நாஞ்சில் நாடன்
பள்ளிக்கூடத்தில் எல்லோரும் படித்தது உண்டு –
‘பாரத நாடு பழம் பெரும் நாடு, நீர் அதன் புதல்வர் இந் நினைவு அகற்றாதீர்’ என்றும்,
‘ஆயிரம் உண்டு இங்கு சாதி எனில் அந்நியர் வந்து புகலென்ன நீதி’ என்றும்,
‘முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்’ என்றும்,
‘இவள் செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனில்சிந்தனை ஒன்றுடையாள்’ என்றும்.
இஃதோர் அற்புதமான தேசம். வெள்ளிப் பனிமலை, நீலத் திரைக் கடல், இன்னரு நீர்க் கங்கை, பொதிகை மலைச் சாரல்…
இந்த நாட்டைத்தான் அயோத்தி ராமனும், துவாரகைக் கண்ணனும், கலிங்கத்து அசோகனும், சந்திரகுப்த மௌரியரும், அக்பர் பாதுஷாவும், கங்கைகொண்ட சோழனும், வாதாபி புலிகேசியும், சாளுக்கியனும், கிருஷ்ண தேவராயனும், மகேந்திரவர்ம பல்லவனும், சத்ரபதி சிவாஜியும் ஆண்டு குடிகள் காத்தனர் இங்குதான் பௌத்தமும், சமணமும், சைவமும், வைணவமும், இஸ்லாமும், கிறிஸ்துவமும் மக்களைப் புள்வழி துறந்து நல்வழிப்படுத்தப் போதித்தன.
உலகுக்கு அகிம்சையை நாம்தான் போதித்தோம்.
மகாபாரதமும் ராமாயணமும் நம் மண்ணில் தழைத்தவை. திருவாசகமும், புரந்தரதாசரும், துக்காராமும், துளசிதாசரும், தியாகய்யரும், கீதாஞ்சலியும் உலகுக்கு நமது கொடைகள். உஸ்தாத் பிஸ்மில்லாகானும், படே குலாம் அலிகானும், ரவிசங்கரின் சிதாரும், சௌடய்யாவின் வயலினும், தனம்மாள் வீணையும், பண்டிட் ரோணு மஜூம்தார் புல்லாங்குழலும், எம்.டி.ராமநாதனும் நமது உலகத் தரத்து இசை.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் காசிக்கும், துவாரகைக்கும், அமர்நாத்துக்கும் போயிருக்கிறான். அதே சமயம், கங்கைக் கரை, யமுனைக் கரைவாசிகள் ராமேஸ்வரத்துக்கும் கன்னியாகுமரிக்கும் வந்து வழிபட்டுத் தீர்த்தம் ஆடியுள்ளனர்.
கன்னியாகுமரியில் இருந்து இமய மலைச் சாரல் வரை 3,214 கிலோ மீட்டரும், மும்பையில் இருந்து அஸ்ஸாம் வரை 2,933 கிலோ மீட்டரும் நீள அகலம் உள்ள இந்தியத் துணைக் கண்டத்தின் மொத்த நிலப் பரப்பு 32 லட்சத்து 87 ஆயிரத்து 263 சதுர கிலோ மீட்டர்கள். நமக்கு இன்று 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள். இவற்றில் பெரும்பகுதி எனது பயண எல்லைகளாக இருந்தவை, இருப்பவை. ஆயுளும் உடல் பலமும் உள்ள வரை இருக்கப்போகிறவை.
பாரத கண்டத்து 56 தேசத்து அரசர்களும் ஆடல் பாடல் பார்த்து, ஆட்டுக்கடா, சேவற்கோழிச் சண்டைகள், குதிரைப் பந்தயம், ஒட்டகப் பந்தயம் என நடத்தி, வனம் புகுந்து, ஒரு பாவமும் அறியாத புலிகளைத் தோலுக்கும் பல்லுக்கும்; யானைகளைத் தந்தத்துக்கும்; மான்களை, மிளாக்களைக் கறிக்காகவும் வேட்டையாடி, அழகான பெண்களைக் கவர்ந்து சென்று அந்தப்புரத்தில் அடைத்து அனுபவித்து, சொக்கட்டான் ஆடித் தோற்று அல்லது வென்று, ஒரு காரியமும் இல்லாமல் தமக்குள் சண்டையிட்டு, தம் மக்களையும், ஊர் மக்களையும், எதிரி நாட்டு மக்களையும் போரில் கொன்று, தம் பெருமை நாட்ட கோயில் கட்டி, எதிராளி கட்டிய கோயிலை இடித்து அலுத்த போழ்தில் அரசும் நடத்தி சந்தோஷமாக இருந்தனர்.
ஆங்கிலேயன் வந்தான். தொடர்ந்து மதச் சார்பற்ற, ஜனநாயக, சமத்துவக் குடியரசு வந்தது. இருந்தாலும் இந்திய தேசத்து மக்கள் தம்முள் ஆழமானதோர் பிணைப்பு இருந்தது. பாரதிதாசன் பாடினார்,
‘இமயத்தில் ஒருவன் இருமினான் என்றே
குமரியில் இருந்து மருந்துகொண்டு ஓடினான்’ என்று. இது நமது கனவு அல்ல, மரபு. ஆனால், தேச விடுதலை பெற்ற இந்த 61 ஆண்டுகளில் பல்வேறு இன, மத, மொழி, பண்பாட்டு வேறுபாடுகளுக்கு இடையில் இன்று நமது அரசாளுவோர்க்கு இடையில் இருக்கும் ஒற்றுமை… ஊழல் செய்தல், அநியாயத்துக்குத் துணைபோதல், அதர்மம் பேணுதல், அபகரித்தல், குற்றம் புரிதல். வேற்றுமையில் ஒற்றுமை. Unity in diversity.
ஏதோ கண்ணுக்குத் தெரியாத, புலன்களால் உணரப் பெறாத சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு இருந்த இந்திய மனத்தினுள் நாட்டுத் தலைவர்கள் இனம், மதம், மொழி, பிரதேசம் என்ற வன்சாயங்களை ஏற்றினார்கள்… வாக்குகள் பொறுக்கிச் சேகரித்து செங்கோட்டையில் கொடி நாட்ட.
பிறகு தேசிய ஒருமைப்பாடு என்றொரு சொல் புழக்கத்துக்கு வந்தது. பாடு என்றாலே துன்பம்தான். வறுமைப்பாடு, கஷ்டப்பாடு, கேவலப்பாடு, கஞ்சிப்பாடு – கறிப்பாடு, அரும்பாடு, பெரும்பாடு, பாடுபட்டு என ஏகப்பட்ட சொற்கள் உண்டு. ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ எனும் சிறந்த நூலொன்றும் உண்டு. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானக் கிராமணியார் எழுதியது. ஒருமை என்றாலே ஒருமைப்பாடுதான். மிக அருமையான சொல்லாட்சி.
ஆனால், தேசிய ஒருமைப்பாடு எனும் போதனை வேறெந்த தேசத்திலும் இருக்கிறதா என்று தெரிய வில்லை. உலகின் 194 நாடுகளிலும் வாடிகன் நகரம், கொஸாவா எனும் இரு நாடுகள் தவிர்த்து, ஐக்கிய நாடுகள் சபை உறுப்புக் களான 192 நாடுகளில், நமது தேசத்தில் மட்டுமே இந்த ‘தேசிய ஒருமைப்பாடு தினம்’ கொண்டாடப்படுகிறது.
எளிய மக்களின் பிள்ளைகள் படிக்கும் முனிசிபல், கார்ப்பரேஷன், அரசுப் பள்ளிகளின் வாசல்களில் சில நூதனமான தின்பண்டங்கள், இயலாத கிழவிகளால் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருக்கும். தோலுடன் வறுத்த நிலக்கடலை, உப்புத் தூவிய இலந்தை, புளியங்காய், உப்பு எரிப்பு தூவிய மாங்காய் கீற்றுகள், வாடிப் பழுத்த அல்லது பழுத்து நொந்த கொய்யா, அரிநெல்லி, காட்டுநெல்லி, புளிமா எனப்படும் புளிச்சிக்காய், கடலை மிட்டாய், சவ்வு மிட்டாய் என ஈயரித்துக் கிடக்கும்.
அது போல் சுதந்திர தினம், குடியரசு தினம் போல, பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இன்னொன்று, தேசிய ஒருமைப்பாடு தினம். அன்று கலெக்டர் அலுவலகம், சட்டமன்றம், நாடாளுமன்றம் என சபதம் எடுத்துக்கொள்வார்கள். பிரசவ வைராக்கியம், மயான வைராக்கியம், நீரிழிவு வைராக்கியம் போல இஃதோர் தேசிய ஒருமைப்பாடு வைராக்கியம்.
காலை மலர்ந்து மாலை உதிரும் பூப் போல அல்லது அன்று பிறந்து அன்றே இறக்கும் பூச்சி போல அதுவெனச் சொன்னால், தேசப் பாதுகாப்புச் சட்டம் பாயுமா எனத் தெரியவில்லை.
சபதம் ஏற்கப்படாதபோது, ஒருமைப்பாடு இருந்தது. ஒருமைப்பாடு இருக்காது என சர்வ நிச்சயமானபோது, சபதம் எடுக்க ஆரம்பித்தோம்.
இந்திய துணைக் கண்டத்தின் பொதுச் சிந்தனை, பொதுப் புத்தி எனச் சில உண்டு. நமது விருந்தோம்பல், இன்சொல், யாருக்கும் உதவுதல், அறத்துக்கு அஞ்சுதல், துன்பம் தாங்குதல், நல்லது நாளை நடக்கும் என நம்புதல்… இவை சபதம் எடுத்து, விரதம் இருந்து சாதிக்கப் பெற்ற தல்ல. மரபில் ஊறி வந்தவை.
ஆனால், இன்று நாட்டு நடப்பைச்சிந்திக் கக்கூடிய இந்திய மனங்களில் கேள்வி ஒன்று எழுந்து பேய் போலக் கூத்தாடுகின்றது. இந்திய ஒருமைப்பாடு இனி எத்தனை நாள் சாத்தியம்?
கர்நாடகக்காரன் தமிழனுக்குத் தண்ணீர் தரக் கூடாது என்று போராடுகிறான். தமிழகப் பதிவுள்ள கார்கள் உடைக்கப்படுகின்றன. தமிழன் மண்டை உடைகிறது.
கேரளத்துக்காரன், முல்லைப் பெரியாறு அணையை நீர் மட்டம் உயர்த்தி கூடுதல் தண்ணீர் தர விருப்பப்படவில்லை. ஆனால், பாலக்காட்டில் அறுபடும்கோழி களின் தூவல், தோல், தலை, குடல், கால் என சாக்குகளில் கட்டி, வாளையார் தாண்டி வந்து தமிழ் நாட்டுச் சாலையோரம் தினமும் கவிழ்த்துவிட்டுப் போகிறான்.
தமிழன் கேரளத்துக்கு காய்கறி, இலைக்கட்டு, கறிவேப்பிலை, பூக்கள், பால், வாழைப்பழக் குலை, அரிசி, பருப்பு, கறிமாடுகள் போகும் எல்லாச் சாலைகளையும் மறிக்கிறான்.
மராத்திக்காரன் மூன்று தலைமுறைகளாக வாழும் பீகாரியை, உத்தரப்பிரதேசத்துப் பையாவை ‘ஓடிப் போ’ என்கிறான். பஞ்சாபி, ஹரியானாக்காரனைத் துரத்துகிறான். அமர்நாத் யாத்திரை போகும் பயணிகளுக்குத் தங்கும் இடம், ஓய்வு இடம் மறுக்கப்படுகிறது.
சுப்ரீம் கோர்ட் சொல்வதை மாநிலங்கள் பொருட்படுத்தாமல் புறக்கணிக்கின்றன. இந்த தேசத்தைக் கடவுள்கூடக் காப்பாற்ற முடியாது என்கிறது சுப்ரீம் கோர்ட்.
பத்து முறை மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி-யும், உச்ச நீதிமன்றத்து பாரிஸ்டரும், இன்டெலக்சுவலுமான இந்திய நாடாளுமன்ற சபாநாயகர், ‘இந்த தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது’ என முணுமுணுக்கிறார்.
காரைக்குடித் தமிழன், தேவகோட்டைக்குத் தண்ணீர் கொண்டுபோகக் கூடாது என்கிறான். திருநெல்வேலித் தமிழன், தூத்துக்குடி மாவட்டம் பிரிந்த பிறகு தாமிரபரணியில் அவர்களுக்குப் பங்கு கிடையாது என்கிறான்.
சின்ன மாவட்டங்கள் அமைவதோ, நிர்வாகக் காரணங்களுக்காக மாநிலங்கள் பிரிவதோ, வரவேற்கத் தகுந்தவைதான். சமீபத்தில், உத்ராஞ்சல், ஜார்கண்ட், சத்தீஸ்கர் எனப் புதிய மாநிலங்கள் உத்தரப்பிரதேசத்தில் இருந்தும், பீகாரில் இருந்தும், மத்தியப்பிரதேசத்தில் இருந்தும் பிரிக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். ஆந்திராவில் தெலுங்கானா கோரிக்கை இருப்பதும், மராத்தியத்தில் கொங்க, விதர்பா, மரத்வாடா என்ற நிலைகள் உள்ளதும் நமக்குத் தெரியும். தமிழ்நாட்டைக்கூட இரண்டாக மூன்றாகப் பிரித்துக்கொள்வதில் எந்தப் பாவமும் இல்லை. எதற்கெடுத்தாலும் நாகர்கோவில்காரன் எதற்கு சென்னையில் போய் முகாமிட்டு நெரிசல்படுத்த வேண்டும்? மேலும் முடி சூட்டிக்கொள்ள நம்மிடம் இளவரசுப் பஞ்சம் இருக்கிறதா என்ன?
ஆனால், பிரிந்த பிறகு கரூர்க்காரர், திருச்சிக்குத் தண்ணீர் விட மாட்டோம் எனச் சொல்லும் நிலை வராது என்பதற்கு இன்று உறுதி உண்டா?
1956-ல் மொழிவாரி மாகாணங்கள் அமைந்தபோது, திருவிதாங்கூரில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் பிரிந்தது. திருவிதாங்கூர் தேவஸ்தானத்தில் இருந்த நிதியைக் கன்னியாகுமரிக்குப் பிரித்துத் தரக் கூடாது என்றனர். ராஜப் பிரதிநிதியாக இருந்த சித்திரைத் திருநாள் பாலராமவர்மா மகாராஜா, முந்திய ஆண்டின் செலவு விகிதத்தில் சேமிப்பு நிதியைப் பிரித்துக் கொடுக்கச் சொன்னார்.
அறம் சார்ந்த நிலைப்பாடுகள் மாறி, வாக்கு வங்கிகள் சார்ந்த நிலைப்பாடு எடுக்க ஆளும்வர்க்கம் ஆரம்பித்தபோது, இந்திய மனோபாவம் மாற ஆரம்பித்தது.
எந்த மதமும் இன்னொரு மதத்துக்கு எதிரியல்ல. எந்த மொழியும் இன்னொரு மொழிக்கு எதிரியல்ல. எந்த மனிதனும் சக மனிதனுக்கும் எதிரியல்ல. பிறகு யார் நம்மைப் பிளவுபடுத்துகிறார்கள்?
மதவாத, இனவாத, மொழிவாத, வாக்குப் பொறுக்கும் அரசியல்? மக்களுக்கு எதிராக மக்களைத் திருப்பும் அரசியல்?
இந்திய ஒருமைப்பாடு என்பது ரவா லாடு போல, குஞ்சாலாடு போல அல்லது மராத்திக்காரன் சொல்லும் பேசின் லாடு போல. பார்க்க உருண்டையாக, அழகாக, இளம் மஞ்சள் நிறமாக, முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பதித்ததாக கவர்ச்சியாக இருக்கிறது. இனிப்பானது என்பதும் நமக்குத் தெரியும். ஆனால், அழுந்த விரல்களால் தொட்டால் உதிர்ந்துபோகும், பொலபொலவென்று மாவாக.
நாம் ஒன்றாக நின்று – வேற்றுமைகளுக்கு உள்ளும் ஒற்றுமையாக நின்று, காசி என்று நினைத்தால் உடனேயே ராமேஸ்வரம் நினைவுக்கு வருவதைப் போல, கூட்டாக உய்யப்போகிறோமா?
அல்லது தன் படை சுட்டுச் சாகப் போகிறோமா?
…………………………………
எந்த மதமும் இன்னொரு மதத்துக்கு எதிரியல்ல. எந்த மொழியும் இன்னொரு மொழிக்கு எதிரியல்ல. எந்த மனிதனும் சக மனிதனுக்கும் எதிரியல்ல. பிறகு யார் நம்மைப் பிளவுபடுத்துகிறார்கள்?
அருமையான பதிவு.
நன்றி ஐயா.
Superb post !
அருமையான பதிவு
நன்றி
thanks a lot
பொட்டில் அடித்தது போல் உள்ளது.
nalla erundichu…………………..
அருமையான கட்டுரை…தலைகீழ் விகிதங்கள் எழுதியவர் …இன்றைய தலைகீழான விதியை சுட்டி காட்டுகிறார்…