சதுரங்க குதிரை – ஒரு முன்னோட்டம்

சதுரங்க குதிரை

 (கட்டுரையின் சிறப்பை கருதி முழுக் கட்டுரையும் பின்னூட்டங்களுடன் தரப்பட்டுள்ளது)
http://umakathir.blogspot.com/2007/10/blog-post_7699.html
கதிர்
பிரம்மச்சரியம் என்பது பிரச்சினையில்லாத வாழ்க்கை என்று மேலோட்டமாக
பார்த்தால் தெரிவது ஆனால் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாத ஒரு
பெண்ணுக்கு என்னென்ன சோதனைகளை இச்சமூகம் தருமோ அத்தனையும்
ஆணுக்கும் உண்டு. திருமணமே ஆணையும் பெண்ணையும் முழுமையாக்குகிறது
என்பது நம் சமூக கட்டமைப்பின் விதிகளை தளர்த்தும் இருபாலருக்கும் ஒரே
பொதுவாகும். ஏனோ பெண்ணிற்கு மட்டும் இழைக்கப்படுவது போல
மாயை உண்டாக்கியிருக்கிறார்கள்.
தந்தையில்லாத ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து படித்து சுயமாக சம்பாதித்து
திருமணம் என்ற பந்தத்தில் நுழைய சமயம் பார்க்கும்போது அரைக்கிழவனாக
மாறியிருக்கும் அதற்கு மேலும் திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா
என்ற நினைப்பில் விட்டுவிட்டவர்களை எண்பதுகளில் அனேகம் பேரை காணலாம்.
இன்றையை வாழ்க்கைக்கும் சற்றேறக்குறைய இது பொருந்தும்.
இந்நாவலில் வரும் நாராயணனின் கதையும் இதுதான். கிராமத்து குடும்ப
பிண்ணனியில் வளர்ந்து பம்பாய்க்கு வேலைக்கு செல்லும் நாராயணனின் கதையும்
இதுதான். வாழ்வின் அனேக நேரங்களில் தனக்குள் மட்டும் உரையாடிக் கொண்ட
மனிதனின் கதை.
“எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல
வேள்வி அல்ல, பிரசவ வேதனை அல்ல
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ
அல்ல. பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல
பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல.
வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி
என் சுயத்தை தேடும் முயற்சி.”
இக்கதையை படித்து முடித்ததும் மனித மனங்களை ஓரளவு புரிந்துகொள்ளும்
அனுபவத்தை நீங்கள் பெறுவீர்கள். ஏராளமான கதைகளும் திரைப்படங்களையும்
நாம் பார்த்திருக்கலாம் ஒரே கதாபாத்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு
கதையை சுவாரசியமாக்கும் முயற்சியை அனைத்திலும் பிரதானமாக காணலாம்.
ஆனால் இந்நாவலில் ஒரே கதாபாத்திரமான நாராயணனை சுற்றி மட்டும்
கதை செல்கிறது சுழித்து செல்லும் நதியை போல அதன் போக்கில் செல்கிறது
எத்தனை தடைகளை, எத்தனை சோதனைகளை அனைத்தும் தாண்டி திருமணம்
என்ற பந்தத்தில் சேராமலே அதன் பயணம் முடிகிறது.
“கரும்பு வண்டியின் மேல் அமர்ந்து, கரும்பைக் கடித்து துப்பிக் கொண்டே போன
பதினான்கு வயது பெண், கால் முட்டில் வைத்து ஒடித்த மறுபாதிக் கரும்பை அவனை
நோக்கி வீசி எறிந்த கணம் வாழ்க்கையை சுவாரசியமுள்ளதாக்கி விட்டுப்போனது.”
மூன்று செட் பனியன், ஜட்டி, கர்ச்சிப், சாக்ஸ், ஒரு லுங்கி, ஒரு துண்டு, விரிப்பு
போர்வை, தலையணை உறையுடன் பேண்டும் சர்ட்டும் ஆறேழு ஜோடிகள்
இருக்கும். மாற்றி மாற்றிப் போட்டுக்கொள்ள. எல்லாம் பாலியஸ்டர் விவகாரங்கள்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் எடுத்தது முதல் போன மாதம் எடுத்தது வரை.
பழையவை தையல் விடும். நிறம் மங்கி வெளிறும். கிழிவது கிடையாது. மிகவும்
சலித்து போனால் யாருக்காவது கொடுத்து விடுவது. சேர்த்து வைக்க இடம் பற்றாது.
உள்ளாடைகள் ஒன்றூ கிழிந்தால் மட்டுமே மாற்றூ வாங்குவது.
இதை தவிர ஆஸ்தி என்ன?
பேனா, பைஃபோகல் கண்ணாடி, பெல்ட், ஒரு ஜோடி ஷூ ஒரு ஜோடி தோல்செருப்பு.
ஒருஜோடி மழைக்கால ரப்பர் சாண்டக், மடக்கு குடை, அட்ரஸ்-டெலிபோன் எண்கள்
கொண்ட டயரி, கல்விச்சான்றிதழ்கள், வேலை செய்த கம்பெனிகளின் அனுபவ
சான்றிதழ்கள்,பாஸ்போர்ட், வங்கிக்கணக்கு புத்தகம்.
மூன்று மணி நேர முன்னறிவிப்பில் இடம்பெயர முடியும் எனும் தயார்நிலை வாழ்க்கை.
எல்லைப் போர்வீரனை போல கடிதங்களுக்கு பதில் எழுதிப்போட்டதும் கிழித்துப்
போட்டுவிடுவது. “நலமாக இருக்கிறேன், எல்லாரும் சுகமாக இருக்கிறீர்களா?
உங்கள் கடிதம் கிடைத்தது. என்பவற்றுக்கு மேல் நான்காவது வார்த்தைக்கு போராட
வேண்டியிருந்தது. சிலசமயம் தேதி போடாமல் அஞ்சலட்டைகளை அச்சிட்டு
வைத்துக்கொள்ளலாமா என்று கூடத் தோன்றும்
இதுபோன்ற எத்தனையோ அர்த்தமுள்ள நிகழ்வுகளை கதை நெடுக காணலாம்.
பிரம்மச்சரியத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவனல்ல, வாழ்க்கையின் பாதையில்
தானாக வந்து ஒட்டிக்கொண்டது ஒருவகையில் அவனுக்கு சந்தோஷத்தையே
தந்தது. வாழ்வின் அடுத்தநொடி தரும் ஆச்சரியங்கள் ஏராளம். நாராயணனின்
வாழ்க்கையில் இதுபோன்ற அடுத்தநொடி ஆச்சரியங்களே அதிகமிருந்தன.
அவையில்லாத அடுத்த நொடிகள் யுகங்களாக.
கல்யாணமாகாதவன் என்றால் ஆயிரம் இளக்காரம். சமூகம் பல பெயர்களை நமக்கு
கொடுக்கும். நாராயணனுக்கு அவனைப்போன்றே கடைசி வரை திருமணம் செய்து
கொள்ளாத ஒருவன் நண்பன் குட்டினோ இக்கதையில் வரும் முக்கியமான பாத்திரம்.
ஆனால் அறுபதாவது வயதில் துணையை தேடிக்கொள்ளும் அதுவும் ஆதரவற்ற
பிள்ளைகளால் கைவிடப்பட்டவள்.
“கட்டிலில் வந்து விழுந்தாலும் கவனம் பக்கத்து அறையின் சப்தங்களில் சென்று
நிலை கொண்டவவாறு இருந்தது. சற்று நேரத்தில் கதவு திறந்து அடைபடும் ஓசை.
மூன்றாவது ஆள் வெளியேறுகிறான் போலும். உரத்த சத்தம் நின்று விட்டது.
மறுபடியும் எழுந்து கதவிடுக்கின் வழியாக உற்றுப்பார்த்தான் நாராயணன்.
தனக்கு நாற்பத்தைந்து வயதாகிறது என்பது ஞாபகம் வந்தது. நெருக்கடியான
பஸ்களில் ஸ்தனம் இடிப்பதையும் விட இது ஒன்றும் கௌரவமான செயலில்லை.
இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட வாலிபன் எடுத்துக்கொள்ளும் அற்பத்தனமான
சுதந்திரங்களை தானும் எடுத்துக்கொள்வது ஈனமானது என்று எண்ணினான்.
ஆனால் மனித மனம் எந்த வயதிலும் கேவலமானதாக இருக்க முடியும் போலும்.
போர்த்துக்கொண்டுள்ள கௌரவ சட்டைகள் ஈனங்களை மறைத்தும் நாற்றங்களை
மூடியும் வைத்து விடும்.”
இதேபோன்றுதான் கதையின் மற்ற கதாபாத்திரங்களுடன் உரையாடுவதை
காட்டிலும் தனக்குள், தன் மனவிகாரங்கள், பண்புகள், கோபங்கள், துயரங்கள்
என அனைத்தையும் தனக்குள் மட்டும் பேசிக்கொள்ளும் ஒரு பாத்திரம்.
ஒருவகையில் இந்த புத்தகம் சுயபரிசோதனையாக கூட வாசிப்பவருக்கு
அமையலாம். தனியனின் பயணம்தான் சதுரங்க குதிரை ராணியை நெருங்க
முடியாத குதிரை.
ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு கணத்தில் தனித்து விடப்படலாம் அப்போது
அத்தனிமையின் பயணத்தில் யாருடைய வருகையும் இல்லாமல் கூட போகலாம்
தென்றலோ புயலோ எதுவுமே தீண்டாத சூன்யப்பெருவெளியின் இறுதி வரை
நிகழலாம். அப்பயணத்தின் இறுதியாக நீங்கள் கண்டவை எதுவாக இருக்கும்?
மற்றவருக்கு அவ்வாழ்க்கை எப்படியான புரிதலாக இருக்கும். நினைத்துப் பார்க்க
இயலாத கொடுமையாக இருக்குமென்றால் பிறந்ததின் அடையாளம் என்னவாக
இருக்கும்?
கதையை படித்து முடித்ததும் உங்களை அதுவே ஆக்கிரமித்திருக்கும். புயலிலே
ஒரு தோணி நாவலுக்கு அடுத்ததாக என்னை உளவியல் ரீதியாக பரிசோதிக்க
உதவிய புத்தகமாக இதைக் காணுகிறேன்.
நூல் பெயர்: சதுரங்க குதிரை
ஆசிரியர் பெயர்: நாஞ்சில் நாடன்.
விஜயா பதிப்பகம்
விலை ரூபாய் 70.00
*வண்ண எழுத்துக்களில் உள்ளவை புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
**புத்தகத்தை வாசிக்க கொடுத்த அய்யனாருக்கு நன்றி!
அய்யனாருக்கு கொடுத்த அண்ணாச்சிக்கு நன்றி! நன்றி!!
***நன்றி anyindian.com
புத்தகம் படிச்சின்னா அதபத்தி எழுது அப்பதான் உன்னோட அருமை பெருமைய
எல்லாரும் தெரிஞ்சிக்க முடியும்னு என்னை ஊக்குவித்த(??) அண்ணாச்சியை
இப்போது பெருமையோடு பார்க்கிறேன்.
Posted by கதிர்
Labels: நாஞ்சில் நாடன், நூல்நயம்
11 comments:
நந்தாsaid…கதிர் கிட்ட இருந்து சத்தியமா இவ்ளோவ் சீரியஸா ஒரு பதிவை எதிர் பார்க்கலை.
வாவ் கலக்கிட்டீரு ஓய்.
நிஜமாலுமே உங்களது இந்த விமர்சனம் இந்த புத்தகத்தை உடனே படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.
//”கரும்பு வண்டியின் மேல் அமர்ந்து, கரும்பைக் கடித்து துப்பிக் கொண்டே போன
பதினான்கு வயது பெண், கால் முட்டில் வைத்து ஒடித்த மறுபாதிக் கரும்பை அவனை
நோக்கி வீசி எறிந்த கணம் வாழ்க்கையை சுவாரசியமுள்ளதாக்கி விட்டுப்போனது.”//
//இதை தவிர ஆஸ்தி என்ன?//
//மூன்று மணி நேர முண்ணறிவிப்பில் இடம்பெயர முடியும் எனும் தயார்நிலை வாழ்க்கை.//
//”நலமாக இருக்கிறேன், எல்லாரும் சுகமாக இருக்கிறீர்களா?
உங்கள் கடிதம் கிடைத்தது. என்பவற்றுக்கு மேல் நான்காவது வார்த்தைக்கு போராட
வேண்டியிருந்தது. சிலசமயம் தேதி போடாமல் அஞ்சலட்டைகளை அச்சிட்டுன் வைத்துக் கொள்ளலாமா என்று கூடத் தோன்றும்//
//ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு கணத்தில் தனித்து விடப்படலாம் அப்போது
அத்தனிமையின் பயணத்தில் யாருடைய வருகையும் இல்லாமல் கூட போகலாம்
தென்றலோ புயலோ எதுவுமே தீண்டாத சூன்யப்பெருவெளியின் இறுதி வரை
நிகழலாம். அப்பயணத்தின் இறுதியாக நீங்கள் கண்டவை எதுவாக இருக்கும்?
மற்றவருக்கு அவ்வாழ்க்கை எப்படியான புரிதலாக இருக்கும். நினைத்துப் பார்க்க
இயலாத கொடுமையாக இருக்குமென்றால் பிறந்ததின் அடையாளம் என்னவாக
இருக்கும்?//
எவ்வளவு அருமையான வரிகள். உட்னே வாங்கணும் போல இருக்கு இந்த புத்தகத்தை. 
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said…
நல்லா எழுதியிருக்கீங்க கதிர். படிக்கணுமேன்னு நினைக்கிறமாதிரி எழுதியிருக்கீங்க.
நீங்க தொடங்குற புள்ளி குறித்து சில மாற்றுக்கருத்துகள் இருக்கு. அதைப் பிறகொரு நாள் பார்த்துக்குவோம்.
அண்ணாச்சிகிட்ட எங்களுக்கெல்லாம் பொஸ்தவம் தரமாட்டாரான்னு கேளுங்க.
-மதி 
தம்பிsaid…//கதிர் கிட்ட இருந்து சத்தியமா இவ்ளோவ் சீரியஸா ஒரு பதிவை எதிர் பார்க்கலை.//
என்னவோய் நினைச்சிருந்தீர் என்ன பத்தி? காமெடியன்னா?
//நிஜமாலுமே உங்களது இந்த விமர்சனம் இந்த புத்தகத்தை உடனே படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.//
படிங்க நிறைய அனுபவங்களை பெறுவீர்கள்.
//எவ்வளவு அருமையான வரிகள். உட்னே வாங்கணும் போல இருக்கு இந்த புத்தகத்தை.//
ஓய் நந்தா நீங்க கடைசியா கோட் பண்ணியிருகிற பாரா நான் எழுதினது. அதையும் சேர்த்து நல்லாருக்கு, அருமைன்னு சொன்னது ஒங்க பெருந்தன்மைய காட்டுது ஓய்…
நல்லா இரும்.
அப்பப்ப இந்த எலக்கிய வாசனை அடிக்கற மாதிரி பதிவு போடுவேன் அதனால எலக்கியவாதின்னு நினைச்சிடாதேயும் நானும் ஒரு எதார்த்தவாதிதான் எனக்குன்னு எந்த அடையாளமும் இல்ல. பாத்திரத்துல ஊத்திய நீரின் வடிவம் மாதிரி எப்ப வேணாலும் மாறிக்குவேன்.
ஓவரா இருக்குதா..
இருக்கட்டும். 
தம்பிsaid..//நல்லா எழுதியிருக்கீங்க கதிர். படிக்கணுமேன்னு நினைக்கிறமாதிரி எழுதியிருக்கீங்க. //
வாங்க மதி!
படிக்கணுமேன்னு எழுதலங்க. படிக்கலாம்னு எழுதியிருக்கறமாதிரிதான் தெரியுது. பாலைவனத்துல வாழ்ந்த ஒருத்தன் திடீர்னு பெருமழைய சந்திச்ச மாதிரி எப்பவாச்சும் ஒருமுறைதான் நம் உணர்வுகள சுண்டற மாதிரி வாசிப்பனுபவம் இருக்க முடியும். அந்த அளவுல கொஞ்சம் over Excitement ஆ எழுதி இருப்பேன்னு தோணுது. அவ்வளவே. என்னதான் மத்தவங்க ஆஹா ஓஹோன்னு சொன்னாலும் இந்த மாதிரி விமர்சனம் படிக்கும்போது பரும்பாலோனோர்க்கு தோணும் “எதுக்கும் நாம படிச்சிட்டு அப்புறம் பாக்கலாம் எந்தளவுக்கு இருக்கும்னு” அப்படின்னு அதனால நல்ல வாசிப்பனுபவுத்துக்கான பரிந்துரையா இருக்கட்டுமேன்னு எழுதினதுதான் அது வேற மாதிரி ஆகிப்போச்சுன்னு நினைக்கிறேன்.
//நீங்க தொடங்குற புள்ளி குறித்து சில மாற்றுக்கருத்துகள் இருக்கு. அதைப் பிறகொரு நாள் பார்த்துக்குவோம்.//
உங்களோட மாற்றுக்கருத்தை வரவேற்கிறேன்.
அது என்ன மாதிரியான மாற்றுக்கருத்தா இருக்கும் நான் யூகிக்க முயற்சித்ததில இதுவாத்தான் இருக்கும்னு தோணுச்சு.
பிரம்மச்சரியம்.
கல்யாணமே பண்ணிக்காம இருந்தா அது பிரம்மச்சரியம். அந்த விதத்துல தொடங்கி இருக்கேன்னு தோணுது. அதாவது சாகற வரைக்கும் பிற பாலினத்தோட உடலுறவு வச்சிக்காம இருக்கறதுதான் பிரம்மச்சரியம் அப்படின்னு நானும் நினைச்சிருக்கேன்.
எதுவா இருந்தாலும் உங்க கருத்தை சொல்லுங்க. எதிர்பார்க்கிறேன்.
//அண்ணாச்சிகிட்ட எங்களுக்கெல்லாம் பொஸ்தவம் தரமாட்டாரான்னு கேளுங்க. //
அவரு ரொம்ப நல்லவரு. நீங்க அமீரகம் வர்றன்னு சொல்லுங்க. சந்திப்போட இறுதியில பொஸ்தவம் கண்டிப்பா குடுப்பாரு.
நன்றி.
ஜெஸிலா said…//திருமணம் செய்துகொள்ளாத ஒரு
பெண்ணுக்கு என்னென்ன சோதனைகளை இச்சமூகம் தருமோ அத்தனையும்
ஆணுக்கும் உண்டு. // 100 சதவீதம் தவறு. அதை பற்றி தெரிந்துக் கொள்ள நீங்க ஒரு நாள் பெண்ணாக மாறி பாருங்க புரியும் :-). சோதனைகள் இருக்கலாம் ஆணுக்கும் ஆனால் அது பெண்ணுக்கு ஏற்படுவதை போல் சத்தியமாக இருக்க முடியாது. அளவீடும் அனுபவமும் வித்தியாசப்படும். சதுரங்க குதிரை வாசிப்பனுபவம் அருமை. 
தம்பி said…வாங்க ஜெஸிலா.
எதிர்பார்த்தேன்
அதைபத்தி தெரிந்துகொள்ள பெண்ணாக நான் மாறணும்னா ஆண்கள பத்தி புரிஞ்சிக்க நீங்க ஆணா மாறணுமா என்ன?
அதெல்லாம் இல்லிங்க…
சமூகத்தை பொருத்தவரைக்கும் ஆண் பெண் பேதமெல்லாம் கிடையாது எல்லாமே ஒரே மாதிரிதான்.
//சோதனைகள் இருக்கலாம் ஆணுக்கும் ஆனால் அது பெண்ணுக்கு ஏற்படுவதை போல் சத்தியமாக இருக்க முடியாது. அளவீடும் அனுபவமும் வித்தியாசப்படும்.//
கண்டிப்பா வேறுபடும், அதனால சோதனைகள் என்பது இருவருக்கும் பொதுவாகும்போது அளவீடு என்ன? அனுபவம் என்ன? எல்லாத்துக்கும் சமமா இருக்கணும்னு நினைக்கற பெண்கள் சில விஷயத்துக்கு மட்டும் நாங்கதான் அதிகமா பாதிக்கப்படறோம்னு சொல்றது எனக்கென்னமோ அனுதாபத்த வரவழைக்கற மாதிரிதான் இருக்கு.
கற்பு என்பது எல்லாருக்குமேதான். இந்த கதைல கூட ஒரு டயலாக் வரும். நாராயணனோட நண்பனே ஒரு கேள்விய கேப்பார்.
நாப்பத்தஞ்சு வயசாகுது இன்னும் நீ ஒழுக்கமாதான் இருக்கியான்னு கேப்பார்.
என்னைப் பொருத்த வரைக்கும் எந்த வித்தியாசமும் தெரியல. 
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said… கதிர்,
தூக்கக்கலக்கத்தோட பல்லுக்கூடத் தேய்க்காம எழுதினா இப்படித்தான் ஆயிரும்னு நினைக்கிறேன். அனாவசியமா உங்களைக் கொஞ்சம் விரிவாக விளக்கம் கொடுக்க வைச்சிட்டமேன்னு கொஞ்சம் வருத்தமா இருக்கு. நான் எழுத நினைச்சது என்னன்னா.. நீங்க படிச்ச கையோட ரொம்பப் பிடிச்சுப்போய் எழுதினது வாசிக்கும்போது தெரிஞ்சது. அந்தமாதிரி யாராவது உணர்ச்சிவசப்பட்டு எழுதிட்டா எனக்கு கையும் ஓடாது காலும் ஓடாது. அதுவும் கொஞ்சம் ஒத்த இரசனை இருக்கிறவங்கன்னா இன்னும் கொஞ்சம் கூடவே.. தமிழ்ப்புத்தகங்களைப்பொறுத்தவரைக்கும் மொன்ரியல் பாலைவனந்தான். டொராண்டோவா இருந்தாக்கூட நண்பர்கள்கிட்ட, நூலகங்கள்ல, தமிழ்ப்புத்தகம் விற்பவர்கள்னு தேடிட்டு தமிழ்நாட்டில இருந்து வர்ரதுக்கு நாலு மாதம் காத்திருக்கலாம். நமக்கு நேர காத்திருப்புதான். அதை நினைச்சுத்தான் எழுதினேன். ஃபூ.. அதான் கொஞ்சம் கூடவே அண்ணாச்சி பொஸ்தவம் தரமாட்டாரான்னு கடுப்புல தட்டி விட்டதும். விளக்கம் போதும்னு நினைக்கிறேன்.
பிரம்மச்சரியம் பத்தி நீங்க சொன்னது சரிதான்னு நினைக்கிறேன். ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி. ஆனா, நான் சொல்ல வந்தது
//திருமணம் செய்துகொள்ளாத ஒரு பெண்ணுக்கு என்னென்ன சோதனைகளை இச்சமூகம் தருமோ அத்தனையும் ஆணுக்கும் உண்டு.// என்பதைப்பற்றி. திருமணம் செய்துகொள்ளாத ஆணுக்கும் சில சோதனைகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனாலும் திருமணம் செய்துகொள்ளாத பெண்ணுக்கு, அதுவும் நம்முடைய நாட்டில் அது பெருநகரமாக இருக்கட்டும் சின்னக் கிராமங்களாக இருக்கட்டும் சோதனைகள் அதிகம். வேறு விதமான சோதனைகள். சமூகத்தை எதிர்கொள்ள வேண்டியதும் ஆண்களைவிட அதிகம்.
சரி, இது போதும்னு நினைக்கிறேன். புத்தகம் எங்க கிடைக்கும்னு தேடப்போறேன்.
-மதி 
நட்டு said…புத்தக வரிகளுக்கும்,கூடவே உங்களின் வரிகளுக்கும் நன்றி.ஜெஸீலா அவர்கள் கருத்து சரியாகவும் தராசின் சமனில் பெண்களின் பக்கம் கீழே இழுக்கும் என்பது எனது அபிப்பிராயம்.
கோபிநாத் said…நல்ல விமர்சனம்…புத்தகத்தை படிக்க ஆவலாக இருக்கிறது.. 
☀நான் ஆதவன்☀ said…நல்ல விமர்சனம் கதிர்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், சதுரங்க குதிரை, நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to சதுரங்க குதிரை – ஒரு முன்னோட்டம்

  1. nathnavel சொல்கிறார்:

    நல்ல விமர்சனம்.
    புத்தகம் படிக்க வேண்டும்.
    நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s