அன்று சொன்னது அர்த்தம் உள்ளது

கையாலாகாக் கண்ணி
நாஞ்சில் நாடன்
முறத்தால் புலியை ஓட்டியவரின் நேரடி வாரிசுகள் யாம் எனுமோர் புறப்பொருள் வெண்பாப் பரணி ஒன்றுண்டு நமக்கு. சமீபத்தில் ‘உயிர்மை’ வெளியீடான நாவல் ஒன்று வாசித்தேன். ‘வெட்டுப்புலி’ எனும் தலைப்பில். ‘தினமணி’ நாளிதழில் முதுநிலை உதவியாசிரியராகப் பணியாற்றும் ‘தமிழ்மகன்’ எழுதியது. இங்கு தமிழ்மகன் என்பது புனைபெயர், வினைத்தொகை. புலியை அரிவாள் போன்ற ஆயுதத்துடன் நேர்கொண்ட துணிச்சல், வாசிக்க வாசிக்கத் திகிலூட்டியது. ஆனால் முறத்தால் புலியை வெருட்டுவது என்பதோர் அசாத்தியமான கற்பனைதான். அது கற்பனையா, தொன்மமா, பழந்தமிழ்ப் பாட்டினுள் ஆதாரம் உண்டா எனும் விவாதங்களினுள் புக தற்போது எனக்குப் பொழுதில்லை. எனினும் புலியை முறத்தால் எதிர்கொள்ள இயலும் எனும் சிந்தனை, துணிச்சல் என்பனவற்றில் வியப்பு மேலுறுகிறது.
அதைத் தமிழ் வீர மரபின் அடையாளம் என்று கொண்டால், அந்தத் தமிழ்த் தாயாரின் வம்சாவளியினர். புலியை எதிர்கொள்வது இருக்கட்டும்,எலியை எதிர்கொள்ளும் வீரமற்றவராய் எவ்விதம் மாறினார்கள்? வரலாறு, வெறும் புலம்பல் சக்கரவர்த்திகளாக அவர்களை எவ்விதம் மாற்றியது? கையறு நிலை, கழிவிரக்கம் எனப் பல சொற்களும் உண்டுதான் செம்மொழித் தமிழில். சற்று கௌரவமான உணர்ச்சி நிலைகளுக்குப் பயன்படுத்தும் சொற்களாகவும் அமையலாம். அவற்றைப் பயன்படுத்த எமக்கு ஆசை இல்லாமலும் இல்லை. ஆனால் கையறு நிலை வேறு புலம்பல் வேறு.
பொழுது புலர்ந்தால், சாய்ந்தால் இந்தப் புலம்பல்களைக் கேட்டுப் புளித்து, சலித்து, கைத்துப் போயிற்று.
“பைப்பு ஒடஞ்சு பதினேளு நாளாகத் தண்ணி வரல்லே சார்!”
குடிதண்ணீர்க் குழாய் சராசரியாக ஆண்டுக்கு எட்டு முறை ஏன் உடைப்பெடுக்க வேண்டும் என்று அவருக்குக் கேள்வி இல்லை.
”தெனமும் அஃபிசியலா மூணு மணி நேரம், அன்னஃபிசியலா மூணு மணி நேரமும் கரண்டைப் புடுங்குறானுக சார்!”
தினமும் பேருந்து நிறுத்தத்தில், தேநீர்க்கடையில், கடைத் தெருவில், அலுவலகத்தில், அண்டை அயலில் கேட்கும் சுப்ரபாத வாசகம் மேற்சொன்னது. நண்பரின் அச்சகத்தில் அமர்ந்திருந்த போது, மேற்படியான புலம்பலை மறு ஒலிபரப்புச் செய்தவரை எரிச்சலுடன் கேட்டேன், “தினமும் பன்னிரெண்டு மணிநேரம் கரண்டைப் புடுங்கினாக் கூட நீரு என்ன புடுங்கிருவேரு?”
மே மாத வெயிலில், நடுமதியம் ஒன்றே காலில் இருந்து இரண்டரை மணி வரை 95- ம் எண் வழித்தடப் பேருந்துக்கு காத்துக் கிடந்த போது, பக்கத்தில் நின்றவர் சொன்னார்.
”நானும் எழுவது நிமிசமா காத்துக் கெடக்கேனுங்க… வந்தா நாலும் சேந்து வருது… இல்லேன்னா ஒண்ணுகூட வரமாட்டங்குது.”
புலம்பல்களுக்கு நடுவே பொழுது போக்கி வாழக் கற்றுக் கொண்டோம் நாம்.
“பெட்ரோலுக்கு மூணு ரூவா கூட்டியாச்சு…”
“ஒண்ணுக்கு போக ஒரு ரூவாண்ணு போர்டு வச்சிருக்கான், ரெண்டு ரூவா வாங்குறான்”
“ரெண்டோ மூணோ வாங்கீட்டுப் போறான், உள்ள மூக்கப் பொத்தாம நுழைய முடியுமா? கெட்ட ஆவி அடிக்கு! திண்ண சோறு வெளீல வந்திரும்போல….”
“டீ அஞ்சு ரூவா ஆயிட்டு வே… பாலக்காட்டிலே இண்ணைக்கும் மூணு ரூவாதான். அவனுக்கு எப்பிடியாக்கும் கட்டுப்படி ஆகு?”
இந்தப் புலம்பல்களைத் தாண்டி தமிழ்ப் பெருமகனாருக்கு வேறு மக்களாட்சி கடமை ஏதும் இல்லை. தேர்தல் காலத்தில் இவை எதுவும் நினைவில் இருப்பதும் இல்லை. நிர்வாகத் திறன் இன்மை, நீதி உணர்வு இன்மை, அறச்சார்பு இன்மை எவையுமே மனதில் நிழலாடுவது இல்லை. எத்தைச் செய்தும் சொத்தைத் தேடு எனும் இந்திய அரசியல் தத்துவத்தை அறியாதவன் அல்ல தமிழ் வாக்காளன். ஆனால் தேர்தல் காலத்தில் அவன் நாவூறி நிற்பது இலவசங்கள், இனாம்கள், சாதி, கடா வெட்டு, கால் குப்பி சீமைச் சாராயம்.
படித்த வர்க்கம், தன்னை அறிவாளி என்று நம்பிக் கொண்டிருக்கும் வர்க்கம், செல்வம் சேர்த்து விட்ட வர்க்கம், செல்வம் சேர்த்துக் கொள்ள வழி புலப்பட்ட வர்க்கம் வாக்குச் சாவடிக்குப் போவது நீசச் செயல் என நினைக்கிறார்கள்.
வாக்காளனையும், யோசித்துப் பார்த்தால், குறை சொல்ல என்ன உண்டு? உலகின் மிகச் சிறந்த ஆட்சி வடிவம் என்று நிரூபிக்கப்பட்ட மக்களாட்சி வடிவத்தையே தோற்கடித்துக் காட்டியவர்கள் நமது உப பாண்டவர்களும் உப கௌரவர்களும்.
எனவே வாக்காளன் வசதியாய் ஒரு புலம்பலில் தஞ்சம் கொள்கிறான்.
“யாருக்கு ஓட்டுப் போட்டாலும் கதை இதாலா? கழுதை விட்டையிலே முன் விட்டை பின் விட்டை உண்டா?”
இவ்வாறாகத் தானே 2010லும் புலம்பல்கள் பல்கிப் பெருகிக் குடும்பம் குடும்பமாய்த் தழைத்து வருகின்றன. புலம்புவதற்கு என்றே தினமும் செய்தி ஊடகங்கள் அரும்பாடுபட்டு ஊக்கத் தீனி தந்து கொண்டிருக்கின்றன. பன்றிக் காய்ச்சல், தோற்றுப் போவதற்கு என்றே எடுக்கப்படும் தமிழ் சினிமா, காவித் துணியில் பாலுறவு…. சில மாதங்களாய் சாலையில் இறங்கி நடக்க நீதமில்லாமல் எங்கும் எதிலும் யாவரும் செம்மொழிப் புலம்பல். தினமும் கேட்கிறார்கள் மாறி மாறி, திரும்பித் த் இரும்ப, “செம்மொழி மாநாட்லே என்ன செய்வாங்க?” என்னிடம் உள்ள ஒரே பதில்,
“இதுக்கு முன்னால என்ன செய்தாங்களோ அதைத்தான் இப்பவும் செய்வாங்க!”
பொத்தானை அமுக்கினால் விளக்கு எரிவதைப் போல எல்லாமும் எல்லோரும் எளிதாய்த் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டுப் புலம்புகிறார்கள்.
செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் செம்மொழி ஒன்றுடையாள். அதை எதற்குக் கொண்டாடுகிறார்கள் எனும் அறிவுகூட இல்லாமல் வாழ்பவனுக்குப் பால் கொடுத்த தாய் மார்பை என்ன செய்வது?
இரண்டுக்கு மேற்பட்ட தமிழர்கள் கூடும் இடத்தில் கேட்கும் பல புதிய புலம்பல்கள் கேட்டு தெய்வ மாக்கதை செய்ய எம்முள் இன்று கவிச்சக்கரவர்த்திகள் இல்லை போலும்.
“ஓய், பிரிட்டிஷ் ஏர்வேய்சை மத்தவனுக்குப் பேரன் வாங்கீட்டானாம், தெரியுமா?”
“நீரு அதைச் சொல்லுகேரு! மத்தவ டார்ஜிலிங் பங்களா அன்டர் கிரௌவுண்ட்லே நாலு ஏவுகணை வச்சிருக்காளாம்! அணு ஆயுதம் பொருத்தி, தயார் நிலையிலே”
“அதை எங்கிட்டு ஏவுவா?”
“இது ஒரு கேள்வியாக்கும்?”
இன்னொரு புலம்பல், “கோலாம்பூர்லே பெரிய நகக்கடை மத்தவனுக்கு மருமகளுக்காம்.”
“மத்தவருக்கு மகன் ஆலிவுட்லே மூணாயிரம் கோடீல சினிமாப் படம் எடுக்கானாம்.”
“மத்த தாயோளி இன்னும் தினமும் ஒரு பவும் ஒரச்சு பால்லே கலக்கிக் குடிக்கானாம்!”
“எனக்கு மனசிலாக மாட்டங்கு? தினமும் ஒரு பவுனா? தங்கம் விக்க வெலைக்கு… கிராம் 1750 ரூவா வச்சுக்கிட்டாலும் எட்டு கிராம் ஒரு பவுன், பதினாலாயிரம். முன்னூத்தி அறுவத்தஞ்சு நாளைக்கு அம்பத்தோரு லெச்சத்துப் பத்தாயிரம்.”
“அதுலே செய்கூலி சேதாரம் இருபத்திரெண்டு சதமானம் சேத்துக் கணக்குப் போடும்…”
“அவுனுக்க கக்கூசை வாங்கயாந்து தெனமும் அரிச்சுப் பாத்தா ஒரு காம்ப்ளக்ஸ் கெட்டீரலாம் போல்ருக்கு”
“ச்சீ… என்ன அசிங்கம் புடிச்ச பாடு பேசுதேரு?”
”சரி, அசிங்கம் இல்லாத வேறொண்ணு சொல்லட்டா? ராத்திரி பதினோரு மணிக்கு மத்தவனுக்கு மாமனாரு முன்னால மத்த நடிகை அம்மணங் குண்டியா தெனமும் ஆடுகாளாம்!”
“மத்தவனுக்கு தாய் மாமனுக்கு எய்ட்ஸாம். மத்தவனுக்கு மச்சானுக்கு மத்தது எந்திரிக்கலியாம்…”
புலியை முறத்தால் அடித்த சமூகம், நெஞ்சில் தைத்த வேலைப் பிடுங்கி எதிரி யானையை எறிந்த சமூகம், புற முதுகிட்ட கோழைக்கு பால் கொடுத்த மார்பை அறுத்தெறிந்த சமூகம், குடிக்கத் தண்ணீர் கேட்டுத் தாமதம் ஆனதால் உண்ணாமல் உயிர்விட்ட சமூகம், யான் மன்னனல்ல களன் என அரியணையில் உயிர்விட்ட சமூகம், மனுநீதிச் சோழனையும் பொற்கைப் பாண்டியனையும் போற்றித் திரிந்த சமூகம் இன்று புலம்பிப் பொழுது போக்கித் திளைத்துக் கொண்டிருக்கிறது.
கொலை, களவு, வன்புணர்ச்சி, சமூக அநீதி, அரசியல் கூட்டுக் கொள்ளை, களவு போகும் மலைகள், காடுகள், மணற்குன்றுகள், மலைவாழ் மக்களின் வாழ்விடங்கள் யாவும் இவண் பொழுது போக்குச் செய்தியும் புலம்பல் ஆற்றுப் படையும். பாரதியின் சொற்களைக் கடன் கொண்டால் வீரமிலா நாய்களின் பெட்டைப் புலம்பல்.
ஆப்பரேஷன் தியேட்டரின் வெளியே கண் கசிய நிற்கும் அடுத்த உறவுகளின் அக்கறை நமக்கு விளங்கும். இறந்த உறவுக்கு இரங்கி நெஞ்சில் அறைந்து கரைவதன் சோகம் புரியும். பல்வலி உயிர் எடுப்பதின் வலியின் துடிப்பு அறிய வேதனை உண்டு. பிக் பாக்கெட்டில் பணம் இழந்து போவதன் விரக்தி அர்த்தமாகும். இரயிலைத் தவறவிட்டவன் வருத்தம் மனதிலாகும். ஆனால் மொத்த சமூகத்தையும் மனித குலத்தையும் புற்று நோயென அரிக்கும் கீழ்மைகளில் நமக்குப் புலம்பல் மாத்திரமே உண்டு.
புலம்பினால் மேல் வலிக்காது, சட்டை அழுக்குப்படாது, நகக்கண்ணில் மண் சேராது. மெகாத் தொடர்காணும் நேரம் கெடாது, தட்டில் விழும் தோசை சூடு ஆறாது, பை இருப்பில் பத்துக் காசு கூடக் குறையாது…..
என்ன பொறுப்பான குடி மக்கள் நாம்?
வேப்பங்கொட்டை கசக்கும், புளியம்பழம் புளிக்கும் என்று ஆய்ந்து சொல்லவே ஆறு நாட்கள் உழைப்பும் ஒரு ஞாயிறு விடுமுறையும் வேண்டும் நமக்கு!
சொந்தக் கடை முன் சாலை குழி பறித்து மழைநீர் தேங்கி, கடை வாசலில் நிற்பவர் மேல் சேறு வாரி அடிக்கிறது. இரண்டு கூடைச் சரல் அள்ளிப் போடத் தோன்றாது. ”மூணு மாசமாட்டு இப்பிடித்தான் சார் கெடக்கு! சாலை மராமத்துக்காரன் கண்டுக்கறதே இல்லே” என்று புலம்புகிறான் கடைக்காரன்.
பேருந்து நிறுத்தத்தில் பெருச்சாளி ஒன்று செத்துக் கிடக்கிறது. அருவருத்துத் தள்ளி நிற்கிறார்கள். மூக்கைப் பொத்துகிறார்கள். குமட்டி எச்சில் உமிழ்கிறார்கள். நீண்ட கோலெடுத்து நீக்கிப் போட எவருக்கும் நேரமில்லை. துப்புரவுத் தொழிலாளி என்றொரு ஒடுக்கப்பட்ட சபிக்கப்பட்ட இனப் பிரதிநிதி நான்கு நாட்கள் சென்று வந்தாலும் சூழல் கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ என நாறிக்கொண்டு கிடக்கும். போவோரும் வருவோரும் புலம்புவார்கள்.
“ஒரு பய முனிசிபாலிட்டியிலே வேலை செய்ய மாட்டம்ங்கான்” என்று.
சாலைகளின் குறுக்கே அரசாங்கம் விஞ்ஞான பூர்வமாய் வேகத்தடை அமைத்திருப்பார்கள். வேகத் தடை, நடைபாதையோரம் சேரும் இரு பக்கலிலும் சற்றுத் தாழ்ந்திருக்கும். அந்தப் பொந்து வழியாக இரு சக்கர வாகனங்கள் வேகத் தடையைத் தப்பித்து வளைந்து நெளிந்து நீங்கிப் போகும். ஆனால் சாலையின் குண்டு குழிகள் பற்றிய இவர்கள் புலம்பல் காது புளித்துப் போகும்.
வங்கி வாசலில், தபால் பெட்டிகள் நிற்கும் இடத்தில், பேருந்துக்கு வெயிலுக்கும் மழைக்கும் மக்கள் ஒதுங்கும் நிழற்குடைகளின் உள்ளே வழியை மறித்தும் மக்கள் நெரித்தும் இரு சக்கர வாகனங்களைக் கொண்டு அடைப்பார்கள் மடிக்கணிணி பயன்படுத்தும் படித்த வேலை பார்க்கும் ’ஜெய் ஹோ’ இளைய பாரதத்தினர். ஆனால் இவர்கள் எரியாத சாலை விளக்கைப் பார்த்து புலம்புவார்கள், போக்குவரத்து சிக்னலை மீறி வண்டியும் ஓட்டுவார்கள்.
வரிசை தாண்டி வஞ்சகமாய் நடைமேடைச் சீட்டு வாங்குகிறவன் ஐந்து நிமிடம் தாமதமாக வரும் தொடர் வண்டியைப் புலம்புகிறான். பிளாஸ்டிக் குப்பையைத் தெருவில் வீசுகிறவன் சாக்கடை அடைத்துக்கொண்டு சாலையில் பாய்வதைப் புலம்புகிறான். போக்குவரத்து நெரிசலில் நடைமேடையில் நடப்பவரின் விலா உரசி இரு சக்கர வண்டியோட்டிப் போகிறவன் போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் காவலரைப் புலம்புகிறான்.
புலம்பிப் பிறந்து புலம்பி வளர்ந்து புலம்பி வாழ்ந்து புலம்பிச் சாகும் புலம்பல் மன்னர்கள். என் செய என யானும் புலம்புகிறேன்.
ரசனை, ஜூலை 2010.
நன்றி:தட்டச்சு உதவி:–சென்ஷி

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to அன்று சொன்னது அர்த்தம் உள்ளது

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    புலியை எதிர்கொள்வது இருக்கட்டும்,எலியை எதிர்கொள்ளும் வீரமற்றவராய் எவ்விதம் மாறினார்கள்?

    அருமையான பதிவு.
    நன்றி ஐயா.

  2. Naga Sree சொல்கிறார்:

    Thank you

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s