நாஞ்சில் மகள் திருமணம்-ஜெயமோகன்

ஜெயமோகன்
நன்றி: http://www.jeyamohan.in/?p=22434
நவம்பர் பன்னிரண்டு பதிமூன்றாம் தேதிகளில் நாஞ்சில்நாடனின் மகள் சங்கீதாவின் திருமணம். சங்கீதா ஒரு மருத்துவர் மயக்கவியல் நிபுணர். மணமகனும் மருத்துவர்தான். கிட்டத்தட்ட ஓர் இலக்கியவிழா என்றே சொல்லலாம். நஞ்சில்நாடன் எல்லாருக்கும் வேண்டியவர். எல்லாத் தரப்புக்கும் நெருக்கமானவர். ஆகவே எழுத்தாளர்கூட்டம்.
12 ஆம்தேதி காலையிலேயே என் வீட்டுக்கு யுவன் சந்திரசேகர் வந்துவிட்டான். விஜயராகவன் ஈரோட்டில் இருந்து வந்தார். அவர்களுடன் என் மகனும் சேர்ந்து பறக்கைக்கும் வட்டக்கோட்டைக்கும் சென்று வந்தார்கள். பதினொரு மணிக்கு தண்டபாணி வந்தார். அதன்பின்னர் நண்பர்கள் பலர்
12 ஆம்தேதி மாலை வரவேற்பு. நெடுநாட்களுக்குப்பின் பல நண்பர்களைப்பார்த்தேன். சு.வேணுகோபாலுக்கு அந்த அளவுக்கு நரை வந்திருப்பது வருத்தமாக இருந்தது. சூத்ரதாரி [எம்.கோபாலகிருஷ்ணன்] யைக் கொஞ்சம் இடைவேளைக்குப்பின் கொஞ்சம் குண்டாகப் பார்க்க முடிந்தது. சுதீர் செந்தில் [உயிரெழுத்து] வந்திருந்தார். வசந்தகுமார், க.மோகனரங்கன் வழக்கம்போல வந்து அமைதியாக இருந்தார்கள். சென்னையில் இருந்து சிறில் அலெக்ஸ் வந்திருந்தார். நானும் குழந்தைகளும் சிறில் அலெக்ஸும் விஜயராகவனும் ஒரு காரில் சென்றோம்.
பொதுவாக நல்லகூட்டம். என்ன சிக்கலென்றால் நாதஸ்வர தவில் ஓசைதான். நல்ல நாதஸ்வரம். ஆனால் ஒரு கூடத்துக்குள் ஒலிப்பெருக்கி வைத்து ஆளுயரப் பெட்டிகளின் வழியாகத் தவிலைக் கேட்பதென்பது சிரமமாக இருந்தது. அத்துடன் இன்று தவில் மிகமிக மாறிவிட்டது. முன்பெல்லாம் தவில் மரத்தால் செய்யப்பட்டு வாரால் இழுத்துக்கட்டப்பட்டுக் கட்டையால் இறுக்கப்பட்டு வாசிக்கப்படும். கொஞ்சம் வாசித்ததும் ‘பதம்வரும்’ என்பார்கள். திம் திம் என மென்மையான ஒரு முழக்கம் உருவாகும். அதுவே தவிலின் இன்னிசை. தவில் நாதஸ்வரம் இரண்டுமே பெரிய திறந்தவெளிகளில் நெடுந்தூரம் கேட்பதற்காக வடிவமைக்கப்பட்டவை. ஆகவே அவற்றுக்கு ஒலிபெருக்கி தேவையில்லை
ஆனால் இன்று தவிலை உள்ளே இரும்பு வளையம் கொடுத்துச் செய்கிறார்கள். இழுத்துக்கட்ட திருகியையும் மரையையும் பயன்படுத்துகிறார்கள். எருமைத்தோல் போட்டு நன்றாக இறுக்கி வாசிக்கிறார்கள். ஓசை டண் டண் என செவிகளில் அறைகிறது. தலைக்குள் அதிர்கிறது. கூடவே ஒலி பெருக்கி வேறு. பலசமயம் அவர்களே மைக் கொண்டு வருகிறார்கள். தவிலுக்குமுன்னால் கூட மைக் தேவை என வித்வான் அடம்பிடிக்கிறார். நாதஸ்வரம் ஒலிக்கும் நேரத்தை விடப் பலமடங்கு தவிலை வாசிக்கிறார்கள்.
விளைவாக எல்லாத் திருமணங்களிலும் நாதஸ்வரம் அந்த இனிய நிகழ்ச்சியின் கொண்டாட்டநிலையை இல்லாமலாக்குகிறது. நட்பான உரையாடல் முகமன் எதற்குமே வாய்ப்பில்லாமல் செய்கிறது. நம் திருமண நிகழ்ச்சிகளில் தவில் நாதஸ்வரத்தைக் கட்டுப்படுத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது
அதிலும் நாஞ்சில்நாடனின் வீட்டுத்திருமணமென்பது பல துறைகளில் முக்கியமானவர்கள் வந்து நெடுங்காலம் கழித்து சந்தித்துப்பேசும் தருணம். ஒரு முகமன் வார்த்தையைக்கூடக் காதுக்குள் குனிந்து உரத்த குரலில் கூவவேண்டும் என்ற நிலை சரியாகப்படவில்லை.நான் பல மதிப்புக்குரிய எழுத்தாளர்களை, நண்பர்களை சந்தித்தாலும் போதிய அளவுக்கு மரியாதையாகப் பேசமுடிந்ததா என்பது ஐயமே. உதாரணமாக பாரதிமணி வந்திருந்தார். நாலைந்து சொற்களே பேசமுடிந்தது.
அன்றுமாலை சிறிலும் விஜயராகவனும் என் வீட்டில் தங்கினர். இரவு மூன்றுமணி வரை பேசிக்கொண்டிருந்தோம். 13 ஆம்தேதி காலை பத்துமணிக்குத் திருமணம். இன்னும் பெரிய கூட்டம். விருந்தினர் பட்டாளம். நானறிந்து இந்த அளவுக்கு எழுத்தாளர்கள் பங்கெடுத்த திருமணம் சமீபத்தில் இல்லை. அ.மார்க்ஸைப் பார்த்தேன், தூரத்தில். கெ.எம்.விஜயனுடன் கொஞ்சநேரம் பேசினேன். தங்கர் பச்சான், ஞான ராஜசேகரன், அழகம்பெருமாள் என திரைத்துறையாளர்கள். மணல்வீடு ஹரிகிருஷ்ணனை சந்தித்தேன். பெங்களூரில் இருந்து ஜடாயு வந்திருந்தார். பாவண்ணன், மகாலிங்கம் வந்திருந்தார்கள். கோவையில் இருந்து நிறையப்பேர் முந்தையநாளே வந்திருந்தார்கள். அருட்கவி ரமணன், சௌந்தர் அண்ணா, ரவீந்திரன், மரபின்மைந்தன் முத்தையா, விஜயா வேலாயுதம் என பலரை சந்தித்தேன்.
ஆ.மாதவன் வந்திருந்தார். நான் அவர் அருகேதான் இருந்தேன். அதிகம் பேசமுடியவில்லை. கடையை மூடிவிட்டதாகவும் மகள் வீட்டில் இருப்பதாகவும் சொன்னார். வண்ணதாசனைப் பார்த்தது மிக நிறைவூட்டும் அனுபவமாக இருந்தது. முந்தையநாள்தான் அறம் தொகுதி வாசித்து முடித்தேன் என்றார். கதைகளைப்பற்றி மிகுந்த உத்வேகத்துடன் பேசினார். கண்களில் ஈரத்துடன் அவர் என்னை அணைத்துக்கொண்டு ‘நல்லா இருய்யா…வேறென்ன சொல்ல’ என்று சொன்னபோது அது என் முன்னோடிகளின் ஆசி போலவே தோன்றியது. ஆம், நான் எழுதியிருக்கிறேன் என நினைத்துக்கொண்டேன்.
நாஞ்சில்நாடன் வீட்டுத் திருமணம் என்பதனாலேயே சாப்பாடு பற்றி மிகையான எதிர்பார்ப்பு சூழலில் நிலவியது. ஆனால் சாப்பாடு அந்த எதிர்பார்ப்பைவிட நன்றாக இருந்தது என்றே சொல்லவேண்டும். குறிப்பாக நெடுநாள் கழித்து, சீசன் அல்லாத சமயத்தில், கிடைத்த சக்கைப்பிரதமன். [பலாப்பழபாயசம்]. அன்னாசிபழ புளிசேரி போன்றவை. மிக விரிவான விருந்து.
விருந்து ஏற்பாடு நாஞ்சில்நாடனின் நெருங்கிய நண்பரான ஆரியபவன் அதிபர் ரமேஷ் அவர்களுடையது. ரமேஷ் ஈஷா ஜக்கி வாசுதேவின் பக்தர். நாகர்கோயிலில் இன்று மிகச்சிறப்பான உணவகம் அதுவே. அவரைத் தனியாகக் கூப்பிட்டுதான் பாராட்டவேண்டும்.
ஆனால் எந்தப் பதார்த்தம் எது என எவராவது விளக்கியிருக்கலாம் என்றார்கள் சாப்பிட்ட செந்தமிழ்நாட்டு மக்கள் சிலர். எஸ்.ஐ. சுல்தான் மனைவியுடனும் தம்பியுடனும் வந்திருந்தார். தம்பியும் நல்ல வாசகர் என்று தெரிந்துகொண்டேன். புளிசேரி என்பது நாஞ்சில்நாடனின் கதாநாயகிகளில் ஒருவர் அல்ல , ஒரு உணவுவகைதான் என தெரிந்துகொண்டதாகச் சொன்னார்.
நாஞ்சில்நாடன் களைத்து ஆனால் மகிழ்ந்த முகத்துடன் அழகாக இருந்தார். முந்தையநாள் தூங்கவே இல்லை என்றார். பெண்ணருகே நின்றுகொண்டிருக்கும்போது அவர் ஒரு கனவில் நிற்பது போல் இருந்தது. எப்போதுமே குழந்தைகள் குடும்பம் என இணைந்திருக்கும் அன்பான தந்தை அவர். அவரது மனநிலையை என்னால் ஊகிக்க முடிந்தது. நிறைந்த மனத்துக்குள் எந்தத் தகவலும் உள்ளே நுழைய இடமிருந்திருக்காது.
சங்கீதாவுக்கும் மணமகனுக்கும் வாழ்த்துக்கள் சொல்லித் திரும்பினோம். ஜடாயுவும் சிறிலும் கடலூர் சீனுவும் விஜயராகவனும் சென்னையில் இருந்து வந்த இளம்நண்பர் பிரகாஷும் வீட்டுக்கு வந்தார்கள். நீலகண்டன் அரவிந்தன் வீட்டுக்கு வந்தார். மாலை ஆறுமணி வரை பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவராகச் சென்றார்கள். நானே ஒரு திருமணத்தை நடத்தி முடித்த நிறைவை அடைந்தேன்.
மணமக்களுக்கு எல்லா நலன்களும் அருளப்படுவதாக.

 

எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to நாஞ்சில் மகள் திருமணம்-ஜெயமோகன்

  1. Naga Rajan சொல்கிறார்:

    Thank you

  2. rathnavel சொல்கிறார்:

    நல்ல விளக்கங்கள்.
    நாங்களும் கல்யாணத்தில் கலந்து கொண்டது போன்ற உணர்வு.
    மணமக்களுக்கு எங்களது மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  3. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    மனப்பூர்வ வாழ்த்துக்கள்…every thing was enjoyed as v have been there..both feast & narration in affection , tells about the lovable environment..nice..

  4. chandra Ravindran சொல்கிறார்:

    இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!

  5. venkatesan சொல்கிறார்:

    எரிசேரி, புளிசேரி, பிரதமன் போன்றவை என்ன பதார்த்தங்கள் என இன்னும் முழுத் தெளிவு எனக்கு வரவில்லை. யாரவது சென்னைத் தமிழில் சொன்னால் பயன்படும்.

  6. johan paris சொல்கிறார்:

    //விளைவாக எல்லாத் திருமணங்களிலும் நாதஸ்வரம் அந்த இனிய நிகழ்ச்சியின் கொண்டாட்டநிலையை இல்லாமலாக்குகிறது. நட்பான உரையாடல் முகமன் எதற்குமே வாய்ப்பில்லாமல் செய்கிறது. நம் திருமண நிகழ்ச்சிகளில் தவில் நாதஸ்வரத்தைக் கட்டுப்படுத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது//

    ஏற்கனவே இக்கலையைச் சீண்டுவாறின்றிச் சீரழிகிறது. இவர் வேறு இடியை இறக்குகிறார். திருமணக் கச்சேரிகளுக்கே ஒரு தனிக் களையுண்டு. முதல் அதை அனுபவியுங்கள். பின் நண்பர்களுடன் உரையாடுங்கள்.மண்டபங்களில் நடக்கும் கச்சேரியா? ஒலிபெருக்கியைச் சொல்லி குறையுங்கள், நிறுத்துங்கள்.
    ஒரு சில திருமணங்களிலே ஒழுங்கு செய்யும் இக் கலைக்கு உலை வைக்காதீர்கள். ஜெமோ வுக்கு ரசனை இல்லாதிருக்கலாம். ஆனால் வரும் எல்லோரையும் அவர் தன்னைப் போல் எண்ணுவதே தவறு! இதுவே
    அவரில் அதீதமாகக் காணப்படும் கோளாறு!
    மற்றும் படி , ஒரு புகழ் பூத்த எழுதாளர், பலரையும் அனுசரித்து செல்பவர் வீட்டுத் திருமணத்தில் பலர் பங்கேற்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
    பரிமாறப்பட்ட உணவில் பாதிக்குமேல் என்ன? என்பதே தெரியாது. அதைப் பற்றிக் கவலையில்லை.
    ஒரு திருமனத்திற்கு இவ்வளவு உணவு வகையா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s