சிற்றிலக்கியங்கள் எனும் பிரபந்தங்கள்7(2) -அந்தாதி

நாஞ்சில்நாடன்
முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்
சொல்வனம் பனுவல் போற்றுதும்
மூன்றாம் திருவந்தாதி
இது பேயாழ்வார் அருளியது. இவர் காலமும் 7-ம் நூற்றாண்டு. நூறு பாசுரங்களைக் கொண்ட அந்தாதி இது. இந்த அந்தாதியின் முதற் பாடலே அற்புதமான பாசுரம்.
திருக் கண்டேன், பொன்மேனி கண்டேன், திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன் ஆழி கண்டேன், புரி சங்கம் கைக்கண்டேன்
என் ஆழி வண்ணன் பால் இன்று
சொல்ல வேண்டியதில்லை. இதுவும் வெண்பாவில் அமைந்த அந்தாதி என்று.
‘மனத்து உள்ளான், மா கடல் நீர் உள்ளான், மலராள்
தனத்து உள்ளான் தந்துழாய் மார்பன்’
 எனத் திருமாலை ஏத்தும்போது, அவன் தண்மையான துளசிமாலை அணிந்த மார்வை உடையவன் எனினும் மயில் வாழும் இலக்குமியின் தனத்தில் உறைபவன், ஆயின் அடியார்களின் மனத்தில் வாழ்பவள், மா கடல் நீரில், பாம்பணை மேல் பள்ளி கொள்பவன் என்கிறார். சமுத்திரம் எனும் வடமொழிச் சொல்லுக்கு மாற்றாக மாகடல் என்று வேறு தமிழ்ச் சொல் பெய்வது கவனிக்கத் தக்கது.
என்றுமே ஆழ்வார்களின் தமிழ் பயிலச் சுகமானது. அம்மாவின் கண்டாங்கியைப் போர்த்துக் கொண்டு உறங்குவது போன்றது. மேலும் ஒரு பாசுரம் கவனிப்போம்.
தானே தனக்கு உவமன், தன் உருவே எவ்வுருவம்
தானே தவ உருவும் தாரகையும் – தானே
எரி சுடரும் மால் வரையும் எண்திசையும், அடைந்து
இரு சுடரும் ஆய் இறை
திருவள்ளுவர் இறைவனை, ‘தனக்கு உவமை இல்லாதான்’ என்கிறார். பேயாழ்வார் தானே தனக்கு உவமை ஆகிறவன் என்கிறார். கொஞ்சம் தமிழ் பயிற்சி இருந்தால் ஆழ்வார் பாசுரங்களுக்கு உரையே வேண்டுவதில்லை. என்றாலும் வேதாந்தமாக விரித்துப் பொருள் தருவார்கள் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார், பெரிய வாச்சான் பிள்ளை போன்றோர். எனது அனுபவத்தில் ஆழ்வார் எனக்கு எரிவந்த தன்மையர். உரையாசிரியர்கள் சொல்லுக்குச் சொல் உக்கிரமாய்த் தீயெழ விழிப்பவர்கள்.
தெளிவான் இறைத்தன்மை பேசுகின்றன சில பாசுரங்கள்.
நிறம் வெளிது, செய்து, பசிது, கரிது என்று
இறை உருவம் யாம் அறியோம்
என்பதன் பொருள் இறைவனின் நிறம் வெண்மை, செம்மை, பசுமை, கருமை என்று உருவம் யாம் அறியோம் என்பது.
நிறங்களை, வடிவங்களை, வாசங்களைக் கடந்து நின்றவன் தானே கடவுள் எனப் படுபவன்!
நான்முகன் திரு அந்தாதி
நாலாம் திருவந்தாதி இது. பாடியவர் திருமழிசை ஆழ்வார். சென்னைக்குப் பக்கமுள்ள திருமழிசைக்காரர். காலம் 7-ம் நூற்றாண்டு. வெண்பாவில் ஆன அந்தாதித் தொகை. 96 பாசுரங்கள்.
பாலில் கிடந்ததுவும், பண்டு அரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் – ஞாலத்து
ஒருபொருளை வானவர்தம் பெய்ப்பொருளை, அப்பில்
அருபொருளை யான் அறிந்த அறு?
என்று எடுக்கிறார் திருமழிசை. பாற்கடலில் பள்ளிகொண்டு கிடந்ததுவும், முன்பு திருவரங்கம் மேயதுவும், ஆலிலையில் துயின்றதுவும் பார் அறிவார்கள்? உலகத்தின் ஒரு பொருளை, வானவர்களின் மெய்ப் பொருளை நீரின் அரும்பொருளை யான் அறிந்தவாறு யார் அறிவார்கள்? என்பது பொருள்.
நான் முதன் முதல் சென்னை போனது 1968-ல், பட்டப்பட்டு தேர்வு எழுதிய பின்பு. கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் ஆகிவிட்டன. பம்பாயில் வாழ்ந்த காலத்தும் கோவையில் வாழும் காலத்தும் எனது ரயில் வந்து சேர்வதும் புறப்பாடும் சென்ட்ரல் நிலையத்தில். எப்படியும் இதுவரை 200 தவணையில் இறங்கி இருப்பேன். இறங்கிய ஐந்து நிமிடத்தில் என் பொறுமை பறந்து போய்விடும். எனதியல்பா, சென்னை மக்கள் இயல்பா, மண்ணின் இயல்பா என்பது இன்றும் என் ஆய்வுக்குரியது. ஆனால் சென்னைக்குப் பக்கத்தில் வாழ்ந்த திருமழிசை ஆழ்வார், 7-ம் நூற்றாண்டுக்காரர், சற்றும் சமயப் பொறை இழந்து பேசுகிறார்.
அறியார் சமணர்; அயர்ந்தார் பவுத்தர்;
சிறியார் சிபப்பட்டார், செப்பில் – வெறியாய்
மாயவனை, மாயவனை, மாதவனை ஏத்தாதார்
என்பது பாடல்.
சமணர் அறிய மாட்டார், பவுத்தர் அயர்த்துப் போனார், சிவ சமயம் சார்ந்தவர் யாவும் சிறியார், சொல்லப்போனால் தேன்போன்ற மாயவனை, மாதவனை ஏத்தாதவர் இன்று ஈனப்பிறவிகள் ஆனார்கள் என்பது பொருள்.
வைணவம் மாத்திரம் என்றில்லை, வெட்டு, குத்து, கொல்லு சொல்லும் சைவத்துக்கும் குறைவில்லை. எச்சமயத்துக்கும், இறை மார்க்கத்தும் அன்பு தான் அடிப்படை என்பார்கள் மெய்ஞ்ஞானிகள். பிறசமயத்தவரை இகழ்வதில் சைவரும் வைணவரும் யாருக்கும் சளைத்தவரில்லை. அஞ்ஞானிகள் என்று அவிசுவாசிகளை அழைக்கும் கிறிஸ்துவத்தும், காஃபிர்கள் என்று மாற்றாரை அழைக்கும் இஸ்லாத்துக்கும் எவ்வகையில் குறைந்தவர்கள் இல்லை சைவக் குரவர்களும் வைணவ ஆழ்வார்களும் என்பதனையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொருள் புரிந்தும் புரியாமலும் திகைத்து நிற்கும் பாடல்களும் உண்டு.
குறை கொண்டு, நான்முகன் குண்டிகை நீர்பெய்து
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்து – கறை கண்ட
கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு
என்பது பாடல்.
‘நான்முகன் குண்டிகை நீர் பெய்து’ எனும் தொடரில் குண்டிகை எனில் கமண்டலம் என்று தமிழ் லெக்சிகன் கூறுகிறது. ‘நான்முகன் குண்டி கை நீர் பெய்து’ என்று பிரித்தால் அதற்கு ஆழ்வார் பொறுப்பில்லை. ஆனால் பாடலின் பொருளுக்கு ஆழ்வார் பொறுப்புத் தானே!
தன்னிடம் குறை இருந்த காரணத்தால், வடமுண்ட கறையைக் கண்டத்தில் கொண்ட சிவன், மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி, அகில உலகத்தையும் ஆண்ட அகிலாண்ட நாயகன் திருமாலின் சேவடியை சென்னி மேல் ஏற்றி, நான்முகனின் கமண்டல நீர் கொண்டு கழிவினான் என்று தான் பொருள் கொள்கிறேன். தவறு எனில் திருத்துங்கள்.
இன்னுமொரு பாடல் –
நாராயணன், என்னை ஆளி, நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால் – தன்பேரான
பேசப் பெறாத பிணச் சமயர் பேசக் கேட்டு
ஆசைப் பட்டு ஆழ்வார் பலர்
நாராயணன் என்பது சரி, என்னை ஆள்பவன் என்பதும் சரி, நரகத்துச் சேராமல் காக்கும் திருமால் என்பதும் மிகச்சரி, அது ஆழ்வார் திருவுள்ளம். ஆனால் தன்பேரைப் பேசாத பிணச்சமயர் என்பது நமக்கு எவ்விதம் சரி. நான் இவ்விதம் எழுதிச் செல்வதற்கு என்னுள் ஆட்சி செய்யும் பண்டைச் சைவ மரபு எனத் தயவுசெய்து கொள்ளாதீர்கள் நண்பர்களே!
இங்கு மற்றும் ஒரு குறிப்பு. ‘என்னை ஆளி’ என்கிறார் ஆழ்வார். என்னை ஆள்பவனே என்று அர்த்தம். பத்தாண்டுகளுக்கும் மேலிருக்கும், மதுரை பில்லர்ஸ் ஹோமில் ’காலச்சுவடு’ ஏற்பாடு செய்திருந்த, ராஜ்கவுதமன், ராஜேந்திரசோழன் முதலானோரும் கலந்து கொண்ட, மூன்று நாள் நாவல் இலக்கிய முகாம் முடிந்த அன்று மாலை நண்பர் ஐயனாரின் நூல் வெளியீட்டு விழா. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை வளாக மாடியில். தலைவர் பேராசிரியர், கவிஞர் அபி, வெளியிட்டுப் பேசியவர் பட்டிமன்ர மேதை பேராசிரியர் சாலமன் பாப்பையா. நான் பெற்றுக் கொண்டு பேசிய போது படைப்பாளி எனும் சொல்லைப் பயன்படுத்தியதை நக்கல் செய்து பேராசிரியர் சாலமன் பாப்பையா, அவரது வழக்கமான பாணியில், “அது என்ன படைப்பாளி, அது பெண்பாலா” என்று கேட்டார். நான் அடுத்திருந்த கவிஞர் அபியின் காதுகளில் கிசுகிசுத்தேன், எனக்கொரு இரண்டு நிமிடங்கள் தாருங்கள் மறுப்புச் சொல்ல என்று. எனக்கிருந்த கேள்வி, வயசாளி, தொழிலாளி, உழவாளி, உழவாரப் படையாளி யாவும் பெண்பாற் பெயர்கள் என்பது. அபி என்னை அமைதியாக இருக்க ஆற்றுப்படுத்தினார். இன்று ஆழ்வாரும் சொல்கிறார் ‘என்னை ஆளி’ என்று. கல்லூரிகளில் தமிழ் பயிலும் மாணவரை நினைத்தால் மிகுந்த வருத்தமாக இருக்கிறது.
அது கிடக்க, ‘நாக்கொண்டு மானிடம் பாடேன்’ என்கிற திருமழிசை ஆழ்வாரின் பாடல்கள், திருமாலைப் பாடும்போதெல்லாம் திருநீலகண்டனையும் ஒரு தட்டுத் தட்டிவிட்டுச் செல்வது இன்று வேடிக்கையாகப் படுகிறது.
பெரிய திருவந்தாதி
இது நம்மாழ்வார் அருளிச் செய்த ஐந்தாம் திருவந்தாதி. அவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்பனால் புலவ. இந்த அந்தாதியில் 87 பாசுரங்கள். குருகூர்ச் சடகோபன் என்றும் வேதம் தமிழ் செய்த மாறன் என்றும் அறியப்பட்ட நம்மாழ்வார் மீது கம்பர் சடகோபர் அந்தாதி பாடியிருக்கிறார். நான் வாசித்ததில்லை. நம்மாழ்வார் பிறந்தது வேளாளர் குலம் என்றும் தாயார் பெயர் காரிப்பிள்ளை என்றும், தாயார் ஊர் திருப்பதிசாரம் என்று இன்று அறியப்படுகிர திருவண்பரிசாரம் என்றும் ஒரு செய்தி உண்டு. பழையார்றில் இருந்து தேரூர் பெருங்குளங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் தேரேகாலின் முதல் ஊர் நான் பிறந்த வீரநாராயணமங்கலம், இரண்டாவது ஊர் திருப்பதி சாரம். இதைச் சொன்னால் நம்மாழ்வாருக்கு இழுக்கு ஒன்றும் ஏற்பட்டுவிடாது.
‘வருவார் போவார் வருவிருந்து உபசரிப்பார்…’ என்று நம்மாழ்வார் பாசுரம் திருவண்பரிசாரத்துத் திருவாழி மார்பனைப் பாடுகிறது. என்ன அற்புதமான பெயர் பாருங்கள். திரு-வாழி-மார்பன். இன்னும் புரியவில்லை என்றால் – ஸ்ரீநிவாஸன்.
‘பெற்ற தாய் நீயே, பிறப்பித்த தந்தை நீ,
மற்றையார் ஆவாரும் நீ, பேசில் – எற்றேயோ
மாய, மா மாயவனை மாய, முலை வாய் வைத்டஹ்
நீ அம்மா! காட்டும் நெறி!’
முதல்வரி, ‘அம்மையே, அப்பனே, ஒப்பிலா மணியே!’ எனும் தேவாரப் பாடலை நினைவூட்டும்.
நம்மாழ்வார் மொழி தத்துவச் செறிவு கொண்டது. பல பாடல் வரிவள் ஆழமான அர்த்த கர்ப்பம் கொண்டவை.
‘நின்றும், இருந்தும், கிடந்தும், திரிதந்தும்,
ஒன்றும் ஓவாற்றான்; என் நெஞ்சு அகலான்’
 என்றும்
‘பார் உண்டான், பார் உமிழ்ந்தான், பார் இலந்தான், பார் அளந்தான்,
பார் இடம் முன் படைத்தான், என்பரால்’
 என்றும்
’கொண்டல் – தான், மால்வரை – தான், மாகடல் – தான், கூர் இருள் – தான்,
வண்டு அறாப் பூவை – தான்’ என்றும்
நம்மாழ்வாரின் மொழி வேறு தளத்தில் பயில்கிறது.
‘ஒன்று உண்டு, செங்கண் மால்! யான் உரைப்பது; உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ’
என்று அவரால் கட்டளையும் இட முடிகிறது.
’முதலாம் திருவுருவம் முன்றென்பார்; ஒன்றே
முதலாரும் மூன்றுக்கும் என்பர்; – முதல்வா
நிகர் இலகு கார் உருவா! நின் ஆகத்து அன்றே
புகர் இலகு தாமரையின் பூ?’
‘நின் ஆகத்து அன்றே புகர் இலகு தாமரையின் பூ?’ என்றதும் கம்பன் வரி மனதில் ஓடுகிறது. தாமரையின் பூ என்றது செந்திருவை. ஆகம் எனில் நெஞ்சு, மார்பு. கம்பன் பாடல்,
‘பாகத்தில் ஒருவன் வைத்தான்;
பங்கயத்து அமர்ந்த பொன்னை
ஆகத்தில் ஒருவன் வைத்தான்
அந்தணன் நாவில் வைத்தான்’
என்று ஏகும். பொருளாவது – சிவன் உமையை உடலின் பாகத்தில் வைத்தான், தாமரையில் அமர்ந்த செந்திருவை மார்பில் வைத்தான் திருமால், அந்தணன், பிரம்மன் சரசுவதியை நாவில் வைத்தான் – என்பது.
எனக்குத் தனிப்பட்ட முறையில் சிலசமயம் கர்வமாக இருக்கும் நம்மாழ்வாரை நினைக்க. வெள்ளாளன் என்பதால் அல்ல. ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு தாயார் ஊருக்கு அவர் வந்திருக்கிறார் தானே. திருப்பதி சாரத்தின் மேற்கில் பழையாற்றில் குளித்தும் கீழ்புறத்தில் தேரேகாலில் குளித்தும் அந்நன்னீரைக் குடித்தும் இருப்பார்தானே! அது எனக்கும் நேர்ந்திருக்கிறது தானே! அவர் வழிபட்ட திருவாழிமார்பனை நானும் வழிபட்டிருக்கிறேன் தானே!
எல்லாச் சமயத்தார்க்கும் பொதுவான பாடல்களும் உண்டு நம்மாழ்வாரிடம்.
‘பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலர் என்றும் காந்தொறும் – பாவியேன்
மெய் ஆவி, மெய் மிகவே பூரிக்கும் அவ்அவை
எல்லாம் பிரான் உருவே என்று’
யாவும் இறைவடிவம் என்பது தான் பாடலின் நுட்பம்.
இன்னும் இருக்கின்றன ஈண்டு நான் பேசாத அந்தாதிகள். பொதுவாக அபிராமி அந்தாதி என்ற ஒரு செல்வத்தை மட்டுமே அறிந்திருக்கும் தமிழருக்கு, தோண்டினால் கிடைப்பது பெரும் புதையல் என்பது தெரியாது.
(தொடரும்)
அனைத்து பனுவல் போற்றுதும் கட்டுரைகளையும் படிக்க:பனுவல் போற்றுதும்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to சிற்றிலக்கியங்கள் எனும் பிரபந்தங்கள்7(2) -அந்தாதி

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை ஐயா.
    உங்கள் தமிழை ரசிக்கிறேன்.
    நன்றி ஐயா.

rathnavelnatarajan க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s