சூடிய பூ சூடற்க – மதிப்புரை

ஆனந்த் ராகவ்
http://www.justbooksclc.com/BookReview;jsessionid=258D9FE160DAAD04768FA41EAB7BEAC3?profileId=5766&titleId=143784&reviewer=Anand+Raghav
நாஞ்சில் நாடனின் , சாகித்ய அகாதமி பரிசு பெற்ற, இந்தப் புத்தகம் சிறுகதைகள் என்றோ,  கட்டுரைகள் என்றோ பிரித்து இனங்காண முடியாதது போல, கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் இடைப்பட்ட நிலையில் சஞ்சரிக்கின்றன.  இந்தக் கட்டுரைத் தன்மை அவருக்கு ஒரு எழுத்தாளனாய், சமூகப் பிரஜையாய், சக பிரயாணியாய்  தன் எண்ணங்களை  சிரமமின்றி வெளிப்படுத்த, எள்ளல் செய்ய, சமூக அவலங்களைச் சாட சுதந்திரம் தந்திருக்கிறது. அந்தச் சுதந்திரத்தில் கதைகளுக்கு உண்டான கட்டுப்பாற்றையும் மீறி அவரால் எளிதாக பல எல்லைகளைத் தொட முடிகிறது. இந்தப் படைப்பின் பிரயத்யேக அழகே படைப்புகளை மீறி படைப்பாளியின் குரல் உரக்க ஒலிக்கும் தன்மைதான். ஒரு தேர்ந்த கதைச்சொல்லியாய் நாஞ்சில் நாடன் பிரசார தொனி வந்துவிடாமல் இயல்பான நகைச்சுவை கூடிய நல்ல வாசிப்பனுபவத்தை இந்த பதினைந்து கதைகளில்  தருகிறார்.
“ சூடிய பூ சூடற்க” என்கிற இந்த படைப்பிற்கும், எட்டுத் திக்கும் மதயானை, என்பிலதனை வெயில் காயும், நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை, நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று, போன்ற  அவரது இதர படைப்புகளுக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை அவர் படைப்புகளுக்கு அவர் சூட்டும், தமிழிலக்கியத்தோடு தொடர்புறுத்தும், அருமையான தலைப்புகள்.  நாஞ்சில் நாடனின் தனித்துவம் இது.  தலைப்புகளில் மட்டுமல்ல அவர் எழுதும் முறையிலும் கூட இது ஆங்காங்கே இயல்பாய் வெளிப்படுகிறது. சங்க இலக்கியங்களிலிருந்தும் , காப்பியங்களிலிருந்தும்  பல வரிகளை கதை சொல்லும் பாங்கில்  நெருடாமல் பிணைத்துவிடுகிறார். பறவைகளில் ஒலியோடு விடியற்காலை எழுந்திருப்பதை விவரிக்கும் இடத்தில் கூட “ கீசு கீசு என்று ஆனைச்சாத்தன்  கலந்து பேசும் பேச்சரவம் கேட்டு விழித்து’ என்று பாசுர வரிகளை இயல்பாய் தன் வர்ணனைகளில் புகுத்துகிறார். இது போன்று புத்தகத்தின் பல பகுதிகளிலும் அவரின் தமிழ் இலக்கிய ஆளுமை கதையோட்டதினூடே இயல்பாய் வெளிப்படுகிறது.
 
இன்னொரு அம்சம் அவர் படைப்புகளில் வெளிப்படும் பரவலான ஆனால்  உரத்து பேசாத ரௌத்திரம். பிரசங்கம்  செய்யாமல்,  நொந்துகொள்ளாமல்அவரைச் சுற்றி நிகழும் சமூக அவலங்களை ஆழமான ஆனால் ஆரவாரம் இல்லாத முறையில் சாடுவது ரசிக்கத்தக்கது.
ஓரிரு உதாரணங்கள் : 
மலிவான தானியங்களை ஆதரவு விலை கொடுத்து வாங்கி, புழுங்க வைத்து, மக்க வைத்து, நாறவைத்து, மழையில் ஊறவைத்து, வெயிலில் காயவைத்து, புழுக்க வைத்து, மக்கள் தின்பதற்கென்று வள்ளன்மையுடன் , பெருங்கருணையுடன், தாயின் சாலப்பரிவுடன் ரேஷன் கடைகளுக்கு அனுப்பினார்கள் தேசத் தலைவர்களும் அதிகாரிகளும். ஐரோப்பிய நாட்டு பன்றிகள் தின்னாது அவற்றை.
இந்திய நாட்டின் இனமான தானைப் புரட்சி அடலேறுகளின் பினாமிகளுக்கு தலைக்கு இரண்டு மாநிலங்கள் வாங்கும் அளவுக்கு காசு இருக்கிறது.
தென் திசையில்  தெய்வமாப்புலவன் எனவோர் சமண முனிவனுண்டு. ஆயிரம் ஆண்டு  முந்திப் பிறந்ததனால் கழுவேறாமல் தப்பியவன்.
”பான் கா துக்கான் வச்சிருந்தேன். கடையையும் வீட்டையும் கொளுத்திட்டானனுக. ஒரு கையும் காலும் போச்சு. யாரு கேக்க முடியும் ? இந்து வானா என்னா இஸ்லாம் ஆனா என்னா? ஏழையா இருக்கப்பிடாது…. என் காலு போனாப் போகுது சாப்… கடவுளுக்கு காலை வெட்டாம இருக்கணும்….” 
 
இந்த தார்மீகக் கோபத்தைத் தாங்கி வரும் அவர் எழுத்துக்களில்  அந்த கோபத்தின் அடித்தளத்திலே இயங்கும் நகைச்சுவை உணர்வு இன்னும் சிறப்பானது.  அலட்சியமாய் தன் கருத்துக்களை எடுத்தெறியும்  கும்பமுனி என்கிற கோபமான ஒரு எழுத்தாளர் பாத்திரம் கிட்டத்தட்ட நாஞ்சில் நாடன் என்னும் படைப்பாளியின் Alter ego  போல  அமைந்திருக்கிறது. மூல நோயினால் ஆட்கொள்ளப்பட்டு, ஆணவமும், அலுப்பும் , எரிச்சலும் சூழ்ந்த கும்பமுனி என்கிற  எழுத்தாளர் பாத்திரத்தின் சித்தரிப்பு மூலம்  நாஞ்சில் நாடன் சொல்லும் கருத்துக்களில் கிண்டலும் கேலியும் எகத்தாளத்துடன் ஒலிக்கிறது.  பழி கரப்பு அங்கதம் , தேர்தல் ஆணையத்துக்கு திறந்த வெளிக் கடிதம், மணமானவருக்கு மட்டும்  போன்ற கதைகள் முழு அங்கதமாகவே  வெளிப்படுகின்றன. 
உதாரணத்துக்குச் சில
”தீபாவளி மலருக்குக் கதை கேட்டுக் கடிதம். ஆயிரம் சொற்களுக்கு மிகாமல் இருக்கவேண்டுமாம். “  தாயோளி பள்ளிக்கோடத்திலே வாத்தியாரா இருந்திருப்பான் போல… மார்க்கு போடுகதுக்கு கேள்வி கேக்கான்….. அவனுக்க அம்மை எழுதுவா கதை ஆயிரம் வார்த்தை எண்ணிக்கணக்குப் பார்த்து… சவம்….. சுட்ட செங்கலு பாரு, எண்ணி வரிவரியா அடுக்கதுக்கு ?”   
” சால் பெல்லோ எம்பத்தோரு வயசிலே பிள்ளை பெத்தான். நமக்கு எந்திருச்சு நடக்க சீவம் வேணுமில்லா ? வஸ்து  ஆட்டாம் புழுக்கை மாதிரி ஆயாச்சு. போராதா முப்பது வருஷம் ஏர் ஓட்னது ? வலத்தை வச்சிப் பிடிச்சாச்சு, இடத்தை வச்சிப் பிடிச்சாச்சு.. கள்ள உழவு உழுதாச்சு………
”நாஞ்சி நாடன்னு ஒருத்தன் எழுதறானாம். மயித்தைப் புடிங்கினான்.  ஜெயமோகன்னு ஒருத்தன் எழுதான் இப்பம்…. அவன் ஒருவாடு எழுதித் தள்ளி எங்க கொண்டு போடுகதுண்ணு தெரியாம, இந்தப் பய கையிலே குடுப்பான். அதை இவன் தன் பேர்ல போட்டுக்கிடுதான்”  என்று தன்னையும் தன் கதைகளில் ஒரு பாத்திரமாக்கி சுய எள்ளல் செய்துகொள்கிறார்.
ஒரு படைப்பிலக்கியவாதியின் பொறுப்பு கதை எழுதுவதுடன் காலாவதி ஆகி விடுவதில்லை என்று கும்பமுனி உணர்ந்திருந்தார். ஆகவே ஏடெடுத்தார் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் ஒன்று வரைந்திட.
”அவனவன் பொண்டாட்டி தாலிய அடமானம் வச்சி செலவாக்கி சாகித்ய அகாடெமி பிரைஸ் வாங்கீருக்கான்.” !
ஒருவன் வாசிக்கும் புத்தகத்தை வைத்தும் நண்பனை வைத்தும் அவனை அளந்து விடலாம் என்பார்கள். செல்போன் வைத்திருப்பவர்களின் ரிங்டோன் கேட்டும் கூட அதைச் செய்யலாம்.  அவருக்கு அறிமுகமான ஒருவர் “ பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்லே” என்று வைத்திருந்தார்.  அவருடன் எப்படி உறவு வைத்துக்கொள்வது ?
நான் எழுத்தாளன் என்பதால்  அக்கம்பக்கத்தில் யாரோடும் உரையாடும் வழக்கம் இல்லை.
பஞ்சலிங்க மங்கலத்தை வெகு செல்லமக ‘ரஸிகாஸ்’ அழைக்கும் பெயர் பஞ்சம். பஞ்சம் என்பதை வறுமை எனும் பொருளில் கையாளாமல் ஐந்து எனும் பொருளை ‘வாசகாஸ்’ எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஆங்கில அறிவை புலப்படுத்த பிரயாசைப்படுவது, இன்று சங்கீத உலகில் அஃதோர் குணப்படுத்த முடியாத சமூக வியாதிபோலப் பரந்து விட்டது. நூற்றுக்கு நூறு சதவீதம் தமிழ் தெரிந்தவர் சபையில், The next composion is of Thyagaraja, in the raga Atana, set to Adi Thala என்பார்கள்.
சென்னையில்  டிசம்பர் சங்கீத சீசனில் வெவ்வேறு சபாக்களில் வெவ்வேறு பாடகிகள் “ என்றைக்கு சிவ க்ருபை வருமோ?” என்று பாடியது “ என்றைக்கு  ரேஷனில் கிஷ்ணாயில் வருமோ எனும் பாவத்தில் இருந்தது
என்பது போன்ற நகைச்சுவை மிளிரும் வரிகளில் கூடவே இருந்து எட்டிப்பார்க்கும் கோபம் அவர் எழுத்தின் தனித்துவம்.
                                       
நாஞ்சில் நாடனின் நடையழகு பிரத்யேகமானது. துளையிட்ட மூட்டையிலிருந்து கொட்டும் தானியங்கள் போல இயல்பாய் வந்து விழும் வார்த்தைகள்.  வேகமாய் விரையும் வாகனத்தை ப்ரேக் போட்டு சட்டென்று நிறுத்திவிடுவது போல முத்தாய்ப்பான ”ப்ரேக்கு”களால் முற்றுப்பெரும் வாக்கியங்கள். லைன் வீடு என்பதை விளக்கும்போது சொல்கிறார்-
”லைன் வீடு எனில் முதலில் பத்துக்குப் பத்தில் ஒரு முறி. அதுவே வரவேற்பறை, ஹால், டைனிங், படுக்கை, பூஜை, விருந்தினர், ஓய்வு அறைகள். எப்பெயரிலும் அழைக்கலாம். எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் இறைவன் ஏகன் தானே!
நம் வாழ்வில் காணா  சமத்துவம் உலாவும் இடங்கள் லைன் வீடுகள். லைன் வீட்டுக்காரர்கள் என்னதான் முன்னூற்று அறுபத்தாறு பிரிவுகளும் உப பிரிவுகளும் துனைப்பிரிவுகளும் பிற்சேர்க்கைகளும் கொண்ட வாடகைக் குடியுரிமை சட்டங்கள் செய்தாலும் உச்ச நீதி மன்றத்தின் துணை கொண்டு தம்பதியர் புணர்ந்தனர், கர்ப்பமுற்றாள், குழந்தை ஈன்றாள், பிறந்த நாள் கொண்டாடினர், நோயுற்றனர், நோய் நீங்கினர், மரண முற்றனர், விருந்தினர் வந்தனர்,  பெண் குழந்தைகள் சமைந்தன, லைனுக்குள் சண்டை இட்டனர், சமாதானம் ஆயினர், தக்காளியும் தோசைமாவும் கடன் கொடுத்தனர், மீன் குழம்பு செய்து கிண்ணத்தின் மேல் கிண்ணம் வைத்து மூடிக்கொடுத்தனர். எல்லாம் இன்பமயம்.”
                         
 வர்ணனைகள் கூட வலிய இழுத்துவரப்படாமல் இயல்பாய் வந்து விழுகின்றன.
“சாயம் போய்க் கிழிந்து நைந்த துணிபோல் ஏதோவொரு கீர்த்தனையின் முதலடி தெருவில் அனாதையாகக் கிடக்கும். பிணத்துக்கு இறைக்கப்பட உதிரிப் பூக்கள் போலக் கேட்பாரற்று…”
தனிமை புகையேற்றப்பட்ட அரவப்புடைபோல மூச்சு முட்டச் செய்தது.
                            
ஆசிரியர் சமையலில் மிகுந்த நாட்டம் உள்ளவராய் இருக்கவேண்டும். அமெரிக்க, ஆங்கிலேய  நாவலாசிரியர்கள் உணவு வகைகளைப் பற்றிய detailing இல் ஈடுபடுவதுபோல நாஞ்சிலார் விஸ்தாரமான சமையல் குறிப்புகள் தருகிறார்.
                           
வட்டார வழக்கு அவரின் எழுத்தின் இன்னொரு தனித்துவம்.
ரெண்டு கதை எழுதினா கணிசமா சன்மானம் வாங்கிறலாம். ஆனா மூதி , வரமாட்டங்கு,, காலம்பற கக்கூசுக்குப் போனாலும் இதே எழவுதான். கேவலம் பீ, அது சொன்ன பேச்சு கேக்கமாட்டங்குவே ! பொறவல்லா சாவாத இலக்கியம் !
இந்தக் கடிதம் நாட்டையே ஒரு குலுக்கு குலுக்கப்போகு பாரு. அவ்வளவு செறுக்கிவிள்ளைகளையும் செவளை செவளைன்னுல்லா வாங்கீருக்கேன்”
எங்கிண போய் வா பாத்துக்கிட்டு நிக்கானோவ் ! அவனைச் சொல்லியும் குத்தமில்லே, மொத்தச் சன்முமில்லா நாட்டுலே வா பாத்துக்கிட்டு நிக்கி !
தன் அலுவல் நிமித்தமாய் நாஞ்சில் நாடன் இந்தியா முழுக்கப் பயணம் செய்தவராய் இருக்கவேண்டும். பல பிரதேசங்களையும், கலாசாரங்களையும், மக்களையும், அவர்தம் மொழியையும் , உணவுப் பழக்கங்களையும் பழகியவராய் இருக்கவேண்டும்.  அந்த அனுபவத்தில்  ‘வளைகள் எலிகளுக்கானவை ‘ யாம் உண்பேம் ‘ கடவுளின் கால்’ ’ தன்ராம் சிங்’ போன்ற நுணுக்கமான விவரங்கள் கொண்ட அருமையான கதைகள் உள்ளடங்கிய தொகுதி இது.
 
நாஞ்சில் நாடன் –
சுப்ரமணியன் என்கிற நாஞ்சில் நாடன், வீரநாராயண மங்கலம் என்கிற கன்யாகுமரி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் – முப்பத்து ஐந்து ஆண்டுகளாய் எழுதிவருபவர் –  ஆறு நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், இரண்டு கவிதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரைத்தொகுதிகள் எழுதியவர்.  இவரது ‘ தலைகீழ் விகிதங்கள் என்கிற  நாவல் ‘தங்கர் பச்சான்’ இயக்கத்தில் ‘ சொல்ல மறந்த கதை’ என்ற பெயரில் திரைப்படமாய் எடுக்கப்பட்டது.  சமீப காலமாய் வெறும் கதைகளோடு நின்றுவிடாமல் சமூதாயப் பிரக்ஞைகள் வெளிப்படும் கட்டுரைகள் நிறைய எழுதுகிறார் நாஞ்சில் நாடன். ’இது பெண்கள் பக்கம்’ என்கிற பெண்கள் பள்ளிகளில் கழிவறைகள் இல்லாத அவலநிலையை பேசும் கட்டுரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘ தீதும் நன்றும்’ என்கிற அவரது ஆனந்தவிகடன் கட்டுரைத் தொடரும் வாசகர்களிடையே  அதிகம் பேசப்பட்ட  படைப்பு.  சூடிய பூ சூடற்க என்னும் இந்த நூல் சாகித்ய அகாதமி பரிசு பெற்று அவரது முப்பத்து ஐந்து வருட இலக்கியப் பணிக்கு  ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்துள்ளது.
 
ஆனந்த் ராகவ்
anandraghav@yahoo.com
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக