நாஞ்சில் நாடன்
மருதாசலக் கடவுள் பிள்ளைத் தமிழ்
அண்மையில் கோவை விஜயா பதிப்பக புத்தக வரிசைகளை மேய்ந்தவாறிருந்த போது இந்நூல் என்கண்ணில் பட்டது. இதன் ஆசிரியர், உரை, வரலாறு பற்றித் தொடக்கத்திலேயே குறிப்பிட்டோம். நாம் மேலே கண்ட பிள்ளைத் தமிழ் நூற்களை விடவும் கடுமையான மொழி நடையில் அமைந்த பாடல்கள். சிற்றிலக்கியங்கள் பலவற்றின் பாடல்களின் ஓசை நயம் உணர வேண்டின் சீர் பிரிக்காமல் சேர்த்து வாசிக்க வேண்டும். கேட்க இனிமையாக இருக்கும். பல பாடல்கள் சந்தம் பொங்கும் ஆசிரிய விருத்தங்கள். ஆனால் பிரித்து வாசித்தால்தான் நமக்கு முக்கால்வாசியாவது பொருள் புரிகிறது. இது காலத்தின் கோலம் அல்லது அலங்கோலம்.
அதென்னவோ தெரியவில்லை, முத்தப் பருவத்துப் பாடல்களே நான் அதிகமும் எடுத்தாள நேர்கிறது. முத்து பிறக்கும் இடங்கள் பற்றி, முத்தப் பருவத்துப் பாடல் இது.
‘சங்கில், கழையில், கழையினில், செஞ்சாலியினும், இப்பியின்,
மீனில், தடியில், கிரியில், கரிமருப்பில், தடந்தாமரையின்
ஆவெயிற்றின்
மங்குல், கதலி, கழுகு, கற்பின் மடவார் களத்தின், குருகின்
அந்தின், மதியின், அரவில், கிடங்கர் என வகுத்த
இருபான் தரு முத்தம்
தங்கட்கு ஒழிவும் மறுவும் இழிதகையும் அளவும் மாற்றும் உள
சண்முகவ நீ தரும் முத்தம் தனக்கு முனம் கூறியது
இலதாம்
வங்கத் தடம் சேர் மருதவரை மணியே முத்தம் தருகவே
வல்லி இரண்டு படர் நிழலின் வாழ்வே முத்தம்
தருகவே’
உரையாசிரியர் எழுதுகிறார் : வலம்புரிச் சங்கு, மூங்கில், கரும்பு, செந்தெல், இப்பி(சிப்பி), மீன், வயல், மலை, யானை மருப்பு(தந்தம்), தாமரை மலர், உழும் கலப்பையின் கொழு நுனி, மேகம், வாழை, கமுகு, கற்புடை மாதர் கழுத்து, குருகு, சங்கு, நிலவு, பாம்பு, கடல் எனும் இருபது இடங்களில் தோன்றும் எனக் கூறப் பெற்ற முத்தம்களுக்கு குறைவும், களங்கமும், இழிவும், அளவும், விலையும் உள்ளன. ஆயினும் அலைவீசும் பொய்கைகள் நிறைந்த மருதமலையில் விளங்கும் மணியே, ஆறுமுகப் பெருமானே, நீ தரும் முத்தத்திற்கு முற்கூறிய குற்றங்கள் இல்லை. தெய்வானை, வள்ளி எனும் இரு கொடிகள் படரும் தோள்களை உடைய அருளின் உறைவிடமே, முத்தம் தருகவே!
இதில் உரையாசிரியரின் சுவையான குறிப்பு ஒன்றுளது : முத்துக்கள் தோன்றுமிடம் பதின்மூன்று என்று திருவிளையாடற் புராணம் கூறும். சங்கம், மைக்கரு முகில், வேய்(மூங்கில்), பாம்பின் மத்தகம், பன்றிக் கோடு, மிக்க வெண்சாலி(நெல்), இப்பி(சிப்பி), மீன் தலை, வேழக் கன்னல், கரிமருப்பு, ஐவாய் மான்கை, கற்புடை மடவார் கண்டம், இருசிறைக் கொக்கின் கண்டம் என்ப. மாணிக்கம் விற்ற படலம், பாடல் 52-53.
கோவை மாநகரின் பெருமையான இறைத்தலங்களில் ஒன்று மருதமலை. மருதமலை என்பதுவே மருதாசலம். பாம்பாட்டிச் சித்தர் வாழ்ந்து அடங்கிய இடம். எம்.எம்.ஏ.சின்னப்பத் தேவரின் திரைப்படம் ஒன்றில், மதுரை சோமசுந்தரம் பாடிய ‘மருதமலை மாமணியே முருகையா’ எனும் பாடல் இத்தலத்தின் புகழை ஏற்றம் பெறச் செய்தது. சப்பாணிப் பருவத்தில் புலவர் பாடும் ‘சகம் முழுதும் இசை புகலும் மருதவரை முருகனே சப்பாணி கொட்டி அருளே’ எனும் விதத்தில் கேட்பர் யாவரும் இன்றும் சப்பாணி கொட்டும் பாடல் அது.
முத்துக்களின் நிறம் எது நண்பர்களே! மனக் கண்ணில் உடனே தோன்றுவது வெள்ளை நிறம். ஆனால் இந்த பிள்ளைத் தமிழ் மூலம் ஒவ்வொரு முத்தின் நிறம் என்ன என்பதை முதன் முதலாய் நான் தெரிந்து கொண்டேன்.
‘கோல மருப்பின் உயிர்த்த முத்தம் குருதி நிறத்த, செஞ்
சாலிக் குலைவீழ் முத்தம் அரி நிறத்த, கொடுநா அரவச்
தருமுத்தம்
நீல நிறத்த, முடங்கன் முத்தம் ஆலி நிறத்த, வேழமுத்தம்
நிரைசேர் மாடப்புறாவின் முட்டை நிறத்த, வானிற்
பாடர்மேக
சாலம் குவித்த முத்தம் ஒளிர் சவிதான் நிறத்த, என
மேலோர் சாற்ற அறிந்தார், நினது முத்தம் தனக்கு
ஈண்டு உவமை வகுத்தறியார்,
மாலும் மயனும் புகழ் மருதவரை வேள் முத்தம் தருகவே
வல்லி இரண்டு படர் நிழலின் வாழ்வே முத்தம்
தருகவே’
என்பது பாடல்.
உரையாசிரியரின் விளக்க உரை : திருமாலும், நான்முகனும் போற்றும் மருதமலைச் செவ்வேளே! அழகிய யானையின் கொம்புகள் ஈன்ற முத்தம் குருதி நிறம் வாய்ந்தது; செந்நெல் கதிரில் விளைந்த முத்தம் பொன்னிறத்தது; கொடுமையான நாவினைக் கொண்ட நாகம் உமிழும் முத்தம் நீல நிறத்தது; மூங்கிலில் பிறந்த முத்தம் வெண்ணிறங் கொண்டது; கரும்பில் தோன்றும் முத்தம் கூட்டமாக வாழும் மாடப்புறாவின் முட்டை நிறத்தது; வானில்
படரும் மேகக் கூட்டம் சொரிந்த முத்தம் ஒளிவீசும் கதிரவனது நிறம் கொண்டது எனப் பெரியோர் தம் முன்னோர் சொல்ல அறிந்தனர்; ஆயினும் நின் முத்தத்துக்கு இங்கு உவமை வகுத்துச் சொல்ல அறியாது நின்றனர்; அத்தகைய முத்தம் தந்தருள்வாயாக! தெய்வயானை, வள்ளி எனும் இரு கொடிகள் படரும் தோள்களையுடைய அருளின் உறைவிடமே! முத்தம் தருவாயாக!
பெரியோர்கள், தம் முன்னோர் சொல்ல அறிந்தனர் எனும் கூற்றுக்குச் சான்றாக, உரையாசிரியர் இரண்டு பாடல்களை மேற்கோள் காட்டுகின்றனர்.
‘மாட வெண் புறவின் முட்டை வடிவெனத் திரண்ட பேழ்வாய்
கோடு கான் முத்தம் வெள்ளை நிறத்தன கொண்மூ முத்தம்
நீரு செம் பரிதி யன்ன நிறத்தது கிளைமுத்து ஆலிப்
பீருசால் நிறத்த நாவின் பெருமுத்தம் நீலத்தாமால்’
– திருவிளையாடற்புராணம், மாணிக்கம் விற்றபடலம், பாடல் எண் : 55
‘ஏனம்ம ஆரஞ் சோரி யீர்ஞ்சுவைச் சாலி முத்தம்
ஆனது பசுமைத் தாகும் பாதிரி யனைய தாகும்
மீனது தரளம் வேழம் இரண்டினும் விளையு முத்தம்
தானது பொன்னின் சோதி தெய்வதஞ் சாற்றக் கேண்மின்’
மேற்படி, பாடல் எண் 56
உண்மையில் முத்துக்களில் இத்தனை வகைகள், நிறங்கள், பிறப்பிடங்கள் இருந்தன என்பது, எமக்கு வியப்பூட்டும் தகவல். இவை விஞ்ஞான பூர்வமாக நம்பத்தகுந்தனவா, நிரூபிக்கப்பட்டனவா என்பது பற்றி எனக்குத் தகவல் இல்லை.
(தொடரும்)
அனைத்து பனுவல் போற்றுதும் கட்டுரைகளையும் படிக்க:பனுவல் போற்றுதும்
பகிர்ந்துகொள்ள,அச்செடுக்க
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
About S i Sulthan
Phone: 9443182309
Nellai Eruvadi
நல்ல பதிவு வாழ்த்துக்கள்!
அருமை ஐயா.
மிக்க நன்றி.