சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 4.1

நாஞ்சில் நாடன்
முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் 
சொல்வனம் http://solvanam.com/?p=16510
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
தாய்த் தெய்வம் அம்மன் என்றும் அம்மை என்றுமே விளிக்கப்பட்ட காலம், அவள் அம்பாள் ஆக்கப் படாத காம். குமரகுருபரரின் மற்றுமொரு கீர்த்தி பெற்ற நூல் இது.
‘தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி மீனாட்சியைப் பாடுவது கடவுள் வாழ்த்துப் பகுதி, காப்புப் பருவத்தில்-
பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற
பச்சைப் பசுங்கொண்டலே’
என்று திருமாலைப் பாடும் சுவை கொண்டது. தமிழில் பிறமொழிக் கலப்பு பற்றி ஆராயப் புகும் மாணவர்கள், 17-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாடலில் ‘சலாம்’ எனும் சொல் ஆளப்படுவதைக் குறித்துக் கொள்வது நல்லது. [குறவர் மகட்குச் சலாமிட ஏக்கரு குமரனை’ என்பதந்த வரி.
முத்துக் குமாரசாமிப் பிள்ளைத் தமிழில் இளங்குமரனைப் பாடியவர், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் மீனாட்சியைக் குழந்தையாக்கிப் பாடுகிறார்.
செங்கீரைப் பருவத்துப் பாடல் ஒன்று, ஈண்டும் குமரகுருபரனின் தமிழ் மணம் பரப்பி நிற்கும்.
பரிமளம் ஊறிய உச்சியின் முச்சி
பதிந்து ஆடச் சுடர்பொன்
பட்டமுடன் சிருசுட்டியும் வெயிலொடு
பனிவெண் நிலவு ஆடத்
திருநுதல் மீது எழு குறு வெயர்பு ஆடத்
தெய்வ மணங் கமழும்
திருமேனியின் அமுழு மரகத ஒளி எண்
திக்கும் விரிந்து ஆடக்
கருவிளை நாலும் குதம்பை ததும்பிய
காது தழைந்து ஆடக்
கதிர்வெண் முறுவல் அரும்ப மலர்ந்திடு
கமலத் திருமுக நின்
அருள்விழி யொடும் வளர் கருணை பொழிந்திட
ஆடுக செங்கீரை
அவனி தழைந்திட மவுலி புனைந்தவள்
ஆடுக செங்கீரை
பக்தி இலக்கியம் என்றபோதும், குமரகுருபரனின் தமிழ் பரவசப்படுத்துகின்ற்றது. பொருள் புரியும் வசதிக்காகப் பாடலைப் பிரித்து எழுதினேன் . சேர்த்து வாசிக்கும்போது மொழியின் இசை நயம் புலனாகும்.
முத்தப் பருவத்தில் இருந்து ஒரு பாடல். அதென்னவோ அதிக மேற்கோள் பாடல்கள் முத்தப் பருவத்தில் இருந்தே எடுத்து ஈண்டு ஆளப்படுகின்றன.
கோடும் குவடும் பொரு தரங்கக்
குமரித் துறையில் படு முத்தும்
கொற்கைத் துறையில் துறை வாணர்
குளிக்கும் சலாபக் குவான் முத்தும்
ஆடும் பெருந்தண் துறைப் பொருநை
ஆற்றில் படு தென் நிலா முத்தும்
வாடும் கொடிநுண் நுசுப்பு ஒசிய
மடவ மகளிர் உடன் ஆடும்
வண்டல் துறைக்கு வைத்து நெய்த்து
மணம் தாழ் நறுமென் புகைப்படலம்
மூடும் குழலாய் னின் கனிவாய்
முத்தம் தருக்க முத்தமே
முக்கண் சுடருக்கு விருந்திடும் மும்
முலையாய் முத்தம் தருகவே
இப்பாடலின் நயம், முத்துக்கள் பிறக்கும் இடங்கள் மேலும் முக்கண்ணனுக்கு விருந்தளிக்கும் மூன்று கொங்கைகளைக் கொண்ட மதுரை மீனாட்சி அம்மையின் முத்தத்தின் சிறப்பு. தமிழ்ச் சிறுகதைகளில் லா.ச.ரா.வும் புதுமைப்பித்தனும் பார்வதியின் மூன்று தனங்கள் பற்றிக் குறிப்பிட்டுச் செல்கின்றனர். கவி காளமேகம் உள்ளிட்ட பல புலவர்கள் பாடியும் உள்ளனர்.
குமரகுருபரர் பைந்தமிழால் மீனாட்சியம்மையைக் கொஞ்சுவதில் வாயூறி நிற்கலாம்.

1. தெய்வத் தமிழ்க் கூடல் தழையத் தழைத்தவள்
திருப்பவள முத்தம் அருளே
2. செந்நெல் படைப்பை மதுரைப்பதி புரப்பவள்
திருப்பவள முத்தம் அருளே
3. செங்கோல் திருத்திய முடிச் செழியர் கோமகள்
திருப்பவள முத்தம் அருளே
4. முரசு அதிர கடிநகர் மதுரையில் வளர்கிளி
முத்தம் அளித்து அருளே
என பற்பல கண்ணிகள்.
அதுபோல் வருகைப் பருவத்துச் சில கண்ணிகள் மாதிரிக்காக.

1. கஞ்சமும் செஞ்சோல தமிழ்க் கூடலும் கொண்ட
காமப் பூங்கொடி வருகவே
கற்பக அடவியில் கடம்ப அடவிப் பொலி
கயல்கண் நாயகி வருகவே
2. கயல்பாய் குரம்பு அணை பெரும்பணைத் தமிழ் மதுரை
காவலன் மகள் வருகவே
3. கடம்பட்ட சிறுகண் பெருங்கொலைய மழை இனம்
களிறு ஈன்ற பிடி வருகவே
4. மகரக் கருங்கண் செங்கனி வாய்
மடமான் கன்று வருகவே
5. மறுக்கும் குழல் கடு ஏந்தும் இள
வஞ்சிக் கொடி வருகவே
6. மருந்தே வருக பசுங் குதலை
மழலைக் கிளியே வருகவே
எந்தப் பருவத்தைச் சொல, எந்தப் பருவத்தை விட? அற்புதமான் தமிழ் குமார குருபரனின் தமிழ். கம்பனுக்கு இணையான மொழி ஆளுமை. வியக்க வைக்கும் பிள்ளைத் தமிழ் இது.
(தொடரும்)

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 4.1

  1. M.Murali சொல்கிறார்:

    புகைப்படம் அருமை –
    பக்தியும் தமிழுமாக
    உஷ்…
    மீனாக்ஷி உறங்குகிறாள்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s