையான விமர்சனம். வாழ்த்துகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s