சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 4

நாஞ்சில் நாடன்
பிள்ளைத் தமிழ்
பிள்ளைத் தமிழ் மிக முக்கியமானதோர் சிற்றிலக்கிய வகை. தமிழே பிள்ளையாக உருவெடுத்து வந்தாற்போல் கவிதைச் செழுமை உடைய நூற்கள் பல இந்த இலக்கிய வகையில் உண்டு. கடவுளை, ஞானியரை, அரசர்களை, குறுநில மன்னர்களைக் குழந்தையாகப் பாவித்துப் பாடும் இலக்கிய வகையே பிள்ளைத் தமிழ் ஆகும்.
கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் பாடிய ‘குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்’ தமிழின் முதல் பிள்ளைத் தமிழ் இலக்கியமாகக் கருதப்படும். எனினும் பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார் பாடல்களில் பிள்ளைத் தமிழ் இலக்கியத்தின் வேர்களைக் கண்டடைய இயலும். பேராசிரியர் கா. நாகராசு அவர்கள், கோவை சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர். “பிள்ளைத் தமிழ் இஅக்கியம்- ஓர் அறிமுகம்” என்று அருமையான ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். பல நூற்கள் ஆய்ந்து எழுதப்பட்ட கட்டுரை அது. 1895-ம் ஆண்டு வெளியான, வடவழி அருணாசலக் கவிராயர் பாடிய, “மருதாசலக் கடவுள் பிள்ளைத் தமிழ்” எனும் நூலுக்கு பேராசிரியர் கா. நாகராசு எழுதில்ய உரையில், மேற்சொன்ன கட்டுரையைக் காண இயலும்.
ஈண்டு வடவழி என்பது இன்றைய கோவையின் புறநகரில் இருக்கும் வடவள்ளி என்மனார் புலவ. பேராசிரியரின் அறிமுகக் கட்டுரை, பல புதிய தகவல்களைத் தருகிறது.
1. நச்சினார்க்கினியரது தொல்காப்பிய உரையில் பிள்ளைத் தமிழில் அமையும் பருவங்களைக் காண முடிகிறது.
2. கி.பி. 7-ம் நூற்றாண்டிலிருந்து தோன்றி வளர்ந்த பாட்டியல் இலக்கண நூல்களும் பிள்ளைத் தமிழுக்கு விரிவாக இலக்கணம் வகுத்துள்ளன.
3. பிள்ளைத் தமிழ், பிள்ளைக் கவி, பிள்ளைப் பாட்டு என்றும் கூறப்பெறும்.
4. பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானுக்கு மட்டும் பிள்ளைத் தமிழ் பாடும் மரபு இல்லை.
5. தமிழில் நூற்றுக்கணக்கான பிள்ளைத் தமிழ் நூல்கள் பாடப்பெற்றுள்ளன.
6. பிள்ளைத் தமிழின் காப்பும் பருவத்தில் முதற்பாடல் திருமாலுக்கு உரியது. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை படிய சேக்கிழார் பிள்ளைத் தமிழ், அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழ் இரண்டும் இதற்கு விதிவிலக்கு.
7. பொதுவாகப் பிள்ளைத் தமிழ் நூல்கள் ஆசிரிய விருத்தத்தாலேயே படப பெறுகின்றன. பன்னிரு பாட்டியல், ஆசிரிய விருத்தத்தோடு கட்டளைக் கலித்துறை, கலிவிருத்தம், பஃறோடை வெண்பா முதலிய யாப்பு வகைகளையும் பிள்ளைத் தமிழுக்கு உரியவை என எடுத்துரைக்கின்றது.
என்பன போன்று பல தகவல்களை அறிய முடிகின்றது.
பொதுவாகப் பிள்ளைத் தமிழ் இலக்கியங்கள் பத்துப் பருவங்கள் கொண்டவை. பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் என்பது கணக்கு. சில பிள்ளைத் தமிழ் நூல்கள் மாறுபட்டும் பாடப்பட்டுள்ளன. தமிழ்க் கவிதைக்கு யாரே வரம்பு கட்ட இயலும்?
ஆண்பால், பெண்பால் பிள்ளைத் தமிழுக்குப் பத்துப் பருவங்கள். காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி எனும் ஏழு பருவங்களும் இருபால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவானவை. ஆண்பால் பிள்ளைத் தமிழில் சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்பனவும் பெண்பால் பிள்ளைத் தமிழில் அம்மானை, ஊசல, நீராடல் என்பனவும் இறுதியில் பாடப் பெரும் பருவங்களாம். சில பிள்ளைத் தமிழ் இலக்கியங்கள் பன்னிரண்டு பருவங்களையும் பருவத்துக்கு ஒரு பாடல் முதல் பத்து பாடல்கள் வரை பாடப்பட்டுள்ளன.
ஆண்டாள் பிள்ளைத் தமிழில் மட்டுமே இருபாலருக்கும் சமமான ஏழு பருவங்களுடன் சிற்றில் பருவம், சிறு சோற்றுப் பதினோரு பருவங்கள் உள்ளன என்கிறார் பேராசிரியர் கா. நாகராசு. பேராசிரியர், அறிமுகக் கட்டுரையில் இருந்து ஒரு பட்டியல் தயாரித்தேன். அது கீழ்க்கண்டவாறு அமையும்.
1. குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் – ஒட்டக்கூத்தர்
2. முத்துக்குமாரசாமிப் பிள்ளைத் தமிழ் – குமார குருபரர்.
3. மழ்த்ளுறை மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் – குமார குருபரர்.
4. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ் – பகழிக் கூத்தர்
5. திருக் கதிர்காமப் பிள்ளைத் தமிழ் – கருனாலயப் பாண்டியர்
6. தில்லைச் சிவகாமி அம்மை பிள்ளைத் தமிழ் – இராம. சொக்கலிங்கம்
7. தில்லைச் சிவகாமி அம்மை பிள்ளைத் தமிழ்- கிருஷ்ணையர்
8. ஆண்டாள் பிள்ளைத் தமிழ் – ?
9. திருப்பெருந்துறைச் சிவயோக நாயகி பிள்ளைத் தமிழ் – ?
10. aதிருஞான சம்பந்தர் பிள்ளைத் தமிழ் – வ.சு. செங்கல்வராய பிள்ளை
11. பழனி பிள்ளைத் தமிழ் – விசயகிரி வேலச் சின்னோவையன்
12. கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ் – சிவஞான முனிவர்
13. சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத் தமிழ் – படிக்காசுப் புலவர்
14. மருதாசலக் கடவுள் பிள்ளைத் தமிழ் – வடவழி அருணாசலக் கவிராயர்
15. மகர நெடுங்குழைக் காதர் பிள்ளைத் தமிழ் – ?
16. சேக்கிழார் பிள்ளைத் தமிழ் – மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
17. அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழ் – மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
18. நால்வர் பிள்ளைத் தமிழ் – இராம. சொ. சொக்கலிங்கச் செட்டியார்
19. திருப்பெருணை நல்லூர்த் திருவேண்ணூற்றுமை பிள்ளைத் தமிழ் – மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
20. திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ் – மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
21. உறையூர்க் காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ்- மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
22. திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத் தமிழ் – மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
23. திருவிடைக் கழிமுருகன் பிள்ளைத் தமிழ் – மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
24. திருக்குடந்தை மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ் – மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
25. திருநாவுக்கரசர் பிள்ளைத் தமிழ் – மு.கோ. இராமன்
மேற்சொன்ன பட்டிகையில் இருந்து தெரிய வருவது, குமரகுருபரர் இரண்டு பிள்ளைத் தமிழ் நூல்களும், தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் குருவான மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை எட்டு பிள்ளைத் தமிழ் நூல்களும் இயற்றியுள்ளார் என்பது. ஆர்வமுடையவர், இந்தப் பட்டியலை வளர்த்தெடுத்துப் பூரணப் படுத்தலாம். படிக்கிறோமோ இல்லையோ, நாய் கையில் கிடைத்த முழுத் தேங்காய் போல உருட்டிக் கொண்டாவது இருக்கலாம் அல்லவா?
இனி, சில பிள்ளைத் தமிழ் நூல்களைப் பற்றி, எனக்குத் தெரிந்த விதத்தில், நான் ரசித்த விதத்தில் பார்க்கலாம்.
முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்.
தென்பாணி நாட்டில், ஸ்ரீ வைகுண்டத்தில், சைவ வேளாள மரபில் பிறந்தவர் குமரகுருபரர். 17-ம் நூற்றானு என்று அறிகிறோம். திருமலை நாயக்கர் அவியல் இருந்து பெருமை சேர்த்திருக்கிறார். காசியில் சில காலம் வாழ்ந்திருக்கிறார்.
மாபெரும் புலவர் என்பது அவர் பாடி வைத்து விட்டுப் போன நூல்களும் அவர் கையாண்ட தமிழும் சாட்சியாக இன்று நிரூபிக்கும். இவர் பாதய நூல்கள் முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், திருச்செந்தூர் முருகன் மீது பாடிய கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம் நீதி நெறி விளக்கம், திருவாரூர் தியாகராசப் பெருமான் மீது பாடிய திருவாரூர் நான்மணி மாலை, சிதம்பரம் நடராசப் பெருமான் மீது இயற்றிய சிதம்பர மும்மணிக் கோவை, சிதம்பரச் செய்யுட் கோவை, சிவகாமியம்மை இரட்டை மணிமாலை, கான உபதேசம் செய்த தமது ஆசிரியர் மாசிலாமணி தேசிகர் மீது பாடிய பண்டார மும்மணிக் கோவை, காசி விசுவநாதர் மீது படிய காசிக் கலம்பகம், கலைமகள் மீது பாடிய சகலகலாவல்லி மாலை என்பன இவரது நூல்கள்.
குமரகுருபரரின் மொத்த நூல்களும் ஸ்ரீவைகுண்டத்து சைவ மடம் வெளியிட்டிருப்பதாக அறிகிறேன். இந்த இடத்தில் ஒரு கோரிக்கை வைக்க ஆசைதான். ஆனால் என் சக எழுத்தாளர் ஒருவரின் பாணியாக போய் விடும் அது என்பதால் தவிர்க்கிறேன்.
வைத்தீஸ்வரன்கோயில் என்று அழைக்கப்பெறும் புள்ளிருக்கும் வேலூரில் – புள்ளிருக்கும் வேலூர், புள்ளிருக்கும் வேளூர், இரண்டில் எது சரி?_ கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் மீது பாடியது முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ். முழுக்க முழுக்க பக்தி இலக்கியம் இது. உருகியுருகித் தமிழ் பாடுகிறார் குமரகுருபரர்.
மதியும் நதியும் அரவும் விரவு
மவுலி ஒருவன் முக்கணும்
வசை முகமும் அகமும் மலர
மழலை ஒழுகு சொற் சொலும்
புதல்வ, இமய முதல்வி அருள்செய்
புனித, அமரர் கொற்றவன்
புதல்வ தழுவும் கொழுந, குறவர்
சிறுமி குடிகொள் பொற்புய,
கதிரும் மதியும் ஒளிர ஒளிரும்
ஒளிய, அறிய கற்பகக்
கனியின் இனிய உருவ, பருவ
மழையின் உதவு கைத்தல,
முதிரும் அறிவில் அறிஞர் உணரும்
முதல்வ, தருக முத்தமே
முனிவர் பரவு பருதி புரியின்
முருக தருக முத்தமே
பிறைச் சந்திரனும் கங்கையும் நாகமும் அணிந்த திருமுடி சூடியவனின் முக்கண்ணும், தாமரை அனைய முகமும் அகமும் மலரும் படியாக மழலை பேசும் புதல்வனே, இமைய முதல்வி, அருள் செய்யும் புனிதனே, தேவர்களின் ஒற்றவன் இந்திரன் புதல்வி தேவானையைத் தழுவும் கொழுநனே, குறவர் சிறுமி வள்ளி குடிகொள்ளும் வெண் தோள்கள் உடையவனே, செங்கதிரும் தண்மதியும் ஒளிர ஒளிரும் ஒளியுடையவனே, அறிய கற்பகக் கனியின் இனிய உருவத்தானே, பருவ மழைபோல் பலன் எதிர்பாராது வழங்கும் கைத்தலம் உடையவனே, முதிர்ந்த அறிவுடைய பேரறிஞர்களும் அறிந்து கொள்ள விரும்பும் முதல்வனே, முத்தம் தருகவே! முனிவர்கள் வழிபடும் பருதிபுரி எழுந்தருளிய முருகனே, முத்தம் தருகவே!
வருகைப் பருவத்தில் ஒரு பாடல்-
நஞ்சில் தோய்த்துக் கொலை தீற்றும்
நயன வேலும், கரும்பு உருவ
நாமச் சிலையும், அகல அல்குல்
ஒரு பொன் தேரும், இகல கடந்து
வஞ்சிக் கொடி நுண் இடை சாய்த்து
மதர்த்துக் கழித்த மால் களிறும்
மற்றும் படைகள் பற்பலவும்
வகுத்துக் கொண்டு, மடல் அவிழ்ந்த
கஞ்சத் தவிசில் திரு அன்னார்
கடலம் தானைக் கை நிமிரக்
காமன் படைவீடு எனப் பொலியும்
காட்சியானும் அப்பெயர் இட்டு
அஞ்சால் தமிழோர் புகழ் வேளூர்க்கு
அரசே வருக வருகவே
அருள் ஆனந்தக் கடல் பிறந்த
அமுதே வருக வருகவே
உரையானது பின்வருமாறு அமையும்-
நஞ்சில் தோய்த்த கொலைத் தன்மை கொண்ட நயன வேலும் கரும்பு உருவமும் நாமமும் கொண்ட வில்லும் பொற்தேரை ஏளன நகையாடுகின்ற அகன்ற அல்குலும் கொண்டு பகை வென்று வஞ்சிக் கொடி போன்ற நுண் இடை சாய்த்து, மதர்த்துக் கழித்து மது மயக்கம் தரும் கொங்கைகளையும் மற்றும் படைகள் பற்பலவும் வகுத்துக் கொண்டு மடல் அவிழ்ந்த தாமரை பீடத்தில் வீற்றிருக்கும் செந்திரு மகளைப் போன்று பொலியும் பெண்கள் கடல் போன்றும் காமன் படைவீடு போன்றும் காட்சியை அம்சொல் தமிழர்கள் காம வேளின் படை வீடு என்று அழைத்தனர். அண்டப் பெயர் பெற்ற புகழ் வேளூருக்கு அரசே வருக வருகவே! அருள் ஆனந்தக் கடல் பிறந்த அமுதே வருக வருகவே!
பெண் குழந்தைகள் சிற்றில் கட்டி விளையாடுவார்கள். துடுக்கான ஆண் குழந்தைகள், அந்தச் சிற்றிளைக் காலால் ஏத்திச் சிதைத்துக் குறும்பு செய்வார்கள். சிற்றில் பருவம் என்பது அந்தப் பருவம். எம் சிற்றில் சிதையாதே எனப் பெண் குழந்தைகள், இறைஞ்சுவது போன்ற பாடல்கள் இப்பருவத்தினுள் அமையும்.
சிற்றில் பருவத்துப் பாடல் ஒன்று.
குறு மேன்னடையும் நெடு வெணிலாக்
கோட்டு நகையும் வாள் தடங்கண்
குளிர முகந்து உண்டு ஒளிர் சுட்டிக்
குஞ்சி திருத்தி நறும் குதலை
முறுகு நரைதேன் கனி பவள
முத்துண்டு உச்சி மோந்து கொண்டு உன்
முகமும் துடைத்து விளையாட
முன்றில் புறத்துப் பொன் ததும்பி
இறுகும் புளகக் கும்ப முலை
எம்பிராட்டி விடுத்தது மற்று
இளையார் மறுக மறுகுதொரும்
இடுக்கண் செயற்கோ எந்தாய் நின்
சிறுகிண் கிணிச் செஞ்சீறடியால்
சிரியேம் சிற்றில் சிதையேலே!
செந்நெற் பழனப் புள்ளூரா
சிரியேம் சிற்றில் சிதையேலே!
இந்தக் கவிதையின் எதுகைகளையும் மோனைகளையும் கவனித்தால் குமரகுருபரரின் தமிழ் ஆட்சி புலனாகும். முருகா, சிறு பெண்களாகிய யாம் கட்டி விளையாடும் சிற்றிலைக் காலால் சிதைத்துத் துன்புறுத்தாதே என்பதுதான் செய்தி. என்றாலும் அதற்குள் இத்தனை தமிழ் விளையாட்டு, கவி ஆளுமை செல்வாக்குடன் செயல்படுகிறது. சுருக்கமான பொருள் பின்வருமாறு அமையும்.
குறுமென்னடையும் நெடு வெண்ணிலாவை ஒத்த நகையும் உடைய உன்னுடைய அழகை, வாள் போன்ற கண்கள் குளிர்ச்சி அடையும் வண்ணம் அள்ளி உண்டு, ஒளி வீசும் நெற்றிச் சுட்டி அணிந்த முடி திருத்தி, அழகிய மழலை பேசும் தேன் போன்ற பவள இதழ்களில் முத்தம் இட்டு, உச்சி மோந்து, உன் முகமும் துடைத்து நிமல் படர்ந்து இறுகிய புகைக் கும்ப முளை எம்பிராட்டியாகிற உன் தாய், விளையாட உன்னை முற்றத்தின் புறத்தே அனுப்பியது என் போன்ற இலையார் வருந்தும்படி தெருத்தேருவாகச் சென்று இடுக்கண் செய்தற்கோ? எந்தாய், உன் சிறு கிண்கிணிச் செஞ்சீறடியால் சிருமயராகிய எம் சிற்றில் சிதையாதே! செந்நெல் வயல சூழ்ந்த புள்ளூரா, அறியேம் சிற்றில் சிதையேலே! என்று இறைஞ்சும்படியான பாவனை. இதில் குமரகுருபரர் சிருமிகளாக இருந்து முருகனை இறைஞ்சும் பாவம்.
கானக் குறப்பெண் குடியிருந்த
கன்னிப் புனத்துத் தினை மாவும்
கமழ்தேன் தெளிவும் உண்டு சுவை
கண்டாய் என்றேம், அதுவல்லால்
மீளத் தடங்கண் அவள் பிச்சில்
மிசைந்திட்டதுவும் நசை மிக்கு
விரைந்தீம் குமுதத்து அமுதடிகள்
விழுந்தாடியதும் விண்டோமோ
என்று சிறியர் கெஞ்சுகின்றனர்.
கானக் குறமகள் வள்ளி குடி இருந்த கன்னிப் புனதுத் தினைமாவும் கமழ்தேன் தெளிவும் உண்டு சுவை கண்டாய் என்று சொன்னோம், உண்மைதான். அதுவல்லாமல், மீன் போன்ற பெரிய கண்களை உடைய வள்ளியின் எச்சில் தேனும் தினைமாவும் உண்டதையும், அவளது குமுதமலர் போன்ற வாய் எச்சிலைப் பருகியதையும் சொன்னேமா? எனவே சிரியேம் சிற்றில் சிதையேலே என்று இறைஞ்சும் பாடல்.
மிச்சில் எனில் மிச்சம் என்றும் பொருள். எச்சில் என்றும் பொருள். குமுதம் எனில் ஈண்டு ஆம்பல். ஆம்பல் மலரின் அமர்ந்த வாசனை இளம் பெண்களின் வாய் மனத்துக்கு ஒப்புமை. மிசைந்து எனில் உண்பது. ஆனால் தீம குமுதத்து அமுதத்தில் விருந்தாடுகிறான் முருகன். அதை நாங்கள் சொன்னோமா, பிறகேன் எங்கள் சிற்றில் சிதைக்கிறாய் எனும் மென் கோபமும் கெஞ்சலுடன் தொனிக்கும் அற்புதப் பாடல் இது.
குமரகுருபரரின் மொழியாளுமையின் உச்சம் இந்தப் பிள்ளைத் தமிழ்.
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
தொடர்ந்து கட்டுரையை படிக்க
சொல்வனம்: http://solvanam.com/?p=17619
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s