நானும் என் எழுத்தும்

நாஞ்சில் நாடன்
‘நானும் என் எழுத்தும்’ என்று ஐந்தொகை போட்டுப் பார்க்கும் பருவம் எய்திவிடவில்லை இன்னும். அல்லது ‘நான்’, ‘என் எழுத்து’ என்று கம்பீரமான இடத்தில் நின்று சிந்திக்கும் விதத்திலான படைப்புக்கள் எதையும் தந்துவிடவுமில்லை. தமிழிலக்கியப் பள்ளியில், வாசிப்பில் நான் ஐம்பத்தைந்து ஆண்டு காலமாக மாணாக்கன்; எழுதுவதில் நாற்பத்தி மூன்று ஆண்டுகால மாணாக்கன். போகிறபோக்கில் சில நாவல்கள், அவ்வப்போது சில சில கதைகள், விளையாட்டுப் போலச் சிறுகவிதைகள் என்பதெல்லாம் என் பாடத்திட்டத்தின் அங்கங்களே தவிர தீவிரமானதோர் அர்த்தத்தில் எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்வதிலேகூட எனக்கு உவப்பில்லை. நாஞ்சில் நாடன் என்பவன் சக வாசகன்.  சக இலக்கிய மாணவன். என்றோ ஒரு சீரிய படைப்பை, தமிழ் மொழிக்குப் பெருமை தேடித்தரும் படைப்பை, நிகழ்த்திக் காட்ட முடியும் என்ற நம்பிக்கை உடைய மாணவன். இதை தன்னடக்கத்துடன் அவை அடக்கத்துக்காகச் சொல்லவில்லை. எனக்கு தன்னடக்கமும் கிடையாது. அவையடக்கமும் கிடையாது.
     எழுத்து என்பது ஒரு தவம் என்று சொல்கிறார்கள்; வேள்வி என்கிறார்கள்; உயிரை ஆகுதியாகப் பெறுவது என்கிறார்கள். சிலர் படைப்பை கர்ப்பச்சுமை என்றும் கருத்தரித்தல் என்றும் கர்ப்பசோகம் என்றும் பிரசவ வேதனை என்றும் சொல்கிறார்கள். சிலசமயம் ஒருவர் படைப்பு முயற்சியில் இறங்குவது என்பது தீராத கொடிய வயிற்று வலியில் துடிப்பது போன்ற காட்சியை எனக்கு தொற்றப்படுத்தும்.
     தமிழில் மிகக்கனமான சொற்கள் உண்டு. அவற்றில் ஆகக்கனமான சொற்களைத் தெரிந்து படைப்புத் தொழிலை அர்த்தப்படுத்தப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பொதுவாகவே தமிழ் எழுத்தாளனுக்கு மிகையான சொற்களின் மீது மோகம் உண்டு.  மிகையான சொற்களைப்
பயன்படுத்தியே மொழியை நாசம் செய்ததில் எழுத்தாளர்களுக்குப் பெரும்பங்கு உண்டு.  இது புலவர்களிடம் இருந்து அவனுக்கு கிடைத்த மோசமான ஆயுதம் என்று கருதுகிறேன். பல தளங்களில் பொருள்தரும் வளமான சொற்கள் நமக்கு உண்டு. உவகை என்றும் மகிழ்ச்சி என்றும் இறும்பூது என்றும் ஆனந்தம் என்றும் களிப்பு என்றும், அற்ப சந்தோஷம் அடைந்தபோது ‘ஆனத்தக் களிப்பு’ என்ற சொல்லைப் பயன்படுத்த நம் எழுத்தாளன் பின்வாங்கியதே இல்லை.  பெரும்பாலும் ‘உள்’ அற்றுப் போன எழுத்தாளர்கள்தான் இவர்கள்.
     மிகையான சொற்கள் மூலம் உன்னதமான உணர்ச்சியை எழுத்தில் கொண்டுவந்துவிட முடியும் என்று நம்பி ஏமாந்து போகிறார்கள். என்னைக் கேட்டால், மிகையான சொல், எழுத்தாளரின் பலவீனத்தைத்தான் காட்டிக் கொடுக்கிறது. இயல்பாக எழுப்பிக் கொண்டு வர வேண்டியதோர் உணர்ச்சியை மிகையான சொற்களைக் கையாள்வதன் மூலம் மட்டும் எழுப்பிவிடமுடியாது.
     எனவே என் எழுத்தை தவம் என்றோ வேள்வி என்றோ, கர்ப்பகனம் என்றோ பிரசவ வேதனை என்றோ குறிப்பிட எனக்கு மனம் வரவில்லை.
     பின் என் எழுத்து என்பது என்ன? எனக்கு எழுத்து என்பது பொழுது போக்கா? வேலையற்ற நாவிதன் கழுதைக்கு சிரைத்துக் கொண்டிருப்பது போன்றதா? ஓய்ந்த வேளையில் விபச்சாரம் செய்தால் உப்பு புளி மிளகாய்க்கு ஆச்சு என்பது போலவா?
     சற்று யோசித்துப் பார்க்கிறேன்.
     எனது இளம் பருவத்தில் வாழ்க்கை நெருக்கடிகள் காரணமாக, மாநகர் ஒன்றில் சிக்கிக்கொண்டேன்.  மாநகர் என்று சொன்னால், ஒரு வெளிநாட்டு எழுத்தாளர் சொன்னதுபோல, அது ஒன்றுதான் இந்தியாவில் மாநகரம். மற்றவை எல்லாம் கிராமங்களும் பெரிய கிராமங்களும். சிறு கிராமத்திலிருந்து வறுமை என்னைத் துரத்தியபோது அந்த மாநகரத்தில் தனிமை என்னைத் துரத்தியது.
     எனது ஆரம்பகால எழுத்து முயற்சிகள் எல்லாம் தனிமையிலிருந்து தப்பியோட பயன்படுத்திய குதிரை என்று எனக்கு சொல்லத் தோன்றுகிறது. என் எதிர்பார்ப்புகளை மீறிய மூலை முடுக்குகளில் எல்லாம் அலைந்து திரிந்திருக்கிறேன். காங்க்ரீட் காடுகளில், பாலிதீன் கூரைகளும் சாக்குப்படுதாச் சுவர்களும் கொண்ட குடிசைக் கூட்டங்களின் இடையே, அழுக்குப்படாத கனவான்களின் கூட்டத்தில், ரயில்வே கான்டீன்களில் வேலைபார்த்த சிறுவர்கூட்டத்தில்… ஒன்றரை நிமிடத்துக்கு ஒருமுறை கடந்து போகும் மின்ரயில் வண்டிப் பாதையோரத்தில் குடையைப் பிடித்து முகத்தை மறைத்து மலம் கழிக்கும் வாழ்க்கை எனக்குத் தெரியும். அதற்குக் கூட வழியில்லாமல் இடைவிடாமல் மழை பொழியும் நாட்களில் வீட்டின் அங்கணத்தில் நியூஸ் பேப்பரை மடித்துப் போட்டு மலம் கழித்து, மடித்து வெளியே வீசும் பெண்களின் துயரம் எனக்குத் தெரியும். இந்திய மொழிகளில், ஆங்கிலத்தில் வெளிவரும் பத்திரிகைகளுக்கு இப்படியொரு உபயோகமும்-மிகத்தகுதியான உபயோகம் என்று எனக்கு இப்போது சொல்லத் தோன்றுகிறது-இருப்பது என் அனுபவக் கசப்புக்களில் இருந்து தெரிந்தது.  தனிமையைத் தொலைக்க நான் ஏறிச்சவாரி செய்த குதிரை அந்த எல்லையைத் தாண்டிய இடங்களுக்கு என்னை இட்டுச் சென்றது.
     எனது பயணங்கள் என்னைப் புரிந்துகொள்ள, வாழ்க்கையைப் புரிந்து கொள்ள மிகவும் உதவிகரமாக இருந்தன.
     ஆனால் வாழ்க்கையைச் சரியாகப் புரிந்துகொண்டேனோ?  என்னைச் சரியாகப் புரிந்துகொண்டேனோ?
     ஆம் என்று சொன்னால் என் எழுத்துப் பயணம் முடிந்து போயிற்று என்று பொருள். இன்னும் அது தொடங்கவே இல்லை என்றுதான் எனக்கு சொல்லத் தோன்றுகிறது. சொந்தத் தோல்விகள் எல்லாம் என்னை இலக்கியத் தேடல்களின்பால் திருப்பின.
     எனவே எனக்கு எழுத்தென்பது தவம் அல்ல; வேள்வி அல்ல;  பிரசவ வேதனை அல்ல; ஆத்ம சோதனையோ சத்திய சோதனையோ அல்ல; பொழுதுபோக்கு அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல; பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல. வாழ்க்கையை, என்னைப் புரிந்து கொள்ளும் முயற்சி; என் சுயத்தைத் தேடும் முயற்சி.
     இந்தத் தேடலின்போது எனக்குப் புலப்படுவதை உங்களுக்கும் சொல்லிக்கொண்டு போகிறேன்; என்னைப் புரிந்துகொள்வதைப் பற்றியோ, புரிந்துகொள்ளாமற் போவது பற்றியோ அக்கறைகள் எதுவும் அற்று.
     நேற்று சரி எனத் தோன்றிய  பல, இன்று சரி அல்ல என்று தோன்றுகிறது. நியாய அநியாயங்கள் இடம் மாறிக்கொண்டிருக்கின்றன. விபச்சாரம் செய்கிறேன். தீக்குளிக்கவும் செய்கிறேன் என் கற்பை நிரூபிக்க. இந்த அலைக்கழித்தல், அலைபாய்தல், கூட்டங்களின் நடுவில் கூட அனாதை போன்று உணர்தல் எல்லாமும்தான் நான். எல்லாமும்தான் என் எழுத்து.
     வாழ்க்கை என்பது, சம்பவங்கள் என்பது, மனிதமனத்தின் செயல்பாடுகள் என்பன கதை எழுதுவதற்காக நடைபெற்றுக் கொண்டிருப்பவை அல்ல. உங்களை மகிழ்வூட்ட கேளிக்கையூட்ட அல்ல. நல்ல எழுத்து என்பது ஒரு புரிதலுக்கு ஆட்படுத்த இயங்குவது. புரிதலுக்கு எப்படி ஆட்படுத்துவது? சில கேள்விகளை எழுப்புவதன் மூலம். கேள்விகள் எங்கிருந்து படைப்பாளிக்கு எழுகின்றன? வாழ்க்கையைக் கூர்ந்து நோக்குவதன் மூலம். ஒரு சிறு சம்பவம் சொல்கிறேன்.
     கோவையிலிருந்து திருவனந்தபுரம் போனேன் ஒருநாள். சொகுசுப் பேருந்து. தனியார் வண்டி. புறப்படுமுன் வண்டியின் ஆறு டயர்களிலும் எலுமிச்சம் பழங்கள் வைத்து நசுக்கினார்கள்.  தேங்காயில் சூடம் கொளுத்திக் காட்டி, தேங்காயை ரோட்டில் ‘வெடல்’ போட்டார் ஓட்டுனர். தேங்காய் நாலைந்து துண்டுகளாக நடுரோட்டில் சிதறியது, பெரிதும் சிறிதுமாக. அடிக்கடி காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நான் காணக்கூடிய முதியவர் ஒருவர் ஓடியோடி பொறுக்கினார். எனக்கு அவர் மீது பரிவு சுரந்தது. பலமுறை, வெள்ளிக்கிழமைகளில், இரவு எட்டு மணி சுமாருக்கு, கடை சாத்துமுன் பூசை செய்து, நடு ரோட்டில் தேங்காய் ‘விடல்’ போடுவதையும் தேங்காய் முறிகள் மீது லாரிச் சக்கரங்கள், பஸ் சக்கரங்கள் ஏறி இறங்குவதையும் பார்த்திருக்கிறேன். சில சமயம் காலடியில் வந்துவிழும் பெரிய முறியைக் குனித்து எடுத்துக் கொள்ளலாமா என்று தோன்றும்.  இதில் என்ன மான அவமானம் என்றும் தோன்றும்.
     அன்று அந்த முதியவர் தேங்காய் முறி பொறுக்கும்போது, இரவில் பேருந்து போய்க்கொண்டிருக்கும்போது என் மனம் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது. கோவையிலிருந்து மட்டும் தினமும் சுமார் ஐம்பது தனியார் வண்டிகள் புறப்படுகின்றன – திருவனந்தபுரம், எர்ணாகுளம், ஆலப்புழை, நாகர்கோயில், தூத்துக்குடி, சென்னை, பெங்களூர் என. தினமும் கோவையில் மட்டும் நசுக்கப்படும் எலுமிச்சம் பழங்கள் முந்நூறு. மற்ற நகரங்களையும் கணக்கில் சேர்த்து கூட்டிக்கொள்ளுங்கள். கோவையில் மட்டும் நடு ரோட்டில் உடைக்கப்பட்டு லாரி ஏறிச் சதையும் தேங்காய்கள் வாரத்துக்கு ஆயிரத்துக்கு குறைவில்லை. இந்தப் பின்னணியில் தான் நான் பாயும் வாகனங்களுக்கு ஒதுங்கியொதுங்கி  தேங்காய்த் துண்டு  பொறுக்கும் முதியவரைப் பார்க்கிறேன். நான் ஆத்திகள் இல்லை நாத்திகனும் இல்லை. என்றாலும் என் முன்னால் கேள்விகள் எறியப்படுகின்றன. இந்தியாவில் உற்பத்தியாகும் உணவு தானியங்களில் 23 சதவீதம் சேதமாகிறது என்றொரு தகவல் துணுக்கு கவனத்துக்கு வருகிறது. இது பறவைகள் கொத்தி மிருகங்கள் தின்றுஆகும் சேதங்கள் அல்ல. எலிகள் மூலம், சேமிப்புக் கிடங்குகளின் மூலம், உணவை வீண் செய்வதன் மூலம்.
     அவசர அடியாக, தேங்காய் பொறுக்கிய முதியவரை அரசாங்க பேருந்துச் சக்கரத்தில் சாகடித்து, மேற்சொன்ன புள்ளி விவரங்களை எல்லாம் எழுதி, ஒரு முற்போக்குக் கதை எழுதிவிடலாம்தான். ஆனால் நான் அந்த வகை எழுத்தாளன் இல்லை. என் புரிதலைப் பேசுவதற்கு ‘அரக்கன் போல் பாய்ந்து வரும் சேரன் பேருந்து’ அவசியமில்லை எனக்கு. முதியவர் சாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. அந்த சம்பவத்தை நான் எழுத நேரும் சமயம், எனக்குள் சுரந்த பரிவு நாணயமானதாக இருந்தால், நான் தேர்ந்தெடுக்கும் சூழல், நான் தேர்ந்தெடுக்கும் சொற்கள், உங்களுக்குள்ளும் அந்த பரிவை சுரக்கவைக்கும் என்பது என் எதிர்பார்ப்பு. ஆனால் உங்கள் பரிவை யாசித்துப் பெறுபவன் அல்ல எழுத்தாளன். 
     தேநீர் குடிக்கிறோம் தினந்தோறும். நான்கைந்து கோப்பைகள். தேயிலைத் தோட்டங்கள் கண்டிருக்கிறோம். வளர்ந்த தேயிலை மரம் யாரும் கண்டதுண்டா? அது எத்தனை அடி உயரம் வளரும்? என்ன நிறத்தில் பூக்கும்? காய்க்கும்? அந்த மரத்தின் காரண அல்லது இடுகுறிப் பெயரென்ன? எத்தனை ஆண்டுகள் கொழுந்து பறித்து கொழுந்து பறித்து, இடுப்பளவுக்கு மேல் வளரவே விடாமல், எத்தனை கோடி மரங்கள் இந்தியாவில்?  தேயிலைத் தோட்டங்களை அடுத்த முறை காண நேரிடும் பொது ஒரு செடியின் அடிமரத்தைச் சற்று உற்று நோக்குங்கள். அதன் வயதையும், வளர்ந்திருக்க வேண்டிய உயரத்தையும் உத்தேசமாக நீங்கள் உணரமுடியும். நான் உணர்கிறேன். ஆனால் அதில் நான் கோடிக்கணக்கான மரங்களின் சோகத்தை மட்டும் காணவில்லை. காலங்காலமாக கொழுந்துகள் முறிக்கப்பட்டு இடுப்பளவுக்கு மேல் வளர அனுமதிக்கப்படாத கோடிக்கணக்கான இந்திய மரங்கள்! படைப்பு மனம் இப்படித்தான் இயங்குகிறது. இந்த இயக்கத்துக்கு அரசியல் சார்புகள், தத்துவச் சாயங்கள் அல்லது சரடுகள் எதுவும் தேவையில்லை எனக்கு. சமூகம் சார்ந்த, வாழ்க்கை சார்ந்த, மனித வாழ்வின் அவலம் சார்ந்த புரிதல்கள் போதும். 
     ஆகவே எனக்கோ என் எழுத்துக்கோ Promoters அல்லது Sponsors கிடையாது.  அதற்கான  விலை கொடுக்க என்னால் இயலாது. என் எழுத்து நிற்பதும் பேசப்படுவதும் அதன் படைப்புத் தகுதிகள் சார்ந்து மட்டும்தான். எந்தக் கலை இலக்கியக் குழுக்களின் ஆதரவும் எனக்குக் கிடையாது. எந்த சிறுபத்திரிக்கைக் கூடாரத்திலும் நான் இல்லை. அதனால் ஏற்படும் புறக்கணிப்புக்களையும் உணர்ந்துதான்  இருக்கிறேன். அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. முதல்தரம் என்று தூக்கி நிறுத்தப்படும் பல எழுத்துக்களும் தாங்கல்கள் மீது சாய்ந்துகொண்டு நிற்பவை. தாங்கல்கள் நீங்கினால் வாடிய கீரைத் தண்டுபோல தொய்ந்து கிடப்பவை. படைப்பு என்பது தனது திறமையை விற்பனை செய்வதல்ல. படைப்புலகு தவிர்த்து வெளியே சாமர்த்தியமாகச் செயல்படுவதும் அல்ல. 
     இதையெல்லாம் ஏதோ தோல்விகள் காரணமாக இங்கு விளம்புவதாக நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. எனக்கு வாழ்க்கையில் தோல்விகள் உண்டு. படைப்பை வெற்றி தோல்விக்கான பந்தயம் என்று எடுத்துக் கொள்வது கிடையாது. 
     ஒரு முத்தொள்ளாயிரப் படலை, ஒரு சிறுகதை தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பேன். 
     ‘வீறு சால்மன்னர் விரிதாம வெண்குடையைப் 
     பாறஎறிந்த பரிசனத்தால் – தேறாது 
     திங்கள் மேல் நீட்டும் தான் கை’ என்று.  கிட்டத்தட்ட அந்த யானையின் நிலைதான் எனக்கும். திங்கள் மீது கை நீட்டும் முயற்சி. முயற்சி கூடுமா கூடாதா என்பதல்ல, முயற்சி முக்கியம். இன்னொரு முத்தொள்ளாயிரப் பாடலின் எதிரான மனநிலை எனக்கு, 
     ‘கூடற் பெருமானைக் கூடலாற் கோமானைக் 
     கூடப் பெறுவனேல் கூடென்று – கூடல் 
     இழைப்பாற்போல் காட்டி இழையா நிற்கும்
     பிழைப்பிற் பிழைப்பாக்கு அறிந்து’
     ஏனெனில் தமிழ்மொழி நேற்றுப் பிறந்த மொழியல்ல, இன்று புதிதாக வந்த நான் சின்னச் சாதனையில் கொடி நாட்டிவிட்டுப் போவதற்கு. நேற்றுவரை இங்கு படைக்கப்பட்ட எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான், படைப்பாளி இயங்க முடியும். சொந்த மொழியில் தடம் பதிக்காதவன் உலக அரங்கில் உலவ நினைப்பது முட்டாள்தனம். 
     எனவே எனது மொழியைக் கூர்மைப்படுத்தியாகவேண்டும்.தேய்ந்துபோன சொற்களை வைத்துக்கொண்டு எந்த சித்திரத்தையும் வரைந்து காட்டமுடியாது. பெரும்பாலும் திரும்பத் திரும்பக் கையாளப்படுகின்ற சொற்களை, நான் வேண்டுமென்றே தவிர்க்க முயல்கிறேன். தேய்ந்த சொற்களைத் தவிர்ப்பதென்பது புதிய சொற்களைக் கண்டுபிடிப்பதாகச் சொல்லி மொழியைக் கேவலப் படுத்துவதல்ல. கோரக் கோரக் குறையாத வெள்ளம் என் மொழி. சரியாகக் கையாள வேண்டுமெனில் இரண்டாயிரமாண்டுத்  தொன்மைக்குள் நீச்சல் பழக வேண்டும். நான் இன்னும் பழகிக் கொண்டிருப்பவன்.
எனது பார்வையை விசாலப்படுத்திக்கொள்ள வேண்டும். கூர்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். மனத்தடைகள் அறு, மனச் சார்புகள் அற்று மனிதனை மேலும் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். மேனாட்டு இலக்கியவாதி ஒருவன் எழுதியதாக நகுலன் என்னிடம் கூறியது நினைவுக்கு வருகிறது. “If you hate somebody you can’t understand him”
                         ……………………………………………..கேரளப் பல்கலை கழகத்தில் உரை 1991.
………….
தட்டச்சு : பிரவீன்
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in இலக்கியம், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to நானும் என் எழுத்தும்

  1. nathnavel சொல்கிறார்:

    எனது பார்வையை விசாலப்படுத்திக்கொள்ள வேண்டும். கூர்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். மனத்தடைகள் அறு, மனச் சார்புகள் அற்று மனிதனை மேலும் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

    அருமை ஐயா.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  2. rajakannan சொல்கிறார்:

    sir,we like your words,because they are independent,no need to convince anybody,not attached with anything,real and worthy to remark. thank you.we are eagerly expecting them.

  3. Atm Manikandan சொல்கிறார்:

    சில கட்டுரைகளை படித்தால் எனக்கு கருத்துகளை சொல்ல தோன்றாது. கருத்துகளும் ஒரு விதமான செயற்கைத்தனம் தானே.. என் மனதில் அதன் பாதிப்புகள் இருக்கும்.. தங்கள் கட்டுரையும் அவ்விதமே….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s