இலக்கியவாதிகளின் இயற்கைப் பாசம்!
எண்டோசல்ஃபான் ஒரு தொடக்கம்தான். பன்னாட்டு வணிகர்கள் அதைவிடக் கொடிய விஷத்தை விற்பனை செய்து, விளைபொருட்களை நஞ்சாக்கி வருகிறார்கள்” என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார் ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன்.
‘குக்கூ’ என்கிற பெயரில் குழந்தைகளுக்கான இயக்கத்தை நடத்தி வரும் அரச்சலூரைச் சேர்ந்த ‘குக்கூ’ சிவராஜ், நண்பர்களுடன் இணைந்து ‘இயல் வகை சூழலியல் இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார். எண்டோசல்ஃபான் உள்ளிட்ட பூச்சிக்கொல்லி நஞ்சுகளுக்கு எதிரான பிரசாரத்தை நாடு முழுவதும் மேற்கொண்டு வரும் இந்த அமைப்பின் சார்பில், ஜூன் 25ம் தேதியன்று, கோயம்புத்தூரில் கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றபோதுதான் அந்த எச்சரிக்கை மணியை அடித்தார் நாஞ்சில் நாடன், ”அடிப்படையில் நானும் விவசாயிதான். எல்லா ஜீவராசிகளுக்கும் உணவு கொடுக்கும் இந்த பூமி, நஞ்சாக மாறிவிடக் கூடாது என நாம் நினைத்தால்… நாம் இயற்கையை ஆதரிக்க வேண்டும். இந்த எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தியவர் நம்மாழ்வார்தான்.
இன்றைக்கு ‘சுதேசி’ உணவு தானியங்கள் அழிந்து விட்டன. மாறாக கம்பெனி விதைகள், ரசாயன இடுபொருட்கள் மீது மோகம் அதிகரித்துள்ளது. அதன் பலனைத்தான் தற்போது அனுபவித்து வருகிறோம்.
காய்கனிகள் ‘பளபள’ என்று பெரிதாக இருக்கவேண்டும், ஒரே சீராகவும் அழகான வடிவமும் கொண்டிருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகிறார்கள். அது தவறு. காய், கனிகளில் ஒழுங்கு தேவையில்லை. அதன் ருசிதான் முக்கியம். டி.டி.டி., பாலிடால் போன்ற ஆரம்ப கால விஷ மருந்துகளை விட 100 மடங்கு வீரியமான பூச்சிக்கொல்லிகள் இன்றைக்குப் புழக்கத்தில் உள்ளன. ‘நாம் உண்ணும் உணவின் மூலமாகவே, நம் உடலுக்குள் விஷத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் பன்னாட்டு நிறுவனத்தினர். இதை மாற்றி அமைக்கும் வல்லமை, பாரம்பரிய விவசாய முறைக்கு மட்டுமே உண்டு” என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
அடுத்து பேசிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், ”கம்பு, சோளம், கேழ்வரகு என்று நாங்கள் பார்த்த விவசாய வாழ்க்கை இப்போது இல்லை. நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பூச்சிக்கொல்லிகள்… புழு, பூச்சிகளைக் கொல்லும் அதேவேகத்தில் மனிதர்களையும் கொல்கின்றன. பூச்சிக்கொல்லிகளின் வரவு, இந்திய விவசாயத்தின் மீது ஏவப்பட்ட வேளாண் வன்முறை. இந்த விவசாய மோசடியில் எல்லாப் பழங்களும் தத்தமது ருசியை இழந்து விட்டன. அதனால்தான் நாம் சர்க்கரை போட்டுப் பழச்சாறு குடிக்க வேண்டியுள்ளது.
விதையுள்ளதும் இயற்கையிலேயே இனிப்பானதுமான நாட்டுரகப் பழங்களை நவீன மனித மனம் விரும்புவதில்லை. மாறாக, கண்ணாடி அலமாரியில் மின்னும் கவர்ச்சிக் கனிகளைத் தேடித்தான் போகிறது. விவசாயத்தை மாற்றி அமைக்க வந்த அனைத்து நவீனமும் மனிதனுக்கு எதிராகத்தான் உள்ளது. விவசாயத்தை பணமயமாக்கிய பிறகு, அது சார்ந்த எல்லா உயிரினமும் கொல்லப்பட்டு வருகிறது. ஒன்றைச் சார்ந்து ஒன்று என்ற இயற்கை உயிர்ச் சங்கிலி அறுந்து விட்டது” என்று தன் கோபத்தைப் பதிவு செய்தார்.
‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ. நம்மாழ்வார் தன்னுடைய பேச்சில், ”81 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள எண்டோசல்ஃபான் எனும் பூச்சிக்கொல்லி விஷம்… இன்னும் இங்கு பயன்பாட்டில் இருக்கிறது. இந்திய மக்கள் நோயுடன் வாழ வேண்டும் என்பதுதான் ஏகாதிபத்தியக் கம்பெனிகளின் திட்டம். தீங்கு என்று தெரிந்தே இதை ஆராய்ச்சியாளர்களும் செய்து வருகிறார்கள்.
இயற்கைதான் மனிதனை உற்பத்தி செய்தது. அவனோ… அதை அழிக்கும் வேலையைச் செய்து வருகிறான். 1960ம் ஆண்டுக்கு முன்பு நம்நாட்டில் ‘அக்ரி கல்சர்’ இருந்தது, அதற்குப் பின் அது ‘அக்ரி பிசினஸ்’ என்றாகி விட்டது. எல்லாப் பொருட்களையும் இறக்குமதி செய்து லாபம் பார்க்கும் நிலை ஏற்பட்டு விட்டது. உயிர்ப்புடன் இருந்த நிலத்தை ரசாயனம் என்கிற போதைக்கு அடிமையாக்கி வைத்திருக்கிறது பசுமைப்புரட்சி. இந்த அவலங்களை உண்டாக்கியவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தால்தான் தகும்” என்றார் ஆவேசம் பொங்க!
கருத்தரங்கில் சக்கர நாற்காலியோடு மேடையேறிய வானதி மற்றும் ரேவதி ஆகியோர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். சேலத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் தசைப்பிடிப்பு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். ”எண்டோசல்ஃபானுக்கு எதிரான முழக்கத்தை நாடு முழுவதும் சென்று முழங்குவோம்” என்று அவர்கள் சூளுரைத்தபோது… அரங்கு அதிரும் அளவுக்கு கரவொலி!
நன்றி: பசுமை விகடன் 25-ஜூலை -2011
http://www.vikatan.com/article.php?aid=8071&sid=225&mid=8
நல்ல பதிவு.
நன்றி ஐயா.
அவசியம் அனைவரும் வாசிக்கவேண்டிய பகிர்வு.. நன்றி பகிர்ந்ததற்கு.
plz let me know MR.Namaazhvar contact details, then we can arrange the meeting at our village side (vallioor, Tirunelveli dstrict). I am working as a software engineer in Malaysia. But I would like to make alert our vilage people to save from this disaster. plz do this help for me. I am looking for his detais since 2004.
Thanks
Stanley Rajan
நாஞ்சில் நாடன் அவர்களே,
இந்தியாவில் விவசாயி என்பவன் ஒரு இளிச்சவாயன், மொண்ணை, மொக்கை, நாதி இல்லாதவன். அவனை யார் வேண்டுமானாலும் ஏமாற்ற முடியும். இயற்கை விவசாயம் செய்வோம் என்று உரக்க சொல்லுபவர்கள் எல்லாம் பின்னணியில் வேறு தொழில் மூலம் வருவாய் ஈட்டுபவர்கள், அல்லது மாற்று பிழைப்பு தெரிந்தவர்கள். நான்கைந்து கறவை மாடுகளுடன் முழுநேர விவசாயம் செய்யும் ஒருவர் இயற்கை விவசாயம் சிறந்தது என்று கூறுவாரே தவிர நடைமுறைக்கு உகந்தது என்று சொல்லமாட்டார். எல்லோரும் பொருள் ஈட்ட வேண்டும், மகிழ்வுந்தில் பவனி வரவேண்டும், அவர்தம் பிள்ளைகள் எல்லாம் ஆங்கிலம் படித்து அமெரிக்காவில் வாழ வேண்டும் ஆனால் விவசாயி மட்டும் கோவணம் கட்டிக்கொண்டு காட்டில் இன்னும் ஏர்மட்டுமே ஓட்ட வேண்டும் அவன் பிள்ளைகள் எல்லாம் சாணி எடுக்க வேண்டும். இது ஒருவகையான தொழில்மீதான ஆதிக்க மனப்பான்மையே.
எல்லோருக்கும் நோய்வந்தால் உடனே குணமாக வேண்டும்; சூரணம் சாப்பிட, இலைதழைகளை அரைத்து கட்ட யாரும் விரும்புவதில்லை. நீரிழிவு நோய்க்குகூட மரபணு மாற்றப்பட்ட பாக்டீரியாவில் தயாரிக்கப்பட்ட இன்சுலின் வேண்டும். அதனால் எந்த பின்விளைவும் உடலில் ஏற்படாது. ஆனால் விவசாயத்தில் மட்டும் கூடாது!
மிக மிக மோசமாக நலிந்துவிட்ட விவசாயத்தின் எந்தவொரு அடிப்படை பிரச்சனைகளையும் தீவிரமாக களைய முயற்சிக்காமல் இயற்கை விவசாயம் செய்யுங்கள், எண்டோசல்பானை தடை செய்யுங்கள் என்று ஒரு கூட்டம் மார்க்கெட்டிங் செய்வதால் எந்த ஒரு விவசாயம் ஓர் அங்குலம்கூட மேலே வரப்போவதில்லை.
பிரபு