புளிக்கும் அப்பழம்

நாஞ்சில் நாடன்
உலக நாடுகள் காணுதல் என்றால்
அருவி , புல்வெளி , கானகம் , வாகனம் ,
ஓவியம் , சிற்பம் ,
படகுச் சவாரி , பனிச்சறுக்கு ,
வெந்நீர் ஊற்று , உறங்கும் எரிமலை ,
வண்ணக் கடற்புறம் , கவினுறு தீவு ,
வடிவும் வனப்பும் கொண்ட கைகளின்
அமுக்குதல் , நீவுதல் , தடவுதல் , தட்டுதல் ,
என்மனார் புலவ.
 ….
எவ்வகை மதுவும் முகர்ந்து பருகி
வியர்த்து பிரித்து மகிழ்தலில்
விருப்பற்றுப் போனது
கம்பும் , சோளமும் ,ராகியும் உண்ட
எம் குடல்.
தாய்லாந்து ,  மெக்ஸிகன் , இத்தாலியன் பக்குவம்
செரித்துக் கொள்வதில் சிக்கல் இருக்கும்.
 …
மின்னஞ்சல் மட்டும் அனுப்பக் கற்ற
வறியற்கு எதற்கு
நாய்பெற்ற தெங்கம் பழம் போல
அதிநுண் கணிணி
 …
வசந்தகுமாரி சுரைய்யா செவிப்பட
கைவசம் இருப்பதே நல்லது
தூரதேசம் வாழும் உமக்கும்
வாழ்க்கை என்பது நனைத்துச் சுமப்பது
அன்பு சொரிந்து அளிக்கும் பரிசில்
வாழ்நாளுக்கும் கூனுறச் செய்யும்
வளர இனிமேல் வாய்ப்பே இல்லை
பெருத்தல் என்பதும் தற்கொலை முயற்சி
இருக்கும் ஆடை கிழிந்து போம்வரை
இருக்கப்போவதும் நிச்சயமில்லை
அழகுகள் கண்ணுற ஆசை உண்டு
எம் தேசத்து ஆடவர் பெண்டிர்
அழகும் மணமும் அற்றவர் அல்ல.
 ..
வலிய அரங்கில் சொற் பெருக்காற்றி
சட்டியில் இலாத எதையான் விளம்ப
வற்றுப் பாலாய்ப் போனதெம் ஆற்றலை
எந்தத் தேசம் பெருக்கி எடுக்கும்
 ….
எம் பண்பாட்டுப் பண்டம் யாவும்
காலாவதிக் கெடு தாண்டி வாழ்பவை
உம்மில் எவரும் இங்கே போந்தால்
வதிய வீடு செல்ல வாகனம்
கொள்ளைச் செல்வம் எதுவுமிலாது
எதிர்விருந் தெங்கனம் சாத்தியமாகும்
பெற்றன திருப்ப இயலாத
குனிவு சுமந்த எஞ்சிய நாட்கள்
எண்ணவும் கொடிது.
 ….
எமது தேசம் மிக அழுக்கானது
வறியவர் மக்கள் ,
ஆறுகள் சாக்கடை ,
ஏரிகள் வறண்டவை ,
குண்டும் குழியும் சாலைகள் என்பார்.
குப்பை , தூசி , இரைச்சல்
புழங்கிச் சீலித்தவர் யாம்.
குடிநீர்க் குழாயில் கழிவு நீர்
ஆண்டவனுக்கே அதில் ஆறாட்டு
நலத்தின் விலை யானை குதிரை.
 …
அழகு , ரசனை , களிப்பு என்பதில்
உம் பார்வையும் எம் பார்வையும்
அறுவழிச் சாலையும் ஒற்றையடிப் பாதையும்.
எமது போதையில் உம் குடல் வெந்துபோம்
தீவனமும் உடன் சீரணம் ஆகா
எமது நதிகள் இல்லி தூர்ந்தவை
மலைகள் யாவும் களவு போவன
காடுகள் என்பன கனவுக் காட்சி
கடற்கரை எங்கும் நகரக் கழிவு
தலைவர் அன்னவர் தாங்கொணாத் தொழுநோய்.
 …
பார்வை பறிந்த பாவியர் எமக்கு
தீயுற விழித்தல் தெரியாதல்லவா.
 …
மதங்கள் மொழிகள் இனங்கள் பற்பல
சாதிகள் சாமிகள் எண்ணித் தீரா
கயமை எனுமோர் அரசியல் வாணிபம்
எமக்குள் இனக்கொலை வன்புணர்
தீயிடல் தன்படை வெட்டிச் சாதல்
 …
கிட்டாதவற்றை வெட்டனெ மறக்கவும்
எட்டாத பழம் புளிக்கும் என்பதும்
யாயும் ஞாயும் மறந்தவர் இல்லை.
எனினும் என்செய
தாயர் தேசம் தந்தையர் நாடு
மறக்கவோ , மாற்றாவோ , பெயர்க்கவோ இயலா
எம் தேசத்தின்
ஆழமும் நீளமும் அகலமும்
அளக்கக் காலம் வேண்டும்
அளந்த பின்பு ஓய்வாய் மண்ணில்
சாயவும் வேண்டும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தட்டச்சு : பாலா. சிங்கப்பூர்
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to புளிக்கும் அப்பழம்

  1. B.AMBALAVANAN சொல்கிறார்:

    THIS LONG POEM IS ONE OF THE GEMS OF TAMIL MODERN POETRY.

  2. எமது நதிகள் இல்லி தூர்ந்தவை
    மலைகள் யாவும் களவு போவன
    காடுகள் என்பன கனவுக் காட்சி
    கடற்கரை எங்கும் நகரக் கழிவு
    -நாஞ்சில்நாடன்.
    இயற்கை மீதான நாஞ்சிலின் காதல் இந்தக் கவிதை முழுவதும் பெருகி ஓடுகிறது.

  3. rathnavel சொல்கிறார்:

    அருமை ஐயா.
    நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s