சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -பள்ளும் குறமும்

solvanam.com/
நாஞ்சில் நாடன்
முந்தைய பகுதிகளை இங்கே படிக்கலாம் : பாகம் – 1 | பாகம் – 2
 
 
 பள்ளும் குறமும்
 
பாட்டியல் நூல்களால் 96 என வரையறுக்கப்பட்டவை சிற்றிலக்கியங்கள். புத்திலக்கியங்களை ‘விருந்து” எனக் குறிக்கின்றது தொல்காப்பியம்.
 
விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே, 
என்பது தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுள் 231.
இவற்றுள் பள்ளு இலக்கியங்கள் 16-ம் நூற்றாண்டையும் குறம் 18-ம் நூற்றாண்டையும் சார்ந்தவை. நொண்டி, உழத்திப் பாட்டு, ஏசல் என்பனவும் இந்தக் குடும்பத்தைச் சார்ந்தவை. 
35 பள்ளுகளும் 34 குறவஞ்சிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறம் என்பதன் பிறபெயர்கள் குறவஞ்சி, குறவஞ்சித் தமிழ், குறவஞ்சி நாடகம், குறத்திப் பாட்டு என்பன.
பள்ளு இலக்கியத்திற்கான இலக்கணம் ஏதும் இல்லை. கி.பி. பதினாறாம் நூற்றாண்டு முதல் பள்ளு நூல்கள் எழுதப்பட்டுள்ளன. உழவர்களின் வாழ்வியல் பேசப்படும் இலக்கியம் இது. பள்ளுவில் சிறந்தது முக்கூடற் பள்ளு எனவும் குறவஞ்சியில் சிறந்தது குற்றாலக் குறவஞ்சி என்றும் புலவர் பெருமக்கள் உறுதியாகச் சொல்கிறார்கள். இந்த இரண்டைத் தவிர மற்றெதுவும் நான் வாசித்ததில்லை. எனவே என்னால் ஒப்பீட்டளவில் உரையாட இயலாது. வேறெந்தக் குறவஞ்சியின் பெயர் கூட எனக்குத் தெரியாது. செண்பகராமன் பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு என்று இரண்டின் பெயர் மட்டும் அறிவேன். எனக்குத் தெரிந்ததை விளம்புவதில் தவறில்லை.
 உழத்திப் பாட்டு எனும் வகையைப் பள்ளு என்பாரும் பள்ளு அன்று என்பாரும் உளர். உழத்திப் பாட்டு பற்றி எழுதும் உத்தேசம் இல்லை, கைவசம் நூலும் இல்லை.
பிற பிரபந்த வகைகளில் பள்ளும் குறமும் வாசிக்க இலகுவானவை, எளிதானவை, உரை எழுத அவசியம் அற்றவை. எனினும் முன்னூறு ஆண்டுகள் முந்தியன என்பதால் அரும்பத உரை அவசியமாகலாம். 
ஆண்டை அல்லது பண்ணையார் உறவு, பள்ளன்- பள்ளிகள் பூசல், உழவு செயல்வகை எனச் சுவைபட பேசப்படுகின்றன முக்கூடற்பள்ளுவில்.
முக்கூடற்பள்ளு
பள்ளு இலக்கியத்தில் சிறந்தது முக்கூடற்பள்ளு என்கிறார்கள். முக்கூடல் தலத்தில் கோயில் கொண்ட அழகர் மீது பாடப் பெற்றது, ஆனால் வைணவ இலக்கியம் என்று கூறி விட இயலாது.
மூன்று நதிகள் கூடும் இடம் முக்கூடல். கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்பது போல் தாமிரபரணி, சிற்றாறு, கயத்தாறு எனும் ஆறுகள் கூடும் இடம் முக்கூடல்.
இந்த நூலின் காலம் கி.பி. 1680 என குறிப்பிடப்படுகின்றது.
பள்ளு இலக்கியம் இசைப்பாடல் தன்மை உடையது. இந்த நூலில் பந்துவராளி, பைரவி, காம்போதி, சங்கராபரணம், ஆனந்த பைரவி, புன்னாகவராளி, கேதார கௌளம், காம்போதி, மத்யமாவதி, மோகனம், நாட்டை, சுருட்டி போன்ற ராகங்களில் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நீர்வளம், நிலவளம் பேசும் இலக்கியம். வளை மேழி, நோக்கால், பரம்பு, மேழி, வடம், வள்ளக்கை, குத்தி, கொழு, கலப்பை, நுகம், கயமரம், கழுந்தேர்க்கால், கைக்கோல், கொட்டு, உழவுகோல், ஏர்க்கால் எனும் உழவு கருவிகள் பலவும் பேசப்படுகின்றன.
மீன்கள் பற்றிய பட்டியல் உண்டு- அயிந்தி, அயிரை, ஆரால், உய்யம், உழுவை, எண்ணெய் மீன், ஓரா மீன், கசலி, கடந்தாய், கருங்கண்ணி, கெண்டை, கெளிறு, கெளுத்தி, குறவை, கூனி, கோளை, சாம்பன், மணலி, மத்தி, மயிந்தி, மலங்கு, வரால், வாளை, சள்ளை, சாளை, திருக்கை, துதிக்கைமூக்கன், தேளி, நொறுக்கி, பசலி, பஞ்சலை, பண்ணாக்கு, பறவை, பாசிமீன், பொத்தி, மகரம், மடந்தை என.
இலக்கியங்கள் பதிவு செய்யாமற் போனால் பல தகவல்கள் நமக்குத் தெரிய வராமலேயே போயிருக்கும்.
பள்ளன் அழகர் அபிமானி. அழகர் அபிமானிகளாக இல்லாதவரை எவ்விதம் தண்டிப்பேன் என்பதற்குப் பாட்டுச் சொல்கிறான்.
ஒரு போது அழகர் தாளைக்
கருதார் மனத்தை வன்பால்
உழப்பார்க்கும் தரிசு என்று
கொழுப் பாய்ச்சுவேன்
சுருதி எண்ணெழுத்து உண்மை
பெரிய நம்பியைக் கேளாத்
துட்டர் செவி புற்றெனவே
கொட்டால் வெட்டுவேன்
பெருமாள் பதி நூற்றெட்டும்
மருவி வலம் செய்யாரைப்
பேய்க்காலில் வடம் பூட்டி
ஏர்க்கால் செய்வேன்
திருவாய் மொழி கல்லாரை
இருகால் மாடுகளாக்கித்
தீத்தீயென்று உழக்கோலால்
சாத்துவேன் ஆண்டே!
மாணிக்கவாசகர் திருவெம்பாவையில், “எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க” என்பதன் தீவிர வடிவமாயுள்ளது இந்த பக்தி.
பள்ளன் தன் பெருமை கூறுவது, மூத்த பள்ளியும் இளைய பள்ளியும் தத்தம் குடித்தரம் கூறும் பாடல்கள் தமிழ் மணப்பது.
மைக்கடல் முத்துக்கு ஈடாய்
மிக்க நெல் முத்து உண்டாக்கும்
வடிவழகக் குடும்பன் நானே
எனத் தான் விளைவிக்கும் நெல்லின் செருக்கு பேசும் பள்ளனை அறிமுகம் ஆகிறோம். மூத்த குடியாள், பெருமாள் பக்தையாகிய முக்கூடற்பள்ளியும், இளைய குடியாள், சிவனடியாளாகிய மருதூர்ப்பள்ளியும் போட்டிக்குப் பாடும் பாடல்கள் மிகவும் சுவையானவை.
வடகரையில் உள்ள, வளம் மிக்க ஆசூர் நாடு பற்றி மூத்த பள்ளி புகழ்கிறாள். அவள் நாடு அது, பெருமை பெற்றது. அந்த நாட்டில் கறை என்பதைத் திங்களில் மட்டுமே காணலாம். கடம் பட்டிருப்பது- கட்டப்பட்டிருப்பது மதங் கொண்ட யானை மட்டுமே. சிறைப்பட்டவை பறவைகள் மட்டுமே. திரிக்கப்பட்டிருப்பது நெய் விளக்கு ஏற்றுவதற்காகத் திரிக்கப்பட்ட திரி மட்டுமே, குறைப்பட்டிருப்பது கொத்தப்படுவதால் குறைபட்ட கம்மாளர்களின் அம்மி மட்டுமே. குழைத்திருப்பது பூங்கொடிகளும் பூங்கொத்துக்களும் மட்டுமே, மறைக்கப் பட்டிருப்பது உயர் செய்யுள்களின் பொருள் மட்டுமே. இவையல்லால், பிற குறைகள் ஏதுமில்லா நாடு எங்கள் நாடு என்கிறாள் மூத்த பள்ளி. பாடலைப் பாருங்கள்.
கறைபட்டுள்ளது வெண்கலைத் திங்கள்
கடம்பட்டுள்ளது கம்பத்து வேழம்
சிறைபட்டுள்ளது விண்ணெழும் புள்ளு
திரிபட்டுள்ளது நெய்படும் தீபம்
குறைபட்டுள்ளது கம்மியர் அம்மி
குழைபட்டுள்ளது வல்லியம் கொம்பு
மறைபட்டுள்ளது அரும்பொருட் செய்யுள்
வளமை அரசூர் வடகரை நாடே
பொறுக்குமா இளைய பள்ளிக்கு? தனது நாடான சீவல மங்கைத் தென்கரை நாட்டைப் போற்றுகிறாள். தனது நாட்டில் சூரியன் மட்டுமே காய்வான், கட்டித் தயிர் மட்டுமே மத்தால் கடையப்பட்டுக் கலங்கும். அழிந்து போவது நாழிகைகளும் கிழமைகளுமே, சுழன்று வருவது வான்மழை பொழிந்த வெள்ளம் மட்டுமே, சுமை தாங்காமல் சாய்ந்தது நெற்கதிர் மட்டுமே, தவம் செய்வோர் மனம் மாட்டுமே ஆசைகள் ஒடுங்கி இருப்பது, தேய்ந்து போவது உரைக்கப்படும் சந்தனம் மட்டுமே என்கிறாள். பாடலைப் பாருங்கள்:
காயக் கண்டது சூரிய காந்தி
கலங்கக் கண்டது வெண்தயிர்க் கண்டம்
மாயக் கண்டது நாழிகை வாரம்
மறுகக் கண்டது வான்சுழி வெள்ளம்
சாயக் கண்டது காய்க்குலைச் செந்நெல்
தணிப்பக் கண்டது தாபதர் உள்ளம்
தேயக் கண்டது உரைத்திடும் சந்தனம்
சீவல மங்கைத் தென்கரை நாடே
இங்கு காய்க்குலை என்பதற்கு வாழைக்குலை என்றும் பொருள் கொள்ளலாம். மலையாளத்தில் இன்றும் வாழைக்குலையைக் காய்க்குலை என்கிறார்கள்.
இவ்வாறே தமிழ் பாடிச் செழிக்கிறார்கள் மூத்த பள்ளியும் இளைய பள்ளியும்.
மீது உயர்ந்திடும் தெங்கு இளநீரை
மிடைந்த பூகம் சுமந்து தன் காயை
சூதம் ஒன்றிச் சுமக்கக் கொடுக்கும்
சூதம் தன்கனி தூக்கும் பலாவில்
ஓதும் அந்த பலாக்கனி வாழை
உறுக்கவே சுமந்து ஒண்குலை சாய்க்கும்
மாதுளம் கொம்பு வாழை தாங்கும்
வளமை ஆசூர் வடகரை நாடே
என்பாள் மூத்த பள்ளி.
தெங்கின் இளநீரை, நெருங்கி வளர்ந்திருக்கும் கமுகு தாங்கும். கமுகு, தன் குலையை அருகில் வளர்ந்திருக்கும் மாமரங்களைச் சுமக்கச் செய்யும். மாமரங்கள் தன் கனிகளை அருகில் வளர்ந்திருக்கும் பலா மரங்களில் சாரச் செய்யும். பலாக்கனிகளை வாழை மரங்கள் சுமக்கும். வாழைக் குலைகளை மாதுளங் கொம்பு தாங்கும் ஆசூர் வடகரை நாடே என்பாள் மூத்தாள்.
பங்கயம் தலை நீட்டிக் குரம்பினில்
பச்சை இஞ்சியின் பாசடை தீண்டும்
தங்கும் இஞ்சியும் மஞ்சட் கழுத்தைத்
தடவி மெள்ளத் தொடும் அந்த மஞ்சள்
அங்கு அசைந்திடும் காய்க்கதிர் செந்நெல்
அளாவி நிற்கும் அச்செந்நெலும் அப்பால்
செங்கரும்புக்குக் கைதரும் போல் வளர்
சீவல மங்கை தென்கரை நாடே
என்பாள் இளையாள்.
மூத்த பள்ளி தன் கிராமத் தெய்வம் போற்றுவாள்:
திங்கள் மும்மாரி உலகெங்கும் பெய்யவே
தெய்வத்தைப் போற்றி வந்து கைதொழும் காண்
பொங்கலும் இட்டுத் தேங்காயும் கரும்பும்
பூலா வுடையாருக்குச் சாலவே கொடும்
குங்குமத்தோடு சந்தனம் கலந்து
குமுக்காவுடையாரயர் தமக்குச் சாத்தும்
கங்கணம் கட்டி ஏழு செங்கிடாயும்
கரையடிச் சாத்தா முன்னே விரைய வெட்டும்
என்று. இளைய பள்ளியோ:
பூத்தலைச் செஞ்சேவல் சாத்திரத்தாலே
புலியூர் உடையார் கொள்ளப் பலிதான் இடும்
வாய்த்த சாராயமும் பனை ஊற்றுக் கள்ளும்
வடக்குவாய்ச் செல்லி உண்ணக் குடத்தில் வையும்
என்கிறாள்.
என் வயதுக்காரர் அனைவரும் நினைவில் வைத்திருக்கும் சிந்து ஒன்றுண்டு. முக்கூடற்பள்ளு நூலில், அட தாளம், ஆனந்த பைரவி ராகம்.
ஆற்று வெள்ளம் நாளைவரத்
தோற்றுதே குறி – மலை
யாள மின்னல் ஈழ மின்னல்
சூழ மின்னு தே
நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக்
காற்றடிக்குதே – கேணி
நீர்ப்படு சொறித் தவளை
கூப்பிடு குதே
சேற்று நண்டு சேற்றைக் குழைத்து
ஏற்றடைக்குதே – மழை
தேடியொரு கோடி வானம்
பாடி ஆடுதே
போற்று திரு மாலழகர்க்கு
ஏற்றமாம் பண்ணைச் – சேரிப்
புள்ளிப் பள்ளர் ஆடிப் பாடித்
துள்ளிக் கொள்வோமே
என்பது அந்த மழைக்குறிப் பாடல்.
நெல்விதைகளின் வகைகளைச் சொல்கிறான் பள்ளன் ஒரு பாட்டில். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்வகை நெல் இனங்களின் பெயர்களைக் காண எனக்குப் பரவசம் ஏற்படுகிறது.
சித்திரக் காலி வாளாண் சிறை மீட்டான் மணல்வாரி
செஞ்சம்பா கருஞ்சூரை சீரகச்சம்பா
முத்து விளங்கி மலை முண்டன் பொற்பாளை நெடு
மூக்கன் அரிக்கிராவி மூங்கிற் சம்பா
கத்தூரி வாணன் கடைக கழுத்தன் இரங்கல் மீட்டான்
கல்லுண்டை பூம்பாளை பார்கடுக்கன் வெள்ளை
புத்தன் கருங்குறுவை புனுகுச் சம்பா
என, மத்தியானம் சாப்பிட்ட நெல்லரிசிச் சோற்றின் பெயர் தெரியாமற் போய் விட்டோமே நாம் இன்று? எங்கே போயின இந்த நெல்லினங்கள்? விதையாவது எங்கேயும் கருதப் பட்டிருக்குமா?
நெல்வகை போக, மாட்டு வகை சொல்கிறான் பள்ளன்
முழுக் கட்டுரையையும் படிக்க…..http://solvanam.com/?p=16827
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -பள்ளும் குறமும்

  1. sakthi.p சொல்கிறார்:

    nanru .nanriii

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s