நாஞ்சில்நாடன்
வாலடிக்கும் பல்லி ரீங்கரிக்கும் கொசு
பறக்கும் கரும்பாச்சை
எனவுறையும் இல்லத்து
யாம் மன்ற துஞ்சாதே
இருட்பூங்குளிர் காற்று
அடர்மரத்துச் சில்லோதை
உறக்கத்தின் மென்னூக்கி
எனினும்
நித்திரை களவு போனதன்
காரணமென் நன்னெஞ்சே
பசி கடுங்காமம் பேராசை
திரண்ட தொல்வன்மம்
கைவிட்டுப்போன பழங்காதற்
பெருமூச்சின் கழைக்கூத்து
அண்டவெளியதனின்
ஞானப் பெருந்தேடல்
யாதொன்னும் அல்ல
கலங்கும் மீனிடைக்
கண்டெடுக்கப் பட்டதாய்ச்
சமைக்கப்பட்ட அச்சுறுத்தும்
இரு பெரிய கருவிழிகள்
சங்கப்புலவன் அதைக்
கண்டும் எழுதி வைத்தான்
சேமிதமாயிருந்த உயிரினொளி
எத்தனை கோடி இனத்தவரின்
கனவினொளி
ஈண்டவை உளதா இலதா.
பளிங்கு உருண்டைகளாய்
உறைந்தும் போயினவா?
காலம் கடத்திப் போய் கரந்துவா
கருநரகக் காரிருளுள்?
காப்பாற்றி வருகிறதா
வீரம் இவ்வினத்தில் விளைவது
அருமையென?
நேர்நின்ற காலத்து
பறத்தல் அறிந்திராப் பார்ப்புகள்
ஆறலைக் கள்வர் நடமாடும்
நச்சவரக் கானகத்துள்
சிறகின் திறன் தேடி
அலைந்தவாறா?
….